(B.Satheesh Muthu Gopal) பா. சதீஸ் முத்து கோபால் எழுதிய யாருக்கானது பூமி? (Yaarukaanathu Boomi? ) - நூல் அறிமுகம்

யாருக்கானது பூமி? – நூல் அறிமுகம்

யாருக்கானது பூமி? – நூல் அறிமுகம்

யாருக்கானது பூமி? என்ற கேள்வியை நூலின் தலைப்பாக வைத்து, நூலை வாசித்து முடித்ததும், இந்த பூமி யாருக்கானது என்ற பதில் நம்மிடம் இருந்து நம்மை அறியாமல் வந்துவிடும்.

உண்மையில் பறவை பார்த்தல் என்பது எத்தனை அலாதியானது என்பது பறவை ஆர்வலர்களுக்கு தெரியும். ஆனால் பறவைகளைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பழக்கவழக்கங்கள் என்ன ?அது எப்படி சூழலோடு தொடர்புடையது? அதன் தற்போதைய நிலை என்ன? என்று உன்னிப்பாய் பறவைகளை உற்று நோக்கும் பொழுது, இயற்கை மீது காதல் பிறக்கும்; இயற்கை மீதான காதல், சூழல் சீர்கேடு கண்டு மனம் வெம்ப வைக்கும்; இதற்கு மாற்றாக தன்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்து செயல்பாடுகளை செய்ய வைக்கும். இவை அனைத்தும் இந்த நூலின் ஆசிரியருக்கு சாலப்பொருந்தும்.
பல்வேறு இடங்களில் தான் பார்த்த பறவைகள், அவற்றைப் பற்றிய விபரணைகள், குறிப்புகள், தற்போது அந்தப் பறவைகளின் நிலை என்ன? , அதைக் காக்க வேண்டியதின் அவசியம் என்ன? என்பன பற்றி தான் இந்த நூலில் மிக விரிவாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தாளர் கோவை சதாசிவம் அவர்கள் பழனியில் சிட்டுக்குருவிகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்தியபோது கலந்துகொண்டு பேசி இருக்கிறார். அப்போது அவர் எழுதிய ஊர் புறத்து பறவைகள் என்ற நூல் இவருக்கு கிடைத்து இருக்கிறது. அந்த நூலை படித்த பிறகு தான் பறவைகளைப் பற்றி அறிந்து கொள்வதில் கூடுதல் ஆர்வம் ஆசிரியருக்கு ஏற்பட்டிருக்கிறது. நம்மை சுற்றி, நம் வீட்டைச் சுற்றி இருக்கும் பறவைகளை எவ்வாறு வேறுபடுத்தி அடையாளம் தெரிந்து கொள்வது? என்பதை எல்லாம் அறிந்த பிறகு அவருடைய பறவை பார்க்கும் தேடல் அதீதமாய் வளர்ந்திருக்கிறது. அந்த அனுபவங்களை எல்லாம் தான் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.

மொத்தம் 12 கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. காட்டு தீ பற்றிய விழிப்புணர்வு செய்வதற்காக களப்பணியாற்றியது பற்றியது முதல் கட்டுரை- காட்டுத் தீயும் கடிவாளமும்.

காட்டுத் தீ பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்த கர்நாடகாவின் மூன்று வனவிலங்கு சரணாலயங்களை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளுக்கு , ஏழு குழுக்களாக கிளம்பி இருக்கிறார்கள். கொள்ளேகாலுக்கும், சத்தியமங்கலத்திற்கும் இடைப்பட்ட பிலிகிரி ரங்கன் பெட்டா பகுதிக்கு இவர்கள் குழு சென்றது. கிட்டத்தட்ட இரண்டு நாட்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை சந்தித்து காட்டுத்தீ எதனால் ஏற்படுகிறது? என்ற கேள்விகளை குழந்தைகளின் முன்வைத்து கலந்துரையாடல் செய்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல; ஆசிரியர்களுக்கும் கூட இது மனிதனால் செயற்கையாக பெரும்பாலும் ஏற்படுத்தப்படுகிறது என்ற உண்மை அறிந்திருக்கவில்லை. அதைப் பற்றி குழந்தைகளிடம் எளிமையாக விளக்கி விட்டு வந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 20,000 மேற்பட்ட மாணவர்களை சந்தித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார்கள். அந்த குழந்தைகளில் ஒரு சிலருக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் கூட போதும். மேலும் அங்கு தான் பார்த்த பறவைகளைப் பற்றியும் முதல் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

காடுசூழ் காவிரி :-

மூச்சை முட்டும் பெங்களூருவில் இருந்து இரண்டு மணி நேர பயண தூரத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு இடம் இருக்கிறது மலைகள் ,பறவைகள் , விலங்குகள் மரங்கள் என பல்லுயிர் வாழத் தகுதியான ஒரு இடம்தான் காவிரி வனவிலங்கு சரணாலயம்.
காட்டுத் தீயினால் ஏராளமான சேதம் இருந்தாலும் பல்லுயிர்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறு அந்த பகுதியில் அதிகமாகவே இருந்திருக்கிறது. ஆனாலும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள், சாலையோரங்களில் அமர்ந்து கொண்டு மது அருந்துவதும், சாலையோரங்களில் அமர்ந்து உணவு சாப்பிட்டு மீத உணவை அங்கிருக்கும் குரங்குகளுக்கு அளிப்பதும், எங்கு பார்த்தாலும் நெகிழி குப்பைகளும் இருந்திருக்கிறது. அதை மிக வருத்தத்தோடு பதிவு செய்திருக்கிறார்.

பெங்களூரில் இருந்து செயல்படும் ‘Growing Wild’ (வனோதயா) என்ற கர்நாடகாவில் உள்ள ஒரு அமைப்பு வனப்பகுதிகளை காப்பதில் தீவிரமாய் செயல்பட்டு வந்திருக்கிறது. அதில் தன்னையும் இணைத்துக்கொண்டு களப்பணியாற்றி இருக்கிறார். அந்த அமைப்பின் தீவிரமான முயற்சியினால் 7 மாதங்களுக்குப் பிறகு அங்கு சூழ்நிலை சிறிது மாறி இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

பழனியும் பறவைகளும்:-

பழனி மலை தொடர் மற்றும் அங்குள்ள பல்லுயிர் சூழல் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார்.
காட்டுயிர் எழுத்தாளர் மற்றும் இயற்கையார்வலர் திருமுகமது அலி எழுதிய இயற்கை செய்திகள் மற்றும் சிந்தனைகள் என்ற நூலை வாசித்து அவர் அறிந்த கொங்கூர் குளம் பற்றி இங்கு குறிப்பிட்டு இருக்கிறார். ஏராளமான பறவைகள் வருவதை பார்த்ததோடு மட்டுமில்லாமல் அந்தப் பறவைகளையும் பதிவு செய்திருக்கிறார். இங்கு பல்வகையான வலசைப் பறவைகள் ஐரோப்பாவில் இருந்து வருகின்றனவாம்.
பழனியில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த குளத்தைப் பற்றி பழனியைச் சார்ந்த எங்களுக்கும் தெரியவில்லை. இனி அடிக்கடி அந்த குளத்துக்கு சென்று பறவைகளை காண வேண்டும் என்ற ஒரு ஆவல் ஏற்பட்டிருக்கிறது.
கொங்கூர் குளத்தைப் போன்ற பழனி அருகில் இருக்கும் கோதைமங்கலம் குளத்தைப் பற்றியும் இங்கு வரும் பறவைகளைப் பற்றியும் அங்கிருக்க கூடிய சூழலைப் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார்.

பறவைகள் இன்றி மனிதனால் வாழ முடியாது. எனவே பறவைகளை அதன் சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை ஆணித்தரமாக இந்த கட்டுரையில் ஆசிரியர் குறிப்பிட்டு இருப்பதை நாம் காண முடியும்.

மைசூரின் ரங்கன திட்டு பறவைகள் சரணாலயம் அங்கு பார்த்த பறவைகள் அனுபவத்தை தேடல் திகட்டுவதில்லை என்ற கட்டுரையில் ஒவ்வொரு பறவை அதன் இயல்பு அதன் சிறப்பான வண்ணப் புகைப்படங்கள் மூலம் காட்சிப்படுத்தி உள்ளார்.
அதில் இவர் பறவைகள் பார்க்க அமர்ந்திருந்த போது அருகே செய்தி தொலைக்காட்சி நிருபர் ஒருவர் அருகே அமர்ந்து பறவைகளை ஒளிப்படம் எடுக்க காத்திருந்தார். பறவைகள் அசையாமல் இருக்கவே அதன் மீது கல் எறிந்து அதனை சலனப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். ஊடகங்களில் தங்களுக்கு செய்திகள் கிடைப்பதற்காக இதுபோல செய்யும் செய்தியாளர்களுக்கு தன் கட்டுரையின் வாயிலாக கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளார். அரசியலாளர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் , கார்ப்பரேட் கம்பெனிகள் செய்யும் தவறுகளையும் கட்டுரைகளில் ஆங்காங்கே குறிப்பிட இவர் தவறவில்லை.

அமராவதி வனச் சரகத்தில் இருந்து , நீண்டிருக்கும் மலைப்பகுதி முழுவதும் பழனி மலைத் தொடர்ச்சிதான் . 2068 ச.கி.மீ. பரப்பளவுள்ள கொண்ட இந்த மலைத் தொடர்ச்சியில்தான் கொடைக்கானல் அமைந்துள்ளது. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண். என்பது வள்ளுவர் கூற்று.

ஆனால் இன்று காடு அப்படி இருக்கிறதா? காடு தன் பொலிவை இழந்து நிற்பதை இந்த கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகரிக்க அதிகரிக்க அங்கு இருக்கும் மனித நெருக்கடி, அவர்களுக்காக கட்டப்படும் விடுதிகள் , சாலையின் வாயிலாக காட்டை இரண்டாகப் பிரித்து இருக்கும் செயல், அயல் மரங்கள் வளர்த்து சோலை காடுகளை அழித்துக் கொண்டிருக்கும் செயல் எல்லாவற்றையும் விவரமாக குறிப்பிட்டு, சிறுவயதில் இருந்து இந்த மலைத்தொடரில் உற்பத்தியாகும் நீரை குடித்துத்தான் நான் வளர்ந்து இருக்கிறேன். இந்த அழிவுகளுக்கு என்ன முயற்சியை நான் என்ன செய்யப் போகிறேன்? என்று கேள்வி கேட்டதோடு மட்டுமில்லாமல், அதற்கான செயல்பாடுகளிலும் தன்னைப் பொருத்திக் கொண்டுள்ளார்.

பரத்பூர் சரணாலயத்தில் பறவை பார்த்த அனுபவம், ஐரோப்பாவில் பணியாற்றியபோது பறவைகள் பார்த்த அனுபவம் எல்லாம் வாசிக்க மிக சுவாரசியமானவை.
இவர் இதில் பதிவு செய்துள்ள பறவைகளின் எண்ணிக்கையோ கிட்டதட்ட 500க்கு மேல் இருக்கும். அதற்கான புகைப்படங்கள் மேலும் இந்த நூலுக்கு அழகு.
மேலும் இவர் ஒரு வாரம் காடுகளில் தங்கி வன விலங்குகள் கணக்கெடுப்புக்கு சென்றிருந்த அனுபவம் உண்மையில் சிலிர்க்க வைக்கும். அந்தக் கட்டுரையை வாசிக்க வாசிக்க புலியின் உறுமல் நமக்குள்ளும் எதிரொலிக்கும்.

இத்தனை விவரங்களோடு மட்டுமல்லாமல், காடழிப்பு பருவநிலை பிறழ்வு இவை அத்தனைக்கும் நாம் கார்ப்பரேட் கம்பெனிகளையும் மற்றவர்களையும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் தனிமனித ஒழுக்கம் நம்மிடம் இருக்கிறதா?

மக்கள் ஞெகிழி பைகளை வாங்கி தூக்கி எறிந்து நஞ்சாக்குகிறார்கள். சமூகத்தில் ஒவ்வொரு தனி மனிதரும் அவரால் இயன்ற தவறை செய்கிறார்கள். காடுகளுக்குள் சென்று மது அருந்திவிட்டு அங்கேயே எல்லா குப்பைகளையும் போட்டுவிட்டு வருபவர் நம்மில் ஒருவர் தானே? உச்ச நீதி மன்றம் பட்டாசு விதிக்க கட்டுப்பாடுகளை விதித்தால் அதை நகையாடி மீறுவதும் நம்மில் ஒருவர் தானே? மத வழிபாடு என்ற பெயரில் நீர் நிலைகளை மாசக்கும் செயல் யாரால் ? ஒலிப்பெருக்கிகள் வைத்து அமைதியை குலைக்கும் அமைப்புகளும் நம்மில் ஒருவரை சார்ந்தது தானே?
என்ற காத்திரமான கேள்விகளையும் நம் முன் வைக்கிறார்.

நாம் வளர்க்கும் ஒரு மரக்கன்று வளர்ந்து மரமான பிறகு அதில் வந்தமர்ந்து பழம் பறித்து உண்ணும் பறவையை பார்த்தல், எவ்வளவு மகிழ்ச்சியானது என்பதை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் மட்டும் தான் நாளைய நம்பிக்கை. அவர்களுக்கு இயற்கையின் மீதான காதலை தூண்ட இது உதவும்.

அதோடு மட்டுமல்லாமல் நமக்கு இரண்டு முக்கிய வேலைகள் இருக்கின்றன. மிச்சமிருக்கும் சூழலை சிறப்பாக பாதுகாக்க வேண்டும்.  பாதிக்கப்பட்ட சூழலை மேன்படுத்த வேண்டும். நாம் என்ன செய்ய போகிறோம்?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளை தேடினால் யாருக்கானது பூமி என்ற கேள்விக்கான விடையும் நமக்குள் இயல்பாகவே கிடைத்துவிடும்.
கண்டிப்பாக இந்த நூலை வாசிக்க உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன். ஏனென்றால் இந்த நூலின் ஒவ்வொரு காப்புரிமை தொகையும், பழனி மலைத் தொடரில் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு மரமாக பின் நாட்களில் வளர்ந்து நிற்கும்.

நூலின் தக்வல்கள் : 

நூல் : யாருக்கானது பூமி?
ஆசிரியர் : பா. சதீஸ் முத்து கோபால்
பதிப்பகம் :- காக்கை கூடு
விலை :-₹170.00

நூல் அறிமுகம் எழுதியவர் :

பூங்கொடி பாலமுருகன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *