ஈழப்போரின் தாக்கங்களை செய்திகள், திரைப்படங்கள், ஒரு சில நாவல்கள், தமிழ் தேசியத் தலைவர்கள் பேச்சுகளின் மூலம் ஓரளவு அறிய முடிந்திருக்கிறது. ஈழத்தமிழர்கள் அகதி முகாமிலிருந்து, வந்து படித்த ஒரு சில மாணவர்கள் மற்றும் உடன் பணிபுரிந்த தோழிகளின் மூலம் அவர்களின் வாழ்க்கை, எனக்கு ஓரளவு ஏற்கனவே அறிமுகமானதுதான்.
“ஏதிலி”, என்றால் அகதி என்று பொருள். தமிழக முகாம்களில் வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றிபேசுகிறது நாவல் “ஏதிலி”. இந்நாவல், “உலகில் உள்ள சோகங்களில் மண்ணைப் பிரிந்து அகதியாய் நிற்பது நீடித்த சோகம்”, என்று ஆசிரியரின் முன்னுரையோடு தொடங்குகிறது.
தமிழீழப் போரை நேரிடையாக பேசாமல், ஈழத்தமிழர்களின் தமிழக முகாம்களில் வாழும் மக்களின் வாழ்க்கையை பலத்தரப்பட்ட கோணத்தில் பேசுகிறது.
இந்நாவல், பல கதைகளின் தொகுப்பாக, ஒவ்வொரு கதையிலும் கதாபாத்திரங்கள் நடுநாயகமாக நின்று, தங்கள் பாடுகளை முன்னின்று பேசி செல்வதாகவேத் தோன்றுகிறது. அதனால்தானோ, எண்ணவோ அவர்களின் வாழ்க்கையை, வலியை, கனவை, ஏமாற்றைத்தை நம்பிக்கையை இன்னும் பல உணர்வுகளை மிச்சமில்லாமல் நம்மீது இறக்கி வைக்க முடிகிறது.

தமிழகத்திலுள்ள முகாம்கள், ஆஷ்பெஸ்டாஷ் சீட் போட்ட, வெக்கையான 10க்கு 10 சதுர அடி அறைகள் கொண்ட, பெட்டி பெட்டியாக அடுக்க பட்டிருக்கும் வீடுகள், முகாமிற்கு வெளியே பன்றிகள் விளையாடும் குப்பைமேடு, முகாம் நிர்வாகிகள், பெரும்பானவர்கள் செய்யும் பெயின்ட்டர் தொழில், இவைகளே இங்கு பெரும்பாலும் பேசப்படும் கதைக்களம். இப்புத்தகம் முகாமிலுள்ள மக்களின் உணர்வுகளை பிரச்சனைகளை பல கோணங்களில், கதாபாத்திரங்களின் மூலம் விவரித்தாலும், ஆசிரியர் படைத்திருக்கும் பெண்கள் கதாபாத்திரங்கள், அவருடைய நோக்கத்தை சரியாகவே செய்திருப்பதாகவே தோன்றுகிறது.
போர் சூழ்ந்த மண்ணிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று காலிழந்த கணவன், குழந்தைகளுடன் யாழ்பானத்திலிருந்து கள்ளத்தனமாக இந்தியா வர #அமுதா எடுக்கும் முயற்சிகள், பேருந்தில் மூட்டை முடிச்சிகளுடன், எப்பொழுது பிடிபடுவோம்?, கால் இழந்த கணவன் புலியென்று கைது செய்வார்களோ? என்று என்ற படபடப்புடன் பயணம் செய்கிறாள். ஒட்டியக்காரன் உதவியுடன், பசி மயக்கத்தோடு படகேறி தமிழக முகாமில் வந்து சேர்ந்ததும், தங்கள் பெயர்களை பதிய பல கேள்விகளை எதிர் நோக்கும் போது….ஒரு கேள்வி ஈழத்திலிருந்து அகதியாக வந்தாலும் விடாமல் துரத்துகிறது, ”நீங்கள் என்ன ஜாதி”.
இன்னொரு கதையில், முகாமில் வாழும் பெரும்பாலான பெண்களின் நிலையை, பாடுகளை ஷாமினியின் மூலம் உணரமுடியும். பள்ளிக் கல்வியைக்கூட முடிக்க முடியாத சூழ்நிலை, குடிகாரக் கணவனை நம்பி வாழ முடியாமல், குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து, பல பிரச்சனைகளையும் தாண்டி, ஆஸ்த்திரேலியாவுக்கு கப்பலில் (அப்படி பயணம் மேற்கொள்ள நினைப்பவர்களின் அவதியான, ஆபத்து நிறைந்த கப்பல் பயணத்தைப் பற்றி ஆசிரியர் விவரித்து இருப்பார்) வேலைத்தேடி போக முயற்சிக்கிறாள். ஏஜன்சிக்காரன் பணத்தை வாங்கி ஏமாற்றியதால், அதிலும் தோல்வி…இப்படியாக எதிர்காலத்தின் மீதுள்ள நம்பிக்கையில் மட்டுமே அவள் வாழ்க்கை போகிறது.

இன்னொரு அத்தியாயத்தில் (கதையில்) தோழிகள் இருவரில் ஒருவர் #இந்திரா தமிழ் நாட்டில், அகதிகள் முகாமில் இன்னொருவர் சுசி கிளிநொச்சியில். அவர்கள் இருவரும் கடிதத்தில் பேசிக்கொள்வதுதான் கதையே. சொந்த மண்ணிலேயே இருந்தாலும், அகதியாக வேறொரு மண்ணில் இருந்தாலும் நிச்சயம் இல்லாத, நிம்மதி இல்லாத வாழ்க்கையை இருவரும் தங்கள் கடிதங்களில் பதிவு செய்வார்கள். அடுத்த கடிதம், அதே விலாசத்தில் அனுப்ப முடியுமா?. பதில் கடிதம் வருமா? என்ற உத்தரவாதம் இல்லாத கேள்வியுடனே நடக்கும் அவர்களின் சம்பாஷனைகள் படிப்பவர்கள் மனதை ஏதோ செய்யும்.
”முகாமின் வாழ்க்கையில் கல்வி ஏதாவது செய்யும் என படித்தவர்கள், கனவுகளைச் சுமந்தவரகள், ஆண்கள் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கும், போவதையும், பெண்கள் மனைவியாகி முகாமிலேயே இருக்கும் சூழலையும் என்ன சொல்வது?. பாதிக்குப் பாதி கூட இல்லாமல், இந்த அளவுக்கு வாய்ப்புகள் அடைப்பட்டு போய்விட்டனவா? ஏன் இப்படி?”, ஆசிரியரின் இந்த கேள்வியே இந்த நாவல் முழுவதும் வியாப்பித்து நிற்கிறது.

ஈழம், ஈழப்போர், ஈழமக்கள், விடுதலைப் புலிகள் என்று பேசிப்பேசியே தமிழகத்தில் அரசியல் செய்யும், அமைப்புக்கள், கட்சிகள் ஈழ அகதிகள் நலனைப் பற்றி பேசாததும், கண்டுக் கொள்ளாததற்கும் பின் உள்ள அரசியலை பல இடங்களில் ஆசிரியர் பேசி இருப்பார். அம்மக்களின் நிலையைப் பயன்படுத்தி வெளிநாடு வாழ் ஈழமக்களிடம் பணம் பறிக்கும் தன்னார்வ நிறுவனங்களையும் அடையாளம் காட்டத் தவறவில்லை.
இன்றைய சூழ்நிலையில், தன் சொந்த நாட்டுமக்களை, CAA, NRC போன்ற தேவையில்லாத சட்டங்களை கொண்டுவந்து சொந்தமண்ணிலேயே அகதிகளாக்கத் துடிக்கும் மத்திய அரசின் பாசிச கொள்கைக்கு எதிராக தன்னெழுச்சியாக மக்கள் போராட்டங்களைப் பார்த்ததுடன், இந்த நாவல் நம் நாட்டின், மக்களின் எதிர்காலத்தை சரியாக சுட்டிகாட்டும், எச்சரிக்கை மணியாகவே தோன்றுகிறது.
ஏதிலி
அ.சி.விஜிதரன்
வெளியீடு சிந்தன்புக்ஸ்
– வெண்மண