நீ உதிர்த்த சிறகின் பறவை – இக்கவிதை நூலை மீ.யூசுப் ஜாகீர் எழுதியிருக்கிறார். மௌவல் பதிப்பகம் பிரசுரித்திருக்கிறது.
கல்லூரியில் படிக்கும் போது நிறையக் கவிதைப் புத்தகங்களையும், நண்பர்களின் கவிதைகளையும் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் அப்போது கவிதை எழுதவும் செய்தேன். இந்தக் கவிதைப் புத்தகத்தில் இருக்கும் ஒரு கவிதையைப் போல பல நண்பர்களின் காதலுக்கு என் கவிதையும் உதவியிருக்கிறது.
கவிதைகள் எழுதுவதை மொத்தமாகக் குறைத்துக் கொண்டபோது கவிதைகள் வாசிப்பதும் குறைந்து போனது. படிக்கும் காலத்தில் நாம் வாசிக்க நிறைய கவிதை புத்தகங்கள் வந்தன, இப்போது கவிதைப் புத்தகங்கள் போடுவது என்பது அரிதாகிவிட்டது. ரொம்ப நாளைக்கு… இல்லையில்லை ரொம்ப காலத்துக்குப் பின் முழுக் கவிதை நூலை வாசிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் சகோதரர் நௌஷாத்கான். சில நட்புக்களைச் சந்திக்கும் போது புத்தகங்கள் கொடுக்கும் நல்ல வழக்கத்தை வைத்திருப்பார்கள், அப்படி ஒருவர்தான் நௌஷாத், எப்போது சந்தித்தாலும் ஏதோ ஒரு புத்தகத்தைக் கொடுக்கத் தவறமாட்டார்.
இக்கவிதை நூலில் பெரும்பாலான கவிதைகள் நிறைவேறாத காதலைப் பற்றியே பேசுகிறது. குறிப்பாக காதலியின் நினைவுகளையே அதிகமாகப் பேசுகிறது. அதேபோல் சில கவிதைகளில் வாழ்வியல் வலிகளையும், வாழ்வோடு இயைந்த மழையையும் பற்றிப் பேசுகிறது.
கவிஞர் பிரபு சங்கர் அவர்கள் தனது அணிந்துரையில் ‘பழைய நினைவுகளை கவிதைகள் வழியே வருடிப் பார்ப்பது கவிஞர்களுக்கு உரிய வரப்பிரசாதம். யாரோ ஒரு கவிஞன் அவனது நினைவுகளை எழுதி வைத்துச் சென்று விடுவான், அந்த நினைவுகள் வாசகனுக்குள் நுழைந்து அவனது நினைவுகளை தட்டி எழுப்பும்’ என்று சொல்லியிருக்கிறார். இதுதான் கவிதையின் பாங்கு. காதலியை நினைக்கும் போதும், மழையில் நனையும் போதும் வாசிப்பவனும் அதற்குள் பயணித்து வரத்தான் செய்வான் அல்லவா..!
‘அன்பையும் அதன் வருடலையும், பிரிவையும் அது தரும் துயரத்தையும், நட்பையும் மிக அழகாக தன் வரிகளால் காதல் கவிதைகளாக்கி நம் முன்னே படைத்திருக்கிறார். காதல் பற்றிக் கொள்ளும் இடமெல்லாம் மனிதம் தழைக்கும் என்பதற்கு இவரின் ஒவ்வொரு கவிதைகளும் முன்னுதாரணமாய் அமைந்திருக்கிறது’ என கவிஞர் மண்டகொளத்தூர் நா.காமராசன் அவர்கள் தனது வாழ்த்துரையில் சொல்லியிருக்கிறார். நான் மேலே சொன்னது போல் காதல் கவிதைகளையே அதிகம் கொடுத்திருக்கிறார். அதனால்தானோ என்னவோ காதல் பற்றிக் கொள்ளும் இடத்தில் மனிதம் தழைக்கும் என்று சொல்லியிருக்கிறார்.
‘சிறகே ஒரு பறவை போல் மிதப்பது என்பது ஒரு தனித்துவமான பார்வை. காதலைப் பொறுத்தவரை, வெற்றியோ தோல்வியோ அதன் ஞாபகங்களைச் சேமிக்கவும் முடிவதில்லை; செலவு செய்யவும் முடிவதில்லை. அப்படியொரு அவஸ்தையை பெரும்பாலான கவிதைகளில் கொட்டித் தீர்த்துள்ளார் கவிஞர்’ என்று தனது வாழ்த்துரையில் கவிஞர் தி.கலையரசி சொல்லியிருக்கிறார். அதுதான் உண்மை. பக்கத்துக்குப் பக்கம் காதலின் பிரிவைக் கொட்டித் தீர்த்திருக்கிறார்.
இக்கவிதைத் தொகுப்பில் பல கவிதைகள் ‘அட’ என ஆச்சர்யப்பட வைத்தன. சில கவிதைகளின் ஊடே அழகான, கவிஞயமான வரிகள் அழகாய்ச் சிரிக்கின்றன. சில கவிதைகள் வசன கவிதைகளைப் போல இருந்தன; சில கவிதைகள் உரைநடை பாணியில்லாமல் வார்த்தைகளை அழகாக்கி வசீகரிக்க வைத்திருக்கலாமோ என்று நினைக்கவும் வைத்தன.
இத்தொகுப்பில் என்னைக் கவர்ந்தவை பல, அவற்றில் இருந்து சில இங்கே…
‘எல்லாப் பறவைகளுக்கும்
சிறகுகள் இருக்கலாம்…
ஆனால் எல்லா பறவைகளும்
சுதந்திரமாய் பறப்பதில்லை..!’
‘எல்லா வெற்றிடங்களும்
நிரப்ப வேண்டும் என்ற
கட்டாயம் இல்லை…
சிலவற்றில் வெற்றிடங்களாகவே
இருப்பதுதான் நல்லது’
‘உடைந்த கோலிக்
குண்டுகளுக்குள்
தேடிப்பார்க்கிறேன்
என்னையும் மீறி
தொலைந்து போன,
எதைப்பற்றியும்
அலட்டல் இல்லாத,
மழைக்காலங்களின்
நாட்களை..!’
‘காதல் என்பதே காயங்களை
நேசிப்பதுதானே…
எங்கும் வாழ்ந்து கொண்டேயிருக்கும்
உலகில் மலர்ந்த
ஒவ்வொரு காதலும்
யாரோ ஒருவரின் மனதில்..!’
‘யாரோ வீசியெறிந்த
ஒற்றைக்கல்லில்
கலங்கி நிற்கிறது
குளம்..!’
‘இரவு வெறும் பொழுது
மட்டுமல்ல
நினைவுகள் உதிர்க்கும்
பூக்காடு..!’
‘எல்லா மதத்தவருக்கும் ஒரே
பிரார்த்தனை அறை
நூலகம்..!’
‘மெழுகுவர்த்திகள் இறந்தபிறகு
மீண்டும்
உயிர்த்தெழுகின்றன
இருட்டுகள்..!’
‘மழையும் நினைவுகளும்
காதலும் திருமணமும்
இரண்டு முகங்கள் கொண்டது
சிலருக்கு வரமாகவும்…
சிலருக்கு சாபமாகவும்…’
‘அவளோடு பேச
நேரம் தேடும் எனக்கும்…
கிடைத்த நேரமெல்லாம்
என்னோடு பேசும்
அவளுக்கும்,
மனதளவில்
சமுத்திரத்துக்கும்…
சிறு துளிக்குமான
இடைவெளி..!’
இப்படி இன்னும் பல கவிதை வரிகளைச் சொல்லலாம். ‘நீ உதிர்த்த சிறகின் பறவை’ என்னும் தனது இரண்டாவது தொகுப்பின் மூலம் கவிஞனாய் உயர்ந்து நிற்கும் யூசுப் ஜாகிர் அவர்கள், இன்னும் சிறப்பான கவிதைகளோடு இன்னும் பல தொகுப்புக்களைக் கொண்டு வர வாழ்த்துகள்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | நீ உதிர்த்த சிறகின் பறவை |
| ஆசிரியர்: | மீ. யூசுப் ஜாகீர் |
| வெளியீடு: | மௌவல் பதிப்பகம் |
| விலை: | ₹.150 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 பரிவை சே.குமார் |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அன்பின் நன்றிகள் தோழர் 🫂💐