உன் வழியை, உன்னை
பின்பற்றுபவர்
தெளிவு பெற்று விட்டனர்!
நீ
சமூக ஆசான்
ஞானத் தந்தை!
நீ
தவறி பிறந்த இடம்தான்
இன்னும்
தடுமாறிக்கிடக்கிறது ஞான குருவே!
சின்னஞ் சிறு வயதில்
கங்கையில்
பூ நூலை தலை முழுக வைத்தவனே…..
இன்னும்
அதன் காரணம் புரியாமல்
குழம்பிக் கிடக்கிறது
சனாதனம்!
உன் மீசை சொன்ன
சேதிகளை
புரிந்து கொள்ளாமல்
கிடக்கிறது சனாதனம்!
காக்கைக் குருவி எங்கள் சாதி
என்றதன்
பொருள் புரியவில்லை
சனாதனத்துக்கு!
கனகலிங்கத்தை
கட்டியணைத்தக்
காரணம் புரியவில்லை
சனாதனத்துக்கு!
‘ சீ… சீ…
நாய்கள் செய்யும் இத்தொழில்’
என்றவனே;
மன்னித்துக்கொள் மகாகவியே….
நாங்கள்
மனிதராகத்தான் அவர்களைப்
பார்க்கின்றோம்!
அவர்கள்தான் எங்கள் மீது
சனாதனத்தை ஏவுகின்றனர்!
ஐந்தாம் பிறப்பாளருக்கு
அர்த்தம் சொன்ன
ஞான ஒளியே!
பிரமனின்
நெற்றியிலிருந்துப்
பிறந்தவர் இவர்!?
தோள்களிலிருந்துப்
பிறந்தவர் இவர்!?
இடுப்பிலிருந்துப்
பிறந்தவர் இவர்!?
கால்களிலிருந்துப்
பிறந்தவர் இவர்!?
என்ற
கணக்கு வரிசையில்
பிறக்காதவர்
ஐந்தாம் பிறப்பாளர்.,
அவர்களின்
பிறப்பைப் பற்றி
உம்மிடத்தில் கேட்டபோது;
“அவர்தான்….
அம்மா அப்பாவிற்குப் பிறந்தவரென்று…. ”
உண்மையைச் சொன்ன
உத்தமனே;
யாரய்யா நீ?
சின்னச்சாமிக்குப் பிறந்த
பெரிய சாமியே!
இலட்சுமிப் பெற்றெடுத்த
சரஸ்வதியே!
குப்பம்மாள் வளர்த்தெடுத்தக்
கோமேதகமே!
செல்லம்மாளுக்குக் கிடைத்தச்
சீதனமே!
தங்கம்மாளைப் பெற்றெடுத்த
‘வைரமே’
சகுந்தலையை ஈன்றெடுத்த
‘சரித்திரமே’
மனிதரை மதித்த
மகா கவியே!
இன்னும்….
எத்தனை எத்தனை
பரிமாணங்களோ?
உன்னுள்!
இந்த நாள்தானே
( செப்டம்பர் ஒன்பது)
உன்னை
விண்ணுலகம் அனுப்பியது?
இனி
எந்த நாள்
உன்னை
மண்ணுலகம் அழைத்து
வருமெனக் காத்துக்கிடக்கிறோம்!
வா…
விரைந்து வா;
சனாதனத்தை உடைக்க
சம்மட்டிக் கொண்டுவா.