Zero consultation started from zero Article by Theni Sundar தேனி சுந்தரின் கட்டுரை பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வைத்த பூஜ்ஜியக் கலந்தாய்வு

பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வைத்த பூஜ்ஜியக் கலந்தாய்வு – தேனி சுந்தர்



பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வைத்த பூஜ்ஜியக் கலந்தாய்வு..!

தேனி மாவட்டத்தில் கலந்தாய்வு அறிவிப்பிற்கு முன்பிருந்த மொத்த ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்கள் 56. அதில் இறப்பு, ஓய்வு, கன்வர்சன் காரணமாக கட்டாயமாகப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் 10. (வழக்கு காரணமாக இன்னும் 8 பேர் பணி விடுவிப்பு செய்யப்படவில்லை). ஆக, இந்த நிலையிலேயே தேனி மாவட்டத்தில் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 13 ஆகும். கலந்தாய்வுக்கு இருநாள் முன்னதாக பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதன் அடிப்படையில் புதிதாக 22 பணியிடங்கள். ஆக மொத்தம் தேனி மாவட்டத்தில் மட்டும் 35 காலிப் பணியிடங்கள் இருந்தன. மாவட்டத்திற்குள் வர வேண்டும் என கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தவர்கள் எண்ணிக்கை 15.

ஏற்கனவே இருப்பவர்கள் தொடர்ந்து சொந்த மாவட்டத்தில் பணிபுரிவது போக, பணி நிரவல் காரணமாக வெளியில் சென்றவர்கள் 15 பேரும் மாவட்டத்திற்குள் வந்திருக்க முடியும். அது மட்டுமின்றி கூடுதலாக இன்னும் 20 பேர் தேனி மாவட்டத்திற்குள் வந்திருக்க முடியும். மிக முக்கியமாக பணி நிரவல் காரணமாக மாவட்டத்திற்கு வெளியில் சென்றவர்களை உள்ளே கொண்டு வருவதற்கான முயற்சியாக நடந்த இந்த கலந்தாய்வில் வெறும் 3 பேர் மட்டுமே உள்ளே வர முடிந்திருக்கிறது. மீதமுள்ள 12 பேர் இந்த ஆறேழு ஆண்டுகளாக பழகி, பரிட்சயமான மாவட்டத்தையும் விட்டுவிட்டு, சொந்த மாவட்டத்திற்குள்ளும் வர முடியாமல், மற்றொரு புதிய மாவட்டத்தில் புதிய பணியிடத்தில் அறிமுகமில்லாத பகுதியில் மீண்டும் தங்கள் பணியினை பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண்டிய சிக்கலுக்கு ஆளாகி இருக்கின்றனர். மாவட்டத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த ஆசிரியர் பயிற்றுநர்கள் பந்தாடப்பட்டு மாநிலம் முழுவதும் சென்று புதிய இடங்களில் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆசிரியர் பயிற்றுநர்கள் பணி மிக முக்கியமான பணி. அரசு கொண்டு வரும் புதிய திட்டங்கள், மாறுதலாகும் கற்பித்தல் முறைகள், மதிப்பீடு தொடங்கி பள்ளியின் குடிநீர், கழிப்பறை வசதிகள், பள்ளி மேலாண்மைக் குழு, பள்ளிக்கு தேவையான கணினி, தொலைக்காட்சி, கற்றல் உபகரணங்கள் என அனைத்தையும் வழங்குவது, பெற்றுத் தருவது, வழங்கியவை முறையாகப் பயன்படுத்தப் படுகிறதா, பராமரிக்கப்படுகிறதா என கண்காணிப்பது, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது, அளிக்கப்பட்ட பயிற்சிகள் முறையாக வகுப்பறையில் அமலாகிறதா எனப் பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு வழிகாட்டுவது, குறைகளைச் சுட்டிக்காட்டி பணியை மேம்படுத்துவது, அதன் மூலம் குழந்தைகளின் கற்றல் மேம்பாட்டிற்கு ஏதுவான சூழலைப் பள்ளியில் உருவாக்குவது, மேல்மட்டத்தில் இருந்து கூறப்படும் அனைத்து பதிவேடுகளும் பராமரிக்கப்படுவதை பார்வையிடுவது, அதை ஆசிரியர்கள் மனம் நோகாமல் சுட்டிக்காட்டுவது, நடைமுறைப்படுத்த விடாது போராடுவது, எமிஸ் என்கிற இணையதளம் மூலமாக கொடுக்கப்படும் அனைத்து பணிகளையும் துரிதமாக முடிக்க ஆசிரியர்களிடம் இடைவிடாமல் கலந்துரையாடி அதை முடிக்க வைப்பது, அப்படியும் விடுபட்டுப் போன பள்ளிகளின் பணிகளை அலுவலகத்திலும், பேருந்து பயணத்திலும், வீட்டிலும் என இணையத்துடன் போராடி முடித்துக் கொடுப்பது என 24 மணி நேர சீருடைப் பணியாளர்கள் போல ஒருபுறம் அதிகாரிகளுடனும் இன்னொரு புறம் ஆசிரியர்களுடனும் என இருபுறம் அடிவாங்கும் மத்தளம் போல சிரமப்பட்டாலும் மறுநாள் காலையில் சிரித்துக் கொண்டே *வணக்கம் மேம், நம்ம ஸ்கூல்ல எல்லாரும் தடுப்பூசி போட்டாச்சா மேம்..? அந்த தகவல்களை கொஞ்சம் எமிஸ்ல அப்டேட் பண்ணி விட்டுருங்க மேடம்.. அதுல சிரமம் இருந்தா சொல்லுங்க.. தேங்க்யூ மேம்.. தேங்க் யூ மேம்!* என்று பேசிக் கொண்டிருப்பார்கள்..

இந்த பணிகளுக்கு ஆசிரியர்களுடன் அறிமுகமும், அவர்கள் இயல்பறிந்து பேசும் பக்குவமும் அவசியம். இந்த அறிமுகமும் பக்குவமும் ஓரிரு நாளில் வந்து விடாது. அதற்கு சில ஆண்டுகள் ஆகும்.. அது வரை மேலிடத்தில் இருந்து இன்று மாலைக்குள்.. இன்று இரவுக்குள்.. இன்று முற்பகலுக்குள்.. பிற்பகலுக்குள்.. உணவு இடைவேளைக்குள் என்று வாட்ஸ்அப் மூலமும் மின்னஞ்சல் மூலமும் கேட்கப்படும் தகவல்கள் உரிய நேரத்தில் வந்து சேராது என்பதே யதார்த்தம்..

இயல்பு நிலை திரும்ப இன்னும் சில வருடங்கள் ஆகும். அத்தியாவசியமான இந்தப் பணியில் சிக்கல்களை, சிரமங்களை அறியாமல் நடத்தப்பட்ட இந்த கலந்தாய்வு அனைவரும் மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து தங்கள் பணிகளைத் தொடங்கும் சங்கடத்திற்கு ஆளாக்கி இருக்கிறது என்பதை ஒருவரும் மறுக்க முடியாது..!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *