எளிய நடையில் அமைந்த எதார்த்தமான கதைக்களம். வண்ணநிலவன் அவர்கள் எழுதிய “பின்நகர்ந்த காலம்” என்ற கட்டுரைத் தொகுப்பை படித்தபோதே அவர்மீதான ஈர்ப்பு அதிகரித்திருந்த நிலையில் நண்பர் கார்த்திக் அவர்கள் படித்து ரசித்த “காலம்” நாவலை எனக்கு தந்து உதவினார். அவருக்கு என் முதல் நன்றி.

மிகச் சிறப்பான முறையில் குறுகிய கதாபாத்திரங்களைக் கொண்டு மிக நேர்த்தியான முறையில் பின்னப்பட்ட எளிய மனிதர்களின் வாழ்வியலை படம் பிடித்துக் காட்டியுள்ளது இந்த காலம் நாவல்.

பெரும்பாலான வாக்கியங்கள் பத்துக்கும் குறைவான வார்த்தைகளைக் கொண்டே வாக்கியம் அமைத்து மிக நுணுக்கமாக கதையோட்டத்தை சித்தரித்துள்ளார் வண்ணநிலவன் அவர்கள். தேவையற்ற வர்ணனைகளைத் தவிர்த்து எளிய வடிவில் அந்த சூழலில் நாமும் பயணிப்பது போல் நம் கண்முன் அக்காட்சி நடப்பது போல் வார்த்தைகளைக் கோர்த்து அழகோவியம் தீட்டியுள்ளார் என்றே உணர முடிகிறது.

22 வயது இளைஞரான நெல்லையப்பன், ஒரு இளைய வக்கீல் குமாஸ்தா. அவரை நோக்கி பின்னப்பட்டதாகவே கதையானது நகர்கிறது. தொழில் மேல் விருப்பம் இல்லாத நிலையிலும் குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக இத்தொழிலில் ஈடுபட்டு வரக்கூடிய குழப்பமான மனநிலையில் உள்ள இளைஞனின் கதைதான் இந்த காலம்.

புத்தகத்தின் மீதும் சினிமாவின் மீதும் இனம்புரியாத காதல் கொண்டு தனக்கான குமாஸ்தா பணியையும் திறம்பட செய்து வருகிறான் நெல்லையப்பன். “கஷ்டப்படுகிறவர்களின் காச வாங்கி வாழ்வு நடத்தும்” தொழிலாக இதைக் கருதினாலும் வேறுதொழில் செய்யும் வழியின்றியே இதனைச் செய்து வருகிறான் நெல்லையப்பன்.

அன்றாட நீதிமன்ற பணிகளையும் குமாஸ்தா பணியில் அவன் மேற்கொள்ளும் வேலைகளையும் மிக தத்ரூபமாக காட்சிப்படுத்தியுள்ளார் வண்ணநிலவன். அந்தப் பணியை எழுத்தாளராக தான் வருவதற்குமுன் செய்துவந்த காரணத்தால் என்னவோ மிக இயல்பாக காட்சிப்படுத்தி உள்ள உணர்வே தோன்றுகிறது. முதன்மதலாக குமாஸ்தாக்கள் கருப்பு கோட் அணிய வேண்டும் என்ற தகவலையும் அறியமுடிந்தது பெரும் மகிழ்வை தந்தது‌. அதிலும் வேஷ்டி அணிந்து கொண்டு கருப்புக்கோட்டை அணியும் முறையை எள்ளலுடன் காட்சிப்படுத்தியுள்ளார்.
இதனால் தான் “கறுப்புக் கோட்டு” என்று முன்னர் தலைப்பிட எண்ணினாரோ என்னவோ?

நெல்லையப்பனுக்கும் எதிர்வீட்டில் வசிக்கும் உறவுமுறையில் அக்காவான காந்திமதிக்கும் இடையேயான உறவு மிகச் சிறப்பாக சித்தரித்துள்ளார்.நம் அடுத்த வீட்டு அக்காக்கள் மீது இளம் வயதில் நாம் கொள்ளும் நேசத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளது எனலாம். நாவலின் இறுதிவரை கதைக்கான மையக்கரு இந்த உறவு தான் என்பது நமக்கு புலப்படா வண்ணம் மிக நளினமாக நம்மை நாவலின் வேறு வடிவங்களின் மீது ஈர்ப்பை உண்டாக்கி கொண்டு சென்றுள்ள விதம் சாதனைக்குரியது. எழுத்தாளரின் மிகப்பெரிய வெற்றியாகவே இதனை நான் கருதுகிறேன்.

