ஆனந்தகுமார் அவர்கள் தொடர்ந்து சிறுவர் இலக்கியம் சார்ந்து நிறைய நூல்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்திய அவர் பற்றிய குறிப்பு பார்த்தபோது அவர் இதுவரை 25 புத்தகங்கள் சிறுவர் இலக்கிய நூலாக கொண்டு வந்திருக்கிறார் என்பது ஆச்சரியம் அளித்தது .அவ்வப்போது எனக்கு வந்து சேர்க்கின்ற நூல்கள் தான் அவை.
ஆனால் எண்ணிக்கை இப்போது கூடிவிட்டது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அந்த மகிழ்ச்சிக்கு காரணம் சிறுவர் இலக்கிய நூல்களின் பங்களிப்பில் அவருடைய முக்கியத்துவம் நன்கு உணர தலைப்பட்ட காலம் இது.
தமிழில் சிறுவர் இலக்கியம் பல சிகரங்களை எல்லாம் தொட்டு விட்டது. படைப்புகளில் எடுத்துக்கொள்ளும் மையமாகட்டும் அதை பல்வேறு கோணங்களில் அலசுவதாகட்டும் எல்லாம் சிறப்பாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழலில் ஆனந்தகுமார் எப்படி முக்கியத்துவம் பெறுகிறார் என்பதும் முக்கியம். அவர் தமிழக சூழலுக்கு வெளியே இருந்து கொண்டு, வெளிநாட்டில் இருந்து கொண்டு நேரத்தை இதற்கு ஒதுக்கிக் கொண்டு புத்தகங்களைக் கொண்டு வருகிறார் .
வயது சார்ந்து சிறுவர்களுக்கு நூல்கள் தமிழில் வெளியிடப்படுவது இல்லை. இது மேல்நாட்டு இலக்கிய வகைகளில் சிறுவர் இலக்கிய வகைகளில் முக்கியமாக இருக்கிறது. ஆகவே வயது சார்ந்து இவர்களுக்கான நூல் எது இந்த வயதிற்கான நூல் இது என்று அவர் வரையிட்டு ஒவ்வொரு புத்தகத்திலும் அதைக் குறிப்பிடுகிறார்.
பிறகு நமது சிறுவர்களுக்குப் புத்தகங்களில் பெரும்பாலும் ஓவியங்கள் இடம் பெறுவதைத் தவிர்க்கிறார்கள் நம்மவர்கள். காரணம் பக்க அளவு அதிகமாகின்றது.
செலவு அதிகமாக உள்ளது என்பதுதான் காரணம். அப்படி நல்ல ஓவியங்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை என்ற குறைபாடும் இருக்கிறது. அதுவும் குழந்தைகளுக்காக குழந்தைகளுடைய மனதினைக் கொண்டு ஓவியம் வரையும் ஓவியர்கள் குறைவாக இருக்கிறார்கள். இன்றைய ஓய்வில்லாத ஓவியர்கள் மத்தியில் குழந்தைகளுக்காக நல்ல ஓய்வு மனநிலையுடன் வரைகிற ஓவியர்களும் குறைவாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் துரை ஆனந்த குமாருடைய புத்தகங்களின் ஓவியங்கள் மிக முக்கியமான முறையில் பங்களிக்கின்றன.
பாதிப் பக்கங்களுக்கு மேல் அந்த வகையில் ஓவியங்கள் இடம் பெறுகின்றன. இந்த நூலில் சுமார் 120 பக்கங்களில் 60 பக்கங்களுக்கு மேலாக ஓவியங்கள் இடம் பெற்று இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டலாம். பிறகு இவர் தன்னுடைய நூலுக்காக எடுத்துக் கொள்ளும் புத்தக சைஸ்- அளவு என்பது முக்கியமாக இருக்கிறது குழந்தைகள் நன்கு உணர்ந்து படிக்கிற அளவில் பெரிய எழுத்துக்களும் பெரிய ஓவியங்களும் பெரியளவு புத்தக உருவங்களும் முக்கியமானவை.
இவை வெறும் தமிழ் சார்ந்த குழந்தைகள் மட்டும் படிப்பதற்கான நூலாக இல்லாமல் அவர் வாழ்கின்ற வெளிநாடுகளில் இருக்கின்ற வேற்று மொழிக் குழந்தைகளும் படிக்க உபாயமாக ஆங்கிலத்தில் அந்தப் பிரதிகள் அச்சிடப்படுகின்றன. ஆங்கிலம் தமிழ் என்று ஒரே பக்கத்தில் அவை அச்சிடப்படுவது இன்னும் விசேஷம். தமிழர்கள் அல்லாத மற்றக் குழந்தைகள் மத்தியில் தமிழைக் கொண்டு செல்லவும் தமிழ் சார்ந்த நூலைக் கொண்டு செல்லவும் இது ஒரு நல்ல உபாயமாக எடுத்துக் கொள்ளலாம்.
அப்படித்தான் பல வகைகளில் ஆனந்தகுமார் அவர்களுடைய சிறுவர் நூல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்த யாருப்பா நீங்க என்ற இந்த சிறார் நாவலில் கூட அவர் புதுமையான கற்பனைகளைக் கொண்டு வந்திருக்கிறார். ஓவியங்கள் கதாபாத்திரங்களாக மாறுவதும் அவை உரையாடுவதும் அவை செயல் புரிவதும் என்று புதுமை இருக்கிறது. இந்தப் புதுமை நாம் முன்பே கூட சில இடங்களில் கண்டிருக்கலாம்.
ஆனால் ஓவியங்கள் கதாபாத்திரங்கள் ஆக உருவாகி அவை நடத்தும் உரையாடல்களும் செயல்களும் இந்த நாவலில் உள்ளன அப்படித்தான் தங்களின் வரைந்த பிரதான ஓவியரை காண வேண்டும் என்று கோரிக்கை வைத்துக் கவனத்தில் கொண்டு வர ஒரு வங்கிக்குள் ஓவியங்களின் கதாபாத்திரங்கள் நுழைகிறார்கள். அந்த பிரதான ஓவியரைப் பார்க்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கோரிக்கையாக இருக்கிறது அதற்குக் காவல்துறையும் ஒத்துழைக்கிறது.
அவர்களின் தலைவராக இருந்த ஒரு பிரதான கதாபாத்திரத்தை கணினி குப்பை கூடைக்குள் போட்டு விட்டது. டஸ்ட் பின்னுக்குள்.. , அதை அந்த ஓவியர் தேடி எடுத்து மீட்டெடுத்துத் தருகிற போது அந்த ஓவிய கதாபாத்திரங்கள் மகிழ்ச்சி அடைகின்றன. இந்த மகிழ்ச்சி ஒவ்வொரு பக்கத்திலும் வெளிப்படுகிறது.
இந்தக் கதை சொல்லலில் ஒருவித மேஜிக்கல் ரியலிசப் பாணியைக் கொண்டு வந்து விடுகிறார். அதன் மூலமாக பேண்டஸி அம்சங்களும் மேஜிக்கல் அம்சங்களும் கலந்து இந்த நாவலின் வாசிப்பை இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது. இந்த சுவாரஸ்யத்தை இந்த நாவலில் மட்டுமல்ல அவர்களுடைய எல்லா நாவல்களிலும் கண்டு உணரலாம். குழந்தைகளுக்கான நாவல்களில் சுவாரஸ்யத்தை உண்டு பண்ணுவது என்பது அவர்களுக்கான சரியான தின்பண்டங்களை அவர்களிடம் கொடுத்து சுவைக்கச் சொல்லித் தருவது போலத்தான். அப்படித்தான் தொடர்ந்து சிறுவர் நூல்களை அவர் கொண்டு வந்திருக்கிறார்.
25 சிறார் நூல்கள் என்ற எண்ணிக்கையை அடைகிற துரை ஆனந்தகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்வோம்
சுப்ரபாரதிமணியன்
நூலின் பெயர் : யாருப்பா நீங்க (சிறார் நாவலை)
ஆசிரியர் : துரை ஆனந்தகுமார்
பதிப்பகம் : வம்சி வெளியீடு
விலை: ரூபாய் 200
பக்கங்கள் : பக்கம்120

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

