யசோதரை என்ற இந்த நூலில் வரலாற்றின் இடைவெளிகள் முழுமையாகவும், மிக முக்கியமாகவும் கற்பனை செய்யப்பட்டுள்ளன. வோல்காவின் பெண்ணியத்தைப் போற்றும்
இந்த நாவலில் நான் சந்தித்த யசோதரை, கூரிய சிந்தனை கொண்டவளாகவும், இரக்கவுணர்வு நிரம்பியவளாகவும், இருக்கிறாள். சமூக நீதிக்கான போராளியாகவும் இருக்கிறாள் யார் இந்த இளம்பெண்?
உலகைப் பற்றி யசோதரை கொண்டிருந்த கண்ணோட்டத்தை செதுக்கி வடிவமைத்தது எது. கபிலவஸ்து அருகில் உள்ள கோலியா என்ற கிராமத்தில் பிம்பானனர் என்ற ஜமீன்தாரின் மகளாக பிறந்தவள் யசோதரை. அவளது தாயார் விஷிஷ்டை. பிம்பானனர் வேளாண்மையை விட வேதங்கள் மீது ஆர்வம் கொண்டிருந்தார். அவர் சத்திரிய வகுப்பைச் சேர்ந்தவராக
இருந்ததால், வேள்விகள் போன்ற மதச் சடங்குகளை அடிக்கடி செய்தார். பிராமணப் பண்டிதர்களைகௌரவித்தார்.
தத்துவார்த்த கலந்துரையாடல்கள் நடத்துவதற்காக அவர்களைத் தன் வீட்டிற்கு வரவழைத்தார்.
அப்படிப்பட்ட கலந்துரையாடல்களின் போது யசோதரை தன் தந்தையின் பக்கத்தில் உட்கார்ந்து இருப்பார். விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த விஷயங்களை அவளால் அவ்வளவாகப்
புரிந்துகொள்ள முடியவில்லை, என்றாலும் கூட அன்றைய நாளின் பிரபல அறிஞர்களின் பேச்சை பொறுமையாக கேட்டுக் கொண்டாள். தன்னுள் கேட்டுக்கொண்டே இருந்தாள். மக்களின் கல்வியை, பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நான்கு வேதங்களை எதிர்ப்பதிலும், வர்ணாசிரமத்தை பின்பற்றி சாதியின் பேரால் மக்களை அடிமைப்படுத்தும் பிராமணியத்தை எதிர்ப்பதிலும், தன்னைப்போலவே புரிந்து கொண்டு செயலாற்றும் சித்தார்த்தன் மீதுதீராத காதல் கொள்கிறாள் யசோதரை.
ஆன்மீகத் தேடலில் ஆண்களுக்கு சமமாகப் பெண்களும் பங்கு கொள்வதற்கான வழியை உருவாக்க புத்தனுக்கு ஆலோசனை கூறுகிறாள். அவள் தன்னுடைய பதினாறாவது வயதில் சித்தார்த்தனை மணமுடித்த போதே தன்னுடைய தாம்பத்திய வாழ்க்கை பெரும் மாற்றத்திற்குள்ளாகும் என்பதை அறிந்திருந்தாளா? யசோதரை சித்தார்த்தன் மீது காதல் வயப்படுகிறார். இருவர் வீட்டிற்கும் தெரிந்து விடுகிறது. சித்தார்த்தனை மணமுடிக்க என் இதயபூர்வமான ஒப்புதலை கொடுக்க நான் தயாராக இருக்கிறேன் என்கிறாள்.
பின்னர் தந்தை பிம்பானனர் சத்ரியவம்சத்தில் திருமணம் செய்பவர்கள், வாள்சண்டை போட்டியில் வெற்றி பெற்றுத்தான் உன்னைக் கரம் பிடிக்க வேண்டும் என்கிறார்.
யசோதரை தனது தந்தையிடம் போட்டி வேண்டாம் என்று முறையிடுகிறாள், தன்னுடைய பிரச்னைகளில் மட்டுமல்ல, எந்த விதமான பிரச்சனைகளிலும் முடிவெடுக்க பெண்ணுக்கு உரிமையில்லை என்று கூறி வர்ணதர்மத்தை நிலை நிறுத்துகிறார் பிம்பானனர். தன்னை எதிர்த்து பேசியதால் மகளுக்கு பைத்தியம் பிடித்ததுவிட்டது என்றும் கூறுகிறார். யசோதரை தன் தந்தையிடம் இப்படி பேசுகிறாள், துணிச்சலான வீரன் ஒருவன் வாள்சண்டை போட்டியில் வெற்றிபெறப் போகின்ற “பரிசுப் பொருளாக” இருக்க எனக்கு விருப்பமில்லை என்கிறாள் யசோதரை.
போட்டியில் வெற்றி கொள்வதற்கு நான் ஒரு பரிசுப்பொருளோ, அல்லது ஒரு கோப்பையோ
அல்ல, நான் உங்கள் மகள் நீங்கள் மிகுந்த அன்போடும், பாசத்தோடும், வளர்த்த பெண் நான். நீங்கள் இந்த உண்மையை உதாசீனப்படுத்திவிட்டு உங்களுடைய சத்திரிய பாரம்பரியங்களை தூக்கிப்பிடித்தால் நான் இனி உங்கள் மகளாக இருக்க மாட்டேன் என்று யசோதரை கூறும்போது பிம்பானனர் துடித்தார். பெண்ணியம் காக்க தன் தந்தையிடம், பெரும் போர் செய்திருக்கிறாள்!பிராமணியத்தையும், அதன் கூறுகளையும், எதிர்த்து வாதம் செய்திருக்கிறாள். இருவருக்கும் திருமணம் நடந்தது. லௌகிக இன்பங்கள் மீதான ஈர்ப்பிலிருந்தும் சமூக உறவுகளிலிருந்தும், முற்றிலுமாக விடுபட்டார்கள். காதல் திருமணத்திற்குப்பின் சித்தார்த்தனுக்கும், யசோதரைக்கும் நடக்கும் உரையாடல்களும், அற்புதம்! மானிட துயரத்திற்கான ரகசியத்தை கண்டுபிடிப்பதற்கான பாதையில் சித்தார்த்தன் பயணிக்க உறுதுணையாக இருந்தாள் யசோதரை.
சித்தார்தனை, புத்தனாக்க விரும்புகிறாள் யசோதரை. சித்தார்த்தனிடம் யசோதரை, பெண்களாகிய நாங்கள் எங்களுடைய சொந்தக் கால்களில் நிற்பதற்கும், எங்களுடைய சொந்த மனங்களால் சிந்திப்பதற்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படக்கூடும். பெண்களைப் பற்றிய உரிமையை நீங்கள் கண்டுபிடித்து அதை இந்த உலகத்தில் வெளிப்படுத்தினால் மட்டுமே அதுவும் சாத்தியப்படும். அதாவது, அறிவுப் பாதைக்கான கதவை, நீங்கள் திறந்துவிட்டு, அங்கு பெண்கள் நுழைவதற்கு அனுமதிக்கும்போது மட்டுமே அது சாத்தியமாகும் என்கிறாள். சித்தார்த்தன் காலமுனியோடு நடத்தும் உரையாடல்கள் அற்புதம். முனிவர் பேசுகிறார் சித்தார்த்தா, அறிவு தூய்மையானது, உருவமற்றது, மனித உயிர்களுக்கு மட்டுமே தொடர்புடையது என்று எண்ணாதே!
அவ்வாறு நினைத்தால் மெய்ஞானத்தை தேடுகின்ற ஒருவனாக உன்னால் ஆக முடியாது, ஏனெனில், “அறிவின் நோக்கம் பயன்பாடல்ல” என்கிறார் முனிவர். முனிவரே, பிராமணர்களும், சத்திரியர்களும், தங்களை மென்மையானவர்கள் என்பதை நான் எப்போதும் ஏற்றுக்கொள்வதே இல்லை என்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள். சாஸ்திரங்களை தங்களுக்கு சாதகமாக
உருவாக்கிக் கொள்வதன் மூலம் மற்றவர்களிடமிருந்து தங்களை மேன்மை மிக்கவர்களாக காட்டிக்கொள்ள அவர்கள் முயற்சிக்கின்றனர். மக்கள் வேதங்களுக்குள்ளும் மனு தர்மங்களுக்குள்ளும், அதன் பாரம்பரியங்களுக்குள்ளும் சிறைப்பட்டுக் கிடக்கின்றனர். ஒவ்வொரு மனித குழுவும் தன்னை விட பலவீனமான வேறொரு குழுவின் மீது
தன்னுடைய மேன்மையை நிலைநாட்ட முயற்சி செய்கிறது.
அதன் மூலம் மனித குலத்தின் சமத்துவத்திற்கு குந்ததகம் விளைவிப்பதுபோல எனக்கு தோன்றுகிறது! நாம் தீவிரமான பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு ஒரு பலவீனமான கடவுளால் எப்படி நமக்கு உதவ முடியும் என்கிற சித்தார்த்தன், பயத்தையும் சந்தேகத்தையும் களைந்துவிட்டால் அன்பிற்கான உத்தரவாதம் கிடைத்துவிடுகிறது என்றான். சித்தார்த்த கௌதமன் மெய்ஞானம் குறித்த தேடலில் வீட்டைவிட்டு வெளியேறி, இறுதியில் ஞானோதயம் பெற்று புத்தராக மாறிய கதை பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற முறை கூறப்பட்டு வந்துள்ளது. கண் போல பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட சித்தார்த்தன், தன்னுடைய குடும்பத்தையும், சொத்துக்களையும் துறந்து வீட்டைவிட்டு வெளியேறுகிறான்.
ஒருசில நாட்களுக்கு முன்புதான் பிரசவித்திருந்த அவனுடைய இளம் மனைவியான யசோதரை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் சித்தார்த்தன் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, தாய் கௌதமி, தந்தை சுத்தோதனர், மனைவி யசோதரை, மற்றும் மகன் ராகுலன் என்ன செய்திருப்பார்கள்? இருவரும் சந்தித்திருந்தால் என்ன பேசியிருப்பார்கள் என்பதை இந்த நூல் நம்மோடு பேசுகிறது! புத்தரை துறவு வாழ்க்கை மேற்கொள்ள யசோதரை எதற்கு அனுமதித்தாள் என்ற கேள்வி நம்முள் எழுந்து கொண்டே இருக்கிறது, நூலை வாசித்து முடிக்கும்வரை அது ஒரு புதிர்தான். யசோதரையால் தன்னுடைய உறவிலிருந்து என்னை விடுவிக்க எப்படி முடிந்தது என்பதை சித்தார்த்தன் பரிசீலித்துப் பார்த்தான்.
திருமணம் ஆவதற்கு முன்பு நான் அவளுக்கு கொடுத்திருந்த அறிவுரையை அவள் வெறுமனே பின்பற்றிக் கொண்டிருந்தாளா! அல்லது தன்னைப் போலவே அவளும் இவ்வுலகைப் பற்றிய தத்துவார்த்த ஆய்வில் ஈடுபடுத்திக் கொண்டதால் தன்னை விடுவித்தாளா! என்று சித்தார்த்தன் மீண்டும் யோசித்தான்.காரணம், எதுவாக இருந்தாலும் யசோதரை மிக அரிய பெண்மணி, அவள் மிகவும் வித்தியாசமானவள், மிகவும் தனித்துவமானவள் என்று சித்தார்த்தன் உறுதியாக நம்பினான். ஒருநாள் இதைப்பற்றி யசோதரையிடம் சித்தார்த்தன் கேட்டான். அவள் கூறினாள். முக்தியை நாடுகின்ற அனைவரும் தங்களுடைய தனிப்பட்ட முக்தியை பற்றித்தான் யோசிப்பார்கள்.
ஆனால், நீங்களோ, மனித குலம் முழுதும் முக்தி பெறுவதைப் பற்றி யோசிக்கிறீர்கள், அவ்வாறு சிந்தித்த முதல் மனிதரும் நீங்கள் தான் என்கிறாள். ஆதலால் நீங்களே உங்களுடைய சொந்த ஆசிரியராகவும், சொந்த மாணவராகவும், சொந்த சீடராகவும், இருக்கிறீர்கள் என்றாள். புத்தனாவது சுலபம், ஆனால், புத்தனின் மனைவியாய் இருப்பது? புத்தனின் வாழ்க்கையை போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவதே இல்லை!
புத்தர் வீட்டை விட்டு வெளியேறியதும் தன் தலையை மழித்துக் கொண்டாள். தன் ஆடை அலங்கோலமாக்கிக் கொண்டாள். ஒற்றைப் பிள்ளையின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமலேயே பதின்ம வயதுவரை வளர்க்கப் போராடினாள். மாறாக, புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால் இந்த உலகம் ஒப்புக் கொண்டிருக்குமா…
எல்லாவற்றையும் துறந்து எந்தத் தொல்லையும் இல்லாமல், துறவியானான் புத்தன். எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, எல்லாத் துயரையும் அனுபவித்தபடி துறவியாய் வாழ்ந்தாள் யசோதரா. சித்தார்த்தன் புத்தனாக மாறியதற்குப் பின்னாலிருந்த உண்மையான யசோதரை வலிமையாக வெளிப்படுகிறாள்!
இப்போது சொல்லுங்கள் யார் துறவி!
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்.
யசோதரை
தெலுங்கில்: “வோல்கா”
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்.
மஞ்சுள் பப்ளீசிங் ஹவுஸ்.
ART. நாகராஜன்,
புத்தக வாசல், மதுரை.