விரல் பற்றி
வீதி சுற்றிய
நினைவுகளெல்லாம்
பனிபடர்ந்து உறைந்திருக்கின்றன.
தனிமை வெயிலடிக்கையில்
சொட்டுச்சொட்டாய்
உருகித் தொலைக்கின்றன.
இரவு வந்தால்
நினைவும் வருகிறது.
காதல் பெருவெளியில்
கானகம் வளர்த்ததும்
முத்தத்தின் ஈரத்தில்
பச்சையம் படர்ந்ததும்.
கிறங்கிப் பேசிய சொற்களெல்லாம்
உறங்கவிடாமல் ஊடுருவியது
இப்போது பொருட்டில்லை இல்லையா?
கழுத்தோரத்தில் உன் மூச்சின்
தணல் பட்டுப் பட்டு
விறகொன்று வீணையானது
நினைவில்லை இல்லையா?
ஆணாதிக்கக் கோடரியால்
ஆணிவேர் வரைப் பிளந்து போனாய்.
வெட்டுப்பட்ட மரம் தான்.
இன்னும் கொஞ்சம் ஈரமிருக்கிறது.
நெஞ்சினோரம் தூறல் விழுகிறது.
கோடரி எறிந்துவிட்டு வா.
வனம் வளர்ப்பது மிச்சமிருக்கிறது.
உன்னிசையில் மயங்கி
தரையிறங்கிய அசுணமா நான்.
யாழ் மட்டுமிருக்கிறது.
உனையழைக்க இனியிந்த
அசுணமா யாழிசைக்கும்.
எழுதியவர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

