நூல்: ஏதிலி
ஆசிரியர் : அ.சி.விஜிதரன்
வெளியீடு : சிந்தன் புக்ஸ்
ஆண்டு : 2019 (இரண்டாம் பதிப்பு)
விலை : ரூ 250
பக்கம் : 305
நூலைப் பெற : செல் 9445123164
[email protected]

இலங்கை தமிழ் மக்களின் அகதிகள் முகாம் வாழ்க்கை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட நாவல். ஆனால் இலங்கையின் அவலப்பட்ட அத்தனை துயரங்களும் உள்ளே வந்து விழுந்து கிடக்கும்.

இலங்கையில் போர் ஓய்ந்துவிட்டது. ஆனால் போரில் சின்னா பின்னமான, புலம்பெயர்ந்து அந்நிய நிலத்தில் எந்த பிடிப்பும் இல்லாமல் கையறு நிலையில் நிர்க்கதியாய் விடப்பட்ட அகதிகள் என்ற ஒற்றைச் சொல்லால் வாழ்க்கையை இழந்து நடைப் பிணமாக வாழ்ந்த மக்கள் பற்றிய துயரம் நிறைந்த கண்ணீர் சிந்தும் நூல்.

மியான்மர், பாலஸ்தீனம் என உலகம் முழுவதும் நாடுகளின் எல்லைக்கோடுகளால் அகதிக்கோடுகளாய் சீரழிந்து போயிருக்கும் மக்களைப் பற்றிய பார்வையும் இந்த நூலை படிக்கும்போது மனதில் வந்துபோகும்.

தமிழ்நாட்டு அகதிகள் முகாம் என்பது எல்லோருக்கும் ஓரளவு தெரிந்திருக்கலாம். ஆனால் மிகத் துள்ளியமாக சொல்ல வேண்டுமெனில் ஒற்றை செங்கல் தடுப்புச்சுவர், ஒழுகும் கூரை, 10×10 அளவு கொண்ட ஒரே அறையில் திருமணம் ஆனவர்களும், மற்ற அனைத்து குடும்ப உறுப்பினரும் புழங்க வேண்டும். ஏதும் வசதியற்ற ஓர் திறந்தவெளி சிறைதான் அகதிகள் முகாம். முகாம் கணக்கெடுக்கும் நாளில் ஒருவரும் விடுபடாமல் ஆஜராக வேண்டும். இல்லையெனில் அது தனிக்கதை.

கூலி வேலைக்கு சென்று தாமதமாக வருபவர்கள் காவல்துறை கண்களில் பட்டால் அவ்வளவு தான். வசவுகளும், இறுதியில் லஞ்சமும் அவர்களுக்கு சற்று சுதந்திரத்தை கொடுத்து வழிவிடும். அடிகளும் தப்பாது. லஞ்சத்திற்கு மட்டும் அகதிகள் என்ற எந்த வேறுபாடும் இல்லாத சமமாக பாவிக்கும் குணம் இருக்கும் போல.

இலங்கையில் இருந்தால் எங்கே வாழ்க்கை மரணத்தில் சென்றுவிடுமோ என்று அஞ்சி குடும்பத்துடன் இருட்டில் கப்பல், படகேறி (ஆம் துயரப்பட்ட மக்களுக்கு வேறு ஏது விடிவு) தமிழ்நாடு, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா என தேங்காய் சிதறுகளாக பிரிந்த மக்கள் இன்றுவரை விடிவில்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். தப்பித்தவறி சவுதி போன்ற பகுதிகளில் வேலைக்கு சென்ற பெண்கள் தலை வெட்டப்பட்டும், கேஸ் வெடித்தும் இறந்து போனவர்களின் கதைகள் தனி. அவர்களுடைய பிள்ளைகளின் கதைகள் அதைவிட அவலம். பிணமாய் திரும்பி வந்தாலும் லஞ்சம் இருந்தால் தான் பிணமும் கிடைக்கும் அவலம்.

நான் என்ன விமர்சனம் எழுதுவது என்று தெரியாமல் மனம் கணத்து சிந்தனையில் விழுந்த வார்த்தைகளை எழுதி வருகிறேன்.

போகட்டும் இந்த நூலின் கரு உருவானதே தன்னோடு பயணித்தவர் என் கதையை எழுது அவசியம் எழுது என்று உதித்த வார்த்தைகளைக் கொண்டு ஆசிரியர் இந்நாவலை எழுதியிருப்பார்.அகதிகளாக வந்த மக்கள் சாதியோடு வாழ்ந்ததை, முகாமில் கழிவறைகூட இல்லாமல் அல்லாடியதை, முகாமைச் சுற்றி இருந்த குப்பைக் கூளங்கள், சாக்கடை கால்வாய்கள், மின்விளக்கு வசதிகளற்ற (2009க்கு பிறகு மின்சாரம் வந்தது என்கிறார்) கூலி வேலைகளை செய்தும், ஓரிருவர் கல்லூரியில் கால் வைத்ததையும், குடும்ப உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாத தவிப்பையும், தமிழீழ புலிகள் படையில் சேர்ந்து உறுப்புகளை இழந்ததையும், வெளிநாடுகளுக்குச் சென்று பிணமாக வந்தவர்களைப் பற்றியும், இலங்கைப் போரில் எதிர்க்க ஆளிலில்லாமல் ஒடுக்கப்பட்டு முள்கம்பிகளுக்கிடையில் இன்னமும் நசிந்துகொண்டிருக்கும் மக்களையையும், மக்களை மீளக் குடியமர்த்துகிறோம் என்று புரோக்கர் வேலை செய்து ஐரோப்பிய நிதியை பெறுவதற்காக, ஏதோ அரை வயிறு நிரம்ப கூலி வேலை செய்துவரும் மக்களை வலிய இலங்கை திறந்தவெளி முள்கம்பிச் சிறையில் மீண்டும் தள்ளுவதற்கு ஒரு கூட்டம் அலைவதையும், ஈழத்தவர்களுக்கு ஏதோ நல்லது செய்யப்போகிறோம் என்று கூறி ஏமாற்றும் தமிழ்நாட்டு அடையாள அரசியல்வாதிகளைப் பற்றியும், அகதிகள் முகாமில் இருக்கும் சில நாட்டாமைகளின் தந்திர செயல்கள் பற்றியும், கொடுந்துயரங்களை சுமந்து பயணிக்கும் விடிவுகற்ற இலங்கை தமிழ் மக்களின் அத்தனை வலிகளையும் தலைப்புகள் பிரித்து எழுதியிருப்பார் ஆசிரியர்.

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அகதிகளுக்கும் எல்லா மக்களுக்கும் இருக்கும் உரிமை உண்டு என்று ஐ.நா. சொல்கிறது. இங்கு அப்படியா நடக்கிறது… நிலங்கள் இல்லாத உள்நாட்டு மக்களும் குறிப்பாக தலித் மக்களின் வாழ்நிலையும், அகதிகளாக வரும் மக்களின் வாழ்நிலையும் இரண்டும் ஒன்றுதான் என்கிறார். ஆமாம் அப்படித்தான் இருக்கிறது. இன்றும் தமிழ்நாட்டு தலித் மக்களின் பெரும்பாலான வீடுகளுக்கு சாக்குகளும், ஓலைகளுமே கதவுகளாக உள்ளன.

ஏதும் அற்றவர்களுக்கு ஏதும் இல்லாதவர்கள் என்கிற பெயரில் ‘ஏதிலி’ என்று இந்நூலுக்கு பொருத்தமான தலைப்பில் பெயர் வைத்திருக்கிறார்.

கணத்த இதயத்தோடு தான் இந்நூலை வாசிக்க முடிந்தது. உலக ரவுடி அமெரிக்கா செய்யும் அட்டூழியங்களே உலக மக்களை அகதிகளாக ஆக்கி வருகிறது. இன்று வேறு யாரோ தானே அகதி என்று நினைத்தால், நாளை நாம் வாழும் இடமும் ஏதோ ஒரு கார்பரேட் தேவைக்காக அகதியாய் மாறுவோம். இந்நிலையிலிருந்து மாற அகதிகளின் நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்க்கையை அப்படியே சொர்க்கத்தில் கொண்டு வைக்கிறேன் என்று புலியாய் புறப்பட்டவர்களைக் கொண்டு சுயநல சிலபேர்தான் பிழைத்தனர். புத்தர்களின் பேரன்கள் என்று அழைக்கப்பட்ட சிங்கள அதிகார வர்க்கம் உலக ரவுடிகளின் காலில் விழுந்து கிடப்பதற்காக தம் சொந்த மக்களை பாஸ்பரஸ் போன்ற அதே ராணுவ கார்பரேட் ஆயுதங்களை பயன்படுத்தி கொத்துக் கொத்தாய் கொன்று குவித்தவர்களையும் நாம் இன்னும் வேடிக்கை பார்க்கப் போகிறோமா என்று ஆசிரியர் நம்மை பார்த்து கேட்பது போல் இருக்கிறது தோழர்களே!

எந்த நாட்டின் எல்லைக்கோடுகளும் அகதிக்கோடுகளாய் உருமாற்றம் பெற்ற மக்களை அறிய வாசிப்போம் நண்பர்களே!

வாசிப்போம்! விவாதிப்போம்!!

இரா.சண்முகசாமி
9443534321Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *