வரலாற்றுப் புதையல் – 1
சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும் செய்திகளையும் அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது. அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட இதைக் கொள்ள முடியும்.
இங்கே தரப்படும் கட்டுரையில் இரண்டாவது உலகப் போருக்குப் பிந்திய சென்னை நகர நிலைமையை ஏ.கே.செட்டியார் படம் பிடித்துக் காட்டுகிறார். இக்கட்டுரை அவரே ஆசிரியராக இருந்து வெளியிட்டு வந்த குமரி மலர் பத்திரிகை ஏப்ரல் 1943 இதழில் வெளியானதாகும். நாம் இத்தனைக் காலம் அறிந்திடாத அல்லது அறிந்திட வாய்ப்பில்லாத அபூர்வமான செய்திகளை இதன் வாயிலாக அறிகிறோம்.
சென்னை நகரம் – 1942
ஏ.கே.செட்டியார்
சென்னை நகரம் யாருக்குச் சொந்தமென்று தமிழரும் தெலுங்கரும் சண்டை போடுகிறார்கள். கூவம் நதிக்கு ஒரு புறம் தமிழர்களுக்காம் – மற்றொரு புறம் தெலுங்கர்களுக்காம். இச்சண்டையின் நாற்றம் கூவம் நதியின் நாற்றத்தை விட அதிகமாகிவிட்டது.
1942 ஏப்ரல் மாதத்தில் அபாயச் சங்கு ஊதியபொழுது தமிழர்களும் தெலுங்கர்களும் ஓட்டமெடுப்பதில் போட்டி போட்டார்கள். ஆபத்துக் காலத்திலே ஓடுகிறவர்களுக்குச் சொந்தம் கொண்டாட உரிமையில்லை. அபாயச் சங்கு ஊதியபொழுது, யார் சென்னையை விட்டுப் போகாதிருந்தார்களோ, அவர்களுக்குத்தான் சென்னை நகரம் சொந்தம்.
சென்னை நகரம் யாருக்குச் சொந்தமாயிருந்தாலும், அதை இன்று அரசாள்வது வெள்ளைக்காரர்கள். 1639-ம் வருஷம் பிரான்ஸிஸ் டே என்ற வெள்ளைக்காரருக்குச் சந்திரகிரி ராஜா சென்னை நகரத்தைச் சாசனம் செய்து கொடுத்தார். அன்று வந்த வெள்ளைக்காரர்கள் கோட்டையைக் கட்டிக் கொண்டு, கொடியைப் பறக்கவிட்டார்கள்.
ஒரு காலத்தில் சென்னை நகரம் மீன் பிடிக்கும் கிராமமாக இருந்ததாம். 1942-ல் சென்னை நகரம் 27 சதுர மைல் வரை பரவி, ஏழு லட்சம் ஜனங்களுக்குமேல் வசிக்கும் பெரிய பட்டணமாகிவிட்டது.
‘கெட்டும் பட்டணம் சேர்’ என்பார்கள். இந்தக் கூட்டம் சென்னைக்கு நியை வந்தது; பிழைப்புக்குக்காகப் பட்டணத்துக்கு வந்து நாளடைவில் கெட்டுப் போனவர்களும் உண்டு. சென்னையில் வசிப்பவர்களில், வட நாட்டாரைவிடத் தென்னாட்டார்தான் இன்னும் அதிகமாய் இருக்கிறார்கள் என்பது சந்தோஷப்படத்தக்க விஷயம். திருநெல்வேலித் தமிழ் முதல் பெஜவாடாத் தெலுங்குவரை, தென்னாட்டில் வழங்கும் பாஷைகளைப் பேசுகிற அத்தனை மக்களும் சென்னையில் வசிக்கிறார்கள்.
பல தலைமுறைகளாகச் சென்னையில் வசிக்கும் குடும்பங்கள் பலவுண்டு. இவர்கள் தமிழ் தெலுங்கு இரு பாஷைகளையும் பேசுவார்கள். தாங்கள் தமிழரா அல்லது தெலுங்கரா என்பது இவர்களுக்கே சந்தேகமாகிவிடும். எந்தக் கட்சி வலுக்கிறதோ, அதில் இவர்கள் சுலபமாகச் சேர்ந்து கொள்வார்கள். இவர்கள் போராடுவதெல்லாம் பாஷைக்காக அல்ல: தேர்தலுக்கும், பட்டம், பதவிகளுக்குந்தான்.
பட்டதாரிகள் மலிந்த நகரம் சென்னை. சர்வகலாசாலைப் பட்டங்கள், அரசாங்கத்தாரின் பட்டங்கள், அரசியல் கட்சிகள் கொடுக்கும் பட்டங்கள், மத ஸ்தாபனங்கள் அளிக்கும் பட்டங்கள் எல்லாவற்றையும் வித்தியாசமில்லாமல் ஏற்றுக்கொள்ளும் பெருங்குணம் சென்னை வாசிகளுக்குண்டு.
பட்டணத்தில் மற்றொரு கூட்டம் வக்கீல்கள். இவர்கள் இல்லாவிட்டால், வம்புகளும் வழக்குகளும் வந்து சேரா. இந்த வக்கீல்களின் கூட்டம் நூற்றுக் கணக்கிலிருக்கிறது. சில வக்கீல்கள் ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கின்றனர். சிலர், வீட்டுக்கு முன்னால் கௌரவத்திற்காகப் பலகையை மாட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றனர். வக்கீல்கள் சம்பந்தப்படாத அரசியல் கட்சிகளோ, யுத்த முன்னணியோ, ஏ.ஆர்.பி. விஷயங்களோ, சங்கீத சபைகளோ, இலக்கியச் சண்டைகளோ, வம்பு வழக்குகளோ, எதுவுமே சென்னையில் கிடையாது. சினிமா, பத்திரிகை, பலசரக்கு வியாபாரம், தமிழ் ஆராய்ச்சி, மோட்டார் பஸ் ஆகிய தொழில்களிலும் இந்த வக்கீல்களுக்குச் சம்பந்தமிருக்கும். இந்தத் திருக்கூட்டத்தைப் பார்க்க வேண்டுமானால் ஹைகோர்ட்டுக்குச் செல்ல வேண்டும். ஹைகோர்ட், சென்னையில் உள்ள பெரிய கட்டிடங்களில் ஒன்று. 1942-ம் வருஷமானது சென்னை ஹைகோர்ட் சரித்திரத்திலேயே முக்கியமானது. அந்த வருஷத்தில் சென்னை ஹைகோர்ட் கோயமுத்தூருக்கு மாற்றப்பட்டது. பிறகு சென்னைக்கு வந்ததும் சொந்தக் கட்டிடத்தில் நடைபெறாமல் சில காலம் தியாகராயநகரில் வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்றது.
சென்னையில் மற்றொரு முக்கியமான கூட்டம் பிச்சைக்காரர்கள். உண்மையான அபாயச் சங்கு ஊதியபொழுது, பிச்சைக்காரர்கூட ஊரைவிட்டு ஓடினர். ஊரில் ஜனங்கள் இருந்தால்தானே பிச்சைக்காரர்கள் பிழைக்கலாம்? இந்தப் பிச்சைக்காரர்கள்களில் பலர் எத்தனையோ வருடங்களாகச் சென்னையில் இருப்பதாகத் தெரிகிறது. பஸ் நிற்கும் இடங்களிலெல்லாம் இந்தத் திருக்கூட்டத்தைப் பார்க்கலாம். மவுண்ட்ரோட் பஸ் நிற்குமிடத்தில் ஒரு பிச்சைக்காரன், தான் மூன்று நாள் பட்டினி கிடப்பதாக நான்கு வருஷமாய்ச் சொல்லிவருகிறான். ஒரு நாள், இவன் ஒரு பஸ் டிரைவரிடம் நாலணா கடன் வாங்கினான். ‘பிச்சைக்காரனை நம்பிக் கடன் கொடுக்கலாமா?’ என்று நான் டிரைவரைக் கேட்டபொழுது, அந்த டிரைவர் “இவனை எனக்குப் பல வருஷங்களாகத் தெரியும். சாயந்திரத்திற்குள் சம்பாதித்துக் கொடுத்து விடுவான்” என்று கூறினான்.
சென்னை மோட்டார் பஸ் சரித்திரத்திலும் 1942-ம் வருஷம் முக்கியமானது. பெட்ரோல் கட்டுப்பாடு வந்ததும் பெரும்பாலான பஸ்கள் கரி வண்டிகளாக மாறின. பெட்ரோல் கிடைக்காததால், பெரிய மனிதர்கள் சொந்த மோட்டார்களை விற்றுவிட்டு, கரி பஸ்களில் பிரயாணம் செய்தனர். இந்தப் பெரிய மனிதர்களைத் தாங்க முடியாமல், கரி பஸ்களும் கண்ட இடங்களிலெல்லாம் நிற்க ஆரம்பித்தன. பிரயாணிகள் பணத்தையும் கொடுத்து வண்டியையும் தள்ள வேண்டியிருந்தது. 1942 கடைசியில் காலணாப் பஞ்சம் வந்தபொழுது பிரயாணிகள் பட்ட கஷ்டம் மிக அதிகம். சில்லரை இல்லாவிட்டால் பஸ்ஸில் ஏற்ற மாட்டார்கள். பிரயாணிகளிடமோ சில்லரை கிடையாது. இதனால் ஏராளமான பிரயாணிகள், பஸ்ஸில் செல்லக் காத்திருந்த பொழுது, ஏராளமான பஸ்கள் பிரயாணிகள் இல்லாமலே ஓடிக்கொண்டிருந்தன.
ஆனால், டிராம் வண்டி கண்டக்டர் சிவசங்கரன் மட்டும் சில்லரை இல்லையென்று வெகுநாள் கூறவில்லை. போக வேண்டிய இடத்துக்கு டிக்கட் கொடுத்துவிட்டு, மீதிச் சில்லரைக்கு கூப்பன் கொடுக்க ஆரம்பித்தான். இதுவரை அரசாங்கத்தார்தான் நோட்டு வெளியிட்டார்கள். 1942-ல் டிராம்வே கம்பெனியும் சொந்த நோட்டுகளை (கூப்பன் உருவத்தில்) வெளியிட ஆரம்பித்தன.
எங்குப் பார்த்தாலும் வெள்ளைக்கார சோல்ஜர்கள் காணப்பட்டார்கள். இவர்கள் ஜனங்களோடு நெருங்கிப் பழக விரும்பினார்கள். ஆனால், ஜனங்கள் இவர்களை நெருங்கவில்லை. ஏன் ஜனங்கள் தங்களிடம் நெருங்கவில்லை என்ற விஷயம் வெள்ளைக்கார சோல்ஜர்களுக்குப் புரியவில்லை.
சினிமாக் கொட்டகைக்குப் போனால் ஒண்பதணா டிக்கட்டில் நம்மோடு சோல்ஜர் உட்கார்ந்திருக்கிறான். பிராமணாள் காபி கிளப்புக்குப் போனால் நம்முடன் உட்கார்ந்து மசாலா தோசை சாப்பிடுகிறான். காரபூந்தி உருண்டை உருண்டையாக இருப்பது அவனுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. டம்ளரிலுள்ள தண்ணீரை நாம் உயரத் தூக்கிச் சாப்பிட்டால், நம்மை ஆச்சரியத்தோடு உற்றுப் பார்த்துக் கொண்டேயிருக்கிறான். வீதியில் ஆங்கிலோ – இந்திய மாதர்களோ அல்லது கறுப்புநிறுக் கிறிஸ்தவப் பெண்ணோ போனால், சோல்ஜருடைய பார்வை மாறிவிடுகிறது. டிராமிலும் சரி, பஸ்ஸிலும் சரி, ரிக்ஷாவிலும் சரி, பார்க்குமிடங்களிலெல்லாம் இந்த சோல்ஜர்கள்தான். வெள்ளைக்காரர்களைக் கண்டால், வெடுவெடுத்து, வியர்வை வழியும் பணக்காரர்களும், பெரிய மனிதர்களும் பட்டணத்திலே உண்டு. ஆனால் டிராம்வே கண்டக்டர் சிவசங்கரன் மட்டும் நிறத்துக்காக மதிப்புக் கொடுப்பதேயில்லை. சோல்ஜர் சரியாகப் பணங்கொடுக்காவிட்டால், வண்டியை நிறுத்தி ஆளைக் கீழே இறக்கிவிடுகிறான்.
ரிக்ஷாக்காரர்களுடைய சரித்திரத்திலும் 1942-ம் வருஷம் முக்கியமானது. இரண்டு பேர் உட்கார வசதியுள்ள ரிக்ஷாவை ஒருவர் உட்காரும் அளவுக்கு அதிகாரிகள் மாற்றி அமைத்தார்கள். பெட்ரோல் கட்டுப்பாடு வந்த பிறகு, ரிக்ஷாக்காரர்கள்பாடு யோகம். அபாயச் சங்கு ஊதியபொழுது ரிக்ஷாக்காரர்கள் காஞ்சிபுரம், திண்டிவனம், வேலூர் முதலிய இடங்களுக்கு ஓடினார்கள். அங்கு பிழைக்க வழியில்லாமல் மீண்டும் சென்னைக்கு வந்தார்கள். வெள்ளைக்கார சோல்ஜர்களோடு நயமாகப் பேசிப் பணம் சம்பாதிப்பார்கள். சோல்ஜர்கள் பேசும் இந்துஸ்தானியைவிட ரிக்ஷாக்காரர்கள் பேசும் ஆங்கிலம் சுத்தமாக இருக்கும். சோல்ஜர்கள் மனம் வந்தால் கையில் வந்த நோட்டுக்களைத் தூக்கி ரிக்ஷாக்காரர்களுக்குக் கொடுப்பார்கள். இல்லாவிட்டால், பணமே கொடுக்காமல் இரண்டு உதை கொடுத்து அனுப்புவார்கள். சோல்ஜர்கள் ரிக்ஷாக்காரர்களுக்குக் கொடுப்பதைப் பொறுத்துத்தான் கள்ளுக்கடைக் கிராமணியின் வருமானம் இருந்தது.
கிராமணியின் வருமானம் அதிகமாகவே, பணத்தை என்ன செய்வதென்று தெரியவில்லை. கடைத்தெருவுக்கு வந்து, சாமான்களை எல்லாம் வாங்கி ஒன்றுக்குப் பத்தாக விற்க முடியுமா என்று கோட்டை கட்ட ஆரம்பித்தார். ஆனால், மார்வாரிகள் எல்லோரையும் மிஞ்சி விட்டார்கள். அது மட்டுமல்ல, ஜனங்களுக்கு ஒரு சாமன் உபயோகப் பட்டுவிடப் போகிறதே யென்று தெரிந்தால், உடனே இந்த மார்வாரிகள் அந்தச் சாமான் முழுவதையும் வாங்கி விடுவார்கள். பிறகு ஜனங்களின் தேவைக்குத் தக்கபடி ஒன்றுக்குப் பத்து விலையில் விற்பார்கள். விலையைப் பற்றிக் கவலையில்லை, சாமான் கிடைத்தால் போதும் என்று 1942ல் சென்னைவாசிகள் கருத ஆரம்பித்தார்கள். கடைத்தெருவு விலையை விசாரித்த பின்னர், உள்ளூரிலுள்ள ஐரோப்பியக் கம்பெனிகளின் சாமான்கள் மலிவாகக் கிடைக்கிறது என்றுகூடப் பேச ஆரம்பித்தார்கள். அன்னிய நாட்டுத் துணியின் விலை ஏறவே, நூற்றுக் கணக்கான மக்கள் கதர் வஸ்திராலயங்களில் ஒரு வேட்டி வாங்குவதற்கு மணிக் கணக்கில் காத்திருந்தனர்.
உள்ள கஷ்டங்கள் போதாவென்று பர்மாவிலிருந்து வந்த ‘அனாதைக்’ கூட்டம் (பர்மா இந்தியர்கள் மன்னிக்க) பெருக ஆரம்பித்தது. வெள்ளைக்கார ‘அனாதைகள்’ விஷயத்தில் அரசாங்கத்தார் சிரத்தை எடுத்துக் கொண்டார்கள். கறுப்பு ‘அனாதை’களைக் கடவுள் கூடக் கவனிக்கவில்லை. ஒரு சர்க்கரைச் செட்டியாரும் வேறு சிலரும் சிறிது கவனித்தார்கள். ரங்கூன் குண்டு வீச்சைப் பற்றிக் கேட்ட பொழுதெல்லாம், சென்னை வாசிகள் நடுங்கிக் கொண்டே யிருந்தார்கள்.
1942-ல் இந்திய அரசாங்கம் இரு விதங்களில் முன்னேற்றமடைந்தது. வைசிராய் நிர்வாக சபையை விஸ்தரித்தல், கடிகாரத்தை ஒரு மணி முன்னே தள்ளி வைத்தல்: இந்த விஷயங்களில் சென்னைக்குப் பங்குண்டு.
கடிகார விஷத்தில் நாம் முன்னேறினோம். மணியைப் பார்த்துத்தான் சாப்பிட்டோம். சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்னமேயே மணி பன்னிரண்டாயிற்று. சூரியன் உச்சிக்கு வருவதற்காக மணி காத்திருக்க முடியுமா?
ஆனால், காத்திருந்தவர்கள் பலர், உணவுக்காக ஹோட்டல்களிலே காத்திருந்தார்கள். ரயிலுக்காகப் பிளாட்பாரத்திலே காத்திருந்தார்கள். மோட்டாருக்காகப் பஸ் ஸ்டாண்டிலே காத்திருந்தார்கள். சர்க்கரைக்காகக் கடைகளிலே காத்திருந்தார்கள். மண்ணெண்ணெய்க்காக டெப்போக்களிலே காத்திருந்தார்கள். அபாயச் சங்கு ஊதியபொழுது கட்டிடங்களிலே காத்திருந்தார்கள். சட்டைக்கும் சாப்பாட்டுக்கும் ஏ.ஆர்.பி. யிலே காத்திருந்தார்கள்.
1942-ல் பல விஷங்கள் நிகழ்ந்தன. காங்கிரஸ் சட்ட விரோதமானது என்று அரசாங்கத்தார் போஸ்டர் ஒட்டினார்கள். தலைவர்கள் சிறைப்பட்டார்கள். மாணவர்கள் ஹர்த்தால் செய்தனர். சில பத்திரிகைகள் சிறிது காலம் நின்றன. ராஜாஜி பாகிஸ்தானை ஆதரித்தார். ஜெனரல் வேவல் சென்னைக்கு வந்தார். நூற்றுக்கணக்கான டாங்கிகள் ஊர்வலம் வந்தன. ஆயிரக்கணக்கான வேட்டுகள் வெடித்தன. குண்டு வீச்சின் போது தங்குவதற்குக் குழிகள் வெட்டப்பட்டன. வீதிகளிலேயே விளக்கணைக்கப்பட்டன. மாலை ஆறு மணிக்கு மேல் கடற்கரைக்குச் செல்லக் கூடாதென்று மக்கள் தடுக்கப்பட்டனர். மிருகக்காட்சிச் சாலையிலிருந்த கொடிய மிருகங்கள் சுடப்பட்டன. சீனாக்காரன் ஹோட்டல்கள் தோன்றின. டான்ஸ் ஹால்கள் மலிந்தன. பவுடர் விலை உயர்ந்தது. தாடிகள் வளர்ந்தன. மின்சார உபயோகம் குறைக்கப்பட்டது. காபியின் விலை உயர்ந்தது. ரயில், டிராம், பஸ் டிக்கட்டுகளின் கட்டணம் உயர்ந்தன. தபால் விகிதம் அதிகமாயிற்று. பத்திரிகை விலைகளும் ஏறின. தமிழர் தமிழிலே பாடலாமா? என்பதைக் குறித்துக்கூடச் சண்டைகள் தோன்றின.
இவையெல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம், சென்னைக் கவர்னரின் பிரகடனம். சென்னைக் கெஜெட்டில் பின் வருமாறு வெளியாகியிருக்கிறது:
“……….சென்னை நகரத்தையும் அதன் சுற்றுப் புறங்களையும், காலரா நிறைந்த பிரதேசம் என்று மேன்மை தங்கிய சென்னைக் கவர்னரவர்கள் இதனால் களி கூர்ந்து பிரசித்தம் செய்கிறார்கள்.”
எழுதியவர் :

ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
