முன்னேற்றப் பதிப்பகத்தின் புத்தகங்கள் எனக்கு சிறுவயதிலேயே அறிமுகமாகி விட்டன. செய்து பார் விஞ்ஞானி ஆகலாம், நாய்க்காரச் சீமாட்டி ஆகியவற்றைப் படித்தது பற்றி முன்பே வேறொரு கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். அந்தக் காலத்தில் பள்ளியில் போட்டிகளுக்கு முன்னேற்றப் பதிப்பக புத்தகங்களைத் தான் பரிசாகக் கொடுப்பார்கள். 1 ரூபாய், 2 ரூபாயில் முடிந்துவிடும். அந்த வகையில் எனக்கு ஜவஹர்லால் நேரு என்ற தமிழ்ப் புத்தகம், Winston Churchill என்ற ஆங்கிலப் புத்தகம், ஸ்தெபானவா எழுதிய பிரடெரிக் எங்கெல்ஸ் என்ற தமிழ் புத்தகம் போன்றவை பரிசாக்க் கிடைத்திருக்கின்றன. நூலகத்தில் வெ.சாமிநாத சர்மாவின் கார்ல் மார்க்ஸ் படித்திருக்கிறேன். இவ்வாறாக சோவியத் நூல்களும் என் வாசிப்பில் அவ்வப்போது சேர்ந்து கொண்டிருந்தன.

என் கல்லூரி நாட்களில் நான், கண்ணன், ரவி, பாலன் நால்வரும் தினமும் டவுன்ஹால் ரோடு வரை சென்று சுற்றிவிட்டு வருவது வழக்கம். சில பழைய, புதிய புத்தகக் கடைகளை வேடிக்கை பார்ப்பது, சில கேஸட் கடைகளில் வேடிக்கை பார்ப்பது என்பது தினசரி வேலையாக இருந்தது. அவ்வப்போது இந்த நகர் உலாவின் போது என்சிபிஹெச்சிற்குச் சென்று புத்தகங்களைப் புரட்டுவோம். கண்ணன் ஏதாவது வாங்கவும் செய்வான். வாங்கித் தான் பார்ப்போமே, படித்துத்தான் பார்ப்போமே என்று ஏதேதோ வாங்கிய காலமது. அப்படித்தான் ருஷ்யச் சிறுகதைகள் என்ற அற்புதமான தொகுப்பை வாங்கினோம். பச்சைக் கலர் கலிகோ பைண்ட்.  விலை நினைவில்லை. மிகவும் குறைவுதான். அதில் முதல் கதை புஷ்கினின் அஞ்சல் நிலைய அதிகாரி.

இரண்டாவது கதை கோகலின் மேல் கோட்டு. (ரஷ்ய எழுத்தாளர்கள் அனைவரும் கோகலின் மேல்கோட்டிலிருந்து வந்தவர்கள்தாம் என்ற அந்த புகழ் பெற்ற வாசகம் அப்போது எங்களுக்குத் தெரியாது!) மூன்றாவதாக துர்கனேவின் முமு. பொதுவாக நான் எந்தக் கதை படித்தும் அழுதது கிடையாது. முமுவிற்கு முதன்முறையாக அழுதேன். இன்னும் அதே தொகுப்பில்  செகாவின் நாய்க்காரச் சீமாட்டி, டால்ஸ்டாயின் நடனத்திற்குப் பின், கார்க்கியின் கிழவி இஸெர்கீல், ஷொலகாவின் அவன் விதி,  என்று வரிசையாக.  மிக மிக அற்புதமான கதைகளின் தொகுப்பு அது. அதிலிருந்து ஆரம்பித்தது சோவியத் நூல்களைத் தேடி வாசிக்கும் வெறி.

செகாவின் மூன்று ஆண்டுகள், துர்கனேவின் மூன்று காதல் கதைகள், கார்க்கியின் தொகுப்புகள் மூன்று, கண் தெரியாத இசைஞன், உண்மை மனிதனின் கதை, வீரம் விளைந்தது, கன்னி நிலம், டான் நதி அமைதியாக ஓடுகிறது, புத்துயிர்ப்பு – இப்போதும் குளிர்ந்த காற்று வீசும் மாலைகளில் வசந்தம் வசந்தமாகவே இருந்தது நகரத்திலும் கூட என்ற புத்துயிர்ப்பின் முதல் பத்தியின் கடைசி வரி நினைவிற்கு வந்து செல்கிறது – பேரா.நா.தர்மராஜன் மொழிபெயர்த்த டால்ஸ்டாய் சிறுகதைகளும், குறுநாவல்களும் – அது தான் எத்தனை அற்புதமான தொகுப்பு – இரண்டு ஹுஸ்ஸார்கள், கஜக்கோல், இவன் இலீயிச்சின் மரணம், நடனத்திற்குப் பிறகு.. இவற்றில் பலவற்றை ஆங்கிலத்திலும் மீண்டும் படித்த நாட்கள் அவை.

புனைவல்லாத அரசியல் நூல்களையும் விபரம் தெரியாமலேயே வாங்கி, ஒன்றும் புரியாமலேயே படித்தோம். பொதுவாக, புனைவுகளை நான் முதலில் படித்துவிட்டு கண்ணனுக்குத் தருவேன். அபுனைவுகளை அவன் முதலில் படிப்பான். அந்தக் காலத்தில் கண்ணன் முக்கியமானவற்றை அடிக்கோடிட்டு வைப்பான். அப்போது அவன் வாங்கிய சில புத்தகங்கள் அவனிடம் திரும்பிப் போகாமல் என்னிடமே தங்கிவிட்டன. எங்கேல்ஸின் Dialectics of Nature.. Anti –Duhring, குடும்பம், தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் போன்றவை ஏனோ தம் தாயகம் போகாமல் என்னிடமே இருக்கின்றன. இன்று ஒரு நாஸ்டால்ஜிக்காக அவற்றைப் புரட்டிப் பார்க்கும் போது, கண்ணன் அடிக்கோடிட்ட வரிகள் வியப்பூட்டுகின்றன.

Force of gravity is the most important> indeed the basic form of motion in nature.

Rest is a special case of motion.

Hand is not only the organ of labour. It is also the product of labour.

The characteristic difference between the troupe of monkeys and human society – Labour.

இவையெல்லாம் Dialectics of Natureல் காணப்படும் கண்ணன் அடிக்கோடிட்ட வரிகள்.

Anti –Duhringல்

Every organic being is evey moment the same and not the same……. So that every organic being is always itself and yet something other than itself.

The whole is greater than its parts.

First line came into existence through the movement of point in space, the first plane through the movement of a line. First solid through the movment of a plane and so on.

It is clear that an infinity which has an end but no beginning is neither more nor less infinite than that which has a beginning but no end.

Class privileges are proscribed, race privileges sanctioned.

அது நாங்கள் இயற்பியல் பட்டப்படிப்பு படித்த காலம் என்பதால், எங்கேல்ஸ் இயற்பியலின் வளர்ச்சிப் போக்கு, பொதுவான அறிவியலின் வளர்ச்சிப் போக்கு பற்றி எழுதியவை எல்லாம் எங்கள் கவனத்தை ஈர்த்தன.  அதற்கு மேல் ஒன்றும் புரியாவிட்டாலும், புரிந்த வரை இதைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டே இருப்போம். சிம்மக்கல்லில் நினைவூட்டும் ஸ்ரீனிவாசா காபி பார், ஆறுமுச்சந்தியில் சோலைஹால், வடக்கு வடம்போக்கித் தெருவில் கிருபா காபி பார். அதன் எதிர்புறம் நட்ராஜ் காபி பார் என்று எங்களுக்கு ஒவ்வொரு ஏரியாவிற்கும் டீக்கடைகள் இருந்தன. அங்கெல்லாம் நின்று மணிக்கணக்கில் பேசியிருக்கிறோம். பின்னர் எத்தனை எத்தனையோ அரசியல் நூல்களை வாங்கும் பேறு கிடைத்தது. சிலந்தியும், ஈயும், கூலி உழைப்பும், மூலதனமும், உலகைக் குலுக்கிய பத்து நாட்கள், வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம், அரசியல் பொருளாதாரத்தின் இளமைக்காலம் – இது மாதிரியான ஒரு பொருளாதாரத்தின் அடிப்படை தத்துவங்களை விளக்கும் நூல் எதுவும் வரவில்லை – மார்க்ஸ்- எங்கெல்ஸ் முழு தொகுப்பு என நிறைய நிறைய…. எல்.ஐ.சியில் சேர்ந்த புதிதில் நானும், என் அறை நண்பன் சுவாமிநாதனும், ( ஆம், இன்று எல்.ஐ.சி ஊழியர்களின் மகத்தான தலைவராக இருக்கும் அந்த க.சுவாமிநாதன்தான்! ) கோர்ப்பசேவ் எழுதிய பெரிஸ்த்ரோய்கா என்ற நூலை முன் வெளியீட்டுச் சலுகையில் பெற தலா 25 ரூபாய் அனுப்பி வாங்கினோம். அன்று எங்கள் வருடாந்திர இன்கிரிமெண்ட்டே 30 ரூபாய்தான் !

எனினும் அன்று ( அன்று என்ன, இன்றும் கூடத்தான்) அபுனைவுகளை விட புனைவுகள் மீதுதான் எனக்கு மயக்கம் அதிகம். ஒரு சில அபுனைவுகளை நான் கண்ணன் அடிக்கோடிட்ட வரிகளை மட்டுமே படித்துக்கொண்டே கடந்து சென்றதுண்டு. புனைவு போன்ற ஈர்ப்படைய அபுனைவுகள் விதிவிலக்கு அந்த வகையில் லெனின் கார்க்கி கடிதங்களின் தொகுப்பு ஒன்றை (ஆங்கிலம்) விழுந்து விழுந்து படித்திருக்கிறேன். சமீபத்தில், சோவியத் புரட்சியின் நூற்றாண்டின் போது, தீக்கதிரில் அந்த நூலை ஆதாரமாக வைத்து லெனின் கார்க்கி நட்பு குறித்து நான் எழுதிய கட்டுரை நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதுபோன்றே Marx and Engels Through the eyes of their contemporaries என்ற அரிய பொக்கிஷத்தை அக்காலத்தில் நான் ரசித்துப் படித்ததுண்டு. அதில் மார்க்ஸ் தொடர்பான கட்டுரைகள் தான் மார்க்ஸின் 200வது பிறந்த நாளின் போது என் மொழிபெயர்ப்பில் நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ் என்ற நூலாக வந்தன.

உண்மையில் என் புனைவு மீதான ஈர்ப்பு என்பதை  செகாவ் மீதான குறிப்பான ஈர்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். டால்ஸ்டாயின் அன்னா கரீனினா, குப்ரினின் Garnet Bracelet, புஷ் கினின் கேப்டன் மகள், குல்சாரி, ஜமீலா, அன்னை வயல், தந்தையரும், தனையரும், குற்றமும், தண்டனையும், என்று எத்தனை எத்தனையோ மகத்தான படைப்புகளைப் படிப்பேன். ஆனால் அவையெல்லாம் தன் துன்பங்ளை எல்லாம் கொட்டித் தீர்த்து ஒரு கடித்ததை எழுதி தாத்தா, கான்ஸ்தன்தீன் மக்காரிச், கிராமம் என்று முகவரி எழுதி போஸ்ட் செய்யும் வான்காவின் முன் காணாமல் போய்விடும்.  என் செகாவ் தான் எப்படிப்பட்ட படைப்பாளி !

இதுவும் கடந்து போகும் என்று சொல்லப்படும் வசனம் ஏதோ இன்றைய கார்ப்பரேட் சாமியார்களின் வசனமல்ல. அது மத்திய கால கட்டத்தில் பெர்சியாவில் சூஃபி ஞானிகள் சொன்னது..  நாம் எல்லோரும் அதை இன்னும் கிளிப் பிள்ளை போல் சொல்லித் திரிகிறோம். என் செகாவ் ஒருவன்தான் எதுவும் அப்படி எளிதில் கடந்து போகாது. போவதற்கு முன் எப்போது கீறினாலும் ஃபிரஷ்ஷாக ரத்தம் சொட்டும்படியான ஆறாத ஒரு ரணத்தை மனதில் ஏற்படுத்தி விட்டுத்தான் போகும் என்றான். லைஃப் என்ற அவனது குறுநாவலை மொழிபெயர்த்த போது செகாவ் என் கூடவே இருப்பது போன்ற உணர்வு இருந்தது.

சோவியத் யூனியன் இன்று அதே போல் இருந்திருந்தால் நானெல்லாம் மொழிபெயர்க்கும் நிலை ஏற்படாது, அவர்களே அத்தனை ரஷ்ய செம்படைப்புகளையும் தமிழில் கொண்டு வந்திருப்பார்கள். கார்க்கி, செகாவ் இருவரின் மொத்த படைப்புகளும் ஆங்கிலத்தில் முழுமையாக பல பாகங்களாக வந்தன. தமிழில் வருவதற்குள், சோவியத் யூனியன் சிதறுண்டது.

அது தான் எத்தனை துரதிருஷ்டவசமானது!

விமர்சனக் கலை முன்னோடி – எழுதித் ...

– எழுத்தாளர் ச.சுப்பாராவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *