நாம் ஒவ்வொரு நாளும் இரவு உணவினை முடித்தபிறகு இன்று திட்டமிட்டிருந்த வேலைகளில் எதையெல்லாம் செய்து முடித்தோம்; எவைகள் பாதியிலே நிறுத்தி வைத்திருக்கிறோம்!.. எவரை சந்தித்தோம்.. சந்திக்க திட்டமிட்டு முடியாமல் சென்றவர்கள் எவரெவர்.. திட்டமிட்டு இருந்ததில் அந்த வேலைகளை தொடங்கிட முடியாமல் போனதற்கு என்ன காரணம், அன்றைய நாள் பொழுதில் திட்டத்திற்குள் வராமலேயே செய்த வேலைகள் என்ன.. எதிர்பாராத சந்திப்புகள், மறக்க முடியாதவை எவை? என யோசித்து நாளைய பொழுதினை எப்படி திட்டமிடுவது என்கிற யோசனையிலேயே கண்ணயர்ந்து தூங்கி விடுவோம்.. இவைகள் எல்லாமுமே நமக்காகவோ, நம் குடும்பத்திற்காகவோ நம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இல்லை நம்முடைய வயதான காலத்தில் எந்தவித சங்கடமும் இல்லாமல் காலத்தை மேய்த்துக் கொண்டு இருப்பதற்காகவோ.. இப்படி ஏதோ ஒன்றுக்காக மட்டுமே நம்முடைய சிந்தனையும், அறிவும் மனமும் ஒரு எந்திரத்தனமான வாழ்க்கைக்குள் வரையறுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோமா..! நம்முடைய கனவிற்குள் நம்மை மட்டுமே எல்லா இடங்களிலும் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறோம்..! அது மட்டுமே மனித இருப்பிற்கான அழகாகவும் அடையாளமாகவும் வரைந்து வைத்துக் கொண்டிருக்கிறோம் கோடுகளாலும் கலர் கலர் எண்ணங்களாலும்.. வண்ணங்களாலும்.. வாசம் பொய்த்துப்போன காகித பூக்களும்..
கால் முளைத்த கனவுகள் அனைத்தும் ஒரே வட்டப்பாதையில் மனவெளி எங்கிலும், பறந்திட மறந்த சிறகற்ற பட்டாம் பூச்சிகளாய்.. நிமிடங்களனைத்திலும் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும், சந்திக்க திட்டமிட்டு இருக்கும் எவருமே ஒருவரை ஒருவர் சார்ந்தே, ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டே.!. அந்த ஒருவர் கூட நம்முடைய சமூகநிலை இருத்தலில் நமக்கான நபராகவோ, இல்லை நம்மைவிட மேல் நிலையில் நிற்கக் கூடியவராகவோ தேர்வு செய்து கொண்டு.. அதை நமக்கு கௌரவமாக்கி நாட்களை கடத்திக் கொண்டு இருக்கிறோம்.. ஆனால் என்றாவது ஒருநாள் பெருவெளிச் சமூகத்திற்குள் ஒரு பிடி கவளச் சோற்றுக்காகவும்.. அடுத்த வேளை சோறு வேண்டி கையேந்திக் கொண்டிருக்கும் வயதானவர்கள் கண் தெரியாதவர்கள், கை கால் முடம் ஆனவர்கள்.. தொழுநோயாளிகள் என ஒருச் சமூகம் நம் அருகிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதை, கையேந்தி கால்கள் நடக்கும் திசையில் நடந்து கொண்டிருப்பதை, அலைந்து கொண்டிருப்பதை நாம் நமது மனச் சிந்தனைக்குள் இப்படிப்பட்ட மக்களின் வாழ்வியலை, வாழும் ஒரு பொழுதை எப்படிக் கழிக்கிறார்கள்..
தன்னுடைய இருப்பை இரவில் நிறுத்திடபடும் துன்பங்களை.. நமக்கு இருக்கக்கூடிய எல்லாவிதமான ஆசைகளும் ஏக்கங்களும் அவர்களுக்கும் இருக்குமே.. இருந்திருக்குமே.. அவைகள் என்னவானது.? இவர்கள் யாருமே சுயம்புவாக தன்னை உருவாக்கிக் கொண்டவர்கள் கிடையாதே.. இப்படிப்பட்ட ஒரு சமூகத்தை பெரு வெளிக்குள் இழுத்துப் போட்டது எவர் என்பது குறித்தெல்லாம் இதுநாள்வரை பெரும்பான்மையாக இருக்கக்கூடிய நாம் என்றைக்குமே சிந்தித்து இருக்க மாட்டோம்.. ஒருவேளை இப்படிப்பட்டவர்களை சந்திக்கும் நேரமதில் அவர்கள் மீது அனுதாபம் கொண்டு, சட்டைப் பையில் இருக்கும் சில்லறைகளை துழாவிடச் சொல்லும் நம் விரல்கள்..
அம்மட்டுமே..! அதற்குமேல் நம்முடைய தேடுதல் இருக்காது அவர்கள் குறித்து.. ஆனால் இயற்கையின் படைப்புகள் அத்தனையும் நேசிக்க கூடியவர்கள், புரிந்து கொள்ளக் கூடியவர்கள் மனித மனங்களை அதன் ஆழத்தில் புதைந்திருக்கும் நினைவுகளை முளைவிட்டு வெடிக்கச் செய்து அத்தனையையும் வெளிக்கொணரும் திறமை பெற்றவர்கள் படைப்பாளிகளும் கலைஞர்களும் மட்டுமே.. அவர்களால் மட்டுமே எதிரில் இருப்பவர்களின் விழிகளுக்குள் ஊடுருவி நரம்புகளின் வழியாக இருதயத்திற்குள் புகுந்து இதயத்தின் ஓசை தன்னை அப்படியே பதிவு செய்ய முடியும்.. அப்படிப்பட்ட படைப்பாளிகளில் ஒருவராக நம்முடைய எழுத்தாளர் எம்.எம்.தீன். எவருமே கண்டுகொள்ளாத, பார்க்கத் தவறிய பிச்சைக்காரர்கள், யாசகர்கள் வாழ்க்கைக்குள் புகுந்து “யாசகம்” படைப்பினை தமிழ் சமூகத்திற்கு கொடுத்திருக்கிறார். யாசகம் நாவலினை
நல்லதொரு முறையில் வடிவமைத்து கொடுத்திருக்கிறார்கள் ஜீவா பதிப்பகத்தார்.. இருவருக்கும் அன்பும் வாழ்த்துக்களும்..

யாசகத்தை வாசிக்கும் ஒவ்வொருவரையும் பிச்சைக்காரர்களின் வாழ்வோடவே நம்மையும் அழைத்துக் கொண்டு போயிருக்கிறார் நாவலாசிரியர்.. நாவலின் பிரதான கதை மாந்தர்களாக முத்தாச்சி அவளின் மகன் கண் தெரியாத துரை குட்டி, தக்கரை பீர் முகமது, பெருவியாதியால் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வரும் சூசை மாணிக்கம், சோத்துப் பெட்டியாக மாறிப்போன நிறை குளத்தான்.. இவர்களின் அன்றாட வாழ்வியலை நம்மோடு பகிர்ந்து இருப்பார்.. இவர்களின் கடந்த கால வாழ்க்கையின் அனுபவங்கள் அதன் இச்சைகள், ஈர்ப்புகள், அலைக்கழிப்புகள்.. இப்படி பெரும் சோகங்கள் இவர்களின் நிகழ்கால வாழ்க்கைக்கான அடிப்படையாக இருந்திட்ட சம்பவங்களை நம்மிடையே பகிர்ந்து இருப்பார்.
பிச்சைக்கார வாழ்விற்கு தன்னை ஒப்புக்கொண்ட ஒருவனின் குடும்பம் எப்படி சிதைந்து சின்னாபின்னமாகி போனது என்பதை தக்கரை பீர் முகமது வழியாக அவனின் குடும்பம் அவன் மேல் வைத்திருந்த பாசத்தை.. குடும்பத்தை விட்டு தக்கரை ஓடிப் போனவுடன் ஏற்பட்ட சிதைவுகளை வலியோடு பகிர்ந்து இருப்பார் பதிவாக்கி இருப்பார் நாவலாசிரியர். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவன் தன் குடும்பத்தவர்களை தேடிச் சென்றபோது அவனுக்குள் ஏற்பட்ட துயரங்களை பதிவாக்கி வழிகள் அனைத்தையும் சுமக்கச் சொல்லி இருப்பார் நாவலாசிரியர்.. சோகத்தின் உச்சம் அது.
திடீரென கை கால் விழுந்துபோன தன் தாயின் வாழ்விற்காக கையேந்திய முத்தாச்சி, இந்த சமூகத்தின் ஆண்களால் நுகரப்பட்டு கண்ணிழந்த குழந்தையோடு துரத்தப்பட்டாள் என்பதை.. அவளின் சவால்களை.. நேர்கொண்ட தைரியத்தை..
இப்படி நாவலுக்குள் கதை மாந்தர்களாக உருவகப்படுத்தப்பட்ட அனைவருக்குமே ஒரு பின்னணியான அனுபவங்களை சொல்லியிருப்பார்.. நாவலுக்குள் இந்த கதைமாந்தர்களோடு பேசுவதற்காக படைக்கப்பட்டிருக்கும் அத்தனை இணை கதாபாத்திரங்களும் தங்களின் வாழ்வியலை அதன் சோகங்களை பகிர்ந்திடும் பொழுது வலி ஏதும் இல்லாமல் எதிர்கொண்ட, எதிர்ப்பற்ற ஏற்றுக்கொண்ட ஒருவித ஏமாற்றும் மிகுந்த சோகம் ததும்பிடும் நிகழ்கால வாழ்வினை பதிவாக்கி இருப்பார். கன்னக் கிழவியாக மாறிப் போனதை சொல்லிடும் பொண்ணம்மாவாக இருக்கட்டும், 2 அடி மட்டுமே வளர்ந்து இருக்கும் மாவேலாக இருக்கட்டும், மனைவியின் இறப்பிற்கு பின் அமைதி தேடி வந்த மிகாயில் ராயப்பனாக இருக்கட்டும்.. கைகால் விழுந்துகிடக்கும் கணவனுக்காக தர்காவின் அருகில் குடியிருக்கும் சுலேகாவாக இருக்கட்டும்.. இவர்கள் அத்தனை பேரும் பிச்சைக்காரர்களாக மாற்றிப் போட்ட குடும்பத்தின் சூழலையும் அதன் பின்னணியும் நாவலுக்குள் பதிவாக்கி இருக்கிறார் ஆசிரியர்.
இப்படிப்பட்டவர்களையும் ஒருங்கிணைத்து ஏமாற்றி காசு பார்க்கத் துடிக்கும் பாத்துமா போன்றவர்களையும் இந்த நாவலுக்குள் கொண்டு வந்து இருக்கிறார் ஆசிரியர். பணத்தின் மீது கொண்ட மற்றும்.. எளியவர்களை இல்லாதவர்களை அன்பு காட்ட ஏதுமற்றவர்களை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றி பிழைத்துக் கொள்ளலாம் என்கிற கேவலத்தை பாத்துமா பாத்திரம் பிரதிபலிக்கும்.
தங்களுக்கான பிடிமானம் ஏதுமற்று சிதைத்துப் போட்ட குடும்ப புறச்சூழல், அகச்சூழல் காரணமாக பிச்சைக்காரர்களாக, யாசகர்களாக மாறிப் போனவர்களுக்குள் வேற்றுமைகள் ஏதும் இல்லாது இருந்தாலும்கூட ஒற்றுமைக்கான கூறுகளை இழந்துவிட்டு ஒரு வேளை சோற்றுக்காக தனக்கு என்ற அடையாளத்தோடு நாட்களை நகர்த்தும் எண்ண ஓட்டங்களை, அவர்களின் நிலையில் இருந்து பதிவாக்கி இருப்பார். அதே நேரத்தில் இப்படிப்பட்ட பிச்சைக்காரர்களுக்கு ஒருவருக்கு ஒருவர் ஆற்றுப்படுத்தி வாழும் மெல்லிய கண்ணுக்குப் புலப்படாத அன்பு இழை ஒன்றினையும் அழகாக பதிவாக்கி இருப்பார். எல்லாவற்றையுமே ஒதுக்கித் தள்ளிவிட்டு வாழ்வின் கடைசி காலத்திற்கு தள்ளப்பட்ட மனித மனங்களுக்குள் ஏற்படுத்தக்கூடிய வாழ்வின் மீதான ஒரு பிடிமானத்தை, பிடித்ததை, முத்தாச்சி, கண் தெரியாத அவள் மகன், தக்கரை பீர் முகமது இவர்களின் அன்பு ததும்பும் வார்த்தைகளின் வழியாக நாவலுக்குள் பதிவாக்கி இருப்பார் ஆசிரியர்.
எல்லாவற்றையும் இழந்து, பிச்சைக்காரர்கள் நிலையில் இருந்து வாழ்வினை நகர்த்திக்கொண்டு வரக்கூடிய மனநிலையில் இருப்பவர்களுக்குள்ளும் அர்த்தம் பொதிந்த நோக்கங்கள் இருந்துகொண்டே அவர்களை உயிர் வலியோடு இழுத்துச் செல்லும் நிஜம் என்பதை செல்கிறது என்பதை நாவலுக்குள் அழகாக அதன் உள்ளார்ந்த அன்போடு கதைமாந்தர்களின் அனைவரின் கடந்தகால வாழ்வோடு பதிவாக்கி இருக்கிறார் ஆசிரியர்.
நாவலுக்குள் முத்தாச்சியாக படைக்கப்பட்ட பாத்திரம் தவிர்த்து அனைத்து பெண்களுமே.. வள்ளியாக, நிறைகுளத்தான் மனைவியாக, குரங்கு சடைச்சியாக, சூசையின் ஆத்தூர்காரியாக
படைக்கப்பட்டு இருப்பவர்கள் அனைவரும் ஏமாற்றுக் குணம் மிகுந்தவர்களாக.. சுயநலம் கொண்டவர்களாக படைத்திருப்பது ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் பெண்களின் பங்களிப்பை ஒரு சார்பில் இருந்து பார்ப்பதை போன்று தான் நான் உணர்ந்தேன் இந்த நாவலை வாசிக்கும் பொழுதில்..

நாவலின் கதையோடும். இடங்களாக தர்காக்களும், கந்தூரி திருவிழாக்களும்,
ஓடைகளும், பேருந்து நிலையங்களும், இரவு நேர ரயில்வே நிலையங்களும், சர்ச்சுகளும், தாமிரபரணி ஆற்று கரைகளும், படித்துறைகளும், குற்றால அருவியும், காவல் நிலையமும் நீதிமன்றங்களுமாக.. ஒவ்வொரு இடம் குறித்தும் அங்கே பிச்சைக்காரர்களின் இருப்பு குறித்தும் எளிய அழகியே மொழிநடையில் புறச் சூழலை வனப்பு மிக்கதாகவும் எழில் கொஞ்சுவதாகவும்
வெயில் காலத்தில் வெப்பம் தழுவிய புழுக்கம் கொண்ட காற்றினைத் தாங்கியதாகவும், ஈரம் இழந்த மணல் வெளியாய் நம் கண் முன்னே வார்த்தைகளின் அடுக்குகளில் அழகாக்கி இருப்பார் நாவலாசிரியர்.
“யாசகம்” தமிழ் நாவல் உலகில் எனக்குத் தெரிந்து இதுவரையில் பேசப்படாத எவரும் கவனிப்பாரற்று கிடக்கும் மக்களின் வாழ்வினை வெளிச்சம் போட்டுப் பேசி இருக்கிறது.. அவர்கள் குறித்தான ஒரு பார்வையினை வாசகனுக்குள் ஏற்படுத்தியிருக்கிறது.. இதுநாள் வரையிலும் அவர்கள் மேல் கொண்ட ஒரு அபிப்பிராயத்திலிருந்து lஇன்னுமொரு இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.. நமக்கும் அவர்களுக்கும் இடையேயான அனுதாப உறவிலிருந்து, நேசம் மிகுந்த ஒரு உணர்விற்கு நம்மை அவர்களின் பால் ஈர்த்துச் செல்லும். இது ஒன்றே இந்த நாவலின் ஆகப்பெரிய வெற்றியாக மனித lமனங்களுக்குள் ஏற்படுத்தி விடும் என்பதை நான் உணர்கிறேன். மனிதத்தைக் கொன்று புதைத்து அதன் மீதேறி சிரித்துக் கொண்டிருக்கும் கொடுமைக்கு எதிராக சின்னஞ் சிறிய புன்னகையை ஏந்தியிருக்கும் பேரன்பாக “யாசகம்”.
நாவலாசிரியர் எம்.எம். தீன் அவர்களுக்கு பாராட்டுக்களும் அன்புகளும்..
யாசகம்
எம் எம் தீன்
ஜீவா படைப்பகம்
கருப்பு அன்பரசன்.