கவிதை: செப்பனிடும் காலம் – யவனிகா ஸ்ரீ ராம்செப்பனிடும் காலம்
ஒரு போலிக்கவிஞன் பாடுகிறான்
அவனுக்குத் தொடரும் ஏழ்மையின் பல நூறு வருடங்களின் வார்த்தைகள் எப்போதும் துணை செய்கின்றன
கடும் மழைக்காலம் வரும் போதுமாறாத துயரங்களின் மொழி தனக்குச் சுலபமாகக் கிடைத்துவிடுவதாக அவன் துள்ளி நிற்பான் பாருங்கள்
என்ன ஒரு உற்சாகம்
குளிர்கால கம்பளியை எடுத்துவைத்து விட்டீர்களா போதுமான புகையிலை புரதம் கையிருப்பில் உள்ளதா
இம்முறை திரும்புவதில்லையெனில்
உங்கள் குழந்தைகளை கொத்துக்கடலைகளை மண்வெட்டியை அல்லது அந்த நதியின் மழைக்கால வெள்ளப்பெருக்கைப் புல்வெளிகளை ஒடுங்கைகளை தொலைவில் விட்டு வந்து விட்டீர்கள்
அல்லாமல் உங்களது தலைநகரில் பல்வேறு சாளரங்களைக்கொண்ட பிரபுகளின் பெரும் வட்ட கேளிக்கை அரங்கின் முன்பு அமர்ந்து கூச்சலிடத்துவங்கி விட்டீர்கள்
ஞானிகள் வசந்த காலம் வருவதற்க்கு முன்பு பேரிடர்கள் வரத்தான் செய்யும் என்பார்கள்
அதைவரவேற்க ஆடலையும் பாடலையும்தயார் செய்யும்படியும்சமாதானங்களை உண்டாக்கும்படியும்கலைஞர்களை நீண்டகால
நிலையாமையின் பொருட்டு அன்பின் பெயரால் உள்ளம் கசிந்து வேண்டுவார்கள்
ஒரு போலிக்கவிஞனுக்குப்போதாதா அக்கண்ணீர்
சிம்மாசனங்களை ஏசும் அவனின் புழுத்தவாய் வார்த்தைகள் அழுகி நாற்றமெடுக்கும் முன்
கடலில் மீன்கள் பெருத்துவிடுகின்றன
காதலில் அயராது வீழ்ந்து அனைத்தையும் ஏற்கும் உலகின் உறுதிப்பாடுகளை இங்கனமே காலம்
செப்பனிடமுடியும்
இத்தைகைய நதிகளின் பருவங்களுக்கேற்றதான நிலங்களுக்குப் புலம் பெயர்ந்த கடந்தகால மனித ப் பாடுகளை போலிக்கவிஞன் பாடுகிறான்
கடவுளாலும் வாக்குறுதிகளாலும் உண்டான வரலாற்றுப் பாத்திரம்
அவனுக்குப் பிச்சை எடுக்கவும் ஆகாது
மாறாக வேளாண்நிலங்களை நீங்கிய நாடோடிகளை தலைநகர் வரவேற்கவில்லை மாறாக
மிகச்சிறந்த தனி நீதிகளையும் பெரும் பொருளையும் உள்ளேவிழச்செய்யும்
மாயப்பெட்டிகளை தேய்த்தால் பூதம் வருகிற அவலுக்குப்பதிலாக கூடகோபுரங்களை வழங்குற உங்களுக்குப் பிடித்த வாக்குறுதிகளை அள்ளி வழங்கும் ஒரு திரு உரு அழகியல் வடிவத்தை
தயாரிக்கும் அரசியல் தொழிற்சாலைகளில் அது நைச்சியமாகக் கவனம் கொண்டுள்ளது
இவ்வளவு மழைக்குப்பின்னும்(குளிர்கிறது) செழிக்கும்விவசாய நம்பிக்கைகளை விட்டு ஏன் தலைநகரில் தெருவில் தீக்கண்களுடன் உங்கள் பிள்ளைகள் கல்வியில் கடவுளில் மேலும் உங்களின் திரும்புதிலின் பிரார்த்தனையில் எதிர்காலத்தில்மேலுமான இக்கொடுங்குளிர்காலத்தில் மெய்யொடுங்கி பசியில் இருக்கும் போது ஏன் அத்துவானத்தில் உறங்குகிறீர்கள்
எல்லாம் விற்றுப்போய் விட்டது
அத்தகைய அந்நியர்களின் வருகைக்குப்பின்
கொஞ்சம் கருக்கரிவாள்கள் பாம்பு குத்தி கடப்பாரைகள் பழந்தானியங்கள் வளர்ப்புப் பிராணிகள் நரிகளை விரட்டும் தோட்டாக்கள் இற்ற பருத்தித்துணிகள் புகையிலைச்சுருள்கள் போக நெடுங்கால பாவ புண்ணியங்கள் திருத்தலங்கள் தீர்த்தங்கள் பிண்டமோட்சங்கள் அதன் கதையாடல்கள் மிச்சமிருக்கின்றன
நிலத்தைத்தாயிடம் ஒப்படைத்து வளத்தை மாயைகளிடம் ஒப்படைத்த உலகத்தில் உங்கள்
தகர்க்கும் குரல்களால் தலைநகர் குலுங்கட்டும்.
–யவனிகா ஸ்ரீ ராம்