எழுத்தாளர் வல்லிக்கண்ணன் எழுதி சாகித்திய அகாதெமி விருது பெற்ற "புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்" - புத்தகம் PDF

எழுத்தாளர் வல்லிக்கண்ணன் எழுதிய “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” – நூல் அறிமுகம்

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – நூல் அறிமுகம்

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி என்ற திரைப்படத்தில் ஒரு வசனம் வரும், ‘வரலாறு முக்கியம் அமைச்சரே’ என்று. உண்மையில் அது நகைச்சுவைக்காக சொல்லப்பட்டதல்ல. நகைச்சுவையாக ஆக்கப்பட்டு விட்டது. உண்மையில் எல்லாவற்றுக்குமே வரலாறு முக்கியம் தான்.

“நேற்றைய வரலாறு தெரியாது போனால்
இன்று நடப்பது புரியாது போகும்
இன்று நடப்பது புரியாது போனால்
நாளை நடப்பது நம் வசம் இல்லை” எனவே வரலாறு என்பது மிக மிக முக்கியமானது.

இந்தியாவுக்கும் வரலாறு இருக்கிறது, தமிழ்நாட்டுக்கும் வரலாறு இருக்கிறது. வாழுகின்ற ஒவ்வொரு மனிதனுக்குமே கூட வரலாறு இருக்கிறது. மரங்களுக்கு, பயிர்களுக்கு, பழங்களுக்கு, பூச்சி, புளுக்களுக்கு, என அத்தனைக்கும் வரலாறு உண்டு. ஏன் நம்மில் பலர் தினம் அருந்தும் காபிக்கும் கூட வரலாறு இருக்கிறது.
ஒன்றோ இரண்டோ அல்ல எனக்குத் தெரிந்து காபிக் கென்றே பத்துக்கு மேற்பட்ட வரலாற்று புத்தகங்கள் இருக்கிறது.

1.கைவினை காபி ஒரு கையேடு
2. காப்பி புத்தகம்:பாரிஸ்டா
3. மோக துறவி
4. காபியின் உலக அட்லஸ் ….
5. வீட்டிலேயே சிறந்த காபி தயாரிப்பது எப்படி
6. காபி ஒரு இருண்ட வரலாறு
7. காபி அகராதி: காபியின் ஒரு அரிதான வடிவம்
8. ஜப்பானின் காபி வாழ்க்கை
9. லோன்லி பிளாட்டின் உலகளாவிய காபி
ஒரு சுற்றுப்பயணம்
10. காபியின் புதிய விதிகள்

இப்படி காபிக்கெல்லாம் கூட வரலாறு இருக்கும் போது கவிதைக்கு இருக்காதா, இருக்க வேண்டாமா? இருக்கிறது.

புதுக்கவிதையை, அல்லது வசன கவிதையை, யாப்பில்லா கவிதையை, இலகு கவிதையை, கட்டிலடங்கா கவிதையை (புதுக்கவிதை என்று நாம் பெயர் சொல்லி அழைக்கும் கவிதையை அந்தக் காலத்தில் இத்தனை பெயர் சொல்லி அழைத்திருக்கிறார்கள். காலம் தான் புதுக்கவிதை என்ற பெயரை நிலை நிறுத்தி இருக்கிறது) புதுக்கவிதையை முதன் முதலில் புனைந்தவர்

‘வால்ட் விட்மன்’ என்ற அமெரிக்கர் இவர், எளிமைப்படுத்தப்பட்ட புதுக்கவிதையை ஏன் தொடங்கினார் என்றால்? மக்களுக்கு எளிமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் என்று அறியப்படுகிறது. கவி சுப்பிரமண்ய பாரதியே தமிழில் முதன்முதலாக புதுக்கவிதையை அறிமுகப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு. நா.பிச்சமூர்த்தி, இவர் 1934/ 35 வாக்கில் புதுக்கவிதையை எழுதத் தொடங்குகிறார். நா. பிச்சமூர்த்தியை புதுக்கவிதையின் பிதாமகன் என்று கூறப்படுகிறது.

புதுக்கவிதை எழுதி வெற்றி பெற்ற பல கவிஞர்களும் புதுக்கவிதை என்றால்? இதுதான், இப்படித் தான் என்று இதுவரை ஒருவரும் வரையறுத்துக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. அப்படி வரையறுத்துக் கொள்ளாததுதான் புதுக்கவிதை இன்றளவும் புதுக்கவிதையாகவே இருக்கிறதோ என்றும் தோன்றுகிறது.

புதுக் கவிதை என்றால் என்ன? அது மரபுக் கவிதையிலிருந்து எப்படி வேறுபடுகிறது,எதனால் வேறுபடுகிறது. புதுக்கவிதை தோன்றிய காலத்தில் அதற்கு எந்த மாதிரியான வரவேற்பு கிடைத்தது, யாரெல்லாம் கவிதை எழுதும் சோதனை முயற்சியில் ஈடுபட்டார்கள், யாரெல்லாம், எப்படி எல்லாம் எதிர்த்தார்கள், வசைபாடினார்கள் என்பதையெல்லாம் இந்நூல் சுவைபடக் கூறுகிறது.

‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற இந்த நூல் புதுக்கவிதையின் வரலாற்று நூலாகவே திகழ்கிறது . இதன் ஆசிரியர் வல்லிக்கண்ணன் புதுக்கவிதை தோன்றிய காலத்தில் இவரும் அவர்களோடு கவிதை எழுதிக் கொண்டிருந்தவர் என்பதால் அந்தக் காலத்தை அப்படியே பிசிர் இல்லாமல், எதையும் விட்டுவிடாமல். விருப்பு வெறுப்பின்றி அந்தக் கவிதைக் காலத்தை அப்படியே பதிவு செய்திருக்கிறார். எந்தக் காலத்தை என்றால்? தமிழில் புதுக்கவிதை தோன்றிய காலத்தை.

பாரதி காலத்திற்கு முன்னாள் கவிதை என்றால் அது மரபுக் கவிதை தான். நா. பிச்சைமூர்த்தி காலத்திற்கு பின்னாள் கவிதை என்றால், புதுக் கவிதையா? மரபுக் கவிதையா? என்ற கேள்விகள் எழுகின்ற காலமாய் மாறியது. ஆம் கவி சுப்பிரமண்ய பாரதி தான் புதுக்கவிதையை முதன் முதலில் தொடங்கி வைத்திருக்கிறார். பாரதிக்கு பின் 1934 களில் நா. பிச்சை மூர்த்தி எழுதத் தொடங்குகிறார். அவரைத் தொடர்ந்து கு.ப. ராஜகோபாலன் எழுத வருகிறார். அதே காலகட்டத்தில் வல்லிக்கண்ணன்,பசுவய்யா என்ற பெயரில் சுந்தர ராமசாமி…போன்ற பலரும் புதுக்கவிதையை எழிதி..எழிதி சோதனை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

அந்த சோதனை முயற்சி முடிந்து விட்டதா? இன்னும் முடியவில்லையா? என்பதுதான் தெரியவில்லை. அந்த சோதனை முயற்சியே இப்போதும் தொடர்வதாகத் தான் தெரிகிறது. அந்தக் காலத்தில் இவர்கள் செய்த சோதனை முயற்சி வாசகர்களுக்கு எவ்வளவு சோதனையாக இருந்திருக்கும் என்பதையும் நான் யோசிக்கிறேன். புதுக்கவிதை பல தடைகளைத் தாண்டியிருக்கிறது. ஆனால் இன்று வெற்றி பெற்றிருக்கிறது என்று சொல்ல முடியுமா?

புதுக்கவிதை, கவிஞர்களை பெருக்கி இருக்கிறது அதில் குறையே சொல்ல முடியாது. வீங்கிப் பெருத்து நெற்றியில் வந்த கழலைக் கட்டி போல. கவிஞர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திய புதுக்கவிதை அந்தளவுக்கு வாசகர்களை அதிகப்படுத்தி இருக்கிறதா? புதுக்கவிதைப் போராட்டத்தில் அதாவது சோதனை முயற்சியில் ஈடுபட்டவர்கள், கவிதையை ரசிக்க வந்த ஒரு சிலரையும் அடித்து விரட்டி விட்டதாகவே தெரிகிறது. அந்த முயற்சியில் இன்றும் கூட பலர் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. ஆனாலும் விதிவிலக்காக ஒரு சிலரே புதுக்கவிதையில் வெற்றி பெற்றிருப்பதும் உண்மை. யார் வெற்றி பெற்றிருக்கிறார்கள்? என்றால், யாருடைய கவிதை வெற்றி பெற்றிருக்கிறது? என்றால், மக்களின் பிரச்சனைகளோடு மக்களை அணுகிய கவிதைகள் மட்டுமே வெற்றி பெற்று மனம் என்னும் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறது. நவீனம், பின் நவினம், படிமம்..படிமம் என்று மடித்து.. மடித்து எழுதி. எழுதியவருக்கும் படிப்பவருக்கும் புரியாமலேயே, கவிதை மனதில் நிற்காமலேயே போய்விடுகிறது. கவிதை என்றாலே மக்கள் காத தூரம் ஓட விரட்டி விடுகிறது. யாருக்காக எழுதுகிறார்களே அவர்களை போய் சேராமலேயே போய், கவிதை மடிந்து விடுகிறது.

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

அசை, சீர், தளை, அடி, தொடை எதுகை, மோனை என்கிற யாப்பிலக்கணமெனும் காப்புகளை உடைத் தெரிந்து விட்டு பிறந்த மேனியாக, தெளிந்த நீரோடையாக மக்களின் நாவில் இனிக்க வேண்டிய கவிதைகள், எலுமிச்சை சோற்றில் ஒன்றிரண்டு எலுமிச்சை விதைகள் வந்துவிடும், வாயெல்லாம் கசக்கும். அதுவே சோறு முழுக்க எலுமிச்சம் விதைகளாய் இருந்தால்! அப்படித்தான் இருக்கிறது இன்றைய கவிதைகள் கசப்பாக. என்னுடைய கட்டுரை சற்று நீண்டாலும் பரவாயில்லை. 1970களில் கசடதபற என்கிற இதழில் சார்வாகன் அவர்கள் எழுதிய கட்டுரை, காலக் கண்ணாடியாக, அன்றைய புதுக்கவிதைகளின் முகத்தை தெளிவாகக் காட்டுகிறது.

“பல பக்கங்கள் கொண்ட வைரக்கல் போன்றது புதுக்கவிதை. ஒரு பக்கம் அழகு புது மாதிரியான அழகு வியக்க வைக்கும் அழகு. ஒரு பக்கம் ஏக்கம், மனம் முறிவு பெருமூச்சு, காதல், தத்துவம், கோபம், சந்தேகம், அறைகூவல், சமகால விமர்சனங்கள், தன் மனத்தையே உடைத்தெடுத்து ஆராயும் நேர்மை, பாலுணர்ச்சி, பொங்கல், ரேஷன், காந்தியம், கம்யூனிசம், அறச்சீற்றம், டிவால்யுவேன்,மாலை, இரவு, நிலா வர்ணனைகள், கனவு மயக்க நிலைகள், ஞானம், உபதேசம் இறுமாப்பு,மனமாறுதல் இப்படி பலப்பல பக்கங்கள் உண்டு. சுருங்கச் சொன்னால் இன்று நம்மிடையே இருக்கும் உணர்ச்சிகள் அனைத்தின் பிரதி பலிப்பையும் நாம் புதுக்கவிதையில் காண்கிறோம்”

புதுக்கவிதைகளைப் பற்றியும் அதன் உள்ளடக்கங்களை பற்றியும் மிக விரிவாகவும் அழகாகவும் கூறிய கவிஞர், அடுத்து அவர் கூறப் போவது தான் இந்த இடத்திற்கு மிகவும் முக்கியமானது.

“வரைமுறையற்ற தன்மை, நூதன படிமங்கள், மயக்க நிலையை வெளிப்படுத்தும் முறை, கொச்சை மொழிப் பிரயோகங்கள் முதலியவை எப்படி புதுக்கவிதைகளுக்கு வலு சேர்க்கின்றனவோ அதேபோல அவை புதுக்கவிதைகளை பலவீனப்படுத்தும் சாதனங்களாகவும் அமைவதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு என்பதை உணர்ந்து கவிஞன் விழிப்போடு இருக்க வேண்டும்….” என்று படைப்பாளிகளுக்கு சொன்னவர், அந்த படைப்பாளிகளில் நானும் ஒருவன் தான். மேற் சொன்ன வார்த்தைகள் தனக்கும் சேர்த்த் தான், என்பதையும் நியாயமாக கூறுகிறார்.மேலும்,

“எப்படி யாப்பிலக்கணப்படி எழுதியதெல்லாம் கவிதை ஆகாதோ அப்படியே இலக்கணத்தை தப்பி பிறப்பதெல்லாம் புதுக்கவிதையாய் ஆகிவிடாது. அதுபோலவே எழுதியவனுக்கே புரிந்திடாத அதிக கஷ்டமான கவிதை மிக உயர்ந்த கவிதையாக ஆகி விடாது. சொல் புதிது, பொருள் புதிது, கற்பனை வளம் புதிது. பேசாப் பொருளை நான் பேச துணிகிறேன் என்பதோடு, விளங்காத பொருளை நான் விளங்க முயல்கிறேன் என்பதையும் நாம் நினைவுறுத்தி கொள்ள வேண்டும். நான் விழிப்புடன் இல்லாவிட்டால் என்னையே ஏமாற்றிக் கொள்ள புதுக்கவிதையில் வாய்ப்புண்டு. படிமங்களையும் பிராய்டின் குறியீடுகளையும் கொட்டி நிரப்பி, சொற்களை வெட்டி ஒட்டி புதுக்கவிதையின் உருவமில்லாத உருவத்தில் ‘புரியாத்’ தனத்தையும் சேர்த்து நான் எழுதிவிட்டு அதை புதுக்கவிதை என்று உலாவ விட்டுவிட முடியும். நான் கெட்டிக்காரன் ஆனால் எட்டு நாளைக்கு ஆவது ஊரை என் புலமையில் நம்பிக்கை வைக்கச் செய்து விட முடியும். இப்படி நேர்வதும், நேராமல் இருப்பதும் கவிஞனின் நேர்மையை பொறுத்தது. நான் எழுதியிருப்பது கவிதை தானா அது எனக்கு விளங்குகிறதா என்று நானே உரைத்துப் பார்த்துக் கொண்டால்தான் நான் தோண்டி எடுத்திருப்பது தங்கமா கல்லா என்று எனக்குத் தெரியும். தங்கத்தின் மாற்று பார்ப்பது மற்றவர்கள் வேலை”

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது இன்று நான் என்ன சொல்ல நினைக்கிறேனோ அதை 55 வருடங்களுக்கு முன்னாள் ஒருவர் சொல்லி விட்டதை எண்ணி நான் வியப்படைகிறேன். அவருடைய நேர்மையை நான் பாராட்டுகிறேன். மேலே உள்ள கருத்துகள் இன்றைய கவிஞர்களுக்கும் மிக பொருத்தமாக இருக்கிறது. எனவே இன்றைய கவிஞர்கள் மேலே உள்ள சொற்களை ஒன்றுக்கு இரண்டு முறையாக வாசித்து மனதில் நிறுத்த வேண்டும் என்பதே எனது கருத்து.

புதுக்கவிதைகளில் சில புரியாமல் இருப்பது மட்டுமல்ல, அதில் என்னதான் இருக்கிறது என்பதை தெரிந்து விட வேண்டும் என்ற முனைப்போடு, நீண்டநேர கடின வாசிப்பிற்குப் பிறகு அது புரிய வருகிறது.(சிலது புரியாமலும் போய்விடுகிறது) அப்படி புரிய வரும்போது. அதன் உள்ளடக்கம், பொருள் மிக..மிக அற்பமானதாகவும், சொற்பமானதாகவும் இருக்கவே, இதற்கா இவ்வளவு நேரம் எனக்கெட்டு படித்தோம் என்கிற சோர்வு ஏற்படுகிறது. இப்படி இருந்தால் யார் தான் கவிதைகளின் பக்கம் தலை வைத்து படுப்பார்கள்.

1947 இல் இருந்து 1964 வரை 17 ஆண்டுகள் தமிழில் நிகழ்ந்த புது கவிதைகளின் தோற்றத்தையும் அதன் வளர்ச்சியையும் ரசித்து, ஆராய்ந்த தி.க. சிவசங்கரன் அவர்கள். கவிதைகளில் உள்ள மேடு பள்ளங்களை மன வருத்தத்தோடு இப்படி கூறுகிறார்.

“…வெறுமை, விரக்தி, முனைப்பு, மன முறிவு ஆகிய குரல்கள் பல புதுக்கவிதையின் அடித்தளமாக ஒலிக்கின்றன. நவீன பட்டினத்தார்களாகவும், பத்திரகிரியார்களாகவும், திருமூலர்களாகவும், திதம்பர சித்தர்களாகவும் சில புது கவிஞர்கள் மாயா வாதம் (மிஸ்டிசிசம்) பேசுவது, அதுவும் இந்திய வரலாற்றின் முக்கியமான இக்காலகட்டத்தில் அழுது புலம்பி கையறு நிலையில் கை விரல்களை சொடுக்குவது எனக்கு மிகவும் பிடிபடாத சங்கதி.

இந்தக் கவிஞர்கள் தமிழ் சொல்லை முறிக்கட்டும் மனித மனத்தை ஏன் சிரமப்பட்டு முறிக்க வேண்டும் அதுதான் தெரியவில்லை. ஐயோ பாவம் இவர்களுக்கு என்ன சுகக்கேடு, நோய்?”

அன்று புதுக்கவிதையின் மீது ரசிப்பும் நேசிப்பும் உள்ள ஒருவரே இப்படி கேட்டிருக்கிறார். என்றால் அந்தக் காலக் கவிதைகள் எந்த நிலையில் வளர்ச்சி அடைந்திருந்தது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இதை கவிதை மனம் கொண்டவர்கள் தெளிவாக தெரிந்து, புரிந்து கொண்டால், அடுத்து கவிதையை வழிநடத்திச் செல்கின்ற பாதை என்ன என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

புதுக்கவிஞர்களின் இந்த மன முறிவு விவகாரத்தில் சி.சு. செல்லப்பாவின் கருத்தும் மிக முக்கியமானது அவர் என்ன கூறுகிறார் என்றால்.

“மன முறிவு –ஃபிஸ்டி ரேஷன்—ஒரு மோஸ்தர் (ஃபேஷன்) இல்லை இன்னொரு இலக்கிய நோக்கைப் பார்த்து இமிடேட் செய்வதற்கு அந்த இடத்து அந்த நாளைய வாழ்வை பொறுத்தது. மேற்கே இன்றைய வாழ்வு அதற்கு உணவு ஊட்டலாம். நம் வட்டாரத்தில் நம் வாழ்வில் அது தொனித்தால் ஒழிய, இலக்கியத்தில் தொனிக்காது. இமிடேட் செய்து தொனிக்கச் செய்தால் அதில் உண்மை இருக்காது”

இதில் சி.சு. செல்லப்பா என்ன சொல்ல வருகிறார் என்றால், மேற்கத்திய நாடுகளின் வாழ்க்கை முறை அந்த முறையை அங்கே உள்ளவர்கள் கவிதையில் வடிக்கும் போது அது சரியாக ரசிக்கப்பட்டு அது வெற்றி அடைகிறது. அதே பாணியில் இங்கே எழுதுவது சரியா வருமா? என்பது தான் அவர் கேள்வி.

புதுக்கவிதைகளைப் பற்றி மேற்படி எழுத்தாளர்களின் கருத்துக்களை படித்தோம். இவர்கள் ஏன் இப்படி காரசாரமாக கருத்து தெரிவித்தார்கள். அந்தக் கால கவிஞர்கள் அப்படி என்னதான் எழுதினார்கள்? அவர்களின் கவிதைகளையும் கொஞ்சம் பார்ப்போம்.

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

தமிழில் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர் சுந்தர ராமசாமி, அவர் பசுவய்யா என்ற பெயரில் எழுதிய கவிதையை பார்ப்போம்.

“நகத்தை வெட்டியெறி அழுக்கு சேரும்
நகத்தை வெட்டியெறி அழுக்கு சேரும்

அகிலமே சொந்தம் அழுக்குக்கு!
நகக் கண்ணும் எதற்கு அழுக்குக்கு”

இதை இப்படியே விட்டிருந்தாள் கூட கொஞ்சம் பரவாயில்லை கவிதையாக இருந்திருக்கும். ஆனால் அது இப்படி தொடர்கிறது.

பிராண்டலாமே– எதிரியை
பிராண்டலாமே?
பிராண்டலாம், பிடுங்கலாம்,
குத்தலாம், கிழிக்கலாம்.

வலது கை நகத்தை வெட்டி ஏறி–அல்லது தாம்பத்தியத்தை விட்டு விடு”

இது இப்படியே தொடர்கிறது. நகத்தை வெட்டி எறியலாம் என்கின்ற வார்த்தை மூன்று நான்கு இடங்களில் மீண்டும் மீண்டும் வருகிறது.

இப்படிப்பட்ட கவிதைகளை எல்லாம் பார்த்ததாலோ என்னவோ! புகழ்பெற்ற எழுத்தாளர் கு.அழகிரிசாமி அவர்கள்.

“நான் பார்த்த புதுக்கவிதைகளை எழுதியவர்களுக்கு கவிதையைப் பற்றி மட்டுமல்ல பொதுவாக இலக்கியத்தைப் பற்றிக் கூட எதுவும் தெரியாது என்பேன். இனி மேலாவது அவர்களுக்கு இலக்கிய அறிவை புகட்ட முடியும் என்ற நம்பிக்கையும் கூட இவர்கள் இதுவரை அளிக்கவில்லை. இவர்களை திருத்த முயல்வது வீண்வேலை” என்று கு.அழகிரிசாமி, இன்றைய புதுக்கவிதைகளைப் பற்றி உங்களின் கருத்து என்ன என்ற கேள்விக்கு இவ்வாறு கூறியிருக்கிறார்.

இவருக்கு புதுக்கவிதையின் மீதும் அதை எழுதிய கவிஞர்கள் மீதும் எவ்வளவு கோபமோ தெரியவில்லை. இந்த அளவு கடுமையாக சொற்களை கொட்டியிருக்கிறார். இப்படி இவரை இந்த அளவு கோபம் கொள்ளச் செய்தது எந்தக் கவிதையாக இருக்குமோ!

டி. கே. துரைஸ்வாமி என்கிற கவிஞரைப் பற்றியும் அவர் கவிதையைப் பற்றியும். இந்த நூலின் ஆசிரியர் வல்லிக்கண்ணன் இப்படி கூறுகிறார்.

டி. கே. துரைஸ்வாமி சோதனைக்காகவே சோதனை என்ற தன்மையில் கவிதை முயற்சிகளில் தீவிரமாக முனைந்தது போல் தோன்றுகிறது. படிப்பவரை குழப்பமுற வைப்பது அவரது கவிதைகள் சிலவற்றின் முக்கிய நோக்கம் என்று எண்ண வேண்டியதிருக்கிறது. க.நா.சு புதுக்கவிதைக்கு வகுத்த இலக்கணத்தை–’கவிதை சிக்கலும் சிடுக்கும் நிரம்பியதாக இருக்க வேண்டும். தெளிவு தொனிக்க வேண்டும். ஆனால், சிக்கல் விடுவிக்க கூடாததாகவும் இருக்க வேண்டும். கவிதை நயம் எதுவென்று எடுத்து சொல்லக்கூடாததாக இருக்க வேண்டும். புரியவில்லை போல இருக்க வேண்டும் அதே சமயம் பூராவும் புரியாமலும் இருந்து விடக் கூடாது’. க.நா.சு கூறியதை அப்படியே பின்பற்ற ஆசைப்பட்டவர் துரைஸ் வாமி என்பதாக எனக்கு படுகிறது” என்று கூறிய நூலாசிரியர் அவரின் கவிதைகள் சிலவற்றையும் நாம் வாசிக்க தருகிறார்.

எதற்காக இவர் இப்படி ஒரு இலக்கணத்தை வகுத்தார் என்று தெரியவில்லை. அந்த இலக்கணத்தை ஏன் பலரும் கடை பிடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

அன்றைய கவிஞர்கள் மட்டுமல்ல இன்றைய கவிஞர்களும், க.நா. சு கூறியதைத்தான் அப்படியே கடைபிடிப்பதாகவே தெரிகிறது. இப்படி வேண்டுமென்றே திட்டமிட்டு எதையாவது வார்த்தைகளைப் போட்டு குழப்பி ..குழப்பி எழுதியதை எல்லாம் பார்க்கும் போது எழுத்தாளர் கு. அழகிரிசாமி அவர்கள் கூறியதெல்லாம் சரிதான் என்றே தோன்றுகிறது. அதற்கு ஒரு ஆதாரமாக டி. கே. துரைஸ்சுவாமி எழுதிய ஒரு கவிதை.

கற்புக்கு முல்லை
கடவுளுக்கு தாமரை
காமத்துக்கு அல்லி

என்று சொன்னால்,
முல்லைக்கு வெள்ளை
தாமரைக்கு சிவப்பு
அல்லிக்கு இருட்டு

என்று சொன்னால்,
முல்லை மலர
அல்லி சோரும்
தாமரை மலர
முல்லை சோரும்,

அல்லி மலர
என்ன சொல்ல
என்று சொன்னால்
எங்கு சென்றால்
என்ன செய்தால்

அல்லி முல்லையாக,
முல்லை மரையாக
மரையும் அல்லி மலராக
மாற்றத்தில் மாற்ற முற,
ஏகம் அனேகமாக
அநேகம் ஏகமாக

வருவது உண்டோ?
சொல்வது அறிதே
என்று சொன்னால்?

எப்படி இருக்கிறது இந்தக் கவிதை? இப்படி எழுதி இதுதான் புதுக்கவிதை என்றால் புதுக்கவிதையின் மீது மரியாதை எந்த அளவு இருந்திருக்கும். இந்த கவிதையைப் பற்றி வல்லிக்கண்ணன் இப்படிச் சொல்கிறார்.

“இதில் ஏதோ மர்மம், பொருள், தத்துவம் இருப்பதாக வாசகன் குழம்பிக் கொண்டு மூளைக்கு வேலை கொடுத்து அவதிப்படட்டுமே என்பது தான் கவிஞரின் அந்தரங்க நோக்கமாக இருக்க முடியும் …”

இதுபோல் எழுதி குழப்புகிறவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். குழப்புவது மட்டுமல்ல அதிக பக்கங்கள் எழுதி கனத்த புத்தகமாகவும் வெளியிடுகிறார்கள். இப்படி எல்லாம் எழுதி வெளியிடுவது வாசகர்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா?. கவிதையில் எதற்கு கனத்த புத்தகம்? கவிதை என்பதே சொல் சிக்கனம் தானே. குறைவான சொற்களில் நிறைய சொல்வது தானே கவிதை. கவிதை பிறந்ததின் நோக்கமே அதுவாகத் தானே இருக்கும். கவிதை என்றால் இப்படித்தான், இதுதான் என்று வாசகர்களை ஒதுங்கி ஓடச் செய்கிறார்கள் இந்தக் கவிஞர்கள்.

கவிதை எப்படி இருக்க வேண்டும் என்றோ அல்லது இப்படித்தான் இருக்க வேண்டும் என்றோ யாரும் அறுதியிட்டு கூறி விட முடியாது. நானும் அப்படிக் கூறவில்லை. ஒரு கவிதை வெற்றி பெற வேண்டுமானால், சந்தர்ப்பம் சூழ்நிலை காலநிலை, கவிதை பிறக்கின்ற நேரம் எல்லாமே பொருத்தமாக காலத்தை பிரதிபலிப்பாக இருந்தால். அதாவது, தப்பும், தவறும், அநியாயம், அநிதி, கொடுஞ்செயல், மக்கள் படும் அவதி, அரசாங்கம் செய்யும் தவறுகள். அத்தனையும் கண்முன்னே நடந்து கொண்டிருக்கின்ற போதும், அது பற்றி நான் வாய் திறக்க மாட்டேன். தூரத்தில் இருக்கும் நிலாவையும், நட்சத்திரங்களையும்,புல்லாங்குழலையும் அதில் நுழையும் காற்றையும் தான் நான் பாடுவேன். என்றால்? அது கவிதையாக இருக்காது. மக்களுக்கான தலைவலியாக இருக்கும்.

எது எப்படியோ வெறும் சொற் கோலங்களாய் இல்லாமல், வெறும் எதுகை மோனைகளைக் கொண்ட வார்த்தை ஜாலங்களாய் இல்லாமல், கவிதையில் கொஞ்சம் கவிதை இருக்க வேண்டும்.

‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், புதுக்கவிதைகளுக்கான முழு வரலாறா? அப்படி இல்லை, “இது முழுமையான வரலாறு இல்லை” என எழுத்தாளரே கூறிவிடுகிறார்.

1970 க்கு முன் புதுக்கவிதை என்பது சோதனை முயற்சியாகவே இருந்திருப்பதாகத் தெரிகிறது. சோதனை முயற்சியை மட்டுமே ஆய்வு செய்து இருக்கிறார். சோதனைக் காலம் என்பது வாசகர்களுக்கும் சோதனையான காலமாகத்தான் இருந்திருக்கும் போல. புதுக்கவிதை வளர்ந்து, வளம் பெற்ற வரலாற்றை இவர் எழுதவே இல்லை. அப்துல் ரகுமான், நா. காமராஜன், வைரமுத்து, இன்குலாப், சிற்பி, மு. மேத்தா போன்ற கவிஞர்களை இவர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவே இல்லை. புதுக்கவிதை பிறந்த கதையை மட்டுமே சொல்லி இருக்கிறார். வளர்ந்து வரலாறான கதையை சொல்லவில்லை. கழுவி சுத்தம் செய்யப்படாமல் பிறந்த குழந்தை எப்படி இருக்குமோ, அப்படித்தான் அந்தக் காலமும். எனவே இந்த நூலில் புதுக்கவிதையின் வரலாறு அரைகுறையாகவே இருக்கிறது. நீளம் நீளமாய் உள்ள சில ஆய்வுரைகளை கொஞ்சம் குறைத்து, 1980 வரை உள்ள காலங்களையும் எழுதி இருந்தால் இந்நூல் இன்னும் சிறப்பான, சிறந்த நூலாக இருந்திருக்கும்.

நூலின் விவரங்கள்: 

நூல்: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
நூலாக்கம்: எழுத்தாளர் வல்லிக்கண்ணன்
வெளியீடு: அன்னம் பதிப்பகம், தஞ்சாவூர்.

எழுதியவர் : 

எழுத்தாளர் பொன். விக்ரம்
Ponvickram1967@gmail.com

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *