யுரேகா கோர்ட் – நூல் அறிமுகம்
ஆதிவாசிகளென அலைந்து திரிந்து காடுகளில் கிடைத்த உணவை உண்டு விலங்குகளோடு விலங்குகளாய் வாழ்ந்து நிர்வாணமாய் நாடோடிகளென நகர்ந்து கொண்டிருந்த மனிதன் குகையில் வாழ்ந்த வாழ்வின் தொடர்ச்சியென நதிக்கரை நாகரிகத்தை வளர்க்க ஆரம்பிக்கிறான். நதியோரத்தில் அவனது வாழ்வும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. இருட்டு அறையில் வாழ்ந்த மனிதனுக்கு சூரிய வெளிச்சத்தைத் தாண்டி வேற எதுவும் தெரியாத சூழலில் நெருப்பும் சக்கரமும் கண்டுபிடிக்கப்பட்டது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைகிறது.
புதிய புதிய தொழில்களின் வழியே மனித இனம் நகர்ந்து புதிய புதிய நிலப்பரப்புகளைக் கண்டறிகிறது. அதன் வழியே நாகரிகத்தின் வளர்ச்சியாலும் தங்களுக்குள் ஏற்பட்ட தொடர்புகளாலும் மனிதன் புதிய கண்டுபிடிப்புகளை தொடர்கிறான். தொழிற்புரட்சியும் அதைத் தொடர்ந்து வேகமான பொருளாதார வளர்ச்சியும் மனித நாகரிகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறது அந்த வகையில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்ததில் மனிதர்களுக்குள் போட்டியும் பூசலும் நிலவுகிறது.
அத்தகு கருவிகளை கண்டுபிடிப்பதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை இந்த கோர்ட் தீர்மானிக்கிறது.
தமிழின் முன்னணி அறிவியல் மற்றும் அறிவியல் புனைக்கதை எழுத்தாளர் தன் அறிவியல் புனைக்கதை நூல்களுக்காக சாகித்திய அகடமி விருது தமிழ் வளர்ச்சித் துறை விருது உட்பட பல பரிசுகளை வென்றுள்ளவர் சிறார்களுக்காக 150 க்கும் மேற்பட்ட நூல்களை படைத்த இன்னும் படைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் ஆயிஷா இரா நடராஜன் அவர்களின் இந்த நூலின் வழியே கண்டுபிடிப்புகளின் சொந்தக்காரர்களை நாம் அடையாளம் காண முடிகிறது
நமக்கு பயன்படும் வகையில் செயல்படும் கருவிகளைப் பற்றிய நமது சிந்தனைக்குள் இருக்கும் கண்டுபிடிப்பாளர்களைப் பற்றிய எண்ணங்களையும் மாற்றிப் பார்க்கிறது இந்த யுரேகா கோர்ட். நமது தினசரி வாழ்வில் நம்மை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்ட இந்தக் கருவிகளே நமது வாழ்வை சிறப்பாக நகர்த்துவதில் முன்நிற்கின்றன என்பதை மறக்கவோ மறைக்கவோ இயலாது.
மின்விளக்கு
தீப்பெட்டி
ரேடியோ
கைக்கடிகாரம்
டெலஸ்கோப்
தொலைபேசி
தொலைக்காட்சிப் பெட்டி
சைக்கிள்
இங்க் பேனா
கேமரா
ஒலிபெருக்கி
கால்குலேட்டர்
செல்போன்
பால்பாயிண்ட் பேனா
இமெயில்
ஜெராக்ஸ்
கம்ப்யூட்டர்
குளிர்சாதனப் பெட்டி
ராக்கெட்
வெப்பமானி
மின்விசிறி
சுவர் கடிகாரம்
மின்சார ரயில்
கார்
என முக்கியமான 24 கண்டுபிடிப்புகளில் யார் கண்டறிந்தவர் என்பதை வரலாற்றின் வழியே நாம் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் உண்மையில் அவர்களது கண்டுபிடிப்புகளுக்கு வேறு நபர் சொந்தம் கொண்டாட கண்டுபிடித்தவர்களுக்குள் போட்டி ஏற்படுகிறது. இருவரும் ஒரே நேரத்தில் கண்டுபிடித்ததாக நீதிமன்றத்திற்கு வழக்கிற்கு வருகிறார்கள். யார் உண்மையிலேயே கண்டுபிடிப்பை நிகழ்த்தியது என்பதை அறிவியல் பூர்வமாகவும் சட்டப்பூர்வமாகவும் நிரூபித்து விளக்கம் அளிக்கிறது இந்த யுரேகா கோர்ட்.
கண்டுபிடிப்புகள் என்பது ஒரு நொடி நேரத்தில் மனிதர்களின் மனதிற்குள் உதித்து உடனேயே நிறைவேற்றும் காரியம் அல்ல. வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தருணங்களில் தான் சந்தித்த அனுபவங்களின் அடிப்படையிலும் தான் கற்ற கல்வியின் துணைகொண்டும் மனிதர்கள் தனது சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறார்கள். ஒரு கண்டுபிடிப்பு என்பது மனிதர்களின் மனங்களுக்குள் இருந்து வெளிப்பட்டு கருவியாக உருவாகி அது பலரது கரங்களுக்குள் சென்று சோதனை செய்யப்பட்டு முழு வடிவம் பெறுவதற்கு பல நாட்கள் மாதங்கள் ஏன் வருடங்கள் கூட ஆகலாம். அதேசமயம் ஒரு சிந்தனை ஒரே மாதிரியாக பலருக்குள் எழும் என்பதும் உண்மையாக நிகழ வாய்ப்புகள் உள்ளன.
அந்த வகையில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமான மனிதர்கள் வெவ்வேறு ஆராய்ச்சி முயற்சிகள் என பல கட்டங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்புகள் சில சமயங்களில் இருவர் ஒரே விதமான கண்டுபிடிப்பை நோக்கி நகர்தலும் நடந்து விடுகின்றன. இந்த நூலில் அப்படியான கருவிகளை சொந்தம் கொண்டாடும் நபர்கள் தாங்கள் தான் அதற்கு சொந்தக்காரர்கள் என்று வாதிட ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் நூல் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் கண்டுபிடிப்புகள் நிஜம் கண்டுபிடித்தவர்களும் நிஜம்.
ஒரே பொருளை ஒரே நேரத்தில் இருவர் கண்டுபிடித்து அதை இருவரும் ஒரே நேரத்தில் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தினால் எதை உலகம் ஏற்றுக் கொள்ளும்? அதற்கும் இந்த நூல் விடை தருகிறது.
ஒவ்வொரு கருவியின் திறன் செயல்படும் ஆற்றல் மனிதர்களுக்கு அது பயன்படும் வேகம் அதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஏதேனும் உண்டா என்பது பற்றிய தீர்வுகள் பொருளாதாரத்தை அதிகப்படுத்தாமல் மிகக் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய பொருளாக இருத்தல் இடத்தை அதிக அளவில் அடைத்துக் கொள்ளாத தன்மை என ஒவ்வொரு கண்டுபிடிப்புகளும் அடுத்தடுத்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு முழு வடிவம் பெற்று மனிதர்களுக்கு உதவி செய்யவே கண்டுபிடிக்கப்படுகின்றன.
நூலில் அறிமுகப்படுத்தப்படும் அறிவியல் அறிஞர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளுக்காக எவ்வாறெல்லாம் உழைப்பை பயன்படுத்தினர் என்பதையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதைப் போல இந்த நூல் சரித்திரம் படைத்த ஐம்பது அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அதே சமயம் அவர்கள் கண்டறிந்த கருவிகளின் பிறப்பு வரலாற்றையும் ஒருசேரத் தருகிறது. வறுமை வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கத் தொடங்கிய போதும் கல்வி பெற முடியாத சூழலில் பற்பல வேலைகளுக்குச் சென்று தமது அன்றாட வாழ்வை நகர்த்திக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் புதிய எண்ணங்கள் தோன்றி அவனை அடுத்த நிலைக்குத் தள்ளி விடுகிறது. இதில் உலா வரும் விஞ்ஞானிகள் வாழ்வை வாசிக்கையில் எந்தத் தருணத்திலும் தமது நம்பிக்கையை இழந்து விடாமல் அடுத்த தலைமுறையை உயர்த்துவதற்கும் உலகத்தை கருவிகளின் வழியே முன்னேற்றத்தின் பாதையை நடத்துவதற்கும் உதவி செய்வதற்காக மட்டுமே தமது கண்டுபிடிப்புகள் பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றனர் என்பதை விவரிக்கிறது.
இந்த நூலில் சுட்டிக் குழந்தைகளும் கண்டுபிடிப்புகளைப் பற்றிய முழுமையான தரவுகளை வழங்கி நம்மை ஆச்சரியப்படுத்துகின்றனர். நூலின் வழியே ஆசிரியர் கூற விரும்பும் முக்கியமான பயனாகக் கருதுவது கண்டுபிடிப்புகள் குழந்தைகளைச் சென்றடைய வேண்டும் என்பதே. அதன் வழியே புதுப்புது சிந்தனைகளும் குழந்தைகளுக்குள் தோன்ற ஆரம்பிக்கும்.
நகர்ந்து வரும் வேகமான அறிவியல் யுகத்தில் மனிதர்களின் வேலைப்பளுவை குறைப்பதற்கான கருவிகள் நாள்தோறும் கண்டறியப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதற்கான அடித்தளத்தை குழந்தைகளுக்கு சிறப்பாக வழங்குகிறது இந்த யுரேகா கோர்ட்
நூலின் தகவல்கள்
நூல் : யுரேகா கோர்ட்
ஆசிரியர் : ஆயிஷா இரா நடராஜன்
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன் 44 2433 2924
முதல் பதிப்பு : பிப்ரவரி 2024
பக்கம் : 128
விலை : ரூ.120
இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.