மனித மனங்கள்தான் எத்தனை ஜாலம் மிகுந்தது – கருப்பு அன்பரசன்

Writers Kavivanan's Puthirvinai (புதிர் வினை) Book Review By Karuppu Anbarasan. Book Day is Branch of Bharathi Puthakalayam.புதிர் வினை
கவிவாணன்
தமிழ் அலை வெளியீடு
ரூபாய்.120/-

மனித மனங்கள் அவர்களின் உள்ளுக்குள் உரசி.. தடவி ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களின் வெளிப்பாடு அவர் பேசிடும் வார்த்தைகளுக்குள் இருக்கக்கூடிய அழகுகளை.. தூய்மைகளை..அழுக்குகளை.. பொறாமைகளை..
எப்போதாவதோ அடிக்கடியோ வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும்..

வீட்டின் சுவர்களிலும் குடிசைகளின் மீதும் பற்றிப் படர்ந்திருக்கும் கொடிகள் எங்கிலும் பூத்துக்குலுங்கும் நித்திய மல்லியின் வாசம் பக்கத்தில், அருகில், எதிரில் இருப்பவர் அனைவரின் மனதையும் மென்மையாக்கிவிடும்.. ரம்மியமான ரகசிய வார்த்தைகளைப் பேசி உணர்வுகளுக்குள் கிச்சுகிச்சு மூட்டும்.. மனித மனங்களை கிறங்கச் செய்யும்..

வசியம் செய்யும் வாசமதன் ரகசியம் நித்திய மல்லிக்கு உண்டு. மாலைப்பொழுதின் கருக்களில் நித்திய மல்லியின் வாசம் சூழ கொஞ்சம் அமர்ந்து பாருங்கள்.. உங்களுக்கு எத்தனை வயதானாலும் உங்களின் மனசு முழுவதும் நினைவுகளின் எண்ணம் சீண்டிட இளமையின் சுகம் இருதயத்திற்குள் நுழைந்துவிட.. ஒலித்திடும் லப்டப் சத்தம் பிடித்ததொரு பாடலாக மாற.. அது உங்களுக்குள் ஒரே ஒரு பெயரை மட்டுமே உச்சரித்துக் கொண்டே இருக்கும்.

உச்சரித்திடும் பேசிடும் தெரித்திடும் மனிதர்களின் வார்த்தைகளுக்குள் பகைமையும் பொறாமையும் வன்மமும் வெளிப்படும்போது மனவானம் எங்கும்
பூத்திருக்கும் நித்தியமல்லியின் கொடிகள் அனைத்தும் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டது போன்று உங்களால் உணர முடியும்.. வேதனை என்பது ரணமாகி சீழ் பிடித்த உணர்வுகளை மனித மனம் எங்கிலும் படர்ந்து இருதயத்தை துடிதுடிக்கச் செய்துவிடும்.. அக்கண நேரதில் எங்கே இருந்தாவது மெல்லிதாக ஆரவாரமின்றி வாரித் தழுவிடும் ஈரம் மிகுந்த வார்த்தைகளினால் மட்டுமே வெட்டி எறிந்த பிறகு பூமிக்குள் புதைந்து கிடக்கும் வேரில் இருந்து சின்னதாக கொடியொன்று பூமியை கிழித்துக்கொண்டு வெளியே வந்து எட்டிப் பார்க்கும்.. பேசிடும் சொற்களுக்குள் இருக்கக்கூடிய வசீகரமும் பேரன்பின் ஈரமும் அந்த சின்னக் கொடியினை பல நூறு கிளைகளாக பரவச் செய்து மனவீட்டின் சுவர் முழுவதும் பற்றி படறி மேல் எழுந்து கொண்டே இருக்கக்கூடிய பொழுததில் கொத்துக்கொத்தாய் தனித்தனியாய் சாரை சாரையாய் பூத்து குலுங்கும் நித்திய மல்லியின் அடர் வாசம் மீண்டும் உங்களுக்குள் மட்டுமல்லாமல் அது சூழ்ந்து இருக்கும் இருக்கும் அனைவருடைய மனசிலும் ரம்மியங்களின் ரகசியதால் கிளர்ச்சியுறச் செய்யும்.. மனித முகங்களை பூரிக்கச் செய்யும்..

ஆனாலும்கூட அந்த ஒற்றைச் சொல்லை பேசியே உதடுகளின் அசைவையும் அந்த கண்களுக்குள் இருந்த வெறுப்பினையும்
வன்மத்தையும் அதில் குடிகொண்ட கள்ளத்தையும் மறந்திட அல்லது கடந்திட வாய்ப்பு என்றைக்குமே இருக்காது.

இருந்தாலும்கூட கண்மூடும் அந்த கணத்தின் கடைசி மூச்சதில் ஈர வார்த்தைகள் உதிர்த்த அந்த உதடுகளின் முகம் மட்டுமே வந்து நிற்கும்.

மனித மனங்களுக்குள் இருக்கும் ஒருவர் குறித்தான ஒருவரின் எண்ணங்களும் நினைவுகளும் வார்த்தைகளும் அதிலிருக்கும் அழகுகளும் அசிங்கங்களும்
எந்தக் கணத்திலும் வெளிப்படலாம்.

உணர்ச்சியிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளுக்கும் உணர்விலிருந்து வெளிப்படும் வார்த்தைகளின் செயல்களுக்கும் புரிதலில் மாறுபாடுகள் ஏற்படும் பொழுது அது மனித மனங்களை கீரி ஆற்ற முடியாத பெரும் புண்ணாக்கி அழியாத வடுவாக நிலைத்து விடும். மனித வாழ்வியலை முற்றிலுமாக மடைமாற்றி; யோசிக்கவே முடியாத இடத்தில் மனிதர்களை நிறுத்திப் பார்க்கச் செய்யும். அத்தகைய வீரியம் சக்தி ஒரு ஒற்றை சொல்லுக்கு உண்டு. அது சார்ந்த செயலுக்கும் உண்டு..

அப்படியான செயல்களும் அதற்கான எதிர்வினைகளும் கேள்விப்படும் பொழுது அல்லது நேரடியாக அனுபவிக்கப்படும் பொழுது படைப்பாளியின் எண்ண ஓட்டங்களும் அவரின் எழுத்துக்களும் அமைதியாக இருப்பது கிடையாது.. அது படைப்பாளியின் மனதை சமன்குலைக்கச் செய்யும்.. அது கவிதையாக சிறுகதைகயாக ஒரு புனைவாக ஏதோ ஒரு விதத்தில் வந்து அடையும் பொதுவெளியினில்..

படைப்பாளியாக இல்லாதபொழுது அது இன்னும் பிற பல எதிர்வினைகளை பொதுவெளிக்குள் நிகழ்த்திக் கொண்டே இருக்கும்.. எதிர்வினையின் வேர் எது என்பதை காரணமானவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே அறிய முடியும்.

“புதிர் வினை”யாக..
கவிஞராக இருந்து மென்மையான
உள்ளீடான பல செய்திகளை கொடுத்தவர்
கவிவாணன் அவர்கள். தற்போது இங்கே
சிறுகதை எழுத்தாளராக பரிமாணமடைந்து இன்னுமொரு எழுத்து உலகத்திற்குள் நுழைந்திருக்கிறார்.
11 சிறுகதை கொண்ட தொகுப்பாக
நம்முடைய கைகளில் “புதிர் வினை”யை கொடுத்திருக்கிறார்.

கதைகளுக்குள் வந்திருக்கக்கூடிய எல்லா கதாபாத்திரங்களும் நமக்கு அறிமுகம் ஆனவர்கள். எங்கேயாவது நாம் சந்தித்தவர்கள்.. அவர்கள் நம்மோடு பயணித்தவர்கள். அவர்கள் குறித்து செவி வழியாக கேள்விப்பட்டிருக்கிறோம் இன்றும் அப்படியானவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறோம்.

“மனிதன் இப்படி எல்லாமா நடந்து கொள்வான்..?
என்ன மனுஷன்யா இவன்..?
மனுஷனாவே பிறப்பெடுக்க லாயக்கில்லாதவன்..! என்று நாம் யோசித்தவர்களை..
“ஆஹா இவரல்லவோ மனிதர்.. இவரைப்போன்றல்லவா ஒரு மனிதன் இருக்க வேண்டும்..! இவர்களெல்லாம் இன்று நம்மோடு இருப்பதால் தான் கொஞ்சநஞ்சம் மழை பொழிகிறது..!
தலைக்கு மேல் வந்து இருந்த கத்தியை
எத்தனை தைரியமாக அனாயசமாக
தட்டிவிட்டு எல்லோரும் பார்க்கும்படி
கௌரதியா வாழுறாங்க பார்” என்று
நம் மனம் எங்கும் சந்தோஷமடைந்து நம்முடைய வாழ்த்திற்கு ஆதர்சமாக இருக்கக்கூடிய மனிதர்களை
நம் முன் நிறுத்தியிருக்கிறார்
கவிவாணன் அவர்கள்.

சமூகத்தில் சரிபாதியாக வாழக்கூடிய பெண்களிடம் ஆண் என்ற ஒரே காரணத்தால் திமிர்த்தனமாக நடந்து வாழும் பெரும்பாலான ஆண்களின் முகங்களை தோலுரித்துக் காட்டியிருக்கிறார் சிறுகதைகள் எங்கும். திமிர் தனத்திற்கு எதிராக சுயமாக கம்பீரமாக வாழ்வினை எதிர்கொள்ளும் பெண்கள் இத்தொகுப்பின் சிறுகதைகள் பலவற்றில் இருமாந்து நிற்கிறார்கள் பல நல்ல மனங்களின் ஆதரவோடும் பேரன்போடும்.

பதினோரு கதைகளிலும் பெண்களின் பேரன்பும் மன அழகும் வாசிக்கும் நம்மை நல்ல மனங்கள் கொண்டவர்களோடு உள்ளீடாக உரையாட செய்யும்.. அவர்களின் மன உணர்வுகளை புரிந்து கொள்ளச் செய்யும்.

தன் மகன் கேட்கும்போதெல்லாம் தனது அன்பையும் அரிசி மாவோடு கலந்து தோசையாக்கி வேண்டுமளவிற்கு வார்த்துக் கொடுக்கும் அம்மா.. அந்த ஒரு நாளில்
தோசைக்கல்லையும் தோசைக்கரண்டியியையும் தன் மகனின் வேண்டுகோளுக்கிணங்க பரண் மேல் தூக்கி எதற்கு வீசியெறிந்தார் என்பதை ஒருமுறை “தோசை” என்கிற கதையினை வாசித்துப் பாருங்கள்.

எத்தனை எளிய மனிதர்களாக இருந்தாலும் அவர்களையும் கூட சமூகத்தின் கொடூரம் மிகுந்தவர்களாக மாற்றி வைத்திருப்பது சாதி வெறியின் ஆழப்பதிந்த பிடிமானம். அந்த பிடி மனத்திற்குள் சிக்கிக் கிடக்கும் ஏராளமான பன்னீர் புஷ்பங்கள் இந்த நிமிடம் வரையிலும்கூட பச்சை ரத்தத்தின் நாற்றத்தை தன்னை தழுவி செல்லும் காற்றின் வழியே சமூகம் எங்கிலும் பரவலாக்கி கிடப்பதை நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம் வெறும் பார்வையாளராக..
அப்படியான “பன்னீர் பூக்கள்”
இந்தத் தொகுப்பிலும்.

ஆண்டுகள் பல ஆனாலும்
அன்பையும் நேசத்தையும்
காத்துக்கிடக்கும் ஜோதியின் வழியாக
தங்கையா மேல் வைத்திருக்கும் பேரன்பை
மாயநதி நமக்குள்ளும் ஓடச் செய்யும் சலசலவென்றும்..சில்லேன்றும்.!
மனோரஞ்சித்தின் வாசத்தை மனசெங்கும் வீசிச் செல்லும்.!

வாழ்விற்கான அன்றாடப் போராட்டத்தினை
எளிய மனிதர்கள் எப்படி கையாள்கிறார்கள்.? கடவுளுக்காக
சேர்த்து வைத்திருக்கும் உண்டியல் படும் பாட்டினை.. எளியவர்களின் வாழ்வு
பாடும் பாட்டினை ஜிமிக்கி கம்மல் எதார்த்தமாக பேசியிருக்கும்.. எந்தக் கடவுளும் குடும்ப உறவுகளின் வயிற்றினை பட்டினி போட வைக்காது. அதுதான் “ஜிமிக்கி கம்மல்”. அதுதான் எளிய மாந்தர்களின் பக்தி.

ஆண்கள் என்பதற்காகவே
அவர்கள் பேசும் பேச்சுக்களையும்
செய்யும் செயல்களையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ன.?
பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் மட்டுமல்ல ; அவர்களைவிட உசத்தியானவர்கள் என்ற கருத்தை மனதில் வைத்து நடைபோடும்
சலீமாவின் விரல் பிடித்து நீங்களும்
நடைபோட்டு பாருங்கள் வீதிகளில்
“ஆனாலும் உயரம்தான்” கதையை வாசித்து.

“ஒப்பனை கலைந்த வானமாய்
இரவுகளை எல்லாம் பருகிக்கொண்டு வெயிலை மட்டுமே தருகிறது
பிரிவின் காலம்.
நிறைந்த நேசத்துடன்,
“முத்துமாரி( எ) நேகா”
ஒரு கடிதம் எழுதி இருக்கிறாள்.
அந்த கடிதத்தில் இன்னும் எதையெல்லாம் பேசியிருப்பால் முத்துமாரி.
வலிமிகுந்த பெண்களின் வாழ்வினை..
சுயநலம் மிகுந்த ஆண்களின்
பொதுத் தனத்தை..!
அந்த கடிதத்தை நீங்களும் வாசிக்கவேண்டும்.. அவள் பேசியிருக்கும்
நிஜங்கள் நம்மை சுட்டெரிக்கும் வார்த்தைகளாக அந்த கடிதத்தில்.

இருக்கும் 11 கதைகளும் எளிய ஏழை மக்களின் அனுபவங்களாக அவர்களின் வாழ்வியலாக..
படைப்பாளிக்கு உரிய உணர்வுகளோடு இங்கே பதிவாக்கி இருப்பார் கவிவாணன்.
முதல் தொகுப்பு இது. அவரை மனதார வாழ்த்துவோம்.. இன்னும் நிறைய தொகுப்பினை கொண்டு வாருங்கள்.
எளிய மனிதர்களின் வாழ்வியலை பேசுங்கள்.. இப்படிப்பட்ட வாழ்விலே எதிர்காலத்தில் இக்கதைகளை வாசிக்கக் கூடியவர்கள் இன்றைய காலத்தை அறிந்து கொள்ள உதவும்.

முயற்சி தொடரட்டும் தோழர் கவிவாணன் அவர்களே.!

மற்ற கதை மாந்தர்களைநீங்கள் அறிந்துகொள்ள “புதிர் வினை” தொகுப்பினை ஒரு முறை வாசியுங்கள்.

மனித மனங்கள்தான் எத்தனை ஜாலம் மிகுந்தது.

அன்பு வாழ்த்துக்கள்.
கருப்பு அன்பரசன்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.