நூல் அறிமுகம்: சிவராம் காரந்தின் அழிந்த பிறகு | தமிழில்: சித்தலிங்கய்யா – இடங்கர் பாவலன்
கன்னடத்தில் எழுதி தமிழில் மொழிபெயர்த்த சிவராம் காரந்த் அவர்களின் அழிந்த பிறகு என்கிற புதினத்தின் தலைப்பே நமக்குள் ஓர் கிளர்ச்சியை உண்டு பண்ணிவிடுகிறது. அதென்ன அழிந்த பிறகு? எல்லாமும் அழிந்த பின்னால், மனிதனே இல்லாமல் அழிந்து போன பின்னால் என்ன இருக்கிறது? அதற்கான தேடலின் விடையை இந்நாவல் சொல்ல முயன்றிருக்கிறது.
மனிதன் இறந்த பின்பு என்னாவான்? அவன் செய்தவற்றிற்கெல்லாம் மோட்சம் கிடைக்குமா? இறப்பிற்கு பின் மறுபிறவி சாத்தியமிருக்கிறதா? என்கிற தேடல் காலங்காலமாக இருந்து கொண்டே வந்திருக்கிறது. தன் வாழ்வின் மீதான அதீத பற்றின் காரணமாக மனிதனுக்குள் இறப்பிற்குப் பிறகும் சுவர்க்கமோ நகரமோ ஏதோவொன்று வாழ்வதற்குத் தேவையாகிறது. அதற்கு உதவுபவர்களாக கடவுளர்களையெல்லாம் மனிதன் கணக்குப்பிள்ளையாகவே இன்றுவரையிலும் அவன் வைத்திருக்கிறான். ஆனால் இப்புதினம் இறப்பிற்கு பின்பான மனிதனின் மெய்யான வாழ்வின் அர்த்தத்தைத் தேடிச் செல்கிறது. உண்மையில் இதுவொரு பயண நாவலைப் போலத்தான் இருக்கிறது. அதிலேதான் இந்நாவல் நமக்கு கூடுதலான சுவாரசியத்தையும் தருகிறது.
யசவந்த் என்கிற ஒருவரை தன் ரயில் பிரயாணத்தினூடே எதார்த்தமாக சந்தித்துக் கொள்கிற கதைசொல்லிக்கு சில காலத்திற்குப் பிறகாக தந்தியொன்று வருகிறது. “அவசரம், உடல்நிலை சரியில்லை, உடனே கிளம்பி வரவும்” என்று முடிந்த அந்த தந்தியை தாங்கிக் கொண்டு மும்பை செல்வதற்குள் அந்த யசவந்த் மாண்டும் போகிறார். அவர் இறப்பதற்கு முன்பாகவே காரந்திற்கு ஒரு கடிதத்தையும், 15000க்கான(1960களில்) காசோலையையும் பெட்டிக்குள் பத்திரப்படுத்திவிட்டு அதை நல்வழியில் செலவு செய்வதற்கான சில குறிப்புகளையும் வைத்துவிட்டு செல்கிறார்.
அதில் சில நபர்களுக்கு மட்டும் மாதாமாதம் 25 ரூபாய் அனுப்பிவிடவும் அதில் கனிவுடன் சொல்லியிருப்பதைத் தொடர்ந்து இவர்கள் யார், நம் நண்பரின் பின்புலம் என்ன, இவர்களுக்கும் நம் நண்பருக்கும் எத்தகைய தொடர்பு, நண்பர் ஏன் இப்படி யாருமற்று அனாதையாக இறந்து போனார், அவர் வாழ்ந்த வாழ்வுதான் என்ன என்று தேடத் ஆரம்பிப்பதில் இருந்து நாவல் சிறகு விரிக்கத் துவங்குகிறது.
நான் புத்தகம் வாசிக்கத் துவங்கிய ஆரம்ப நாட்களில் ஜென் கதைகளில் வருகிற பத்து மாடுகள் பற்றிய வரைப்படமும் அதன் விளக்கமும் என்னை மிகவும் ஈர்த்திருந்தன. ஒவ்வொரு வரைபடத்தின் மூலமும் நம் வாழ்க்கையை இழுத்துப் பிடித்திருக்கிற கண்ணியை ஆராய்ச்சி செய்யும் மெய்யியல் தேடலைத் தூண்டிவிடும் அற்புதத்தை அதிலே நான் பல சந்தர்ப்பங்களில் சிந்தித்துப் பார்த்து உணர்ந்திருக்கிறேன்.
இந்நாவலில் இறந்து போன அதாவது நாவல்படி அழிந்து போன யசவந்த் என்பவர் ஒரு ஓவியர். கோணல் மாணலாக வரையப்பட்ட அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அவரின் நாட்குறிப்புகளை வைத்து தேடலைத் துவங்குகிறார் நண்பர் காரந்த். இக்கதையே காரந்த், யசவந்த் அவர்களைப் பற்றிய தேடுவலையும், அவர் வாழ்வு பற்றிய உண்மைகளைக் கண்டறிவதைப் பற்றியுமாகவே இருக்கும்.
மணியாடர் அனுப்பச் சொல்லியிருந்த நபர்களின் பெயர்களெல்லாம் ஏதோ குறியீடு வைத்து அவரது நாட்குறிப்பில் எழுதியவற்றை வைத்து ஏதாவது துருப்பு கிடைக்குமா என்று பக்கங்களை புரட்டியபடியே இருக்கிறார். ஒவ்வொரு பக்கங்களிலும் தன்னுடைய வாழ்வில் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் அதன் வழியே அவர் கண்ட வாழ்வின் அர்த்தங்களையும் குறித்து குறித்து வைத்திருக்கிறார். ஒருகட்டத்தில் தான் மணியாடர் அனுப்ப இருக்கிற மனிதர்களும், அந்த நாட்குறிப்பில் குறியீட்டு வடிவத்தில் இருப்பவர்களும் அவர்களது கதையைத் தான் அவரது ஓவியங்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன என்பதையும் ஒருசமயத்தில் காரந்த் கண்டு பிடிக்கிறார்.
இப்படி அந்த ஒவ்வொரு மனிதர்களைத் தேடித் தேடி தனது இறந்து போன நண்பர் யசவந்த் அவர்கள் யார், அவர் வாழ்க்கையின் தேடல் என்ன என்று தெரிந்து கொள்கிற மையம் தான் இப்புதினத்தின் அற்புதமே!
மெலிந்த தாய்ப்பசுவின் பால் சுரக்காத மடியில் கருப்பு நிற எருமைக்கன்று குடிப்பது போலான ஓவியத்தையும், எட்டு வயதிலே விதவையாகிவிட்ட பார்வதியம்மாளிடம் வளர்ப்புப் பையனாக யசவந்த் வளர்ந்த விதத்தையும் ஒருசமயத்தில் பொறுத்திப் பார்க்கிறார். அதில் மடி வற்றிப்போன தாய்ப்பசு பார்வதியம்மாளாகவும் பொருத்தமில்லாத கருப்பு எருமைக் கன்று யாசவந்த்தாகவும் இருப்பதை அவர் நாவலின் வழியே நேரில் சென்று அறிந்து கொள்கிறார்.
அதேபோல மாட்டின் மீது அமர்ந்த மைனா தோலிலுள்ள உன்னியை பொறுக்குகிறேன் என்று கொத்தி அங்கே புண்ணாக்குவது போலவும், மாமரத்தை கொடியொன்று ஒட்டுண்ணியோல சுற்றிப் படர்வதைப் போலவுமான ஓவியங்கள் வழியே பல தேடல்களும் அற்புதமான திறப்புகளும் இந்நாவலின் வழியே நமக்கு கிடக்கின்றன.
இந்நாவலை படிக்கும் போதே ஒரு திரைப்படத்தை பார்த்த உணர்வு ஏற்பட்டது என்று நான் சொல்வது சத்தியமாக பொய்யல்ல. இந்நாவல் மட்டும் திறப்படமானால்??? இப்படியொரு கேள்வி உள்ளுக்குள் ஆரம்பத்திலிருந்து கிளர்ந்து கொண்டேயிருக்கிறது. உண்மையில் இப்புதினம் இதுவரையிலும் படமாகவில்லையென்றால், இனிமேலாவது படமாக்குவது பற்றி திரைத்துரையினர் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.