நூல்: யாத்வஷேம்
ஆசிரியர்: கன்னட மூலம் நேமிச்சந்திரா|  தமிழில் கே. நல்லதம்பி.
பதிப்பகம்: எதிர் வெளியீடு
பக்: 358
விலை ரூ 399.
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/yaad-vashem-nemachandra/

ஹிட்லர் இறந்துவிட்டான்………அழியவிலை.

உலக வாழ்வியல் மற்றும் அரசியல் முன்னேற்றத்தின் தடை அரணாக மாறியிருந்தது ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லரின் ஆட்சிமுறை. 20ஆம் நூற்றாண்டின் ஜனநாயக யுகத்தில் இனவாத அரசியலை அமல்படுத்தியவன் அவன். குறிப்பாக யூதர்கள்மேல் அவன் தொடுத்த யுத்தம் வரலாற்றுப் புத்தகத்தின் கருப்பு அத்தியாயம். சாதாரண உழைப்பாளிகள் முதல் மேலதிகத் திறமை பெற்ற அறிவுஜீவிகள் விஞ்ஞானிகள் வரை அவன் பார்வையிலிருந்து தப்பவில்லை. அவனுக்கு ஆதரவாய் வெடிமருந்துகளைக் கண்டுபிடித்து அவனின் படைபலத்தை வலுபபடுத்திய நிபுணர்களும் கூட, அவர்கள் யூதர்கள் என்பதால் அவனால் கைது செய்யப்பட்டு வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் முக்கியமானவர் லீ மாட்னர். உலகின் மிகச்சிறந்த வெடிகுண்டு விஞ்ஞானி அவர். அவரும் கூட வதை முகாமுக்கு அனுப்பப்பட்டார். 60 லட்சம் யூதர்கள் விஷவாயு மற்றும் எரிதழல் குழாய்கள் மூலம் படுகொலை செய்யப்பட்டனர்.

ரத்தக்கறை படிந்த இந்த வரலாற்றை உலகின் அனைத்து மொழிகளும் பதிவுசெய்து எதிர்கால அரசியலுக்கான எச்சரிக்கைப் பதாகையை உயர்த்திப் பிடித்திருக்கின்றன. தமிழிலும் மருதன் உட்பட பலரும் ஹிட்லரின் வதை முகாம்கள் பற்றிய உண்மைகளை ஆவணப்படுத்தியுள்ளனர். ஆனாலும் புனைவு தளத்தில் அரிதான படைப்புகளே வந்துள்ளன. அவற்றில் முக்கியமானது “யாத் வஷேம்” என்ற கன்னட நாவல்.

“யாத்வஷேம்” என்பது ஜெருசேலத்தில் உள்ள படுகொலை செய்யப்பட்ட யூதர்களின் நினைவிடம். ஹிட்லரால் கொல்லப்பட்ட அனைவருக்கும் அங்கு மரங்கள் நடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மரத்தின் நிழலும் எரிகுழாயில் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட ஜீவன்களின் பெயரைப் பறைசாற்றியபடி இருக்கின்றன. கூடுமானவரை, கொல்லப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பிரம்மாண்டமான அரங்கத்துக்குள் அணையா விளக்குகளும் மெழுகுவர்த்திகளும் அவர்களின் நினைவுகளை வெளிச்சமிட்டுக் காட்டிக்கொண்டிருக்கின்றன. அதோடு கொல்லப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

1940களின் துவக்கத்தில் ஹிட்லரின் மாய வலையில் சிக்காமல் தப்பி பூமிப் பரப்பின் பல பகுதிகளுக்கும் ஓடி ஒளிந்தவர்களில் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவர் ஹிரண் மோசஸ் என்ற இயற்பியல் விஞ்ஞானியும் அவர் மகள் ஹயானாவும். அவர் இங்குவந்து ஹிந்துஸ்தான் ஏரோநாத்ட்டிக் கம்பனியில் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்துகிறார். ஏரோநாட்டிக் விமானக் கம்பனி உலக யுத்தத்தில் பங்கெடுப்பதற்கான விமானங்களைத் தயாரிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட்து. ”எஞ்சேரப்பா” என்ற சிவ வழிபாட்டை வாழ்க்கை நெறியாகக் கொண்ட ஓர் இந்துக்குடும்பம் அவர்களை ஆதரித்து அரவணைக்கிறது. போர் முடிந்தவுடன் ஹயானாவின் தந்தை, போர்க்களத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்த விமானத் தயாரிப்பு அவசியமற்றுப்போக, வேலை நீக்கம் செய்யப்படுகிறார். அப்படியே அவர் இறந்தும் போகிறார். எஞ்சேரப்பாவை வழிபடும் இந்துக்குடும்பம் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக ஹயானாவை ஏற்றுக் கொள்கிறது. அந்தக் குடும்பத்தின் குழந்தைகளாகிய விவேக் மற்றும் சுமி இருவரும் அதிகமான அன்பைப் பொழிகின்றனர். அந்தக் குடும்பத்தின் பூஜையறையில் இருக்கும் சாமிகளோடு யூதர்களின் ஆன்மீக வழிபாட்டு நூலாகிய ‘டோரா’வையும் இணைத்துக் கொள்கின்றனர். ஹயானா அனிதா என்ற பெயர் சூட்டப்பட்டு தனது யூத மத வழிபாட்டை பின்பற்றியே வாழ்கிறாள். காலப்போக்கில் ஹயானாவும் விவேக்கும் ஒருவரை ஒருவர் விரும்ப எந்தப் பாகுபாடும் காட்டாமல் திருமணம் நடக்கிறது. இருவருக்கும் விஸ்வநாதன் என்ற மகன் பிறந்து வளர்ந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் பதவியில் பணியாற்றுகிறான்.

உணவு, குடும்பத்தாரின் பாகுபாடற்ற அன்பு, சுற்றி இருப்பவர்களின் மனிதாபிமான அரவணைப்பு என்ற சுற்றுச் சூழலின் வழியே ஹயானாவின் வாழ்க்கை சுமூகமாக இருந்தாலும், தான் பிறந்த நிலம், தன்னைப் பிரிந்த தாய், தமக்கை, தம்பி ஆகியோரின் நினைவுகளில் மூழ்கி சுயமிழந்து நிற்கிறாள். மகன் விஸ்வநாதன் சுற்றுலா விசா பெற்றுப் பெற்றோரை இஸ்ரேலுக்கு அனுப்புகிறான். அங்கே சென்று பலகட்ட முயற்சிக்குப் பின் தனது சகோதரி ரெபக்கா சந்திக்கக் கிடைக்கிறாள். எல்லையற்ற மகிழ்ச்சியில் மூழ்கித் திளைக்கிறாள் ஹயானா.



ஹிட்லர் நிறுவிய வதை முகாம்களில் முக்கியமானவை மூன்று. அவை டகாவ், மாதுசென், ஆஸ்விஸ்ட்ஸ். இவற்றில் டகாவ் உயிர் பிழைக்கவும் வாய்ப்புத் தந்த முகாம். ரெபக்காவும் அம்மாவும் தம்பி ஐசக்கும் அங்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். திடகாத்திர்த்துடன் இருந்த ரெபக்கா ஒரு பக்கமும் சோர்ந்து போயிருந்த அம்மாவும் தம்பியும் வேறொரு பக்கமும் அனுப்பப்படுகின்றனர். ரெபக்கா உழைப்புக் கூடத்துக்கும் தாயும் தம்பியும் மரணக் கிடங்குக்கும் அனுப்பப்பட்டிருப்பதாய்ப் பின்னர் அறிந்து அழுகிறாள்.

பெண்கள் மூன்று முகாம்களுக்கும் பிரித்து அனுப்பப்படுகின்றனர். காரணம் ஆண்களை எரிப்பதற்குப் பெண்களின் உடல் தேவைப்படுகிறது. ஜெர்மன் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளில் இது முக்கியமானது. பெண்களின் தோலுக்குக் கீழே கொழுப்பு ஆண்களைவிட அதிகமாக இருக்கும். பெண்களின் உடம்பைக் கீழே வைத்து அடுப்பை எரிக்கப் பயன்படுத்தினார்கள். ரத்தம் நல்ல எரிபொருள் என்று கண்டுகொண்டார்கள். இளம் தேகங்கள் வயதானவர்களுடையதைவிட வேகமாக எரியும். காரணம் அவர்களின் மாமிசம் மிருதுவானது.”

ரெபக்கா உயிர் பிழைத்து மீண்டதற்கு இன்னொரு முக்கியக் காரணம் உண்டு. அது அவளின் வாளிப்பான உடம்பு. அந்த முகாமில் காவலிருந்த எஸ் எஸ் அதிகாரிகள் (ராணுவ அதிகாரிகள்) அவளின் உடலோடு உறவுகொள்ள விரும்பினர். உலகில் எல்லைப் பாதுகாப்பில் இருக்கும் எல்லா ராணுவ வீர்ர்களுக்கும் இது பொதுவிதி. காஷ்மீரில் பணியிலிருந்த ஒரு வீரரின் வாக்குமூலம் இது. ”பெரும் குளிரில் திரண்டுகிடக்கும் எங்களுக்கு சுற்றுவட்டாரத்தில் இருக்கும் இளம்பெண்கள்தான் வடிகால். சம்மதித்து வந்தால் அவர்கள் உயிர் பிழைப்பார்கள். சில பத்து ரூபாயும் தந்து பாதுகாப்பாக அனுப்புவோம்; இல்லையென்றால் சித்திரவதை அல்லது என்கௌண்டர்.”

ஒரு முறை ஒரே நேரத்தில் இரண்டு பேர் ரெபாக்காவுடம் உறவு கொண்டார்கள். கீழே ஒருவன்; நடுவில் ரெபாக்கா; மேலே இன்னொருவன். பெரும் சித்திரவதை என்றாலும் அவள் உயிர்பிழைக்க விரும்பினாள்.

1945ல் ஹிட்லர் தோற்றுப் போனபின் (போரிலும் வாழ்விலும்) சிறைக் கொட்டடியிலிருந்த அனைத்து யூதர்களும் விடுதலையானார்கள். அவர்கள் தமக்கென்று ஒரு துண்டு நிலத்தைப் பிடித்து இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்கினார்கள். அதன் முதல் ஜனாதிபதியாக இந்தியாவில் குடியிருந்த எஸர் வைஸ்மன் என்ற யூத ராணுவ வீரர் நியமனம் பெற்றார். இனவாதக் கொடுமையிலிருந்து விடுதலை பெற பெரும் போராட்டம் நடத்திய அதே யூதர்கள் இன்று அதே இனவாதக் கொள்கையைப் பின்பற்றி பாலஸ்தீனியர்களை வேட்டையாடுகிறார்கள் என்பதை ஹயானா அறிந்து வேதனைப் படுகிறாள்.. குறைந்தபட்சம் மேற்குக் கரையில் அமைந்துள்ள கஜா பகுதியையாவது விட்டுக் கொடுங்கள் என்று பாலஸ்தீனியர்கள் கோருகிறார்கள். அந்தக் கோரிக்கையை இஸ்ரேல் முழுதாக நிராகரித்த நிலையில் இன்று யூத பாலஸ்தீன இனங்கள் இரண்டுமே நிம்மதியிழந்து கிடக்கின்றன.

20ஆம் நூற்றாண்டின் ஹிட்லர் இறந்துபோனான்; ஆனால் அவன் இன்னும் அழியவில்லை. எங்கெல்லான் யுத்த விளாறுகள் நீண்டு வளர்ந்துகிடக்கிறதோ அங்கெல்லாம் ஹிட்லர்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அனிதா என்ற ஹயானா சொல்கிறாள். “நீ நீயாகவும் நான் நானாகவும் இருக்கும்பட்சத்தில் நாம் நாமாக இருப்பது எளிது. இந்தியாவின் மதச்சார்பற்ற இந்தக் கோட்பாடு எனக்குப் பிடித்திருக்கிறது.”



வாசிக்க விறுவிறுப்பாகவும் உள்ளத்தை ஈர்க்கும் உணர்ச்சி வேகத்தோடும் நகர்கிறது நாவல். 20ஆம் நூற்றாண்டின் ஹிட்லர்-முசோலினிகளின் சர்வ வல்லமை படைத்த ஆட்சி அதிகாரத்தை நினைத்தால் இன்றும் கனமான நடுக்கம் உண்டாகிறது.. ரத்தக்கறை படிந்த வரலாறு பற்றி வலிமையான சொல்லாடல்களால் விஸ்தாரமாகப் பேசுகிறார் நாவலாசிரியர். 21ஆம் நூற்றாண்டின் ஹிட்லரிசம் தான் பாலஸ்தீனர்களுக்கு எதிரான யுத்தம் என்கிறார். ஆனாலும் என்ன! ஹிட்லரின் மரணம் பற்றிப் பேசும்போது பிசகு செய்கிறார் நாவலாசிரியர்..

1945 ஏப்ரல் 30ஆம் நாள் சோவியத் யூனியனின் செம்படைகள் ஜெர்மன் தலைநகர் பெர்லினைக் கைப்பற்றி செங்கொடியை ஏற்றியபோது அதிர்ச்சியடைந்த ஹிட்லர் தனது படைவீரர்களிடம் உரையாற்றிவிட்டு தற்கொலை செய்துகொள்கிறான் என்றுதான் வரலாறு பேசுகிறது. ஆனால் இந்த நாவல் அமெரிக்க இங்கிலாந்து படைகள் ஜெர்மனியைக் கைப்பற்றிய போது ஹிட்லர் மாண்டுபோனான் என்கிறது. இந்தப் பிசகான வாக்குமூலத்தின் வழியாக நாவலாசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிய முடியவில்லை. வரலாற்றை மறந்தாரா அல்லது மறுக்கிறாரா என்று கேட்க வேண்டியிருக்கிறது. அவர்மேல் சந்தேகப் பார்வையை வீசாமல் இருக்கமுடியவில்லை. உள்ளதை உள்ளபடி சொல்வதுதானே வரலாறாக இருக்கமுடியும்.

கன்னடத்தின் மிகச் சிறந்த பெண்படைப்பாளி நேமிச்சந்திரா இந்தப் புனைவுப் படைப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். கே. நல்லதம்பி நேர்த்தியாய்த் தமிழ்ப்படுத்தியுள்ளார். வாசிப்போம்: உண்மை வரலாற்றைக் கட்டமைப்போம்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *