“ரெயினீஸ் ஐயர் தெரு”
வண்ணநிலவன்
நற்றிணை பதிப்பகம்
பக்கங்கள் : 80
₹. 70
“கடல்புரத்தில்” மற்றும் “காலம்” ஆகிய இரு நாவல்களின் வழியே எம் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ள எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களின் மற்றுமொரு முத்திரைப் படைப்பே “ரெயினீஸ் ஐயர் தெரு”. மிகைப்படுத்தப்பட்ட வருணனைகள் ஏதுமின்றி உள்ளதை உள்ளபடி பகிர்ந்து உள்ளத்து உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்யும் எழுத்துக்குச் சொந்தக்காரராகவே வண்ணநிலவன் அவர்களை அடியேன் தரிசிக்கிறேன்.
ரெயினீஸ் ஐயர் தெருவில் உள்ள ஆறு குடியிருப்புகளில் வாசம் செய்யும் எளிய மனிதர்களின் இனிய அறிமுகங்களே இந்த நாவல். நாவலுக்கான இலக்கணங்களை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் காணும் காட்சிகளை நேரிடையாக காட்சிப்படுத்தும் வடிவத்தில் வார்த்தெடுக்கப்பட்ட வார்த்தைகளில் சொல்லோவியமாக ரெயினீஸ் ஐயர் தெருவை தீட்டியுள்ளார் என்பதே நிதர்சனம்.
“டாரதி” என்ற இளம்பெண்ணின் வாயிலாக அறிமுகமாகும் நாவல் அவளினூடாகவே பயணிப்பதாக தோன்றினாலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குண இயல்புகளை எடுத்தியம்புவதாகவே அமைந்துள்ளது. ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நம்மை கைபிடித்து அழைத்துச் சென்று அங்குள்ளவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறிய வண்ணம் நமக்கு அறிமுகப்படுத்தும் எழுத்தாளரின் எழுத்துத்திறமை மிக இயல்பாகவே அமைந்து நம்மை கிறங்கடிக்க வைப்பதாகவே அமைந்துள்ளது.
டாரதி, எபன், இருதயத்து டீச்சர், அவளது கணவன் சேசய்யா, தங்கை பிலோமி மற்றும் மாமியார் , அன்னமேரி டீச்சர் அவரது மகன் தியோடர், ஹென்றி மதுரநாயகம் பிள்ளை, அவரது மகன் சாம்சன், மகள் அற்புதமேரி, எஸ்தர் சித்தி, கல்யாணி, ஆசிர்வாதம் பிள்ளை, அவரது மனைவி ரெபேக்காள், அவர்களது மகள் அலீஸ், மங்களவல்லி சித்தி, அவளது மகள் ஜீனோ, ஜாஸ்லின் பிள்ளை, அவரது தங்கை ரோஸ் அம்மாள், அவளது கணவன் தேவயிரக்கம் ஆகியோரே ரெயினீஸ் ஐயர் தெருவில் முக்கிய கதாபாத்திரங்களாக வலம் வந்தவர்கள் எனலாம்.
உயிருள்ள ஜீவன்களை மட்டுமே கதாபாத்திரங்களாக வடிக்காமல் தெருவின் முகப்பாக உள்ள கல்லறை, தெருவை ஒட்டி ஓடுகின்ற வாய்க்கால் ( வெனீஸ் நகரத்து வீடுகள் உவமை) மழை, உயர்ந்த மேடை அடுப்பு, தாமரைப் பூ செதுக்கிய கல்படி, காளிமார்க் சோடா கம்பெனி, பொருட்காட்சி ராட்டினம், மீன், கறி வாங்குதல், மோரீஸ் எய்ட் கார் போன்றவற்றையும் கதாபாத்திரங்களாகச் சித்திரித்து நாவலைப் பிண்ணிய விதம் பிரமிக்க வைக்கக்கூடியதே.
சாம்சன் கதாபாத்திரம் இள வயதின் துடிப்புடன் அமைத்து நாவலுக்கு ஒருவித கிளுகிளுப்பு ஊட்டியுள்ளார் எனலாம். சாம்சனுக்கும் எஸ்தர் சித்திக்குமான உறவும் அன்னமேரி டீச்சரின் நடை உடை பாவனைகளும் அதற்கான சாம்சனின் நடவடிக்கைகளும் விடலைப் பருவத்தின் அம்சங்களாகவே கருதும் வண்ணம் இயல்பாக வடித்துள்ளார் எழுத்தாளர் அவர்கள். சாம்சன் நடத்தை குறித்து அவளது தங்கை அற்புத மேரி கர்த்தரிடம் வேண்டுதல் மேற்கொள்ளும் காட்சிகள் எல்லாம் மிக மிக ரம்மியமானவை.
தியோடர் புரியாத புதிராக தோன்றினாலும் அவனிடம் இயல்பாக அரும்பும் அன்பும் அக்கறையும் கவனிக்கத்தக்கது. குடியால் சீரழிந்தாலும் அநாதரவாக இருக்கும் ஆசிர்வாதம் பிள்ளை, ரெபேக்காளுக்கு உதவும் தருணங்கள் உன்னதமானவை. இல்லற வாழ்வை முறையாக அறிவிக்காவிட்டாலும் நம்மை அனுமானிக்கத் தீர்மானித்த யுக்தி கவனிக்கத்தக்கது. தெருவிற்கே வேண்டாதவனாக இருந்தாலும் உதவிக்கரம் நீட்டும் தியோடரின் பண்புநலன் ரசிக்கத்தக்கதே.
இருதயத்து டீச்சருக்கும் சேசய்யாவுக்குமான அந்நோன்யமான உறவு மெய்சிலிர்க்க வைக்கக் கூடியதே. சேசய்யாவின் இருமலின் கொடூரம் நம்மை கண்ணீர் சிந்த வைக்கக் கூடியதே. பிலோமிக்கு சேசய்யா மீது கவியும் நேசம் விசித்திரமான உணர்வின் வெளிப்பாடின்றி வேறேது. டாரதிக்கும் எபனுக்குமான அன்பும் கருணையும் ஒரு ரகமென்றால் டாரதிக்கும் ஜீனோவுக்கான பாசப் பிணைப்பு ருசிகரமானதே.
ஐந்து வீட்டு கதாபாத்திரங்களுடனும் நெருங்கிய உணர்வுடன் பழகும் கல்யாணி கதாபாத்திரம் காந்த சக்திமிக்க கவர்ச்சிகரமான பாத்திரப் படைப்பாகவே அமைத்துள்ளார். கல்யாணி மீது ஆடவரே பொறாமைப்படும் வண்ணம் அமைந்த உன்னதமான கதாபாத்திரமாகத் தோன்றுகிறது. எழுத்தாளரே தான் கல்யாணியோ என்ற ஐயமும் உண்டாவதைத் தவிர்க்க இயலவில்லை.

வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் உணர்வுகளை மிக தத்ரூபமாக காட்சிபடுத்திய விதம் பாராட்டுதலுக்குரியது. இறுதி அத்தியாயம் வரை ஆறாவது வீட்டை அறிமுகப்படுத்தாமல் இறுதியில் கனமான உணர்வை ஊட்டிய விதத்தில் நாவல் மிளிர்கிறது எனலாம். ரோஸ் அம்மாள் கதாபாத்திரம் கணவனை விட்டு பிரிந்து வாழும் பெண்ணின் உள்ளத்து உணர்வுகளின் பிறப்பிடமாக அமைத்த விதம் சுவாரஸ்யமான அனுபவமே.
மழையில் சுவர்கள் இடித்து விழும் கோரக் காட்சிகளைக் காட்சிப்படுத்திய வண்ணம் குளிர்ச்சியான படிகல்லில் அமரும் மென் உணர்வையும் கடத்திய விதம் மெய்சிலிர்க்க வைக்கக்கூடியதே. ஏழ்மையையும் அன்புக்கு ஏங்கும் பரிதவிப்பையும் ஒருபுறம் காட்டிக் கொண்டே கருணையையும் நேசத்தையும் நாவல் முழுவதும் பரவச் செய்த விதம் நயமிக்கதே… சின்னஞ்சிறு விஷயங்களையும் மிக நுட்பமாக விவரித்த விதத்திலேயே நாவல் புதிய தடம் அமைத்து பயணிக்கிறது.
தெருவின் அன்றாட இயல்புகளை நாள்,கிழமை வாரியாக விவரித்த அத்தியாயம் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வியலை படம் படித்துக் காட்டக் கூடியதே. எண்பதே பக்கங்களில் ஆறு குடியிருப்பு மனிதர்களின் குண இயல்புகளை எளிய நிகழ்வுகளின் வழியே காட்சிப்படுத்தி பரவசத்தில் ஆழ்த்தியுள்ளார் எழுத்தாளர். மனித முகங்களின் இறுக்கத்தைத் தளர்த்தி மனித மாண்புகளை புரிந்து அன்பையும் பரிவையும் சக மனிதர்களிடையே தூவிக் கொண்டே இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தக் கூடிய உன்னத படைப்பாகவே இந்நாவலை அடியேன் கருதுகிறேன்.
சின்னஞ்சிறு வயதில் நான் வாழ்ந்த கிராம வீடுகளையும் அவற்றில் வாசம் செய்த மனித முகங்களையும் தேடி பயணிக்க வைப்பதாகவே இந்நாவல் அமைந்து நினைவலைகளைக் கிளர்ந்தெழச் செய்தது என்பதே நிதர்சனம். கோழி வளர்ப்பையும், மழை வாசத்தையும் காட்சிப் படிமமாக உருவகித்த விதம் சிறப்புக்குரியதே.. ஒரு நீள்கதையாக இல்லாமல் சிறு சிறு நிகழ்வுகளைக் (கதை) கூறிக் கொண்டே நாவலை விவரித்த விதம் வித்தியாசமான அனுபவமாக மிளிர்கிறது. தாயை இழந்த டாரதிக்கு மட்டுமல்ல படிக்கும் ஒவ்வொருவருக்கும் அடைக்கலம் தந்து அரவணைத்து அன்பையும் பரிவையும் விதைக்கும் நல்லதொரு தெருவே இந்த “ரெயினீஸ் ஐயர் தெரு”.
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். நன்றி.
பா. அசோக்குமார்
மயிலாடும்பாறை.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

