ஆமாம்! உங்கள் உடல் முழுவதும் மூளைதான்!
புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் – 16
“என் உடம்பெல்லாம் மூளை!” என்று இனி நீங்கள் தைரியமாக சொல்லிக்கொள்ளலாம். புதிய ஆய்வொன்று உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் ஒரு சிறிய மூளை போல செயல்படுவதாக சொல்கிறது.
நமது மூளையில் உள்ள நியூரான்களைப் போலவே, சிறுநீரகம் மற்றும் நரம்பு திசு செல்களும் கூட கற்றுக்கொள்கின்றன மற்றும் நினைவுகளை உருவாக்குகின்றன என்பதை ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
நினைவாற்றல் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும், கற்றலை மேம்படுத்துவதற்கும், நினைவாற்றல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் இந்த ஆராய்ச்சி புதிய பாதைகளைத் திறக்கிறது.
மூளைக்கு வெளியே நினைவாற்றல்
“கற்றல் மற்றும் நினைவாற்றல் பொதுவாக மூளை மற்றும் மூளை செல்களுடன் மட்டுமே தொடர்புடையது என கருதப்படுகிறது. ஆனால் உடலில் உள்ள மற்ற செல்களாலும் கற்றுக்கொள்ளவும் நினைவுகளை உருவாக்கவும் முடியும் என்பதை எங்கள் ஆய்வு காட்டுகிறது” என்று நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரான நியூயார்க் பல்கலைக்கழகத்தின் நிகோலே வி. குகுஷ்கின் விளக்குகிறார்.
மூளை செல்கள் அல்லாத பிற செல்கள் நினைவாற்றலுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை இந்த ஆராய்ச்சி ஆராய்ந்தது. இதற்காக, “தொகுக்கப்பட்ட – இடைவெளி விளைவு ” (the massed-spaced effect) என்ற நன்கு அறியப்பட்ட நரம்பியல் கோட்பாடு பயன்படுத்தப்பட்டது.
தகவல்களைத் தொடர்ச்சியாகப் படிப்பதை விட, இடைவெளி விட்டுப் படிக்கும்போது நினைவாற்றல் அதிகரிப்பதை இந்த விளைவு கூறுகிறது. தேர்வுக்கு முதல் நாள் அனைத்தையும் படிக்க முயலும்போது இதை நாம் நன்றாக உணர்ந்திருப்போம்!
நியூரான்களும் நியூரோட்ரான்ஸ்மிட்டர்களும்
மூளை செல்களான நியூரான்கள், ஒன்றோடொன்று தொடர்பு கொள்ள நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் எனப்படும் வேதிப்பொருட்களைப் பயன்படுத்துகின்றன. இந்த நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள், நியூரான்களுக்கு இடையேயான சிறிய இடைவெளியில் வெளியிடப்பட்டு, அருகிலுள்ள நியூரானின் ஏற்பிகளுடன் பிணைக்கப்படுகின்றன. இது சிக்னல்களை ஒரு நியூரானில் இருந்து மற்றொன்றுக்கு அனுப்ப உதவுகிறது. இந்த சிக்னல்கள் மூலம் தான் நாம் சிந்திக்கிறோம், கற்றுக்கொள்கிறோம், நினைவில் கொள்கிறோம், உணர்ச்சிகளை அனுபவிக்கிறோம்.
உதாரணமாக, டோபமைன் என்ற நியூரோட்ரான்ஸ்மிட்டர் சந்தோஷம், பரிசு மற்றும் ஊக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. நாம் ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ளும்போது அல்லது ஒரு இலக்கை அடையும்போது, நமது மூளை டோபமைனை வெளியிடுகிறது. இது நமக்கு திருப்தியை அளித்து, அந்த செயலை மீண்டும் செய்ய ஊக்குவிக்கிறது. செரோடோனின் என்ற மற்றொரு நியூரோட்ரான்ஸ்மிட்டர் மனநிலை, பசி மற்றும் தூக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது.
மூளை செல்கள் புதிய தகவல்களைக் கற்கும்போது, நியூரான்கள் இந்த நியூரோட்ரான்ஸ்மிட்டர்களைப் பயன்படுத்தியே ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன, தகவல்களைப் பரிமாறுகின்றன.
நினைவாற்றல் மரபணுவும், ஒளிரும் புரதமும்
இந்த ஆய்வில், விஞ்ஞானிகள் நரம்பு மற்றும் சிறுநீரக திசுக்களில் இருந்து செல்களை எடுத்து, அவற்றை நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் வெளியிடும் சமிக்ஞைகளுக்கு ஒத்த வகையில், பல்வேறு வேதியியல் சமிக்ஞைகளுக்கு உட்படுத்தினர். இதன் மூலம், காலப்போக்கில் கற்றல் எவ்வாறு நிகழ்கிறது என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
மூளை செல்கள் புதிய தகவல்களைக் கற்றுக்கொள்ளும்போது நியூரோட்ரான்ஸ்மிட்டர்களின் தகவல் பரிமாற்றத்திற்கு உட்படுவது போலவே, மூளை அல்லாத செல்களும் பதில்வினையாக ஒரு “நினைவாற்றல் மரபணுவை (memory gene)” இயக்கின. மூளை செல்கள் தகவல்களில் ஒரு வடிவத்தைக் கண்டறிந்து நினைவுகளை உருவாக்க தங்கள் இணைப்புகளை மறுகட்டமைக்கும் போதும், இதே “நினைவாற்றல் மரபணுவை” த்தான் செயல்படுத்துகின்றன.
கற்றல் மற்றும் நினைவாற்றல் செயல்முறையை கவனிக்க, விஞ்ஞானிகள் இந்த மூளை அல்லாத செல்களை ஒரு ஒளிரும் புரதத்தை உருவாக்கும்படி மாற்றியமைத்தனர். இந்த புரதம், நினைவாற்றல் மரபணு செயல்படும் போது ஒளிரும், செயல்படாத போது ஒளிராது. இதன் மூலம் இந்த மரபணுவின் செயல்பாட்டைக் கண்காணிக்க முடிந்தது.
இந்த ஆய்வில், மூளையின் நியூரோட்ரான்ஸ்மிட்டர்களின் துடிப்புகளைப் போலவே வேதியியல் துடிப்புகள் மீண்டும் மீண்டும் செல்களுக்கு வழங்கப்பட்டன. நாம் தொடர்ச்சியாகப் படிப்பதற்குப் பதிலாக இடைவெளிகளுடன் படிக்கும்போது, நமது மூளையில் உள்ள நியூரான்கள் அதைத் திறம்பட பதிவு செய்வது போலவே, இந்த செல்களும் வேதியியல் சமிக்ஞைகளின் இடைவெளிகளை உணர்ந்தன.
துடிப்புகள் இடைவெளியுடன் வழங்கப்படும்போது, அவை “நினைவக மரபணுவை” தொடர்ச்சியாக வழங்கப்படும்போது இருப்பதை விட வலுவாகவும், நீண்ட நேரமும் செயல்படுத்தின.
கற்கும் திறன் மூளைக்கு மட்டும் உரியதா?
“இது தொகுக்கப்பட்ட – இடைவெளி விளைவு இந்த செல்களில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.” என்று நியூயார்க் பல்கலைக்கழகத்தின் லிபரல் ஸ்டடீஸ் துறையில் உயிர் அறிவியல் பிரிவின் மருத்துவ இணைப் பேராசிரியரும், ஆய்வின் முதன்மை ஆசிரியருமாக நிக்கோலே குகுஷ்கின் கூறுகிறார்.
“தகவல்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதன் மூலம் கற்கும் திறன் என்பது மூளை செல்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல, உண்மையில், அது அனைத்து செல்களின் ஒரு அடிப்படை பண்பாக இருக்கலாம் என்பதை இது காட்டுகிறது.”
நினைவுகள், கற்றல், சிகிச்சை: அனைத்தும் மாறும்!
இந்த ஆய்வு முடிவுகள் நினைவாற்றலை ஆராய்வதற்கு புதிய வழிகளை வழங்குவதோடு, உடல்நலம் தொடர்பான நன்மைகளையும் சுட்டிக்காட்டுகின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
“இந்த கண்டுபிடிப்பு நினைவாற்றல் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு புதிய வழிமுறைகளை அளிக்கிறது. மேலும் கற்றலை மேம்படுத்துவதற்கும் நினைவாற்றல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் புதிய வழிகளைக் கண்டறிய இது உதவும்”
“எதிர்காலத்தில், நாம் நமது உடலின் மற்ற பாகங்களையும் மூளை போலவே கருதி நடத்த வேண்டியிருக்கும் என்ற கருத்தையும் இந்த ஆய்வு முடிவுகள் முன்வைக்கின்றன. உதாரணமாக, இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, நமது கணையம் நமது முந்தைய உணவு முறைகளைப் பற்றி என்ன நினைவில் வைத்திருக்கின்றது? புற்றுநோய் செல்கள் கீமோதெரபி சிகிச்சையைப் பற்றி என்ன நினைவில் கொள்கின்றன?” என்று குகுஷ்கின் கூறுகிறார்.
இந்த ஆராய்ச்சி நமக்கு ஒரு சவால் விடுகிறது: நமது உடலை வேறு விதமாகப் பார்க்க! ஒவ்வொரு செல்லையும் ஒரு அறிவார்ந்த அலகு என்று கருத! இந்த புதிய பார்வை நம்மை எங்கு அழைத்துச் செல்லும் என காலம் தான் பதில் சொல்லும்.
ஆய்வுக்கட்டுரை இணைப்பு :
https://www.nature.com/
கட்டுரையாளர் :
த. பெருமாள்ராஜ்
மூலக்கட்டுரை: https://royalsocietypublishing.org/doi/10.1098/rstb.2022.0459
இத்தொடரின் முந்தைய கட்டுரையைப் படிக்க : கூடி வாழ்ந்தால் கூடுதல் ஆயுள்! புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் – 15
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: சிம்பன்சிகள் சிறப்பாக செயல்பட முயற்சி