நூல் அறிமுகம்: “யாம் சில அரிசி வேண்டினோம்” – எஸ்.டி.பாலகிருஷ்ணன்

அன்பிற்கினிய தோழர் அழகியபெரியவன் அவர்களுக்கு
வணக்கம்.
தாங்கள் எழுதிய ”யாம் சில அரிசி வேண்டினோம்” என்ற நாவலைப் படித்தேன். தாங்கள் இந்நூல் குறித்து முகநூலில் பதிவிட்டிருந்தீர்கள். அப்போதே வாங்கி படிக்க வேண்டும் என நினைத்தேன். பின்பு தோழர் கருப்பு அன்பரசன் அவர்கள் முகநூலில் விரிவாக இந்நூலைப் பற்றி எழுதியிருந்தார். உடனடியாக படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது.
23ம் தேதி சென்னைக்கு அலுவலகப் பணியாகச் சென்றேன். நானும் நண்பர் எஸ்.சுப்பிரமணி அவர்களும் நற்றினைப் பதிப்பகம் சென்று புத்தகத்தை வாங்கினோம். அலுவலகப் பணிகள் தொடர்ச்சியாக இருந்தது. இருப்பினும் இப்புத்தகத்தை படிக்க வேண்டுமென்ற நினைவும் ஓடிக்கொண்டே இருந்தது.
சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்தேன். புத்தகத்தை எடுத்தேன். இரண்டு நாள் இரவுப்பொழுதில் புத்தகத்தை படித்து முடித்தேன். அதற்குக் காரணம் கவசிநாதன் என்னை அடுத்தடுத்த பக்கத்திற்கு வேகமாக அழைத்துச் சென்றதுதான்.
அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஒரு அதிகாரியின் அதிகார வெறிக்கு, கவசிநாதன் என்கிற சாதாரண இளைஞன் என்ன பாடுபடுகிறான் என்பதை நாவலில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கவசிநாதனுக்கு வேலை கொடுக்க வேண்டிய அலுவலகம்… வேதனையைக் கொடுத்த கொடுமையை என்னவென்று சொல்வது. வேதனையை மட்டுமல்லாமல் வழக்கு மூலமாக சோதனையையும் கொடுத்த கொடிய அரசு அதிகாரியை என்ன செய்வது..? படித்து முடித்து வேலைக்காக காத்து நிற்கும் கவசிநாதனின் வாழ்க்கையில் எத்தனையெத்தனை சோகங்கள். கவசிநாதனின் குடும்பச் சூழல், பள்ளி, கல்லூரி, கிராம வாழ்க்கையில் நடந்த வறுமை, வெறுமை குறித்து படிக்கையில் படிக்கும் நம் வாழ்க்கையும் நினைவுக்கு வந்துவிடுகிறது. அதிகாரி, காவல்துறை போன்ற அதிகார வர்க்கம் கைகோர்த்துக்கொண்டு அலைக்கழிப்பது இன்று நேற்றல்ல காலம்காலமாய் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
யாம் சில அரிசி வேண்டினோம் | Buy Tamil & English Books Online | CommonFolks
கவசி மனம் சோர்ந்து நிற்கையில் பூரணி, பெரியவர், வேலையில்லாத பட்டதாரிகள் சங்க நண்பர், வழக்கறிஞர் போன்ற நல்ல மனிதர்களின் துணையோடு அதிகார வர்க்கத்தை கவசி எதிர்கொள்வதைப் படிக்கும்போது சில நேரங்களில் கண்ணீரும், பெரும் நம்பிக்கையும் ஏற்படுகிறது. அதிகார வர்க்கத்தின் உச்சபட்ச அக்கிரமங்களை தினமும் எதிர்கொள்ளும் ஆயிரமாயிரம் கவசிகளை நாவல் பிரதிபலிக்கிறது. இது என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. சாதாரண மனிதர்கள் கூட ஆசிரியராக, பேராசிரியராக, அரசு அதிகாரியாக மாறுகிறபோது அவர்கள் எடுக்கும் விஸ்வரூபமே தனிரகம்தான். அவர்களின் உயர்தட்டு வர்க்கப் போதை நம்மை பாடாய்படுத்தி விடுகிறது. நல்ல நண்பர்களாக இருந்தாலும்கூட அவர்களின் சமத்துவக் கவசம் சில நேரம் கழண்டு விழுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
சாதி, மத, இனவெறி அரசு அதிகார எந்திரத்திற்குள் ஒளிந்துகொண்டு லட்சோப லட்சம் மக்களை காவு வாங்கிக்கொண்டிருக்கிறது. இந்நாவல் கவசிநாதனோடு முடிந்துவிடவில்லை. என்னால் மூச்சுவிட முடியவில்லை. தயவு செய்து விட்டுவிடுங்கள் என சொன்ன ஜார்ஜ் ப்ளாய்ட் வரை தொடர்கிறது. தகுதியும் திறமையும் இருந்தும் புறக்கணிக்கப்படுவது ஒருபுறம், வேலைக்குச் சென்றாலும் அநாகரிகமாக நடத்தப்படுவதும், படித்துவிட்டு வேலைக்காக அலையும்போதும் ஏற்படுகிற அவமானங்கள் பல.
இந்நாவல் கவசிநாதன் வழியாக சாதாரண மனிதனின் துயரத்தை புட்டுபுட்டு வைக்கிறது. இடையிடையே சுவராசியமான பல்வேறு சம்பவங்களும் இருந்தாலும் கவசிநாதனின் ரணமும், வேதனையும் நம்மை கணத்த மனதோடுதான் வாசிக்கச் செய்கிறது.
”உங்களுக்கு விடுதலை. நீங்க போகலாம்” என நீதியின் குரல் ஒலிக்கிறபோதுதான். நாமும் நூலில் இருந்து விடுதலையாகிறோம். ஆனால் உள்ளே இருக்க வேண்டியவர்கள் வெளியே இருக்கிறார்கள் என்ற ஆதங்கமும் இருக்கிறது.
Azhagiya Periyavan | വിവര്‍ത്തനം
முயற்சியோ போராட்டமோ செய்யலேன்னா நம்மோட உயிர் அறுபடும். இதுதான் நம்முடைய நிலைமை என்று சொல்லும் வார்த்தை எவ்வளவு உண்மையாது.போராட்டமே தீர்வு என்பதையும் அருமையாக உணர்த்துகிறது. கவசிநாதனுக்கு வழிகாட்டும் பெரியவர் பெரியவராக மட்டும் தெரியவில்லை. ஒரு பெரியாராக, அண்ணல் அம்பேத்கராக, காரல் மார்க்ஸாகத் தெரிகிறார்.
ஒவ்வொரு வீட்டிலும் ஒதுங்கியும், ஒதுக்கப்பட்டும் நிற்கிற இளைஞர்கள் படிக்க வேண்டிய நாவலைத் தந்த உங்களுக்கும், நற்றினைப் பதிப்பக நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

யாம் சில அரிசி வேண்டினோம்
அழகிய பெரியவன்
நற்றிணை பதிப்பகம் ,
திருவல்லிக்கேணி, சென்னை-5. விலை: ரூ.250
தொடர்புக்கு: 044 – 2848 1725

அன்புடன்
எஸ்.டி.பாலகிருஷ்ணன்