புனிதப் பிம்பத்தின் அரசியலைக் கேள்விக்குள்ளாக்கும் வாசிப்பு – யுகபாரதியின் ‘புலித்தோல் போர்த்திய பசு’ – நூல் மதிப்புரை
இந்தியச் சமூகத்தில் வைதீகச் சிந்தனை உருவாக்கிய இருமைக் கட்டமைப்புகள் வெறும் கருத்தியல் எதிரிணைகள் அல்ல; அவை சமூகத்தின் அதிகார உறவுகளையும் பண்பாட்டு மேலாதிக்கத்தையும் நிலைநிறுத்தும் அரசியல் கருவிகள். கறுப்பு/வெள்ளை, புனிதம்/தீட்டு, மேல்/கீழ் போன்ற இருமைகளின் தொடர்ச்சியாகப் பசு/எருமை என்ற எதிரிணையும் கட்டமைக்கப்பட்டுள்ளது. பசுவைப் புனிதத்தின் குறியீடாகவும், எருமையை இழிவு மற்றும் தீட்டின் அடையாளமாகவும் உருவாக்கிய இந்த அரசியலை, தமிழிலக்கியம், பண்பாட்டு மரபு, வரலாற்றுச் சான்றுகள் ஆகியவற்றின் வழியாக விமர்சனப்பூர்வமாக மறுவாசிப்புக்கு உட்படுத்துகிறது யுகபாரதியின் ‘புலித்தோல் போர்த்திய பசு’.
நூலின் தலைப்பு பரவலாக அறியப்பட்ட ஒரு சொல்லாடலை நினைவூட்டினாலும், ஆசிரியர் தனது ஆய்வைத் திருவள்ளுவர் பயன்படுத்திய “பசுத்தோல் போர்த்திய புலி” என்ற உவமையிலிருந்து தொடங்குகிறார். விலங்குகளுக்குச் சமூகத்தில் வழங்கப்படும் குணாதிசயங்களும் மதிப்பீடுகளும் இயற்கையானவை அல்ல; அவை அதிகார மையங்களால் உருவாக்கப்பட்ட பண்பாட்டுக் கட்டமைப்புகள் என்பதே ஆசிரியரின் அடிப்படை வாதம். இதிலிருந்து பசுவின் புனிதப் பிம்பத்தையும், அதற்கு எதிரிணையாக உருவாக்கப்பட்ட எருமையின் சமூகப் பிம்பத்தையும் ஆராய்கிறார்.
வைதீக மரபில் எதிர்மறையாகச் சித்தரிக்கப்பட்ட எருமை, தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல், வேளாண் மரபு மற்றும் இலக்கியங்களில் வளம், உழைப்பு, செழிப்பு ஆகியவற்றின் அடையாளமாக எவ்வாறு விளங்குகிறது என்பதைச் சங்க இலக்கியம், நாட்டுப்புற மரபு, அற இலக்கியங்கள், சமகாலச் சான்றுகள் ஆகியவற்றின் வழியாக நிறுவுகிறார். இவ்வாறு பசுவை மட்டுமே உயர்த்திப் பேசும் ஒற்றைப் பார்வைக்கு மாற்றாக, தமிழ்ப் பண்பாட்டின் பன்முக உயிரியல் மற்றும் வாழ்வியல் பார்வையை இந்நூல் முன்வைக்கிறது.
இந்நூலின் குறிப்பிடத்தக்க சிறப்பு, ஆசிரியர் வாசிப்பின் வழி சேகரித்த தரவுகளையும் தகவல்களையும் வெறுமனே தொகுத்தளிப்பதோடு நின்றுவிடாமல், அவற்றின்மீதான விமர்சனப்பூர்வமான தனது பார்வையையும் முன்வைப்பதில்தான் இருக்கிறது. இலக்கியம், வரலாறு, நாட்டுப்புறவியல், திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலிருந்து பெறப்பட்ட சான்றுகளை சமகால அரசியல் போக்குகளுடன் இணைத்து வாசிப்பதன் மூலம், இந்நூல் தகவல் தொகுப்பைத் தாண்டி ஒரு கருத்தியல் தலையீடாக உருப்பெறுகிறது.
அளவில் சிறிய நூலாக இருந்தாலும், மேற்கோள் காட்டப்படும் இலக்கியங்கள், ஆய்வு நூல்கள், கட்டுரைகள், திரைத்துறைச் செய்திகள் ஆகியவற்றின் பரப்பு ஆசிரியரின் விரிவான வாசிப்பை வெளிப்படுத்துகிறது. ஆய்வுநூலுக்குரிய செறிவையும் பொதுவாசகர்களை ஈர்க்கும் எளிமையான மொழிநடையையும் இணைத்துள்ள இந்நூல், பசு அரசியல், தமிழ்ப் பண்பாடு, இலக்கிய மறுவாசிப்பு ஆகியவற்றில் ஆர்வமுள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான நூலாகத் திகழ்கிறது.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | புலித்தோல் போர்த்திய பசு (Pulithol Porthiya Pasu) |
| ஆசிரியர்: | யுகபாரதி |
| வெளியீடு: | |
| விலை: | ₹25.00 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 முனைவர் ஞா.சத்தீஸ்வரன் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