காலம் : : வண்ணநிலவன்

நெல்லையப்பன் சகோதரி லட்சுமி, வீட்டு மாப்பிள்ளையாக இருக்கும் கோமதிநாயகம் வழியாக வேலையில்லா குடும்பத்தின் அவலமனநிலையை படம் பிடித்துக் காட்ட முயற்சித்துள்ளார் எழுத்தாளர்.

நெல்லையப்பனின் வக்கீலான சீனியர் பாலையாவின் அரசியல் பிரவேசம் வழியே நம்மை கடத்தி அவர் வெற்றி பெற்றுவிடுவார் என்று நாம் என்னும் சூழலில் தோல்வி அடைந்து விட்டார் என்று எதிர்பாராத திருப்புமுனையைத் தருகிறார். அதனையும் வக்கீல் எளிதில் கடந்து செல்லும் காட்சி கவனிக்கத்தக்கது.

மூத்த குமாஸ்தாவான சிதம்பரம் பிள்ளையின் கதாபாத்திரம் அச்சு அசலாக ஒரு நடுத்தர வர்க்க தந்தையின் மனோபாவத்தை காட்சிப் பிம்பமாக கண்முன் நிறுத்தியதாகவே தோன்றுகிறது. நெல்லையப்பனின் தொழில் நேர்த்தியையும் நற்குணத்தையும் மெதுவாக பாராட்டி அவனை அன்பாகவும் அனுசரணையாகவும் நடத்தி தொழிலை கற்றுக்கொடுக்கும் ஆசானாக மிளிர வைக்கிறார். அந்த நல்ல உறவு முறை வாயிலாக அவனை தன் மருமகன் ஆக்கிக் கொள்ள துடிக்கும் பெண்ணைப் பெற்ற தந்தையின் எதார்த்த சூழல் நம்மை கண்கலங்க வைப்பதாகவே உள்ளது.

காந்திமதிக்கும் சங்கரனுக்கும் இடையேயான காதல் மிகக் கண்ணியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் காதலை உணர்ந்த காந்திமதியின் தாய் ராஜம்,’ தந்தை இல்லாத காரணத்தால் தான் காந்திமதியை தன்னால் கண்டிக்க இயலவில்லையே’ என்று வருத்தப்படும் காட்சி மிகவும் ரசனைக்குரியது.

சங்கரனுக்கு இரண்டு தங்கைகள் உள்ள காரணத்தால் தங்கையின் திருமணம் முடிந்த பின்னர்தான் காந்தியை திருமணம் செய்துகொள்ள இயலும் என்ற நிலையை உணர்ந்து காந்திமதி காத்திருக்க துணிவதும் அதை தாயார் ராஜம் ஏற்றுக்கொள்வதும் மிகவும் பொருத்தமான சூழலாகவே உள்ளது.
இவர்களின் காதலுக்கு நெல்லையப்பன் தாதுவாக செயல்படுவதும் காந்திமதிக்கு ஒரு பாதுகாவலனாக எல்லா இடத்திற்கும் துணைக்கு சென்று வருவதும் சாதாரணமான நிகழ்வுகளாகவே கருதும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நெல்லையப்பனின் தந்தை, தனது மகளின் கணவருக்கு ஒரு தொழிலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும் தானும் 11 மணிவரை கஷ்டப்படும் கடை வியாபாரத்தில் இருந்து மீள்வதற்காகவும் நெல்லையப்பனும் வீட்டோடு மாப்பிள்ளையாக சென்று விடுவான் என்று யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு தனது தங்கை மகளை மணமுடிக்க அதிலும் குறிப்பாக சொத்துக்களை எழுதி வாங்கிய பிறகு திருமணம் என்று நிச்சயம் செய்வதெல்லாம் நடைமுறை மனித வாழ்வை அச்சு அசலாக காண்பது போன்ற பிம்பத்தையே தோற்றுவிப்பதாக உள்ளது.

மற்றொரு வக்கீல் குமாஸ்தாவான கிருஷ்ணய்யர் மகள் பத்மாவிற்கும் எதிர்வீட்டில் வசித்து காப்பிப் பொடி கடையில் வேலை செய்யும் சிவாவிற்கும் இடையேயான இளம்பருவ நேசம் அதை சிவா புரிந்துகொள்ளும் விதம் ஆகியவை இன்றைய காதலர்கள் நடந்து கொள்ள வேண்டிய பாடமாகவே கருதவேண்டியுள்ளது.

Diwali Malar - 31 October 2019 - “என் எழுத்தில் ...
எழுத்தாளர் வண்ணநிலவன்

இங்ஙனம் இந்த நாவலில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் சரி; அவர்களின் குடும்பமும் சரி மிக அழகான கவிதை போல் காட்சிப்படுத்தியுள்ளார் எழுத்தாளர். பொதுவாக திரைப்படங்களில் வில்லனுக்கு முக்கியத்துவம் இருந்தால்தான் கதாநாயகனுக்கும் முக்கியத்துவம் அதிகரித்து சுவாரஸ்யம் கூடி திரைப்படம் வெல்லும் என்ற ஒரு கணக்கீடு உள்ளது. ஆனால், இந்த நாவலில், “எந்தவொரு எதிர்மறையான கதாபாத்திரமும் இல்லை” என்பதே இந்த நாவலில் நான் வியந்த மிகச் சிறப்பான ஒரு அம்சம். இன்றைய தொலைக்காட்சி தொடர் நாடக இயக்குனர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சமாக இதனை கருதலாம்.

பாலகிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தை மிக தீவிர இலக்கிய சிந்தனை கொண்ட மனிதராக காட்சிப்படுத்தி உள்ளார். இலக்கியக் கூட்டங்கள் நடத்துவதும் புத்தகங்கள் மீது தீவிர பற்றுடன் விமர்சனங்களை முன்வைத்து அதனை நோக்கி பயணிப்பதுமாக உள்ளது அவரது கதாபாத்திரம். அவரே நெல்லையப்பனின் மன சஞ்சலத்தை போக்கும் அருமருந்தாக மாறி நாவலை இல்லை… இல்லை… நெல்லையப்பனின் வாழ்வை இனிமையாக மாற்ற உதவியுள்ளார் எனலாம்.

சிறுசிறு சொல்லாடல்கள் மூலமாக காட்சியை விரிவுபடுத்தி செல்லும் பாங்கு பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது. மழைச்சாரல், காற்று, இலை அசைவு, நடுநிசி இரவு சப்தம், சைக்கிள் டயர் சத்தம், நாய்களின் குரைச்சல் ஒலி என தான் காணும் கேட்கும் காட்சிகளை எல்லாம் எளிய வார்த்தைகள் ஊடாக நம்மையும் அந்த ஊரின் தெருக்களில் மிதிவண்டியில் பயணம் செய்யக்கூடிய நல்வாய்ப்பை வழங்கியுள்ளார் எனலாம்.

நாவலில் இடம் பெற்ற ரசனைமிகு வாக்கியங்களில் இரண்டு வாக்கியங்களை பகிர்வதுடன் இந்த அறிமுகத்தை நிறைவு செய்யலாம் என்று எண்ணுகிறேன்‌.

“இதைவிட நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருப்பதால், இந்த வேலையில் கவனம் குறைந்து வருகிறதோ”.

“தினந்தோறும் இரவு வருகிறது. அந்த இரவில் என்ன புதுமை இருக்க முடியும் என்றுதான் எவருக்கும் தோன்றும்.”

நல்லதொரு படைப்பு. வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள்.

நன்றி.

காலம், வண்ணநிலவன், நற்றிணை பதிப்பகம்

காலம்
வண்ணநிலவன்
நற்றிணை பதிப்பகம்
பக்கங்கள் 160
₹.120.

💐 பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *