விழியன் எழுதிய "அம்கா (Amka)" கதைத்தொகுப்பு புத்தகம் | Writer Vizhiyan's Amka (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

விழியன் எழுதிய “அம்கா (Amka)” கதைத்தொகுப்பு – நூல் அறிமுகம்

சிறார் எழுத்தாளர் விழியன் அவர்களின் மிகச் சிறந்த படைப்பு அம்கா.குழந்தைகளின் உலகை அறிந்து அவர்களுக்கான கதைகளத்தை உருவாக்கி வாசிப்பை தேனாக மாற்றி குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் ஒரு படைப்பாளி எழுத்தாளர் விழியன் அவர்கள் 14 தலைப்புகளின் கீழ் இந்த புத்தகத்தை படைத்துள்ளார்.

அம்கா என்றால் என்ன என்று கூகுளிடம் கேட்டு விடையே தெரியாமல் தான் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.வாசித்த பின்பு தான் தெரிந்தது அதற்கான பொருள்.இந்த தலைப்பை எப்படி கண்டு பிடித்தார் என்பதே எனக்கு யோசனையாக இருந்தது.அதை நான் இங்கு சொல்ல மாட்டேன்.அனைவரும் புத்தகத்தை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே…

2019 கொரோனா காலகட்டங்களில் குழந்தைகள் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலேயே அடைபட்டு இருந்த காலங்களையும்,புத்தக வாசிப்பு என்பது கல்வி நிலையங்களில் எந்த அளவிற்கு வரவேற்கப்படுகிறது,மனிதர்களுக்கு இடையில் மட்டுமே பேசிக்கொள்ளும் மனிதநேயம் சற்று விலங்குகளிடம் பாருங்கள் என்று ஒவ்வொரு தலைப்புகளாக எடுத்து அதை குழந்தைகளுக்கு தெளிவாக அன்பாக எடுத்துரைத்துள்ளார்.

மகிழை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது.இந்த சிறு வயதில் அவளுக்கான எண்ணம் எவ்வளவு அழகாக பறந்து விரிந்துள்ளது. கொரோனா காலகட்டங்களில் வீட்டிலேயே அடைபட்டு இருந்த குழந்தைகள் வெளியுலகை காண வேண்டும் என்ற ஆசை,மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட வேண்டும் என்னும் ஏக்கம் அவளை காலை 8 மணிக்கெல்லாம் எழுப்பி சுகாதார பணியாளரின் குழந்தை சசியை பார்க்க வைத்தது.சசியுடன் பல கதைகளை பரிமாறிக் கொள்கின்றனர்.பசிக்கு உணவையும் சேர்த்து தான் மகிழ் பரிமாறினாள்.

வயிற்றுக்கு உணவை மட்டும் அளித்தால் போதாது என்று மூளைக்கும் சற்று வேலை கொடுத்து தினமும் சசியின் ஆரம்பக்கல்விக்கு உதவுகிறாள் மகிழ். தள்ளு வண்டிகளில் குப்பைகளை சுமந்து கொண்டு சென்ற தூய்மை பணியாளர்களுக்கு மாற்றாக இப்போது பேட்டரி வண்டிகள் வந்துவிட்டன.தூய்மை பணியாளர்கள் தங்கள் வாயில்களில் வைத்திருக்கும் விசில்களை மூலமாக பெரும் தொற்று பரவுகிறது என்பதற்காக அதற்கு மாற்றாக பேட்டரி வண்டிகளில் ஒலிப்பெருக்கி வைத்திருப்பது சிறப்பு.

சுகாதார பணியாளர்களுக்கு தண்ணீர்கூட குடிக்க தயங்கும் சில மனிதர்களும் நம்மில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.ஆனால் மகிழ் அவர்களை அழைத்து தனக்கு தெரிந்த கல்வியை அவளுக்கும் கற்றுக்கொடுத்து தன்னுடன் பிறந்தவளை போன்று நினைத்தது சிறப்பு.ஒவ்வொரு குழந்தைகளுக்கும் இப்படியான எண்ணங்கள் தானாக எழவேண்டும்.

பொதுவாக குழந்தைகள் ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு புதிதாக சேரும் போது அங்கு உள்ள பள்ளியின் சூழல்,மாணவர்களின் செயல்பாடுகள்,ஆசிரியர்களின் போக்கு என எத்தனையோ சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும்.அதை எல்லாம் தாண்டி முன்பெல்லாம் பள்ளி சீருடை ஒவ்வொரு பள்ளிக்கும் வேறு விதமாக இருக்கும்.ஒரு மாணவன் ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளிக்கு போகும் போது சீருடை தைப்பது ஒரு பெரும் வேலையாக இருக்கும்.சீருடை தைத்து நம் கைக்கு வருவதற்கு எப்படியும் ஒரு மாத காலம் ஆகும்.அது வரை ununiform இல் செல்லும் போது நாம் மட்டும் தனியாக அங்கே அடையாள படுவோம்.ஒரு சிலரிடம் உடுத்தி செல்ல புது துணிகள் கூட இருக்காது.

ஆனால் இப்போது அப்படி அல்ல.அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே சீருடை.அதுவும் அரசே அதை வழங்குகிறது. எப்படி புதிதாக பள்ளிக்கு வந்த நாகப்பனை மாணவர்களும் ஆசிரியர்களும் இன்முகத்தோடு வரவேற்று முதல் இருக்கையில் இடமும் அளித்தால் எந்த ஒரு புது மாணவரும் பள்ளிக்குள் தன்னை ஒரு அன்னியமாக நினைக்க மாட்டார்கள் தானே….

எங்கள் ஊரில் …இல்லை இல்லை… எல்லா ஊரிலும் ஏதேனும் ஒரு கோவில் இல்லாமல் இல்லை.கூடுதலாக எங்கள் ஊரில் 3 கோவில்கள்.இந்த 3 கோவில்களிலும் காலையில் ஒரு பாட்டை போட்டு தான் எங்களை எழுப்புவார்கள்.இரவில் ஒரு பாட்டை போட்டு தூங்க வைப்பார்கள்.ஆக கோவிலுக்கு அருகில் படிக்கும் குழந்தைகள் இருந்தாலோ,நோயாளிகள் இருந்தாலோ,வயதானவர்கள் இருந்தாலோ அல்லது சிறு குழந்தைகள் இருந்தாலும் கூட பரவா இல்லை.கடவுளுக்கு பாடல்கள் மிக முக்கியம் என்று சிலர் ஒலி பெருக்குகளில் ஒலியை ஏற்றி தங்களின் பக்தியை வெளிக்காட்டுகின்றனர்.

இது இப்படி இருக்க சில பள்ளிகளுக்கு அருகில் உள்ள கோவில்களும் கூட இப்படி ஒலியை கூட்டி மாணவர்களின் கற்கும் நேரத்தை வீணடிப்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.இது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட….என்பதை ஆழ கூறி உள்ளார் ஆசிரியர்.

மாற்று திறனாளிகள் சமூகத்தில் சந்திக்கும் இன்னல்கள் பல.வீட்டில் அவர்களுக்கான எல்லா வசதிகளும் இருந்தாலும் வெளியில் சென்று அவர்கள் ஒரு நாள் பயணம் செய்வது முடியாத காரியம்.எனக்கும் ஒரு மாற்று திறனாளி அக்கா இருந்தார்கள்.எங்கள் வீட்டிற்கு அருகாமையில்(2கிலோமீட்டர்)இருந்த பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை படித்தார்.மேற்கொண்டு படிக்க அவர்களுக்கும் ஆசை தான். பெற்றோர்களுக்கும் விருப்பம் தான்.ஆனால் பள்ளி இருப்பதோ 3 கிமீ தூரத்திற்கும் மேல்.எங்கள் ஊருக்கு பேருந்து வசதி கிடையாது .நடந்து தான் செல்லவேண்டும்.நான் சொல்வது 20 வருடங்களுக்கு முன்பு.(ஆனால் இப்போதும் பேருந்து வசதி இல்லை.)அந்த காரணத்திற்காகவே என் அக்காவின் படிப்பு தடைபட்டது.

இப்புத்தகத்தில் உள்ள நண்பர்களை போன்ற நண்பர்கள் என் அக்காவிற்கு கிடைத்திருந்தால் ஒரு வேளை அவர்களும் படித்து இருந்திருப்பார்கள்.இந்த நேரத்தில் என் அக்காவை நினைத்து பார்க்கிறேன்.(இன்று அவர் என்னுடன் இல்லை). மாற்று திறனாளி நபர்களை சுமப்பது எவ்வளவு வலி வேதனை என்பது எனக்கு தெரியும்.அப்படி பட்டவர்களுக்கு இந்த அரசு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்ய வேண்டும்.பள்ளிகளில்,அலுவலகங்களில்,பேருந்துகளில்,அவர்கள் பயணிக்க தகுந்த நல்ல சூழல்கள்,கழிவறைகள் என எல்லா விதங்களிலும் அவர்களுக்கான வசதிகளை நாம் செய்து தர வேண்டும்….இந்த கதை என்னை மிகவும் கலங்க வைத்தது….

தற்காலிக தாத்தாக்கள்…என்ற தலைப்பே சற்று வித்தியாசமாக இருக்குல்ல..ஆமாம் இப்போதுள்ள சூழலில் தாத்தா பாட்டி எல்லாம் யாரென்றே தெரியாத நிலையில் தான் குழந்தைகள் உள்ளனர்.பெற்றோர் குழந்தைகள் ஒரு இடம்,தாத்தா பாட்டி ஒரு இடம் என வெவ்வொரு இடங்கள்…அப்படி இல்லை என்றால் இருக்கவே இருக்கு முதியோர் இல்லங்கள்.அடுக்கு மாடி கட்டிடங்களில் தங்களின் இருப்பிடங்களை மட்டும் சுருக்கி கொள்ளவில்லை,உறவு முறைகளையும் தான் சுருக்கி கொள்கிறோம்.

பள்ளி சென்று வரும் குழந்தைகளுக்கு குளிப்பாட்டி துணி மாட்டி சாப்பிட வைத்து இரவில் கதை சொல்லி தூங்க வைக்கும் தாத்தா பாட்டிகள் இன்று குறைந்து விட்டனர்.பள்ளிக்கு அனுப்புவதற்கும் ,மீண்டும் அழைத்து வருவதற்கும் தற்காலிக தாத்தாக்கள் தேவைப்படுகின்றனர் இப்போது. குடும்பங்களால் கைவிடப்பட்ட பெரியவர்களுக்கும், தாத்தா பாட்டி பாசத்தை காணாத குழந்தைகளுக்கும் நடக்கும் பாச உணர்வுகள் படிக்க படிக்க தாத்தாக்களின் மீது மரியாதை மிகுதியானது.

பெரும்பான்மையான பள்ளிகளில் குறிப்பிட்ட சில மாணவர்களை மட்டுமே அனைத்து செயல்பாடுகளுக்கும் அனுமதிப்பது நிகழ்ந்து கொண்டு உள்ளது. பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி கதை கூறும் போட்டி நடனம் என எல்லா போட்டிகளுக்கும் நன்கு படிக்கும் சிலரையே ஆசிரியர்கள் எப்போதும் தேர்வு செய்வார்கள். விருப்பம் இருந்தாலும் சில குழந்தைகளின் ஆசையை சில ஆசிரியர்கள் நிறைவேற்ற மாட்டார்கள். திறமையுள்ள குழந்தைகளை மட்டுமே பரிசுகளை பெற வைப்பதில் அல்லது போட்டிகளில் கலந்து கொள்ள வைப்பதில் ஆசிரியருக்கு எந்த ஒரு பெருமையும் இல்லை. மனதில் ஆசையும் நம்பிக்கையும் முயற்சியும் கொண்ட ஒரு மாணவருக்கு அளிக்கும் நம்பிக்கையே ஒரு ஆசிரியரின் வெற்றி.அதே போல் கணக்கை காட்ட மட்டும் ஒரு 5 பேரை வைத்துகொண்டு போட்டிகளை நடத்தி முடிப்பது போன்று நிலை மாற வேண்டும்.அனைத்து குழந்தைகளுக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும்.

புத்தக காட்சிக்கெல்லாம் ஒவ்வொரு பள்ளியும் போட்டி போட்டுக்கொண்டு தங்களின் மாணவர்களை அழைத்து செல்ல வேண்டும்.புத்தக வாசிப்பை மாணவர்களிடம் பரவலாக்க வேண்டும்.புத்தகங்கள் மட்டுமே ஒரு மனிதனை சமூகத்தின்பால் அழைத்து செல்லும் ஆயுதம்.சமூககல்வி என்பது பள்ளி புத்தகங்கள் மட்டுமே படிப்பதால் மட்டும் வருவதல்ல.சமுதாயத்தை நோக்கி நம் கால்கள் பயணிக்க வேண்டுமாயின் வாசிப்பை நாம் சுவாசிக்க வேண்டும்.

என்ற பல செய்திகளை அடங்கிய இந்த புத்தகத்தை அனைவரும் வாங்கி படியுங்கள்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: அம்கா (Amka)
ஆசிரியர்: விழியன்
வெளியீடு:
விலை: ₹.80
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 நளினி மூர்த்தி

 

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *