நூல்: யாத்வஷேம் (நாவல்) 
ஆசிரியர்: நேமி சந்த்ரா தமிழில்: கே.நல்லதம்பி
வெளியீடு: எதிர் வெளியீடு
358 பக்கங்கள்
விலை: ரூ.399/
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/yaad-vashem-nemachandra/

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களை சென்ற வாரம் சந்தித்த போது ஒரு நாவலைக் கையில் வைத்துக் கொண்டு நேரம் கிடைக்கும் இடைவெளிகளில் வாசித்துக் கொண்டிருந்தார்… கிடைக்கும் சின்னச் சின்ன நிமிடங்களில் நாவலை விரைந்து முடித்து விடும் தவிப்போடு. “இது என்ன நாவல் தோழர்?” என்று கேட்டோம் நானும், உடன் இருந்த எழுத்தாளர் கவிவாணனும். ”தமிழில் இதுவரை வெளிவந்த நாவல்களுக்கெல்லாம் மேலே நின்று ஒரு களத்தைத் தேர்வு செய்த நாவல். எல்லா எழுத்தாளர்களுக்கும் சவால் விடும் நாவல். கன்னடத்தில் எழுதப்பட்டு, தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது” என்றார். எதிர் வெளியீடு தோழர் அனுஷ் அவர்களைத் தொடர்பு கொண்டவுடன் மறுநாளே நாவல் வந்து சேர்ந்தது. “யாத்வஷேம்” என்றால் என்ன? என்று அறியும் ஆவலுடன் சில பக்கங்களை வாசித்து விட்டு, அலுவலகம் செல்லலாம் என்று நினைத்து ஆரம்பித்தேன். நான் நினைத்தது போல, சில பத்து பக்கங்களோடு மூடி வைக்க முடியவில்லை. எல்லா வேலைகளையும் ஒருபக்கம் ஒதுக்கி வைத்து விட்டு, தொடர்ந்து வாசிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கியது நாவலின் பக்கங்கள்.

”யாத்வஷேம்” என்றால் என்ன? ஜெர்மனியின் கொலை முகாம்களில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தப்பட்ட, கொல்லப்பட்ட, உயிர் தப்பிய யூதர்களின் குறிப்புகளையும், நினைவுகளையும் பாதுகாக்கும் ஆவணக்காப்பகத்தின் பெயர்தான் – யாத்வஷேம். அது இன்றைய ஜெருசலேமில் இருக்கிறது. இந்த இடத்திற்கும், கன்னடத்தில் எழுதப்பட்ட நாவலுக்கும் உள்ள தொடர்புதான் புனைவின் உச்சம் தொட்டிருக்கிறது.

பெங்களூரின் கோரிப்பாளையத்தில் இஸ்லாமிய அடக்கத்தலங்களுக்கு நடுவில் சிறிய இடத்தில் அமைந்திருக்கும் ஒரு யூத கல்லறையிலிருந்து துவங்குகிறது கதை. அந்தக் கல்லறைக்கு முன்னால் நிற்கிறாள் அனிதா எனும் பெண். அவளுக்கும் அந்த கல்லறைக்குமான தொடர்பிலிருந்து நகரத்துவங்குகிறது ஒரு வரலாறு.

1940களில் ஜெர்மனியில் ஹிட்லர் துரத்தி துரத்திக் கொன்ற யூதக் குடும்பங்களில் தப்பி உயிர்பிழைத்து, அருகிலிருக்கும் டச்சுப் பகுதியான ஆம்ஸ்டர்டாமுக்குச் செல்கிறது ஹ்யானாவின் குடும்பம். ஓரிரு ஆண்டுகளில் ஹிட்லரின் கொடிய கரம் அங்கும் நீள்கிறது. “இறுதித் தீர்வு” எனும் யூதர்களை அழிக்கும் திட்டம் ஹிட்லரால் அறிவிக்கப்பட்டு, நாஜிகள் நர வேட்டையைத் துவங்குகிறார்கள். மூச்சுத் திணறல் உள்ள அம்மா, இரண்டே வயதான தம்பி, மூன்று வயது மூத்த அக்காவுடன் ஹ்யானாவும், அவளது தந்தையும் நாஜிகளிடமிருந்து தப்பிக்க முயல்கிறார்கள். அப்பாவும், ஹ்யானாவும் மட்டுமே அங்கிருந்து தப்ப முடிகிறது. மிச்சமுள்ள குடும்பத்தாரை ஜெர்மனியின் வதை முகாம்களுக்கு இழுத்துச் செல்கிறது நாஜி காவலர்கள். சிறுமியான ஹ்யானாவும், அவளது தந்தையும் எங்கிருக்கிறது என்றே தெரியாத இந்தியாவுக்கு, பெங்களூருக்கு வந்து சேர்கிறார்கள்.




வாசல் படிதாண்டி உள்ளே நுழைய முடியாத பிராமணர் வீடுகள் ஒருபுறம், இன்னொரு புறம் ‘பிராமணரல்லாதோரில் நாங்கள்தான் பிராமணர்’ என்று சொல்லிக் கொள்ளும் கன்னட ’ஆண்ட பரம்பரை’ சாதி. இந்த இரு வீடுகளுக்கிடையில் குடியேறுகிறார்கள் நாஜிகளின் கொடுமைகளை நினைவில் கொண்ட யூதச் சிறுமியும், அவளது தந்தையும். ஆண்ட பரம்பரை பெருமைகளை ஒருபுறம் பேசிக் கொண்டிருந்தாலும், கடும் உழைப்பாலும், பெற்ற கல்வியாலும் நடுத்தரக் குடும்பமாக உயர்ந்து நிற்கும் ஒரு கிராமத்துக் குடும்பம் ஹ்யானா குடும்பத்தோடு இணக்கம் காட்டுகிறது. ’இந்தியா தற்காலிகம்தான், இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் தாய்நாடு திரும்பி தன் குடும்பத்தோடு சேர்ந்து விடலாம்’ என்ற கனவோடு உடன் வந்த ஹ்யானாவின் தந்தை மாரடைப்பில் மரணமடைகிறார். பத்து வயதுச் சிறுமியாக அயல்நாட்டில், உறவுகளற்று நிற்கும் ஹ்யானாவை கிராமத்துக் குடும்பம் தன்னோடு இணைத்துக் கொள்கிறது. யூதப் பெண் ஹ்யானா, இந்து மதத்தின் அனிதாவாகிறாள்.

கிராமத்துக் குடும்பத்தின் படிப்பறிவில்லாத தாய்க்கு யூத மதம் என்றால் என்ன? என்பதோ, யூதத்தின் பெயரற்ற கடவுள் பற்றியோ எந்த கவலையுமில்லை. ஹ்யானாவிடம் இருக்கும் யூத மதச் சின்னத்தில் ஒன்றை தன் பூஜையறையில் இணைத்துக் கொள்கிறார் அம்மா. இப்படிப் போகும் கதை, ஜெர்மனியின் ரத்த வடுக்களை மறக்காத சிறுமி – அந்நிய நாட்டில் தனித்த, துயருற்ற மனதோடு நிற்பதை உணர்த்திக் கொண்டே செல்கிறது. அனிதா தன்னுடைய அறுபதாவது வயதுகளில் வெளிநாடுகளுக்கு விமானப் பயணம் போகுமளவுக்கு பொருளாதாரம் உள்ளவராக மாறுகிறார். கணவனின், மகனின் துணையோடு தன் குடும்பத்தைத் தேடிக் கிளம்புகிறார். அவரது தேடலோடு வரலாற்றின் பக்கங்கள் உயிர் பெறுகின்றன. பள்ளிப் பாடமாக நாம் படித்த, மதிப்பெண்களுக்காக நாம் விடையாக எழுதி வந்த சொற்கள் – எந்த மதிப்புமின்றி கொன்றழிக்கப்பட்ட ஒரு வரலாற்றை நம் கண் முன் நிறுத்துகிறது.

ஜெர்மனி, ஆம்ஸ்டர்டாம், வாஷிங்டன், ஜெருசலேம், இஸ்ரேல், பெங்களூரு. . .என நிலங்களில் விரியும் கதை நம்மை வரலாற்றில் வாழும் ஒரு மனிதனாக மாற்றுகிறது. ஜெர்மனியில் அடித்துத் துரத்தப்படும் யூதர்களை, ஆம்ஸ்டர்டாமில் வதை முகாம்களுக்கு ஏற்றிச் செல்லப்படும் குடும்பங்களை, விஷ வாயுக் கலன்களில் அடைத்துக் கொல்லப்படும் உயிர்களை நாம் மெளன சாட்சியாக நின்று பார்க்க வைக்கிறது எழுத்தாளரின் ரத்தமும், சதையுமான வரிகள். வரலாற்றிலிருந்து தூக்கியெறியப்பட வேண்டிய ஹிட்லர், 1990களில் மறுபடியும் இந்தியாவில் உயிர் பெறுகிறான் என்ற பின்னணி நாஜிகளின் இந்திய மறுபிறப்பை நமக்கு நினைவு படுத்துகிறது. வதை முகாம்களும், மரண ஓலங்களும் இந்திய வரலாற்றில் மறுபடியும் உருவாகும் சாத்தியக் கூறுகளை நமக்குள் யோசிக்க வைக்கிறது.

தன் குடும்பத்தைத் தேடி இஸ்ரேலுக்குச் செல்லும் அனிதா, அங்கு நடக்கும் இஸ்லாமியர்களுக்கும் – யூதர்களுக்குமான போருக்கு நடுவில் நின்று யோசிக்கிறாள். ஜெர்மனியின் ஆர்யாக்களால் நிலத்திலிருந்து விரட்டப்பட்ட யூதர்கள், இஸ்லாமியர்களை பாலஸ்தீனிலிருந்து விரட்டுபவர்களாக இருப்பதை அனிதாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடவுள் கோட்பாடுகளும், மதங்களின் நம்பிக்கைகளும் தனி மனிதர்களைச் சிந்தனையற்றவர்களாக மாற்றி, உலகெங்கும் ரத்த ஆறு ஓட வைப்பதைத் தர்க்க ரீதியாக, தத்துவ ரீதியாகச் சிந்தித்துக் கொண்டேயிருக்கிறாள் அனிதா.




ஹ்யானாவின் குடும்பத்தைத் தேடும் பயணத்தில் வாசிப்பின் வழியாக நாமும் பங்கேற்க முடியும். பாதிப்பின் வலியை, நிலத்திலிருந்து துரத்தப்பட்ட தனிமையை, சுதந்திரமாக கருத்தினை வெளிப்படுத்த முடியாத ஒடுக்கு முறையை வரிக்கு வரி உணரச் செய்கிறது. இந்த புனைவின் பின்னே இருக்கும் உண்மைகளையும், உழைப்பையும் நாவலின் இறுதியில் கட்டுரை மூலம் விளக்கியிருக்கிறார் எழுத்தாளர். ’இது வெறும் கற்பனைக் கதை’ என்று வாசகன் தன்னை ஆற்றுப் படுத்திக் கொண்டு, சமூகப் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாத படி நேமி சந்த்ராவின் “கதையைத் தேடி அலைந்த கதை” 18 பக்கங்களில் விரிகிறது.

தமிழில் எழுதப்பட்ட நாவலைப் போலவே, எளிய சொற்களால் மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பது மிக முக்கியமான சிறப்பு. மொழிபெயர்ப்பாளர் கே. நல்லதம்பி அவர்களின் உழைப்பையும், மெனக்கெடலையும் ”யாத்வஷேம்” நாவலை வாசித்து முடிக்கும் போது ஒவ்வொரு வாசகனாலும் உணர்ந்து கொள்ள முடியும். எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வன் அவர்கள் சொன்னது உண்மைதான். “நீங்களெல்லாம் என்ன எழுதிவிட்டீர்கள்? இனி எதை எழுதப் போகிறீர்கள்?” என்ற கேள்விகளை நம் முன் வைக்கிறது யாத்வஷேம்.

நூல்: யாத்வஷேம் (நாவல்) 
ஆசிரியர்: நேமி சந்த்ரா தமிழில்: கே.நல்லதம்பி
வெளியீடு: எதிர் வெளியீடு
358 பக்கங்கள்
விலை: ரூ.399/
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/yaad-vashem-nemachandra/



4 thoughts on “நூல் அறிமுகம்: காந்தி மண்ணில் பிறக்கும் ஹிட்லர்கள் *“யாத்வஷேம்”* நாவலை முன்வைத்து. . . – அ.உமர் பாரூக்”
  1. நாவலைப் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. சிறந்த நாவலை அறிமுகப்படுத்துவதற்கு நன்றி.

  2. நாவலை விரைவில் படித்தே ஆகவேண்டும் என்று தோன்றுகிறது…அந்தளவு அறிமுகம் அசத்தலாக..நாஜிக்களின் வதைகளை பற்றி எத்தனையோ மொழிகளில் பலபல படங்களை பார்த்துவிட்ட பிறகும்… இன்னும் ஓயாத ஓலங்கள் வெவ்வேறு வடிவங்களில் கேட்டுக்கொண்டே இருக்கிறது….இந்த படைப்பும் இன்னும் என்னவென்லாம் சொல்ல போகிறதோ என்ற ஆவலோடு நான்..

  3. நாவலை உடனே வாசிக்க தோன்றுகிறது .எழுத்தாளர் உமர்பாருக் அவர்களின் அறிமுகம் சிறப்பு
    வதைகளின் கூடரங்களை இன்றைய ஆட்சியாளர்களும் துவங்கி விட்டார்கள் எச்சரிக்கை என்பதை காலத்தின் சொல்வது எழுத்தாளர் மானுடத்தின் மீது வைத்திருக்கும் வாஞ்சையை காட்டுகிறது எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் சொன்னது போல் நாம் என்ன எழுதிவிட்டேம்? என்றே தோன்றுகிறது.
    நாவலை எங்களுக்கு அறிமுகம் செய்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நன்றி
    —- கவிவாணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *