*யாழினி* சிறுகதை – தங்கேஸ்

Yazhini Short Story By Writer Thanges (*யாழினி* சிறுகதை - தங்கேஸ்). Book Day is Branch of Bharathi Puthakalayamநித்யகல்யாணி பூப்போல பளிச்சென்று துலங்கி நின்றாள் யாழினி பாப்பா. தேன் ததும்பிய வண்ணத்துப்பூச்சியின் கனிந்த கொடுக்கைப் போல ஒரு பூரண மோனம் அவள் பிரசன்னம் முழுவதும் நிரம்பி வழிந்து கொண்டிருந்து. உதடுகளில் பன்னீர் தெளித்த கொழுந்து வெற்றிலை போன்ற புன்னகை  தளு தளும்பி நின்றது 

நான் மடியில் வைத்து கர்மசிரத்தையாக பார்த்துக் கொண்டிருந்த பைலை அலட்சியமாக தன் குட்டிக்கரங்களால் தட்டி விட்டு விட்டு அந்த இடத்தை  அவள் பிடித்துக் கொண்டாள்.

நான் அவளை கவனியாமல் இருப்பது போல் பைலை புரட்டிக் கொண்டிருந்தேன். அப்படி செய்யவில்லையென்றால் இந்த பைலில் புள்ளி விவரங்களை தாங்கியிருக்கும் காகிதங்களெல்லாம் இன்னும் சிறிது நேரத்தில் அவளின் பேப்பர் குருவிகளாக தரையெல்லாம் சிதறிக்கிடக்கும். 

நாளை காலை கஸ்டமர் மீட்டிங்கில் நான் ஒரு வித முன் தயாரிப்புமின்றி அவர்களின் கேள்விகளுக்கெல்லாம் தேமே தேமே என்று விழித்துக் கொண்டு அப்பாவியாக பிஎம்மை பார்க்க வேண்டும். எல்லாம் சென்ற பிறகு ஸ்டாப் ரெவ்யூ மீட்டிங்கில் ‘’ இது குளோபல் பேங்கா இல்லை புண்ணாக்கு குடோனா ‘’என்று அவர் தயவு தாட்சண்யம் பார்க்காமல் வறுத்தெடுப்பதை பல்லை கடித்துக்கொண்டு பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

இழுத்து மடியில் கிடத்திக் கொள்வேன் என்று நினைத்தவள் அவளை கவனியாது நான் பைலை தயாரித்துக் கொண்டிருப்பதை பார்தததும் நேரடியாகவே தாக்குதலை ஆரம்பித்து விட்டாள்

  ‘’பிங்கி பிங்கி பாங்கி  பாதர் ஒரு டாங்கி‘’ . 

குட்டி ராட்சசி இவளை இப்படியே  விட்டால் அத்தனை வேலைகளையும் கெடுத்து விடுவாள் என்று தெரியும். எப்படியாவது அவளிடமிருந்து இந்த பைலை காப்பாற்ற பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்குமே என்று  நினைத்தபடியே 

‘’ பாப்பா அப்பா பைல் பார்க்கணும்ல ‘’ என்று ஆரம்பித்தேன்.

‘’ பைலை பார்க்க வேண்டாம் பாப்பாவை பாரு ‘’ என்றாள்.

அப்போ பைலை என்ன பண்றது ?

‘’பைலை தூக்கி குப்பை  கூடையில போட்டுறலாம் ‘ 

எனக்கு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் ‘’ இல்லை இல்லை பாப்பாவை தூக்கி குப்பை கூடையில போட்டுறலாமே ‘’ என்றேன்.

 உடனே அவளுக்கு கோபம் வந்து விட்டது . எப்பொழுது கோபம் வந்தாலும் அவள் எதிர்வினை ஒரே மாதிரியாகவே தான் இருக்கும் என்று  தெரியும்.

தன் குளிர்ந்த தளிர் போன்ற விரல்களால் என் தலையில் சரமாரியாக குட்டினாள். அங்கே நாலைந்து செவ்வரளி கன்றுகள் முளைவிட ஆரம்பித்ன.. அடுத்ததாக கைகளை இலேசாக தேய்த்த படி விசை கொண்ட மட்டும் என் மீசையைப் பிடித்து இழுத்து முறுக்கினாள். என் தலை ஒரு கன்றுக்குட்டி போல அவள் விரல்களின் பின்னோடே சென்றது.

 ஆஆ வலிக்குதே என்று நான் கத்த வேண்டுமென்று எதிர்பார்த்தவள் நான் சும்மா சிரித்துக்கொண்டேயிருக்கவே  வேகமாக தனது  தாக்குதலை தொடர்ந்தாள்.

சட்டென்று ஞாபகம் வந்தவனாக ‘’அய்யோ பாப்பா விட்டுரு ….’’ அப்பாக்கு வலிக்குதே‘ என்று கெஞ்சினேன்.

 ஒரு கணத்தில் கோபம் தணிந்தவள் ‘’சரி பாப்பாவை தூக்கி மேல சுத்து ‘’என்றாள்

வழக்கமாக அவள் இது போல் அடம் பிடிக்கும் சமயங்களில் அவளை தலைக்கு மேலே தூக்கி சிறு கிறு கிறு  வண்ணம் சுற்றி இறக்கி விட்டு விட்டால், இலேசான  கிறு கிறுப்பில் நான்கைந்து முறை தள்ளாட்டம் போட்டு பொத்தென்று ஒரு பூக்குவியலைப்போல அப்டியே  தரையில் சாய்வாள். உடனே எழுந்திருக்கவும் மாட்டாள். அப்படியே மூச்சிரைத்தபடி தரையிலேயே சிறிது நேரம் கிடப்பாள். பிறகு தலையை உயர்த்தி நம்மைப்பார்த்து ஒரு மந்தகாசச் சிரிப்பு சிரிப்பாள் பாருங்கள்…

அவ்வளவுதான் கர்வமாய் அமர்ந்திருக்கும் அவள்  காலடியில் இந்த பிரபஞ்சம் குட்டி போட்ட பூனை போல குழைந்து குழைந்து சுழன்றாட ஆரம்பித்து விடும். இதை பார்த்ததும்  நமக்கு என்ன தோன்றும் தோன்றும் சொல்லுங்கள்? கை கூப்பி வணங்கத் தோன்றாதா?  வேறு என்ன செய்வீர்கள்?  தெய்வங்களெல்லாம்  குழந்தைகளிடம் தானே புடம் போட்டு அமர்ந்து கொண்டு  நம்மை அனுக்கிரகிக்கின்றன..

சரி அப்படியே தெய்வீகத்தில் தான் திளைத்து விடமுடிகிறதா ? பாழும் வயிறு என்று ஒன்றிருக்கிறது. பார்க்க வேண்டிய பைல்கள் மலை மலையாக குவிந்திருக்கின்றன. வார விற்பனை அறிக்கை வேறு என்னை தயார் செய் என்று இரு கை நீட்டி கூப்பிக் கொண்டிருக்கிருக்கிறது. வண்டி வண்டியாய் தயார் செய்யப்பட்ட புளுகு மூட்டைகளை அவிழ்து  கூட்டத்தில் கொட்ட வேண்டும்.

‘’பாரு பாப்பா அப்பாக்கு வேலை இருக்கு‘’  என்று பேச்சை மாற்றினேன்.

பாப்பா அதையெல்லாம் காதிலேயே  வாங்காமல் ‘’ பாப்பாக்கு புய்க்கும் என்றாள் ‘’

என்ன பிடிக்கும் ?

‘’அப்பாவை புய்க்கும் ‘’

அம்மாவை ?

‘’அம்மாவை புய்க்காது ‘’

ஏய்…… பாப்பா குட்டி பொய்தானே ? என்று அவள் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளியபடியே கேட்டேன். அம்மா இல்லாத நேரங்களில் அவள் அப்படித்தான் சொல்வாள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

வாய் கொள்ளா புன்னகையுடன் ‘’ பாப்பாக்கு வலிக்கல்லே ‘’ என்று  சொல்லி விட்டு மறுபடியும் அதையே ராகமாவே பாடினாள். நான் அவளை எடுத்து முத்தத்தால் மொத்திக்கொண்டேயிருந்தேன். 

குட்டி ராட்சசி எப்போழுதுமே இப்படித்தான் பேசுவாள் .

அம்மாவிடம் அப்பாவையும் அப்பாவிடம் அம்மாவையும் ‘’புய்க்காது‘’ என்று சொல்லி கன்னத்தை பிடித்து முத்தங்கள் அத்தனையையும் மொத்தமாக கொள்ளை கொண்டு போய்விடுவாள்.

அவள் புராணங்களை சொல்ல சொன்னால் இன்றெல்லாம் சொல்லி மாளாது.

ஒரு நாள் இருவருமே ஒன்றாக உட்கார்ந்து ‘’பாப்பாக்கு யாரைப் பிடிக்கும்? ‘’ ம் சொல்லு‘ என்று கேட்டோம். இருவரையும் மாறி மாறிப்பார்த்தவள்  என்ன நினைத்தாளோ ஆளுக்கொரு முத்தத்தை பரிசாக கொடுத்து விட்டு சிட்டாகப்பறந்து போய் விட்டாள். அடுத்து  எங்கே போய் அவளைப் பிடிப்பது ?

இப்படித்தான் ஒரு முறை அவள் அம்மாவின் கழுத்தை கட்டிக்கொண்டு ‘’வேணுமா உனக்கு வேணுமா ?’’ என்று செல்லமாக கன்னத்தை கொஞ்சியபடி கேட்டாள்.

என்ன வேணுமான்னு கேட்கிற குட்டிம்மா ? என்றாள் இவள்

‘’ம்ம்  உதை வேணுமான்னு கேட்கிறேன் ‘’.  என்று சொல்லியபடி குட்டிம்மா தன் குட்டிக்கையால் அம்மாவின் கன்னத்தில் ஒரு தட்டு தட்டினாள் பிறகு இன்னொன்று பிறகு மட மடவென்று ஒன்றிரண்டு …..

கொஞ்சம் அசடு வழிந்தபடியே இவள் ‘’ யாருடி உனக்கு இதெல்லாம் சொல்லி கொடுக்கிறது ?’’ என்று கேட்டாள்.

‘’ பாப்பாக்கே எல்லாம் தெரியும் ‘’  என்று இரு கைகளையும் அகலமாக விரித்துச் சொன்னவள், நேராக என்னிடம் வந்து  ‘உனக்கும் ஒண்ணு குடுக்கறேன் ‘’ என்றபடி நான் சற்றும் எதிர்பாராத நேரத்தில் என் இருகாதுகளையும் பிடித்தபடி நெற்றியோடு நெற்றி சேர்த்து ஒரு முட்டு முட்டினாள். அய்யோ அவளுக்கு வலிக்கப்போகிறதே நான் கவலைப்படும் முன்பாகவே சிட்டாகப் பறந்திருந்தாள்.

Father and Daughter - Free Image by Tharun Teja Reddy on PixaHive.com

சற்று நேரத்திலெல்லாம் பாப்பா என் மடியில் ஹாயாகப் படுத்து புரண்டு கொண்டு ஒரு தும்பியின் ரீங்காரம் போல ஏதோ ஒரு பாடலை முணு முணுத்தபடியே இருந்தாள். அலுவலகப் பைல். சவலைப்பிள்ளையாக கேட்பாரற்று அருகில் கிடந்தது.

இவளை மடியில் கிடத்திக் கொண்டால் போதும் யாருக்கும் அன்பின் பித்து தலைக்கு ஏறி அதை  கிறுகிறுப்பாக்கி விடும்.

இலேசாக கண்ணை கட்டிக் கொண்டு வந்தது. மயக்கம் போல ஒரு தெளிவற்ற நிலையில் எல்லாம் மங்கலாகத் தெரிவது போல் இருந்தது.

