திரு.ஏற்காடு இளங்கோ அவர்கள் தமிழ் இலக்கியம் மற்றும் அறிவியல் சார்ந்த புத்தகம் எழுதும் எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் ஆவார். அவரது படைப்புகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன . பாம்பு போபியா என்ற அவரது சமீபத்திய புத்தகத்தைப் பற்றி முழுவதுமாக வாசிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
145 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை ஒரு மணி நேரத்தில் படித்து முடித்து விட்டேன், ஏனென்றால் அந்த அளவுக்கு சுவை இந்த புத்தகத்தில் எனக்கு கிடைத்தது. பொதுவாக மக்களிடம் பாம்பு பற்றிய மிக தவறான தகவல்களும் அச்சமும், மூடநம்பிக்கையும் ஆழ் மனதில் வேரூன்றி உள்ளது. இந்தப் புத்தகம் அந்த அச்சத்தையும் மூடநம்பிக்கையும் பாம்பைப் பற்றிய தவறான கருத்துகளையும் உடைக்கிறது. 145 பக்கங்களை கொண்ட இந்த புத்தகம் 45 தலைப்புகளில் பாம்பு பற்றிய செய்திகளை நமக்கு வாரி வழங்குகிறது. பதிப்பகத்தாரின் பதிப்பு உரையுடன் தொடங்கும் பாம்பு போபியா என்ற இந்த புத்தகம், உலகப் பாம்பு தினம் என்ற தலைப்பில் முடிகிறது. ஏற்காடு இளங்கோ என்று அனைவராலும் அன்புடன் போற்றப்படும் திருமிகு இளங்கோ அவர்களை தொடர்ச்சியாக வாசிக்கும் பழக்கம் கொண்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு தெரிந்த ஆளுமை ஆவார்.
இவர் ஆளுமை என்பதற்கு மிக சரியான உதாரணம் இந்த புத்தகத்தை தன்னுடைய மனைவிக்கு நன்றியுடன் ஆரம்பிக்கிறார்.இப்படி நன்றியுடன் உள்ளே நுழைகிறாரே என்று நானும் இந்த புத்தகத்தை வாசிக்க தொடங்கினேன், பாம்பு போபியா என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து, பாம்புகளின் வகைகள் என்ன, பாம்புகளைப் பற்றிய கட்டுக் கதைகள் என்ன, பாம்பு பால் குடிக்காது, பாம்புகளுக்கு நினைவில் வைத்துக் கொண்டு ஒருவரை தேடி சென்று பழிவாங்கும் எண்ணம் கிடையாது, ஏனென்றால் நினைவில் வைத்துக்கொள்ள கூடிய அளவுக்கு அதனுடைய நரம்பு செல்களின் கட்டமைப்பு பரிணாம வளர்ச்சியை அடையவில்லை என்பதையும் விஞ்ஞானபூர்வமாக சுட்டிக் காட்டுகிறார். கிளுகிளுப்பை பாம்பு, சேர்வராயன் மலையில் இருக்கும் பிரத்தியேகமான கேடய பாம்பு, போன்ற பல அறியாத செய்திகளை நமக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நம்முடன் கலந்து உரையாடுகிறார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் பாம்பு ஆக்ரோஷமான குணம் கொண்ட ஒரு விலங்கு இனம் இல்லை அது பயந்த சுபாவம் உடையது, மனிதர்களைக் கண்டால் அது பயந்து ஓடும், தன்னை தற்காத்துக் கொள்ளவே அது கடிக்கிறது என்பதையும் இங்கு நமக்கு புலப்படுத்துகிறார். பாம்புக்கு புறக்காதுகள் இல்லை என்பதை விஞ்ஞான பூர்வமாக நமக்குப் புரிய வைக்கிறார்.
அதற்கு பாம்பை அதனுடைய கண்களைக் கட்டி விட்டு பரிசோதித்த பொழுது அது மகுடியை கண்டு ஆடவில்லை, ஆனால் தரையில் தட்டி ஒளியை எழுப்பும் பொழுது அந்த ஒளியின் அதிர்வு அலையைக் கேட்டு பாம்பு படம் எடுத்து ஆடுவதை விஞ்ஞானி நிரூபித்தார் என்பதை சொல்லும் பொழுது நமக்கு விஞ்ஞான பூர்வமாக நம்ப முடிகிறது.
ஒருவரை பாம்பு கடித்து விட்டால் சினிமாவில் வருவது போல ஒரு பாட்டு பாடினால் அந்த பாம்பு திரும்பவும் வந்து கடித்த நபரிடம் உள்ள விஷத்தை எடுப்பது போல் காட்சி அமைப்புகளை எல்லாம் நம்ப கூடாது என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அவ்வாறு செய்வதற்கு பாம்பிடம் அந்த உடலமைப்பும் அந்த விஷத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும் திறனும் கிடையாது என்பதை மிகச் சரியாக வாசிப்பாளர்களுக்கு புரியும்படி எளிமையாக எழுதி இருக்கிறார்.
இப்படி எளிமையாக எழுதுவதின் மூலம் தான் ஒரு மக்களுக்கான எழுத்தாளன் மக்களுக்கான கலைஞன் என்பதை அவர் மீண்டும் மீண்டும் 116 புத்தகங்கள் எழுதி வெளியிட்ட பின்னும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு சிறந்த எழுத்தாளரை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தன்னகத்தே கொண்டுள்ளது என்று நினைக்கும் பொழுது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில தலைவர் என்ற முறையில் நான் பெருமை கொள்கிறேன். ஒரு முற்போக்கு வாதியாக விஞ்ஞானத்தை நம்பும் ஒரு இந்திய குடிமகனாக, எளிமையாக எழுதக்கூடிய திறன் வாய்ந்த திறமையாளராக, மக்களுக்கான எழுத்தாளராக மிளிர்ந்து கொண்டிருக்கும் இளங்கோ அவர்களுக்கு என்னுடைய வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக இந்த புத்தகத்தை படித்த எந்த நபரும் பாம்பை கண்டு பயப்படாமல் அதை அடிக்கவோ அதை துன்புறுத்தவோ மாட்டார்கள் மாறாக, அதை நேசிப்பார்கள் இந்த புத்தகத்தை படித்த ஒவ்வொரு நபரும் இயற்கை நேசிப்பவராக மாறுவார் என்பது மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மையாகும்.
இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது இன்னொரு தெளிவான உண்மையும் நமக்கு புலப்படுகிறது அதாவது இந்த இயற்கையில் பாம்பும் ஒரு உயிரினம் அது தன்னுடைய இயல்பான குணத்துடன் வாழ்கிறது அதை நாம் இடையூறு செய்யும் பொழுது தற்காப்புக்காக அது தாக்குதலை தொடுக்கிறது என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இன்னொரு வியப்பான செய்தி என்னவென்றால் இந்த பாம்பை தோஷம் உள்ளதாக நமக்கு சித்தரிக்கிறார்கள் ஆனால் அந்த தோஷம் என்பது சித்தரிக்கப்பட்ட விஷயம் ஆகும். அது, உண்மையல்ல ஏனென்றால் பல்வேறு நாடுகளில், பாம்பு சூப்பாகவும் சிறந்த உணவாகும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த நாடெல்லாம் முன்னேறிய நாடாகத்தான் இருக்கிறது. பாம்பினால் தோஷம் இருப்பது உண்மையானால், அந்த நாடு எவ்வாறு முன்னேறிய நாடாக இருக்க முடியும், என்பதை இந்தப் புத்தகத்தைப் படித்ததன் மூலம் எனக்கு என் சிந்தனையில் உதித்த ஒரு கேள்வி ஆகும். உண்மையில் இந்திய அரசாங்கம் மற்றும் வனத்துறை செய்ய வேண்டிய வேலையை தன் புத்தகத்தின் மூலம் அவர் செய்துள்ளார் இதை பாராட்டு விதமாக வனத்துறையினரை இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார்கள்.
இந்த புத்தகம் பாம்புகள் பற்றிய பொதுவான மூடநம்பிக்கைகளை மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறது அதோடு மட்டுமல்லாமல் பாம்புகள் பற்றிய பல ஆச்சரியமூட்டும் உண்மைகளையும் கூறுகிறது .
மேலும், இந்த புத்தகம் இயற்கையையும் அதில் வாழும் உயிரினங்களையும் பற்றி நமக்கு விஞ்ஞானப் பூர்வமான அறிவை வழங்குகிறது ஆகவே, இந்த புத்தகத்தை அனைத்து மக்களும் வாசிக்க வேண்டும், இயற்கையை நேசிக்க வேண்டும்.
நூலின் விவரம்:
நூல்: பாம்பு போபியா
ஆசிரியர்: ஏற்காடு இளங்கோ
வெளியீடு: கௌரா பதிப்பகம்
விலை: ரூ.160
நூல் அறிமுகம் எழுதியவர்:
முனைவர். திருநாவுக்கரசு தர்மலிங்கம்
மாநிலத் தலைவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & உதவி பேராசிரியர்
அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி,சேலம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
nice