“நெஞ்சில் நிலைக்கும் முற்றம்” (யாத்வஷேம் நாவல் குறித்து) – ந. ஜெகதீசன்யாத்வஷேம் என்ற நாவலின் பெயருக்கு அர்த்தம் தெரியாமலேயே நாவலை வாசிக்க தொடங்கினேன். யாத்வஷேம் என்பது ஆயிரம் ஆயிரம் உயிர்களின் வலியை தாங்கி நிற்கும் காலத்தின் சாட்சியம் என்பதை பாதி நாவலை கடக்கையில் அறிந்து கொண்டேன்.

இந்த நாவலை எழுத மேற்கொண்ட பயணங்களையும் தரவுகள் திரட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் நூலின் இறுதியில் நூலாசிரியர் விவரித்துள்ளார். ஆசிரியரின் இந்த உழைப்பு நாவலில் வெளிப்படுகிறது. வியப்பளிக்கிறது!

கன்னட மொழியில் சாகித்ய அகடமி விருது பெற்றிருக்கும் இந்த நாவலை தமிழில் கே. நல்லதம்பி அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார். இது மொழிபெயர்ப்பு நூல் என்று கருத முடியாத வகையில் லாவகமாக சிறப்பான முறையில் மொழிபெயர்ப்பை செய்திருக்கிறார். அவருக்கும் என் பாராட்டுக்கள்.

இந்த நாவலில் சில கன்னட இனக்குழுக்கள் பற்றியும் அவர்களின் வாழ்வியல், இடம் பெயர்வு, பழக்க வழக்கங்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது.

தமிழகத்தில் இரண்டாம் கட்ட கொரனா ஊரடங்கு தொடங்கிய காலம். இரண்டு நாட்களாக தொடர்ந்த என் பயணம் மூன்றாம் நாளில் முடிவடைந்தது. ஊரடங்கில் இருந்த என்னை பெங்களூருக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து ஜெர்மனி, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் சென்றது இந்த நாவல்! மூன்று நாட்களில் நீண்டதொரு வரலாற்றுப் பயணம் மேற்கொண்ட உணர்வு.

மென்மையாக அழுத்தமான மொழியில் தொடுக்கப்பட்டிருக்கும் கருத்துகளின் காரம் இதயத்தை அசைத்து பார்க்கிறது. இந்த நாவலை வாசிக்கையில் ஒரு முறையாவது ஒரு துளி கண்ணீரையாவது இந்த மண்ணிற்காக சக மக்களுக்காக ‘விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்ற எண்ணத்தை விதைக்கிறது.

Devi Awards 2015
Nemichandra

உலகின் மிகப்பெரிய வரலாற்று பிழைகளுள் ஒன்று ஹிட்லரின் கொடுமைகள். இவற்றோடு இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைகளை இணைத்து பேசுகிறது இந்த நாவல். இன துவேசத்தால் யூதர்கள் மீது தாக்குதல் நடத்தினான் ஹிட்லர் அன்று. அந்த யூதர்கள் இன்று இஸ்லாமியர் மீது தாக்குதலை நடத்துகிறார்கள். இந்த முரண்பாட்டை ஆழமாக யூத, இஸ்லாமிய மதங்கள் தோன்றிய காலம் வரை சென்று அலசுகிறார் ஆசிரியர். ஹிட்லரின் யூத வெறுப்பிற்கான அக காரணங்களை ஒரு வித்தியாசமான பார்வையில் அணுகியுள்ளது சிறப்பு.

ஒரு இந்தியப் பெண்ணின் பார்வையில் இந்த நாவலை புனைந்திருக்கும் ஆசிரியர் இந்திய சாதி, மத, இன பிரச்சனைகளையும் தொடுகிறார்.

“நான் நானாகவும், அவர்கள் அவர்களாகவும் இருந்து நாமாக ஒன்றாக முடியும்”

” … உண்மையில் வெறுப்பதற்கான காரணங்கள் ஏதும் இல்லை. சாக்குப் போக்குகள் மட்டுமே இருக்கின்றன”

“பிரளயம் வெளியே இல்லை. உள்ளே ஆர்ப்பரிக்கிறது. போர்கள் எல்லாம் முதலில் பிறப்பது நெஞ்சத்தில், இதயத்தின் இருட்டில், ரோஷத்தில், செருக்கில், தாக்குதல்களில்” என்று சம்மட்டி கொண்டு தாக்கி உலகில் அனைத்து தரப்பு மக்களுக்கான ஒரு புதிய விதையை தூவுகிறார்.

இந்த நாவலை வாசித்து முடித்த மறுநாள் காலையில் செய்தித்தாளைப் பார்க்கிறேன். காசா மீது இஸ்ரேல் தாக்குதலும் ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. இதில் இஸ்ரேலில் பணியாற்றிய ஒரு கேரளப் பெண் இறந்து விட்டார் என்ற செய்தியும் அடக்கம். மனம் கனத்தது.

அந்த குண்டுகளும் ஏவுகணைகளும் பீரங்கிகளிலிருந்தும் தளங்களிலிருந்துமா பறந்தன. இல்லை. மனித இதயங்களில் இருந்து தான் பிறந்தன.

இந்த நாவலை ஒருவர் வாசிக்கப்படும் போது பல இறுகிய இதயங்கள் இளகக்கூடும். ஒரு முறை, ஒரே ஒரு முறை வாசித்து தான் பாருங்களேன்!

இந்த நாவலை வாசிக்க பரிந்துரைத்த எழுத்தாளர் அ. உமர்பாரூக் அவர்களுக்கு நன்றி.

நூல் : யாத் வஷேம்
ஆசிரியர் : நேமிசந்த்ரா, தமிழில் : கே. நல்ல தம்பி
பக்கம் : 358
விலை : ரூ. 399.
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/yaad-vashem-nemachandra/