புதுவெள்ளச் சுழலில் சிக்கிச் சுழலும் இளஞ்சருகாக  கர கர வென்று மனது சுழன்று அமிழ்ந்து கொண்டிருந்தது.

நாட்கள் பைலைப் போல படபடவென்று காற்றில் அடித்துக் கொள்கின்றன. – காலம் அப்படியே  சுற்று சுழன்று கண நேரத்தில் சுருண்டு விட்டது. என் நெற்றிப் பொட்டில் சுருண்டிருந்த காலத்தை பாப்பா தன் சிறுநகத்தால் கீறி கீறிப் பார்த்தாள். பிறகு கைகள் ஓய்ந்து மடியில் அப்படியே கிடந்தாள். 

தூக்கத்திற்கான சமிஞ்ஞைகள் அவள் முகத்தில் தென்பட ஆரம்பித்தன.

சிறிது நேரத்திலேயே சிறகடிக்க மனமில்லாத குறு குறு வண்ணத்துப்பூச்சி போல  இமைகள் படபடவென அடித்துக் கொண்டன. தூக்கம் வசீகரமிக்க ஒரு குட்டி ரோஜா மொக்கைப்போல மாறி அவள் இமைகளை மிக மென்மையாக நீவி விட்டது.

ஏ தூக்க​மென்னும் நித்திய தேவதையே  ! உன்னை இந்தக் குட்டி தேவி ஆசீர்வதித்து விட்டாள். ‘’’ போ உன் சாபம் இன்றோடு தீர்ந்து விட்டது.’’  இனி நீ மீட்சிமை அடைவாய். ‘’

நான் ஜென்ம சாபல்யம் பெற வேண்டும். அவள் உதடுகளில் ஒரு மாசற்ற புன்னகை அரும்பி நிற்கிறது –  என் கண்களின் மீது மயிலிறகு போன்ற ஒற்றை விரலால் நீவிவிடுகிறாள். 

விழிகளுக்குள் அண்டங்கள் பிரபஞ்சங்கள் சுழல ஆரம்பிக்கின்றன. இருளின் தரிசனம் , ஒளியின் விஸ்வ ரூபம் , காலநதியின் பொங்கிப் பிரவகிக்கும் பிரவாகம்  கோடி கோடி மனித உயிர்கள் அதன் மீது அரசிலை போல மிதந்து போகும் ஜாலங்கள் கண்ணுக்குள் காட்சிகளாக விரிகின்றன. அதில் நானும் என் மனைவியும் இலைகளாக மிதந்து போகிறோம். எத்தனை காலம் பயணம் செய்தோமோ ? இனி எத்தனை காலம் பயணிக்க வேண்டுமோ ?

அம்மை எங்களை புனிதமான விரல்களால் தொட்டு ஆசீர்வதிக்கிறாள். புல் பூண்டுகள், காடு, மலைகள், ஈசல்கள், மலர்கள், விலங்குள் ஒவ்வொன்றும் அவளின் திருவிரல் தீண்டலுக்கு கை கூப்பி தலை சாய்த்து தெண்டலிடுகின்றன. கண்களில் பரவசக் கண்ணீர் அருவியாய் சொரிகின்றது. நதியாய் நெக்குருகி பயணம் தொடர்கிறது. முடிவற்ற பயணம். இது 

சகலமும் இங்கே பெண்ணால் தான் நடப்பத புரிகிறது.. வாழ்க்கை என்னும் பயணத்தை ஆரம்பித்து வைப்பதும் அதை  நடத்தி முடித்து வைப்பதும் அம்மையாயிருக்கிறாள். சிறு குழந்தை அவள் .அவள் கண்ணசைவிற்கு பிரபஞ்சம் குட்டி நாய் குட்டியாக சுழன்று சுழன்று பின்னால் ஓடிவருகிறது.

இப்பொழுது மிகப் பெரிய ஒளிக்கடலுக்குள் வந்து சேர்கிறோம். ஒளிக்கடலின் நடுவிலிருந்து ஜோதியாக தோன்றிய தேவி தன் சுடர் வீசும் கரங்களால் கருணை கூர்ந்து எங்களை எடுத்து முத்தமிடுகிறாள். எங்கள் ஜென்ம சாபல்யம் தீர்கிறது. உடலும் மனமும் நெக்குருகி கரைந்து நெகிழ்ந்து உயிர் உருகி சர்க்கரைப் பாகாக பரவி …அப்பப்பா அந்தப்  பரவசத்தை வார்த்தைகளால் தான் சுமக்க முடியுமா ?

மடியில் தவழ்ந்த குழந்தை அனாயாசமாக எங்களை கைகளில் ஏந்திக் கொள்கிறது. 

‘’ போதும்  தாயே ! எங்கள் அன்பு மகளே இந்தக்கடலில் எங்களை தத்தளிக்க விடாதே. ஒளி சிந்தும் உன் அண்மையிலேயே எங்களை எப்போதும் வைத்துக் கொள். அண்ட சராசரங்கள் அசைந்தாட தொங்கிக் கொண்டிருக்கும் உன் பொன்குழல் முடிக்கற்றையில் சிறு துகள்களாக்கி எங்களை ஒட்டிக்கொண்டாயானால் கூட அதுவே போதும்  பிறவிப் பெருங்கடலைக் கடந்து விடுவோம்.’’’

யாதேவீ ஸர்வபூதேஷு ஸ்ரத்தா

ரூபேண
ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமோ நம:

தேவி உன்னை வணங்குகிறோம். இந்தப் பிரபஞ்சம் பெண் வடிவமுடையது. பெண் தன்மை கொண்டது. ஜனனத்தின்  தீராத கருப்பையாக இது இருக்கிறது. உன் புன்னகையே அதற்கு சான்று

அவள் புன்னகை முடிவற்றதாக நீண்டு கொண்டே போகிறது- பொங்கிப் பிரவகிக்கும் பொன்னொளியை தரிசிக்க இயலாமல் கண்களை அழுத்தமாக மூடிக்கொள்ளிறேன். பொன்னொளிர் திரை ஒன்று இமைகளைப் போர்த்துகிறது. 

தேவியின் தோற்றம் மெல்ல சுடரோடு ஒன்றி காணாமல் போய்கொண்டேயிருக்கிறது.

இனி எத்தனை காலங்கள் காத்திருக்க வேண்டுமோ தேவியின் கனிவான இன்னொரு தரிசனத்திற்கு ?

 ‘’பாப்பா பாப்பா எங்களை விட்டுப் போயிறாத.. தேவி யாழும்மா எங்க போயிட்ட நீ ? அரற்றிக் கொண்டேயிருக்கிறேன்.

‘’தாத்தா தாத்தா தூங்கிட்டியா ? ‘’  சிறு வீணை அதிர்வது போல காதருகில் அந்த இனிய குரல் கேட்கின்றது.

 ‘’யாழும்மா யாழும்மா அப்பா பைலை கிழிச்சிராதட கண்ணா‘ 

‘’அது என்ன பைல் தாத்தா  ? ‘’ 

‘’’ யாழினி ‘’ ’’ யாழினி ’ எங்களை விட்டுட்டு போயிராத குட்டிம்மா ‘’

தன் பிஞ்சு விரல்களால் என் கன்னத்தை வருடியபடியே

‘’தாத்தா நான்  குட்டி யாழினி விழிச்சு பாரு உன் பக்கத்துலயே தான் இருக்கிறேன்‘’  என்றாள் குட்டி பாப்பா

நான் கண்களை திறக்காமலே. ‘’ குட்டி யாழினி இல்ல யாதேவி ‘’ என்றேன் 

‘’அம்மா அம்மா எழுப்பி  எழுப்பி பார்க்குறேன்  தாத்தா ஏதோ உளர்றாருமா ‘’ என்றாள்

‘’விடும்மா அவருக்கு இன்னும் விழிப்பு வரல போல ‘’ என்று  பெரிய யாழினி குட்டி பாப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது..

**********

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.