நூல் அறிமுகம்: அ.சி. விஜிதரனின் *ஏதிலி* – சுபாஷ் சந்திர போஸ், இந்திய மாணவர் சங்கம்புத்தகம் : ஏதிலி
ஆசிரியர் : அ.சி.விஜிதரன்
பதிப்பகம் : சிந்தன் புக்ஸ்
பக்கங்கள் : 305
விலை : 250

என்றாவது ஒருநாள் கதைத்தால் அடி விழும் என்று பயந்து இருக்கிறீர்களா? என்றாவது ஒரு நாள் ரோட்டில் சென்றதற்காகவே போலீஸ் தடுப்பார்கள் என்று நினைத்திருக்கிறீர்களா? என்றாவது ஒரு நாள் உங்கள் நாட்டின் பெயரை சொல்வதற்கு தயங்கி நின்றிருக்கிறீர்களா?
ஆம், இவை மட்டுமின்றி இதைவிட கொடூரங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் நபர்களும் உங்கள் ஊரிலேயே தான் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

நிலமற்றவருக்கும், நிலமிழந்தவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. நிலமற்றவன் தனக்கென்று ஏதுமற்று அதை அடைவதற்கு முயற்சி செய்யலாம், செய்யாமலும் போகலாம், நாடோடியாக கூட சுற்றித் திரியலாம். ஆனால் நிலமிழந்தவன் தனக்கென்று சொந்தமாக இருந்த யாவற்றையும் இழந்து , சொந்த நிலத்திலிருந்து பெயர்த்து எரியப்பட்டு, வாழ்வின் ஒளி மங்கி உலகின் ஏதோ ஒரு திறந்தவெளி சிறை கொட்டடிக்கு தள்ளப்பட்டிருப்பான். அவனிடம் எஞ்சியிருப்பதெல்லாம் அடுத்தவேளை பாதுகாப்பிற்கான தேடலும், மனத்தை நிறைத்துள்ள ரணமும் தான். அப்படி ஏதுமற்ற ஏதிலிகளின் வாழ்க்கையை , அந்த வாழ்க்கையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள அரசியலை இடையிடையே அழ வைத்தும், எங்கோ ஓரிடத்தில் சிரிக்க வைத்தும் , எல்லா வரிகளிலும் சிந்திக்கவைத்தும் நாவலாய் உயிர் கொடுத்திருப்பது தான் ஏதிலி.

” தமிழ் தமிழ் என்று கதைப்பார்கள்” ஆனால் தமிழன்ட தேவையெண்டு வரும்போது ஒளிந்து கொள்வார்கள். என்ற வார்த்தைகளில் ஏமாற்ற காயத்தின் கவுச்சி வாடை கமழ்கிறது. குறிப்பாக தமிழகத்தில் இன்று வரை ஈழத்தை விற்பனை செய்துக் கொண்டிருக்கும் வியாபாரிகளின் போலி தமிழ் தேசியத்தை நிர்வாணப்படுத்தி காட்டியிருக்கிறது ஏதிலி. குண்டு மழைக்கு நடுவிலும், பொட்டாசிய குண்டுகளின் நெடியிலும் நீரற்று, ஆகாரமற்று, கை எங்கே கால் எங்கே , உடனிருந்த உறவுகளெங்கே என யாவற்றையும் தொலைத்து கண்ணீர்க் கடலில் நீந்தி கரை சேர்ந்த நாடற்றவர்களின் வலிகளை நம்மிடம் கரை சேர்க்கிறார் ஆ.சி.விஜிதரன் .வெறும் குற்றசாட்டுகளை அள்ளி அடுக்காமல் நாடற்றவர்களின் குடிகளிலும் குடிகொண்டிருக்கும் சாதியை சாட மறக்கவில்லை அவர். கடந்த 35 ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு மூலைகளில் குடியுரிமை கிட்டாது நாடற்றவர்களாக வாழும் இலங்கை தமிழ் மக்களின் இன்னல்களை, இடர்களை அரிய எழுத்துக்களின் வாயிலாக நம்மையும் அவர்களோடு பயணம் அழைத்துச் செல்கிறார். மலரக்காவின் கருகிய உடலை கண்டு அவள் குழந்தைகள் வீறிட்டு அழும் போதெல்லாம், குபீர் அழுகை நம்மையும் கவ்விக் கொள்கிறது. தொலைந்துபோன சுசிக்கலும், வாழ்க்கையை தொலைத்த பெயரற்றவர்களும் எத்தனை எத்தனையாயிரம்? பத்துக்குப் பத்து தகர வீடுகளும், குப்பையில் குடியான முகாம்களும் நம்மை மூச்சுத் திணற வைக்கிறது.

சொந்த நாட்டிலிருந்து அயல் நாட்டிற்கு வந்தவர்களாக இருந்தாலும் சரி, சொந்த நாட்டில் நிலம் இல்லாதவர்களாக இருந்தாலும் சரி நியதி ஒன்றுதான். அவர்கள் அகதிகள். அகதிகள் உலகில் நல்ல கூலிகள் என்னும் வரிகள் இன்னும் இந்த நாகரீக சமூகம் வீடற்றவர்களை,நிலமற்றவர்களை, ஏழைகளை, சேரியோ, முகாமோ அவர்களை கொத்தடிமைகளாகவே இருத்திக் கொள்ள விரும்பும் அதன் கோரமுகத்தை அம்பலப்படுத்துகிறது. ஐநா சதி முதல் ஆமைகறி வரை அனைத்து போலித் தமிழ் தேசிய அரசியலையும், அது கூந்தலை கூட தீண்டாத ஈழமக்களின் இன்னல்களையும் சிறந்த அரசியல் கலைப்படைப்பாக வடித்து தந்திருக்கிறார் விஜிதரன்.

தமிழை, ஈழத்தை கூவிக் கூவி விற்கும் போலி தமிழ் தேசியவாதிகளும், அவர்களுக்கு கூஜா தூக்கியே பழக்கப்பட்ட மூளையற்ற சிந்தனைவாதிகளும் இதை படித்தாவது கொஞ்சம் திருந்த முயற்சி செய்யட்டும். ஈழமக்களின் துன்பங்களை அதன் அரசியல் கலந்தறிய இதுவே அற்புத படைப்பு. முன்னுரிமையாக இப்புத்தகத்தை தம்பிகளுக்கு பரிந்துரை செய்கிறேன்.