யஹதா ககாமி : நூல் அறிமுகம்
யதார்த்தமான கதைகள் என்றாலும் கூட சில கதைகளில் மாயத்தன்மை கதைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கின்றன.
விரல்கள்
கதையில் எதிர் வீட்டு ராஜபாண்டி மனைவி ஸ்ரீமதியோடு நடேசனுக்குப் பழக்கம் ஏற்படுகிறது. நடேசன் இரண்டு கட்டை விரல்களில் அதிகளவில் எழுத்துருக்களை குறுஞ்செய்தியாக அனுப்புவதில் சாதனை நிகழ்த்தியுள்ளான்
திடீரென அவன் கைகளில் இருந்த கட்டைவிரல் காணாமல் போய் அவன் கால்களில் முளைத்திருந்ததைப் பார்த்து பயந்து போகிறார்கள் குடும்பத்தினர்.ஊரே இந்த அதிசயத்தைக் காண திரண்டு வருகிறது அவனோடு புகைப்படம் செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். மாலை செய்தித்தாளிலும் காலை செய்தித்தாளிலும் அவனைப் பற்றிய செய்திகள் வெளிவருகின்றன.
இரண்டு கட்டை விரல்களும் இல்லாமல் அவனால் எந்த வேலைகளையும் செய்ய முடியவில்லை. மிக முக்கியமாக ஸ்ரீமதிக்கு எந்தவிதமான குறுஞ்செய்தியும் அவனால் அனுப்ப முடியவில்லை. கதை ஒருவிதமான நக்கல் தன்மையோடு புனையப்பட்டுள்ளது.
வயதான காதுகள்
கதையில் திடீரென பெண்ணொருத்திக்கு ஒரு நாள் காலையிலிருந்து காது கேட்காமல் ஆகிவிடுகிறது. கணவனிடம், மகளிடமும் அதை மறைத்து சமாளிக்கலாம் என்று முதலில் முடிவு செய்கிறாள் ஆனால் நேரமாக நேரமாக காது கேட்காமல் இருப்பதை மறைப்பது ஒரு விபரீதமான முடிவு என்பதை உணர்ந்து கணவனிடம் தனக்கு காது கேட்கவில்லை என்று சொல்கிறாள்.
அவனும் அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பிக்கிறான். காதில் மருந்து விட்ட சிறிது நேரத்தில் அவளுக்குக் குழாயில் இருந்து தண்ணீர் சொட்டும் ஓசை கேட்கிறது. அவள் பதற்றத்தோடு அதை சரி செய்ய ஓடுகிறாள் என்பது போல கதை முடிவடைகிறது.
யஹதா ககாமி
கதையில் வினோதமான பொருள்களைப் பள்ளிக்குக் கொண்டு வருவது ராஜேஷ் குமாரின் பழக்கம். அவன் கொண்டு வந்த ரோஸ் நிற பேனாவில் எதை எழுதினாலும் அது ஒரு பூவாகவே எழுதப்படும். இப்படி அவன் கொண்டுவரும் ஒவ்வொரு பொருளுமே மாணவர்களை அசத்தும் . அவன் மீது பொறாமை கொள்ளச் செய்யும். இப்படி ஒரு நாள் அவன் கொண்டு வந்ததுதான் யஹதா ககாமி . அது ஒரு வகையான கல் அதை யார் பார்த்தாலும் அவர்கள் முகம் அதில் தெரியும்.
இது வகுப்பு முழுக்கத் தெரிந்து மாணவர்கள் ஒவ்வொருவரும் அந்த கல்லைப் பார்த்து அதிசயிக்கிறார்கள்.
என்ன ஒரு வினோதம் ! டீச்சர் முகம் மட்டும் அதில் தெரியவில்லை. டீச்சர் அழத் தொடங்கி விடுகிறார்.
ஏற்கனவே திருமணமான சில நாட்களிலேயே கணவன் அவளை விட்டு விட்டுச் சென்று விடுகிறான்.
டீச்சரின் திருமணத்தன்று ,ஒரு சாமியார் இதே போன்ற ஒரு கல்லைப் பரிசாக அவர்களுக்கு வழங்கினார். அந்தக் கல்லிலும் டீச்சர் முகம் மட்டும் தெரியவில்லை.
இக்கதையில் வகுப்பறை சூழல், மாணவர்களுக்கும் டீச்சருக்கும் ஆன உறவு குறித்து வருகிற இடங்கள் நேர்த்தியாக வந்திருக்கிறது.
பாஸ் என்கிற சின்னச்சாமி கதையில் சற்குணமும் விஜயனும் நண்பர்கள். அவர்களோடு எப்படியாவது சேர்ந்து பழகிவிட வேண்டும் என்று சின்னசாமிக்கு ஆசை. இதை நன்கு புரிந்து கொண்ட சற்குணம், நீங்க பணம் ரெடி பண்ணிட்டு வாங்க பாஸ் ஒருநாள் பார்ட்டி கொண்டாடி நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்துவிடலாமெனச் சொல்லி அவனை ஏமாற்ற நினைக்கிறான். சின்னச்சாமியும் தான் வேலை பார்க்கும் பட்டறையில் உள்ள பழைய இரும்பைப் பற்ற வைத்து உருளையாக்கி விற்று விடலாம் என எண்ணி ஒரு ஞாயிற்றுக்கிழமை கிளம்பி வருகிறான்.
தல்லாகுளத்தில் உள்ள புரோட்டா கடையில் அவர்கள் சந்தித்துக் கொள்வதாக முடிவு .
சற்குணம்,விஜயன், சின்னச்சாமி பேசிக் கொண்டிருக்கையில் புரோட்டா கடைக்கு எதிர்ப்புறம் ஒரு சைக்கிள் ரிக்ஷா வந்து நிற்கிறது.
அதிலிருந்து ஒரு பெண் இறங்குகிறாள் .அவருக்கென காத்துக் கொண்டிருந்தது போல கடைக்காரர் தலையிலிருந்த துண்டை இறக்கி கையில் வைத்தபடி ஓடி வந்து ஆர்டர் எடுத்து , அவள் கேட்டது அனைத்தையும் கொண்டு வந்து கொடுக்கிறார்.
சின்னச்சாமியை கவனித்த அந்தப் பெண் என்ன சின்னசாமி இந்த பக்கம்? உன் பொண்டாட்டி , நீ கூப்பிட்டா இப்போ வர்றாளா?! என்று கேட்கிறார். சற்குணமும் விஜயனும் வினோதமாக சின்னசாமியைப் பார்க்க; அந்தப் பெண் ஏரியா இன்ஸ்பெக்டர் என்றும் அதன் பின்னால் உள்ள கதையைச் சின்னச்சாமி சொல்கிறான்.
இரும்பை விற்றுப் பார்ட்டி கொண்டாடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த சற்குணமும் , விஜயனும் ஏமாந்து போகிறார்கள்.
சின்னச்சாமி கொண்டு வந்த இரும்பு உருளை லேடி இன்ஸ்பெக்டருக்கு பீர் பாட்டிலாக சென்று விடுகிறது .
இந்தக் கதையை வாசிக்கும் போது நமக்கு சிரிப்பு வருவதைத் தவிர்க்க முடியாது.
நகை பட்டறையைக் களமாகக் கொண்டு அற்புதமான கதைகளைத் தந்திருக்கிறார்.
ஒரு திருமண உறவு , நவீனக் கருவிகளின் தாக்கத்தில் மதிப்பிழந்த பட்டறைகள் குறித்து அவை பேசுகின்றன.
நுணுக்கமான வேலை செய்பவர்கள் பஜாரில் ரிப்பேர் வேலைகள் அல்லது எடுபிடியாக மாறுவது.
வங்கியில் பணிபுரியும் கீழ்நிலைப் பணியாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் உயர்பதவியினர் குறிப்பாக பெண்கள் செய்யும் வன்மங்களைச் சொல்கையில் அய்யோடா என்றிருக்கிறது.
அம்மாவைப் பாத்தீங்களா சார், கடைசிக் கடன் கதைகளில் முதியவர்கள் நோய்வாய்பட்டவர்களை இளைய தலைமுறையினர் நிர்க்கதியாக விடுகிற சூழலும் அதன் பின்னாலுள்ள உறவு சார்ந்த அழுத்தங்களை நேர்மையாக சொல்ல முடிகிறது..
அம்மாவைப் பாத்தீங்களா சார் கதை கிட்டத்தட்ட நிறைய நண்பர்களால் அழுத்தப்பட்ட போகன் சங்கரின் பதிவு போல இருக்கிறது.
சக்கை குழி
கதை கேரளத்துக்கு சென்று கூலி வேலை செய்து வாழ்வின் கூரைகளை உயர்த்த போகிற சகோதரர்களின் கதை. சக்கை குழி என்பது தொழிலாளிகளின் கழிப்பறை.பத்தடி ஆழத்தில் குழி தோண்டி பயன்படுத்தப்படுகின்ற அமைப்பு. பின்பு சேகரங்களை உரமாக பயன்படுத்த ஏற்பாடு. எப்படியாவது அக்கா நாத்தனாரைத் திருமணம் செய்ய நினைக்கும் கணேசனின் எண்ணத்தில் மண் விழுகிறது. கணேசன் குழிக்குள் விழுகிறான். ஒரே நள்ளிரவில் படித்து முடித்தேன்.
நல்ல மொழி. கதை சரசரவென வாசிக்க வைக்கிறது. குறைந்த பக்கங்களில் எழுதப்பட்ட கதைகள் எனினும் வாழ்வு குறித்து அவை எழுப்பும் கேள்விகள் அபாரம். புறவுலக தாக்கம் இல்லாமல் எதுவுமில்லை தான். மனிதர்களின் வாழ்வில் நெருங்கிய உறவுகளில் தான் தீர்க்க முடியாத பிரச்சனைகள் நிலவுகின்றன. அதில் நீங்கள் கத்திரி போட முடியாது. வேண்டுமென்றால் கதைகள் எழுதலாம். முடியாதென்றால் வாசிக்கலாம். ஒரு கதையில் அன்னதானத்திற்கு கொண்ட செல்லப்பட்ட சோற்று லாரி விபத்தில் சிக்கி, சாலையில் அம்பாரமாய் சோறு குவிந்திருக்கிறது. அதனைச் சரி செய்யும் வரை வாகனங்கள் ஓரங்கட்டி நிற்கின்றன. அப்படித்தான் இக்கதைகள் நம்மை ஓரங்கட்ட வைக்கின்றன.
வாழ்த்துகள் எஸ்.செந்தில் குமார்
நூலின் தகவல்கள் :
நூல் : யஹதா ககாமி (சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர் : எஸ் செந்தில்குமார்
பதிப்பகம் : எழுத்து பதிப்பகம்
பக்கங்கள் : 184 பக்கங்கள்
நூல் அறிமுகம் எழுதியவர் :
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.