சந்தை நாவல் நூலிலிருந்து…
ஐவகை நிலங்களை தன் பகுதிகளாகக் கொண்டிருக்கும் தமிழர்கள் தங்கள் விளைபொருள்களை சுமந்து சென்று குடும்பத்தினரோடு அருகே உள்ள நிலப்பரப்பில் கூவி விற்று அதற்கு சமமான பண்டங்களை தனது தேவைக்கு ஏற்ப அங்குள்ள பகுதியில் பெற்றுக்கொண்டு பண்டமாற்று முறைகளில் பொருள்களை பரிமாறி ஒருவரை ஒருவர் சார்ந்த சமுதாய வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். குறிஞ்சி நிலப் பகுதியில் வாழும் மக்கள் மலையில் விளையும் பொருள்களை மருத நிலத்திற்குக் கொண்டு வந்து விற்பதும் நெய்தல் நிலத்தில் வாழும் மக்கள் உப்பு மீன் கருவாடு போன்றவற்றை மற்ற நிலப்பகுதி மக்களுக்கு விற்றுவிட்டு அங்கு விளைவதைப் பெற்றுக் கொள்வதும் சங்க இலக்கியப் பாடல்களின் மூலமாக நம்மால் அறிய முடிகிறது.
இதனை விளக்கும் அகநானூற்றுப் பாடல் (140) வரிகளான,
“பெருங்கடல் வேட்டத்துச்
சிறுகுடிப் பரதவர்
இருங்கழிச் செறுவின்
உழாஅது செய்த
வெண் கல் உப்பின்
கொள்ளை சாற்றி,
என்றூழ் விடர குன்றம்
போகும்
கதழ் கோல் உமணர் காதல்
மடமகள்
சில் கோல் எல் வளை
தெளிர்ப்ப வீசி,
“நெல்லின் நேரே வெண் கல் உப்பு” எனச்
சேரி விலைமாறு கூறலின் மனைய”
எனும் வரிகளின் பொருளாக,
“பரதவர் கடலில் வேட்டையாடுவர். உமணர் உப்பங்கழி வயல்களை உழாமலேயே உப்பு விளைவிப்பர். அதனை வேண்டுவோரை நாடி குன்றுகளைக் கடந்து செல்வர். உப்பு வண்டியை இழுத்துச் செல்லும் மாடுகளை கதழ் ஓசை செய்து ஓட்டும் உமணரின் காதல் மடமகள் அவள். அவளது வளையல்கள் ஒலி எழுப்ப, கை வீசிக்கொண்டு சேரியில் உப்பு விற்றாள். உப்பின் அளவுக்கு நெல் தர வேண்டும் என்றாள். நெல்லும் உப்பும் நிகர் என்று கூறினாள்.” என்பதிலிருந்து மருத நிலத்திற்கும் நெய்தல் நிலத்திற்கும் இடையே நடந்த பண்ட மாற்றத்தினை அறியலாம்.
நாளடைவில் நாகரீகத்தின் வளர்ச்சியாக ஊரின் ஒரு பகுதியில் வாரச் சந்தை உருவாகி அங்கு அனைத்துப் பொருள்களையும் நாணயங்களைக் கொண்டு விற்பனை செய்து மக்கள் திருவிழாக் கோலம் பூண்டனர். மலைவாழ் மக்களின் பிள்ளைகள் அவ்வூரின் சந்தையைத் தவிர அருகிலுள்ள பகுதிகளைக் கூட அறியாதவர்களாக இருப்பதை இன்றளவும் காண்கிறோம். அவ்வாறான அடிப்படை அலகாக மனித சமுதாயத்தின் வாழ்க்கைக்கு சந்தைகள் இருந்திருக்கின்றன. 70களில் தனுஷ்கோடியில் வீசிய பெரும் புயலுக்கு முன்பு ராமேஸ்வரத்திற்கும் இலங்கைத் தீவிற்கும் இடையே ஆங்காங்கே மணல் திட்டுகள் இருந்திருக்கின்றன. இந்திய நாட்டின் தென்முனையிலிருந்து மக்கள் பண்டங்களை சுமந்து சென்று கால்நடையாக கொழும்புப் பகுதியை அடைந்து கடல் கடந்த வியாபாரத்தினை எளியோர்கள் நடத்தி இருக்கிறார்கள். மணல் திட்டுகளில் நடந்து செல்பவர்கள் கடல் பகுதியைக் கடக்கும் பொழுது நீந்துவதற்கு உதவியாக இடுப்பைச் சுற்றி காய்ந்த தேங்காய்களை மடையோடு இறுகக் கட்டி மிதந்தவாறு கடந்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் விருத்தியடைந்த வியாபாரங்கள் அளவில் பெருகி இன்றைய நிலையில் பூமிப்பந்தின் பல்வேறுபட்ட இடங்களை இணைக்கின்ற செயலாக பண்டப் பரிமாற்றங்கள் நிகழ்ந்து உலகமே சுருங்கி விட்டது எனலாம்.
ஆசிரியர் யாழ். எஸ். ராகவன் அவர்களது “சந்தை நாவல்” (Santhai Novel) எனும் இந்த நூலில் சிறிய கிராமத்தில் நடக்கின்ற கதையாக வடிவம் கொண்டு மக்கள் கூடுகின்ற இடமாக சந்தை அமைந்து அங்கு பண்டங்கள் மட்டும் பரிமாறப்படாமல் அவற்றோடு மனிதநேயமும் வளர்ந்து பரஸ்பர ஒற்றுமையும் பிறந்து ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அக்கறை அதிகமாகி மனித சமூகம் என்பதற்கு மறு பெயராக சந்தை இருக்கிறது.
குழுவாக வாழும் மனித இனங்களுக்கு அடிப்படை வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான பொருள்கள் அத்தனையையும் சந்தைகள் குவித்து வைத்திருக்கின்றன. பூக்கும் பருவத்தில் மொட்டுகள் உருவாகி அவை அரும்பாக வளர்ந்து மலராக மலர்ந்து மணம் வீசி பிறகு வாடியவாறு இதழ்கள் சருகாகி உதிர்வதைப் போல, வளர்ச்சியடைந்த சந்தையானது காலப்போக்கில் அந்நிய காரணிகளால் அருகி அழிந்து எஞ்சிய சில சந்தைகள் மட்டும் அடையாளத்திற்கு இன்று நின்று கொண்டிருப்பதோடு நாவலை நிறைவு செய்திருக்கிறார்.
கதையின் ஓட்டத்தில் வாரச் சந்தைகள் அடையும் மாற்றங்களை படிப்படியாக நகர்த்திச் சென்று, பிற மாநிலப் பொருள்கள் உள்ளே நுழைந்து அகத்தில் விளைந்த பொருள்கள் அடித்துச் சென்றதையும் ஒன்றாக விளக்கியிருக்கிறார். இந்திய பெருநாட்டில் மொழிவாரி மாகாணங்களை உருவாக்கிய போது, அவை பிரிவினைக்கு வித்திட்டு விடக்கூடாது என்பதை உணர்ந்த அன்றைய தலைவர்கள் வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்தி வந்தார்கள். வங்காளக் கவிஞர் தாகூர் இயற்றிய கீதத்தில் ஒற்றுமையை உணர்ந்தோம். அப்பாடல் தேசிய கீதமாக ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் அமர்ந்து உதட்டின் வழியாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்திய நாட்டின் இடைப்பகுதியாக அமைந்துள்ள விந்திய சாத்பூரா மலையானது வடக்கையும் தெற்கையும் இணைக்கின்ற பகுதியாக இருக்க வேண்டிய இடத்தில் இரு வேறு துண்டுகளாக பிளவுபடும் இருப்பிடமாக எண்ண வைக்கிறது உள்ளூர் சந்தையின் மறைவின் துயரம்.
மண்ணில் விளைந்த பொருட்களை சந்தையில் குவித்து, கதையை அமைத்து, பாத்திரங்களைப் படைத்து, புதிய சம்பவங்களை அறிமுகப்படுத்தி, தான் சொல்ல வந்த கருத்தினை நகர்த்திச் செல்லும் பொழுது, ஆங்காங்கே காதலை மலரச் செய்து கவித்துவமாக பத்திகளை அமைத்து கச்சிதமாகக் கொண்டு சென்றிருக்கிறார் நாவலின் ஆசிரியர். மதிமகளின் ஒற்றைப் பார்வை அண்டை ஊரின் மகனை மதி மயக்கச் செய்து காதலில் விழ வைத்து உள்ளூர் வரை வர வைத்து விடுகிறது. இருவரது உடல் பேசுவது மட்டுமே உண்மை மொழி. விழிகளும் உதடுகளும் அசைவதைக் கொண்டு உள்ளுணர்வை உணர்ந்து மனதோடு மனம் பரிமாறிக் கொள்ளும் எண்ணங்கள் மட்டுமே உண்மையாக இருக்க முடியும். வார்த்தைகள் அவற்றை மறைக்க முயலும் போர்வையாக இருந்தும் முடியாமல் தோற்றுவிடுகிறது. உரியவனுக்கு உணர முடியாவிட்டாலும் உடன் இருப்பவர்கள் உற்ற நண்பராக இருந்தால் உண்மை உடைக்கப்பட்டு விடுகிறது. இவ்வாறான மனக்காட்சிகளை வாசிப்பவர்கள் உணரும் வண்ணம் தத்ரூபமான வசனங்களைக் கொண்டு காதல் காட்சிகளை வெளிப்படுத்தியிருக்கிறார். இளையோரின் சந்திப்பில் ஆங்காங்கே மலரும் காதலில் ஆழ் கடலில் மீன் பிடிப்பதாக அவ்வப்போது வடிவம் கொள்கிறது நாவல்.
“நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாமல் போயிருந்தால் நான் எப்பொழுதோ மரித்திருப்பேன்” என்பது காந்தியின் வாக்கு. அதற்கும் குறைவில்லாமல் ஆங்காங்கே நாம் சிந்திக்கும் இடங்களில் அவ்வப்போது சிரிக்கவும் வைக்கிறது இந்தப் புத்தகம். “ஏன் மாமா இப்படி ஒண்டிக்கட்டையா இருக்கீங்க?” என்ற கேள்விக்கு, “ஸ்ரீதேவியைத் தான் காதலித்தேன். ஹிந்திப் படம் நடிக்கப் போய்ட்டா.” எனும் பதில் வசனங்கள் எதார்த்தமாக அமைந்து நம்மை புன்னகைக்க வைக்கின்றன. இவ்வாறாக வெவ்வேறு கதாபாத்திரங்களுக்கு வேறுபட்ட குண நலன்களை அமைத்து சந்தையில் குவிந்திருக்கும் வெவ்வேறு பொருள்களைப் போலவே வகை வகையாக உருவகம் கொண்டு மக்களைக் கையாண்டு கதையை உருவாக்கியிருக்கிறார். ஒரு தலைமுறையினரை மையமாகக் கொண்டு நகர்ந்து வரும் கதையானது கிட்டத்தட்ட நூறு பக்கங்களைக் கடந்த பிறகு, அப்போது பிறக்கும் குழந்தையிடம் ஒப்படைக்கப்பட்டு, அங்கிருந்து வளர்ந்து வரும் அடுத்த தலைமுறையினரோடு வியாபாரமானது மாற்றங்களைச் சந்தித்து சரியும் சந்தையை விவரித்து நாவலை முடித்திருக்கிறார்.
நாவலில் இடம் பெற்றிருக்கும் சொற்களுக்கு இடையே இடம்பெற வேண்டிய கமா, புள்ளி, அரைப்புள்ளி, காற் புள்ளி, ஒற்றெழுத்துகள், போன்றவை விடுபட்டிருப்பதும், சொற்களுக்கு இடையே வரவேண்டிய இடைவெளிகள் இல்லாமலிருப்பதும், பிழையான சொற்கள் இடம் பெற்றிருப்பதும் வாசிப்பின் போது ஆங்காங்கே இடம்பெற்று மனதை நெருடுகின்றன. இவற்றைத் தவிர்த்திருக்கலாம்.
இலக்கணங்கள் பிறப்பதற்கு முன்பே இலக்கியங்கள் பிறந்திருக்க வேண்டும். நீதிகள் பிறப்பதற்கு முன்பே குற்றங்கள் பிறந்திருக்க வேண்டும். அவ்வாறாக சந்தையில் குற்றங்கள் பிறப்பதற்கு ஏதுவாக, அங்கு பணத்தை வட்டிக்கு விட்டு சம்பாதிப்பவர்கள், சாமியாராக வேஷம் போட்டு ஏய்த்துப் பிழைப்பவர்கள், வடநாட்டிலிருந்து பொருள்களைக் கொண்டு வந்து உணவுப் பண்டங்களை கலப்படம் செய்பவர்கள் என இவர்களைத் தொடர்ந்து குற்றங்களை சட்டப்படி நீதி விசாரணை செய்யும் வக்கீலின் குடியேற்றமும் நடந்து இவர்களிடம் பணம் புழங்குகிறது. வளர்ந்து வரும் நாகரிகத்தின் முடிவில் நேர்மையற்ற செயல்களே அவற்றை நாசமாக்கி அழிவை நோக்கி நகர்த்தி விடுகின்றன என்பதை சிறிய சந்தையைக் கொண்டு இந்த நாவலில் ஆசிரியர் மிக அற்புதமாக விளக்கியிருக்கிறார். பண்ட பரிமாற்றங்களின் போது எவர் வயிற்றிலும் அடிக்காமல் நேர்மையாக நடந்து எவ்வாறு வியாபாரத்தைப் பெருக்குவது என்பதையும் நம் இந்தியப் பண்பாட்டின் உள்ளீடாகக் கொண்டு பரஸ்பர ஒற்றுமையை மக்கள் மனதில் வளர்க்க வேண்டும்.
பிழைப்பிற்காக வேலை தேடி தமிழகத்திற்கு வருகின்ற வட இந்தியர்கள் இங்கு அமைதியையும் நல்ல வருமானத்தையும் ஈட்டி வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாடு அவர்களை அரவணைத்து உரிய மரியாதையையும் நல்ல வாழ்க்கை முறைகளையும் அமைத்துத் தருகிறது. இருப்பினும் அவர்கள் தற்பொழுது அளவில் அதிகரித்து வரும் நிலையில் இன்று தங்களது சுயநலத்தைக் காண்பிக்க ஆரம்பித்துள்ளனர். இங்கே சங்கம் அமைத்து, ‘தமிழர்களுக்கு வேலை தரக் கூடாது. எங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்று திருப்பூர் போன்ற நகரங்களில் போராட்டங்கள் நடத்தி வருவது கவலைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது.
தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியார் தென்னிந்தியாவில் பிறந்து வட இந்தியாவில் சில காலம் வளர்ந்தவர். பல மொழிகளைக் கற்று அவர் இயற்றிய பாடல்களால் தேசியக் கவியாக உயர்ந்தவர். பிரிவினையால் மீண்டும் அன்னியருக்கு அடிமை பட்டுவிடாமல் வடக்கையையும் இடக்கையையும் ஒன்றாகக் கோர்த்து ஒற்றுமையாக வாழ்ந்து பலம் பெறுவதையே நமது நோக்கமாகக் கொள்வோம். யாதும் ஊரே! யாவரும் கேளிர்! இப்பெருநாட்டில் இந்தியராக வாழ்வோம். அவ்வாறே மறைவோம். “சந்தை நாவல்” (Santhai Novel) சகலத்தையும் யோசிக்க வைக்கிறது. எஞ்சியிருக்கும் சந்தைகள் அதன் அடையாளமாக நிஜத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
நூலின் விவரம்:
நூலின் பெயர்: “சந்தை நாவல்” (Santhai Novel)
ஆசிரியர் : யாழ். எஸ். ராகவன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
முதல் பதிப்பு : டிசம்பர் 2022
விலை : ₹.240
பக்கங்கள் : 232
புத்தகம் வாங்க: Thamizhbooks.com
நூல் அறிமுகம் எழுதியவர்:
பிரேமா இரவிச்சந்திரன்
சென்னை.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.