Your Happiness Was Hacked தொழில்நுட்ப அடிமைத்தனம்

“Your happiness was hacked” – டிஜிட்டல் யுகத்திற்கான வாழ்வியல் கையேடு

டிஜிட்டல் யுகத்திற்கான வாழ்வியல் கையேடு:
 தொழில்நுட்ப அடிமைத்தனம் என்பதை விளக்கிக் கூற அவசியம் இருக்காது; கிட்டத்தட்ட பெரும்பான்மையோர் இணையதளத்திற்கு, ஏதோ ஒரு வகையில் அடிமைப்பட்டு போயிருக்கிறோம். இணைய போதை, இணைய-விளையாட்டு போதை, சமூக ஊடக போதை,இணைய- சூதாட்ட போதை, இணைய-ஆபாச படங்கள் போதை போன்றவை தொழில்நுட்ப அடிமைத்தனம் என்கிற குடைக்குள் அடங்கும்.
 இந்த நவயுக உலகத்தில், தொழில்நுட்பம் நிறைய வளர்ச்சி அடைந்திருக்கிறது. தொழில்நுட்பம் நமது வாழ்வியலை களைத்துப்போட்டு முன்னுக்குப்பின் முரணாக அடுக்கி வைத்திருக்கிறது. நாம் வாழும் சூழலில் நிலவும் நெருக்கடிகள் குறித்து போதுமான அறிதல் நமக்கில்லை என்பது நிதர்சனம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கால வரம்பின்றி தொழில்நுட்பத்தை பருகுகின்றோம். நாளிதழ்களில் வரும் செய்திகளில், அன்றாடம் ஏதோ ஒரு குற்றச் செயலுக்கு இந்த தொழில்நுட்பம் காரணமாக இருப்பதை நாம் காண்கிறோம்.
 சமூகத்தில் நிகழும் தீமைகளுக்கு எதிர்வினை ஆற்றுவது அனைவரின் கடமையாகும். அதற்கு முன்பாக அந்த தீமைகள் குறித்து போதுமான புரிதல் நமக்கு அவசியமாகிறது. காலத்தின் தேவை கருதி தொழில்நுட்ப அடிமைத்தனம் குறித்த புரிதலுக்கான சில புத்தகங்களை அறிமுகம் செய்து வைக்கவே இந்த கட்டுரை தொடர்.
                “Your happiness was hacked”

நூலின் தகவல்

நூல்                                      : உங்கள் மகிழ்ச்சி ஊடுருவப்படுகிறது (Your happiness was hacked) 

ஆசிரியர்                         : விவேக் வத்வா, அலெக்ஸ் சல்கேவர்

பதிப்பகம்                        : பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா

வெளியான ஆண்டு   : முதல் பதிப்பு, 2017

பக்கங்கள்                        : 252

விலை                                 : ₹.599

எந்தவொரு அசாதாரண சூழ்நிலையையும் முழுமையாக தெரிந்து கொண்டு -விழிப்படைய சமூகத்தில் நிகழும் அந்தக் குறிப்பிட்ட “அசாதாரணம்” குறித்த புள்ளியியல் தரவுகள் முக்கியத்துவம் பெறுகிறது. “உங்கள் மகிழ்ச்சி ஊடுருவப்படுகிறது” என்கிற ஆங்கில நூலின் அறிமுக கட்டுரை பெரும்பான்மை புள்ளியியல் தரவுகளைக்கொண்டு எழுதப்பட இருக்கிறது.
 மனித குல வரலாற்றில் பரிணாம காலம் தொட்டு இன்று வரை,மனிதனின் இயங்குதளம் பல்வேறு பரிமாணங்கள் பெற்று குறுகிக்கொண்டே வந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் இறுதி காலகட்டத்தில் பெரும்பான்மையினரின் இயங்குதளம், ஒரு சிறிய அறையினில் உள்ளே அடைபட்டு போனது.2010-ஆம் ஆண்டுக்கு பிறகான வருடங்களில் தொழில்நுட்பத்தின், அசுர வளர்ச்சி பெரும்பான்மையான மனிதனின் இயங்குதளத்தை ஒரு சிறிய ஒளிதிறையினுள் அடக்கி வைத்து விட்டது. உள்ளங்கைக்குள் உலகம் என்பது எவ்வளவு சாதகமோ அதே அளவு பாதகமாகவும் மாறியிருக்கிறது.
 “உங்கள் மகிழ்ச்சி ஊடுருவப்படுகிறது” என்கிற இந்த ஆங்கில நூலின் விவரணைகள் முழுவதும்,அமெரிக்க தேசத்தில் தொழில்நுட்பத்தால் ஏற்படும் தீங்கினை தரவுகளுடன் எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. இந்த நூல் எழுதப்பட்டதன் அடிப்படையில் நமது இந்திய நாட்டின் தரவுகள் கொண்டு ஒப்பிட்டு பார்ப்பது அவசியமாகிறது.
 இந்திய நாட்டில் சுமார் 100 கோடிக்கும் அதிகமான திறன்பேசி பயனர்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வொன்றின் தரவுகள் கூறுகிறது; இதில் 53%, 18 முதல் 24 வயதுக்குட்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சிறார்களுள் 10 முதல் 14 வயதிற்கு உட்பட்டோரில் 83% திறன்பேசியை உபயோகிப்பவராக இருக்கின்றனர்;இது உலக சராசரியான 76% விட 7% கூடுதலாகும்.இந்தியக் குழந்தைகளுள் 22% இணைய மிரட்டலுக்கு(Cyber bullying)ஆளாக்கப்படுகின்றனர் என்கிறது,தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(NCRB);இது உலக சராசரியை விட 5% கூடுதலாகும்.
 அமெரிக்காவை சேர்ந்த “சேப்பியன்ஸ் லேப்”(Sapiens lab)என்கிற தன்னார்வ ஆய்வு அமைப்பு 2022-ஆம் வருடம், 40 நாடுகளை சேர்ந்த 18 முதல் 24 வயதிற்குட்பட்ட 27,969 நபர்களிடம் மேற்கொண்ட ஆய்வில்,மிக இளம் வயதில்,அதாவது ஆறு வயதில் திறன்பேசிக்கு அறிமுகமான பெண் சிறார்களில் 74%;10 வயதில் திறன்பேசிக்கு அறிமுகமான 61%;15 வயதில் திறன்பேசிக்கு அறிமுகமான 52%;18 வயதில் திறன்பேசிக்கு அறிமுகமான 46% பெண் சிறார்கள் தற்கொலை எண்ணங்களுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. இந்திய சிறார்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 5 முதல் 8 மணி நேரம் வரை திறன் பேசிக்குள் மூழ்கிக்கிடப்பவர்களாக உள்ளனர். இது ஒரு வருடத்திற்கு 2,950 மணி நேரமாகும் என்கிறது,இந்த ஆய்வு. ஐக்கிய நாடு சபையின் சிறுவர் பாதுகாப்பு நிதியம்(UNICEF)2022-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், உலகிலேயே 15 முதல் 24 வயதிற்கு உட்பட்ட இந்திய இள வயது சமூகத்தினரே அதிகப்படியான “மன அழுத்தம”(mental stress)உடையோராக காணப்படுகின்றனர் என்று வருத்தம் தெரிவித்துள்ளது.
 பொதுவாக நமது பள்ளிப் பாடத்திட்டங்களில் நமக்கு மூன்று வகையான பொருளாதாரம் இருப்பதாக கற்பித்துள்ளனர். அவை முதலாளித்துவம், கம்யூனிசம் மற்றும் கலப்பு பொருளாதாரம் ஆகும். ஆனால், நவயுக காலத்தில் “கவன ஈர்ப்பு பொருளாதாரம்”(Attention seeking economy)என்கிற ஒரு பிரிவு இருப்பதாகவும்,அதற்கு நாடு,இன,பேதம் எதுவும் இல்லையென்றும் கூறுகிறார்கள்.கவன ஈர்ப்பு பொருளாதாரத்தை பொருத்தவரை திறன்பேசி உபயோகிப்பவர்கள் அனைவரும் பொறியில் சிக்கிய இறைகளே. தொடுதிரை யுகத்தில் யாரொருவர் பிறரது கவனத்தை ஈர்த்து கட்டுப்படுத்துகிறாரோ அவரே வெற்றியாளர் ஆகின்றார். நமது கவனங்களை ஈர்த்து போதை நிலையில் ஆழ்த்தி கையாட்டி பொம்மைகளாக கிரங்கடிக்க உலக பணக்காரர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
 இந்த நூலில் மொத்தம் எட்டு இயல்கள் உள்ளன. அவை,1.தொழில்நுட்பம் எவ்வாறு நமது தேர்வை அகற்றுகிறது,2.தொழில்நுட்ப போதையின் தோற்றுவாயில், 3.நிகழ்நிலை(online) தொழில்நுட்பமும் காதலும்,4.நிகழ்நிலை தொழில்நுட்பமும் வேலையும்,5.நிகழ்நிலை தொழில்நுட்பமும் விளையாட்டும்,6.நிகழ்நிலை தொழில்நுட்பமும் வாழ்க்கையும்,7. எவ்வாறு தொழில்நுட்பத்தை மானுட நன்மைக்காக பயன்படுத்துவது,8.அதி மனிதாபிமான தொழில்நுட்பம் குறித்தான பார்வைகள்.முதலிய, எட்டும் முக்கியமான கட்டுரைகள்.இந்த எட்டு இயல்களையும் கட்டுரையின் அளவிற்க்கு விவரிக்க இயலாததால்,இயல்2 – தொழில்நுட்ப போதையின் தோற்றுவாயில் என்கிற தலைப்பில், நூலில் எழுதப்பட்டுள்ள சில தகவல்களை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.
 உலகின் முதல் நடத்தை நிபுணர்(behaviourist ) B.F.ஸ்கின்னர் “ஸ்கின்னர் பெட்டி”(Skinner box) என்கிற கருத்தாக்கத்தை 1930 – காலகட்டத்தில் அறிமுகப்படுத்துகிறார் . அதன்படி,எலி ஒன்றினை கூண்டிற்குள் அடைத்துவைத்து நெம்புகோலை அழுத்தி உணவுத்துகள்களை பெற்றுக் கொள்ள கற்றுக்கொடுக்கிறார். விரைவிலேயே,அந்த எலியும் உணவுத்துகள்களை பெற்றுக்கொள்ளும் வழிமுறையினை கற்றுக்கொள்கிறது. மேலும் பல ஆய்வுகளிள் ஈடுபட்ட ஸ்கின்னர்,“இடைப்பட்ட மாறி வெகுமதிகள்”(Intermittent variable reward )என்கிற கருத்தாக்கத்தை கண்டடைகிறார். அவரின் புதியக் கண்டுபிடிப்பில், ஸ்கின்னர் அறிந்துக்கொண்டது என்னவெனில் “சாதாரணமாக கூண்டிலடைபட்ட எலிக்கு நெம்புகோலை அழுத்தக்கற்றுக் கொடுத்தால், அந்த எலி தனக்கு பசியெடுக்கும் பொழுது மட்டும் அந்த நெம்புகோலை அழுத்தி உணவை பெற்றுக்கொண்டு உண்ணும்;பசிக்காத சமயத்தில் நெம்புகோலை எலி அழுத்தாது.இதுவே, அந்த எலிக்கு மாறி வெகுமதியை பயன்படுத்தி எதிர்பாராத சமயத்தில் எப்பொழுதாவது வெகுமதியான உணவினை வழங்கினால்,அந்த எலி தொடர்ந்து உற்சாகத்துடன் நெம்புகோலை அழுத்திக்கொண்டே இருக்கும். இன்று, நாமெல்லாம், முகநூலில் போடும் பதிவுகளுக்கு லைக்குகள் பெற ஏங்குகிறோம் அல்லவா?இந்த நடத்தை விதியை கண்டுபிடித்து வழங்கிய மகா பிரபு ஸ்கின்னர் தான்.
 மாறி வெகுமதிகளை ஸ்கின்னர் கண்டுபிடித்தாலும் அதன் பயன்பாடு கேசினோ(Casino)எனப்படும் சூதாட்டத்தை தவிர பிற துறைக்கு பரவி பிரபல்யம் அடையவில்லை. 1990-களின் காலகட்டத்தில் B.J.ஃபாக் என்னும் ஸ்டான்ஃ போர்டின்(Standford) முனைவர் பட்ட ஆய்வு மாணவன், ஸ்கின்னரின் கண்டுபிடிப்பை அடியொட்டி கணினியை கொண்டு தொழில்நுட்ப வழிக் குறிப்புகள் அனுப்புவது மனிதர்கள் மத்தியில் பெரும் செல்வாக்குடையதாக திகழ்வதை கண்டுபிடிக்கிறார். இந்தக் குறிப்புகள் “மன உணவு துகள்களாக”( mind food pellet) ஆவதற்கான ஆற்றல் உடையது என்பதை கண்டுபிடிக்கிறார். இந்த துறைக்கு கேப்டாலஜி( captology= computer science + ppsychology)என பெயரிடவும் பரிந்துரைக்கிறார்.
 2006-ஆம் ஆண்டு B.J. ஃ பாக்கின் மாணவர் மைக் கிரிகர்(Mike kriegar) “வற்புறுத்தும் தொழில்நுட்பம்”(persuasive Technology) என்கிற புது வடிவிலான செயலிக் கண்டுபிடிப்பை B.J. ஃபாக்கின் வழிகாட்டுதலின் படி நிகழ்த்திக்காட்டினார். அசாதாரண பேரிடர் காலங்களில் “மகிழ்ச்சி புகைப்படங்களை” அனுப்பி ஆறுதல் தெரிவிக்கும் செயலி ஒன்றை “சென்ட் தி சன்சைன்”( send the sunshine ) என்கிற பெயரில் ஆரம்பிக்கிறார்.பின்பு, கெவின் சிஸ்ட்ரோம்(Kevin systrom)என்கிறவர் உடன்-இணைந்து புகைப்படப் பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராமை(Instagram) ஆரம்பிக்கிறார். 2012-ஆம் வருடம், மைக் மற்றும் கெவின் இன்ஸ்டாகிராமை 100 கோடி அமெரிக்க டாலருக்கு முகநூலுக்கு(facebook) விற்று விடுகின்றனர். இன்று நாம் சதா எக்காலமும் கையில் வைத்துக் கொண்டு ஸ்க்ரோல்(Scroll) செய்துக் கொண்டிருக்கும் செயலிகளுக்கு முன்னோடி இன்ஸ்டாகிராம் ஆகும்.அதை சிருஷ்டித்த மூலக்கர்த்தாக்கள் ஸ்கின்னர் மற்றும் B.J.ஃபாக் இருவரின் அடிபொடிகள் ஆவர்.
 தொடக்கத்தில், புதிய கண்டுபிடிப்புகள் பெரும்பான்மை மானுட உயிர்களுக்கு நன்மை விளைவிப்பதற்காக நிகழ்த்தப்படுகிறது. ஆனால்,லாபம் என்கிற வணிக மனநோய் அதனை தீய வினைகளுக்கு கடத்திச் சென்று விடுகிறது. சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றுக்கு B.J.ஃபாக் அளித்த பேட்டியில்,தனது கண்டுபிடிப்புகள் மனிதர்களின் உடல்நலம், பொருளாதார நலம், நேர நிர்வாகம் முதலியவற்றுக்கான நன்மை விளைவை ஏற்படுத்தவே நிகழ்த்தப்பட்டது எனவும், ஆனால் தற்காலத்தில் எதிர்மாராக மனிதர்கள் தொழில்நுட்பங்களால் சூறையாடப்படுகின்றனர் என்றும் தனது மன வருத்தத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
 இந்த நூலின் சிறப்புகளில் ஒன்று, தொழில்நுட்பத்தின் தீங்கு குறித்த வெறும் தரவுகள் மற்றும் விளக்கம் மட்டும் தராமல்; தொழில்நுட்பத்தின் தோற்றத்தில் தொடங்கி மானுட வாழ்வின் முக்கிய அம்சங்களான காதல், வேலை, விளையாட்டு, ஓய்வு, நிம்மதி முதலான அதிமுக்கிய தருணங்கள் எவ்வாறெல்லாம் சீரழிக்கப்படுகிறது என்பதை அறிவியல் ரீதியில் தக்க சான்றுகளுடன் எடுத்துக் கூறியுள்ளனர். அத்துடன் தொழில்நுட்ப அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்கும் ஒரு சில வழிமுறைகளை வழங்கியுள்ளனர், இதன் ஆசிரியர்கள்.
 இனிவரும் காலங்களில், தொழில்நுட்பத்தின் தயவின்றி யாதொரு காரியமும் சாத்தியமில்லை. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல அசாத்தியங்களையும் சாத்தியமாக்கி காட்டியிருக்கிறது, என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. இங்கே, நமது சமூகத்துச் சிக்கல்களே வரைமுறையற்ற அதீத தொழில்நுட்ப பயன்பாட்டினில் தான் இருக்கிறது. சராசரி இந்தியர் ஒருவர் 2 முதல் 4 மணி நேரம் ஒரு நாளைக்கு திறன் பேசியினுல் மூழ்கியிருக்கிறார். அதிகப்படியான தொடுதிரை பயன்பாடு மூளையின் நினைவுப்பெட்டகமான ஹிப்போகேம் பசின்( Hippocampus) அளவை சுருக்கிவிடும் என்கிறது மருத்துவ அறிவியல். இதனால் நினைவுத்திறன் குறைதல், குறைந்த சுயமதிப்பீடு , தாழ்வு மனப்பான்மை மற்றும் தனிமை போன்ற மனம்சார்ந்த நோய்களுக்கு ஆட் பட நேருகிறது. ஒரு நாளில், 35 இந்திய மாணவர்கள் தற்கொலையால் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கின்றனர், என்கிறது சமீபத்திய ஆய்வு. 2010-2020, இடைப்பட்ட பத்து ஆண்டுகளில் தற்கொலை தொடர்பான எண்ணங்கள் 40% உயர்ந்திருக்கிறது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான இணைய வழி குற்றங்களின் எண்ணிக்கை2017-இல் 21,796; இதுவே, 2021-இல் 52,974 ஆகும். ஐந்து வருடங்களில் இணையக்குற்றங்களின் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகியிருக்கிறது.
 நெறிமுறையற்ற வியாபார யுத்திகள், கட்டுப்பாடற்ற பயன்பாடு,அறமற்ற சிந்தனையின் வெளிப்பாடு போன்றவையே இந்த இன்னல்களுக்கு காரணமாகும்.சீனா, தென்கொரியா போன்ற நாடுகளில் சிறார்கள், “ஒரு நாளைக்கு இத்தனை மணி நேரம்தான் தொடுதிரையை உபயோகிக்கலாம் என்கிற கட்டுப்பாடுகள் உண்டாம்”.இங்கே,, நமது நாட்டில் தொடுதிரை பயன்பாட்டுக்கோ,தொழில்நுட்பம் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளோ கவனிக்கப்படாமல் இருக்கிறது. அரசாங்கமும், சமூகமும் போதுமான விழிப்புணர்வு இன்றி செயல்படுகிறது. சிறியவர்கள் முதல் வயது முதியவர்கள் வரை அதீத தொழில்நுட்ப நுகர்வில் ஈடுபட்டு வருகின்றனர். மனித வாழ்க்கையின் அனைத்து கூறுகளிலும் தொழில்நுட்பம் ஊடுருவி விட்டது. போதுமான வடிகால்களை இனி மேலும் அமைக்காமல் விட்டால் சமூகத்துக்கு நன்மை கிடையாது.
 ஆங்கிலத்தில் தொழில்நுட்பம் குறித்தான விழிப்புணர்வு நூல்கள் ஓரளவு வெளிவந்திருக்கிறது. ஓரளவேனும் தொழில்நுட்ப தீங்கினை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரமும், எதிர்வினையும் மேலைநாட்டு சமூக ஆர்வலர்கள் ஆற்றி வருகின்றனர். ஆனால்,நமது இந்திய சமூகத்தில் போதுமான விழிப்புணர்வோ,எதிர்வினையோ இன்னமும் தொடங்கப்படாமலேயே இருக்கிறது. தமிழிலும்,இந்திய மொழிகளிலும் இது போன்ற விழிப்புணர்வு நூல்களை அதிகம் மொழிபெயர்க்க வேண்டும். மருத்துவத் துறையினரும், உளவியல் துறையினரும் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தொழில்நுட்ப தீங்கிற்கு எதிரான பிரச்சாரத்தையும், ஆதாரப்பூர்வமான நூல்களையும் எழுதி வெளியிட வேண்டும். சமகாலத்தில் சுற்றுச்சூழலும், ஆழ்மனமும் அதிகமும் மாசுபடுகிறது. இனிமேலும் கவனிக்கப்படாமல் விட்டோமானால் மனித வாழ்க்கை வறட்சியாகிவிடும். உங்கள் மகிழ்ச்சி ஊடுருவப்படுகிறது என்கின்ற இந்த நூலினை நான் வாசித்ததில் மிகமிக முக்கியம் என நான் கருதும் ஒரு ‘6’ வாக்கியத்தை கீழே எழுதுகிறேன். நிச்சயம் உங்களுக்கும் இது பயன்படும்.
 தொடுதிரை எனக்கு மகிழ்ச்சியை தருகிறதா?
 வாழ்க்கையிலும், வேலையிலும் எந்த வகையில் இது பயன்படுகிறது?
 தொடுதிரை எனது நேரத்தையும், வாழ்விடத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறதா?
 தொடுதிரை என்னுடைய நடத்தையை மாற்றி இருக்கிறதா?
 என்னை சார்ந்தவர்களுக்கு தொடுதிரையால் தீங்கு வருகிறதா?
தொடுதிரை பயன்பாட்டை குறைப்பதனால், நான் எதையும் இழக்கிறேனா?
 மேற்கண்ட ‘6’ கேள்வியும் ப.எண்:147-இல் கேட்கப்பட்டிருக்கிறது. இதை நாம் அனைவரும் தினமும் கேட்டுக்கொண்டால் நிச்சயம் ஓரளவேனும் விழிப்படைவோம் என்று நான் நம்புகிறேன்.
 “தொழில்நுட்ப தீங்கு” குறித்தான விழிப்புணர்வு நூல்கள் நமது தமிழ்ச்சமூகத்துக்கு அதிகமும் தேவைப்படுகிறது. அவ்வகையில், “உங்கள் மகிழ்ச்சி ஊடுருவப்படுகிறது” என்கின்ற இந்த ஆங்கில நூல் ஒரு எடுத்துக்காட்டு நூலாகவும் , முன்மாதிரியான நூலாகவும் அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
                                      நன்றி.
எழுதியவர் :
நந்தசிவம் புகழேந்தி.
சமூக ஆர்வலர்.

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *