பதிப்புரை

எஸ்.ஆர்.வி பள்ளியின் மாற்றுக்கல்வி முயற்சியில் மற்றுமொரு கிளைச்செயல்பாடாக எஸ்.ஆர்.வி தமிழ்ப்பதிப்பகத்தைத் தொடங்கி பல நூல்களை பதிப்பித்து வருகிறோம். ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக குழந்தைகளுக்காக மாணவர்களுக்காக நல்ல கதை புத்தகங்களைத் தேடினோம்.

கதை புத்தகங்களை தேடிய பொழுதுதான், தேடித்தேடி வாசித்த போதுதான், ஒரு உண்மை புரிந்தது. ஆங்கிலத்தில் இருக்கும் அளவிற்கு தமிழில் அவ்வளவாக குழந்தைகளுக்கான புத்தகங்கள் இல்லை என்பது. குழந்தைகளுக்கான புத்தகங்கள் நிறைய இருக்கின்றன ஆனால் அது பெரியவர்களால் பெரியவர்கள் மொழியில் எழுதப்பட்டது.

குழந்தைகள் எப்படி பேசிக்கொள்வார்கள்? குழந்தைகளுக்கு எது பிடிக்கும்? குழந்தைகள் பயன்படுத்துகிற மொழி எது? ஒரு மாணவனும் இன்னொரு மாணவனும் எந்த மொழியில் பேசிக்கொள்வார்கள்? அவர்கள் வாழுகிற காலத்தில் அவர்கள் பயன்பாட்டில் உள்ள பொருட்கள், நவீன தொழில்நுட்ப வசதிகள் பற்றியெல்லாம் பெரியவர்களுக்கு தெரிய சங்கதிகள் கைவசம் இல்லை.

இந்தச் சூழ்நிலையில் தமிழ் எழுத்தாளர்கள் சிலரை சந்தித்து, நாங்கள் இந்தக் குறைபாடுகளை சொல்லி, குழந்தைகளுக்கான கதைகள் எழுத வேண்டும் என்று கேட்டப்பொழுது, குழந்தைகளுக்கு கதைகள் எழுதுவது சிரமம் என்றார்கள்.

அப்பொழுதுதான் நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களும் அண்ணன் ச.தமிழ்ச்செல்வன் அவர்களும் நமக்கு உதவுவதற்கு முன் வந்தார்கள். சில கதைப் புத்தகங்களைத் தொகுத்து கொடுத்தார்கள். பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நல்ல தொகுப்பை எஸ். ராமகிருஷ்ணன் ‘வானெங்கும் பறவைகள்‘ என்ற தலைப்பில் கொடுத்தார். அடுத்த ஆண்டு ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் ‘கதை நேரம்,’ ‘பக்கத்தில் வந்த அப்பா’ என்ற கதை தொகுப்புகளை தொகுத்து கொடுத்தார். யூமா வாசுகி அவர்கள் ‘உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்,’ ‘கண்ணாடி’ போன்ற மிகச்சிறந்த கதைகளைத் தொகுத்து கொடுத்தார். இருந்தாலும் கூட கதைகள் புதிதாக எழுத வேண்டிய அவசியம் இருப்பதை நாங்கள் உணர்ந்து கொண்டே இருக்கிறோம்.

அறிவியல், வரலாறு, தேசப்பற்று, வாழ்க்கைத் திறன்கள், இலக்கியம், நாடகம், வாழ்க்கை வரலாறு என இருபதிற்கும் மேற்பட்ட தலைப்புகளில் எஸ்.ஆர்.வி தமிழ்ப் பதிப்பகம் நூல்களை பதிப்பித்து வெளியிட்டிருக்கிறது. இப்படித்தான் உங்கள் கைகளில் தவழுகின்ற ‘இரண்டாம் சுற்றும்‘ ஒரு கதையாகி, வரலாறாகி இன்று, நூலாகி இருக்கிறது.

2008ஆம் ஆண்டு ஒரு மழை நாளில், மாலை நேரத்தில் தென்றெலென நம் பள்ளிக்கு வந்தவர் ஆர்.பாலகிருஷ்ணன். மத்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக இருந்த காலகட்டத்தில், ஒரு கடிதத்திற்கு பதில் தரும் விதமாக, அன்பின் நீரூற்றாக நம்பள்ளிக்கு வருகை தந்தார். அறைக்குவெளியே பெய்துகொண்டிருந்த மழையை விட அறைக்கு உள்ளே பெய்த மழை அடர்த்தியான சிந்தனையை வளர்த்தது. அன்று பாலகிருஷ்ணன் அவர்களின் உரை மாணவர்களின் உள்ளத்தில் ஒரு புதிய எழுச்சியை, மலர்ச்சியை ஏற்படுத்தியது.

‘சிறகுக்குள் வானம்’ என்ற அழகான புத்தகம் ஆர் பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களுடைய எழுத்து வண்ணத்தில், அண்ணன் டிராட்ஸ்கி மருது அவர்களின் ஓவியத்தில் மிகச்சிறந்த நூலாக உருவானது. கிட்டத்தட்ட 20000 பிரதிகள் அச்சிடப்பட்டன. தமிழ்நாட்டில் பல்வேறு திசையில் இருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் படித்து மகிழ்ந்தார்கள். பல நூறு கடிதங்கள் பதிலாக வந்தன. கடிதங்களையெல்லாம் தொகுத்துப்பார்த்தால் இரண்டு மூன்று புத்தகங்களாகும். அந்தக் கடிதங்கள் எல்லாம் குழந்தைகளும், மாணவர்களும், பெற்றோர்களும் ‘சிறகுக்குள் வானம்‘ படித்துவிட்டு எழுதியவை.

ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களிடம் நாங்கள் கேட்டுக்கொண்டதெல்லாம் சிறகுக்குள் வானம் இன்னொரு பாகம் எழுத வேண்டும் என்பதுதான். தங்களுடைய வாழ்வில் 20 ஆண்டுகள் அனுபவத்தை ‘சிறகுக்குள் வானத்தில்‘ கொண்டு வந்து விட்டீர்கள். இன்னும் 20 ஆண்டு கால வாழ்க்கையை நீங்கள் புத்தகமாக எழுத வேண்டும். அது மாணவர் உலகத்திற்கு பயன்படும் என்று வேண்டுகோள் வைத்த பொழுது, அன்பாகவும் பிடிவாதமாகவும் மறுத்தார். இந்த இடத்திலே சுஜாதா பாலகிருஷ்ணன் அவர்களை மகிழ்ச்சியோடும் நன்றியோடும் நினைவுக்கூர விரும்புகிறோம். சுஜாதா பாலகிருஷ்ணன் அவர்களை தொடர்பு கொண்டு ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களை நீங்கள் எழுத தூண்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

‘சுஜாதா விளைவின் காரணமாக இரண்டாம் சுற்று நூல்’ எழுதுவதற்கான நாள் குறிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாற்றின் அடர்ந்த காட்டினிடையே எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, நண்பர் பாரதி நாகராஜன், அண்ணன் பாலகிருஷ்ணனோடு அமர்ந்து புத்தகத்திற்கான தயாரிப்பில் ஈடுபட்டோம். உடனடியாக இரண்டாம் சுற்று என்ற வாட்ஸ் அப் குழுவை உருவாக்கினோம். ஒவ்வொரு பகுதியாக ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் கதைச்சொல்லி முடிக்க முடிக்க கேட்பவர்களின் கண்களில் கண்ணீர் பெருகியது.

மிக அழகாக அறிவியல், சமூகம், சமூகப்பார்வை, உணர்வு, உறவு உரையாடல், தமிழ் நிர்வாகம், மானுட பண்பு, அத்தனையும் கலந்து மிகச்சிறந்த தமிழ் அமுதை படைத்திருக்கிறார் இந்தத் தமிழ் அழகன். இரண்டாம் சுற்று எஸ்.ஆர்.வி மாணவர்களுக்காக மட்டுமே எழுதப்பட்டது. ஆனாலும் எஸ்.ஆர்.வி மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று எண்ணுவது சுயநலமாகும். தமிழகம் தாண்டி உலக மக்களெல்லாம் பயன்படுத்தி பயனுற வேண்டும் என்பதே எஸ்.ஆர்.வி பள்ளியின் நோக்கமாகும்.

இந்த நோக்கத்தை சரியாக பயன்படுத்த உதவிய பள்ளியின் தலைவர் திரு.A.ராமசாமி அவர்கள், செயலாளர் P.சுவாமிநாதன் அவர்கள், பொருளாளர் S.செல்வராஜன் அவர்கள், துணைத்தலைவர் M.குமரவேல் அவர்கள், இணைச்செயலர் B.சத்யமூர்த்தி அவர்கள், அத்துணை பேருக்கும் மிக அன்பான நன்றிகளை பதிவு செய்கிறோம். குறிப்பாக பள்ளியின் இணைச்செயலர் டாக்டர்.B.சத்யமூர்த்தி அவர்கள் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் எழுத்திற்கு மிக சிறந்த தீவிர ரசிகர்; வாசகர். அவரின் எழுத்தை குழந்தைகள் வாசிக்க வேண்டும் என்று விரும்புகிறவர். அவருக்கு ஒரு சிறப்பு பாராட்டும் நன்றியும்.

இந்த நல்ல புத்தகம் வெளியே வருவதற்கு உதவிய நண்பர் பாரதி புத்தகாலயம் நாகராஜன் அவர்களுக்கும், எழுத்தாளர்கள் கமலாலயன், பொன்.தனசேகரன் அவர்களுக்கும் இந்த நேரத்திலே நன்றியை பதிவு செய்வது எங்கள் கடமையாகும். எங்கள் பள்ளியின் ஆசிரியர்கள் பரிமளா தேவி, யாஸ்மின், ரூபவதி, சுஜாதா, வினோதா, தம்பி அந்தோணி அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகள். குறிப்பாக பரிமளா அவர்களின் கைவண்ணம் இந்தப் புத்தகத்திலும் நேர்த்தியாக நெய்யப்பட்டிருக்கிறது.

ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் தமிழ் எழுத்துக்கும் அவருடைய எழுத்து நடைக்கும் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு இந்நூல். அவருடைய வாழ்க்கையின் வரலாறு என்று சொல்வதை காட்டிலும் அவருடைய வாழ்க்கை பிறருக்கு பயன்படும் விதத்திலே இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். நன்றி எங்கள் அழகிய தமிழ் மகனுக்கு.
எஸ்.ஆர்.வி தமிழ்ப் பதிப்பகம்

ஒரு தமிழ் மாணவனின் இமாலய வெற்றி

“தீர்மானமாக நீ முடிவு எடுத்தவுடன் அதை நிறைவேற்ற பிரபஞ்சம் சூழ்ச்சி செய்கிறது”
– ரால்ப் வால்டோ எமர்ஸன்.

மந்திர உச்சாடனங்களின் வழியேதான் கடவுளரின் உருவங்களுக்கு ஆற்றல் பிறப்பதாக ஆத்திகர்களின் ஒரு பகுதியினர் எண்ணுகிறார்கள். அதேபோல், ‘இரண்டாம் சுற்று’ நூலைப் படித்தவுடன் எமர்ஸனின் மேற்கூறிய கூற்று கூடுதல் வலுப்பெறுவது புலனாகிறது. நாட்டின் கடைக்கோடி கிராமத்திலிருந்து ஓர் தமிழ் மாணவன். தமிழ் படிக்க வேண்டும். தமிழிலேயே குடிமைத் தேர்வுகள் எழுதிட வேண்டும்.

தமிழ் மாணவன் என்ற அடையாளம் போய்விடக்கூடாது என்பதற்காக உலகெங்கும் கல்வி கற்கக் கிடைத்த வாய்ப்புகளைத் துறந்த வியப்புக்குரிய செயல் என இரண்டாம் சுற்று நூலின் தொடக்கம் முதல் இறுதி வரை ஒரு தமிழ் மாணவனின் இமாலய வெற்றி குறித்த இராஜபாட்டை என்பதுதான் பொருத்தமாக இருக்கும். திரு. பாலகிருஷ்ணன் அவர்களின் தன் வாழ்க்கைப் பயணத்தில் மனமகிழ்வுடன் தமிழ் நெடுஞ்சாலையின் வழியே சென்று இமயத்தை எட்டியிருக்கிறார்.

தமிழ்மொழி கொண்டு உலகைத் தொடர்ந்து தரிசிக்கிறார் என்ற உறுதியான முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. அமெரிக்க விண்வெளி வீரர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது இவர் மனம் பாரதியின் ‘வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்!’ என முணுமுணுக்கிறது. நக்சல்வாதிகளால் நிறுத்தப்பட்ட தேர்தல் நடைமுறைகளை நேர்மையாக நடத்திட இவரை அனுப்பி வைத்தால் பஸ்தர் காடுகளில் குறிஞ்சி நிலப் பண்பாட்டுக் கூறுகளைத் தேடிக் கொண்டிருக்கிறார். இவர் எண்ணம், வண்ணம் செயல் அனைத்திலும் தமிழ் தொடர்ந்து நடமாடிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.

மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக கடும் பணிப்பளுவுக்கு இடையிலும் இடப் பெயர் ஆய்வு மற்றும் சிந்துவெளி ஆய்வு குறித்து இவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் உலகப் புகழ் பெற்றவை. தான் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகக் கூடும் என்ற அந்தக் குரூர நொடியில் கூட தான் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வெளியிடாமல் வைத்திருந்த சிந்துவெளி ஆராய்ச்சி குறித்து கவலைப்பட்ட மனிதரை எப்படி விவரிப்பது?

ஒரு சிறந்த நிர்வாகி தன்னுடன் பணியாற்றுபவர்களைத் தட்டிக் கொடுத்துப் பணியாற்றுவது மட்டுமல்ல தவறுகளுக்கு முழுமுதல் பொறுப்பு ஏற்பதும்தான் சிறப்பு வாய்ந்த தலைமைக்கு அடையாளம். திறமையானவரைக் கண்டுபிடிக்கும் திறமை தலைமை ஏற்று நடத்துபவர்களுக்கு தேவையான குணம். சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகளைக் கையாள்வதில் இருந்து வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவது வரை திரு. பாலாவின் முத்திரை நாடறிந்தது.

தமிழ்நாட்டிலிருந்து சென்றவரின் அலுவல் பயணத்தில் சமூகநீதி இரண்டறக் கலந்ததில் என்ன ஆச்சர்யம்? விளிம்பு நிலை மக்களின் துயர் துடைத்திட, கடைக்கோடி பழங்குடி மக்களை நோக்கி பத்து மணி நேர நடைப்பயணம், திறன் வளர் பயிற்சி, நலத்திட்டங்கள் என அவர் மேற்பார்வையில் அரசு இயந்திரம் கருணை முகம் தரித்ததை உணர முடிகிறது.

‘இரண்டாம் சுற்று’ எனும் இந்த நூலில் சில இடங்கள் சில தருணங்கள் மற்றும் சில நபர்களை, காலம் முதல் சுற்று முடிந்து இரண்டாம் சுற்றில் வேறுவகையில் அறிமுகப்படுத்துகிறது. முதல் சுற்றின் அனுபவங்களை இழந்து விடாமல் இரண்டாம் சுற்றின் அதிர்வலைகளை உணர்வது ஒரு புதிய அனுபவமே. மனிதர்களை அவர்தம் நிறை, குறைகளுடன் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் கலந்த தருணங்களை வெற்றி தோல்வி இல்லா வெற்றிடத்தை உணரச் செய்யும் உன்னத வேளை.

இந்நூலில் பரவிக் கிடக்கும் கவித்துவ வரிகள், கலைத்திறன் மிக்க சொல்லாடல்கள், சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய கவிதைகள், ஆங்காங்கே இழையோடும் அங்கதம் இவற்றையெல்லாம் பார்க்கும்போது ஒரு சிறந்த இலக்கியவாதியினை அரசு இயந்திரம் சிறைப்பிடித்து வைத்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

இந்நூலில் ‘ப்ரோனோயா’ (Pronoia) மனப்பான்மை குறித்தும் ‘நாளை குறித்த ஞாபகம்’ எனச் சிக்கலான கருத்தாக்கங்களை மிக எளிமையாக விளக்குவது மிக அருமை.திரு. பாலா அவர்களின் அலுவல் வகை சாகசப் பயணத்தின் உற்சாகத்தை என்னால் உணர முடிகிற அதே நேரத்தில் ஐஏஎஸ் தேர்வை நோக்கிய அவரின் பயணத்தில் நடந்த நிகழ்வுகளையும் எனக்கு நேர்ந்த நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அபார ஒற்றுமை. ஆச்சர்யம்தான்.

தமிழ்ப் பண்பாட்டைக் காத்திட தமிழ்த்தாய் அவ்வப்போது தலைசிறந்த படைவீரர்களை போர்க்களத்திற்கு அனுப்பி வைப்பாள் என்று சொல்வது உண்டு. தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடிப் பயணம் செய்திடவே வைகைக் கரையிலிருந்து ஒரு தமிழ் மாணவன் மகாநதிக்கரைக்குச் சென்றிட பணிக்கப்படுகிறான். வேர்களைத் தேடச் சென்ற அம்மாணவன் விருட்சமாகிறான். இமாலய வெற்றி பெற்ற அதன் விழுதுகள் இரண்டாம் சுறறிலும் பண்பாட்டு அதிர்வலைகளை உருவாக்கிடும்.
வாழ்த்துகள்.
16.5.2018. த. உதயசந்திரன்

என்னுரை

குழந்தைக்கு பெயர் வைப்பதை விடவும் கொஞ்சம் கூடுதலான சிரமமாகத்தான் இருக்கிறது புத்தகத்திற்கு தலைப்பு வைப்பது. குழந்தைக்காவது ‘அழகான பெயர்’, ‘சாமி பெயர்’, ‘இந்த எழுத்தில் தொடங்கும் பெயர்’ என்று வைத்துவிடலாம். என்னவோ தெரியவில்லை, ‘சிறகுக்குள் வானம்’, ‘பன்மாயக் கள்வன்’ ,‘நாட்டுக்குறள்’, ‘அன்புள்ள அம்மா’ என்ற எனது முந்தைய நூல்களுக்கு பெயர் சூட்டியபோது எடுத்துக்கொண்ட எந்த சிரத்தையையும் கலந்தாலோசனையையும் நான் ‘இரண்டாம் சுற்று’ என்ற இந்தத் தலைப்பிற்காக மேற்கொள்ளவில்லை.

இந்த நூலிற்கான முதல் வரியை எழுதும் போதே ‘இரண்டாம் சுற்று’ என்பது ஒரு காட்சிப்படிமமாய் எனக்குள் இருந்தது. அதனால் அதிகம் யோசிக்காமலேயே ‘இரண்டாம் சுற்று’ என்று பெயர் வைத்து விட்டு இப்போது இந்த என்னுரையை எழுதும் போது யோசிக்கிறேன் ‘இரண்டாம் சுற்று’ என்றால் என்ன?

வாழ்க்கையில் இரண்டாம் சுற்று என்று உண்மையில் எதுவும் இருக்கிறதா ? இல்லை அது வெறும் மனத்தோற்றமா? இரண்டாம் சுற்று என்பது முதல்சுற்றின் தொடர்ச்சியா அல்லது ஒரு புதிய சுற்றின் தொடக்கமா ? ஓட்டப்பந்தய மைதானத்தில் முதல்சுற்று, இரண்டாம் சுற்று, இறுதிச்சுற்று என்று ஓடுவது; கிரிக்கெட் மைதானத்தில் முதல் இன்னிங்ஸ், இரண்டாவது இன்னிங்ஸ் என்று விளையாடுவது போன்றதா இது?

முதல் சுற்று, இரண்டாம் சுற்று என்றெல்லாம் வகை பிரித்துப் பார்க்க யாரால் இயலும்? அதற்கு இலக்கணம் அல்லது வரையறை எதுவும் இருக்கிறதா? 93 வயதில் மலேசியாவில் ஒருவர் மீண்டும் அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடிக்கிறார். பறிக்கப்பட்ட மருத்துவக்கனவை பறிகொடுக்க முடியாமல் பறந்து போகிறாள் அனிதா. இதில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று, இறுதிச்சுற்று என்றெல்லாம் நூல் பிடித்து அளக்க யாரால் முடியும்?

இருந்தாலும், இரண்டாம் சுற்று என்று எதுவுமே இல்லை என்று என்னால் அடித்துச் சொல்லவும் முடியவில்லை. ஏனெனில், வாழ்க்கை என்ற தொடர் ஓட்டத்தில் “இது எனது இரண்டாம் சுற்று” என்று எனக்குள் நான் நெகிழ்ந்து உணர்ந்த பல தருணங்கள் உண்டு. அந்த நிமிடங்களுக்கெல்லாம் ஒரு பொதுத்தன்மை உண்டென்றால் அது என் கண்களில் கசிந்த, கசிகிற ஈரம் தான். இதோ விட்டத்தை வெறுமையாய் வெறித்துப் பார்த்தபடி மல்லாந்து படுத்துக்கிடக்கிறேன்—சென்னையில் அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில்.

மனசில் குறுக்கும் நெடுக்குமாய், கோணல் மாணலாய், சின்னதாய், பெரிதாய் ஆயிரம் யோசனைகள். மூன்று நாட்களுக்கு முன்புகூட நன்றாகத்தானே டில்லியில் ஓடியாடி வேலை பார்த்தேன்; இரவு ஒன்பதுமணிவரை தேர்தல் ஆணையத்தில் எனது அலுவலகத்தில் கிடந்தேனே; கிட்டத்தட்ட போனமாதம் முழுவதும் அமெரிக்காவில் பயிற்சியில் இருந்தேனே; அன்னை தெரசாவின் ‘தலைமைத் தன்மை’ பற்றி டென்வரில் பேசினேனே; போன வாரம்தானே இந்தியப்பொதுத் தேர்தலை எப்படித்திட்டமிட்டோம், எப்படி நடத்தினோம் என்பதை இந்தியாவின் ஐ.நா. பிரதிநிதி முன்னிலையில் ஐ.நா. சபை அதிகாரிகளுக்கு நியூயார்க்கில் மணிக்கணக்கில் விளக்கினேன். அப்போதெல்லாம் நன்றாகத்தானே இருந்தது; ஒன்றும் தெரியவில்லையே; ஏழு நாட்களில் எல்லாம் தலைகீழா ? இனி எது மேல்? எது கீழ் ? பாதை இருக்கட்டும், பயணமே சாத்தியமா ? நாளை என்றொரு நாள் இருக்கிறதா? வலது பெருங்குடலில் புற்றுநோய் என்பது உறுதியாகிவிட்டது. இதை மருத்துவர்கள் என்னிடம் சொல்வதற்கு முன்னால், எனது மனைவியின் கலங்கிய கண்களில் அச்சத்தை நனைத்து அச்சடித்திருந்த மருத்துவ அறிக்கையை என்னால் வாசிக்க முடிந்தது.

ஆதங்கமும், கையறுநிலையும் என்னை முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டிருந்த அந்தச்சூழலிலும் நான், ‘இரண்டாம் கருத்து’, ‘மூன்றாம் கருத்து’ என்று நேரத்தைச் செலவிடாமல் டாக்டரிடம் “அடுத்து என்ன ?” என்று கேட்டேன். அந்த டாக்டர் எனது நெடுநாள் நண்பரும் கூட. “உடனடியாக அறுவைசிகிச்சை செய்து கட்டியை அகற்ற வேண்டும்.அதற்குப்பின் தேவைப்பட்டால் மற்ற சிகிச்சைகள்” என்றார். “அறுவை சிகிச்சைக்கு நீங்கள் எப்போது தயாராக முடியும்?” என்று கேட்டார். நான், “இப்பொழுதே” என்றேன்.

நல்லவேளையாக, ‘ ஒப்புக்கொள்ள மறுத்தல்’ , ‘விலகி ஓடுதல்’ என்ற மனநிலைக்குள் நான் போகவேயில்லை. அந்தக் கடினமான, கசப்பான உண்மையை உடனடியாக கண்ணீர் ததும்ப நானும் எனது மனைவியும், குழந்தைகளும் ஏற்றுக்கொண்டோம். மனதை நோகடிக்க வேண்டாம் என்று பெற்றோர் உள்பட குடும்பப் பெரியவர்கள் யாரிடமும் என்ன ஏது என்று விளக்கமாகச் சொல்லவில்லை. எனது நெருங்கிய நண்பர்கள் அரண் போல நின்றார்கள் அருகில். ஆனாலும் “எனக்கு ஏன் இது நேர்ந்தது?” என்ற ஒற்றை வினா எனக்குள் எழத்தான் செய்தது. அந்தக் கேள்வி எனக்குள் எழும் போதெல்லாம் இன்னொரு எதிர்க் கேள்வியை எனக்குள் எழுப்பி என்னை நானே நேர்செய்து கொண்டேன்.

நூற்று முப்பதுகோடி மக்கள் வாழும் இந்த நாட்டில், ஐந்தாயிரம் பேர் மட்டுமே இந்திய ஆட்சிப்பணியாளர்கள்; அவர்களுள் நீயும் ஒருவன்; அதிலும் முதல் முயற்சியில் வென்றவன். தமிழ் இலக்கியம் படித்து இந்திய ஆட்சிப் பணியில் அமர்ந்த முதல் மாணவன். இவ்வளவு பெரிய கூட்டத்தில், இந்தப் பெருமிதத்திற்கு வாழ்க்கை உன்னை ஏன் தேர்ந்தெடுத்தது? இந்த “நான் ஏன்?” என்ற கேள்வி அப்போது உனக்குள் வந்ததா?

தேர்வு எழுதும்போதே உனது பெயரை ‘ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.’ என்று தினமணி அலுவலகத்தில் யாருக்கும் தெரியாமல் அச்சுக்கோர்த்து அச்சடித்து ’பர்சில்’ வைத்துக்கொண்டு அழகு பார்த்தாயே, அந்தத் ‘தெனாவெட்டு’ எப்படி வந்தது என்று காரணம் கேட்டாயா ?

ஐ.ஏ.எஸ். ஆவதற்கென்றே ‘கொம்புசீவி விடப்பட்டு’ வளர்ந்தவர்கள் நடுவே நீ எங்கிருந்தோ சென்று வென்ற போது திருவிழாக்கூட்டத்தில் காணாமற்போன சின்னக்குழந்தைபோல் மலைத்து நின்றாயே? அப்போதுகூட இது ஏன், எப்படி சாத்தியம் என்று நீ புலன் விசாரித்தாயா? ஆராய்ச்சி செய்வதையே முழுநேரப் பணியாகக் கொண்ட ஆயிரம் பேராசிரியர்களுக்கு நடுவே நள்ளிரவுகளிலும் விடுமுறைகளிலும் சுயவிருப்பத்தால் தோண்டித்துருவி சிந்துவெளியில் தமிழ்க் ‘கொற்கை’ முத்தெடுத்து கொண்டு வந்தாயே அது ‘உனக்கானது’ என்றால் இதுவும் ‘உனக்கானது’ தான். அதைப்போலவே இதையும் நீ ஏற்றுக்கொள் என்று மனசு பணித்தது. அந்த மனசே அதை ஏற்றுக்கொண்டது. அதுவன்றி, அப்போது நான் வேறு என்ன செய்திருக்க முடியும்? அறுவை சிகிச்சைக்கூடத்திற்கு ‘ஸ்ட்ரெச்சரில்’ கொண்டு செல்லப்படும் நடைவழியில் மேலுள்ள கூரை நகர்ந்து கூடவே வருகிறது.

எனது கைகளை இறுக்கிப்பிடித்து நம்பிக்கையூட்டுகிறார் எனது மனைவி. அன்னை தெரசாவின் ‘மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸ்’ அமைப்பைச் சேர்ந்த சகோதரிகள் எனக்காக அங்கே வந்து பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார்கள். “ நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு” என்ற குறளில் உள்ள ‘பெருமை’ என்ற வார்த்தை மட்டும் எழுத்துரு வடிவில் என் கண்முன் தோன்றி பெரிதாய், இன்னும் பெரிதாய் வளர்வதாய் எனக்குத் தோன்றியது. நான் நம்பிக்கையுடன் உள்ளே சென்றேன். மயக்கமருந்தில் நினைவிழக்கும் போது எனது ‘ப்ரியமான’ முகங்களை உள்வாங்கிக்கொள்கிறேன். ‘பெருமை’ என்ற வார்த்தை மேலும் பெரிதாய் எனக்குள் வளர்கிறது. அதை உச்சரிக்க முயன்றபடி நினைவை இழக்கிறேன்.

இன்று. 2018 ஆம் ஆண்டு ,மே மாதம் 13 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை. புவனேஸ்வரத்தில் எனது வீட்டில் எனது மடிக்கணிணியில் இந்த என்னுரையை எழுத்தாக்குகிறேன். ‘இரண்டாம் சுற்று’ இன்னும் ஓரிரு நாட்களில் அச்சுக்கு போகவேண்டும். இந்த நூலின் பல்வேறு கட்டுரைகளும் கவிதைகளும் சொல்லவிரும்பும் உணர்வை, செய்தியின் சாரத்தை துரிதகதியில் ஒருமுகப்படுத்த முயல்கிறேன்.

எனது ‘சிறகுக்குள் வானம்’ ஈர்ப்புவிசை மீறி மேலெழும்பிப் பறப்பது பற்றியது என்றால் இந்த ‘இரண்டாம் சுற்று’விழுந்தபின் மீண்டும் எழுந்து நடப்பது பற்றியது. “அவரவர் வானம்; அவரவர் சிறகு” என்று சிறகுக்குள் வானத்தில் எழுதியிருந்தேன். அதைப்போலத்தான் இந்த இரண்டாம் சுற்று. இலக்கணம் எதுவும் இல்லை இதற்கு. அவரவர் சுற்று; அவரவர் கணக்கு. அவரவரது பயணத்தில் ஏதோ ஒரு புள்ளியில் “இது எனது இரண்டாம் சுற்று” என்ற உள்ளுணர்வு மேலோங்கக் கூடும். அது மேலோங்காமலும் போகலாம். யாருக்குத் தெரிகிறது அடுத்த திருப்பம்? எத்தனை பேரால் முடிகிறது உட்கார்ந்து உயில் எழுத?

பயணம் செய்த பாதைகளில் மீண்டும் பயணிக்கும் போது கடந்த கால நிகழ்வுகளுக்கும் நிகழ்கால நிகழ்வுகளுக்கும் இடையிலான மிக நேர்த்தியான, கவித்துவமான தொடர்ச்சி சிலநேரங்களில் கண்கூடாகிறது. அதை உணர்ந்து உள்வாங்கும் போது அது எதேச்சையானதா அல்லது நமக்கு விளங்காத ஒரு ‘மாயக்கரத்தின்’ முன்னேற்பாடா என்ற ஓர் இனிமையான குழப்பம் குடைந்து எடுக்கும். கொஞ்சம் கவனமாக இல்லையென்றால் அது நம்மைச் சில அதீத உணர்வுகளின், தெளிவற்ற நம்பிக்கைகளின் மடியில் கிடத்தி மயங்கவைத்துவிடும். அதற்கு இடம் கொடுத்துவிட்டால், கை விரல்களின் மீதிருக்கும் நம்பிக்கையை விட கை ரேகைகள் மீது நம்பிக்கை கூடிவிடும்.

இதோ, 32 ஆண்டுகளுக்கு முன்னால் 1986 இல் மணிக்கணக்காக மலைகளைக் கடந்து நடந்து சென்ற ‘கடைசி மைலுக்கு’ 2017 இல் சாலை போட்டு காரில் செல்கிறேன்; எனக்கு புற்றுநோய் சிகிச்சை அளித்த மும்பை டாக்டர் பெந்தர்கர் ஒடிசாவில் முப்பது மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் இலவச சிகிச்சைத் திட்டத்தின் உந்துவிசையாக இருக்கிறார்; நான் படிப்பதற்கு போக முடியாத சிகாகோ பல்கலைக்கழகத்தில் சிந்துவெளி பற்றி உரையாற்றுகிறேன்; நான் தொடாமல் விட்டு விலகிச்சென்ற முனைவர் பட்டத்தை கடைசியில் எனது ஆய்வுகளுக்கான பெருமிதமாக, மதிப்புறு முனைவர் பட்டமாக என் கைகளில் ஏந்தி நிற்கிறேன்; இவை எல்லாவற்றையும் விட, மேலும் மேலும் சான்று தேடும் முனைப்பில் நான் அறிவிக்காமல் அடைகாத்த சிந்துவெளியின் ‘கொற்கை வஞ்சி தொண்டி வளாகத்தை’ 2010 இல் கோவை செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கில் பதற்றம் கலந்த பரவசத்துடன் நான் அறிவிக்கிறேன் – புற்று நோய் சிகிச்சை முடிந்து ஒரிரு மாதத்தில் நான் கலந்துகொள்ளும் முதல் பொதுநிகழ்வாக அது அமைகிறது.

இது போன்ற தருணங்களில் இனம் புரியாத ஓர் ‘இரண்டாம் சுற்று உணர்வு’ என்னைக் கவ்விக்கொண்டு கண்ணீரை வரவழைக்கிறது. அவ்வாறு, இரண்டாம் சுற்று உணர்வில் நான் ஆட்பட்டிருக்கும் ஒவ்வொரு முறையும், எனது கல்லூரி நாட்களில் நான் மீட்டெடுத்த அந்த “குன்றக்குடி அடிகளார் சுழற்கேடயத்தை” ஒரு குறியீடாக எனது ‘நாளை குறித்த ஞாபகம்’ போல எனது கைகளில் ஏந்திக்கொண்டு நிற்பது போல உணர்கிறேன்.

இந்த ‘இரண்டாம் சுற்று’, பள்ளி மாணவ மாணவியர்களை மனதில் வைத்து நான் எழுதிய ‘சிறகுக்குள் வானம்’ நூலிலிருந்து பலவகைகளில் வேறுபட்டது. தற்காலக் கல்வி மற்றும் சமூகச் சூழல்களின் அழுத்தங்கள் மிக வித்தியாசமானவை. நம்மைச் சுற்றி நிகழும் சில அண்மை நிகழ்வுகள் நம்மை வேறு கோணத்தில் யோசிக்கவைக்கின்றன. சொந்த ஊரில் படிப்பு, சொந்த ஊரில் வேலை, சொந்த ஊரில் வாழ்க்கை என்பதெல்லாம் மலையேறி வெகுகாலம் ஆகிவிட்டது. நமது குழந்தைகள் தங்களின் தன்முனைப்பிற்கும் அப்பாற்பட்ட புறக்காரணிகளின் தாக்கத்தை எதிர் நோக்க தயாராக இருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, விடாமுயற்சி, கடின உழைப்பு, நேரம் தவறாமை என்பது போன்ற ஆளுமை வளர்க்கும் சொல்லாடல்களுக்கும் அப்பால் சென்று எதார்த்த உலகின், நடைமுறை வாழ்க்கையின் சில தத்துவார்த்தமான உண்மைகளை எனது அனுபவங்களின் ஊடாகப் பேசமுயல்கிறேன்.

எனது படைப்பிற்காக மீண்டும் ஒருமுறை நண்பர் டிராட்ஸ்கி மருது தனது பங்களிப்பைச் செய்துள்ளார். தமிழ்க்களத்தில் தொடர்ந்து இயங்கும் தூரிகைப் போராளி அவர். ‘சிறகுக்குள் வானம்’, ‘நாட்டுக்குறள்’, ‘பன்மாயக் கள்வன்’ போன்ற எனது படைப்புகளுக்கு அவரது ஓவியங்கள் ஓர் அழகான, கூடுதல் பரிமாணத்தைக் கொடுத்தன. . உங்கள் கரங்களில் தவழும் இந்தப் படைப்பிலும் அவரது தூரிகை மொழி.

அவரது கோட்டோவியங்களைக் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள். அந்தக் கண்ணாடியின் முன்பு நிற்பது நானாகவோ அல்லது உங்களில் யாருமாகவோ இருக்கலாம். ஆனால் அந்தக் கண்ணாடியில் தெரியும் உருவம் எதிரே நிற்கும் உருவத்தின் வெறும் பிம்பமாக இல்லாமல் வேறொன்றையும் கூடுதலாகச் செய்கிறது. சக்கர நாற்காலியில் இருப்பவன் தலையில் ’பீனிக்ஸ்’ பறவையின் சிறகைப் பரிவுடன் சூட்டுகிறது. கண்ணாடி முன் பெருமிதத்துடன் நிற்பவன் கையில் ஒரு பூங்கொத்தை கொடுக்கிறது. பாதையைப் பார்ப்பவன் முன் குனிந்து மலர்களைக் காட்டுகிறது. அந்த எதிர் நிற்கும் உருவம் நானும் தான்; நீங்களும் தான். அதோ, அங்கிருக்கும் அவர்களும் இங்கிருக்கும் இவர்களும் தான். அவர்களின் முகம் தெரியத் தேவை இல்லை. முகவரி தேவையே இல்லை. அன்பும் பரிவும் தான் அந்த முகமும் அதன் முகவரியும். அந்த அன்பை, பரிவை, அக்கறையை அரவிந்த் கண் மருத்துவமனையில் “டாக்டர்.வி” என்று அழைத்தார்கள்; அழைக்கிறார்கள். அழைப்பார்கள். இது பற்றி ‘அரவிந்த என்னும் அற்புதம்’ என்ற கட்டுரையில் பதிவிட்டிருக்கிறேன். படித்துப்பாருங்கள்.

இந்த இரண்டாம் சுற்று உருவான விதமே ஓர் அலாதியான அக்கறை கலந்த அழகியல். “எழுதுங்கள் எழுதுங்கள்” என்று தொடர்ந்து வற்புறுத்திப் பார்த்துவிட்டு நண்பர் துளசிதாசன் (பள்ளி ’முதல்வர்’ என்பது எவ்வளவு பெரிய பதவி. பொறாமையாகக் கூட இருக்கிறது) ’அதிரடியாக’ நாள் குறித்துவிட்டார் கோதையாறு செல்வதற்கு. நாகர்கோயிலில் ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்ற எனது நூலிற்காக த.மு.எ.க.ச விருது வாங்கிய கையோடு ‘இரண்டாம் சுற்று’ பற்றி ஆற அமர அமர்ந்து விவாதிக்க நானும் துளசிதாசன், தோழர் நாகராஜன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி ஆகிய நால்வரும் கோதையாறு சென்றோம்.

அதைத்தொடர்ந்து ‘இரண்டாம் சுற்று வாட்ஸ் அப்’ குழு உருவானது. நண்பர் சங்கர சரவணன், ரோஜா முத்தையா நூலக இயக்குனர் சுந்தர் கணேசன் ஆகியோரும் குழுவில் இணைந்தனர். நூல் உருவாக்கத்தில் சமயபுரம் எஸ்.ஆர்.வி பள்ளியின் முதல்வர் துளசிதாசனோடு ஆசிரியைகள் பரிமளா தேவி, ரூபா ஆனந்த், ரோஜா முத்தையா நூலகத்தின் மணிகண்ட சுப்பு, சுரேஷ், பெங்களூர் கார்த்திகா கோபிநாத் ஆகியோரும் பங்களிப்பு செய்தனர். இரண்டாம் சுற்றிற்காக ஒடிசா வந்து பத்து நாட்கள் என்னுடன் தங்கி உதவி செய்தார் கமலாலயன். இதோ இரண்டாம் சுற்றை திருச்சி ‘எஸ். ஆர். வி. பப்ளிக் ஸ்கூல்’ தொடக்க விழாவில் வெளியிட்டே தீர்வதென்று அதிரடியாக நாள் குறித்துவிட்டார்கள்.

எனது பணிசார்ந்த பொறுப்புகளில் மூழ்கி ‘தலையை வெளியே எடுக்கமுடியாமல்’ ஓட்டமும் நடையுமாக இருக்கும் என்னை விடாமல் துரத்தி இவர்கள் எல்லாம் ‘இரண்டாம் சுற்று’ என்ற இந்த நூலை ஏன் சாத்தியமாக்குகிறார்கள்? என்னையும் இவர்களையும் எது ஒரு கோட்டில் இணைக்கிறது? ஒருவகையில், இது போன்ற கேள்விக்கான விடையைத் தான் இந்த ‘இரண்டாம் சுற்று’ தேடுகிறது.

எனது பேச்சையும் எழுத்தையும் மாணவ மாணவியரிடம் கொண்டு சேர்ப்பதில் அக்கறையும் ஈடுபாடும் கொண்ட எஸ்.ஆர்.வி மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் ஏ.இராமசாமி, தலைவர்; பி.சுவாமிநாதன் செயலர், எஸ். செல்வராஜன் பொருளர்; எம்.குமரவேல் துணைத்தலைவர்; டாக்டர் பி.சத்யமூர்த்தி இணைச் செயலர் மற்றும் பள்ளியின் முதல்வர் எனது அருமைத்தம்பி துளசிதாசன் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நூலிற்கு அணிந்துரை எழுதுவது யார் என்ற கேள்வி தோன்றும் முன்னரே தோன்றிய விடையின் பெயர் த. உதயச்சந்திரன். இந்திய ஆட்சிப் பணிக்கு பெருமை சேர்க்கும் குடிமைப்பணியாளர் அவர். நிகழ்காலத் தமிழ்ச்சமூகத்தின் பொறுப்புமிக்க ஆளுமைகளில் ஒருவர். எனது மதிப்பிற்குரிய நண்பர். இந்த நூலிற்கு அணிந்துரை எழுதிய அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.

எனது ஆழமான விருப்பங்கள் அடுத்தடுத்து சாத்தியமாகின்றன. அது என்னை மேலும் மேலும் மகிழ்விக்கிறது. இந்த உலகத்தில் என்னை அறிந்த, அவ்வளவாக அறியாத பலரும் எனது விருப்பங்களை நிறைவேற்ற ‘கூட்டுச்சதி’ செய்து உழைக்கிறார்கள்.

வாழ்க்கை மிக ரசனையானது. தனித்தனி புள்ளிகள் போலவும் இருக்கிறது; ஒரே கோடு போலவும் இருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் நினைவுகளின் தொடர் ஓட்டமாய் இருக்கிறது வாழ்க்கை. ஒரு சாயலில் புனைகதை போல இருக்கிறது. இன்னொரு கோணத்தில் அச்சு அசலாக கண்முன் நின்று கைகுலுக்கி, கண்சிமிட்டிச் சிரிக்கிறது நிதர்சனமாய். எப்படிப் பார்த்தாலும் மொத்தத்தில் அழகாகத்தான் இருக்கிறது இந்த உலகம்.

“இதோ
நான் ஊன்றிய விதையின்
வேர்களில் விழுந்தன
எல்லையில்லா வானத்தின்
ஈர மழைத்துளி.

எனது ஜன்னலில்
இதமான சூரியன்
மொழிபுரியாதவர்களுக்கும்
புரிகிறது
நான் முணுமுணுக்கும் வார்த்தை
விடைகள் தெரியாத
வினாக்களும்
கண்சிமிட்டிச் சிரிக்கும்
வியப்புகளும்
ஊடுபயிராய்
ஒன்றாக விளையும்
வயல்போல் இருக்கிறது
வாழ்க்கை.
ஆனாலும், அதனாலும்
அது
வசீகரமாக இருக்கிறது.
இதோ
வரிந்துகட்டி நிற்கிறது
உலகம்
என்னை வரவேற்க.
மகிழ்ச்சி.

‘இரண்டாம் சுற்று’ என்ற இந்த அனுபவத்தை எனக்கு சாத்தியமாக்க என்னை மீட்டெடுத்த எனது மனைவி சுஜாதாவையும், எங்களது மகள்கள் ஓவியாவையும் ஸ்மிருதியையும் இந்த நூல் மிகவும் மகிழ்விக்கும்.
அன்புடன்,
புவனேஸ்வரம் ஆர். பாலகிருஷ்ணன்
13.05.2018

உள்ளே

1. தமிழ் நெடுஞ்சாலை
2. குன்றக்குடி அடிகளார் சுழற்கேடயம்
3. விடிந்தால் தேர்வு
4. முன்கூட்டியே போட்ட மொட்டை
5. முகவரி அல்ல, முகம்
6. கடைசி மைல்
7.அரவிந்த் என்றோர் அற்புதம்
8.கோராபுட் பக்கம் தான் சிகாகோ
9.நவ்ரங்பூர்
10. ‘நாளை’ குறித்த ஞாபகம்
11. அந்தரத்தில் ஊஞ்சல்
12. பஸ்தர் என்னும் தாய்மடி
13. மிக்க நன்றி
14. உலகத்தை முத்தமிட்டவர்
15. மதிப்புறு முனைவர்
16. வைகை முதல் வைகை வரை
17. எல்லையற்ற பிரபஞ்சம்

 

தமிழ் நெடுஞ்சாலை

இது எனது நெடுஞ்சாலை. இதற்கு தமிழ் நெடுஞ்சாலை என்று நான் பெயர் வைத்திருக்கிறேன். நீண்ட காலமாக இந்தச் சாலையில் தொடர்ந்து பயணம் செய்து வருவதால் இதை நான் நெடுஞ்சாலை என்கிறேன்.

இதிலுள்ள பெயர்ப்பலகைகளாய், மைல் கற்களாய் மட்டும் இன்றி தமிழே பாதையும் பயணமுமாய் இன்னும் சொல்லப்போனால் இலக்காகவும் இருப்பதால் இதை நான் “தமிழ் நெடுஞ்சாலை” என்கிறேன். நான் செய்திருக்கும், செய்துகொண்டிருக்கும் பயணங்கள் யாவுமே இந்த ஒரே ஒரு நெடுஞ்சாலையின் வழியாகவே நடைபெற்றதாக, நடைபெறுவதாகத் தோன்றுகிறது. இந்த தமிழ் நெடுஞ்சாலையே எனக்கு பிற மொழிகளையும் கற்றுக்கொடுத்திருக்கிறது.

நான் ஒரு தமிழ் மாணவன். நான் படித்தது தமிழ் மட்டுமே. எனது முகமும் முகவரியும் தமிழ்தான். தமிழ் மாணவன் என்ற அந்த ஒற்றை அடையாளத்தைத் தவிர வேறெந்த அடையாளமும் எனக்குப் பெரிதில்லை என்ற உறுதியுடன் எனது கால்கள் இன்றுவரை நடக்கின்றன.

எனக்கு எனது பணி மற்றும் பதவி சார்ந்த வேறு அடையாளங்கள் இருக்கலாம். அவை அவ்வப்போது எனது கையில் திணிக்கப்படுகிற எனது புதிய புதிய அடையாள அட்டைகள். அவை எல்லாம் ஒருவகையில் எனது தமிழ் நெடுஞ்சாலையில் நான் கடந்து வந்திருக்கிற, கடந்து கொண்டிருக்கிற மைல் கற்களாகவும் கூட இருக்கலாம். ஆனால், மைல் கல் ஓர் அளவுகோல் அல்லது அறிவிப்புப் பலகை அவ்வளவு தான். மைல்கல்கள் நெடுஞ்சாலை ஆகிவிட முடியாது. அதனால், எனது இந்த நெடுஞ்சாலைக்கு வேறு யாரும் வேறு எந்தப் பெயரையும் வைத்துவிடக் கூடாதென்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.

இந்த நெடுஞ்சாலை என்னை இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கும் உலகின் மிகப்பல நாடுகளுக்கும் கொண்டு சென்றிருக்கிறது. நான் செல்ல நினைத்த திசைகளும் தேசங்களும் மட்டுமன்றி நான் செல்வேன் என்று நினைக்காத தேசங்களும் கூட இந்த தமிழ் நெடுஞ்சாலையிலேயே வந்துவிடுவதால் நான் வேறொரு மாற்றுச் சாலைக்கான தேவையைக் கூட ஒருபோதும் உணர்ந்ததில்லை.

இந்த நெடுஞ்சாலை வெறும் பாதை மட்டும் அல்ல. அது எனது பயணமும் கூட என்பதால் எனது பயண அறிவும் அதன் பலனான பட்டறிவும் எனது தமிழ் நெடுஞ்சாலை மிகப்பரிவுடன் எனக்களித்த கொடைகள்.

இந்திய ஆட்சிப்பணியின் ஒரு சிறப்புத்தன்மை, அப்பணி அளிக்கிற விரிவான களமும், வெவ்வேறு வகையான அனுபவங்களுமே ஆகும். ஒவ்வொரு புதிய பொறுப்பும் ஒவ்வொரு புதிய படிப்புதான். ஒன்றோடொன்று தொடர்பில்லாத பலவிதமான பணிகளைச் செய்கிற போது புதிய புதிய படிப்புகள் என்பவை தொடர்கதைகளாகவே மாறி விடுகின்றன.

சுற்றுலாத் துறைக்கும்,தேர்தல் மேலாண்மைக்கும் வெகு தூரம்தான். சுற்றுலாத் துறையில், முகத்தைச் சிரித்தபடி வைத்திருக்க வேண்டும். தேர்தல் பணி செய்யும்போது சிரிக்கவே கூடாது. இவை எல்லாம் பணி சார்ந்த தேவைகள். இதற்கு வெளியே புதிய கல்வித் தகுதிகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகள் வந்து கொண்டேதான் இருக்கும்.

இந்திய ஆட்சிப்பணியில் இருந்தாலும், நான் சட்டக்கல்வியில் ஒரு பட்டம் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று எனது நண்பர்கள் அடிக்கடி சொல்லுவார்கள். நான் இ.ஆ.ப. தேர்வு எழுதி வெற்றி பெற்றபோது அகில இந்திய அளவில் 99-ஆவது இடம் பெற்றிருந்தேன். மசூரியில் பயிற்சிக்காலத்தில் பல்வேறு தேர்வுகளை மீண்டும் எழுத வேண்டும். அத்தேர்வுகளில் கிடைக்கும் மதிப்பெண்களை குடிமைத் தேர்வின் போது கிடைத்த மதிப்பெண்களோடு சேர்த்து, புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடுவார்கள். இரண்டு ஆண்டுகால பயிற்சியின்போது கிடைத்த மதிப்பெண்களின் பயனாக நான் 99-ஆவது இடத்திலிருந்து,66-ஆவது இடத்திற்கு ‘இடம்’ பெயர்ந்தேன். இதற்கு முக்கியக் காரணம்,பல்வேறு சட்டத் துறைகளைச் சார்ந்த பல்வேறு தேர்வுகளில் எனக்குக் கிடைத்த அதிகமான மதிப்பெண்கள்தாம்.

“சட்டத் துறையில் கல்வித்தகுதி பெற்றால் பலவிதங்களில் உதவிகரமாக இருக்கும்; தேவைப்பட்டால், வழக்கறிஞராகக் கூட போய் விடலாம்” என்று ஆலோசனை சொல்வார்கள். அடுத்து, மேலாண்மைத் துறை. பொதுவாக இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள், வெளிநாடு சென்று மேலாண்மைத்துறையில் உயர்கல்வி பெற வாய்ப்புகள் வரும். அதுமட்டுமன்றி, பணியின் தொடக்க காலத்திலிருந்தே நிதி மேலாண்மை, பேரிடர் மேலாண்மை,தேர்தல் மேலாண்மை என்று பல்வேறு துறைகளில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்ததால்,இவற்றில் ஏதாவது ஒரு துறையில் உயர்கல்வித் தகுதி பெற வேண்டுமென்ற ஆர்வம் எழுவது இயற்கையே. மேலும் பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளில் பல்வேறு பயிற்சி மையங்களில் பயிற்சியளிக்கவும், மேலாண்மை நுட்பங்களை விளக்கவும் நானே அடிக்கடி செல்லுவேன்.

ஒடிசா பழங்குடிகள் பற்றிய ஆராய்ச்சி, ஒடிசாவின் பண்பாட்டு வரலாற்றுடன் தொடர்புடைய பல்வேறு ஆய்வுகள் ஆகியவற்றை நான் தொடர்ந்து மேற்கொண்டிருந்ததால், ஒடிசாவிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் மானுடவியல், மொழியியல், வரலாற்றியல் போன்ற பல்வேறு துறைகளில் உரையாற்றுவதற்காகச் செல்லுவதுண்டு. இவ்வாறு, சட்டம், மானுடவியல், மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளில் உயர்கல்விப் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகள் பலமுறை கைகூடி வந்தபோதும் ஏதோ ஒரு முரட்டுப்பிடிவாதத்தில் நானே எனக்கு அனுமதி மறுப்பேன்.

எனது மனதில் ஏதோ ஒரு மூலையில் நான் ஒரு தமிழ் மாணவன் மட்டுமே என்ற தனித்துவ அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்ற ஓர் உள்ளுணர்வு எனக்குள் இருப்பதுபோல் தோன்றும். “இன்னொரு பட்டம் வாங்கி என்ன செய்யப்போகிறோம்?” என்ற கேள்வி எழும். “கல்லூரிகளில் படித்தா நிதி மேலாண்மை செய்கிறோம்; மாநில வரவு செலவு திட்டம் தயாரித்தோம்” என்று எனக்குள் கேள்வியும் அதற்கான விடையும் ஒரே சமயத்தில் வந்து போகும்.
அது மட்டுமல்லாமல், அகில இந்திய குடிமைப் பணியில் நேரடித்தேர்வு மூலம் கால் வைத்த முதல் தமிழ்மாணவன் என்ற பெருமித உணர்வு அவ்வளவு சாதாரணமானது அல்ல. அதிலும் நான் தமிழ்நாட்டில் இருந்து வெகுதூரத்தில் வேறொரு மாநிலத்திற்குச் சென்று ஒரு புதிய மொழியைக் கற்கவேண்டும் என்ற நிலை ஏற்பட்டபோது கொஞ்சம் மலைப்பாகத்தான் இருந்தது.

ஆனால், அதுவே எனது அன்னைத் தமிழின் பெறுவதற்கு அரிய வரம் என்பதை நான் உணர்ந்து கொள்ள வெகுகாலம் ஆகவில்லை. திராவிட மொழிகளைப் பேசும் ஒடியா மாநிலப் பழங்குடிகளின் வாழ்க்கை முறையில் சங்க இலக்கிய குறிஞ்சி நில வாழ்க்கையின் துல்லியமான ஒற்றுமையைக் கண்டறிந்தவுடனே இந்தச் சாலையும் இந்தப்பயணமும் அவ்வளவு ‘எதேச்சையாக’ நிகழ்ந்து விடவில்லை என்று தோன்றத் தொடங்கியது. ஆனால் அது எவ்வளவு நீளமான சாலை, எவ்வளவு ஆழமான பொருள் பொதிந்த பயணம் என்பது எனக்குத் தெரியாது. தெரிந்திருக்க நியாயமில்லை.

நம் அன்னைத் தமிழ்மொழியின் தொன்மையும் இலக்கிய இலக்கண வளமும் காலத்தை வென்று இணையத்திலும் கொடியோச்சும் அதன் புதுமைத்திறமும் உலகம் அறிந்ததே. ஆயினும் பரிதிமாற்கலைஞர் முதல் முன்னாள் முதல்வர் கலைஞர் வரை தமிழின் செம்மொழி அங்கீகாரத்திற்கு தொடர்ந்து குரல் எழுப்பி இறுதியாக மைய அரசு தமிழ்ச் செம்மொழி அறிவித்தபோது மகிழ்ச்சி அடையாத தமிழர் யாரும் இருக்கமுடியாது. இதுபற்றிய எனது பெருமகிழ்ச்சிக்கு ஒரு தமிழ்ப்பற்றாளன், தமிழ் மாணவன் என்பதால் மட்டுமன்றி, நான் இதுவரை வெளியில் கூடச் சொல்லாத ஒரு தனிப்பட்ட காரணமும் உண்டு.

2004-ஆம் ஆண்டு. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தலை ஒருசேர நடத்துவதற்கு தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஓர் அவசரச் சூழ்நிலையில் ஒடிசா மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தேன். அப்போது புவனேஸ்வரம் தொகுதிக்கு தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்ட வெளிமாநில ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் அவ்வப்போது எனது அலுவலகத்திற்கு வந்து உரையாடிச் செல்வார்.

அப்போது எனது ஆய்வு பற்றியும் பேச்சு வந்தது. வரலாறு இலக்கியம் போன்ற விஷயங்களிலும் ஆர்வமுடையவராகத் தெரிந்தார். தேர்தல் முடிந்து சில மாதங்களுக்குப் பின்னால் அவர் ஒருநாள் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். அப்போது மத்திய அமைச்சராயிருந்த திரு. தயாநிதிமாறனின் தனிச் செயலராக இருப்பதாகவும் அமைச்சர் பேசவிரும்புவதாகவும் கூறினார். அதைத்தொடர்ந்து அமைச்சர் என்னிடம் பேசினார்.

தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவிப்பதற்கான முயற்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார் அவர். ஆனால், அந்த முன்மொழிவை மத்திய அமைச்சரவைக்குக் கொண்டு சென்று, அங்கு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு, தமிழ் மொழியின் செம்மொழித் தன்மைகளையெல்லாம் பல்வேறு கோணங்களில் முன்னிலைப்படுத்தும் வகையில் பின்புலச்செய்திகளை ஆங்கிலத்தில் தயார் செய்யவேண்டி இருப்பதாகவும் அது தொடர்பாக அவரை நேரில் சந்திக்க முடியுமா என்று கேட்டார். அதன்படி அடுத்த சில நாட்களில் அவரை டில்லியில் அவரது அலுவலகத்தில் சந்தித்தேன்.

தமிழின் செம்மொழித்தன்மையை மற்றவர்களும் எளிதில் புரிந்து கொள்ளும்படியும், அத்துடன் ஆராய்ச்சி மொழியில் மட்டுமன்றி அலுவலக மொழியிலும் ஒருங்கிணைத்து ஆங்கிலத்தில் விரிவான குறிப்பொன்றை ஓரிரு நாட்களில் தயார் செய்யவேண்டிய தேவை இருப்பதாகச் சொன்னார். மூன்று அல்லது நான்கு நாட்களில் குறிப்பைத் தயார் செய்து மின்னஞ்சலில் அனுப்பி வைப்பதாகச் சொல்லி விட்டு ஒடிசா திரும்பினேன்.

அதன் பிறகு, தமிழின் செம்மொழித்தன்மை பற்றி பரிதிமாற்கலைஞர் முதல் ஜார்ஜ் எல்.ஹார்ட் வரையிலும் பல்வேறு அறிஞர்கள் முன்வைத்த கருத்துகளைப் படித்துவிட்டு விரிவான பின்புல அறிக்கை ஒன்றைத் தயார் செய்தேன். ஓரிரு நாட்களில் முடிக்க வேண்டியிருந்ததால் இடையில் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு அதை எழுதினேன். பின் அதனை மத்திய அமைச்சருக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தேன்.

அதன் பிறகு சிறிய இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் அமைச்சரின் தனிச்செயலரிடமிருந்து எனக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது. அப்போது நான் ஒரு சொந்த வேலையாக திருச்சியில் இருந்தேன்.

“உங்களுக்கு ஒரு நற்செய்தி : தமிழ் செம்மொழியாகி விட்டது” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் அவர். பெருமகிழ்ச்சியடைந்த நான், “எப்போது ?” என்று கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே, “ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் ” என்றார்.

மேலும், “இப்போதுதான் பிரதமர் வீட்டில் அமைச்சரவைக் கூட்டத்தை முடித்து விட்டு வெளியே வந்திருக்கிறோம். அமைச்சர் அவரது காரில் ஏறுகிறார். தொலைபேசியில் உங்களுக்குத் தகவல் தெரிவிக்குமாறு அவர் குறிப்பாகச் சொன்னதால் உங்களுக்கு உடனே நான் போன் செய்தேன்” என்றும் சொன்னார். நான் அவரது தகவலுக்கு நன்றி சொன்னேன்.

தமிழைச் செம்மொழியாக்கும் முயற்சியில், பல அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் காலங்காலமாக உழைத்திருக்கிறார்கள். இந்நிலையில் இவ்விஷயத்தில் எந்தப்பங்களிப்புமற்ற எனக்கு, தமிழின் செம்மொழித்தன்மை பற்றியும், அதன் பெருமைகளைப் பற்றியும் ஆய்வு நடையும் அலுவல் நடையும் கலந்த ஆங்கிலக் குறிப்பெழுதும் வாய்ப்புக் கிடைத்தது எனக்குள் மிக மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

இதோ, நம் தாய்மொழியான தமிழ்மொழி செம்மொழியாகி விட்டது. “செம்மொழியான தமிழ் மொழியாம்” என்ற கலைஞரின் பாடல் வரிகள் ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உலகெங்கும் ஒலிக்கின்றன.

ஆபத்தின் விளிம்பிலிருந்து மீண்டு எழுந்து நிற்க முயற்சித்துக் கொண்டிருக்கும் எனக்கு, கோவை செம்மொழித் தமிழ் மாநாட்டில் உரையாற்ற ஓர் அழைப்பு. எனது இரண்டாம் சுற்றை இதைவிட வேறு ஓர் அர்த்தமுள்ள, ஆகப் பொருத்தமான விதத்தில் தொடங்கி இருக்க முடியுமா என்று எனக்குள் நானே கேட்டுக்கொள்கிறேன்.

2010 ஆம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் ம.ராஜேந்திரன், புதுடெல்லியில் ராமகிருஷ்ணபுரத்தில் (ஆர். கே. புரம்), இருந்த எனது வீட்டிற்கு வந்திருக்கிறார், அவர் எனது நெருங்கிய நண்பரும் கூட. அப்போது புற்று நோய் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கீமோதெரபி சிகிச்சை பெற்று வந்த என்னை நேரில் பார்த்து நலம் விசாரிக்கவும், கோவை செம்மொழித் தமிழ் மாநாட்டில் சிந்துவெளிப் பண்பாடு பற்றி ஆய்வுரை நிகழ்த்துமாறு நேரில் அழைப்புவிடுக்கவும் அவர் அன்று வந்திருந்தார்.

செம்மொழி மாநாட்டின்போது சிந்துவெளிப் பண்பாடு, மற்றும் பொறிப்புகள் பற்றி ஒரு சிறப்பு அமர்வு நடைபெற இருப்பதாகவும், அதில் நான் ஓர் ஆய்வுக்கட்டுரை வாசிக்க வேண்டுமென்று சிந்துவெளி ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவன் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த அமர்வில் அஸ்கோ பர்ப்போலாவும் கலந்துகொள்ள இருப்பதாக ராஜேந்திரன் மேலும் கூறினார். செம்மொழி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருவதை தொலைக்காட்சி செய்திகளின் மூலம் நான் அறிந்திருந்தேன். சிகிச்சை தொடர்ந்த நிலையில் நான் மிகவும் களைத்து பலவீனமாகவே இருந்தேன். அதனால் நான் செம்மொழித் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்வது பற்றி யோசித்துக் கூடப் பார்த்திருக்கவில்லை.

அஸ்கோ பர்ப்போலாவும் ஐராவதம் மகாதேவனும் அமர்ந்திருக்கும் ஒரு மேடையில் சிந்துவெளி பற்றி ஓர் ஆய்வுரை நிகழ்த்த எனக்கு அழைப்பு வருவது எவ்வளவு பெரிய அங்கீகாரம் என்பது எனக்குத் தெரியும். உலகப்புகழ் பெற்ற சிந்துவெளி ஆய்வறிஞர் அஸ்கோ பர்போலா கலந்துகொள்ளும் அமர்வு என்பதால் அதில் கலந்துகொண்டு ஆய்வுரை நிகழ்த்த எனது பெயரை ஐராவதம் முன்மொழிந்திருக்கிறார் என்பதையும் முக்கிய அமர்வுகளுக்கு உரிய பெயர்கள் அன்றைய தமிழக முதல்வர் அளவில் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் ராஜேந்திரன் தெரிவித்தார்.
2002 இல் எனது ஆய்வுகளின் மூலம் நான் கண்டறிந்த “கொற்கை-வஞ்சி- தொண்டி வளாகம்” பற்றிய என் ஆய்வு முடிவுகள் இன்னும் வெளியுலகத்திற்குச் சொல்லப்படாமல் எனது கணிப்பொறியில் தூங்குவது எனது மனதைக் குடைந்து கொண்டிருந்தது.

அதுமட்டுமன்றி திடீரென்று ஏற்பட்ட பெரும் உடல்நலக்குறைவு, அறுவை சிகிச்சை, கீமோதெரபி என்ற திடீர்த் திருப்பங்கள் எல்லாம் எனக்குள் ஏதோ ஓர் அவசர உணர்வை விதைத்திருந்தன.
“எல்லா சான்றாதாரங்களையும் ஒன்று திரட்டி ஒரு மகத்தான நூலை எழுதும் முயற்சியில் கொற்கை-வஞ்சி-தொண்டியை உலகிற்குச் சொல்வதை மேலும் ஒத்திப் போடாதே, இதுவரை அறிந்ததை இப்போதே சொல்” என்று எனது உள்மனம் எனக்குக் கட்டளையிட்டது. அதனால் கோவை செம்மொழி மாநாட்டில் உரை நிகழ்த்த நான் உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

Image
கோவையில் சிந்துவெளியில் தமிழ் இடப்பெயர்களைச் சான்றாகக் கொண்டு திராவிடக் கருதுகோளுக்கு வலுச்சேர்க்கும் புதிய தரவுகளை கணிப்பொறிக் காட்சியளிப்பாக தயார் செய்திருந்தேன். சிந்துவெளியின் “கொற்கை- வஞ்சி- தொண்டி வளாகத்தை” நில வரைபடங்களாக அந்தக் காட்சியளிப்பில் சேர்த்திருந்தேன். அந்த உரையை கிழக்கு பதிப்பக நண்பர்களின் உதவியுடன் ஒரு குறு நூல் வடிவில் அச்சிட்டு எடுத்துக் கொண்டேன்.

எனக்கு வேண்டிய மருந்துகள்,பிற பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு எனது மனைவி என்னுடன் வந்தார். காவல்துறையைச் சேர்ந்த எனது நண்பர்கள் சிலர் கோவையில் ஒரு பெரிய விடுதியில் நான் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த விடுதியில்தான் முதல்வர், அமைச்சர்கள் உட்பட பல உயரதிகாரிகளும் தங்கியிருந்தனர்.

செம்மொழித்தமிழ் மாநாட்டின் பேரணி, கண்காட்சி, பொது நிகழ்வு என்று வேறு எதையும் பார்க்கும் உடல்நிலையில் நான் இல்லை. அப்போதுதான் கீமோதெரபி முடிந்திருந்தது. அஸ்கோ பர்ப்போலாவின் முன்னிலையில், என்னை சிந்துவெளி ஆய்வுக்குள் ஈடுபடுத்தி வழிநடத்தும் ஐராவதம் மகாதேவனின் முன் நின்று நான் ‘கொற்கை-வஞ்சி- தொண்டி வளாகத்தை முதன்முறையாக ஆய்வுலகிற்கு அறிவித்தேன்.

Image

செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கக் கூட்டத்தில் எனது பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தமிழண்ணல், முருகரத்தினம், எனது கல்லூரிப்பேராசிரியர் இ.கே.ராமசாமி, பேராசிரியர்கள் மணிவேல், திருமலை ஆகியோரையும் சந்தித்தேன். மதுரையில் என்னுடன் தமிழ் இலக்கியம் படித்த எனது வகுப்புத் தோழர்கள் பலரையும் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியளித்தது. மருத்துவ சிகிச்சைக்குப்பின், எனது முதல் பொது நிகழ்வாக கோவை செம்மொழித் தமிழ் மாநாட்டு அரங்கின் ஆய்வுரை அமைந்தது மிக நிறைவளிப்பதாய் இருந்தது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈடான மன உளைச்சலுக்கு ஆளாபவர்கள் அவர்களைப் பக்கத்திலிருந்து கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்பவர்கள் தான். என்னை மீட்டெடுத்துவந்த எனது மனைவி சுஜாதா, செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன் முன்னிலையில் எனது கொற்கை வஞ்சி தொண்டி வளாகத்தை அறிவிப்புச் செய்யும் அந்த நொடியை தனது இருக்கையிலிருந்து எழுந்து நின்று காமிராவில் பதிவு செய்தார். அப்போது அவரது முகத்தில் பல மாதங்களுக்குப் பின்னர் முதன் முதலாக தோன்றிய மகிழ்ச்சியை ஒரு கணம் கவனித்தபடி எனது பேச்சைத் தொடர்ந்தேன்.

தமிழ் மொழியின் மீதான எனது ஆர்வமும், பற்றும் பிற மொழிகளை நேசிக்கக் கற்றுக்கொடுத்ததே தவிர வெறுக்கக் கற்றுத்தரவில்லை. ஒருவேளை, ஒடிசா போன்றதொரு மாநிலத்தில் அதன் பண்பாட்டுப் பின்னணியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது கூட அதற்கொரு கூடுதல் காரணமாக இருக்கலாம். தொல்திராவிடப் பழங்குடிகள் இன்னும் மிகப்பரவலாக வாழும் மாநிலம். வரலாற்றுக்காலத்திலும் ஏதோ ஒரு வகையில் தமிழ் வரலாற்றோடு தொடர்புடைய நிலப்பகுதி. தமிழ்நாட்டை ஆண்ட சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தர்களை மொழியால் ஒருமை கண்ட ”திராவிட நட்பரசுகள்” என்று முதன் முதலில் அடையாளம் காட்டியதாகக் கருதப்படும் கலிங்க மன்னன் காரவேலனின் ஹதிகும்பா கல்வெட்டை எனது பயிற்சி காலத்திலேயே புவனேஸ்வரத்தில் பார்த்தேன்.

நக்சலைட் பிரச்னையில் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டமான கஜபதி மாவட்டத்திலுள்ள மகேந்திர கிரி மலைப்பகுதிக்கு அடையாளம் தெரியாதபடி வாடகைக்காரில் சென்று டில்லியிலிருந்து வந்திருக்கும் ஆய்வுக்குழு என்ற போர்வையில் ராஜேந்திர சோழனின் புகழ்பெற்ற கல்வெட்டை பார்த்துவந்த நாள் பசுமையாக நினைவில் உள்ளது.

இருந்தாலும் இதுவரையிலான எனது பணி அனுபவங்களில் ஆகச் சிறந்த அங்கீகாரம் என்று நான் நினைப்பது மற்ற துறைகளோடு சேர்த்து ஒடிசா மாநிலத்தின் பண்பாட்டுத் துறைப் பொறுப்பும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தான். என்ன தான் ஒடிசாவின் பண்பாட்டு வரலாறு பற்றி நான் ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவந்தாலும் இதை நானே எதிர்ப்பார்க்கவில்லை. என்ன தான் இருந்தாலும் நான் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் இல்லையே.

இந்த நம்பிக்கைக்கு எந்தவிதமான குறைபாடும் நேரிடாமல் பணியாற்றியதாகவே நான் மதிப்பிடுகிறேன். ஒடிசாவின் பண்பாட்டு வரைபடத் தொகுப்பை (Cultural Atlas of Orissa) நாங்கள் வெளியிட்டபோது இந்தியாவிலேயே அது தான் ஒரு முன்னோடி முயற்சியாக அமைந்தது. பூரி ஜெகநாதர் கோயில் பற்றிய மிக முக்கியமான இரண்டு கிழக்கிந்திய கம்பெனி ஆவணங்களை (1805 மற்றும் 1807 ஆம் ஆண்டுகள்) தேர்ந்த வரலாற்று அறிஞர் குழு மூலம் ஆராய்ந்து மூல ஆவணங்களை அச்சுவடிவில் வெளிக்கொணர்ந்தது நிறைவை அளித்தது. ஒடிசா ஆய்வாளர்களும் வாசிப்பாளர்களும் மிகவும் மகிழ்ந்தார்கள்.

கோனார்க் பற்றிய எனது புதிய ஆய்வுகள் பரவலாக வரவேற்பை பெற்றன. நிறைய பேர் என்னை, கோனார்க் பற்றி தீவிரமாக ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்ச்சியாளனாகவே பார்த்தார்கள். 2018 ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி ‘ உத்கல் கவுரவ்’ என்று போற்றப்படும் மதுசூதன் தாஸின் 150 வது பிறந்த நாளன்று நிகழ்ந்த மிகமுக்கியமான பொதுச் சொற்பொழிவை புவனேஸ்வரத்தில் நிகழ்த்தினேன். 16 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் இந்தச் சொற்பொழிவை நிகழ்த்திய, ஒரியாவைத் தாய் மொழியாகக் கொள்ளாத முதல் சொற்பொழிவாளர் என்பதும் எனது தமிழ் நெடுஞ்சாலை எனக்களித்த பெருமித்ததிற்குரிய கொடையே.

இன்னும் ஒருவகையில் பார்த்தால் கோனார்க் சூரிய கோயில் பற்றிய எனது ஆய்வுகளே என்னை இந்திய துணைக்கண்டத்தின் வடமேற்கு நிலப்பகுதிகளைக் கூர்ந்து கவனிக்கவைத்தன. அதுவே எனது கொற்கை வஞ்சி தொண்டி வளாகத்தையும் எனக்கு அவ்வளவு துரிதமாக அடையாளம் காட்டியது. கோனார்க் அருகே ஓடியதாகக் கருதப்படும் சந்திரபாகா என்ற நதியின் பெயரில் பாகிஸ்தானிலுள்ள மூல்தான் அருகேயுள்ள பழமையான சிதிலமடைந்த சூரியன் கோயில் பகுதியிலும் உள்ளது என்ற தரவின் துணையோடு பாகிஸ்தான் இடப்பெயர்களைத் தோண்டித் துழாவிய போதுதான் கொற்கை வஞ்சி தொண்டி என்ற மூன்று முக்கியமான அடையாளங்களை சிந்துவெளிப் பகுதியில் தேடிப்பார்க்கும் எண்ணம் தோன்றியது. இந்தவகையில் சிந்துவெளியை நோக்கிய எனது தேடல் மகாநதிக் கரையின் வழியாகவே நடைபெற்றுள்ளது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பட்டறிவால் பட்டை தீட்டப்பட்ட தமிழ்ப் பண்பாட்டின் உலகளாவிய பார்வை தான் என்னை ஒரியப் பண்பாட்டின் ஊடாகப் பயணிக்கும், ஒடிசா மாநிலப் பண்பாட்டுத் துறையின் செயலராகப் பணிபுரிய ஏற்புடையவனாகவும் என்னை மாற்றியது. மொழிபல பெருகிய பழிதீர் தேயத்து புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் முட்டாச் சிறப்பிற் பட்டினம் ‘ என்ற சங்க இலக்கிய வரிகளை (பட்டினப்பாலை 216-18) படிக்கும் போதெல்லாம் தமிழும் தமிழ் நாகரிகமும் படர்ந்து விரிந்த ஒரு திறந்தவெளியாகவும் தொடக்கமும் முடிவும் புலப்படாத ஒரு நெடுஞ்சாலை போலவுமே எனக்குத் தோன்றும்.

இந்த நெடுஞ்சாலையில் நான் எடுத்துவைத்த முதல் அடியை நினைத்துப்பார்க்கிறேன். நேற்றுப் போல் இருக்கிறது. ஆனால் நெடுங்காலம் ஆகிவிட்டது. இந்தப்பாதை அலுக்கவில்லை. பயணமும் அலுக்கவில்லை. இந்த நெடுஞ்சாலை எனக்குள் நிகழ்த்திய வேதியல் மாற்றங்கள் எனக்கே விந்தையாக இருக்கிறது.

இந்தத் தமிழ் நெடுஞ்சாலை மிகவும் அழகாக இருக்கிறது. இந்த நெடுஞ்சாலையின் வழியிலான இந்தப் பயணமே எனது வாழ்க்கையை எனக்கு அர்த்தமுள்ளதாக்கி எனக்குள் நெகிழ்ச்சியான நிறைவை நிதமும் வளர்க்கிறது.

Image

தமிழ் நெடுஞ்சாலை..

அகரம்’ என்று
உயிரொலித்து
‘அம்மா’ என்று
உதடசைத்த
அந்தப் பூங்கொத்து
ஆணா? பெண்ணா?

பூமியின் எந்தப்புள்ளியில்
அந்தப் பூ
முதலில் பூத்தது?

கண் முன்னே
பெருக்கெடுத்தோடும்
பெருநதிக்கே பிறந்த இடம்
தோராயம்.

முன்னோர் எனப்படும்
முனிவருக்கே
மூலம் என்பது
குத்துமதிப்பாகக் கூட
புலப்படாத ரகசியம்!
அது ரிஷி மூலம்

அகரம்’ முளைத்த
இடத்தின்
பின்கோடு’ கேட்பது
பிற்போக்கான பேதமை!

இது நிற்க.

இதோ
தமிழ் நெடுஞ்சாலை.

இந்தச் சாலையில் ஊர்ந்த
எத்தனையாவது கோடி
எறும்பு நான்?

இருந்தால் என்ன?

என்மட்டில்
தமிழ் நெடுஞ்சாலை
நான்
முதல்அடி எடுத்துவைத்த
தலைவாசல் படி.

நான்
நடைவண்டி ஓட்டிய
நடுமுற்றம்.

ஒவ்வொருவன்
தாய்மொழியும்
உயர்வானதே.
அவனவன்
தாயைப் போலவே.

எஸ்கிமோவின்
தாய்மொழிக்குத்
தெரியாத
பனியின் நிறம்,
இதம், குணம், மணம்
வேறெந்த மொழிக்குத் தெரியும்?

என்
தமிழ்த்தாய்!
செம்மொழி என்பது
அவளது
சிறப்பு மகுடம்.

இதோ நான்
உலகில் விழுந்து
உள்ளிழுத்த முதல்காற்றில்.
உறிஞ்சிக் குடித்த
முதற்சொட்டுப் பாலில்.
கண் விழித்துப்
பார்த்த காட்சியில்.
காதில் விழுந்த
முதற் சொல்லில்.
நடந்த மண்ணின்
நறுமணத்தில்…
குளித்த முதல்மழையில்..
பற்றித்தின்ற முதல்பருக்கையில்
பருகிய நீரில்
வாசித்த எழுத்தில்
யோசித்த கருத்தில்
வடித்த கவிதையில்
தமிழ்.

என்
பிள்ளைத்தமிழின்
பிழைபொறுத்த
பெரியமனம்.

நான்
அடைக்கலம் புகுந்த
அரியாசனம்.

தமிழ்
எவ்வளவு
அன்பானவள்.

அவள்
நின்ற இடத்தில்
அழகு நிற்கிறது.
அவள் சென்றதும்
அது
அவளோடு செல்கிறது.

அவள்
எனக்கும் தாய்.

தமிழின்
மகனாய் இருப்பது
எத்தனை பெரிய
பெருமிதமாய் இருக்கிறது.

இதோ
நினைத்ததைப் பேசுகிறேன்
நேசமுடன்.

தாயே தமிழே.
நீ கோயில்.
நான் செருப்பு.

தெருமுனைக்கு அப்பால்
ஒரு
திசையறியாச் சிறுவனை நீ
இருதுருவம் பார்த்து வர
ஏன் பணித்தாய்?

தூரத்தில் சென்றால்
தொலைந்து விடுவேனென்று
ஓரத்தில் நின்று
உரக்க முறையிட்டேன்.

நீ கொடுத்த மேடை
நீ போட்ட பூமாலை
நீ கொடுத்த தமிழ்நாக்கு
வேறெங்கு எனக்கிருப்பு?

அழுது புரண்டாலும்
ஆர்ப்பாட்டம் செய்தாலும்
அழகே. தமிழ் உந்தன்
ஆணை மாறவில்லை.

சென்றஇடம் பலநூறு
திசையெல்லாம் உன்பாதை.
பார்த்து வரத்தானா
பணித்து விட்டாய் என்னை?

சிந்துவெளி மண்ணுக்குள்
முணுமுணுத்த தமிழோசை
முந்தியெந்தன் காதுகளை
முட்டியதேன் தாயே?

வள்ளுவனின் குறள்பேச
வடிவமைத்த மேடையிலே
உள்ளிருந்து எனக்குள்ளே
ஊற்றெடுத்தாய் நீயே!

உன்
கருவறையின் வாசலிலே
கைகூப்பி நான்.

கோரிக்கை வைக்காமல்
கொடுப்பது உன் கோடிக் கை
ஏன் என்று தெரியாமல்
நடப்பது என் வாடிக்கை

குன்றக்குடி அடிகளார் சுழற்கேடயம்

1975 ஆம் ஆண்டு. கிடைத்த எந்த படிப்புகளிலும் சேராமல் இளங்கலை தமிழ் இலக்கியம் படிப்பது என்று தன்னிச்சையாக முடிவு செய்தேன். எந்தக் கல்லூரியில் சேருவது என்பதிலும் குழப்பம் இல்லை. அமெரிக்கன் கல்லூரியில் பி.யு.சி. எனப்படும் புகுமுக வகுப்பில் அறிவியல் பாடம் படித்த நான் தமிழ் இலக்கியம் படிக்க தியாகராசர் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தேன்.

தமிழ் இலக்கியம் என்றாலே தியாகராசர் கல்லூரி தான் என்று ஒரு ‘இமேஜ்’ இருந்தது. கவிஞர்கள் மீரா, நா. காமராசன், மு. மேத்தா, அப்துல் ரகுமான், இன்குலாப் போன்றவர்கள் எல்லாரும் படித்த இடம் என்பது பெரிய ஈர்ப்பு. அதனால் அங்கே சேர்ந்துவிட்டேன். அப்போது நாட்டில் நெருக்கடி நிலை அமலில் இருந்தது. ஆனாலும் 1976 சனவரியில் அப்போது இருந்த தமிழக அரசு கலைக்கப்படும் வரை நெருக்கடி நிலை என்றால் என்ன என்பது முழுதாக உணரப்படவில்லை.

அப்போது நான் பெருந்தலைவர் காமராஜரின் தொண்டனாக மாணவர் அணியிலும் பொறுப்பு வகித்தேன். அரசியல் மேடைகளில் பரவலாக அறியப்பட்ட பேச்சாளனாக இருந்தேன். 1975 அக்டோபர் 2 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் மறைந்தார். அதைத் தொடர்ந்து கட்சியின் எதிர்காலம் குறித்து இரண்டு முரண்பட்ட கருத்துகள் நிலவின.

இதன் பின்னணியில் திருச்சி நகரில் ஒரு பெரிய பேரணியும் மாநாடும் நடந்தது. அம்மாநாட்டில் நானும் கலந்து கொண்டு பேசினேன். இதற்காக மதுரையில் பல்வேறு கல்லூரிகளில் படித்த இயக்கம் சார்ந்த மாணவர்களைத் திரட்டி வாடகைக்கு பேருந்து அமர்த்தி திருச்சிக்கு சென்றோம். அப்போதுதான் எனக்கும் எனது பேராசியருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அவர் ஒரு காந்தியவாதி. எனினும், இந்த விஷயத்தில் மாற்றுக் கருத்து கொண்டிருந்தார். திருச்சிக்குப் போகக்கூடாது என்றும் என்னை எச்சரித்தார்.

இது எனது தனிப்பட்ட கருத்துச் சுதந்திரம் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். நான் மாணவர்களைத் திரட்டி திருச்சிக்குச் சென்றது அவருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய பின்னர் என்னிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். அதுமட்டுமன்றி எனது நடை உடை பாவனைகள் பற்றியும் எனது பேராசிரியர் மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்தார். அப்போது நீளமாக முடிவளர்ப்பது; ‘பெல்பாட்டம்’ அணிவது ‘ஸ்டைல்’ . “தமிழ் இலக்கிய மாணவன் இப்படி எல்லாம் இருக்க கூடாது” என்பது அவரது கருத்து.

இந்நிலையில், முதல் ஆண்டு இறுதித் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. தேர்வு எழுதுவதற்கான ‘ஹால் டிக்கெட்’ வாங்குவதற்காக கல்லூரி அலுவலகத்திற்குச் சென்ற போது அங்கே எனக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. என்னுடைய ஹால் டிக்கெட்டைத் தரமுடியாது என்றும் துறைத்தலைவரைச் சென்று சந்திக்கும்படியும் அலுவலக ஊழியர் சொன்னார். குழப்பத்துடன் பேராசிரியரின் அறைக்கு சென்றேன்.

ஒரு கல்வியாண்டுக்குத் தேவையான குறைந்தபட்ச பங்கேற்பை (term days) விட இரண்டு நாட்கள் குறைவாக நான் வகுப்பிற்கு வந்திருப்பதாகவும் அதனால் நான் தேர்வு எழுதுவது அநேகமாக கஷ்டம் தான் என்றும் அவர் சொன்னார். நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். பல்கலைக்கழகத்திலேயே முதன்மை பெற்று தங்கப் பதக்கம் வாங்குவேன் என்று சவால் விட்டு படித்து வந்த நான் தேர்வு எழுத முடியாதா? “விடுமுறை எடுத்து மாநாட்டிற்கெல்லாம் போனால் இப்படித் தான் ஆகும்” என்றார் அவர். இருந்தாலும் தேர்வு எழுத முடியாத அளவிற்கு நான் விடுமுறைகள் எடுக்கவில்லை என்பது எனக்கு உறுதியாகத் தோன்றியதால் நான் விடுமுறை எடுத்ததாக/ வகுப்பிற்கு வராததாக குறிக்கப்பட்ட தேதிகளின் விவரம் வேண்டும் என்று விண்ணப்பித்தேன்.

அந்த விவரத்தைப் பார்த்த போது தான் எனக்கு உண்மை புரிந்தது. எனது கல்லூரியின் சார்பாக நான் பல்வேறு அனைத்துக் கல்லூரி பேச்சுப் போட்டிகள் மற்றும் கவிதைப் போட்டிகளில் கலந்து கொள்ளச் சென்ற நாட்களிலும் “நான் வகுப்பிற்கு வரவில்லை” என்று குறிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன். கல்லூரியின் சார்பில் போட்டியில் கலந்து கொள்ளச் சென்ற நாட்களில் நான் வகுப்பிற்கு எப்படி வந்திருக்க முடியும்; அதைக் கணக்கில் எடுத்தால் நான் தேர்வு எழுத எந்தத் தடையும் இருக்க முடியாது என்று வாதாடினேன். நியாயம் கேட்டேன். அந்த ஆண்டில் மட்டும் நான் கிட்டத்தட்ட 15 பரிசுகளை கல்லூரிக்காக வென்றிருந்தேன். இருந்தாலும் எனது பேராசிரியர் சம்மதிக்கவில்லை.

“அய்யா, நீங்கள் ஒரு தீவிரமான தமிழ் மாணவனின் கனவுகளைத் தகர்க்கிறீர்கள். பல்கலைக்கழக முதன்மை பெறப்போகிறவன் நான். தங்கப் பதக்கம் எனக்கானது; மேலும் 25 பேர் படிக்கும் எனது வகுப்பில் ‘அரியர்’ வைக்காமல் முதல் முயற்சியிலேயே ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறப்போகிறவன் நான்; என்னைத் தடுக்காதீர்கள்” என்று சொன்னேன். “தேர்வு எழுதும் முன்பே தங்கப்பதக்கம் என்கிறாய்; ஆங்கிலத்தில் நான் தான் தேர்ச்சி பெறுவேன் என்கிறாய். இது ஆணவத்தின் உச்ச கட்டம்” என்றார். “இல்லை அய்யா, இது எனது தன்னம்பிக்கை” என்றேன். சற்று நேரம் மவுனமாக இருந்த பேராசிரியர் “உனது அப்பாவை அழைத்து வா; அவரிடம் பேசிக்கொள்கிறேன்” என்றார்.

அடுத்த நாளே, நானும் எனது தந்தையும் சைக்கிளில் கல்லூரிக்குச் சென்றோம். அங்கே பேராசிரியர் இல்லை. மறுநாள் தேர்வு என்பதால் பதட்டமாக இருந்தது. உடனே நாங்கள் இருவரும் அவரது வீட்டிற்குச் சென்றோம். எனது தந்தையை மட்டுமே பேராசிரியர் உள்ளே அனுமதித்தார். நான் வாசலில் காத்திருந்தேன். சிறிது நேரம் கழித்து எனது தந்தை கையில் ஒரு சீட்டோடு வந்தார். “ஹால் டிக்கெட் கொடுக்கவும்” என்று அதில் எழுதி பேராசிரியர் கையொப்பம் இட்டிருந்தார். அதை எடுத்துக் கொண்டு கல்லூரிக்குச் சென்றோம். எனது தந்தையின் முகம் என்னவோ இறுக்கமாக இருந்தது. தயக்கத்துடன் “அவர் என்ன சொன்னார்” என்று கேட்டேன். “உனக்கு பாத்திரக்கடை வைத்து கொடுக்கச் சொன்னார்” என்றார். நான் மவுனமாக இருந்தேன்.

ஒருவழியாக அனுமதிச் சீட்டு வாங்கி, தேர்வு எழுதி, அந்த ஆண்டு தமிழ் இலக்கியத் தேர்வில் பல்கலைக்கழக முதன்மை பெற்று, சொன்னபடியே ஆங்கிலத் தேர்வில் ‘அரியர்’ வைக்காத ஒரே மாணவனாகி தேர்ச்சி பெற்றேன் என்பது தனிக்கதை. அப்போது தான் எனக்கு ஒரு விஷயம் தெரிந்தது. தேர்வு எழுத அனுமதிச் சீட்டு தரும் போதே தேர்வு முடிந்ததும் நான் கல்லூரியில் இருந்து நீக்கப்படுவேன் என்றும் எனவே இரண்டாம் ஆண்டு முதல் நான் வேறு கல்லூரியில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்றும் எனது பேராசிரியர் எனது தந்தையிடம் கண்டிப்பாகச் சொல்லி ஒப்புதல் வாங்கி இருந்தார் என்பது. இதை என்னிடம் சொன்னால் தேர்வு நேரத்தில் என்னை பாதிக்கும் என்று என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டார் எனது தந்தை.

அது நான் முன்னரே சொன்னபடி, நெருக்கடி நிலை அமலில் இருந்த காலம். இந்த சம்பவம் நடக்கும் போது தமிழக அரசு கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் மிகவும் கண்டிப்புடன் இயங்கிய காலகட்டம். அதனால், மாணவர்களைத் திரட்டி போராடக் கூட முடியாத சூழ்நிலை. அதுமட்டுமன்றி எனது தந்தையே இதுபற்றி மீண்டும் பேசத் தயாராக இல்லை. பேராசிரியரும் அவர் முடிவில் உறுதியாக இருந்தார். அதனால் தேர்வு முடிவுகள் வந்தவுடன் எனது கையில் ‘மாறுதல் சான்றிதழ்’.

ஆனால், தமிழ் மதுரையில் என்ன கல்லூரிக்கா பஞ்சம்? நான் நீக்கப்பட்டேன் என்று தெரிந்ததும் என்னைச் சேர்த்துக்கொள்ள இரண்டு கல்லூரிகள் தயாராக இருந்தன. மதுரை யாதவர் கல்லூரி பேராசிரியர் மு. தமிழ்க்குடிமகன்; காரைக்குடி அழகப்பா கல்லூரி பேராசிரியர் கண்ணப்பன் ஆகிய இருவரும் என்னை அரவணைக்க முன்வந்தார்கள்.

அப்போது நாங்கள் மதுரையில் வசித்ததால் அங்கேயே படிப்பது தான் வசதி என்று தோன்றியது. எனவே எனது தந்தையாருடன் சென்று பேராசிரியர் தமிழ்க்குடிமகனை சந்தித்தேன். அவர் என்னை நடத்திய விதமே மகிழ்ச்சியாக இருந்தது. “நீ படிக்க வேண்டிய இடமே இது தான். சென்ற வருடமே நீ இங்கு தான் வந்திருக்க வேண்டும். ஒரு வருடம் தாமதமாக வந்திருக்கிறாய். அவ்வளவு தான்.” என்று தோளில் கை போட்டார் அன்புடன். அடுத்த நிமிடமே யாதவர் கல்லூரி மாணவன் ஆகிவிட்டேன் நான். அடைக்கலம் கேட்டவனுக்கு அரியாசனம் கொடுத்தவர் எனது நினைவில் என்றும் வாழும் எனது பேராசிரியர் தமிழ்க்குடிமகன். இது நிற்க.

மீண்டும் குன்றக்குடி சுழற்கேடயத்திற்கு வருவோம். இந்த சுழற்கேடயம் மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் பெயரில் தியாகராசர் கல்லூரியில் நிறுவப்பட்டிருந்தது. ஒவ்வோரு ஆண்டும் எந்தக் கல்லூரி மாணவர்/ மாணவி முதல் பரிசு பெறுகிறாரோ அந்தக் கல்லூரியில் அந்த சுழற்கேடயம் அடுத்த ஆண்டு போட்டி வரையில் இருக்கும். அதன்படி இளங்கலை முதலாவது ஆண்டு படிக்கும் போது தியாகராசர் கல்லூரியின் சார்பில் அந்தக் கேடயத்தை நான் பெற்றிருந்தேன்.

இப்போது யாதவர் கல்லூரி மாணவன் நான். கல்லூரி தொடங்கி இரண்டு மூன்று வாரங்கள் தான் ஆகியிருக்கும். ஒருநாள் பேராசிரியர் தமிழ்க்குடிமகன் என்னை வரச்சொல்லி கூப்பிட்டார். நான் ஆசிரியர்கள் அறைக்குச் சென்றேன்.

“பாலகிருட்டிணன் (அவர் என்னை அப்படித்தான் அழைப்பார்). இதோ அடிகளார் சுழற்கேடயத்திற்கான பேச்சுப் போட்டிக்கான அறிவிப்பு. அடுத்த வாரம் போட்டி உனது பழைய கல்லூரியில் நடைபெறவிருக்கிறது. வென்றெடுத்து வா..” என்று அவருக்கே உரிய கம்பீரக் குரலில் சொன்னார். சிலிர்த்தது எனக்கு.

தியாகராசர் கல்லூரி அரங்கம். மேடையில் ஒரு மேசையில் அதற்கு முந்தைய ஆண்டு தியாகராசர் கல்லூரிக்காக நான் வென்றெடுத்த அந்தக் கோப்பை. வெளிக்கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் சிறந்த பேச்சாளர்கள் நடுவர் நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். மேடைக்கு முன்னே முதல் வரிசையில் எனது முன்னாள் பேராசிரியர் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள்; எனது முன்னாள் வகுப்புத் தோழர்கள். அவர்களில் சிலர் எனது நெருங்கிய நண்பர்கள்.

எனது புதிய கல்லூரியான யாதவர் கல்லூரி ஆசிரியர் ஒருவரும் வகுப்புத் தோழர்கள் சிலரும் என்னுடன் வந்திருந்தார்கள்.எந்தப் பேச்சுப் போட்டியும் எனக்குள் இவ்வளவு உணர்ச்சி மேலீட்டை ஏற்படுத்தியது இல்லை. நான் அந்தக் கல்லூரியில் படித்தது; பின்னர் விலக நேர்ந்தது என்ற எல்லா விவரங்களும் அனேகமாக அங்கே இருந்த அனைவருக்கும்; நடுவர்களுக்கும் கூடத் தெரியும். நான் பேச அழைக்கப்பட்டேன். பார்வையை அடிகளார் சுழற்கோப்பையின் மீது ஆழமாகப் பதித்தபடி பேசத்தொடங்கினேன்.

“தீந்தமிழ்த் தியாகராசர் கல்லூரியின் படிக்கட்டைத் தட்டினாலும் தமிழோசை கேட்கும் என்பார்கள். படிக்கட்டிலா இருக்கிறது பைந்தமிழ்? தட்டுபவன் தமிழ்க்கையில். அவனது தளராத தமிழ் நாவில். இதோ இது யாதவர் கல்லூரியின் எளிய படிக்கட்டு. தட்டுபவன் நான். தளராத நாக்கு; என் தமிழ் அன்னை தந்திருக்கிறாள் எனக்கு” என்று சொல்லி அவையை வணங்கினேன். பேசினேன். நக்கீரன் வாழ்ந்த இடம் மதுரை. அந்த அறங்கூறும் அவையம்; தமிழ்ச் சங்கப்பலகை சரியாகத் தீர்ப்பளித்தது. அடிகளார் கோப்பை மீண்டும் எனது கைகளில். கண்களில் நீர். மனசெல்லாம் மகிழ்ச்சி. எனது பழைய வகுப்புத் தோழர்கள் வாழ்த்துச் சொன்னார்கள். கோப்பையை கையில் ஏந்தி எனது முன்னாள் பேராசிரியரை வணங்கி வாழ்த்துப்பெற்றேன்.

ஏனோ தெரியவில்லை அந்தக் கோப்பையை வீட்டிற்கு எடுத்துச் சென்று எனது பெற்றோரிடம் காட்டி ஒருநாள் வைத்திருந்து மறுநாள் தான் எனது பேராசிரியர் தமிழ்க்குடிமகனிடம் ஒப்படைத்தேன். அப்போது நான் அழுதேன்.1979 ஆம் ஆண்டில் ஒரு நாள். நான் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் முதுகலை படித்துக் கொண்டிருக்கும் போது எனது முன்னாள் பேராசிரியர் பல்கலைக்கழகத்திற்கு வந்தார். தமிழ்த்துறைத்தலைவர் அறையிலிருந்து என்னை கூப்பிட்டு அனுப்பினார். நலம் விசாரித்து விட்டு இருவரும் தனியே நடந்தோம் பேசிக்கொண்டே.

மதிய உணவு நேரம். “சேர்ந்து சாப்பிடலாமா?” என்றார். இருவரும் பல்கலைக்கழகம் அருகில் இருந்த முனியாண்டி விலாஸ் கடையில் சாப்பிட்டோம். “உன்னைப் பற்றிய எனது கணிப்பு சரியானதல்ல. உன்னைப் போய் நீக்கினேனே” என்றார். “அய்யா, அதை பற்றி நீங்கள் எதுவும் நினைக்க வேண்டாம். தவறு என்னுடையது தான். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே அரசியலின் பக்கமே வராதே என்று பெருந்தலைவர் காமராஜர் நேரில் அறிவுறுத்தினார். என்னை நன்றாகப் படிக்கச் சொன்னார் அவர் இறந்தபோது சென்னைக்கு ஓடிப்போய் அழுது கண்ணீர் விட்டேனே தவிர நான் தொடர்ந்து அரசியலில் இருந்தேன்.

அப்போது தான் உங்களின் கோபத்திற்கு ஆளானேன். எதுவாயினும் என் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது நீங்கள் தான். அதன் விளைவு ஆக்கபூர்வமாகவே அமைந்திருக்கிறது. நீங்கள் அதைப்பற்றி யோசிக்கவே வேண்டாம்” என்று அவரிடம் சொன்னேன். “காமராஜர் உன்னிடம் நேரில் இப்படிச் சொன்னாரா? எப்போது?” என்று வியப்புடன் கேட்டார். நான் காமராஜரை சந்தித்த சூழலை அவருக்கு விளக்கமாகச் சொன்னேன். அப்போது கூட காமராஜர் என்னை ஐ.ஏ.எஸ் எழுதச்சொல்லி இருக்கிறார் என்ற ‘ரகசியத்தை’ அவரிடம் சொல்லவில்லை. அது நான் எனக்குள் அடைகாத்த உபதேசம். அதைச் சொன்னால் கூட அப்போது யாரும் நம்பியிருப்பார்களா என்பது சந்தேகமே.

கடை வாசலில் அவரிடம் மீண்டும் ஆசி பெற்றேன். அவரை பல்கலைக்கழக பேருந்து நிறுத்தத்தில் வழியனுப்பி வைத்தேன். ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்ற பிறகு பயிற்சிக்குப் போகும் முன் அவரை அவரது வீட்டில் சந்தித்து விடைபெற்றேன். அதே வீடு. அதே வாசல். பேராசிரியர் மிகவும் மகிழ்வுடன் வாழ்த்தி விடை கொடுத்தார். என் கண்களில் நீர்.இரண்டாம் சுற்று என்பது உண்மையா, உருவகமா அல்லது வெறும் உணர்வா? எதுவாயினும் எனது இரண்டாம் சுற்று தருணங்கள் யாவிலும் என் கண்கள் ஈரமாயின என்பது ஒரு பொதுத்தன்மையும் உண்மையும் ஆகும்.

Image

குன்றக்குடி அடிகளார் சுழற்கேடயம் ஒரு குறியீடாய், உருவகமாய், என்னை மீண்டும் மீட்டெடுத்தது என்றால் மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் தனது சொந்தக்கரங்களால் எனது சொல்லாற்றலை பொதுமேடையில் கொண்டாடிய பேரன்பிற்கு நான் எப்படி நன்றி சொல்வேன். யாதவர் கல்லூரியில் படித்த காலத்திலிருந்தே மறைந்த பேராசிரியர் தமிழ்குடிமகன், சாலமன் பாப்பையா, பா. நமச்சிவாயம், சொல்விளங்கும் பெருமாள், சக்தி பெருமாள், ராஜாராமன் போன்ற பட்டிமன்ற ஆளுமைகளுடன் பல்வேறு பட்டிமன்றங்களிலும் பேசி வந்தேன். அவர்கள் எல்லாம் மாநிலம் அறிந்த சொற்பொழிவாளர்கள் மற்றும் பேராசிரியர்கள். நானோ அப்போது வெறும் கல்லூரி மாணவன் மட்டுமே. இந்த பட்டிமன்றங்களில் பலவற்றிற்கு குன்றக்குடி அடிகளார் நடுவராய் வீற்றிருந்து தீர்பளித்திருக்கிறார். அதனால், குன்றக்குடி அடிகளாரின் நேரடி அறிமுகமும், பேச்சுக் கலையை அவரிடமிருந்து மேலும் மேலும் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.

1980களின் தொடக்கத்தில், இப்படித் தான் ஒருமுறை எனது சொந்த ஊரான நத்தத்தில் கம்பராமாயணம் பற்றிய பட்டிமன்றம் ஒன்று நடைபெற்றது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் பட்டிமன்றத்தின் நடுவர். பேராசிரியர் சாலமன் பாப்பையா, பேராசிரியர் தமிழ்குடிமகன், திருப்பத்தூர் பேராசிரியர் பா. நமச்சிவாயம் ஆகியோருடன் இந்த பட்டிமன்றத்தின் ஒர் அணியில் நானும் பேசவேண்டும். அப்போது நான் தினமணி நாளிதழில் பணியாற்றி வந்தேன்.
நிகழ்ச்சிக்கு வரவேண்டிய பேராசிரியர் பா. நமச்சிவாயம் திடீரென்று உடல்நலக்குறைவால் நத்தத்திற்கு வர இயலவில்லை என்று தகவல் வந்து சேர்ந்தது. அவர்தான் நான் பேச வேண்டிய அணியின் தலைவர். ஏற்கனவே நத்தம் வந்த சேர்ந்திருந்த தவத்திரு அடிகளார் பயணியர் விடுதியில் தங்கியிருந்தார்.

பேராசிரியர் நமச்சிவாயம் வர இயலாத சூழ்நிலையில் உள்ளூர் தமிழாசிரியர் ஒருவரை அணிப் பேச்சாளராக எனது இடத்தில் பேசச்சொன்ன அடிகளார் பேராசிரியர் நமச்சிவாயம் பேசவேண்டிய அணித்தலைவர் பொறுப்பை என்னிடம் கொடுத்தபோது உண்மையில் நான் பயந்து நடுங்கிவிட்டேன். பேராசிரியர் தமிழ்குடிமகன், சாலமன் பாப்பையா ஆகிய இருவரும் பேசும் அணிக்கு எதிராக பேராசிரியர் நமச்சிவாயம் இடத்தில் நான் பேசுவது என்பதை என்னால் நம்பமுடியவில்லை. எனது அச்சத்தையும் தயக்கத்தையும் மிக வெளிப்படையாகவே அடிகளாரிடம் தெரிவித்தேன். அவர் புன்னகையுடன் “உன்னால் முடியும்” என்று இரண்டே வார்த்தைகளில் முடித்துவிட்டார்.

பட்டிமன்றத்தில் நான் அணித்தலைவராக பேசிமுடித்ததும் கூட்டத்தில் நீண்ட கரவொலி. தீர்ப்புரை வழங்கும்போது தவத்திரு அடிகளார் நான் அணித்தலைமை ஏற்று பேசுவதற்கு தயங்கியதையும் ஆனால் அவர் எதிர்பார்த்ததை போலவே நான் சிறப்பாக பேசியதையும் மேடையில் குறிப்பிட்டார். அத்துடன் நிறுத்தவில்லை தவத்திரு அடிகளார். “பாலகிருஷ்ணனின் பேச்சின் ஆழத்தையும் வேகத்தையும் பார்த்தபின்னால் எனது நடுவர் நாற்காலியை அவரிடம் கொடுத்து பேசச் சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது” என்றார். எப்பேர்பட்ட பெருந்தன்மை. மேடையில் அமர்ந்திருந்த என்னால் உணர்ச்சி மேலீட்டை அடக்க இயலவில்லை.

எவ்வளவு பெரிய வெகுமதி அந்த வார்த்தைகள். அவர் பேசி முடித்ததும் அவரது கால்களை தொட்டு ஆசிபெற்றேன். 2016-ஆம் ஆண்டு. தற்போது குன்றக்குடி ஆதீன மடத்தை மறைந்த தவத்திரு அடிகளார் காட்டிய அன்பு வழியிலும் அற வழியிலும் தவத்திரு பொன்னம்பல அடிகளார் நடத்திச்செல்கிறார். மிகுந்த இலக்கிய திறனும் சொல்லாற்றலும் தமிழ்ப்பற்றும் சமூக உணர்வும் கொண்ட அடிகளார் அன்பே வாழ்வு என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதினார். அந்த நூலிற்கு அணிந்துரை எழுதுமாறு தவத்திரு அடிகளார் தொலைபேசியில் சொன்னபோது என்னால் நம்ப இயலவில்லை.

1980களில் மறைந்த தவத்திரு அடிகளாருடன் நேர்ந்த மேற்சொன்ன அனுபவத்தை அவரிடம் குறிப்பிட்டேன். மிகுந்த மகிழ்வுடன் எனது அணிந்துரையை எழுதி அனுப்பிவைத்தேன். குன்றக்குடி அடிகளார் சுழற்கேடயம். ஒரு சுழலுக்குப் பின்னால் நான் எனது கையில் ஏந்திய முதல் கேடயம் அது. எத்தனை சுழல்கள்: எத்தனை சூறாவளிகள். ஆனாலும் ஒவ்வொரு முறையும் எனது கையில் காட்சிப்படிமமாய் அந்தக் கேடயம். என் சொல்வன்மை தான் எனது ஒரே சொத்து என்பதை எனக்குள் நானே உள்வாங்கிக்கொண்ட தருணம் அது. காலம் உருண்டோடுகிறது. இப்போதும் கூட அந்த சுழற்கேடயம் தான் என்னை இயக்கும் சுயமதிப்பு. விழுந்தவுடன் எழுந்து நிற்க வேட்கை தரும் விசை.

Image

வாடிக்கை நிகழ்வுகள்
செதுக்கும்
வசந்த மண்டபம்
மட்டும் இல்லை வாழ்க்கை
நெருக்கடிகளால்
நிரம்பிய
நெருஞ்சிப்பாதையும் தான்

வசதி வட்டத்திற்கு
உள்ளே இல்லை
வாழ்வின் வகுப்பறை

அது
சிலநேரங்களில்
வெயில் கொளுத்தும்
விளிம்பில் நிற்கிறது
வெறித்தபடி!

துன்பம் வரும்போது
சிரித்தோமா அழுதோமா
என்பது அல்ல
கேள்வி
துவண்டு விழுந்தோமா
விழுந்தாலும் எழுந்து
தொடர்ந்து நடந்தோமா என்பதே!

ஒரு
புயல் வந்து
போகலாம்.
அதில் ஒரு
கடற்கரையே
காணாமல் போகலாம்
ஆனாலும்
மறுபடியும்
கடல் அழைக்கும்
கட்டுமரங்களின்
கால்கள் துடிக்கும்

இதோ
அவநம்பிக்கை
அழுது புலம்புகிறது
தன்னம்பிக்கை
ஒடிப்போகாமல்
ஓசையின்றி நடக்கிறது

வலிகளை வாங்கிப் பழகு
வருத்தங்கள் தாங்கிப் பழகு

வலிகளை அறியாத
வாழ்க்கை
உண்மையில் வரம் அல்ல
ஏனெனில்
அது
நிரந்தரம் அல்ல

ஏற்றுக்கொண்டதும்
எளிதாகி விடுகிறது
எதுவும்

 

விடிந்தால் தேர்வு

ஒரியா மொழியில் ஒரு பழமொழி உண்டு. “பன்னிரண்டு மாதங்கள், பதின்மூன்று திருவிழாக்கள்.” ஒடிசா மாநிலத்தில் அதிலும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் எப்போதும் ஏதாவது ஒரு திருவிழா, நாடகம், நடனம், கவியரங்கம், இசை, ஓவியக் கண்காட்சி என்று நடந்து கொண்டே இருக்கும்.

தமிழ்நாட்டில் இருப்பது போன்று சினிமா தியேட்டர்கள் ஒடிசாவில் அதிகமாக இல்லை. ஒரு சில மாவட்டங்களில் ஒரு சினிமா தியேட்டர் கூட இல்லை. அது கூட ஒருவகையில் நல்லது தான் என்று தோன்றும். ஆனால், நாடகங்கள் அங்குமிங்கும் நடந்து கொண்டே இருக்கும். கிராமப்புறம் மற்றும் சிறுநகரங்களில் திரையரங்குகள் அதிகமாக இல்லாத குறையைப் போக்குவது ‘ஓபேரா’ என்ற நாடகக் கொட்டகைகள்.

ஒரியா மொழியில் மட்டுமன்றி ஆங்கில மொழியில் நாடகம் நடத்துபவர்கள் கூட புவனேஸ்வரில் உண்டு. புவனேஸ்வரில் உள்ள அரங்குகளில் வாரம்தோறும் ஏதேனும் நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கும். எழுத்தாளர்கள், பாடகர்கள், நாட்டியக் கலைஞர்கள் என்று பலரும் என்னைத் தனிப்பட்ட முறையிலும் அறிந்தவர்கள் என்பதால் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள அழைப்புகள் வரும். இப்போதெல்லாம் வேலைப்பளுவால் பெரும்பாலான அழைப்புகளை ஏற்கமுடிவதில்லை. ஒடிசா தலைமைச் செயலகத்திலேயே ஒவ்வொரு துறையிலும் ஊழியர்களின் கலைப்பண்பாட்டு அமைப்புகள் செயல்படுகின்றன. அவ்வமைப்பினர் பொதுவாக வருடத்திற்கொரு முறை நாடகம் நடத்துவதில் காட்டும் ஆர்வம் வியப்புத் தருவதாக இருக்கும். மாலையில் 6, 7 மணிக்கு வர இயலாத நிலை என்றாலும் கூட வற்புறுத்தி அழைத்து வந்து “குத்துவிளக்காவது ஏற்றி வைத்துவிட்டுச் செல்லுங்கள்” என்பார்கள்.

கடந்த ஆண்டு அப்படி ஒருநாள் ஒரு நிகழ்விற்குச் சென்றிருந்த போது என்னை அறிமுகப்படுத்திப் பேசியவர் நான் ஒரு கலைஞன் என்றும் நான் குடிமைப் பணிக்கு வருவதற்கு முன்னால் நாடகங்களை இயக்கி நடித்தவன் என்றும் குறிப்பிட்டார். “சார் ஒரு நாடகக் கலைஞர் என்ற முறையில் எங்களில் ஒருவர்” என்று அவர் உரிமையுடன் சொன்னதும் கரவொலியில் அரங்கம் அதிர்ந்தது. அநேகமாக அவர் எனது நட்பு வட்டத்திலிருந்து அந்தத் தகவலைத் திரட்டியிருக்கவேண்டும். அல்லது வேறு ஏதாவது நிகழ்வில் இது பற்றி நானே பேசியிருக்கக்கூடும்; எனக்கு சரியாக நினைவில் இல்லை. எதுவாயினும் அந்த மேடையில் அவர் என்னை ஒரு சக கலைஞன் என்று அறிமுகம் செய்ததும் எனக்குள் பழைய நினைவுகள் நிழலாடின.

1983 ஆம் ஆண்டு, ஜூன் மாதம். மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி அரங்கம். மதுரை தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊழியர்களின் ‘ தினக்ஸ் ‘ நாடகக்குழுவின் சார்பில் அரங்கேற்றப்பட்ட ‘சிம்மகேது’ என்ற நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. பாண்டிய நாட்டு இளவரசன் (!) வேடத்தில் நான்.
“சேலை கட்டி வந்ததொரு சிட்டுக்குருவியே
ஜீவனுக்குள் பாயுதொரு காதல் அருவியே” என்ற பாடலின் வரிகள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இளவரசன் வேடத்திலிருந்த நான் ‘மதுக்கோப்பை’யுடன் பாடலுக்கு வாயசைத்துக் கொண்டிருந்தேன். இளவரசனின் காதலியாக நடித்திருந்த நடனப்பெண் பாடலின் வரிகளுக்கு தீவிரமாக நடனமாடிக் கொண்டிருந்தார்.

அச்சுப்பிரிவில் பணியாற்றிய ஊழியரான கணேசன் சிம்மகேது என்ற முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். காலஞ்சென்ற நாராயணன் எழுதிய அந்த நாடகத்தை நான் இயக்கி நடித்ததுடன் பாடல்களையும் எழுதியிருந்தேன். பிரடெரிக்தாசன் அப்பாடல்களுக்குப் பல்வேறு ராகங்களில் இனிமையாக இசையமைத்திருந்தார். அந்தப்பாடல்களை சினிமாப்பாட்டுப் புத்தகம் போல அச்சடித்து நாடகம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு வழங்கியிருந்தோம்.

நாடகத்தின் கடைசிக்காட்சியில் விஷம் கலந்த ‘மது’ அருந்தி நான் கீழே விழுகிறேன். மீதியிருந்த விஷத்தை நடனப்பெண்மணி அருந்தி விட்டு விழுகிறார். ராஜகுரு சிம்மகேது ‘நம்பியார்’ பாணியில் சிரித்து, நீண்ட வசனம் பேசுகிறார்.சிம்மகேதுவின் முழக்கம் இப்போதைய தொலைக்காட்சி நெடுந் தொடர்கள் போல நீடித்தது. நான் அசைவின்றிக் கிடந்தேன். மனதில் நான் மறுநாள் எழுதவேண்டிய ஐ.ஏ.எஸ் தேர்வைப் பற்றிய எண்ணங்களும் ஓடிக் கொண்டிருந்தன. விடிந்தால் மதுரை மருத்துவக்கல்லூரியில் ஐ.ஏ.எஸ். முதல் நிலைத் தேர்வு. முற்பகலில் ஒரு தாள்; பிற்பகலில் ஒரு தாள். பிற்பகலில் விருப்பப்பாடமான வரலாற்றுத் தேர்வு.

நான் பணியாற்றிய நாளிதழின் பொன்விழாவையொட்டி இந்த நாடகம் நடத்தப்பட்டதால் பொன்விழாவுக்கான தேதி நிர்வாகத்தினரால் முன்னரே முடிவு செய்யப்பட்டது. அது எனது ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு முதல் நாள் இரவாக அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. முதல் நாள் இரவு நாடகம்; விடிந்தால் ஐ.ஏ.எஸ்.தேர்வு என்ற இக்கட்டான நிலைமை. இப்படிப்பட்ட ஒரு நிலைமையை வேறு யாராவது சந்தித்திருப்பார்களா என்பது சந்தேகமே.

Image
நான் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவது கூட என் குடும்பத்தினர் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் தவிர வேறு யாருக்கும் தெரியாது. எனவே நாடகத் தேதியை மாற்றுமாறு நிர்வாகத்தைக் கேட்கவும் வாய்ப்பு இல்லை. அப்போது நான் நாடகத்துறையில் மிக ஈடுபாட்டுடன் இருந்தேன். நாடக இயக்க முயற்சியில் தீவிரமாக இறங்கியிருந்தேன். வெவ்வேறு ஊர்களின் பொருட்காட்சிகளில் ‘தினக்ஸ்‘ குழுவின் நாடகங்கள் போட்டு வந்தோம். இவ்வாறு நாடக முயற்சிகளை எனது திரையுலக நுழைவுக்கான பயிற்சியாகவே நான் கருதினேன். திரையுலகில் பாரதிராஜாவிடம் உதவியாளராகச் சேர்ந்து பாக்யராஜ் போன்ற பெரிய திரைப்பட இயக்குனராகி விட வேண்டுமென்ற ஆர்வம். பத்திரிகை உதவி ஆசிரியராக இருந்துகொண்டு, நான் நாடகங்களில் நடித்து, இயக்கி வந்ததால் ‘அமெச்சூர்’ நாடகக்குழுக்களின் சங்க நிர்வாகக் குழுவிற்கும் என்னைத் தேர்வு செய்து விட்டனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற மூன்று முறை முயற்சி செய்யலாம் என்பது அப்போது விதிமுறை. ஆனால் நான் திரைப்படத்துறைக் கனவுகளில் இருந்ததால் ஐ.ஏ.எஸ் தேர்வை ஒரே ஒரு முறை மட்டும் எழுதுவது; அதிலும் ஐ.ஏ.எஸ் கிடைத்தால் மட்டும் சேருவது; இல்லையெனில் திரைப்படத்துறைக்குப் போய்விடுவது என்பது எனது திட்டம். பொதுவாக ஒரு வருடம் நடைபெற்ற குடிமைத் தேர்வின் இறுதி முடிவுகள் வெளியாவதற்கு முன்பே அடுத்த ஆண்டிற்கான அறிவிப்பு வெளியாகிவிடும். அதன்படி ஏற்கனவே தேர்வு எழுதியிருப்பவர்கள் கூட அடுத்த ஆண்டுத் தேர்விற்கு விண்ணப்பம் போட்டு தயார் செய்யத்தொடங்கிவிடுவார்கள்.

நேர்முகத்தேர்விற்குப் பின்னர் வெளியாகும் முடிவில் நல்ல ரேங்க் வாங்கி ஐ.ஏ.எஸ் கிடைப்பது உறுதியாகிவிட்டால் அத்தோடு நிறுத்திக்கொள்வார்கள். இல்லையன்றால் ஏற்கனவே விண்ணப்பித்தபடி மீண்டும் எழுதுவார்கள். ஆனால், நான் ஒரே ஒரு முறை மட்டுமே முயற்சி செய்வது என்று முடிவு செய்திருந்ததால் இரண்டாவது வாய்ப்புக்கு விண்ணப்பம் கூடப் போடவில்லை. நாடகம் முடியும்போது இரவு மணி பத்தரை. இளவரசன் வேடம் என்பதால் ஒப்பனை கொஞ்சம் அதிகம். எனவே மேக்கப்பை கலைத்து விட்டு நான் அறைக்குத் திரும்பும் போதே நள்ளிரவைத் தாண்டி விட்டது.

நான் மறுநாள் காலை மதுரை மருத்துவக்கல்லூரிக்கு தேர்வு எழுதப்போனேன். தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் போது அந்தத் தேர்வு அறையின் கண்காணிப்பாளர் என்னையே சுற்றிச் சுற்றி வந்தார். அவர் என் மீது சிறப்புக்கவனம் செலுத்தி கண்காணிப்பதாகத் தோன்றியது. “ஏதோ பார்க்கிறார் ” என்று தேர்வெழுதுவதில் கவனம் செலுத்தினேன். இருந்தாலும் “ இவர் ஏன் நம்மையே பார்க்கிறார்?” என்ற யோசனையும் வந்து எனது கவனத்தைச் சிறிது பாதிப்பதாக இருந்தது.

அவர் திடீரென என் அருகே வந்தார். “உன் காதில் என்ன சிவப்புக்கறை ?” என்று கேட்டார். அவர் காட்டிய இடத்தில் விரல் வைத்துத் தேய்த்ததும் கையில் ரத்தக்கறை படிந்த மாதிரி ஆனது. உடனே சிறிது புன்னகையுடன், “ நேற்று இரவு வரலாற்று நாடகத்தில் இளவரசன் வேடம். மேக்கப் முழுசாகக் கலையவில்லை போல இருக்கிறது…” என்றேன். அவ்வளவு தான். அவர் முகம் போனவிதமும் அவர் ,என்னைப்பார்த்த பார்வையும் இருக்கிறதே! இன்று வரை எனக்கு அந்த ‘ரியாக்ஷ்ன்’ நினைவில் இருக்கிறது. அதற்குப் பின்னர் அவர் எனது பக்கமே வரவில்லை.
2017 டிசம்பர். வாழ்க்கை எத்தனை வியப்புகளை அடைகாத்து வைத்திருக்கிறது! அந்த முதல் முயற்சியிலேயே தேர்வு பெற்று கலெக்டராகி ஒடிசா வந்து இரண்டு மாவட்ட ஆட்சியர் பொறுப்பு, உதவித் தேர்தல் ஆணையராக 25 மாநிலத் தேர்தல்கள், இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் பொறுப்பு, இப்போது ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலர்.

இந்த ‘விடிந்தால் தேர்வு’ மலரும் நினைவுகளை இரண்டாம் சுற்றுக்காக புவனேஸ்வரத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை முற்பகலில் எனது மடிக்கணிணியில் இது போல புன்னகைத்தபடி பதிவு செய்வேன் என்பது யாருக்குத் தெரியும்? எனக்கும் தெரியாதே. வாழ்க்கை நம் இடுப்பில் முடிந்து வைத்துள்ள சுருக்குப் பையில் என்ன இருக்கிறது என்று நமக்கும் தெரியாமலிருப்பதே வாழ்க்கையைச் சுவையாக்குகிறது.

புவனேஸ்வரத்தில் இந்த ஆண்டின் இசை நடனம் நாடக ‘சீசன்’ ஆரம்பித்துவிட்டது. எப்படியும் ஓரிரு நாடக நிகழ்வுகளைத் தொடங்கிவைக்கப் போவேன். ரவீந்திர மண்டபத்தில் தொடக்கவிழா மேடையில் உட்கார்ந்திருக்கிறபோது எப்போதும் போல சிம்மகேது நாடகம் மீண்டும் நினைவுக்கு வரும். நான் இளவரசனாக மேடையில் நிற்பேன். எனக்குள் சிரித்துக்கொள்வேன்.

Image

 

பரந்து கிடக்கிறது
உலகம்
அனுபவங்களும்
சாத்தியங்களும்
அள்ள அள்ளக் குறையாமல்

பங்குச்சந்தைகள்
விழும் எழும்
‘கரடி’களும் ‘காளை’களும்
முட்டிமோதும்

அதைவிடு
ஜன்னலோரத்து
மாமரத்தில்
பறவைகள் இரண்டு
கீச்சிடுகின்றன.

தொலைக்காட்சி
மேதைகளின்
தொண்டை கிழியட்டும்.
தூரத்து நிலா
இன்றென்னவோ
கூடுதல் அழகுடன்
கூப்பிடுகிறது.

விடிந்ததும்
பேசலாம்
நாளையோடு
இந்த நிமிடம்
பாடத் தோன்றினால்
பாடு.

முன்கூட்டியே போட்ட மொட்டை

இந்த ‘இரண்டாம் சுற்று’ நூலை நான் எழுதிக் கொண்டிருக்கும் போது பழைய நினைவுகள் பலவற்றின் ஊடாகப் பயணித்தேன். தனித்தனியாகக் கிடந்த கருப்பு வெள்ளைப் படங்களையும், பழைய வண்ணப் படங்களையும் எனது கணிப்பொறியில் எப்போதோ ஒருமுறை ‘டிஜிட்டல்’ வடிவத்தில் பதிவு செய்து வைத்தது என் நினைவுக்கு வந்தது. நூற்றுக்கணக்கான அந்தப் புகைப்படங்களை அண்மையில், ஒரு மழை இரவில் பார்த்துக் கொண்டிருந்தேன். நானும் எனது அண்ணன் வரதனும் 1984 இல் டில்லியிலும் ஆக்ராவிலும் எடுத்த புகைப்படங்கள். அப்போதுதான், ‘முன்கூட்டியே போட்ட மொட்டை’ என்ற இந்தத் தலைப்புக்கான காரண நிகழ்வு, காட்சிப் படிமமாய் என் கண்முன் மீண்டும் தோன்றியது.

மத்திய அரசுப் பணித் தேர்வாணையத்தின் 2-ஆம் கட்டமான முக்கியத் தேர்வில் (மெயின்) தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து என்னை டெல்லியில் நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கு வரும்படி கடிதம் வந்திருந்தது. அதுவரையில், சென்னைக்கு வடக்கே நான் ஒரு முறை கூட பயணம் செய்ததில்லை.
நானும் எனது அண்ணன் வரதனும் டில்லிக்கு சென்றோம். துணைக்குத் துணையாகவும் இருக்கும்; டெல்லியையும் ஆக்ராவையும் சுற்றிப் பார்த்தது போலவுமிருக்கும் என்ற எண்ணம் எங்கள் இருவர் மனதிலுமே இருந்தது. தாஜ்மகாலை நேரில் பார்க்கும் ஆசை யாருக்குத்தான் இருக்காது?
சில நேரங்களில் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமலிருப்பதுதான் நல்லது என்று தோன்றுகிறது.

எந்தப் பயிற்சி நிலையத்திலும் சேராமல், பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டே நாடகத்தை இயக்கி நடித்துக் கொண்டே தேர்வு எழுதுவது சிரமம் என்றாலும் அதற்குள் ஒரு பெரிய ‘உதவி’ ஒளிந்திருந்தது என்பதுகூட எனக்குத் தெரியாது. ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கும் வேறு எந்தப் போட்டியாளரையும் நான் சந்தித்திருக்கவில்லை என்பது உளவியல் அடிப்படையில் எனக்கு வசதியாகப் போய் விட்டது என்றே இப்போது நினைத்துப்பார்த்தால் எனக்கு தோன்றுகிறது.

டெல்லிவரை போய், அங்கேயே தங்கி பயிற்சி நிலையங்களில் சிறப்பு பயிற்சி எடுப்பவர்களில்; தினமும் 14 முதல் 15 மணிநேரம் வரையில் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருப்பவர்களில், சிறந்த பல்கலைக்கழகத்தில் படித்து நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசும் எவரையேனும் நான் அதுவரையில் சந்தித்திருக்கவில்லை. அப்படி எவரையேனும் சந்தித்திருந்தால், நான் பயந்து நடுங்கியிருக்கவும் கூடும். “23—ஆம் புலிகேசி வெள்ளைக்கொடியைக்காட்டி, ரத்தக் களறியைத் தவிர்த்தது” போல, நான் ‘ராஜதந்திரத்தோடு’ பின் வாங்கியிருக்கவும் கூடும். யார் கண்டது? போட்டி எப்படிப்பட்டது; யார் யாரோடு எல்லாம் மோதுகிறோம் என்பதை அறியாத இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை எனக்கு வசதியாகப் போய் விட்டது. என் கையில் தராசு; நிறுப்பவன் நான்; நிறுக்கப்படுபவனும் நான் தான். இது எல்லாருக்குமான ஒரு வழிமுறை என்று நான் ஒருபோதும் சொல்லமாட்டேன். பரிந்துரைக்கவும் மாட்டேன். ஆனால் என் மட்டில் இது ‘ஆக்கபூர்வமாக’ பயன்பட்டது என்பதைத் தான் நான் இங்கே பதிவிடுகிறேன்.

நான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருந்த நாட்களில் மிகத் தெளிவாக, கண்கூடாகப் பார்ப்பது போல ஒரு காட்சி எனக்குள் வந்து போகும். படங்களில் பார்த்திருந்த இமயமலை போன்ற பரந்து விரிந்த மலைப்பகுதி. தூரத்தில் பனிச்சிகரங்கள் தெரியும் பரப்பு. மரங்களின் நடுவே குறுகலான மலை இடுக்குப் பாதைகளில், பத்துப் பதினைந்து பேர் முரட்டுக் கம்பளித் துணிகளை உடுத்திக் கொண்டு மலையேறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் நானும் ஒருவனாய் நடக்கிறேன். அவர்களில் யாருமே எனக்கு தெரிந்தவர்களாய் இல்லை. எல்லாரும் புதிதாக இருக்கிறார்கள். நிஜத்தில் அப்போது என்னிடம் ஒரு ’ஸ்வெட்டர்’ கூடக்கிடையாது. கோட்டு, சூட்டு, பூட்ஸ் போன்ற உபகரணங்கள் எல்லாம் எனது வாழ்க்கையில் அப்போது வந்திருக்கவில்லை.
பிறிதொரு முறை நானே யோசித்துப் பார்த்திருக்கிறேன்: ‘இமயமலையில் நடந்துபோவது போல் ‘எனக்கு ஏன் தோன்ற வேண்டும்? அப்போதுதான் எனக்கு மங்கலாக ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் குடிமைத்தேர்வு எழுதுவது பற்றி ஓர் ஆவணப் படம் இருப்பதாகக் கேள்விப்பட்டு, இளைஞர் நல பொறுப்பாளரைச் சந்தித்து நூலக அறையொன்றில், ஒரு 16 எம். எம். ‘ப்ரொஜெக்டரி’ல் அப்படத்தை சுவரின் மீது திரையிட வைத்து அதை நான் பார்த்திருந்தது என் நினைவுக்கு வந்தது. அந்த ஆவணப்படத்தில், குடிமைத் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி பெறுகிறவர்கள் இப்படியெல்லாம் இமயமலையேறும் மலையேற்றம் செய்வதைப் பார்த்திருந்தேன். அநேகமாக என்னையும் அவர்களுள் ஒருவனாக என்னையறியாமலே பதிவு செய்து கொண்டேன் என்றே இப்போது தோன்றுகிறது.

1984 ஏப்ரல் மாதம். டெல்லியில் ஷாஜகான் ரோட்டிலுள்ள குடிமைப் பணி தேர்வு ஆணைய அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு முடிந்து மகிழ்ச்சியுடன் வெளியே வந்தேன். கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் நான் நல்ல முறையில் பதில் சொன்னேன் என்று நான் நம்பியதே எனது மகிழ்ச்சிக்குக் காரணம். மற்றவர்கள் எப்படி பதில் சொன்னார்கள் என்பது எனக்குத் தெரியாமல் இருந்ததும் அந்த மகிழ்ச்சிக்கு ஒரு காரணம் தான்.

ஆணயத்தின் வெளிவாயிற் கதவருகேயே ஆர்வத்துடன் காத்திருந்த என் அண்ணன் என்னிடம், ‘ இண்டர்வியூ எப்படி ?’ என்று சைகையில் கேட்டார். நானும் சைகையிலேயே ‘சூப்பர்’ என்றேன். தமிழ்சினிமாக்களில் அறுவைசிகிச்சை செய்து முடித்ததும் வெளியே வரும் டாக்டர், கையுறையைக் கழற்றிக் கொண்டே “ஆபரேஷன் சக்ஸஸ்” என்று சொல்வது போல இருந்தது அது.
மறுநாள் சப்தர்ஜங் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை முடிந்த கையோடு நாங்கள் இருவரும் டில்லியைச் சுற்றிப்பார்த்து வளைத்து வளைத்து புகைப்படங்கள் எடுத்தோம். குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றக் கட்டடம் போன்றவற்றைப் பார்த்தபோது ”இனிமேல் எப்போது இங்கெல்லாம் வரப்போகிறோம்” என்றார் அண்ணன். அடுத்து ஒருநாள் பயணமாக மதுரா, ஆக்ரா சென்றோம்.

தாஜ்மகால் முன் நின்று மிக மகிழ்ச்சியாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். ஒரு தமிழ்த் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி ‘ காவியமா, நெஞ்சில் ஓவியமா ?’ என்று பாடிக்கொண்டே தாஜ்மகால் முன்பாக கம்பீரமாய்க் காதல் செய்த காட்சி நினைவுக்கு வந்தது. உண்மையில் தாஜ் மகாலை நேரில் பார்த்ததே ஒரு சாதனை போல தோன்றியது.

தேர்வுக்கு தயாரான போது நத்தத்திலிருந்து நான் மதுரைக்கு வேலைக்குப் போகும், வரும் வழியில் பேருந்து நடத்துநரின் கடைசி சீட் வெளிச்சத்தில் படிப்பேன். வீடு திரும்பியதும் நள்ளிரவுவரை நான் படிப்பதைப் பார்த்து, என் அம்மாவுக்கு மனது கஷ்டமா கத்தான் இருந்தது. அதிலும் கலெக்டர் ஆவதற்காகப் படிக்கிறேன் என்று மகிழ்ச்சியும், அதே சமயம் சற்று பதட்டமும் அடைந்திருந்தார். ஆகவே நான் கலெக்டர் ஆகிவிட்டால் திருப்பதி வெங்கடாஜலபதி மலைக்குப் போய் என்னை மொட்டையடித்துக் கொள்ளச் செய்வதாக நேர்ந்து கொண்டிருந்தார். அது நடக்கும் என்றும் உறுதியாகச் சொல்லிக் கொண்டிருப்பார்.

Image

டெல்லியிலிருந்து நானும் அண்ணனும் ரயிலில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விஷயங்கள் எல்லாம் என் மனத்தில் ஓடிக்கொண்டிருந்தன. அப்போதுதான் எனக்குள் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. “சென்னையில் இருந்து திருப்பதி பக்கம்தான். எனவே சென்னையில் இருந்து திருப்பதிக்குப் போய் ஒரு மொட்டையைப் போட்டுவிட்டு ஊருக்குப் போனால் என்ன” என்பது தான் அந்த யோசனை.

இதை மெதுவாக அண்ணனிடம் சொன்னேன். “நீ ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றபிறகுதானே மொட்டை போடுவதாக அம்மா நேர்த்திக் கடன் வைத்திருக்கிறார் ? அப்படியிருக்க, நீ தேர்வு முடிவு தெரிவதற்கு முன்பே மொட்டை போடுவது எப்படி சாத்தியம்? அது ஒரு தெய்வக்குற்றமாகக்கூட ஆகிவிடும்” என்று கோபித்துக் கொண்டார். அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினார். என்னவோ தெரியவில்லை; தேர்வு முடிவு பத்திரமாக எனது பாக்கெட்டில் இருப்பது போன்ற ஓர் உணர்வில் நான் இருந்தேன். அதனால் மொட்டை போடும் முடிவில் உறுதியாக இருந்தேன்.

நான் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெறப்போவது நிச்சயமென்றும், தேர்வு முடிவு மே மாதக் கடைசியில்தான் வரும் என்பதால், அதற்குப்பின் மீண்டும் திருப்பதிக்கு வந்து மொட்டை போட்டு விட்டு ஆகஸ்ட் மாதம் மசூரிக்குப் பயிற்சிக்குச் செல்ல வேண்டுமென்றால், இரண்டு மாதங்களுக்குள் தலையில் போதுமான முடி வளர்ந்திருக்காது என்பதால் பார்க்க நன்றாக இருக்காது என்று சொன்னேன். அது என் அண்ணனின் கோபத்தை மேலும் கிளறியது. ஏதேதோ முனகிக்கொண்டிருந்தார். இடையில் ‘ லூசுப்பயல் ’ என்று அவர் என்னைத் திட்டியதும் எனக்குக் கேட்டது.

“ உனக்கு என்னுடன் திருப்பதிக்கு வர இஷ்டமில்லையென்றால் நீ நேராக ஊருக்குப் போய்விடு. நான் திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டுவிட்டு ஊருக்கு வந்து விடுகிறேன்.. “ என்று அண்ணனிடம் சொல்லிவிட்டேன். “என்னமோ செய்” என்று அவர் மவுனமாகி விட்டார். ஆனால், சென்னைக்கு வந்து சேர்ந்ததும் பாரிமுனையில் உள்ள பஸ் நிலயத்துக்குப் போய் திருப்பதி பஸ்சுக்காக நான் காத்திருந்தபோது அவரும் என்னுடன் காத்திருந்தார். என்னைத் தனியே விட்டுவிட்டுப் போக அவருக்கு மனசில்லை. பஸ் வந்ததும் அவரும் என்னுடன் ஏறி உட்கார்ந்து கொண்டார்.

நாங்கள் திருப்பதிக்குப் போய்ச்சேர்ந்த போது நள்ளிரவாகி விட்டது. அங்கு ஒரு லாட்ஜில் தங்கி மறுநாள் திருமலைக்குப் போய் அங்கு மொட்டை போட்டுக் கொண்டேன். பிறகு திருப்பதி லட்டு பிரசாதங்களை எல்லாம் வாங்கிக்கொண்டு பஸ் பிடித்து நத்தம் போய்ச் சேர்ந்தோம்.

பளபளவென்று பொழுது விடியும் நேரம். வழக்கம் போல் வீட்டு வாசலில் வாசல் தெளித்து, கோலம் போட்டுக் கொண்டிருந்தார் எங்கள் அம்மா. நான் மொட்டைத் தலையோடு வந்ததைப் பார்த்ததுமே அவருக்கு சந்தோஷத்தில் தலைகால் தெரியவில்லை. டெல்லியில் இண்டர்வியூ முடிந்ததுமே கையிலேயே வேலைக்கான ‘ஆர்டரை’யும் கொடுத்து அனுப்பியிருப்பார்கள் என்று அம்மா நினைத்திருக்க வேண்டும். எங்களை வீட்டுக்குள் மகிழ்ச்சியுடன் அழைத்துச் சென்றார். சாமி அறைக்கு அழைத்துப்போய் வெங்கடாஜலபதி படத்தை வணங்கியபடி “ என் வேண்டுதல் வீண் போகவில்லை” என்று சந்தோஷப்பட்டார்.

அதுவரை மௌனமாக இருந்த எனது அண்ணன் குறுக்கிட்டு, ‘ “அட நீ வேற, இன்னும் ரிசல்ட்டே வரல்ல. உன்மகன் முன்கூட்டியே மொட்டை போட்டுவிட்டு வந்திருக்கிறான்” என்று சொன்னார். அம்மாவுக்கு ‘சப்’பென்று ஆகிவிட்டது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, சாமிபடத்தின் முன் மீண்டும் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, ‘தேர்வில் நான் வெற்றி பெறுகிறேனோ இல்லையோ, தெய்வக்குற்றம் ஒன்றும் நேராமல் இருக்க வேண்டு’மென்று வேண்டிக்கொண்டார். நானும் என் சகோதரரும் டீ குடித்துக் கொண்டே மீண்டும் விவாதத்தில் இறங்கினோம் “ஒருவேளை நீ பாஸ் ஆகாவிட்டால்,என்ன செய்வாய்?” என்று அவர் கேட்டார். “நான் ஒன்றும் செய்ய மாட்டேன். முடி அதுவாகவே வளர்ந்துவிடும்” என்று நான் சொன்னேன்.

நல்ல வேளை, நான் தினமணி அலுவலகத்தில், அச்சுக்கூடத்தில் ’ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். ‘ என்று அச்சுக் கோர்த்து ஒரு வெள்ளைத்தாளில் அச்சடித்து அதைக் கத்தரித்து பர்சில் வைத்திருந்ததை என் அண்ணனிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால், அவர் இன்னும் கோபம் அடைந்திருப்பார்.

1984, மே 25-ஆம் நாள். வெள்ளிக்கிழமை. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு ‘சிட்டி எடிசன் ‘ என்று சொல்லப்படும் மாநகரப் பதிப்புக்கான பொறுப்பு என்னுடையது. ‘மெய்ன் ஷிஃப்டுக்கு’ வந்தவர்கள் எல்லாரும் இரவு ஒன்பதரை மணிக்குச் சென்று விடுவார்கள்.பொதுவாக இரவு ஒன்பது மணிக்குத்தான் இரவு ஷிஃப்டுக்குச் செல்வேன். வழக்கம் போல, அன்று நான்இரவு ஒன்பது மணிக்கு அலுவலகத்துக்குள் நுழையும் போதே, எனக்குத் தெரியும் யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் அன்று வெளியாகி இருக்குமென்று.

‘டெலிபிரிண்டர்’ அருகே சென்று பார்த்தேன். ஐ.ஏ.எஸ். தேர்வில் முதலிடம், இரண்டாம் இடம் பெற்றவர்ளுடைய பெயர்கள், அவர்களைப்பற்றிய மற்ற விவரங்கள் தனியாக வந்து கொண்டிருந்தன. அதே சமயம் தேர்வு பெற்ற மற்றவர்களின் முழுப்பட்டியலும் வரத் தொடங்கியது. யார் யாரோ தேர்வாளர்களின் பெயர்கள் வந்தன. ’ஆர்.’ (R) என்ற முதல் எழுத்து (initial) டெலிபிரிண்டரில் தட்டச்சாகி வரும்போதும், ’பா’(Ba) என்ற பெயரின் முதல் எழுத்து வரும்போதும் நான் மிகப் பரபரப்படைவேன். ஆனால், அது வேறொருவரின் பெயராக இருக்கும். எனவே நான் ஒரு முடிவு செய்தேன்.

“இப்படி டெலிபிரிண்டரின் அருகே நின்று ஒவ்வொரு பெயராகப் பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது. என்னைப்பொறுத்தவரை, அப்போது அது ஒரு செய்தி, அவ்வளவு தான். முடிவு வெளியாகிறது; இனிமேல் எதுவும் மாறப்போவதில்லை; எதற்காக பரபரப்பாக வேண்டும்” என்று எனக்குள் நானே சொல்லிக்கொண்டு எனது இருக்கையில் அமர்ந்து எப்போதும் போல வேலை பார்க்கத்தொடங்கினேன். நகரப் பதிப்புக்கான உள்ளூர் செய்திகளையும் பிற முக்கிய செய்திகளையும் மொழிபெயர்த்து எப்போதும் போல அச்சுக்கோர்க்க அனுப்பினேன்.
டெலிபிரிண்டெரில் வந்திருந்த செய்திகளை ஓர் ஊழியர் எடுத்துக்கொண்டு வந்து என் அருகே ‘ட்ரே’யில் வைத்துவிட்டுச் சென்றார்.

ஒரு குவியலாக அவை கிடந்தன. மனதைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முதலில் அன்றைய வேலையை முடிப்பதுதான் முக்கியம்; அது ஒன்றுதான் வழி என்று முடிவு செய்தேன். ஏனைய செய்திகளை மொழிபெயர்த்து முடித்தபின், ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் இடம்பெற்றிருந்த டெலிப்ரிண்டெர் காகிதச் சுருளில் ஒவ்வொரு பெயராகப் பார்த்துக்கொண்டே வந்தேன். ஓரிடத்தில் என் கண்கள் நிலைகுத்தி நின்றன. அந்த இடத்தில் என் பெயர், பதிவு எண்ணுடன் இடம் பெற்றிருந்தது.! ஆம், அது நான்தான்!

ஒருகணம் எனக்குள் வெப்பமும், குளிர்ச்சியும் விரைந்து பரவியது. எனது பெயரையே வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன். தேர்ச்சி பெற்றவர்களின் பெயர்ப்பட்டியலை அச்சுப்பிரிவுக்கு அனுப்பினேன். இடையில் அலுவலக உதவி ஊழியரை அழைத்து, அந்த நேரம் ஷிஃப்டிலிருந்த அச்சுப்பணியாளர்களுக்கும் பிழைதிருத்துவோர்களுக்கும் பன்ரொட்டியும் பாலும் வாங்கி வருமாறு சொல்லி பணம் கொடுத்து அனுப்பினேன்.

கொஞ்ச நேரத்தில் பணியாளர்கள் அனைவரும் வந்து “என்ன விசேஷம், சார் கல்யாணம் நிச்சயமாகியிருக்கிறதா, என்ன ஏது” என்று கேள்விக்கணைகள் தொடுத்தனர். எதேனும் விசேஷம் என்றால் பன்ரொட்டியும், பாலும் வாங்கிக்கொடுத்து ‘ ட்ரீட் ’ அளிப்பது அங்கே வழக்கம். நான் எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் சாதித்தேன். ‘சும்மா’ தான் என்று சொல்லிச் சமாளித்தேன். காரணம், நான் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதியிருப்பதைக்கூட அலுவலகத்தில் அதுவரை யாரிடமும் சொல்லியிருக்கவில்லை.

நள்ளிரவுக்கு மேல், காலை நாளிதழ் பிரதிகள் அச்சாகி முடிந்ததும், ஊழியர்கள் ‘சுடச்சுட’ என் கையில் கொடுத்த ஒரு பிரதியை பிரித்துப் பார்த்தேன். என் பெயரை, என் பதிவு எண்ணை மீண்டும் மீண்டும் சரிபார்த்துக் கொண்டேன். அது நான்தான். அதிகாலை 4.30 மணியளவில் அலுவலகத்திலிருந்து கிளம்பி பஸ் பிடித்து நத்தம் வந்து சேர்ந்தேன். விடிகாலை. வீட்டுக்குச் சென்றபோது எனது அம்மா வழக்கம் போல் வாசலைப் பெருக்கி கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். “அம்மா, நான் ஐ.ஏ.எஸ் பரிட்சையில் பாஸாயிட்டேன்” என்று சொன்னேன்.

என்னுடைய தலையில் அப்போது ‘ போதுமான’ என்ற இலக்கை நோக்கி முடி வளர்ந்து கொண்டு இருந்தது. இன்னும் சில மாதங்களில் மசூரிக்கு நான் ஐ.ஏ.எஸ். பயிற்சிக்குப் போக வேண்டும் அல்லவா!

 

இன்னும் தனது
இருப்பைப் புலப்படுத்தாத
எவரெஸ்ட் என்ன
எவரெஸ்ட்?

திறமையை
கக்கத்தில் இடுக்கிக்கொண்டு
தூங்கித் தோற்ற
திறமைசாலியை
யார் எழுப்புவது?

படித்தவர்கள் எல்லாரும்
அறிவாளிகள் என்றால்
படித்த குற்றவாளிகள்?

விதைக்காத விதை
பயிர் அல்ல.
அறுக்காத கதிர்
அறுவடை அல்ல!

தங்கப் பதக்கம்
என்பது
உண்மையில்
காரணப்பெயர் அல்ல.
காரியப்பெயர்.

தங்கமோ
வெள்ளியோ
வெண்கலமோ
பதக்கத்தில் பாதி
வியர்வையின் துளி
மீதிப்பாதி
விடாப்பிடி

விருது என்பது
உலோகம் அல்ல
உறுதி.

வேண்டுதல் என்பது யாது?
விருப்பம் தானே!

அகத்தில் இருப்பவன்
ஆண்டவன் என்றால்
வேண்டுதல் என்பது
வெளிநோக்கியா?
உள்நோக்கியா?

அப்படியே
தோற்றுப்போனால்தான்
என்ன?
இருக்கவே இருக்கிறது
இரண்டாம் சுற்று
அதிலும் தோற்றால்
மூன்றாம் சுற்று.

உடைந்துபோகக் கூடாதது
ஒன்றே ஒன்றுதான்.
உள்ளம்.

உள்ளம் உடையாத வரை
உலகம் உடைவதில்லை.
உள்ளம் உடைந்தவனுக்கு
ஒன்றுமே இல்லை.

முகவரி அல்ல, முகம்

1984: ஆகஸ்டு. மதுரை ரயில் நிலையத்தை விட்டு பாண்டியன் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. என்னை வழியனுப்ப வந்திருந்த எனது பெற்றோர், உடன் பிறந்தோர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் எல்லாரும் எனது பார்வையில் இருந்து மறைந்தார்கள். அம்மா அழுது கொண்டே விடை கொடுத்தது மனசுக்குள் கனத்தது.

ரயில் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தாலும் அருகே யாருமே இல்லாதது போலத் தனிமையாக இருந்தது. எனது வேர்களை விட்டு நான் விலகிச்செல்வதை நான் ஓர் இனம்புரியாத ஒரு வேதனையோடு உள்வாங்கிக் கொண்ட அந்த ரயில் பயணத்தின் துல்லிய நினைவும், அந்த நீண்ட நெடு இரவின் நெடியும் எனக்குள் இந்த நொடிவரை அச்சுமாறாமல் அப்படியே உள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் (அப்போது உத்திரப்பிரதேசத்தின் ஒரு பகுதி) மசூரி என்ற மலைநகரில் அமைந்துள்ள ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயிற்சி பெறச் செல்வதற்காக ரயில் ஏறினேன். சென்னை வரை வந்து என்னை டில்லிக்கு ரயிலேற்றி விடுவதற்காக எனது அண்ணன் வரதராஜு என்னுடன் பயணம் செய்தார்.

அதற்குச் சில மாதங்கள் முன்பு ஐ,ஏ,எஸ் நேர்முகத்தேர்விற்காக முதல் முறையாக டில்லிக்கு சென்று வந்திருந்தேன். இப்போது டில்லியையும் தாண்டிச் செல்லவிருக்கிறேன். எப்படி இந்தியில் பேசப்போகிறோம் என்பதிலிருந்து இட்லி கிடைக்குமா என்பது வரை சிறிதும் பெரிதுமாய் மனதில் பல யோசனைகள். மதுரையிலேயே பத்திரிக்கையாளனாகப் பார்த்துக்கொண்டிருந்த வேலை, கவிதை, பட்டிமன்றம், நாடகம் என்ற ஈடுபாடுகள்; நண்பர்களோடு கூடி நின்று கொண்டாடிய கோரிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், மல்லிகை காபி பார் என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு கண் காணாத இடத்திற்கு கிளம்பிப்போகிறோமே; இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வருமா என்ற உள்மனக் கேள்வி என்னை உறங்கவிடவில்லை. அறியாதவை குறித்த அச்சம் என்னை ஆட்கொண்டிருந்தது. நிச்சயமற்ற ஒரு மனநிலையில் நான் இருந்தேன்.

இருந்தாலும், எழும்பூர் ரயில் நிலையத்திலேயே ‘ஏழரை’ காத்திருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆந்திராவில் வன்முறை, ரயில்கள் மீது கல்வீச்சு, ரயில்கள் ரத்து என்ற பத்திரிக்கைச் செய்திகள் பயமுறுத்தின. அப்போது ஆந்திர முதல்வராக இருந்த என்.டி.ராமாராவ் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்குச் சென்றிருந்த போது அவரது கட்சிக்குள் நடந்த ‘உள்குத்து’ வேலை ஆந்திராவை உலுக்கிக்கொண்டிருந்தது.

ஆந்திரா வழியாக டில்லிக்குப் போவது ஆபத்தானது; ரயில் வழியில் நிறுத்தப்பட்டால், திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் மசூரி போய்ச்சேர முடியாது என்ற அச்சம் ஏற்பட்டது. “விமானத்தில் போனால் என்ன” என்று சென்னையில் இருந்த உறவினர் ஒருவர் யோசனை கூறினார். கையில் இருந்த பணத்தை எல்லாம் வைத்து விமான டிக்கெட் வாங்கினோம். திடீரென்று ரயில் பயணம் விமானப்பயணமாகி விட்டது. அதற்கு முன்னால் நான் விமான நிலையத்திற்குள் நுழைந்ததே கிடையாது. மதுரையில், பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது விமான நிலையத்தைப் பார்க்க கல்விச்சுற்றுலா போய் விமானம் கிளம்புவதையும் இறங்குவதையும் வெளியே நின்று பார்த்திருந்தேன். அவ்வளவு தான்.

அது ஓர் அதிகாலை வேளை. சூட்கேஸ், பெட்டிகளுடன் சென்னை விமான நிலையத்திற்குள் சென்றேன். அங்கே அடுத்த ‘ஏழரை’ எனக்காகக் காத்திருந்தது. “இவ்வளவு லக்கேஜை எடுத்துப்போக முடியாது, குறிப்பிட்ட எடைக்கு மேல் கூடுதலாக எடுத்துச் செல்ல மேலும் பணம் கட்டவேண்டும்” என்று குண்டைத் தூக்கிப் போட்டார் ’செக் இன்’ கவுண்டரில் இருந்த ஊழியர். ஏற்கனவே, எதிர்பாராத விமான பயணத்திற்கு டிக்கட் வாங்கி நொடித்துப்போய் இருந்தேன். இன்னும் கூடுதல் பணம் கட்டுவதற்கு எங்கே போவது? லக்கேஜை அப்படியே வைத்துவிட்டு வாசல்வரை வந்து பார்த்தேன். அண்ணனையும் காணவில்லை. ’டிராப்’ பண்ண வந்த உறவினருடன் போய்விட்டிருந்தார்.

அகாடமிக்கு வரும் போது முடிந்தால் ‘பேட்மிண்டன்’ மட்டை ஒன்றை எடுத்துவரும்படி மசூரி அகாடமியில் இருந்து மடலில் வந்திருந்த அறிவுரையை ஓர் அரசாங்க ஆணைபோல பாவித்து மதுரையில் ஒரு பாட்மிண்டன் மட்டையை வாங்கி எனது பெட்டியில் திணித்திருந்தார் எனது அண்ணன். ஒரு வேளை, பேட்மிண்டன் மட்டை இல்லை என்றால் வேலை இல்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்தாரோ என்னவோ. பாட்மிண்டன் மட்டையை எப்படி பிடிப்பது என்பது கூட எனக்குத் தெரியாது. அதெல்லாம், அங்கே போனால் ’ஆட்டோமேடிக்காக’ கற்றுக்கொள்ளலாம் என்று ஆறுதல் வேறு சொல்லி இருந்தார். இந்த வகையான அப்பாவித்தனத்துடன், அதே நேரத்தில் ஒரு பிரகாஷ் படுகோனேயிடம் இருக்கவேண்டிய மிடுக்கோடும் வந்த எனக்கு அந்த விமான நிறுவன ஊழியரின் அறிவிப்பு அதிர்ச்சியை அளித்தது. பெட்டியில் உள்ள பொருட்களை அவசர அவசரமாகத் தணிக்கை செய்தேன்.

“எதையெல்லாம் அங்கேயே விட்டுச் செல்லலாம், எதை எடுத்துச் செல்லலாம்?” பெட்டியைத் திறந்து ஊறுகாய் பாட்டில், முறுக்கு பாக்கெட் என்று தொடங்கி, செருப்பு, சட்டை துணிமணி, கைலி என்று கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி எறிந்தேன். நான் மசூரிக்கு எடுத்துச் செல்வதற்காக வைத்திருந்த சங்க இலக்கியம் தொகுதி 1, தொகுதி 2 என்ற இரண்டு நூல்களையும் கையில் எடுத்தேன். இரண்டும் சேர்ந்து கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ தேறும். எனக்குள் சின்ன யோசனை. இந்தப் புத்தகங்களை என்ன செய்வது? வேறு வாங்கிக்கொள்ளலாமா? எதை விட்டுச்சென்றாலும் இதை விட்டுச்செல்லமுடியாது என்று முடிவுசெய்ய எனக்கு சில நொடிகள் கூடத் தேவைப்படவில்லை.

ஏனெனில், அவை வெறும் புத்தகங்கள் அல்ல. நான் இளங்கலை, முதுகலைத் தமிழ் இலக்கியம் படிக்கும் போது நான் திரும்பத் திரும்பப் படித்த புத்தகங்கள். ஒரு பேச்சுப்போட்டியில் முதல் பரிசாக எனக்கு அளிக்கப்பட்டவை. ஒருவகையில் இந்த நூல்கள் எனது இருப்பின் அடையாளம். நான் அடிகோடிட்டுப் படித்த இந்த இரண்டு நூல்களும் நான் அதுவரை கடந்துவந்த தூரத்தின் காகித வடிவங்கள். குறியீடுகளால் நிரம்பிய நினைவுகள்.

தமிழ் படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்று கேட்டவர்களின் வாயடைக்க வைத்து என்னை ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாய், அதிலும் குறிப்பாக ஐ.ஏ.எஸ் தேர்வைத் தமிழிலேயே எழுதித் தேர்ச்சி பெற்ற முதல் தமிழ் மாணவன் என்ற தனித்துவப்பெருமையை என்னைப் போன்ற எந்தவிதப் பின்னணியும் அற்ற சாதாரண இளைஞனுக்குச் சாத்தியமாக்கிய எனது தாய்த்தமிழ் எனக்களித்த தங்கப்பதக்கம். அந்த நூல்கள் வெறும் எடையா எனது வெற்றியின் விதை நெல்கள் அல்லவா! எனது தொப்புள் கொடியைத் தோளில் சுமந்து செல்வதைப்போல அந்த இரண்டு நூல்களையும் என்னுடன் எடுத்துச் சென்றேன்.

உண்மையைச் சொல்கிறேன். கையில் கிடைத்ததை எல்லாம் விட்டெறிந்து விட்டு அந்த இரண்டு நூல்களையும் நான் எடுத்துச் சென்றபோது, இப்படியெல்லாம் நான் யோசித்து முடிவு செய்யவில்லை. அது ஓர் அனிச்சைச் செயல். அவ்வளவு தான். யோசித்தா சுவாசிக்கிறோம்? ஒருவழியாக விமானத்தில் ஏறி, உட்கார்ந்தேன். இந்த திடீர் விமானப் பயணமே திட்டமிடப்படாத ஒன்று. கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தது. ஜன்னல் ஓர இருக்கை. வெளியே விரிந்து கிடந்த ஆகாயத்தை, மேகத்திரளை வேடிக்கை பார்க்க வசதியாக இருந்தது.

வீட்டிலிருந்து கொண்டுவந்த சில பொருட்களை வீசி எறிந்து விட்டு விமானத்தில் ஏறிய பதற்றம் இன்னும் கொஞ்சம் எனக்குள் இருந்தது. அண்ணாந்து பார்த்தே பழகிய மேகங்கள் கால்களுக்கு அடியில் கரைவது போன்ற உணர்வு அந்தப் பதற்றத்தை மேலும் அதிகரித்தது போலத் தோன்றியது. என்ன செய்வது என்று புரியாத புதிய சூழல். சங்க இலக்கியத் தொகுதிகள் இரண்டில் ஒன்றை எனது கைப்பையில் இருந்து எடுத்து படிக்கத்தொடங்கினேன். பழகிய பக்கங்களை மீண்டும் படிப்பது அந்தச் சூழலில் எனக்கு ஒரு பாதுகாப்பான உணர்வை அளித்திருக்கக் கூடும்.

நத்தத்தில் இருந்து மதுரைக்குச் செல்லும் பேருந்தில் தினமும் கடைசி வரிசையில் நடத்துனர் இருக்கையின் மங்கிய வெளிச்சத்தில் உட்கார்ந்து எனது தேர்வுக்காகப் படித்த நாட்கள் எனது நினைவிற்கு வந்தன. ஒரு புதிய திசையில் ஒரு புதிய பயணம் என்பது மட்டும் புரிந்தது.

2017 ஆம் ஆண்டு. ஒடிசாவில் புவனேஸ்வரத்தில் எனது இல்லம். நூலக அறையில் கண்ணாடி அலமாரிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஏராளமான நூல்கள். தமிழ் நூல்களுக்கான அடுக்கில் நான் விமான நிலையத்தில் விட்டு விடாமல் ஏந்திவந்த சங்க இலக்கியத் தொகுதி 1, தொகுதி 2 என்ற இரண்டு நூல்களும் இன்றும் எடுப்பாகவே இருக்கின்றன.

இப்போதெல்லாம் சங்க இலக்கியத்தின் மூலமும் உரையும் இணையத்திலேயே சுளையாகக் கிடைத்துவிடுகிறது. ஆனாலும் இந்த இரண்டு தொகுதிகளையும் அவ்வப்போது பயன்படுத்தவே செய்கிறேன். பூமியோ, வானமோ, சாலை என்னவோ நான் வெயிலிலும் மழையிலும் நடந்து பழகிய எனக்குப் பிடித்த தமிழ் நெடுஞ்சாலை தான். தமிழ் எனது மூச்சுக்காற்று. தமிழ் இலக்கியக் கல்வி எனது முத்திரை மோதிரம். தமிழ் எனது மகுடம் மட்டுமல்ல; தலையும் கூட. தமிழே எனது பாதையும், பயணமும், அதுவே எனது பாடமும் படிப்பினையும். தமிழ் எனது பட்டறிவின் ஊற்றுக்கண். என்னைத் தாங்கிப் பிடித்த தாய்மடி.

நான் நடந்து வந்த தடங்களை வாசிக்கும் போதும், நான் திட்டமிடாத போதும் என்னைத் தீண்டித் திசை காட்டிய திருப்பங்களைத் திரும்பிப் பார்க்கும் போதும் இந்த இரண்டு நூல்களும் எனக்கே விளங்காத ஏதோ ஒன்றின் சாட்சியமாக, ஆனால் கும்பிடத்தக்க குறியீடாக எனது நூலக அறையில். அந்த இரண்டு நூல்களும் அவ்வப்போது என் கண்களில் படும்போதெல்லாம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் அந்த அதிகாலை நிகழ்வு எனக்குள் மீள்நினைவாய் மின்னல் வெட்டும்.

Image

இப்போது என்னை ஒரு ‘சிந்துவெளி ஆய்வாளர்’ என்று அறிமுகம் செய்துகொள்வதில் தான் கூடுதல் பெருமிதம் கொள்கிறேன். சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் பற்றிய எனது புரிதல்களுக்கு மிக அடிப்படையான சான்றாதாரம் சங்க இலக்கியம் ஆகும். ‘சிந்துவெளி விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும்’ ஒன்றே என்பது தான் எனது முக்கியமான வாதம் ஆகும். சிந்துவெளிச் சிதைவுகள் சிந்துவெளிப் பண்பாட்டின் பருண்மைப் பொருளான சான்று என்றால் சங்க இலக்கியங்களில் மீள்நினைவுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ள தொன்மரபுகளை சிந்துவெளிப்பண்பாட்டின் “மென்பொருள்” என்று நான் கருதுகிறேன். அந்தவகையில் இந்தியவியலில், மிகக்குறிப்பாக சிந்துவெளிப்பண்பாடு குறித்த எனது தேடல்களில் சங்க இலக்கியம் மிக முக்கியமான தரவாகப் பயன்படுகிறது.

இதுமட்டுமல்ல. தமிழ் மண்ணிலிருந்து வெகு தொலைவிற்கு விலகிச்சென்று எனது வாழ்வின் மிக முக்கியமான காலக்கட்டங்களை இந்தியாவின் பிற பகுதிகளில் கழித்தபோதும் எனது மண்ணின் தமிழ் வாசனையை மறக்காமல் நான் வாழ்ந்து வருகிறேன் என்பதுதான் எனது ஆகச்சிறந்த பெருமிதம். அன்புள்ள அம்மா, சிறகுக்குள் வானம், சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், நாட்டுக்குறள், பன்மாயக் கள்வன் ஆகிய தமிழ் நூல்களை நான் எழுதி இருக்கிறேன் என்ற உணர்வு என்னை மகிழ்விக்கிறது.

Image

வாசல்தோறும் வள்ளுவத்தை தெளிக்க வள்ளுவர் குடும்பம் சார்பில் நான் திருக்குறளின் இன்பத்துபாலின் சில குறள்களை நாட்டுப்புற பாடல் வடிவில் தாஜ் நூர் இசையில் ஒலிப்பேழையாக்கி சென்னையில் வெளியிட்ட போது (நவம்பர் 27, 2016) கள்ளிகாட்டு இதிகாசம் படைத்த கவிப்பேரரசு வைரமுத்து நாட்டுக்குறளில் வீசிய மண்ணின் மணத்தை மகிழ்ந்து பாராட்டியது என்னை நெகிழ வைத்தது.

இதையெல்லாம் விட சிந்துவெளிப் பற்றிய எனது ஆய்வு முடிவுகள் தமிழ்நாட்டு பள்ளிப் பாட நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதும், பதினொன்றாம் வகுப்பிற்குரிய தமிழ் பாட நூலில் மலை இடப்பெயர்கள் பற்றிய எனது கட்டுரையும் கொற்கை வஞ்சி தொண்டி வளாக வரைபடமும் இடம்பெற்றுள்ளது என்பது எனது இந்த இரண்டாம் சுற்றை மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது. வேறென்ன வேண்டும் எனக்கு.

சங்க இலக்கிய நூல்களைப் பிரியமனமில்லாமல் நான் தூக்கிச் சென்ற அந்த நாளில் நான் சிந்துவெளி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுவேன் என்றோ அதற்கு சங்க இலக்கியத் தொடர்வாசிப்புகளும் புதிய புரிதல்களுமே வழிகாட்டும் என்றோ எனக்குத் தெரியாது. எடையைக் குறைப்பதற்காக அந்த இரண்டு நூல்களையும் நான் விட்டுச் சென்றிருக்கலாம். அதே நூல்களை மீண்டும் கடையில் வாங்கிப் பயன்படுத்தியிருக்கலாம். இப்போது புரிகிறது. நான் விட்டு விடாமல் எடுத்துச் சென்றது என் விருப்பத்தைத் தான். சட்டைகளை விட்டுச் செல்லலாம். தோலை உரித்துப்போட முடியாது. முகமும் முகவரியும் ஒன்றல்ல.

இதை எழுதும் இந்த நிமிடங்கள் எனது ‘நேற்று’களின் மீள்நினைவா அல்லது சென்னை விமான நிலையத்தில் நடந்தது எனது ‘நாளை’கள் குறித்த ஞாபகமா? முற்சிந்தனையா?

சதுர அடியில்
விலைபேச
ஓவியம் என்ன
வீட்டு மனையா?

விலைமதிப்பு
என்பதில்
’விலை’
மதிப்பில் இருக்கிறதா?
அல்லது
மதிப்பு
’விலை’யில் இருக்கிறதா?

வாழ்வில்
நிகர மதிப்பு
என்பது
துல்லியமான
வரவு செலவுக் கணக்கா?
அதற்கும் அப்பாலா?

நிறுக்கும் ’தராசும்’
நிறுக்கும் ’பொருளும்’
வெவ்வேறென்றால்
நிகரமதிப்பை
நிர்ணயம் செய்வது யார்?

தொலைந்து போக
மறுப்பது போன்ற
சுயமரியாதை
வேறெதுவும் இருக்கிறதோ

அடிமையின் அரியாசனம்
அவனது ஆசனம்
அமரும்
வெறும் நாற்காலி தான்!

சுதந்திரமானவன்
போகும்
இடத்திற்கெல்லாம்
கூடவே வருகிறது
அவனது அரியணை.

 

கடைசி மைல்

2017 அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி, காலை சுமார் 7.30. மணி. புவனேஸ்வரத்திலுள்ள எனது வீட்டில் அவசரம் அவசரமாக கிளம்பிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் தாமதமாகவே எழுந்ததால் நடைப்பயிற்சிக்கு கூடச் செல்லமுடியவில்லை. வாசலில் நான் பயணம் செய்வதற்கான ‘இன்னோவா ’கார் வந்துவிட்டது. என்னுடன் பயணம் செய்யவிருக்கும் இரண்டு அதிகாரிகள் ஏற்கனவே எனது வீட்டு வரவேற்பறையில் அமர்ந்திருந்தார்கள்.

சரியாக 31 ஆண்டுகளுக்குப் பின்னால் நகடா என்ற ஒரு “கடைசி மைல்” கிராமத்திற்கு மீண்டும் பயணம் செய்யப்போகிறேன் என்ற உணர்வு என்னை முழுவதுமாக ஆட்கொண்டிருந்தது. நகடாவுக்கு காரில் பயணம் செய்ய முடியும் என்ற நினைப்பே ஒரு நம்பமுடியாத, மிகையான கற்பனை போலத் தோன்றியது. 30 ஆண்டுகளுக்கு முன்பு எத்தனை மலைதாண்டி, ஏறி இறங்கி, காடுகளைக் கடந்து கால்வைத்த கடைசி மைல் அது.

இது எனது அரசுப் பணியில் வாடிக்கையாகச் செய்யும் இன்னொரு பயணம் அல்ல. எனக்குள் அழுத்தமான நினைவலைகளைத் தூண்டிவிட்ட “இரண்டாம் சுற்று” இது. என்னுடன் பயணம் செய்யும் இந்த இரண்டு அதிகாரிகளில் ஒருவர் பெயர் நவகுமார் நாயக். இவர் தான் 1986 ஆம் ஆண்டு முதல் முதலாக நான் இந்த கிராமத்திற்கு சென்றபோது என்னோடு நடந்து வந்தவர். இப்போது பணி ஓய்வு பெற்றுவிட்ட இவரை என்னுடைய துறையில் சிறப்பு அதிகாரியாக மறுநியமனம் செய்திருக்கிறோம். இன்னொருவர் ரகு பிரசாத். இந்திய வனத்துறையைச் சேர்ந்தவர். பழங்குடி மக்கள் நல இயக்குனராகப் பணியாற்றுகிறார். கேரளாவைச் சேர்ந்தவர்.

புவனேஸ்வரத்திலிருந்து 125 கி.மீ தூரத்தில் ஜாஜ்பூர், கெந்துஜர், தெங்கனால் என்ற மூன்று மாவட்டங்களின் எல்லைகள் உரசிக்கொள்ளும் ஹரிசந்தன்பூர் – தெல்கோய் வனப்பகுதியில் மலைகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்குகளில் பதுங்கிக் கிடக்கும் ஒரு பழங்குடிச் சிற்றூர் நகடாவும் அதைச்சுற்றியுள்ள இன்னும் மூன்று சிற்றூர்களும். பூகோள வரைபடத்தில் நகடாவின் அடையாளப் புள்ளி 21.139077 வடக்கு அட்சரேகை- 85.712028 கிழக்கு தீர்க்க ரேகை.நகடா என்ற அந்த நகராப்புள்ளியை நோக்கி எனது கார் விரைந்தது. பின்னோக்கிப் பறந்தன எனது நினைவுகள்.

1986 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம். மசூரியில் பயிற்சியை முடித்து ஒடிசா மாநில அரசில் அப்போது தான் பணிக்குச் சேர்ந்திருந்தேன். ஜாஜ்பூரின் சப்- கலெக்டராக, இந்திய ஆட்சிப்பணியில் எனது முதல் பொறுப்பு. மனசைப் போலவே கைகளும் கால்களும் துருதுருவென்று இருந்தன. இப்போது தனிமாவட்டமாகிவிட்ட ஜாஜ்பூர் அப்போது கட்டாக் மாவட்டத்தின் ஒருபகுதியாக இருந்தது, நான் பணியில் சேர்வதற்கு சில நாட்களுக்கு முன்பு ஜாஜ்பூர் அருகே ஒரு கிராமத்தில் பெரிய ஜாதிக்கலவரம் நடந்து துப்பாக்கி சூடு வரை நடந்திருந்தது.

திருவாரூரில் திருமணம் முடிந்தகையோடு ஒடிசாவிற்கு சென்ற என்னை நேரடியாக அந்த கிராமத்திற்கு போகச்சொல்லி அனுப்பிவைத்தார் கட்டாக் மாவட்ட கலெக்டர். என்னிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டியவர் அந்த கிராமத்தில் முகாமிட்டிருந்ததால் முறைப்படி எனது தலைமையிடத்தில் பொறுப்பை ஏற்காமல் கலவர பூமியில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றேன். அடுத்த ஓரிரு வாரங்கள் அதே பஞ்சாயத்து தான். அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்துவதிலும் விசாரணைக்கு வந்த உயரதிகாரிகளை; மத்திய மாநில அமைச்சர்களை சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்வதிலும் கழிந்தது.

அதற்குப் பின்னால் தான் எனது வழக்கமான பணிகளைத் தொடங்க முடிந்தது. வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகளை அழைத்து கலந்தாய்வு செய்தேன். வந்து இறங்கியவுடன் சாதிச் சண்டைப் பஞ்சாயத்திலும் சட்டம்- ஒழுங்கை ”நிலைநாட்டுவதிலும்” ஓரிரு வாரங்கள் செலவாகி விட்டனவே என்று தோன்றியது. எனது ஆளுகைக்கு உட்பட்ட ஜாஜ்பூர் கோட்டத்தில் பத்து வளர்ச்சி வட்டாரங்கள் இருந்தன. இவற்றில் எந்த வட்டத்திற்கு; எந்த கிராமத்திற்கு முதலில் போவது? வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கூட்டம் நடந்த அறையில் எனது மேஜையிலிருந்த வரைபடத்தை பார்த்தேன். எனது தலைமையிடமான ஜாஜ்பூரிலிருந்து மிகத்தொலைவில் இருந்தது சுகிந்தா என்ற வட்டாரம். அந்தப் பகுதியின் வட்டார வளர்ச்சி அதிகாரி யார் என்று கேட்டேன். நவகுமார் நாயக் எழுந்து நின்றார். அவரை அருகில் அழைத்து வரைபடத்தை பார்த்தபடி “உங்கள் வட்டத்திலேயே மிகத் தொலைவில் உள்ள கிராமம் எது ?” என்று கேட்டேன்.

மிகவும் உள்ளீடான காடுகளைக் கடந்து மலைப்பகுதிகளில் சில கிராமங்கள் இருப்பதாகவும் அங்கு இதுவரை எந்த அதிகாரியும் சென்றதே இல்லை என்று கேள்விப்பட்டதாகவும் அவர் சொன்னார். “அப்படியென்றால் அந்த கிராமங்களுக்கு நாம் போவோம்” என்று அவரிடம் சொன்னேன். ஆனால் மிகவும் தயங்கிய அவர், மேலும் தகவல்களுடன் மறுநாளே வந்து சந்திப்பதாகச் சொன்னார். மறுநாள் காலை அவர் என்னைச் சந்தித்தார். அவருடன் சில கள அலுவலர்களும் வந்திருந்தனர். நில வரைபடத்தில் அந்த மலைக்கிராமங்கள் இருக்குமிடங்களை அடையாளமிட்டிருந்தார். நாம் “அங்கே கட்டாயம் போகிறோம்” என்றேன். “இதுவரை அங்கே எந்த அதிகாரியும் சென்றதே இல்லை” என்ற தகவல் என்னை உசுப்பிவிட்டது என்று நினைக்கிறேன்.

எனது முடிவில் நான் உறுதியாக இருப்பதைப் புரிந்து கொண்ட நவகுமார் நாயக் சிறிது அவகாசம் கேட்டார். நான் அங்கு போகுமுன் சில களப்பணி அலுவலர்களை அங்கு அனுப்பி அங்குள்ள நிலவரம் பற்றி தகவல்களைத் திரட்டிவரச் சொல்வதாகத் தெரிவித்தார். அப்படியானால் அந்த மலைச்சிற்றூர்களில் வசிக்கும் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் எத்தனை பேர், அவர்களுடைய வாழ்க்கைச் சூழ்நிலை பற்றிய விவரங்களைச் சேகரிக்கச் சொன்னேன்.
அதன்படி, குறைந்த வயதுடைய துடிப்பான சில அலுவலர்களை அங்கு அனுப்பி வைத்து ஒரு கணக்கெடுப்பு நடத்தினார். சில நாட்களில், அங்கு சென்று திரும்பிய அவர்கள் கொண்டு வந்த விவரங்களை என்னால் நம்பவே முடியவில்லை.

அந்த கிராமங்களில் ஜுவாங் என்ற பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள்; மணிக்கணக்கில் நடந்து வாரச்சந்தைக்கு சென்று பண்டமாற்று செய்வது தவிர வெளியுலகத்துடன் அவர்களின் தொடர்பு மிகக்குறைவு; அந்தச் சந்தை கூட பக்கத்து மாவட்டமான தெங்கனாலில் உள்ளது; அங்கு செல்வது மிகவும் கடினமானது என்பதால் யாரும் அங்கு செல்வதேயில்லை என்பது அவர்கள் கூறிய தகவல்கள். ஆனால் அதை அவர்கள் சொன்னவிதம், கிட்டத்தட்ட, எப்படியாவது எனது பயணத் திட்டத்தைக் கைவிடச்செய்யவேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை வெளிப்படையாகக் காட்டியது. பீதியைக் கிளப்பும் வகையில் அவர்கள் பேசுவதாகத் தோன்றியது எனக்கு. ஆனால், நகடாவுக்கு சென்றே தீரவேண்டும் என்ற எனது முடிவை மேலும் தீவிரமாக்கியது அந்த உரையாடல்.

‘நாம் அடுத்த வாரம் அங்கு போகிறோம் ‘ என்று நவ்குமார் நாயக்கிடம் திட்டவட்டமாகச் சொன்னேன். நான் அங்கு போகும் போது என்னுடன் ஒரு டாக்டரும், மருத்துவப்பணியாளர்களும் கட்டாயம் வரவேண்டும் என்றும் சொல்லி விட்டேன். அவர்கள் நல்ல துணிமணிகள் கூட இல்லாமல் இருப்பதாக கிடைத்த தகவல் பற்றி நாயக்கிடம் ஆலோசனை செய்தேன். நவ குமார் நாயக் ஒடிசா மாநில அரசுப் பணியைச் சேர்ந்தவர். துடிப்பாக தெரிந்தார். வெள்ளம் தீவிபத்து போன்ற பாதிப்புகளின் போது நிவாரணமாக அளிப்பதற்கான வேஷ்டி சேலைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் அவரது அலுவலக “குடோனில்” இருப்பதாக தெரிவித்தார். ஒவ்வொருவருக்கும் இரண்டு ‘செட்’ துணிமணிகள் எடுத்து செல்லலாம் என்று கூறினேன். அதன்படி சுமார் 300 பேருக்குப் போதுமான சேலை, வேட்டிகள், சட்டைகள், பாவாடைகள், டிரவுசர்கள் போன்ற உடைகளை அவர் ஏற்பாடு செய்தார்.

அதன்படி, மறுவாரம் குறிப்பிட்ட நாளில், சுக்கிந்தாவுக்குச் சென்று தங்கினேன். மறுநாள் அதிகாலை ஐந்து-ஐந்தரை மணியளவிலேயே அனைவரும் கிளம்பிவிட்டோம். குரோமைட் சுரங்கங்கள் உள்ள பகுதிகளைக் கடந்து சிங்குடிபால் என்ற ஊரையும் கடந்து அசோக்ஜர் என்ற மலையடிவாரத்தை அடைந்தோம். அதுவரை தான் ஜீப்பில், மோட்டார் சைக்கிளில் செல்ல முடிந்தது. அதற்கு மேல் நடந்து தான் செல்லவேண்டும்.

என்னுடன் சுமார் பதினைந்து அரசு ஊழியர்கள், மலையடிவாரப்பகுதிகளைச் சேர்ந்த பல உள்ளூர் இளைஞர்கள் உடன் வந்தனர். துணி மூட்டைகளை பலர் தூக்கி வந்தார்கள். சாப்பிட எதுவும் கிடைக்காது என்பதால், உணவு, பிஸ்கட், தண்ணீர் எடுத்துக் கொண்டு சென்றோம். வழியில், தேவ்கான் என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் கட்டியான எருமைத் தயிரை ‘சால்’ மர இலையில் வைத்து சாப்பிடக் கொடுத்தார்கள். அப்படி ஒரு கட்டித் தயிரை நான் பார்த்ததே இல்லை.

காடுகளின் மலைகளின் ஊடாகப் பாதைகள், நடக்க நடக்க வளர்ந்தன. பல இடங்களில் ஒற்றையடிப்பாதை கூட தெளிவாகப் புலப்படவில்லை.எங்களுடன் வந்த உள்ளூர் பழங்குடியினர் சிலர் பெரிய பெரிய அரிவாள்களால் செடிகள்,கொடிகளை வெட்டி வழியேற்படுத்திக் கொண்டே சென்றனர். ஒரு மலை ஏறி இறங்கினால் மற்றொரு மலை ; பல இடங்களில் மிகச் செங்குத்தான கரடுமுரடான பாதைகள். அந்த கிராமங்கள் கண்ணிலேயே படவேயில்லை. அப்போது என் வயது 28 தான். இருந்தாலும் “ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ ” என்று மனதிற்குள் மலைப்புத் தோன்றும் அளவுக்கு சவாலாக இருந்தது அந்த மலைக்காட்டுப் பயணம்.

களைப்பாகத் தோன்றும் போதெல்லாம் அங்கங்கே மரத்தடியிலோ, பாறைகளின் மீதோ உட்கார்ந்து கொண்டேன். எனக்காக பாதுகாப்பாக கொண்டுவந்திருந்த தண்ணீரைக் கொடுத்தார்கள். எங்களுடன் நடந்துவந்த சிலர் நீளமாக, தடிமனாக கொடியாக வளர்ந்திருந்த ஒரு தாவரத்தை (மரமா, செடியா என்று சரியாக நினைவில்லை) வெட்டினார்கள், அக்கொடியிலிருந்து சரசரவென்று தண்ணீர் போன்ற திரவம் கொட்டியது. அதை வாய்க்கு மேல் வைத்து அண்ணாந்து ஏதோ குழாயிலிருந்து நீர் குடிப்பது போல குடித்தார்கள். அதற்கு அவர்கள் மொழியில் பெயர் என்னவென்று கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

ஒரு நிலையில் “சார், மிகவும் கஷ்டமாக இருந்தால் இப்படியே திரும்பி விடலாம்” என்று கூட கேட்டார்கள். “உங்களில் யாருக்கும் மிகவும் களைப்பாக இருந்தால் இங்கேயே காத்திருக்கலாம் ” என்று அனுமதி அளித்தேன். எனது வற்புறுத்தலால் நடந்து வரும் யாரும் மயக்கம் போட்டு விடக் கூடாது என்ற கவலையும் எனக்கிருந்தது. என்னைப் பொறுத்தவரையில் நகடா வரை சென்றே தீருவது என்பது ஒரு வைராக்கியம் மட்டுமல்ல, ஒருவகையில் மானப் பிரச்னையும் கூட. ” பாதியில் திரும்பினார் சப் கலெக்டர்” என்று காதில் படாமல் “கமெண்ட்” அடிப்பார்கள் என்பது தெரியும்.

கடைசியில் ஒருவழியாக நகடா கண்ணில் பட்டது. அந்தக் கடைசி மைலிலும் அப்பழங்குடி மக்களின் பண்பாடு மட்டும் அந்த மலைக்காடுகளைப் போலவே பசுமையாக இருந்தது. தப்பட்டை போன்ற இசைக்கருவிகளை இசைத்து ஆடியபடி வரவேற்றார்கள். பெண்களில் சிலர் சிறு செம்பில் நீரை வைத்துக்கொண்டு காட்டுப்பூக்களோடு நின்றார்கள். விருந்தினரின் காலில் நீரூற்றி மலரிட்டு வரவேற்பது அம்மக்களின் வழக்கம் என்றார்கள். எனக்கென்னவோ அப்படிப்பட்ட மரியாதையை ஏற்றுக்கொள்ள மனமில்லை. பூக்களை மட்டும் கையில் வாங்கிக்கொண்டேன்.

அப்படியே அடுத்தடுத்த கிராமங்களுக்கும் சென்றேன். அங்கே நான் பார்த்த காட்சிகளை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. கொசுக்கடியிலும், நோய்களின் பிடியிலும் சிக்கிய அந்த மக்கள் அனைவருமே நோயாளிகள் போல் தோன்றினர். குழந்தைகள் சோகை பிடித்து நோஞ்சான்களாக இருந்தனர். சுகாதார நிலை கற்பனை செய்யக்கூட முடியாத அளவுக்கு அவ்வளவு மோசமாக இருந்தது. நீரோடைத் தண்ணீர் தான் குடிநீர். மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் அருவி நீருக்கு பஞ்சமில்லை. ஆனால் கோடை காலத்தில் நிலைமை மிகவும் மோசமாகிவிடுமாம். பன்றிகளும் நாய்களும் குடிக்கும் அதே நீரைத் தான் அங்குள்ள மக்களும் குடிக்கவேண்டிய நிலைமை என்பதை அறிந்தேன்.

என்னுடன் ஓர் இளம் பொறியாளரையும் ஒப்பந்தக்காரர் ஒருவரையும் உடன் அழைத்துச் சென்றிருந்தேன். “எப்படியாவது ஒரு அடிகுழாய் போட முடியுமா” என்று கேட்டேன். ’ஆழ்துளைக் கிணறு தோண்டும் இயந்திரத்தை இங்கே எப்படிக் கொண்டுவருவது; அதைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது” என்று அவர் கைவிரித்து விட்டார். இரண்டு சிமெண்ட் தொட்டிகள் வேண்டுமானால் கட்டி நீரோடை நீரைத் தேக்கி அந்த மக்களுக்கு குடிநீர் வழங்கலாம் என்று சொன்னார். உடன்வந்த டாக்டரும் செவிலிய ரும் அவர்களுக்கு முடிந்த அளவு மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்தனர். ஆங்கில மருத்துவர் ஒருவர் அந்த ஊருக்குள் சென்று பரிசோதித்தது அதுதான் முதல்முறை.

என்னுடன் வந்தவர்கள் ‘ நீங்கள்தான் இந்த ஊருக்கு வந்த முதல் அதிகாரி’ என்றனர். அதைக்கேட்டதும் இப்படிப்பட்ட ஒரு இடத்திற்கு பிடிவாதம் பிடித்து வந்திருக்கிறோமே என்ற நியாயமான பெருமித உணர்வு கூட எனக்குத் தோன்றவில்லை. மாறாக, என் மனதை ஒருவிதமான சோகம் கவ்விக்கொண்டது. இன்னும் சொல்லப்போனால் ஓர் இனம் புரியாத குற்ற உணர்வும் எனக்குள் தோன்றியது. அது ஏனென்றும் எனக்குத் தெரியவில்லை.கொண்டு வந்திருந்த துணிமணிகளை அந்த மக்களிடம் விநியோகம் செய்துவிட்டுத் திரும்பினோம். குடிநீர் குழாய் போடமுடியவில்லை என்ற இயலாமை என்னை வருத்தியது. ‘சப்-கலெக்டர்’ பொறுப்பு என்பது ஒரு தொடக்கநிலைப் பொறுப்புதான். எனக்கிருந்த அதிகார வரம்பிற்குள் இதைத்தான் செய்யமுடிந்தது. இதைத்தாண்டி வேறு என்னசெய்யமுடியும் என்பது கூட எனக்குத் தெரியவில்லை.

அதிகாலையில் இருந்து மாலைவரை கிட்டத்தட்ட பதினோரு மணிநேரம் பிடித்தது இந்தப்பயணத்திற்கு. அதில் கிராம மக்களுடன் உரையாடிய நேரத்தைக் கழித்துவிட்டால், போகவர மலைப்பாதைகளில் ஏறி இறங்கி நடந்தது மட்டும் சுமார் எட்டரை மணி நேரம். மிகவும் களைத்துப் போய் ஜாஜ்பூர் திரும்பியபின், ஓரிரு நாட்கள் எனது மனைவியிடம் மிக விரக்தியாய் ‘நகடா’ பற்றி பேசிக்கொண்டிருந்தேன். நகடாவைப் பற்றி அப்போது நான் ஒரு கவிதை எழுதினேன். அது என் பழைய நோட்டுகளில், காகித அடுக்குகளுக்குள் எங்கேனும் கிடக்கலாம். ஆனால் எங்கே என்று தெரியவில்லை. கவிதை எழுதினேன் என்பது மட்டும் தெளிவாக நினைவிலிருக்கிறது.

2016 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் ஒரு நாள். ஒடிசா அரசின் வளர்ச்சி ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர் (நிதித்துறை) ஆகிய இரட்டைப் பொறுப்புகளில் பணிபுரியும் நான் தலைமைச்செயலரின் அறையில் அவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன். அப்போது சுகாதாரத்துறை செயலர் திருமதி ஆர்த்தி ஆகுஜா பரபரப்புடன் உள்ளே வந்தார். சில மலையுச்சி கிராமங்களில், மலேரியா நோயினாலும், மிதமிஞ்சிய ஊட்டச்சத்துக்குறைவினாலும் பன்னிரண்டு குழந்தைகள் இறந்து விட்டதாகவும்,அந்தச்சிற்றூர்களைச் சென்றடைவதற்கே மருத்துவக் குழுவினர் சிரமப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் ஜாஜ்பூர் மாவட்டத்தில் இப்படி எளிதில் சென்றடையமுடியாத சிற்றூர்கள் இருப்பது வியப்பாக இருக்கிறது என்றும் சொன்னார். “ஜாஜ்பூர் மாவட்டம், எளிதில் சென்றடைய முடியாத சிற்றூர்கள்” என்றதுமே அந்த ஊரின் பெயர் “ நகடா” வா என்று கேட்டேன். அவர், ‘ஆமாம்’ என்றார். நான் அதிர்ந்து போனேன்.நகடா என்ற அந்த மலைவாழிடம், தள நகடா, மஜி நகடா, உப்பர் நகடா என்று மூன்று சிறு குடியிருப்புகளாக அமைந்தவை என்றும் அதற்கு அருகிலேயே மலைகளின் இன்னொரு புறத்தில் ஹூவாசலி என்ற இன்னொரு சிற்றூர் உள்ளது என்றும், இந்த இடங்களுக்குச் செல்வது மிக மிகக் கடினமாக இருக்குமென்றும் மடமடவென்று சொன்னேன்.

இந்த ஊர்களின் பெயர்கள் உங்களுக்கு எப்படித் தெரியும் என்று தலைமைச் செயலரும் சுகாதாரத் துறைச் செயலரும் வியப்புடன் கேட்டார்கள். “இந்த ஊர்களுக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் ” நாக்குத்தள்ள” நடந்து சென்றிருக்கிறேன் என்று சொன்னேன். நகடா 2016 ஆம் ஆண்டிலும் எட்டமுடியாத கடைசி மைலாகவே இருக்கிறது என்ற உண்மை என்னை உறைய வைத்தது. நான் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் எழுந்து எனது அறைக்குச் சென்றேன். இந்த ஊர்கள் அனைத்தின் பெயர்களும் அப்படியே எனக்கு நினைவில் இருந்தன என்பது எனக்கே வியப்பாக இருந்தது.

எனது அறையில் நுழைந்த அடுத்த நொடியே நவகுமார் நாயக்கை அழைத்தேன். வட்டார வளர்ச்சி அதிகாரியாக எனக்கு அறிமுகமாகி 1986 இல் என்னை நகடாவிற்கு அழைத்துச் சென்ற நாயக் காலப்போக்கில் ஐ.ஏ.எஸ் பணிக்கு பதவி உயர்வு பெற்று ஓய்வும் பெற்றுவிட்டார். நான் ஒடிசாவின் வளர்ச்சி ஆணையராகப் பொறுப்பேற்றவுடன் அவரை எனது துறையில் சிறப்பு அதிகாரியாக மீள் நியமனம் செய்ய அரசுக்கு பரிந்துரைத்து அதன்படி அவரை நியமனம் செய்திருந்தோம்.

நகடாவிற்கு என்னுடன் நடந்து வந்த போதே எனது மனதில் இடம்பிடித்து விட்டார் அவர். அதன் பின்னர் பேரிடர் மேலாண்மை, தேர்தல் மேலாண்மை போன்ற சவால்கள் நிறைந்த பொறுப்புகளை ஏற்கும் போதெல்லாம் எனக்கு உதவி செய்ய எனக்கு அடுத்த இரண்டாம் நிலைப் பொறுப்பில் அவரை நியமனம் செய்ய ஏற்பாடு செய்துவிடுவேன். அரசும் ஒவ்வொரு முறையும் எனது முன்மொழிவை ஏற்று அவரை எனக்கு கீழ் நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் அவர் எனக்கு கீழ் பணிபுரிவது இது நான்காவது முறை.

எனது அறைக்கு வந்த நவ்குமார் நாயக்கிடம் நகடா பற்றி நான் கேள்விப்பட்டதைச் சொன்னேன். அன்றைய ஒரியா செய்தித்தாள்களில் இதுபற்றி செய்தி வந்திருப்பதாகவும் அவர் சொன்னார். “ஏன் என்னிடம் சொல்லவில்லை?” என்று அவரைக் கேட்டேன். அடுத்த பத்துப்பதினைந்து நிமிடங்களில் முதல்வர் அலுவலகத்திற்கு சென்று நகடா பற்றி ஆலோசனைசெய்தேன். அன்று மாலையே நகடா நிலவரத்தை கண்காணித்து நிலைமையைச் சீரடையச்செய்ய வளர்ச்சி ஆணையரின் ( அதாவது எனது ) தலைமையில் ஒரு குழுவை மாநில அரசு நியமித்தது. உடனே நாங்கள் செயலில் இறங்கினோம். நகடாவுக்குச் சென்று நிலைமையை நேரில் கண்டறிய சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பழங்குடிகள் வளர்ச்சித்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகளை அங்கு அனுப்பிவைத்தோம். மாவட்ட ஆட்சியர், வருவாய் ஆணையர் ஆகியோரும் அங்கு சென்றனர்.

அவர்களது அறிக்கையின் அடிப்படையில் பல வளர்ச்சித் திட்டங்கள் முடுக்கி விடப்பட்டன. நகடாவின் மலைப் பகுதிகளில் எப்பாடுபட்டாவது சாலை அமைப்பதென முடிவு செய்தோம். வனத்துறையின் ஒத்துழைப்புடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அந்தப் பணியை முடிப்பதெனவும், அந்தக்கிராமத்துக்குப் பல்வேறு வளர்ச்சித்திட்ட அலுவலர்கள் சென்று வருகிறார்களா என தொடர்ந்து கண்காணிப்பதெனவும் முடிவு செய்தோம். தலையீடு என்றால் சாதாரணமான தலையீடு இல்லை இது. இன்னும் சொல்லப்போனால் இதைத் தீவிரமான தலையீடு என்பதை விட “தீவிரவாதமான” ஒரு வெறித்தனமான தலையீடு என்று கூடச் சொல்லலாம். “நகடா வாட்ஸ் அப் குழு” அமைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து அன்றாட நிகழ்வுகளை கண்காணித்தோம்.

ஒவ்வோர் ஆய்வுக்கூட்டத்திலும் என்னை விட மிகவும் இளையவர்களான அதிகாரிகளிடம் நான் நகடாவுக்கு நடந்து சென்ற கதையைச் சொல்வேன். “எனக்கு இப்போது வயதாகி விட்டது; இருப்பினும் இப்போதும் கூட அந்த ஊருக்குச் செல்லவேண்டுமென்று தோன்றுகிறது. உண்மையில் என்னால் அது முடியுமா முடியாதா என்பதல்ல கேள்வி. அந்த கிராமத்திற்கு நாம் காரில் சென்று இறங்க வேண்டும் என்பது தான் பதில். என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ; அடுத்த ஆண்டு ஒரு நாள் நான் அங்கு காரில் செல்வேன்” என்றேன்.

எங்கள் மாநில முதல்வர் அளவிலும் நகடா நிலைமை விவாதிக்கப்பட்டது. நகடாவிற்கு சாலைவசதி உள்பட அடிப்படை வசதிகள் அனைத்தையும் மிகவிரைவில் செய்து தரவேண்டும் என்று முதல்வர் ஆணையிட்டார். செய்தித்தாள்களில் நகடாவைப்பற்றி அடுத்தடுத்து செய்திகள் வந்து கொண்டிருந்ததால் மைய அரசின் குழுவினரும் அங்கு வந்து சென்றனர். நகடாவைக் கண்காணிக்கும் போதே எங்கள் மனதில் தோன்றிய ஒரே கேள்வி இது தான். “நகடாவைப் போல இன்னும் எத்தனை கிராமங்கள் உள்ளன? அப்படிப்பட்ட கிராமங்களை பற்றிய விவரங்களை மாவட்ட ஆட்சியர்கள் மூலம் திரட்டினோம்.

அதே நேரத்தில் விண்கோள் படங்கள் மூலம் பாதைகள், சாலைகளற்ற குடியிருப்புகள் பற்றி விவரம் சேகரித்தோம். மாவட்ட ஆட்சியர் கொடுத்த தகவல்களையும் விண்கோள் வெளிச்சமிட்ட உண்மையையும் ஒப்பிட்டோம். அதன் விளைவாக “தொடர்பற்றவர்களை தொடர்பு கொள்ளும்” (Connecting the Unconnected) என்ற பெயரில் சிறப்புத்திட்டம் ஒன்றை 2017-2018 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அறிவித்தோம்.

இதற்கிடையில் பயிற்சிக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது (2017 ஜனவரி) வாஷிங்டனில் உலகவங்கி அதிகாரிகளை சந்தித்தேன். நகடா மற்றும் நகடா போன்ற கிராமங்களை இணைப்பது மற்றும் அத்தகைய கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு குறைந்தபட்ச உத்திரவாதமுள்ள சேவைகளை உறுதிசெய்வது குறித்த அவர்களது சர்வதேச அனுபவங்கள்: இத்தகைய திட்டத்திற்கு உலகவங்கி நிதி உதவி செய்வதற்கான சாத்தியங்கள் பற்றி கலந்துரையாடினேன். இந்த ஓராண்டுக் காலத்தில் நகடாவின் நிலைமை வெகுவாக மாறி விட்டது. மாவட்ட ஆட்சியரும் மற்ற துறை அதிகாரிகளும் விரிவான தகவல்களை தொடர்ந்து அளித்துவருகிறார்கள். மாறி வரும் நகடாவிற்கு சாட்சியமான காட்சிப் படங்கள் வாட்ஸ் அப்பில் நிரம்பி வழிகின்றன.

சுகிந்தா பகுதியில் உள்ள குரோமைட் கனிம சுரங்கங்கள் பற்றி இங்கே குறிப்பிட வேண்டும். இந்தியாவின் குரோமைட் கனிம வளத்தில் 93% ஒடிசாவின் சுகிந்தா பகுதியில் தான் உள்ளது. பெரிய பெரிய கனிம நிறுவனங்களின் குரோமைட் சுரங்கங்கள் இயங்கும் பகுதியில் தான் நகடா என்ற இந்த கடைசி மைலும் உள்ளது. இது ஒரு முரண்பாடே. இயற்கை வளங்கள் நிறைய உள்ளன என்பதாலேயே அப்பகுதிகளில் வாழும் எல்லா மக்களுக்கும் வளமான வாழ்க்கை தானாக வந்துவிடுவதில்லை. இது கனிம வளம் நிறைந்த உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகிற வேதனைக்குரிய நடைமுறை எதார்த்தம். ஆப்பிரிக்காவின் வைரச் சுரங்கங்களின் வாசல் படிகளில் வயிற்றுப் பசி.

மீள்நினைவுகளில் இருந்து மீண்டு நிகழ்நொடிக்கு வருவோம். நகடாவை நோக்கி நாங்கள். இதோ மலைகளையும் காடுகளையும் கடந்து நகடாவிற்கு செல்லும் புத்தம் புதிய சாலை. இப்போது தனி மாவட்டமாகி விட்ட ஜாஜ்பூரின் ஆட்சித்தலைவர் ரஞ்சன் குமார் தாஸ் எங்களை பெருமையுடன் வழிநடத்திச் செல்கிறார். காவல் துறையின் பைலட் வாகனத்தின் ’சைரன்’ அமைதியைக்குலைப்பது போல் இருந்தது. கைப்பேசியில் தகவல் சொன்னதும் ’சைரன்’அமைதியானது.

அரைமணி நேர கார் பயணத்தில் நகடாவைச் சென்று அடைந்தோம். பல்வேறு துறைகளின் உயரதிகாரிகளும் வந்திருந்ததால் ஏராளமான அரசு வாகனங்கள் அங்கிருந்தன. மின்வினியோக நிறுவன ஊழியர்கள் நகடா பகுதியில் எழுநூறுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். மலைப்பகுதியிலிருந்து பெருகியோடும் அருவி நீரை குழாய்களின் மூலம் கிராமங்களுக்கு கொண்டு சென்று சூரிய ஒளியால் இயங்கும் சிறுகுழாய்கள் மூலம் வழங்குவதாக குடிநீர் துறை அதிகாரிகள் சொன்னார்கள்.அரசின் வீட்டு வசதித்திட்டத்தின் கீழ் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கட்டப்படுகின்றன. சிமெண்ட் போட்ட குறுஞ்சாலைகள்: கூரைகளில் சூரிய ஆற்றல் மின்கலத் தகடுகள்; வீடுகளில் சூரிய மின்விளக்குகள்: சிறு குழந்தைகளுக்கு சத்துணவளிக்க அங்கன்வாடி மையம்; முதன்முறையாக ஒரு பள்ளிக்கூடம்.

பல மைல்கள் தூரத்தில் தேவ்கான் என்ற இடத்தில் தான் பள்ளிக்கூடம் என்பதால் கல்வி என்பது எட்டாக் கனியாக இருந்த நகடாவில் ஒரு தற்காலிக கூடத்தில் இயங்குகிறது புதிய பள்ளிக்கூடம். அங்கு சென்று மாணவர்களையும் ஆசிரியரையும் சந்தித்தேன். இந்த கிராமத்தில் ஒரு தொண்டு நிறுவனத்தின் ஊழியர்களும் உற்சாகத்துடன் உடனிருந்தார்கள். முதன்முறையாக பள்ளிக்கூடம் திறக்கப்பட்டிருந்ததால் ஒன்பது வயது பையன் கூட ஐந்து ஆறு வயதுக் குழந்தைகளுடன் ஒரே வகுப்பில். வகுப்பறையில் பள்ளிக்கூட மாணவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்ட ஃப்ளக்ஸ் பேனரில் “நகடாவின் எதிர்காலம்” என்று ஆங்கிலத்தில் தலைப்பிட்டிருந்தார்கள். மாணவர்களும் மாணவியர்களும் நீலவண்ணச் சீருடையுடன் ‘டை’ கட்டி இருந்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

சென்ற ஆண்டு இந்தக் கிராமத்திற்கு ரகுபிரசாத்தை நான் அனுப்பிவைத்திருந்தேன். அவர் இப்போது என்னுடன் பயணம் செய்கிறார். ஒரு வருடத்திற்குள் இவ்வளவு மாற்றமா?” என்று மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தார். “அப்படி என்றால் 31 ஆண்டுகளுக்குப் பின்னால் இந்தக் கடைசி மைலில் கால் வைக்கும் எனக்கு எப்படி இருக்கும்?” என்று கேட்டுச் சிரித்தேன்.யாருமே போகாமல் இருந்த நகடாவிற்கு கடந்த ஓராண்டில் மட்டும் பத்துப் பதினைந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வந்து போய்விட்டார்கள். நகடாவில் நடக்கும் பல்வேறு வளர்ச்சிப்பணிகள், வாழ்வாதாரத் திட்டங்களை ஒவ்வொரு துறை அதிகாரிகளும் மிக ஆர்வத்துடன் விளக்கினார்கள். நகடாவை ஒரு சுற்று சுற்றிவிட்டு சாலையில் ஏறிய எனக்கு வியப்பு காத்திருந்தது.

புதிய கட்டிடம் ஒன்று. ’ரிப்பன்’ கட்டி திறப்புவிழாவிற்கு தயாராக இருந்தது. “என்ன இது” என்று கேட்டேன். புதிய பள்ளிக்கூட கட்டிடம். நீங்கள் தான் திறந்து வைக்க வேண்டும்” என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சன்குமார்தாஸ். “ரிப்பன் வெட்டுவதெல்லாம் வேண்டாமே” என்றேன். நிறைய பேர் காத்திருந்தார்கள். “நீங்கள் தான் இந்தப் பள்ளிக்கூடத்தை இவ்வளவு குறுகிய காலத்தில் கட்டி முடித்திருக்கிறீர்கள். அதனால் நீங்களே திறந்து வையுங்கள்: நான் உடனிருக்கிறேன்” என்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சொன்னேன். அவர் ’திடுக்கிட்டு’ மறுத்தார். பிறகு, அவரை ஒரு புறமும் நவகுமார் நாயக்கை இன்னொரு புறமும் என்னருகில் நிற்கவைத்து அந்தக் கட்டிடத்தை திறந்து வைத்தேன். தேங்காய் உடைக்கச் சொன்னார்கள். உடைத்தேன். மனசில் ஏதேதோ சிந்தனைகள் வந்து போயின. மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

நகடா கிராமத்தைச் சுற்றிவந்த போது அங்கிருந்த ஊர்மக்களிடம் பேசவிரும்பினேன். பொதுவாக பழங்குடி மக்கள் அதிகமாக பேசமாட்டார்கள். அவர்களிடையே நின்று சிறிது நேரம் உரையாடினேன். ஊராட்சி மன்ற உறுப்பினராக உள்ள ஓர் இளைஞர் ஓரளவு தயக்கமின்றி பேசினார். பெண்கள் சிலர் காய்கறி பயிர் செய்ய மேலும் உதவும்படி கேட்டார்கள். அவர்களிடம் சாலை வசதி வருவதற்கு முன்பு இருந்ததைவிட இப்போது வாழ்க்கை எந்தவிதத்தில் மாறியிருக்கிறது என்று கேட்டேன். யாரும் சரியாகப் பதில் சொல்லவில்லை.

அப்போது நடுத்தர வயதான ஒருவர் என் அருகில் வந்து சொன்னார். “முன்பெல்லாம் யாராவது வெளியாட்கள் வந்தால் நாங்கள் காட்டுக்குள் ஓடிவிடுவோம். இப்போது ரோடு வந்துவிட்டது. உங்களைப் போல நிறைய பேர் வருகிறார்கள். கார்கள் ஜீப்புகள் எல்லாம் வருகின்றன. ஆனால் இப்போதெல்லாம் பயமே வருவதில்லை. இப்போதுகூட உங்களை எல்லாம் பார்த்து கொஞ்சம் கூட பயமாக இல்லை” என்றார். அவரது தோளில் கை போட்டு “நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை” என்று சிரித்துக் கொண்டே சொன்னேன். “அது தான் நான் சொல்லிவிட்டேனே; யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று” அவர் சீரியசாக சொன்னார்.

எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு நாட்டின் சமூக, பொருளியல் வளர்ச்சிப்பாதையில் கடைசி மைல்கல் என்பது ஒரு கடினமான பிரச்சனைதான்.புவியியலும், சமூகப்படி நிலையும் வளர்ச்சியை வெவ்வேறு விதங்களில் பாதிக்கின்றன. ஒரு குடும்பத்தில் பிறந்த அனைவருமே ஒரே வேகத்தில் ஓடுவதில்லை. சிலர் துள்ளிப் பாய்கிறார்கள். சிலர் மெதுவாக நடக்கிறார்கள்; சிலர் நின்ற இடத்திலேயே நிற்கிறார்கள். உள்ளடக்கிய வளர்ச்சியின் மிகப்பெரிய சவால் இதுதான். இந்திய வரைபடத்தில் கண்களில் படாமல் புள்ளிகளாய் அமைந்திருக்கும் கிராமங்கள் அதிகம். அவற்றிலும் நகடா போன்ற சிற்றூர்கள் வரைபடத்திலிருந்தே உதிர்ந்து விடுகின்றன. இப்படியான கிராமங்கள் சத்தீஷ்கர், ஜார்கண்ட், ஒடிசாவில் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருக்கவே செய்கின்றன. பிற மாநிலங்களிலும் கூட இத்தகைய கிராமங்கள் இருக்கக்கூடும்.

ஏற்கெனவே விழிப்புணர்வு பெற்றவர்கள் வளர்ச்சியின் திசையை அறிந்து நடக்கத் தெரிந்தவர்கள், குரல் கொடுக்கத் தெரிந்தவர்கள். ஆனால் நகடா போன்ற கிராமங்களில் இவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிப்பதில்லை. நானும் என்னுடன் சிலரும் 31 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்து சென்றது அங்கேயுள்ள யாருக்கும் நினைவிருந்ததாக எனக்குத் தோன்றவில்லை. இதுவே ஒரு வளர்ச்சி பெற்ற கிராமமாக இருந்தால் நாங்கள் வந்த கதையையும் போன கதையையும் நின்ற இடத்தையும் உட்கார்ந்திருந்த இடத்தையும் எங்களிடமே சொல்ல நான்கு பேர் நிச்சயம் இருப்பார்கள். ஆனால் நகடா போன்ற கிராமங்கள் கவன ஈர்ப்பு செய்யத்தெரியாத கடைசி மைல்கள். இத்தகைய சிற்றூர்களின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் இந்தியாவின் உண்மையான வளர்ச்சியாக இருக்கும். அதற்கு ”கூடுதல் மைல்” நடப்பது என்பது கட்டாயத் தேவை.

Image

நகடாவிலிருந்து புவனேஸ்வரம் திரும்பும் வழியெல்லாம் யோசித்துக்கொண்டே வந்தேன். வாழ்க்கை எத்துணை விந்தையான தற்செயல்களை தனக்குள் அடைகாத்து போகிற போக்கில் அரங்கேற்றுகிறது. ஒடிசாவில் 1,12,320 குடியிருப்புகள் உள்ளன. விண்கோள் புகைப்படங்களின் உதவியோடு அங்கும் இங்குமாக மலைகளிலும் காடுகளிலும் சிதறிக் கிடக்கும் சின்னஞ்சிறு குடியிருப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் மொத்த எண்ணிக்கை 1,47,787. இவற்றில் வருவாய் கிராமங்கள் மட்டும் 51,681.

இத்தனை குடியிருப்புகளில் வரைபடத்தில் கூட தட்டுப்படாத நகடாவையும் அதைச் சுற்றியுள்ள குற்றூர்களையும் குறிவைத்து ஏன் நடந்தேன் 1986 இல்? எனது அரசுப்பணி பயணத்தின் முதல் அடியே இந்தக் கடைசி மைல் தான் என்பது எப்படி நிகழ்ந்தது. சரியாக 30 ஆண்டுகளுக்குப் பின்னால் ஒடிசாவில் உள்ள 1,47,787 குடியிருப்புகளில் இந்த நகடா எனது பயணத்தில் எப்படி வந்தது மீண்டும்? நானும் நவகுமார் நாயக்கும் மீண்டும் நகடாவைக் கையில் எடுப்பது என்ன வகையான எதேச்சை நிகழ்வு?

2016 இல் கைக்குழந்தைகளின் இந்த மரணம் நகடாவில் நிகழாமல் ஒடிசாவின் வேறு ஏதோ ஒரு மூலையில் வேறு ஏதோ ஒரு கிராமத்தில் நடந்திருந்தால் நான் அதை எப்போதாவது எங்காவது நடக்கிற இன்னொரு நிகழ்வாக நினைத்து கடந்து தான் போய் இருப்பேன். அது தான் உண்மை. ஆனால் நகடா என்ற பெயரை என்னால் கடந்து நகர்ந்து போக முடியவில்லை. எப்போதோ நடந்து எப்போதோ மறந்து விட்ட அந்தக் கடைசிமைல் பயணம் திடீரென்று அப்படியே எனக்குள் நினைவுக்குள் சேமித்துவைத்த நிகழ்படமாக ஓடியது. நான் 1986 இல் நகடா சென்ற போது எடுத்த கருப்புவெள்ளைப் படங்களில் ஏதோ ஒன்று எப்படியோ தப்பித்து என்னுடைய கணிப்பொறிகளில், வன்தட்டு நினைவகங்களில் (External Hard Disk Drive) ஏதோ ஒன்றில் இருப்பதாக தோன்றியது.

Image

இந்தமுறை நகடாவிற்கு செல்வதற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்னால் எனது மேஜைக் கணிணியில் எனது பழைய ஆல்பங்களைத் துருவிய போது கண்ணில்பட்டது அந்த நிழற்படம். அதை என் கைபேசிக்கு ‘ப்ளூடூத்’தில் அனுப்பி சேமித்தேன். இந்த முறை நகடாவுக்கு காரில் சென்ற போது நாயக்கிடம் இந்த படத்தை காண்பித்தேன். வியப்புடன் மகிழ்ந்தார். 1986-இல் இந்தப் படத்தை எனக்கு அளித்ததே அவர்தான். தன்னிடம் இந்தப்புகைப்படம் இல்லை என்றார். அவருக்கு அதை வாட்ஸ் அப்பில் உடனே அனுப்பினேன்.

அரசுப்பணிகள் நிகழும் விதத்தை சில நேரங்களில் ஆமை வேகம்; ”சிவப்பு நாடா” என்றெல்லாம் பத்திரிகைகள் வர்ணிப்பது உண்டு. இந்த ஓராண்டு காலத்தில் நகடாவில் நடந்திருக்கும் வளர்ச்சிப் பணிகளின் வேகத்தை எப்படி விளக்கலாம். ஒரு பத்திரிகையாளனாக வாழ்க்கையை தொடங்கிய எனக்குள் ஊடகம் இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த அரசு வேகத்தை பத்திரிக்கை நடையில் சொல்வதெனில் “அசுர வேகம்” என்று பெருமையுடன் கூறலாம். ஒரு வகையில் இதுவும் கூட “சிவப்பு” நாடா தான். சீறிச் சினந்த “சிவப்பு” நாடா!
இவ்வளவு வேலை பாக்கி இருக்கும் போது 2009 இல் என்ன செய்திருக்கமுடியும் என்னை அந்தப் புற்று நோய்?

Image

 

அட்சரேகைகளும்
தீர்க்கரேகைகளும்
தீர்மானிக்கும்
வெறும்
பூகோளப் புள்ளியா
கடைசி மைல்?

இல்லை.

கடைசி மைல்
என்பது
ஒரு குறியீட்டுச் சொல்.

ஒருவகையில்
அது ஒரு
சமூக அரசியல்.

விநியோகப்புள்ளியில் இருந்து
வெகு தூரத்தில்
விலகி நிற்கும்
அல்லது
விலக்கிவைக்கப்பட்ட
விளிம்பு அது.

காரியம் சாதிக்கும்
கலையை இன்னும்
கற்றுக்கொள்ளாத
இடம்
கடைசி மைல்.
அங்கே
கேள்வி கேட்கவும்
யாரும் இல்லை.
பதில் சொல்லவும்
நாதி இல்லை.

கட்- அவுட்கள்
எதுவுமே இல்லாத
’கன்னித்தீவு’
கடைசி மைல்.

அதிகாரத்தின் ’மையம்’
எது என்பதைப் பொறுத்து
கடைசி மைல்
முன்னோக்கியோ
பின்னோக்கியோ
பக்கவாட்டிலோ
நகர்வதற்கும்
வாய்ப்பிருக்கிறது.

இதோ
படுக்கையில் விழுந்து
கிடக்கிறது
பழைய பாடலிபுத்திரம்
பாய்ந்து பறக்கிறது
புதுதில்லி

ஒருவகையில்
கடைசி மைல்
என்பது
வெறும் தூரம்
பற்றியது அல்ல
இடைவெளி
பற்றியதும்

கடைசி மைல்
ஒன்றில்தான்
முன்வரிசைக்கு
முந்தப்பார்த்த
ஏகலைவன்
தன் கட்டைவிரலைப்
பறிகொடுத்தான்.

அவன் பேத்தி
அனிதா கூட
அங்கேதான்
அழுதுமடிந்தாள்.

ஏனெனில்
இடைவெளி
தூரம் ஆகிய
இரண்டும்
ஒன்றல்ல..

கோட்டையின்
கொல்லைப் புறத்தில்
ஒரு
கடைசி மைல்
கையேந்தி நிற்கலாம்.

ஆளரவமற்ற
ஒரு
தனிக்காட்டில்
ஓர்
அந்தரங்கக் கோட்டை
அதிரடியாக
ஆட்டம் போடலாம்.

இன்னும்
பாதைகள் தொடாத
படிப்பறிவு படாத
குக்கிராமங்கள்
கடைசி மைல்கள்
என்றால்
பெருநகரப் பாலங்களின்
அடியில்
படுத்துக்கிடப்பவர்கள்
கடைசி மனிதர்கள்.

தீண்டாமை என்பது
கடைசி மனிதனின்
மீது
செலுத்தப்பட்ட
முதல் வக்கிரம்.
பிறப்பொக்கும் என்ற
பெருமையில் அடித்த
பெரிய ஆப்பு.

இன்னும்
கோயில்கள் கட்டாத
கொடிமரம் ஊன்றாத
பூசாரிகள் குடியேறாத
மரத்தடியில்
அந்தக்
கடைசி மைலின்
முதற்கடவுள்
அசைவின்றி
இருக்கிறான்
அம்மணமாய்

கடைசி மைலின்
கடவுள் கூட
கந்த(ல்) சாமி தான்.

பெரியசாமிகள் இன்னும்
குடியேறாத இடங்களில்
கோயில்களும் இல்லை.
உண்டியல்களும் இல்லை

அதனால்
பூசாரிகளும் இல்லை.

அரவிந்த் என்றோர் அற்புதம்

“அதை நான் கடந்து சென்றேன்” என்று சில நேரங்களில் நாம் சொல்கிறோம். உண்மையில் நாம் அதைக் ‘கடந்து’ தான் சென்றோமா? அதைப் போலவே தொடர்ந்து செல்கிறோம் என்று நாம் நினைக்கிற பலவற்றை உண்மையில் ‘தொடர்ந்து’ செல்கிறோமா? கடப்பதும் தொடர்வதும் செயலா, நினைவா அல்லது இரண்டுமா? அல்லது இரண்டுமே இல்லையா?

1980 முதல் 1984 வரை அந்த நான்கு ஆண்டுகளில் மதுரை அரவிந்த் கண்மருத்துவமனையை குறைந்தபட்சம் ஆயிரம்முறையாவது நடந்து கடந்திருப்பேன். நத்தத்திலிருந்து பேருந்தில் வந்து அண்ணா பேருந்து நிலையத்தில் இறங்கியதும் வைகை ஆற்றின் மறுபுறம் உள்ள தினமணி அலுவலகத்திற்குச் செல்ல நகரப்பேருந்துக்காகக் காத்திருக்கவேண்டும் என்று தோன்றவே தோன்றாது. இறங்கிய வேகத்தில் நடை. போகும் வழியில் வைகை ஆற்றங்கரைக்கு மிக அருகில் அண்ணா நகர் தொடங்கும் புள்ளியில் சாலை முனையில் அரவிந்த கண் மருத்துவமனை. தினமும் பார்த்துக்கொண்டே கடந்து செல்வேன். அந்தப் பழைய பெயர்ப்பலகைதான் இன்னும் மனசில் ஆணியடித்து மாட்டியிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் பல இடங்களில் அரவிந்த் கண்சிகிச்சை முகாம்கள் நடைபெறும். அந்தமுகாம்கள் பற்றிய செய்தி ஞாயிற்றுக்கிழமை இரவு செய்திக்குறிப்பாக வரும். அது திங்கட்கிழமை பத்திரிகையில் சிறிய செய்தியாக வெளிவரும். பலமுறை அந்தச் செய்திகளை நானே மொழிபெயர்த்தும், அல்லது ’எடிட்’ செய்தும் அச்சுக்கு அனுப்பி இருக்கிறேன்.

இரத்ததான முகாம், அரிமா சங்கம், ரோட்டரி கிளப் போன்ற அமைப்புகளின் தன்னார்வச் செயல்கள் பற்றி அவ்வப்போது செய்திகள் வெளியிடுவது வழக்கமான ஒன்றே என்றாலும் அரவிந்த் கண்மருத்துவமனை வாராவாரம் தவறாமல் முகாம்கள் நடத்துவதும் அது தினமணியில் ஒருவாரம் கூட தவறாமல் செய்தியாவது பற்றியும் நான் அப்போது அவ்வளவாக யோசித்தது இல்லை. மற்ற நாளிதழ்களிலும் அரவிந்த் குறித்த செய்திகளை நான் பலமுறை படித்திருக்கிறேன். அரவிந்த குறித்த செய்திகளை தொடர்ந்து வெளியிடுவது பற்றி ஊடகங்களிடையே ஆக்கபூர்வமான ஒருமித்த கருத்து நிலவியதாகவே தோன்றுகிறது.

அந்தக்காலகட்டத்தில் அரவிந்த் மருத்துவமனை தொடர்பாக டாக்டர் வெங்கடசாமி, டாக்டர் நாச்சியார் என்ற இரண்டு பெயர்களை நான் அறிந்திருந்தேன். அவர்களிருவரும் அண்ணன் தங்கை என்பதையும் கேள்விப்பட்டிருந்தேன். ஆயிரம்முறை கடந்து சென்றிருந்தாலும் ஒருமுறை கூட நான் அந்த மருத்துவமனைக்குள் சென்றதில்லை. தேவையில்லாமல் ஏன் ஒரு மருத்துவமனைக்குள் போகப்போகிறோம்? தேவைப்படுவதை கோயிலில் வேண்டுவதும் தேவைப்பட்டால் மட்டும் மருத்துவமனைக்குப் போவதும் எல்லோருக்கும் இயல்புதானே. நானும் அப்படித்தான்.
அப்போதெல்லாம் எனது மனநிலை வேறு மாதிரி இருந்தது. பெயர்ப்பலகைகளைப் பார்த்ததும் அதிலிருந்து சங்கிலித்தொடராக மனத்திரையில் ஒன்றோடென்று தொடர்புடைய தகவல்கள் நனவோடையாய் ஓடும்; வரலாறு, புவியியல், அறிவியல், பொருளியல் என்று. ‘பூட்டை’ப் பார்த்ததும் அலிகார், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம்; சையத் அகமது கான், சிப்பாய்க் கலகம், மீரட் என்று மனம் குறிப்பெடுக்கும். அரவிந்தைப் பற்றி யோசித்திருந்தாலும் அரவிந்தர், புதுச்சேரி, பிரெஞ்சு, டியூப்ளே, கண்கள், ‘கார்னியா’, ‘ரெடினா’ என்று தான் மனசு ஓடியிருக்கும். அரவிந்த் கண் மருத்துவமனை பற்றி ஐ.ஏ.எஸ் நேர்காணலில் கேள்வி வருமோ என்று தான் தோன்றியிருக்கும். அப்போது நான் எனக்கான அப்போதைய தேடலில்.

2017 ஆம் ஆண்டு, பிப்ரவரி 4 ஆம் தேதி. ஒடிசா மாநில அரசின் தலைமைச்செயலகத்தில் சில அமைச்சர்களும் அனைத்து உயரதிகாரிகளும் அரங்கில் கூடியிருக்கிறோம். எங்களிடையே சொற்பொழிவாற்றுகிறார் டாக்டர் அரவிந்த் சீனிவாசன். இவர் அரவிந்த் கண் மருத்துவமனையை நிறுவிய டாக்டர் வெங்கடசாமியின் உடன்பிறந்த தம்பி சீனிவாசனின் மகன். அரவிந்த் கண் மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர். “மனித நேய மருத்துவம்: உலகிலேயே பெரிய கண்மருத்துவமனையிலிருந்து சில பாடங்கள்” என்ற தலைப்பில் தங்குதடையற்ற ஆங்கிலத்தில் அருவிபோலப் பொழிகிறார் அவர்.

கண் மருத்துவம், மேலாண்மை ஆகிய இரு துறைகளிலும் உலகப்புகழ்பெற்ற அவரது பேச்சில் தொனிக்கும் முதிர்ச்சி, முகத்தில் தெரியும் அமைதி; உடல் மொழி கூறும் தன்னம்பிக்கை. திரையிலும் உரையிலும் புள்ளி விவரங்கள் புரண்டோடுகின்றன. உலகின் மிகப்பெரிய கண் மருத்துவமனை அரவிந்த் தான்; “அரவிந்த்-மாதிரி” (Arvind Model) இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது; ஹார்வர்ட் போன்ற உலகப் பல்கலைக்கழகங்களில் பாடமாகப் படிக்கப்படுகிறது அரவிந்த் கண்மருத்துவ அமைப்பு.

“அரவிந்த சீனிவாசனை இந்தச் சொற்பொழிவிற்கு அழைக்கலாம்” என்று யோசனை சொன்ன சுப்ரத் பாக் ஷி எனக்கு அடுத்த இருக்கையில் தான் அமர்ந்திருந்தார். சுப்ரத் பாக் ஷி தற்போது அமைச்சர் அந்தஸ்தில் ஒடிசா திறன் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக இருப்பவர். அரவிந்த் சீனிவாசனின் உரை போகும் திசை, அவர் உரையாற்றும் விதம், அந்த உரையின் உள்ளடக்கம் அந்த அரங்கில் அமர்ந்திருப்போர் மத்தியில் ஏற்படுத்தும் அதிர்வலைகள்- மிக மகிழ்வாக உணர்ந்த நான் எனது அருகில் அமர்ந்திருந்த சுப்ரத் பாக் ஷியிடம் “நன்றி சார்” என்றேன். சுப்ரத் பாக் ஷி ஒரு புன்னகையுடன் எனது கை மீது கை வைத்து அங்கீகரிப்பது போல அழுத்துகிறார்.

இந்த அரவிந்த் கண்சிகிச்சை மருத்துவமனைக்கு அப்படி என்ன சிறப்பு? யார் இந்த டாக்டர் வெங்கடசாமி? டாக்டர் அரவிந்த்தின் சொற்பொழிவால் எனக்குள் அரவிந்த் மருத்துவமனை பற்றியும் டாக்டர் வெங்கடசாமி பற்றியும் புதிய ஆர்வமும் மதிப்பும் புத்துயிர் பெற்றாலும் டாக்டர் வெங்கடசாமியார் என்ற கேள்விக்கான விடை காணும் தேடலுக்காக நான் மேலும் பத்து மாதங்கள் காத்திருக்கவேண்டியிருந்தது. உண்மையில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பது கூட எனக்குத் தெரியாது.

2017 டிசம்பர் 21 ஆம் தேதி. சென்னையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு எனது மனைவி மற்றும் எங்களது இளைய மகளுடன் நான் சென்றிருக்கிறேன். கண் சிகிச்சை நிபுணர் திருவேங்கடத்தை சந்தித்தபின் டாக்டர் அரவிந்த் சீனிவாசனின் வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். நைஜீரியாவுக்கு சென்று அன்று காலை தான் சென்னைக்குத் திரும்பியிருந்தார். “எப்போதும் போல வந்துவிடுகிறேன்; கட்டாயம் சந்திக்கலாம்” என்று தொலைபேசியில் சொல்லியிருந்தார்.

அரவிந்த் அமைப்பில் மிக முக்கியப் பங்கேற்புச் செய்யும் செவிலியர்கள் நோயாளிகளிடம் அக்கறையோடு பேசுவதும் மருத்துவரைச் சந்திக்குமுன் நோயாளிகளின் கண்களில் சொட்டுமருந்து ஊற்றுவதும் மருத்துவரைச் சந்திக்க தயார்செய்யப்பட்ட நோயாளிகளை மருத்துவரின் அறைக்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்வதுமாக இருக்கிறார்கள். நோயாளிகளை தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா என்று அச்செவிலியர் அழைத்து அன்பு காட்டுவது மகிழ்ச்சி தரும் புதுமையாக இருக்கிறது. அவர்கள் விரைவாக இயங்குகிறார்கள். ஆனாலும் அந்த விரைவிலும் ஒரு நிதானமும் அமைதியும் இருந்தது. அந்தச் செவிலியர்களின் தோற்றத்திலிருந்தே அவர்கள் சாதாரணமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிகிறது. அதைப்பற்றியும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

டாக்டர் அரவிந்தைப் பார்ப்பதற்காக காத்திருக்கிறோம் என்று தெரிந்ததும் செவிலியர் ஒருவர் அரவிந்தின் அறை இருக்கும் தளத்திற்கு வழிநடத்திச் செல்கிறார். அங்குள்ள அலுவலர் ஒருவர் எங்களை கலந்தாய்வு அறையொன்றில் அமரச் சொல்கிறார். இருந்தாலும் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. அந்தத் தளத்தை சுற்றிப்பார்க்கிறேன். அந்த மருத்துவமனை இயங்கும் நேர்த்தியில் சுறுசுறுப்பில் நோயாளிகளைக் கையாளும் விதத்தில் ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கிறது. புதுமையாகவும் இருக்கிறது; புதிராகவும் இருக்கிறது. டாக்டர் அரவிந்த் வந்துவிட்டார். ஒடிசா சொற்பொழிவிற்குப் பின்னர் அப்போதுதான் சந்திக்கிறோம். பொதுவாக நலம் விசாரிக்கிறார். சிகிச்சைபற்றி கேட்டுத்தெரிந்துகொள்கிறார். சிகிச்சை அளிக்கும் டாக்டர் பற்றி குறிப்பிடுகிறார். நைஜீரியா பயணம்பற்றி விசாரிக்கிறேன். விடைபெறும் போது எனக்கு ஒரு நூலை அவர் பரிசளிக்கிறார். ”ஒளியை நோக்கி ஒரு பயணம்” என்பது அந்த நூலின் தலைப்பு. அரவிந்த் உருவான விதம் பற்றிய நூல் என்றார். ஆங்கிலத்திலும் இந்நூல் வெளிவந்திருப்பதாகவும் நான் தமிழில் படிக்கவிரும்புவேன் என்று நினைத்ததாகவும் புன்னகையோடு கூறுகிறார். நாங்கள் விடைபெற்றுச் செல்கிறோம்.

காரில் ஏறியதும் என் முதல்கவனம் அந்தப் புத்தகத்தின் மீதுதான். பவித்ரா மேத்தா, சுசித்ரா ஷெனாய் ஆகிய இருவரும் எழுதியது; ‘INFINITE VISION’ என்ற ஆங்கில நூலின் தமிழ்மொழிபெயர்ப்பு இந்நூல் என்பதை அறிந்துகொள்கிறேன். புத்தகத்தைத் திறந்து பார்க்கிறேன். நல்வாழ்த்துகளைத் தெரிவித்து தேதியுடன் கையொப்பமிட்டிருக்கிறார் டாக்டர் அரவிந்த். முதல் இரு பக்கங்களில், பார்வையற்றவர்கள் இல்லாத உலகத்தைப் பார்க்கத்துடிக்கும் உலக மனிதர்கள், நிறுவனத்தலைவர்கள், நிபுணர்கள் அரவிந்த் மருத்துவமனை பற்றி சொல்லிய கருத்துகள், மேற்கோள்களை படிக்கிறேன். முகப்புப் பக்கத்திலுள்ள டாக்டர் வெங்கடசாமியின் படத்தை பார்க்கிறேன்; உள்ளடக்க பக்கத்தை படிக்கிறேன்.

அந்த நொடியில் எனக்குத் தெரியாது, அரவிந்த் என்ற உலகிற்குள் என்னையும் அறியாமல் நான் நுழைகிறேன் என்பது. அடுத்த சில நாட்களில் நானே ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படப்போகிறேன் என்பதும் அடுத்த சிலவாரங்கள் சென்னையில் தங்கி இருமுறை மூக்கு அறுவைசிகிச்சைக்கு ஆளாவேன் என்பதும் படுக்கையில் படுத்து ஓய்வெடுத்தபடி அவசரமின்றி இந்நூலின் பக்கங்களின் ஊடாக மலரும் ஓர் உன்னதமான வாழ்க்கையில், ஒரு ‘மாதிரி’ உலகத்தில் பயணித்து ஒன்றிப்போவேன் என்பதும் எனக்குத் தெரியாது.

அந்த வாழ்க்கை நம் கண்முன் நிறுத்தும் உன்னத நோக்கம்; தளராத உழைப்பு, தரக்கோட்பாடு, சமரசம் செய்து கொண்டு சரிந்து போகாத அழகிய கம்பீரம், அதைச் சாத்தியமாக்கிய மனிதர்களை உணர்வுபூர்வமாக சந்திக்கப் போகிறேன் என்பதும் இந்த நூலைப் படிக்கும் போது ஓரிரு முறை என் கண்களில் கசிந்த நீர் கன்னத்தில் வடிவதை துடைக்கக் கூட முயலாமல் அதன் போக்கில் விட்டுவிட்டு அரவிந்தின் ஆழ உணர்வுகளில், செயல்திறனில், கட்டுப்பாட்டில், கண்ணியத்தில் கரைந்து உருகப்போகிறேன் என்பதும் கூட எனக்கு தெரியவே தெரியாது.

1918 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி. தமிழ்நாட்டிலுள்ள, தற்போது விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வடமலாபுரம் என்ற கிராமத்தில் பிறந்தவர் வெங்கடசாமி. தந்தையார் பெயர் கோவிந்தப்ப நாயக்கர், தாயார் லெட்சுமி. ஓலைக்கூரை வீடு. காலையில் எழுந்ததும் பெற்றோருக்கு உதவியாக இரண்டு காளை மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வெங்கடசாமியின் அன்றாட வாடிக்கை.

பாதங்களைச் சுட்டெரிக்கும் வெயிலில் தகிக்கும் வெறும் கால்கள். கல்லூரிக்குப் போகும் வரை காலில் செருப்பு அணியும் வாய்ப்பு இல்லாத ஒரு வாழ்க்கை; மனசில் மருத்துவராகும் கனவு; அதிலும் குறிப்பாக மகப்பேறு மருத்துவராகும் கனவு. அவரது கிராமத்தில் பிரசவத்தின் போது ‘ஜன்னி’ கண்டு அடுத்தடுத்து மூன்று இளம்பெண்கள் உயிரிழந்தது அவரது மனத்தில் மகப்பேறு மருத்துவராகும் விருப்பத்தை ஆழமாக விதைத்திருந்தது.

வெங்கடசாமி சிறு வயதிலிருந்தே கடுமையான தோல் அழற்சி நோயால் (Psoriasis) பாதிக்கப்பட்டிருந்தார். அந்த நோயின் கடுமையை தாங்கிக்கொண்டு கடின உழைப்பால் வெற்றி பெறுகிறார். 1944 ஆம் ஆண்டில் மருத்துவப்படிப்பில் இரண்டாம் இடத்தைப் பெற்று தேர்ச்சி பெறுகிறார். அவரது கிராமத்தின் முதல் மருத்துவர் வெங்கடசாமி தான்.

தன் தந்தையின் மறைவுக்குப் பின்னர் குடும்பச்சுமையை தனது தோளில் தூக்கிச் சுமந்த அவர் இந்திய ராணுவத்தில் மருத்துவராகச் சேர்ந்தார். ஆனால், மகப்பேறு துறையில் மேற்படிப்பு படிக்கும் அவரது கனவை அவர் மறக்கவில்லை. ஆனால் ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின் அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட போது அவரது உடல்நிலை மிக மோசமாக இருந்தது. முடக்கு வாதம் (Rheumatoid arthritis) என்ற நோய் டாக்டர் வெங்கடசாமியை மிகக்கடுமையாகத் தாக்கியது. அது அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் புரட்டிப்போட்டது. முடக்கு வாதத்தின் விளைவாக அவரது மூட்டுகள் வீங்கி தாங்கமுடியாத வலி ஏற்பட்டது மட்டுமின்றி அவரது கால்விரல்களும் கைவிரல்களும் தமது வழக்கமான இடங்களிலிருந்து தடம்புரண்டு விரல்கள் முறுக்கிக்கொண்டன. அப்போது அவருக்கு வயது முப்பது. திருமணம் நிச்சயமாகி இருந்தது.

மகப்பேறு மருத்துவராகப் பயிற்சி பெறுவதற்காக திட்டமிட்டிருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு படுத்தபடுக்கையாக இருந்தார். அவருக்கு உதவிசெய்வதற்காக கிராமத்திலிருந்து வந்திருந்த அவரது தங்கை நாச்சியாருக்கு அப்போது பத்துவயது கூட ஆகியிருக்கவில்லை. “என் சகோதரரின் தோல் அழற்சி நோயையும் முடக்குவாதத்தையும் தொழுநோய் என்று மக்கள் தவறாகப் புரிந்துகொண்டனர். அந்நாட்களில் “தொழுநோயாளிகளுக்கு அனுமதியில்லை” என்று எழுதிய அட்டைகள் பல இடங்களிலும் தொங்கவிடப்பட்டிருக்கும். சில சமயங்களில், உணவகங்களிலோ அல்லது ரயில்களிலோ எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்நாட்களில் நான் அழுதபடியே தூங்கினேன்.

என் சகோதரரை மக்கள் ஏன் இப்படி மோசமாக நடத்தினார்கள் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்” என்று தனது அண்ணன் வெங்கடசாமியும் தானும் பட்ட கஷ்டங்களை டாக்டர் நாச்சியார் அமைதியாக நினைவுகூர்கிறார். வெங்கடசாமி கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறி மீண்டும் மருத்துவக் கல்லூரிக்குத் திரும்புகிறார். ஆனால் அவரது மூத்த டாக்டர்கள் மற்றும் சக ஊழியர்கள் அவரது உடல் நிலையை கருத்தில்கொண்டு மகப்பேறு சிறப்பு பயிற்சி ஒத்துவராது; அதற்குப் பதிலாக கண்சிகிச்சை பிரிவில் சேரும்படி பரிந்துரைக்கிறார்கள். அதை ஏற்று கண் அறுவை சிகிச்சை சிறப்புப் பயிற்சியில் சேருகிறார். அவரது மகப்பேறு சிகிச்சை கனவு நிறைவேறாமல் போனது. இவ்வாறாக டாக்டர் வெங்கடசாமி கண்மருத்துவரானது ஒரு தற்செயலான நிகழ்வு தான். ஆனால், அந்த நாள் உலக கண் காப்பு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய நாள். ஆனால் அன்றைய தேதியில் டாக்டர் வெங்கடசாமி உள்பட யாருக்கு தெரியும் அது? .

கண்சிகிச்சை பயிற்சியில் சேர்ந்த கையோடு தன்னுடைய திருமண நிச்சயதார்த்தத்தை முறிவு செய்கிறார். அதற்குப் பின் டாக்டர் வெங்கடசாமி திருமணம் செய்துகொள்ளவே இல்லை.
1960 களின் துவக்கம். பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல்வராக இருந்த காலகட்டம். இந்தியாவிலேயே கிராமப்புறங்களில் கண்மருத்துவச் சேவைகளை வழங்குவதில் தமிழகமே முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்தது. கண் பரிசோதனை முகாம் என்ற கோட்பாடு அப்போதுதான் உதயமானது. இந்த புதிய முயற்சிக்கான தலைமைப் பொறுப்பேற்றார் டாக்டர் வெங்கடசாமி. அந்தக்காலகட்டத்தில் அவர் ஓர் அரசாங்க மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். கிராமங்களில் கண் சிகிச்சை முகாம் நடத்தி ஒரே நாளில் 200 முதல் 300 அறுவை சிகிச்சைகளை செய்தனர் அவரும் அவருடைய குழுவினரும். காலை 5 மணிக்கே தொடங்கும் சிகிச்சை இரவு ஏழு அல்லது எட்டு மணிவரை கூட தொடரும்.

ஒவ்வொரு முகாமிற்கும் அரசு கொடுக்கும் பணம் போதாது என்ற சூழ்நிலையில் கைக்காசைக் கூட செலவழிப்பாராம் டாக்டர் வெங்கடசாமி. இவர் ஏன் சொந்தப்பணத்தைச் செலவழிக்கிறார் என்று தொடக்கத்தில் கிராம மக்களே சந்தேகப்பட்டார்களாம். மருத்துவ உலகமும் அதை வரவேற்கவில்லை. உடன்பணியாற்றிய மற்ற மருத்துவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார் அவர்.

டாக்டர் வெங்கடசாமியின் நல்ல நோக்கத்தையும், சேவை உணர்வையும், அயராத உழைப்பையும் பார்த்த மக்கள் காலப்போக்கில் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொண்டனர். அவரது முகாமிற்கு சாதாரண கிராம மக்களில் தொடங்கி, அரிசி ஆலை உரிமையாளர்கள், எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் என்று பலரும் பலவிதங்களிலும், உதவமுன்வந்தார்கள். விவசாயிகள் முகாமிற்கு காய்கறி, பழங்கள் என்று கொடுத்து உதவினார்கள். முகாமில் சிகிச்சை பெற வந்தவர்களுக்கும் சிகிச்சை தர வந்தவர்களுக்கும் சமைத்துப்போட முன்வந்தார்கள் பெண்கள். கண் சிகிச்சை முகாம் என்ற கோட்பாடு அப்போது ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. இந்தியாவில் கண்காப்பு சிகிச்சைக்கென்று ஒரு வரலாறு எழுதினால் தமிழக கிராமங்களில் 1960 களின் தொடக்கத்தில் டாக்டர் வெங்கடசாமியின் அயராத உழைப்பால் உருவான இந்த மக்கள் இயக்கம் மிகமுக்கியமான திருப்புமுனையாக குறிக்கப்படும்.

1976 ஆம் ஆண்டு. டாக்டர் வெங்கடசாமிக்கு 58 வயது ஆகிவிட்டதால் அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அப்போது அவர் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கண் அறுவைசிகிச்சைகளைச் செய்திருந்தார். குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம விருதும் பெற்றிருந்தார். பொதுசுகாதாரம், குறிப்பாக கண் மருத்துவத் துறையில் நாடறிந்த கல்வியாளராக திகழ்ந்தார். வேறென்ன வேண்டும்? படிக்கும் போதே தோல் அழற்சி நோய், டாக்டரான பின் முடக்குவாதத்தால் வளைந்து முறுக்கிக் கொண்ட கைகால் விரல்கள், இரண்டு ஆண்டு படுத்தபடுக்கையில் மருத்துவம், மீண்டும் மருத்துவக்கல்லூரியில் கண்சிகிச்சைக்குப் பயிற்சி; முறிவு செய்துவிட்ட நிச்சயதார்த்தம்; கிராமப்புறங்களில் கண்சிகிச்சைமுகாம் என்ற கோட்பாட்டின் உதயத்தின் உயிர்நாடி என்ற அடையாளம். முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட கைகளை வைத்துக் கொண்டு கண் அறுவை சிகிச்சை செய்ய கத்தி பிடிக்கும் துணிவு எத்தனைபேருக்கு வரும்? அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்பே ஒரு லட்சத்திற்கும் மேல் அறுவைசிகிச்சை என்பது சாதாரணமான விஷயமா? நாடறிந்த புகழ்! வேறென்ன வேண்டும்?

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் டாக்டர்களில் பலர் ஏற்கனவே வழக்கமாக செய்கிற ‘பிரைவேட் பிராக்டீஸை’ இன்னும் தீவிரமாக்குவார்கள். சிலர் கோயில் குளம் என்று கிளம்புவார்கள்; இன்னும் பலர் வீட்டில் கிடந்து புலம்புவார்கள். ஆனால் இந்த வெங்கடசாமி கூட்டத்தில் கூட்டமான இன்னொரு டாக்டர் அல்ல. தனி ஒருவர்! ஓய்வு பெறுவதை நோக்கி நகர்வதில்லை அவரது நாட்காட்டி. அவரால் ஓய்வு பெறமுடியாது. அவருக்கு அது தெரியாது.
வெங்கடசாமி “ஓய்வுபெற்ற” பின்னால் தான் அரவிந்தின் அகரம் தொடங்குகிறது. அது ஒரு வாழ்க்கையின் ஓய்வுப்புள்ளியல்ல. ஒரு வரலாற்றின் தொடக்கப்புள்ளி.

பணி ஓய்வு பெற்ற வெங்கடசாமி தனது நாட்குறிப்பில் தனக்குள் கொழுந்துவிட்டு எரிந்த பல கேள்விகளைக் குறித்து வைத்திருக்கிறார். “பெரும்பாலான மக்களுக்கு கட்டுபடியாகக்கூடிய செலவில் கண்புரை அறுவை சிகிச்சைகளை வழங்குவது சாத்தியமா, அதற்கு எவ்வளவு செலவாகும். எப்படிப்பட்ட மருத்துவ உதவியாளர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நோயாளிகளுக்கு எந்தெந்த வசதிகளை வழங்கமுடியும். ஒரு வாரத்திற்கு முப்பது நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், எத்தனை படுக்கைகள் நமக்குத் தேவைப்படும்” இப்படிப்பட்ட கேள்விகளோடு தான் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அஸ்திவாரம் போடுகிறார் ‘ஓய்வுபெற்ற’ டாக்டர் வெங்கடசாமி.

முதல் மருத்துவமனையைக் கட்டுவதற்காக தன் சொந்தவீட்டை அடமானம் வைத்தார். அவருடைய சகோதர சகோதரிகளும் தங்களுடைய சேமிப்புகளை அந்த மருத்துவமனைக்காகக் கொடுத்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் 500 ரூபாயை அதில் முதலீடு செய்தனர். அது போதுமானதாக இல்லை. கட்டுமானப் பணிகள் நடக்கும்போது பணியாளர்களுக்கு சனிக்கிழமை தோறும் சம்பளம் கொடுக்கும் போது அவ்வப்போது குடும்ப நகைகளை அடகு வைக்க வேண்டியதாயிற்று. இப்படித் தொடங்கியது தான் அரவிந்தின் கதை.

‘நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்’ என்றெல்லாம் படித்திருக்கிறேன். ஆனால் டாக்டர் வெங்கடசாமியின் சகோதர சகோதரிகள், அவர்களின் இணையர்கள், அவர்களின் பிள்ளைகள், பேரன் பேத்திகள் என்ற இந்தக்குடும்பம் வெங்கடசாமியின் உயரிய நோக்கத்தை உள்வாங்கி ஒத்துழைத்தவிதம், தோளோடு தோள் நின்று பாடுபட்ட விதம் பற்றி படிக்கும் போது நல்ல குடும்பம் என்பது பல்கலைக்கழகமோ இல்லையோ அது வழிபாட்டுத் தலங்களை விட மேலானது, புனிதமானது என்ற உணர்வே எனக்குள் மேலிடுகிறது. “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” என்ற திருக்குறள் தான் நினைவுக்கு வருகிறது.
பரிவுடன் கூடிய தரமான கண்சிகிச்சையை அனைவருக்கும் கட்டுபடியாகக்கூடிய செலவில் அளித்து, தேவையற்ற பார்வையிழப்பை இல்லாமல் செய்வது என்ற உன்னதமான தொலைநோக்கு குறிக்கோள்தான் அரவிந்த் மருத்துவமனையை வழிநடத்தும் உந்துவிசையும் கூட.

அனைவருக்கும் கண்சிகிச்சை, பார்வை இழப்பு தடுப்பு என்பதெல்லாம் இந்தியா போன்ற மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாட்டில் மத்திய மாநில அரசுகள் செய்யவேண்டிய வேலை; ‘கட்டுபடியாகக் கூடிய செலவில்’ என்பது பொதுவாக தனியார் மருத்துவமனைகளின், குறிப்பாக நட்சத்திர ஹோட்டல் போல ‘மார்பிள்’ பதிக்கப்பட்ட ”ஆடம்பர மருத்துவமனைகளின்” சிந்தனையில் கூட தோன்றாத விஷயம். அனைவருக்குமான சிகிச்சை என்பது பொதுவாக அரசாங்கங்கள் மட்டுமே கவலைப்படவேண்டிய விஷயம். ஆனால் பெரிய எண்ணிக்கைக்கும் தரத்திற்கும் தொடர்புகிடையாது என்பது காலம் காலமாக ஒப்புக்கொண்டு சமரசமாகிவிட்ட பொதுவான “நம்பிக்கை”. ஆனால், எல்லாரும் போன பாதையில் போகிற சராசரிப் பாதசாரி அல்லவே வெங்கடசாமி. புதுப்பாதை போடுபவர். முடக்குவாதம் கையைமுறுக்கியதும் முடங்கிப்போகாமல் அறுவைசிகிச்சைக்கு அதேகையில் கத்தி பிடித்தவர் அவர். தோல் அழற்சியை தொழுநோய் என்று ஒரு மருத்துவரை ஒதுக்கித்தள்ளிய சமூகத்தின் பார்வையைச் சரிசெய்ய பரிவுடன் புறப்பட்ட புதுவிசை அல்லவா வெங்கடசாமி.

2017 ஆம் ஆண்டு நிலவரப்படி அரவிந்த்தின் சாதனைப் பட்டியல் இதோ: சிறப்பு கண் சிகிச்சை மையங்கள்- 6; கண் புரை மற்றும் சிறப்பு நோய் அறி மையங்கள் 6; சமூக கண்சிகிச்சை மருத்துவமனைகள் 6; தொடக்கநிலை பார்வை பரிசோதனை மையங்கள் 61; கண் சிகிச்சை முகாம்கள் – 2016-மார்ச் முதல் 2017 மார்ச் வரை ஓராண்டில் கிராமப்புறங்களில் 2500 முகாம்கள்: 5,77,350 நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு 92022 பேருக்கு அறுவை சிகிச்சை. அரவிந்த கண் வங்கிகளில் 5356 கண்கள் தானம் பெறப்பட்டு 2792 பயன்படுத்தப்பட்டன. ஒரே ஆண்டில் அரவிந்த் கண் அமைப்பில் 4,067,265 வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்றனர். 4, 63, 124 அறுவை சிகிச்சைகள், லேசர் சிகிச்சைகள் செய்யப்பட்டன

அரவிந்த் கண்சிகிச்சை கல்வி அமைப்பில் 100 நாடுகளைச் சேர்ந்த 9000 பேர் பயிற்சி பெற்றார்கள். 1401 கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. 19 கண்சிகிச்சை நிபுணர்கள் முனைவர் பட்டம் (பி.எச்.டி) பெற்றுள்ளார்கள். 28 நாடுகளைச் சேர்ந்த 335 மருத்துவனைகள் அரவிந்த்தின் அனுபவப்பகிர்வையும் ஆலோசனை உதவியையும் பெற்றன.

Image

கண்சிகிச்சையில் பயன்படும் லென்ஸ், தையல் போடும் ஊசிகள், மற்றும் கருவிகளை சில உலக நிறுவனங்களே தயார் செய்து கொள்ளை லாபத்தில் விற்றுவந்தன. அனைவருக்கும் கட்டுபடியாகும் செலவில் தரமான கண்சிகிச்சை அளிப்பதென்ற அரவிந்தின் குறிக்கோளை செயல்படுத்தும் முயற்சிக்கு அந்த ஏகபோக ஆதிக்கம் முட்டுக்கட்டையாக இருந்தது.இதற்கு ஒரே தீர்வு, இந்தக் கருவிகளையும் லென்சுகளையும் தானே தயாரிப்பது தான் என்று அரவிந்த் அமைப்பு முடிவுசெய்தது. இத்தனைக்கும் தயாரிப்பு, விற்பனை என்ற துறைகளில் எந்தவிதமான முன்னனுபவமும் இல்லாத அரவிந்த் அந்த முயற்சியில் இறங்கியது.

அதன்விளைவாக இன்று உலகின் 160 நாடுகளில் அரவிந்தின் தயாரிப்புகள், லென்சுகள் பயன்படுத்தப்படுகின்றன. மற்ற நிறுவனங்கள் விற்கும் விலையையும் அரவிந்தின் விலையையும் ஒப்பிட்டு கூடப் பார்க்கமுடியாது. அந்த அளவிற்கு மலிவானது. அதிக லாப நோக்கம், இரண்டு மூன்று அடுக்கு வினியோகஸ்தர்களின் லாபம், மருத்துவருக்கு “ஊக்கத்தொகை” என்று பல்வேறு காரணங்களால் தயாரிப்பு செலவிற்கும் சில்லரை விற்பனை விலை, அது போக மருத்துவமனைகள் அந்த மருந்துகள், கருவிகள், லென்சுகள் போன்றவற்றை நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தும்போது வைக்கிற “கூடுதல் விலை” என்று எல்லாம் சேர்ந்து நோயாளிகளின் தலையில் கை. இதுதான் இன்றைய நிலைமை.

ஆனால். அன்பாலும் மனிதநேயத்தாலும் அற உணர்வாலும் வழிநடத்தப்படுகிற “அரவிந்த்-மாதிரி..” இந்த அவல நிலைக்கு நேர் எதிரான மாதிரி. ஆயினும் ‘இந்த மாதிரி’வெற்றிகரமாக கட்டுபடியாகும் வகையில் செயல்படுகிறது என்பது ஆறுதல் மட்டுமல்ல; எதிர்காலத்திற்கான நம்பிக்கையும் கூட.
அரவிந்த் வளாகத்தில் வீசும் காற்றில் ’ஈடுபாடு” என்ற உணர்வின் இனம்புரியாத வாசம். அங்கு பணிபுரியும் பெண்கள் வரைந்துள்ள வண்ணாமாக்கோலங்களும் பூக்கோலங்களும் நம்மை வரவேற்கின்றன. அந்த கோலங்களின் வடிவங்களின் நேர்த்தியும் ஒழுங்கும், அழகும் அதன்பின் உள்ள முயற்சியும் ஈடுபாடும் ஏதோ சொல்கின்றன. அவை வெறும் கோலங்களோ புனைவான வடிவங்களோ என்று தோன்றவில்லை. அதைத் தெளிவாக சொல்லமுடியாவிட்டாலும் அந்த வரவேற்பு வண்ணக்கோலத்தைக் கடந்து செல்லும் போது ஆரவாரமற்ற ஓர் அழகு நமது உணர்வுக்குள் நிறைவதை நம்மால் உணரமுடிகிறது.

இன்று அரவிந்த் கண் காப்பு அமைப்பு என்பது புகழ்பெற்ற கண் மருத்துவமனை மட்டுமல்ல. அது ஒரு கோட்பாடு. அது ஓர் அறம். அது ஓர் ஆற்றல். அந்த அறத்தின் ஆற்றலால் ஈர்க்கப்பட்டு உலகத்தின் பலபகுதிகளிலுமுள்ள அற மனிதர்களும் மனித நேயத்தால் உந்தப்பட்டவர்களும் நிறுவனங்களும் தங்களை அரவிந்தின் கண்காப்பு பணிகளில் பங்களிப்பவர்களாக தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்டுள்ளார்கள். இதில் உலகப்புகழ்பெற்ற டாக்டர் டேவிட் சாங், டாக்டர் ஃபிரெட் மன்சன், தனது பன்னிரண்டாவது ஆண்டில் பார்வை இழந்து அதற்காக வருந்திவாடாமல் உலகில் பார்வை இழப்பை தடுக்கும் பணியில் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்ட சர் ஜான் வில்சன், அவரது மனைவி ஜீன் வில்சன், டாக்டர் கிறிஸ்டீன் மெல்ட்டன், டாக்டர் புலின் ஷா, டாக்டர் கார்ல் கூப்பர், டாக்டர் ரிச்சர்டு லிட்வின், அவரது மனைவி ஜூடித், டாக்டர் சூசேன் கில்பர்ட், டேவிட் கிரீன், புரூஸ் ஸ்பைவி, சூசன் டே என்ற நீண்ட பட்டியல் அது.

இதற்கு எந்த வகையிலும் மாற்றுக் குறையாதது அரவிந்த் அமைப்பின் மீது சகமனிதர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. அவர்களில் ஒருவர் ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரங்கசாமி. கண்புரை நோயால் பார்வையை இழந்த தனது தந்தையையும் தாயையும் 480 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மதுரை அரவிந்த மருத்துவமனைக்கு அழைத்துவந்தார். பெற்றோர் இருவரும் கண்புரை அறுவைசிகிச்சை மூலம் பார்வையை திரும்பப் பெற்றனர். மிகவும் மகிழ்ச்சியடைந்த ரங்கசாமி “நன்றி” சொல்லிவிட்டுப் போகவில்லை.

தான் வாழும்பகுதியிலுள்ள கண்புரை நோயாளிகளை ஊக்கப்படுத்தி ஒவ்வொரு வாரமும் அரவிந்திற்கு அழைத்துவரத்தொடங்கினார். 15 ஆண்டுகளில் 1,50,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளை அழைத்துவந்து சிகிச்சைபெற வைத்திருக்கிறார், இப்போது அவருக்கு உதவியாக பத்து தன்னார்வலர்கள் இயங்குகின்றனர். அதுதான் அரவிந்தின் அடிப்படையான பலம். அரவிந்த்தின் அறம் சார்ந்த மனித நேயத்தின் காந்த சக்தியே நல்லவர்களை மதுரைக்கு கொண்டுவருகிறது. அறமும் அன்பும் பரிவும் ஓர் அழகான “தொற்று”. ஆனால், அந்தத் ’தொற்று’ நோய் அல்ல; அது தீர்க்கும் மருந்து. இந்த அறவலைப்பின்னலின் வலுவால் உலகப்புகழ் பெற்று ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது அரவிந்த்.

“அரவிந்த்-மாதிரி” என்பது 1993 இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கட்டுரையாக வெளியிடப்பட்டது. 2007 இல் அண்டோனியா சம்பமலிமாட் விருது; 2008 இல் கேட்ஸ் உலக சுகாதார விருது, 2010 இல் கான்ராடு என். ஹில்டன் மனித நேயப்பரிசு, 2011 இல் பெர்லின் நிறுவனம் வழங்கிய ‘விஷன் விருது’, 2012 இல் சீதாராம் ஜிந்தல் பரிசு; அதே ஆண்டில் ‘ஹெர்ம்ஸ் விருது’ என்று அரவிந்தின் பெருமிதத்திற்குரிய மனிதநேயப் பயணம் தொடர்கிறது.

அரவிந்த்தின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் உணரப்படுகிறது. எத்தியோபியா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, ஜிம்பாப்வே உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளிலும், நேபாளம், வங்கதேசம், சீனா, கம்போடியா, எகிப்து, இந்தோனேசியா, இலங்கை, எல் சால்வடார் என்று பல இடங்களிலும் தனது முத்திரையை பதித்துள்ள அரவிந்த் அமெரிக்காவிலும் இயங்குகிறது.

அரவிந்த் நடத்திய பயிலரங்கு ஒன்றில் கலந்துகொண்டு அரவிந்தின் பணிகளால் ஈர்க்கப்பட்ட ஜாவியர் ஒக்ய்செனும், கார்லோஸ் ஓரெல்லானாவும் அரவிந்த் போன்ற ஒரு கண்மருத்துவமனையை மெக்சிகோ நகரில் துவங்கியுள்ளார்கள். அந்த மருத்துவமனையில் டாக்டர் வெங்கடசாமியின் பொன்மொழியுடன் கூடிய அவரது புகைப்படம். அந்தபுகைப்படத்தின் அருகில் ஜாவியரும் கார்லோஸீம் மகிழ்வுடன் நிற்கிறார்கள். அந்தப் படத்திலுள்ள வெங்கடசாமியின் வாசகத்தை வாசிக்கிறேன்.

“புத்திசாலித்தனமும் திறமையும் மட்டும் போதுமானதல்ல; அழகான ஒன்றைச் செய்கிற மகிழ்ச்சியும் அதில் இருக்க வேண்டும்”. புத்திசாலிகளால் மட்டும் நிரம்பிய உலகை மனதிற்குள் நினைத்துச் சிரிக்கிறேன். கண் சிகிச்சைக்கு வருகிற நோயாளிகளை வயதிற்கு தக்கபடி பாட்டி, அம்மா, அக்கா, தாத்தா, அப்பா, அண்ணன் என்று பரிவுடன் முறைசொல்லி அழைத்து கையைப் பிடித்து கவனமுடன் அழைத்துச் செல்லும் அரவிந்த் செவிலியர்களையும் நினைத்துப்பார்க்கிறேன். அரவிந்த் அமைப்பை தோற்றுவித்து கட்டமைத்து உலகிற்கு கொடையளித்த வெங்கடசாமியும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கிராமப்புற மனிதர்களே. ஏதேதோ மனதில் தோன்றுகிறது. நனவோடையாய் என்னுள் நகரும் எண்ணங்களையும் உணர்வுகளையும் புன்னகையாய் மடைமாற்றம் செய்கிறது எனது மனமும் இதழ்களும்.

மீனாட்சி அம்மன் கோயில், தெப்பக்குளம், கற்பனையில் எப்போதும் வற்றாத வைகை. இப்போது அரவிந்த். எவ்வளவு நெரிசலாக இருந்தாலும் மதுரை எவ்வளவு அழகாக இருக்கிறது. மதுரையில் வெள்ளம் என்றதும் சிவன் புட்டுக்கு மண் சுமந்த கதையை நினைத்துப் பார்க்கிறேன். இந்தியாவிற்கு வந்த காந்தியடிகள் தன் மேல்சட்டையை கழற்றிப் போட்ட வைகை நொடிகளை நினைத்துப் பார்க்கிறேன். எளிமை எவ்வளவு அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கிறது. வட்டமேஜை மாநாட்டில் காந்தியடிகள் கோட்-சூட் போட்டு அமர்ந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என நினைத்துப் பார்க்கிறேன். எனக்குள் சிரிக்கிறேன். காந்தி விடுதலைக்காக சாட்டையைச் சுழற்றாமல் சட்டையைக் கழற்றினார்; சரித்திரம் சுழன்றது. காந்தியடிகளின் எளிமையான வன்முறையற்ற அகிம்சை போராட்டத்தின் ‘உடல்மொழி’ மேல் சட்டை இல்லாத அந்த ‘அரைநிர்வாணம்’ தான். அந்த மாற்றம் நிகழ்ந்த மண் மதுரை மண்.

மனம் முன்னும் பின்னுமாய் நடக்கிறது. அலுவலகத்திற்கு உரியநேரத்தில் செல்லும் அவசரத்தில் அரவிந்தை ஆயிரம் முறை நடந்து கடக்கிறேன். எனது மேஜையில் அரவிந்த் கண்சிகிச்சை முகாம்கள் பற்றி ஆங்கிலத்தில் தட்டச்சு செய்துவைத்திருந்த செய்திகள் கிடக்கின்றன. அவற்றை நான் தமிழில் மொழிபெயர்க்கிறேன். காலம் சுழல்கிறது. “அரவிந்த் என்றோர் அற்புதம்” என்ற இந்தக் கட்டுரையை எங்கோ வெகுதொலைவில், புவனேஸ்வரத்தில் என் வீட்டில் எனது மடிக்கணிணியில் தமிழ்விசைப்பலகையில் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்.

டாக்டர் வெங்கடசாமியின் இந்த அற்புதமான நிறைவான வாழ்க்கையில் எந்த நிகழ்வு, அல்லது எந்தப்புள்ளி அவரது முதல் சுற்றின் முடிவு? எது இரண்டாம் சுற்றின் தொடக்கம்? மகப்பேறு மருத்துவராகும் கனவைத் தகர்த்த முடக்குவாதம் அவரை முடக்கிப் போட்ட காலமா? அவர் தனது முறுக்கிய விரல்களில் அறுவைசிகிச்சைக்கான கத்தியை இறுக்கிப்பிடித்த வைராக்கியத்தின் முதல் மணித்துளியா? வேலையிலிருந்து ஒய்வுபெற்றபின் தனது சொந்தவீட்டை அடமானம் வைத்து அரவிந்திற்கு அடிக்கல் நாட்டிய அந்த நிமிடமா? எது? உண்மையில் முதல் சுற்று இரண்டாம் சுற்று என்பது கூட வெறும் கற்பிதமா? மனத்தோற்றமா? உண்மையில் அப்படி ஒன்றே இல்லையா?

இந்த நொடியில் அரவிந்தின் புறக் கட்டுமானங்களுக்கு அப்பாற்பட்ட அகக் “கட்டமைப்பின்” அழகின் விளிம்பில் நிலைகுத்தி நிற்கிறது எனது மனசு அளவிடமுடியாத வியப்புடனும் வினாக்களுடனும். ஒரு புதிய புரிதலுக்கான வேட்கையும் தவிப்பும் என்னை ஏதோ செய்கிறது..

Image

 

“திரைக்கு வந்து
சிலமாதங்களே ஆன”
‘அதிரடி’ படம் ஒன்றை
தொலைக்காட்சியில்
பார்த்த அசதியில்
அப்படியே தூங்கிவிட்டேன்.

கனவில் கடவுள்!.

கடவுளின்
கைகளில் எல்லாம்
வகை வகையாய்
ஆயுதங்கள்

யாரோ ஒரு
‘கருப்பு’ அசுரனின்
குடல்
கடவுளின் கைகளில்.
விழித்து எழுகிறேன்
திடுக்கிட்டு

யார் அந்தச் சிற்பி?
எது அவரது உளி?

தூக்கமே வரவில்லை.

இதோ
விடியாதிருந்த இருட்டின்
மூச்சுமுட்டும்
குருட்டுத் தனிமையில்
தவித்துக்கிடந்த
அந்த பாட்டனும் பாட்டியும்
கண்விழித்துப் பார்த்தார்கள்
அந்த நொடியில் தான்
மீண்டும் பிறந்தது
அவர்களின் ‘உலகம்’

கடவுளின் விரல்கள்
கோணலாய்
வளைந்திருந்தன!

சாமி
டாக்டர் வெங்கடசாமி!

எளிமை எவ்வளவு
அழகானது
கருணை எவ்வளவு
வலுவானது

தன்னலமின்மை
தரும்
தன்னம்பிக்கையே
துணிவின் உன்னத உச்சம்

அன்பு என்பது
ஒரு தலைமைப் பண்பு
அருள் அதன்
அழகிய முகம்
தளர்ந்தவனை
அவன் அறியாமலே
தாங்கும் அறம்.

அறம் என்பது
வெறும் நோக்கம் அல்ல
வெறும் செயல் அல்ல
நோக்கமும் செயலும்

அருள் நெஞ்சம்
தன்னுயிர் அஞ்சாத
தகைமையின்
உறைவிடம்

கைம்மாறு வேண்டாத
கடப்பாடு தான்
கருணையின் உச்சம்.
மற்றவை வெறும்
கொடுக்கல் வாங்கல்

முகம் தெரியாதவர்களிடம்
காட்டும்
பரிவுதான் முழுமையானது.

மனிதர்களில் உண்டு
வகை இரண்டு.
எல்லாம் தமக்குரியர்
என்பும் பிறர்க்குரியர்.

எல்லாம் தமக்குரியர்
இருந்தும் இல்லாதவர்
எங்கும் நில்லாதவர்
எதையும் வெல்லாதவர்
ஏனென்றால்
அவர்
அன்பு இல்லாதவர்.

தன்னைத் தானே
சுற்றிவரும் இவர்களின்
பிரபஞ்சத்தில்
இவர்களே சூரியன்
இவர்களே பூமி.
இவர்களின்
‘பால் வீதி’ முழுவதும்
பாலிதீன் பைகள்.

இவர்களின் பசி
அடங்காப் பசி.
இவர்களின் தாகம்
அடங்காத் தாகம்.

என்பும் பிறர்க்குரியர்

இவர்களின்
பார்வை வேறு
அதனால்
பாதையும் வேறு.

இவள்
மாதவி மகள்
மணிமேகலை.
பசிப்பிணி தீர்த்தாள்.
அன்பினால்
அறம் காத்தாள்.

என்பும் பிறர்க்குரியர்
குருதிக் கொடை
கொடுப்பர்.
கண் தானம்
செய்து காத்திருப்பர்.

அட்சய பாத்திரம்
பித்தளையா
வெண்கலமா
என்பதிலா பிணக்கு?

அள்ளக்குறையாத
அன்பின் குறியீடு.
அக்கறை
அதிலே பத்திரம்
அதனால் அது
அட்சய பாத்திரம்.

அட்சயபாத்திரம்
ஒரு கதாபாத்திரமா?
அப்படியென்றால்
அன்னை தெரசா
அயல்நாட்டு
அமுதசுரபியா?

பெயரில் என்ன
இருக்கிறது..?
அன்பே மொழியென்பதால்
அன்பிற்கு எதற்கு
அடை மொழி?

ஆண்டவர்கள்
என்போர் யார்?
மாண்டவர்கள் தானே
ஆண்டவர்கள்.

ஆண்டவர்கள்
அன்பால் உயிர்களை
ஆட்கொண்டு
ஆண்டவர்கள்.
மனிதரை
மனிதராய்க்
கையாண்டவர்கள்.

அறம் என்ற
அழகிய வலைப்பின்னலின்
எளிய வலுவே
பூமியை முன் நகர்த்தும்
நெம்புகோல் தத்துவம்.

அன்பு என்பது
அகத்தின் உறுப்பு
அகத்தின் அழகுக்கு
அன்பே பொறுப்பு…

அன்பு என்பது
ஆர்வத்தின் அகரம்.
அடைக்கும் தாழ் இல்லாத
அருள் நகரம்.

அன்பு
பகுத்துண்டு
பல்லுயிர் ஓம்பும்.
நோய்க்கு மருந்தாகும்.
அற்றார் அழிபசி தீர்க்கும்.

மனிதனைத் தொடாத
மதம் என்ன மதம்?

கடவுளுக்கு
ஆயிரம் பெயர் இருக்கலாம்
ஆனால்
கடவுளின் ஆகச்சிறந்த பெயர்
‘கருணை’ என்பது தான்.

கருணையற்ற
யாரும் எதுவும்
தன்னைக்
கடவுள் என்று
‘ஆதார்’ கொடுத்தாலும்
நம்பாதீர்கள்!

உதவும் கரங்கள்
வணக்கத்திற்குரியவை!

அவை
கடவுளின் கைகள்

சேவை என்பதே
சிறப்பிற்குரிய
ஆன்மீகம்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
குறள்- 72

கோராபுட் பக்கம் தான் சிகாகோ

யார் மீதும் நம்பிக்கை இல்லாமல், அனைவரும் தனக்கெதிராக செயல்படுவதாக நினைத்து அஞ்சும் ஒரு மனநிலைக்கு உளவியலில் ‘பாரனோயா’ (Paranoia) என்பது பெயர். இது ஒருவகையான ‘சித்த பிரமை”. இதற்கு நேர்மாறான ஒரு மனநிலைக்கான புதிய சொற்படைப்பு “ப்ரோனோயா” (Pronoia) என்பதாகும். அண்டமும் அகிலமும் தனக்கு ஆதரவாக ‘சதி’ செய்வதாக நம்புகிற மனநிலையாகும் இது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் பவுலோ கோய்லோ (Paulo coelho). இவரது படைப்புகளிலேயே ‘தி ஆல்கெமிஸ்ட்’ என்ற புதினம் மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவரது படைப்புகள் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ‘தி ஆல்கெமிஸ்ட்’ என்ற இவரது புதினத்தின் மையப் பாத்திரமான சாண்டியாகோ என்ற சிறுவனிடம் முதியவர் ஒருவர் இப்படிச் சொல்லுவார். “ நீ ஒன்றை தீவிரமாக வேண்டும் போது பிரபஞ்சம் முழுவதும் உன்னுடைய விருப்பத்தை நீ அடைய, உன் கனவை நீ சாதிக்க உனக்கு உதவுவதற்காக வரிந்து கட்டிக்கொண்டு வரும்”. ‘ப்ரோனியா’ என்ற உளவியல் கருத்தாக்கத்தின் படைப்பிலக்கியப் பதிவு என்று இதைக்கூறலாம்.

“தீர்மானமாக நீ முடிவு எடுத்தவுடன் அதை நிறைவேற்ற பிரபஞ்சம் சூழ்ச்சி செய்கிறது” என்று ரால்ப் வால்டோ எமர்ஸன் கூறுகிறார். “நாம் எடுக்கும் முடிவுகளிலேயே மிக முக்கியமான முடிவு நாம் நட்புறவான இணக்கமான பிரபஞ்சத்தில் இருக்கிறோம் என்று நம்புகிறோமா அல்லது விரோதமான, பகைமையால் நிரம்பிய பிரபஞ்சத்தில் இருக்கிறோம் என்று நம்புகிறோமா என்பது தான்” என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீனின் கருத்தாகும். இந்த இரண்டில் எதை அதிகம் நம்புகிறோம் என்பதைப் பொறுத்து நமது மனநிலை மட்டுமன்றி நமது அனுபவங்களும் விளைவுகளும் கூட அமைகின்றன.

‘ப்ரோனோயா’ என்ற கோட்பாட்டை அணுகும் முறையைப் பொறுத்து அதற்கான விளக்கம் மாறுபடுகிறது. மத நம்பிக்கையின் ஊடாகப் பார்ப்பவர்கள் இதை ‘தெய்வக் கட்டளை’யாகவும், இதை எண்ணிய எண்ணியாங்கு எய்தும் மனித ஆற்றலின் மறுசாயலாகக் கருதுபவர்கள் ‘முற்சிந்தனை’யாகவும் கருதுகிறார்கள்.

உலகம் நமக்கு உதவுவதற்காகக் காத்திருக்கிறது என்ற கண்ணோட்டத்தை ஆன்மிகம், கடவுள் நம்பிக்கை, அதிர்ஷ்டம் என்ற நிலைப்பாடுகளின் ஊடாக அணுகுவதை அனைவரும் விரும்பமாட்டார்கள். இதில் மாற்றுக்கருத்து இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் நாம் தீவிரமாக விரும்புவதை நிறைவேற்றிக் கொடுக்க பிரபஞ்சம் வரிந்து கொண்டு வருகிறது என்பதை உளவியல் சார்ந்த, ஒருவனது செயல்கள் சார்ந்த நடைமுறை சாத்தியம் என்று விளக்குவதற்கும் பகுத்தறிவு சார்ந்த காரணங்களும் உண்டு.

ஒருவன் விருப்பப்பட்டது உடனே நிகழ்ந்துவிட்டால் அதை தான் எடுத்த முயற்சிகள், அதற்காக உதவியவர்கள் என்று எளிதாகத் தொடர்புபடுத்திப் பார்க்கமுடிகிறது. ஆனால், விரும்பிய காலத்திற்கும் அது கைகூடிய காலத்திற்கும் இடையில் பெரிய கால இடைவெளி இருந்தால், அந்தக் காரியம் கை கூடும் போது அது “கூரையை பொத்துக்கொண்டு கொட்டிய பரிசு” போலத் தோன்றும். அதுவே “கண்ணுக்குப் புலப்படாத கரங்கள்”, ‘அதிர்ஷ்டம்’ போன்ற புறக்காரணிகள் பற்றிய சிந்தனையை ஏற்படுத்தும்.

இது உண்மையா, மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கையா என்று நான் யோசித்தது உண்டு. இந்த இரண்டில் எது உண்மை என்பதைவிட முக்கியமானது அத்தகைய ‘நினைத்தது நிறைவேறும்’ நெகிழ்ச்சிமிக்க தருணங்கள் நம் அனைவரது வாழ்க்கையிலும் அவ்வப்போது நிகழ்கின்றன என்பது தான். சிலர் சிறியதோ பெரியதோ கை கூடிய காரியங்களை; கை கூடிய நிமிடங்களை நினைத்து நெகிழ்ந்து கொண்டாடுகிறார்கள். சிலர் அதிலுள்ள வியப்புக்குரிய புள்ளிகளையும் கோடுகளையும் கொண்டாடாமல் கடந்து போகிறார்கள். சிலர் உண்டியலில் காசு போடுகிறார்கள்.

1989 ஆம் ஆண்டு அது. ஒடிசாவின் தென்கோடியில் ஆந்திரா எல்லையை ஒட்டியுள்ள கோராபுட் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பழங்குடி வளர்ச்சித் திட்ட அதிகாரியாக பணியாற்றி வந்தேன்.
கதபா என்ற பழங்குடி மக்கள் வசிக்கும் மாச்குண்ட், லம்ட்டாபுட், அனக்காடல்லி ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து விட்டு ஜீப்பில் கோராபுட் திரும்பிக் கொண்டு இருக்கிறேன். மழை லேசாக தூறத் தொடங்கி இருந்தது. மழை எங்கே பெய்தாலும் அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்த ஆளரவமற்ற அத்துவானக் காட்டில் தார் ரோட்டில் பெய்யும் மழை பேரழகாக இருப்பதாக பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

மரங்கள் அடர்ந்த அந்தச் சாலையில் யாரோ ஒரு வெளிநாட்டுக்காரர் நின்று கொண்டிருந்தார். கையில் குடை. அந்தப் பகுதியில் அப்போது டவுன் பஸ் எல்லாம் கிடையாது. ‘ட்ராக்ஸ்’ எனப்படும் பெரிய சைஸ் ஜீப்பில் மக்கள் பயணம் செய்வார்கள். இப்போதுள்ள ‘ஷேர்’ ஆட்டோ மாதிரி. அன்று அனகாடல்லியில் வாரச் சந்தை நாள் என்பது ஞாபகம். ஜீப்புகளில் நிறைய பேர் தொற்றிக்கொண்டு சென்றனர்.

அந்த வெளிநாட்டுக்கார் சாலையில் நிற்பதை முன் கூட்டியே கவனித்து விட்டேன் நான். எனக்கு முன் சென்ற ஒரு வண்டியை நிறுத்தும் வகையில் கையை நீட்டினார். அந்த வண்டி நிற்காமல் சென்றது. அவரைக் கடந்து செல்லும் போது அவரைக் கவனித்த நான் டிரைவரிடம் வண்டியை நிறுத்தச் சொன்னேன். “எங்கே போகவேண்டும்” என்று கேட்டேன். “கோராபுட்” என்றார். “நானும் அங்கே தான் போகிறேன், ஏறிக்கொள்ளுங்கள்” என்றேன்.

அவரைப் பார்த்தால் சுற்றுலாப் பயணிபோலத் தெரியவில்லை. அவரிடம் நான் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். அவரது பெயர் நார்மன் ஜீடே. சிகாகோ பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் என்று அவர் அறிமுகம் செய்து கொண்டார். அவர் எப்பேர்ப்பட்ட ஆய்வாளர் என்பது அந்த நிமிடத்தில் எனக்குத் தெரியாது. நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்றும் தற்போது ஒடிசாவில் பணிபுரிகிறேன் என்றதும் “நீங்கள் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியா” என்று திருப்பிக் கேட்டார். இந்திய நிர்வாக முறை பற்றி நன்கு அறிந்தவர் போலத் தெரிந்தார்.

அவர் ஒரு மொழியியல் பேராசிரியர் என்று அறிந்த உடனே எனது ஆர்வம் பன்மடங்கு அதிகரித்தது. எந்த மொழியை ஆராய்ச்சி செய்கிறார்; என்ன மாதிரியான களப்பணி என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே வந்தேன். அவரும் பொறுமையுடன் பதில் சொன்னார். ஆஸ்த்ரோ – ஆசியாட்டிக் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த முண்டா மொழிகளில் குறிப்பாக தெற்கு முண்டா மொழிகளில் அவரது சிறப்பு ஈடுபாடு என்று அறிந்தேன். நான் ஒரு தமிழ் மாணவன் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தார். திராவிட மொழிகள் பற்றியும் பேசினோம்.

தனது களப்பணிக்காக பல ஆண்டுகளாக இந்தியாவிற்கு குறிப்பாக கோராபுட் பகுதிக்கு வந்து போகிறவர் என்பதை அறிந்தேன். கோராபுட் மாவட்டத்தில் போண்டா, கதபா உள்ளிட்ட பல்வேறு ஆஸ்த்ரோ ஆசியாட்டிக் மொழிபேசும் பழங்குடிகள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கோராபுட்டை விட்டு சிகாகோ கிளம்புவதற்கு முன்பு மீண்டும் ஒருமுறை அவரை சந்தித்து உரையாடினேன். பழங்குடி மொழிகளில் ஒன்றான கோயா மொழியை நான் கற்று வருவது பற்றியும், கதபா பழங்குடிகளின் ‘கத்தர்’ (Gutor Parab) சடங்குமுறை பற்றி கள ஆய்வு செய்து வருவது பற்றியும் அவரிடம் தெரிவித்தேன்.

அதற்கு சிலநாட்களுக்கு பின்னால் தான் எனக்கு வியப்பு காத்திருந்தது. அப்போது கோராபுட் மாவட்டத்தை உள்ளடக்கிய தென் வருவாய் மண்டல ஆணையாளராக எஸ்.கே.மேனன் என்ற மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பணியாற்றி வந்தார். அவரது தலைமையகம் பெர்காம்பூர் என்ற நகரில் இருந்தது. அவரது துணைவியார் உத்கல் பல்கலைக்கழகத்தில் பண்பாட்டு மானிடவியல் தொடர்பாக உயர் படிப்பு மற்றும் ஆராய்ச்சி செய்து வந்தார்.அமெரிக்காவிற்கு திரும்பும் முன்னர் நார்மன் ஜீடே பெர்காம்பூரில் மேனனைச் சந்தித்து இருக்கிறார். அப்போது கோராபுட்டில் என்னை எதேச்சையாக சந்தித்தது பற்றி குறிப்பிட்ட ஜீடே அவரிடம் ஒரு யோசனையும் சொல்லி இருக்கிறார்.

“அந்த இளைஞர் ஐ.ஏ.எஸ் ஸில் இருக்கவேண்டியவர் இல்லை; உடனடியாக வேலையைத் தூக்கிப் போடச்சொல்லுங்கள். சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு வந்து ஆராய்ச்சி செய்யச் சொல்லுங்கள். மொழி மானிடவியலில் அவர் பிரகாசிப்பார்..” என்பது தான் அவரது கருத்தும் பரிந்துரையும். எனக்கு இப்படி எல்லாம் மொழியியல், மானிடவியல் போன்ற மறுபக்கம் இருப்பதே அதுவரை அரசாங்க வட்டாரத்தில் யாருக்குமே தெரியாது. அதனால் வியப்படைந்து போன மேனன் சார் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “நார்மன் ஜீடே உலகப் புகழ் பெற்ற பேராசிரியர். அவரே இப்படி சொல்கிறார். அப்படி என்ன தான் அவரிடம் பேசினாய்?” என்று என்னைக் கேட்டார்.

“எவ்வளவு சீக்கிரமாக என்னைச் சந்திக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக வந்து பார். இதுபற்றி மேலும் பேசலாம்” என்றார். ஒருவாரம் கழித்து புவனேஸ்வரம் செல்லும் வழியில் மேனனை பெர்காம்பூரில் சந்தித்தேன். அவரது வீட்டிற்கும் என்னைஅழைத்துச் சென்றார். மானிடவியல் ஆராய்ச்சி செய்துவந்த அவரது மனைவியிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார். “நார்மன் ஜீடேயே சொல்லிவிட்டார். இன்னும் மறுபேச்சு கிடையாது. எப்போது வேலையை விட்டு விட்டு சிகாகோ போகப்போகிறாய்” என்று கேட்டார்.

அவரது இந்த நேரடியான கேள்வி என்னை திடுக்கிடவைத்தது. “உனது இடத்தில் நான் இருந்தால் நிச்சயம் ஜீடேயின் ஆலோசனைப்படி நடப்பேன்” என்றும் அவர் சொன்னார். அவர் அவ்வளவு ஆணித்தரமாக பேசியதைக் கேட்டு வியப்படைந்தேன். குழப்பமாகவும் இருந்தது. நானே, டாக்டர் பட்டத்துக்கு ஆராய்ச்சியெல்லாம் செய்யமாட்டேன் என்று வீறாப்பு பேசிவிட்டு பத்திரிகையாளனாகி அங்கிருந்து ஐ.ஏ.எஸ் வந்து திருமணமாகி அப்போது ஒரு குழந்தைக்கு தகப்பனாகவும் இருப்பவன். கிடைத்த வேலையை திடீரென்று விடச் சொல்கிறாரே என்று தோன்றியது.

“சார், இது பற்றி நான் யோசிக்க வேண்டும். வீட்டில் எனது மனைவியிடம் கலந்தாலோசிக்க வேண்டும்” என்றேன். “ரொம்ப யோசிச்சா ஐ.ஏ.எஸ் ஸை எல்லாம் விடமுடியாது” என்றார் அவர். “இவன் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான்” என்று அனேகமாக அவரது ‘மைண்ட் வாய்ஸ்’ சொல்லி இருக்கும் என்று இப்போது நினைக்கிறேன். நார்மன் ஜீடேயை சந்தித்து உரையாடியதையும் மேனன் தொலைபேசியில் பேசியதையும் ஏற்கனவே அவ்வப்போது எனது மனைவியிடம் தெரிவித்திருந்தேன்.கோராபுட் திரும்பியதும் மேனன் கொடுத்த ஆலோசனை பற்றி விரிவாக விவாதித்தேன்.

தமிழ் இலக்கியம், இடப்பெயர் ஆய்வு, மானிடவியல் போன்ற துறைகளில் எனக்கிருந்த ஈர்ப்பை நன்கு அறிந்தவர் எனது மனைவி. அப்போது நான் கோராபுட்டில் மல்கான்கிரி பகுதியில் கோயா என்ற திராவிடப் பழங்குடிகளின் கோயா மொழியைக் கற்று வந்தேன். இதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பத்மநாப மட்காமி என்ற கோயா மொழி பேசும் பள்ளி ஆசிரியர் ஒருவர் எனது வீட்டிற்கு வருவார். நான் ஒரு பள்ளி மாணவனைப் போல அவரிடம் கோயா மொழி படிப்பது பற்றி பலமுறை எனது மனைவி குறிப்பிட்டுள்ளார். “பார்த்தால் ஆபிசர் மாதிரியே இல்லை” என்பார்.

பேராசிரியர் நார்மன் ஜீடே, மேனன் சாரிடம் சொன்னது போல ஆராய்ச்சியும் கல்விச் சூழலும் என்னை மிகவும் மகிழ்விக்கும் என்பது எனது மனைவியின் கருத்து. “அது இது என்று நிறைய யோசிக்காமல் மனதிற்கு எது பிடித்திருக்கிறதோ அதைச் செய்யுங்கள்.” என்றார். ஐ.ஏ.எஸ் போன்ற வேலையை விட்டு விட்டு மீண்டும் படிக்கப் போவதா என்று ஒரே குழப்பமாக இருந்தது. அப்போது எனது மூத்த மகள் ஓவியா ஏழெட்டு மாதக் கைக்குழந்தை. மேலும் எனது தங்கை திருமணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டு இருந்தோம். பல கோணங்களில் யோசித்துப் பார்த்துவிட்டு அந்த யோசனையைக் கைவிட்டேன். ஆனால் வாழ்க்கை எனக்கு வேறு திட்டங்களை வைத்திருந்தது. ஆனால் யாருக்கு அது தெரியும் அப்போது?

2010 ஆம் ஆண்டு. எங்கெங்கோ எப்படி எப்படியோ பயணித்து சென்னையில் மைய அரசுப்பணியில் சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில் தலைமைக் கண்காணிப்பு அதிகாரியாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன். 2009 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கொஞ்சம் ஓய்வாக இருக்க வசதியாக பணி அழுத்தம் குறைந்த இந்தப் பொறுப்பை ஏற்றிருந்தேன். அப்போது ஒருநாள் சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் நை தேனாம்பேட்டையிலுள்ள எனது அலுவலகத்திற்கு வந்து என்னைச் சந்தித்தார். சென்னையிலுள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குனர் சுந்தர் அவரை என்னிடம் அழைத்து வந்திருந்தார்.

ரோஜா முத்தையா நூலகத்தின் ஓர் அங்கமாக இயங்கும் சிந்து வெளி ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகராக செயல்பட முறைப்படி அழைப்பதற்காக அவர் என்னைச் சந்தித்தார். ஜேம்ஸ் நை தெற்காசிய நாடுகளுக்கு குறிப்பாக இந்தியாவிற்கு புதியவர் அல்ல. சிகாகோ பல்கலைக்கழகத்தில் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா தொடர்பான அனைத்து ஆவணங்களுக்கும் பொறுப்பானவர். தெற்காசிய மொழிஆவணங்களை மின்னியமாக்கி அனைவருக்குமானதுமாய் இணையத்தில் தரும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் ஓர் அங்கமாக இயங்கும் சிந்துவெளி ஆய்வு மையம் ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களால் நிறுவப்பட்டது. அதன் மதிப்புறு ஆலோசகராகவும் ஜராவதம் மகாதேவன் பொறுப்பு வகித்தார். பின்னர் தனது உடல்நலம் கருதி ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற முடிவு செய்த போது அப்பொறுப்பை ஏற்று நடத்த எனது பெயரை ஐராவதம் பரிந்துரைத்திருந்தார். அதைத் தொடர்ந்து தான் இந்தச் சந்திப்பு. நான் மிக மகிழ்வுடன் அந்த அழைப்பை ஏற்றேன்.

சிகாகோ பல்கலைக்கழகம் என்ற பெயரைக்கேட்டவுடன் நார்மன் ஜீடே மனசிற்குள் வந்து போனார். சுந்தரும் ஜிம் என்று அழைக்கப்படும் ஜேம்ஸ் நையும் எனது அறையை விட்டுச் சென்ற அடுத்த நிமிடமே எனது மேஜைக் கணினியில் நார்மன் ஜீடே என்ற பெயரை கூகுளில் தேடி அவரைப்பற்றிய அண்மைத்தகவல்களையும் படித்தேன். அவரது தோற்றம் அவ்வளவாக நினைவில் இல்லை. கூகுளில் அவரது புகைப்படத்தையும் பார்த்தேன்.

பின்னர் சிந்துவெளி ஆய்வு செய்வதற்காக விடுமுறை எடுத்து ரோஜா முத்தையா நூலகத்திற்கு தினமும் சென்று வந்த போது ஜிம் சென்னைக்கு வரும்போதெல்லாம் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அற்புதமான மனிதர் அவர். நடமாடும் ஆவணக் களஞ்சியம் என்று அவரைச் சொன்னால் அது மிகையாகாது. நமது வரலாறு மற்றும் பண்பாட்டு ஆவணங்கள் குறித்த அவரது அறிவும் ஈடுபாடும் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

2016 ஆம் ஆண்டு . சென்னையிலிருந்து மீண்டும் டில்லி சென்று (2013) இந்தியத் தேர்தல் ஆணையத்தில் இரண்டாவது முறையாக பணியாற்றிவிட்டு பதவி உயர்வில் ஒடிசா மாநில அரசுப்பணிக்கு திரும்பியிருந்தேன் (2014). ஒடிசா மாநிலம் மொழிஅடிப்படையில் தனி மாநிலமாக (1936) உருவானதன் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சில ஆவணப்பதிவுகளை தொகுத்து வெளியிட முடிவு செய்தோம்.

ஒடிசா தனியொரு மாநிலமாக ஆன பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட 80 ஆண்டு வரவு – செலவு திட்டங்களையும் (பட்ஜெட்) தொகுத்து நவீன ஒடிசாவின் சமூக பொருளாதார வளர்ச்சியின் போக்குகளை ஆவணப்படுத்தும் திட்டத்தில் நானும் எனது துறையினரும் ஈடுபட்டிருந்தோம். இதற்கான ஆசிரியர் குழுவின் தலைவராக நான் செயல்பட்டு வருகிறேன்.

அப்போது ஒடிசாவை மொழி அடிப்படையில் தனிமாநிலமாக உருவாக்கும் கோரிக்கை தொடர்பாக பீகார் மற்றும் ஒடிசா சட்டப் பேரவையில் நடந்த விவாதங்கள் மற்றும் சில ஆவணங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. இது தொடர்பாக சுந்தர் மூலமாக சிகாகோவிலுள்ள ஜிம் மை தொடர்பு கொண்டோம். ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்களை சிகாகோவிலிருந்து குறுந்தகடு வடிவில் அனுப்பி வைத்தார். அது மிகவும் உதவியாக இருந்தது. இதற்கிடையில் 2016 ஆகஸ்ட் 2 அன்று ஒடிசா அறிவுப்புலத்தில் (OKH)மாநில அரசு அதிகாரிகளுக்காக தலைமைச் செயலகத்தில் ஜிம் ஒரு சிறந்த சொற்பொழிவை ஆற்றினார். அரசு நூலகம், ஆவணக் காப்பகத்தையும் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம். நான் அமெரிக்காவிலுள்ள பெர்க்லி பல்கலைக்கழகத்தில் மூன்று வாரங்கள் பயிற்சிக்கு சென்றிருந்தேன். அப்போது சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு வரும்படி ஜிம் அழைத்தார். அதுமட்டுமன்றி பல்கலைக்கழகத்திற்கு வரும் போது தெற்காசிய மொழிப்புலத்தில் சிந்துவெளி பண்பாடு பற்றிய எனது ஆய்வுகள் குறித்து உரை நிகழ்த்தவும் அழைத்தார்.
ஆகா…! சிகாகோ பல்கலைக்கழகத்தில் உரை. இங்கு தானே படிக்கப் போவதா வேண்டாமா என்று 28 ஆண்டுகளுக்கு முன்பு குழம்பி நின்றேன். ஜிம்மின் அழைப்பின்படி சிகாகோ போகும் போது எனது மனைவியையும் உடனழைத்துச் செல்ல விரும்பினேன்.

பெர்க்லி பல்கலைக்கழகத்தில் பயிற்சி முடிந்ததும் திட்டமிட்டபடி சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து நாங்கள் இருவரும் சிகாகோ சென்றடைந்தோம். அன்று ஞாயிற்றுக்கிழமை. சிகாகோ விமான நிலையத்தில் ஜிம் அன்புடன் வரவேற்றார். சிகாகோ நகரத்தின் முக்கியமான இடங்களுக்கெல்லாம் எங்களை அழைத்துச் சென்றார். அவரும் அவரது மனைவியும் எங்களை இரவு உணவிற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது பேசிக்கொண்டிருக்கும் போது எனக்குள் பழைய நினைவுகள் எழுந்தன. 1989 ஆம் ஆண்டு கோராபுட்டில் நார்மன் ஜீடேயை சந்தித்து உரையாடியது பற்றி சொல்லிவிட்டு “இப்போது நார்மன் ஜீடே எங்கே இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா” என்று கேட்டேன்.”நார்மன் ஜீடே இதே நகரில் தான் இருக்கிறார். நாம் உணவு உண்ணும் இந்த விடுதியிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது அவரது வீடு” என்றார். நெருக்கி 90 வயதாகும் அவர் ‘கொஞ்சம் உடல்நலம் குன்றி இருக்கிறார்’ என்றார்.

“அவரை எப்படியாவது தொடர்பு கொள்ள முடியுமா?” என்று கேட்டேன். “தொலைபேசியில் பேச முடியுமா என்பது தெரியவில்லை. இருந்தாலும் உங்களின் கோராபுட் சந்திப்பையும் நீங்கள் சிகாகோவில் உரைநிகழ்த்துகிறீர்கள் என்பதையும் உங்களது வணக்கத்தையும் அவருக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கிறேன்” என்றார்.

மறுநாள் சிகாகோ பல்கலைக்கழகத்தில் விசைக் கொள்கை நிறுவனத்தின் (Energy Policy Institute at University of Chicago) இயக்குனர் மைக்கேல் கிரீன்ஸ்டோனைச் சந்தித்தேன். அதன் பிறகு அவரும் ஒடிசாவிற்கு வந்து அருமையான உரைநிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து நான் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் ஒடிசா மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் தற்போது சிகாகோ விசைக் கொள்கை நிறுவனத்தின் கிளை மையம் தொடங்கப்பட்டு இரண்டு ஆய்வாளர்கள் அங்கு ஆய்வு செய்கிறார்கள் என்பது கிளைக் கதை.

Image

மீண்டும் சிகாகோவுக்கு செல்வோம். சிகாகோ பல்கலைக்கழகத்தின் இணையற்ற நூலகத்தை நானும் எனது மனைவியும் கண்டு வியந்தோம். அதன்பிறகு தெற்கு ஆசிய மொழிகள் துறையில் சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் குறித்த புதிய சான்றுகள் பற்றி பேசினேன். பழந்தமிழ் சங்க இலக்கியம் தான் இந்தியாவின் முழுமுதல் நகர்ப்புற இலக்கியம் என்று குறிப்பிட்ட நான் கீழடியில் அண்மையில் கிடைத்துள்ள அகழ்வாய்வுத் தடயங்கள் பற்றியும் பேசினேன்.

நான் சிகாகோவில் உரை நிகழ்த்துவதை மகிழ்வுடன் புகைப்படம் எடுத்தார் எனது மனைவி.
“அங்கும் இங்கும் ஓடி கடைசியில் சிகாகோவிற்கு வந்து ஆய்வுரை நிகழ்த்திவிட்டீர்கள். மகிழ்ச்சி தானே…!”என்று மகிழ்ச்சி பொங்கக் கேட்டார் எனது மனைவி..
“மகிழ்ச்சி” என்றேன்.

வாழ்க்கை மிக ரசனையானது. தனித்தனி புள்ளிகள் போலவும் இருக்கிறது; ஒரே கோடு போலவும் இருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் நினைவுகளின் தொடர் ஓட்டமாய் இருக்கிறது வாழ்க்கை.
ஒரு கணம் புனைகதை போல் முன்நின்று கண்சிமிட்டிச் சிரித்தது நிஜம். எப்படிப் பார்த்தாலும் மொத்தத்தில் அழகாகத்தான் இருக்கிறது இந்த உலகம்.

 

சாலைகள் எங்கும் தேவதைகள்
யார் இவர்கள்?

தேவதைகள் என்றால்
சிறகுகள் என்பது
கட்டாயமா?
அவை
சிற்பிகளின் உளிகளும்
ஓவியர்களின் தூரிகைகளும்
கட்டவிழ்த்து விட்ட
கற்பனை தானே

இதோ
நம்மைப் போலவே
நடந்துவரும் தேவதைகள்
நல்ல மனிதர்களாய்
நண்பர்களாய்
வழித்துணைகளாய்

அங்கும் இங்கும்
நான்
அள்ளித்தெளித்த
ஆசைப்புள்ளிகளை
அழகுக் கோலமாக்கிய
அக்கறை..
இது யாரின் கை?
எனக்குள் நான்
பேசிய வார்த்தைகள்
எப்படி விழுந்தது
இவர்களின் செவிகளில்?

என்றோ எங்கோ
விதைத்த விதை
எங்கே இருந்தது
இதுவரை?

எப்படி முளைத்தது?
எப்போது தழைத்தது?

யாரும் யாருக்கும்
உயில்எழுதிக் கொடுக்காததை
மொத்தமாய் எனக்கு
மொய் எழுதிச் சென்றது
யார்?

அல்லது
இது
மொய் என்பது
மெய் இல்லையா?

உண்மையில் அது
மெய்வருத்தக்கூலியின்
இன்னொரு வடிவமா?

முகம் தெரியாதவர்களுக்கு
என் முகவரியைக்
கொடுத்தது யார்?

நானே தானா?

இதோ
நான் ஊன்றிய விதையின்
வேர்களில் விழுந்தன
எல்லையில்லா வானத்தின்
ஈரத்துளிகள்

எனது ஜன்னலில்
இதமான சூரியன்

மொழிபுரியாதவர்களுக்கும்
புரிகிறது
நான்
முணுமுணுக்கும் வார்த்தைகள்

விடைகள் தெரியாத
வினாக்களும்
கண்சிமிட்டிச் சிரிக்கும்
வியப்புகளும்
ஊடுபயிராய்
ஒன்றாக விளையும்
வயல்போல் இருக்கிறது
வாழ்க்கை.

ஆனாலும், அதனாலும்
அது
வசீகரமாக இருக்கிறது.

இதோ
வரிந்துகட்டி நிற்கிறது
உலகம்
என்னை வரவேற்க!

மகிழ்ச்சி.

 

நவ்ரங்பூர்

1989-ஆம் ஆண்டு, ஏப்ரல்,28-ஆம் தேதி. நள்ளிரவு சுமார் 12 மணி. யாரோ எனது வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார்கள். “இந்நேரத்தில் யார்” என்ற நினைப்புடன் எழுந்து சென்று கதவைத் திறந்தேன். கலெக்டர் வீட்டில் பணிபுரியும் ஊழியர் மாவட்ட ஆட்சித்தலைவர் என்னிடம் அவசரமாகப் பேசவிரும்புவதாகக் கூறினார். நான் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு எஸ்.பி. நந்தாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். உடனடியாக கிளம்பி அவரது வீட்டிற்கு வருமாறு கூறினார். நடந்து செல்லும் தூரத்தில் தான் கலெக்டர் பங்களா என்பதால் உடனே நான் அங்கு சென்றேன்.

அப்போது நான் ஒடிசாவின் தென்கோடியில் அமைந்த கோராபுட் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வளர்ச்சி அதிகாரியாகப் பணியாற்றி வந்தேன். இம்மாவட்டம் 1936 ஆம் ஆண்டுவரை சென்னை மாகாணத்தின் ஒருபகுதியாக இருந்தது. ஒரிய மொழி பேசப்படும் பகுதிகள் தனிமாநிலமாக உருவாக்கப்பட்ட போது ஒடிசாவுடன் இணைந்தது.

கலெக்டர் அவரது வீட்டிலுள்ள அலுவல் அறையில் காத்திருந்தார். கொஞ்சம் பரபரப்பாகவும் தோன்றினார். நவ்ரங்பூரில் பெரும் மதக்கலவரம் மூளும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் நான் அங்கு சென்று நிலைமையைக் கையாளவேண்டும் என்றும் கூறினார். நவரங்பூர் சப்-கலெக்டர் விடுமுறையில் இருப்பதாகவும் அதனால் நான் உடனடியாக அங்கு செல்லவேண்டும் என்றும் கூறினார். அவரே ஆளை அனுப்பி எனது டிரைவரை ஜீப்புடன் வரவழைத்தார்.

அப்போது கோராபுட் மாவட்டம் நான்காக பிரிக்கப்பட்டிருக்கவில்லை. நவரங்பூர் என்பது கோராபுட் மாவட்டத்தின் நான்கு உபகோட்டங்களில் ஒன்றாக இருந்தது. மற்றபடி நவரங்பூர் போலவே உபகோட்டங்களில் ஒன்றான கோராபுட் உபகோட்டத்தின் பழங்குடி வளர்ச்சித்திட்ட அதிகாரியான எனக்கும் நவரங்பூரில் நடக்கும் சட்ட ஒழுங்கு பிரச்னைக்கும் அலுவல் அடிப்படையில் தொடர்பு இல்லை. மேலும் நவரங்பூர் பகுதி எனது ஆளுகைக்கு உட்பட்டதும் இல்லை.

பொதுவாக இந்த மாதிரியான பிரச்னைகளை மாவட்டம் முழுவதற்குமான நிர்வாகத்திலுள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியர் போன்றோர் கையாளுவார்கள். ஆனால், மாவட்ட ஆட்சித்தலைவரே மாவட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் மாவட்ட மாஜிஸ்டிரேட் என்பதால் தனக்கு கீழ்பணிபுரியும் நிர்வாக அதிகாரிகளை தனது மாவட்டத்திற்குள் எந்த இடத்திற்கும் சட்ட ஒழுங்குப் பணியில் ஈடுபடுத்தும் அதிகாரம் அவருக்கு உண்டு. அதன் அடிப்படையில் தான் நவரங்பூருக்கு என்னை அனுப்பிவைத்தார்.

அதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் கோராபுட்டுக்கும், நவ்ரங்பூருக்கும் இடையே அமைந்துள்ள ஜெய்ப்பூர் என்ற ஓர் ஊரில் ஒரு சிறிய சட்ட ஒழுங்குப்பிரச்சனை நிகழ்ந்திருந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி இரு மதத்தினருக்கு இடையிலான பிரச்சனையாக வளர்ந்து பக்கத்து ஊர்களுக்கும் பரவியிருந்தது. இதன் பின்னணியில் நவ்ரங்பூரிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் முழுக் கடையடைப்புச் செய்யவும்,கண்டன ஊர்வலம் நடத்தவும் ஒரு பிரிவினர் திட்டமிட்டிருந்தனர்.

அவசர அவசரமாக நவரங்பூருக்குப் போகும் வழியில் அரசு விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த ஐ.ஏ.எஸ்.பயிற்சி நிலை அதிகாரியான துகின் காந்த பாண்டேயையும் அதே விடுதியில் தங்கியிருந்த சுனில்ராய் என்ற இந்தியக் காவல்துறைப் பயிற்சி அதிகாரியையும் என்னுடன் வரும்படி அழைத்துக்கொண்டேன். பயிற்சி பெறும் அதிகாரிகள் களப்பணிகளில் நேரடி அனுபவம் பெற இத்தகைய சம்பவங்கள் உதவும்.

நாங்கள் மூவரும் அதிகாலை மூன்று மணியளவில் நவரங்பூர் சென்றடைந்தோம். விருந்தினர் விடுதியில் உள்ளூர் அதிகாரிகள் காத்திருந்தார்கள். உடனடியாக காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளை வரவழைத்து நிலைமையை ஆய்வு செய்தேன். மத நல்லிணக்கத்துக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் யாராயிருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யுமாறு உத்தரவிட்டேன். காவல் துறை அறிக்கையின் பெயரில் சில குறிப்பிட்ட நபர்களின் பேரில் ‘வாரண்டும்’ கொடுத்தேன்.

அப்போது ஒடிசாவில் முக்கியப் பொறுப்பிலிருந்த ஓர் அமைச்சர் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர். அவரே முன்னின்று மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டு கடையடைப்பை ஏற்பாடு செய்வதாகத் தகவல் கிடைத்திருந்தது. விடிவதற்கு முன்னால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டு விட்டு, நான் நகர காவல் நிலையத்திற்குச் சென்று பிற அதிகாரிகளுடன் அங்கு அமர்ந்திருந்தேன்.

அப்போது அமைச்சரும், அவரின் ஆதரவாளர்களும் என்னை வந்து சந்தித்தனர். ஊர்வலமும், கதவடைப்பும் அமைதியாக நடைபெறுமென்றும், அதனால் நான் கடுமையான நடவடிக்கைகள் எதையும் எடுக்க வேண்டிவராது என்றும் அவர்கள் சொன்னார்கள். அமைதிக்கு குந்தகம் நேராமல் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன். முழுஅடைப்பு நிகழ்ந்தாலும் சப்-கலெக்டர் அலுவலகம் எப்போதும் போல இயங்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவரின் ஆலோசனையுடன் முடிவு செய்தோம்.

இந்நிலையில், நவ்ரங்பூரூக்கு அருகே 20 கி.மீ. தொலைவில் ஒரு சிறிய ஊரில் வன்முறை என்று கேள்விப்பட்டு அங்கே விரைந்தோம். அங்கு நான் சென்றிருந்த சமயம் நவரங்பூர் சப்-கலெக்டர் அலுவலகம் நிர்ப்பந்தத்தால் மூடப்பட்டதாக அறிந்தேன். நானும், பயிற்சி அதிகாரிகள் இருவரும் உடனடியாக நவ்ரங்பூர் திரும்பி சப்-கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்றோம். உடனடியாக அலுவலகத்தைத் திறக்குமாறு எழுத்து மூலம் நான் உத்தரவிட்டேன். அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது.

இதைக் கேள்விப்பட்டதுமே ஏற்கெனவே ஊர்வலமாகப் போய்க் கொண்டிருந்த கடையடைப்புக்காரர்கள் கோபமடைந்தார்கள். அவர்கள் ஒரு வழிபாட்டுத்தலத்தை நோக்கி ஆவேசமாகச் சென்று கொண்டிருந்தார். குறிப்பிட்ட ஒரு கடவுள் உருவத்தைச் சிதைத்து எலும்புகளாலும், செருப்புகளாலும் மாலை போட்டு “கொடும்பாவி” யாக கொண்டுசென்றார்கள். நிலைமை கை மீறிப் போய்விடக்கூடாது என்பதற்காக, குறுக்குச் சந்துகள் வழியே புகுந்து அந்த ஊர்வலத்தை காவல் நிலையத்திற்கு சற்று முன்பாக போலீஸ் படையுடன் சென்று இடைமறித்தேன். வழிபாட்டுத்தலத்தின் அருகே செல்ல அனுமதிக்க முடியாது என்றும் மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தேன். ஊர்வலத்தில் இருந்தவர்கள் கல்வீச்சு வன்முறையில் ஈடுபட்டதால் தடியடி நடத்தவேண்டிய கட்டாயம் நேர்ந்தது.

என்னுடைய நடவடிக்கைகளின் காரணமாக நான் சார்ந்த மதம் பற்றி வதந்திகள் கிளப்பப்பட்டன. நான் அப்போது கருகருவென்று தாடி வைத்திருந்தது வதந்தியாளர்களுக்கு வசதியாகப் போயிற்று. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காவல் நிலையத்தைச் சூழ்ந்துகொண்டு முற்றுகையிட்டார்கள். நானும் இரு பயிற்சி அதிகாரிகளும் காவல் நிலையத்தின் உள்ளே இருந்தோம். ஆய்வாளரின் நாற்காலியில் நான் அமர்ந்திருந்தேன். மற்ற காவல்துறை அதிகாரிகள் வெளியே இருந்தார்கள்.

வன்முறையில் ஈடுபட்ட ஒரு நபரை நாங்கள் கையோடு பிடித்துவந்து ஏற்கெனவே காவல் நிலையத்துக்குள் உட்கார வைத்திருந்தோம். உள் அறைக்கதவு அருகில் உட்கார்ந்திருந்த அந்த நபர் யாரும் எதிர்பாராத நேரத்தில் கதவுக்கு பின்னால் கிடந்த கண்ணாடி பாட்டில் ஒன்றைச் சட்டென்று எடுத்து தரையில் அடித்து உடைத்து என்னை நோக்கிப் பாய்ந்து தாக்க முயன்றார். அதற்குள் நான் சுதாரித்து விலகிக் கொண்டேன். நானும் மற்ற இருவரும் அந்த நபரை மடக்கி கட்டுக்குள் கொண்டு வந்தோம்.

இதற்கிடையே தடியடியால் கோபமடைந்த கூட்டத்தினர் காவல் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். வாசல் கதவருகே நின்ற காவலர்களுக்கும் கும்பலில் இருந்தவர்களுக்கும் தள்ளுமுள்ளு நடந்து கொண்டே இருந்தது. வெளிக்கதவு எந்த நொடியும் தகர்க்கப்படும் போலத்தோன்றியது. வன்முறையாளர்கள் உள்ளே புகுந்தால் என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற நிலைமை. பாட்டிலை வைத்து ஒருவன் தாக்க முயன்றதால் துகின் பாண்டேயும் சுனில் ராயும் அந்தக் காவல்நிலையத்தில் தாக்குதலுக்கு வசதியாக வேறு என்ன என்னவெல்லாம் இருக்கிறது என்று “தணிக்கை” செய்தார்கள். ஆய்வாளரின் மேஜையில் இருந்த கண்ணாடிப் பலகையை அவர்கள் எடுத்து எங்கே ஒளிப்பது என்று தெரியாமல் கடைசியில் ஒரு பீரோவின் பின்னால் மறைத்துவைத்த காட்சியை இன்றும் மறக்க முடியவில்லை.

இதற்கிடையே, காவல்துறை அதிகாரி ஒருவர் என்னிடம் வந்து நிலைமை கட்டுமீறிப் போவதாகவும் “நான் என்ன மதம்” என்பது பற்றி வதந்தி நிலவுவதாகவும்; அவர்கள் என்ன சொன்னாலும் நம்ப மறுக்கிறார்கள் என்றும் நான் வெளியே வந்து ஒலிபெருக்கியில் ‘ உண்மையில் “என் மதம் இதுதான்” என்று நேரடியாக அறிவிக்க வேண்டுமென்று அந்தக் கூட்டத்தினர் நிபந்தனை விதிப்பதாகவும் சொன்னார்.

ஆனால், அப்படிப்பட்ட யோசனையை என்னால் நினைத்துக் கூடப் பார்க்கமுடியவில்லை. மதத்தை வீட்டில் வைத்துவிட்டே வேலைக்கு போகிறவன் நான். எனவே அப்படி எல்லாம் அறிவித்து முற்றுகையை, அல்லது என்னை தாக்கும் முயற்சியைத் தவிர்ப்பது என்பது எனது பணிக்கு களங்கமாகிவிடும் என்று சொல்லி உறுதியாக மறுத்துவிட்டேன். இதற்கிடையே பொதுமக்கள் பலர் காவல்நிலையத்திற்கு தொலைபேசி செய்து நகரில் ஆங்காங்கே வன்முறை நடப்பதாகவும் அச்சம் நிலவுவதாகவும் கூறினர். பள்ளிக்குச் சென்றிருக்கும் தனது மகள் பத்திரமாக வீடு திரும்புவது பற்றி கவலையுடன் கலங்கியபடி பேசினார் ஒரு பெண். ஆனாலும் அந்தக் கூட்டத்தினர் காவல் நிலையத்தின் மீது கல்லெறிவதையும் காவல் நிலையத்திற்குள் நுழைய முயல்வதையும் பார்த்தபோது கலக்கமாகத் தான் இருந்தது. மனதிற்குள் ஏதேதோ எண்ணங்கள் வந்து போயின.

காவல்நிலையத்திற்குள் உள்ள கழிப்பறைக்குள் சென்று கதவைச் சார்த்தினேன். தலைப் பிரசவத்திற்குச் சென்றிருந்த எனது மனைவி இன்னும் திருவாரூரில் தான் இருந்தார். அவரும் எனது மகள் ஓவியாவும் எனது எண்ணத்தை முழுவதுமாக ஆக்கிரமித்தார்கள். ஏதேதோ தோன்றியது. ஒரு கணம் ஓசையின்றி அழுதேன். பின் கண்ணீரைத் துடைத்துவிட்டு தீர்மானமாக வெளியே வந்தேன்.

கூடுதல் ஆயுதப்படை கேட்டு ஏற்கனவே வயர்லஸ் அனுப்பியிருந்தேன். என்னுடன் தொடர்பிலிருந்த உளவுத்துறை அதிகாரியிடம் கூடுதல் படை எப்போது வந்து சேரும் என்று கேட்டேன். நவரங்பூரை நெருங்குவதாகத் தெரிவித்தார். முற்றுகை தொடங்கி இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது.

கூடுதல் படை நகருக்குள் வந்த அடுத்த நொடியே தடையுத்தரவு பிறப்பித்தேன். ஒலிபெருக்கி பொருத்திய வாகனத்தில் தடையுத்தரவை அறிவித்தது காவல் படை. டி.ஐ.ஜியும் நானும் ஆயுதப்படைக்குத் தலைமையாக முன் சென்றோம். கல்வீசித்தாக்கியவர்கள் மீது தெருத்தெருவாக தடியடி நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தோம். நகரில் தடையுத்தரவைப் பிறப்பித்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தோம். அந்த நகரத்தின் முக்கிய தெருக்கள் அனைத்திற்கும் காவல்படையினருடன் சென்று அமைதி நிலைக்கு கொண்டுவந்தோம். இதில் சில காவல் துறையினர் உள்பட பலர் காயமடைந்தனர்.

ஆனால், அதைத்தவிர வேறு வழியே இல்லை. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து அமைச்சர் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அன்றைய முதல்வருக்கு வயர்லெஸ் மூலம் செய்தியனுப்பியிருப்பதாகத் தெரிய வந்தது. இதனால் அடுத்த நாள் தென்மண்டல வருவாய் ஆணையாளர் எஸ்.கே. மேனன் ஐ.ஏ.எஸ் நேரில் வந்து விசாரணை நடத்தினார். அதற்கு அடுத்த நாள் தலைமைச் செயலரே நேரில் ஹெலிகாப்டரில் வந்து விசாரணை மேற்கொண்டார். இப்படி விசாரணை மேல் விசாரணை நடந்தது.

“வன்முறையான ஓர் ஊர்வலத்தில் ஓர் அமைச்சரும் இருந்தார் என்பதற்காக நான் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்க முடியாது” என்று நான் மீண்டும் மீண்டும் தெரிவித்தேன். பின் மற்றொரு முதுநிலை தலைமைச் செயலர் அந்தஸ்தில் இருந்த அதிகாரியைக் கொண்டு மற்றொரு விசாரணை நடத்தப்பட்டது.

என்னை உடனே பணியிடை நீக்கம் செய்யவேண்டுமெனவும், இடமாற்றம் செய்ய வேண்டுமெனவும் அரசியல் ரீதியாக சிலர் கோரினார்கள். “ நான் என் கடமையைத்தான் செய்தேன்.இதேபோன்ற நிலை எதிர்காலத்தில் ஏற்பட்டால், நான் அப்போதும் இதையே மீண்டும் செய்வேன் “ என்று உறுதியுடன் சொன்னேன். உண்மையில் நடந்தது என்ன என்பதை விசாரித்து அறிந்திருந்ததால் என்னை இடமாற்றம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. அதற்கு பின்னரும் ஓன்றரை ஆண்டுகள் கோராபுட்டில் பணியாற்றினேன்.
நானும் டி.ஐ.ஜி.யும் தனிப்பட்ட விரோதத்தால் தடியடி நடத்தியதாக சிலர் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கில் நானே நேரில் வாதாடுவேன் என்று தெரிவித்தேன். நல்லவேளையாக அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனாலும் அந்த நிகழ்வுகள், என் மீது நடந்த தாக்குதல் முயற்சி, பலர் காயமடைந்த தடியடி, விசாரணைகள் என்று யாவும் என் மனதில் ஆழமான வடுக்களாகி நிலைத்து விட்டன. ஒவ்வொரு முறை அந்த ஊரின் பெயரை உச்சரிக்கும் போதும் அந்த நிகழ்வுகள் எனக்குள் வந்து போகும். இப்படி நவ்ரங்பூர் என்னைபொறுத்தவரை மறக்க முடியாத ஓர் இடமாகவும், ஏப்ரல் 29-ஆம் நாள் ஒரு மறக்கமுடியாத நாளாகவும் எனக்குள் பதிவாகி இருந்தது. வன்முறையாளர்களின் கல்வீச்சுகளுக்கும் முற்றுகைக்கும் பயந்து என் மதம் இதுதானென்று அறிவித்து நிலைமையைச் சமாளித்திருந்தால் பிற்பாடு என்னை நானே மதித்திருக்க மாட்டேன். இந்த நிகழ்வை ஆட்சிப்பணி அனுபவங்களில், இன்னும் சொல்லப்போனால் பெருமிதங்களுள் ஒன்றாக எனது மனதில் பதிவு செய்து வைத்திருந்தேன்.

என்னுடன் இருந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பயிற்சி அதிகாரிகளும் இந்த நிகழ்வை மறக்கமுடியாத ஓர் அனுபவமாக மனதில் குறிப்பெடுத்துக்கொண்டார்கள் என்றே நினைக்கிறேன். அந்த ஆண்டு மசூரியில் உள்ள ஐ.ஏ.எஸ் அகாடமியில் துகின் பாண்டேயும் ஹைதராபாத்திலுள்ள ஐ.பி.எஸ் அகாடமியில் சுனில் ராயும் தங்களது களப்பயிற்சியின் அனுபவப் பகிர்வாக இந்த நிகழ்வைப் பற்றி பேசியதாகச் சொன்னார்கள். இப்போதும் கூட நாங்கள் மூவரும் சந்தித்துக்கொள்ளும் போது இடையிடையே இந்த நவரங்பூர் சம்பவத்தை நினைவுகூர்வோம். ஏனோ தெரியவில்லை; அந்த நிகழ்விற்குப் பிறகு நான் அங்கு செல்லும் வாய்ப்பு நேர்ந்தது இல்லை; ஒருவேளை நானே தவிர்த்தேனோ என்னவோ தெரியவில்லை.

2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். மீண்டும் நவரங்பூரில் நான். இந்தப் புதிய பொறுப்பை நான் எதிர்பார்க்கவே இல்லை. இதற்குப் பின்னணி இது தான். டில்லியில் இருந்து வெளிவரும் ஒரு தேசிய நாளிதழில் 2016 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ஒரு நீண்ட கட்டுரை முதற் பக்கத்தில் வெளியானது. நவ்ரங்பூரை இந்தியாவின் “பூஜ்ஜியம் மாவட்டம்” (Zero District) என்று அடையாளப்படுத்தி அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தார்கள். அந்த மாவட்டத்தின் பின்தங்கிய நிலையைப்பற்றி ஒராண்டு காலம் தொடர்ந்து எழுதப்போவதாகவும் அதில் அறிவித்திருந்தார்கள்.

ஒடிசா, சத்தீஷ்கர், ஜார்கண்ட் போன்ற கிழக்கிந்திய மாநிலங்களில் வனப்பகுதிகள் நிறைந்த, பழங்குடிகள் வாழ்கின்ற மாவட்டங்கள் பல உள்ளன. இவற்றில் பல மாவட்டங்கள் மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் வளர்ச்சியில் பின் தங்கியவையே. என்றாலும், இம்மாவட்டத்தை ”ஜீரோ மாவட்டம்” என்று முத்திரை குத்துவது ஏன் என்ற கேள்வி அரசு வட்டாரத்தில் எழுந்தது. அத்தகைய முத்திரை அம்மாவட்ட மக்களின் கூட்டு உளவியலை, சுய மரியாதையைப் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. “எனது சொந்த மாவட்டம் இந்தியாவின் கடைசி மாவட்டம்” என்று சொல்லிக்கொள்ள யார்தான் ஆசைப்படுவார்கள்?

நவரங்பூர் உண்மையிலேயே ஜீரோ மாவட்டமா இல்லையா என்ற விவாதத்தில் ஈடுபடுவதைவிட, இதையே ஒரு வாய்ப்பாக, சவாலாக எடுத்துக்கொண்டு அந்த மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்களை முனைப்புடன் தீவிரமாக செயல்படுத்துவதே சரியாக இருக்கும் என அரசு முடிவு செய்தது. மாநில முதல்வர் அளவில் இந்த விஷயம் ஆலோசிக்கப்பட்டது. இதனடிப்படையில் நவரங்பூர் மாவட்ட வளர்ச்சிப்பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்பார்வை செய்து நிலைமையைச் சீர்படுத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தது அரசு.

நவ்ரங்பூர் மாவட்டத்துடன் நின்று விடாமல், மல்கான்கிரி, கந்தமால், நுவாபடா ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்த்து, மொத்தம் நான்கு பின்தங்கிய மாவட்டங்களுக்கு கூடுதல் தலைமைச் செயலர் நிலையில் நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக மாநில அரசு நியமித்தது..

நவ்ரங்பூரூக்கு நான் மீண்டும் செல்லப்போகிறேன் என்ற உணர்வே எனக்குள் 28 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த மறக்கமுடியாத நினைவலைகளை மீண்டும் எழுப்பியது. என் மனைவி கூட என்னைக்கேட்டார்: “அங்கு போகத்தான் வேண்டுமா?” என்று. ஒடிசா மாநிலத்தலைநகர் புவனேஸ்வரிலிருந்து தென்மேற்காக 612 கி.மீ. தூரத்தில் உள்ளது நவ்ரங்பூர்.

அங்கே நக்சலைட் பிரச்னை அந்த அளவிற்கு இல்லையென்றாலும், நக்சல் பிரச்னையுள்ள சில பகுதிகளைக் கடந்து தான் செல்லவேண்டும். இதைக் கருத்தில் கொண்டும் தூரம் வெகுதூரம் என்பதாலும் ஹெலிகாப்டரில் சென்று வருமாறு சொன்னார்கள். அதற்கான அரசு உத்தரவும் வெளியானது. இருந்தாலும், “ஜீரோ மாவட்டம்” என்று சொல்லப்படுகிற இடத்திற்கு ஹெலிகாப்டரில் சென்று இறங்குவது எதிர்மறையான கவனத்தை ஈர்க்கும் என்று நினைத்தேன். அதனால் விசாகப்பட்டினம் வரை பயணிகள் விமானத்தில் சென்று அங்கிருந்து சுமார் 275 கி.மீ. தொலைவிலுள்ள நவ்ரங்பூருக்குக் காரில் சென்றேன்.

என்னுடன் அப்போது வேளாண்மைத் துறை ஆணையாளராக இருந்த பிரமோத் மெஹ்ரதா ஐ.ஏ.எஸ்.சும், ரகுபிரசாத் என்ற பழங்குடி வளர்ச்சி அலுவலராக இருந்த இந்திய வனத்துறை அதிகாரியும் வந்தனர். இவர்களில் பிரமோத் மெஹ்ரதா 18 ஆண்டுகளுக்கு முன்பு நான் மயூர்பன்ஜ் மாவட்டத்தில் கலெக்டராக இருந்தபோது அங்கே பயிற்சி நிலை அதிகாரியாக என்னிடம் பயிற்சி பெற்றவர்.

நவரங்பூர் மாவட்டத்தின் முக்கியமான பிரச்னைகளை கலெக்டர் மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் கலந்தாலோசித்தேன். பொது மக்கள், ஊடகப் பிரதிதிகளிமும் கருத்துக் கேட்டேன். சில கிராமங்களுக்கும் சென்று பழங்குடிகள், விவசாயிகளை சந்தித்துப் பேசினேன். அப்போது உள்ளூர் பத்திரிகையாளர் “ஜீரோ மாவட்டம் ஹீரோ மாவட்டம்” ஆகுமா என்று ‘ரைமிங்’ காக கேட்டார். ’எங்களால் முடிந்தவரை அதற்காக கடுமையாக உழைப்போம் ” என்று சொன்னேன்.

அந்த மாவட்டத்தில் உடனடியாகச் செய்யவேண்டிய பணிகள் பற்றியும் அங்கு கையாளவேண்டிய உத்திகள் பற்றியும் முதல்வர் சீராய்வு செய்தார். அந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்குச் செய்யவேண்டிய அனைத்தையும் துரித நடவடிக்கையாக மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டார். முதலில் வளர்ச்சிப் பணிகளில் உள்ள முட்டுக்கட்டைகளைப் பட்டியலிட்டோம். மாவட்ட ஆட்சித்தலைவருடன் அணிசேர்ந்து பணியாற்ற முக்கியப் பொறுப்புகளில் திறமையான அதிகாரிகளை நியமித்தோம். காலி இடங்களை நிரப்பினோம்.

மின்னிணைப்பு கொடுக்காமல் காத்திருப்பில் இருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆழ்துளைப் பாசனக்கிணறுகளுக்கு ஆறே மாதங்களுக்குள் மின்னிணைப்பு வழங்கினோம். மக்காச்சோளம் அதிகம் விளையும் மாவட்டம் என்பதால் மின்சந்தை மூலமாக மக்காச்சோளத்தை ஏலத்தில் விற்கும் புதிய சந்தை முறையை அறிமுகம் செய்தோம். தோட்டப்பயிர்கள், மீன்வள மேம்பாடு ஆகிய துறைகள் முடுக்கிவிடப்பட்டன. மிகமுக்கியமாக காலியாக கிடந்த மருத்துவத்துறை பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

மிக உள்ளடங்கிய கிராமப்பகுதிகளில் பணிபுரிய அதிக ஊதியம், ஊக்கத்தொகை மற்றும் வசதிகளை அளித்து தற்காலிக டாக்டர்களை நியமிக்க மாவட்ட ஆட்சித்தலைவருக்கு முழு உரிமை அளித்து அதற்காக ஒரு கோடி ரூபாயை கையிருப்புத் தொகையாக வழங்கினோம். இது போன்ற நடவடிக்கைகளால் இம்மாவட்டத்தில் சுகாதார சேவைகள் மேம்பட்டன.

மாவட்ட அளவிலான இலவச புற்றுநோய் சிகிச்சை மையமும் முதன்முதலாக நவரங்பூரில் தொடங்கியது. 21,000 பேருக்கு வீடுகள், 11,000 பேருக்கு இலவச வீட்டுமனை, 4127 பேருக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டாக்கள், 213 சிற்றூர்களுக்கு புதிய மின் இணைப்பு; டிஜிட்டல் மருத்துவமனைகள் என்ற புதிய திட்டம் முதன்முதலாக அறிமுகம் என்று நவரங்பூர் மாவட்டம் வளர்ச்சிப்பாதையில் விரைந்து நடைபோடுகிறது. புதுமையான சுகாதார விழிப்புணர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்காகவும், பச்சிளங்குழந்தைகள் இறப்பு விகிதம் வெகுவாகக் குறையும் வகையில் செயல்படுத்தியதற்காகவும் சென்ற ஆண்டு (2017) இரண்டு விருதுகளை முதல்வரிடம் இந்த மாவட்டம் பெற்றது.

Image

நவரங்பூரில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை ஊடகங்களும் பாராட்டி வருகின்றன. எந்த தேசிய நாளிதழ் நவரங்கபூரை “பூஜ்ய மாவட்டம்” என்று சொன்னதோ அதே செய்தித்தாள் “மாறிவரும் நவரங்பூரின் புதிய முகம்” பற்றி செய்திகள் வெளியிட்டது.2017 டிசம்பர் மாதம். மைய அரசின் திட்ட ஆணையம் கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள “நீத்தி ஆயோக்” என்ற அமைப்பு தனது மதிப்பீட்டின் அடிப்படையிலும் மற்ற அமைச்சரகங்களின் கருத்தையும் கணக்கில் கொண்டு அண்மையில் இந்தியாவில் மிகவும் “கவனிக்கப்படவேண்டிய” மிகப் பின் தங்கிய மாவட்டங்களின் பட்டியலொன்றை வெளியிட்டது. இதில் 120 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அந்தப் பட்டியலில் நவரங்பூர் மாவட்டத்தின் பெயர் இல்லை!!!

நவ்ரங்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ரஸ்மிதா பண்டா என்னைச் சந்தித்தபோது இந்த விஷயத்தைச் சொல்லி அந்தப் பட்டியலின் நகல் ஒன்றைக் கொடுத்தேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் அவர். மிகத்திறமையான அதிகாரி அவர். பாராட்டிற்குரியவர். அதன்பின்னர் மாநில அரசின் பரிந்துரையின் பேரில்தான் முனைப்பு மாவட்டங்களின் பட்டியலில் நவ்ரங்பூரும் சேர்க்கப்பட்டது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ‘ஜீரோ மாவட்டம்’ என்று பட்டம் சூட்டப்பட்ட அந்த மாவட்டம் மிக முனைப்பான துரித நடவடிக்கைகளால் எப்படி வளர்ச்சிப்பாதையில் முன்னேறி வருகிறது என்பதை தற்போது பயிற்சி பெறும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு விடய ஆய்வாக (case study) விளக்கி உரைநிகழ்த்துவதற்காக மசூரி அகாடமி தன்னை அழைத்திருப்பதாக ரஸ்மிதா தெரிவித்தார். வாழ்த்தினேன். 2017 டிசம்பர் 15 ஆம் நாள் மசூரியில் நவரங்பூர் வளர்ச்சித் திட்டம் பற்றி அவர் உரை நிகழ்த்தினார்.

Image

2017 டிசம்பர் 18 ஆம் நாள். பச்சிளம்குழந்தைகளின் இறப்புவிகிதத்தைக் குறைப்பதில் முதலிடம் பெற்றதற்கான முதல் பரிசான ரூபாய் 60 இலட்சம் நவரங்பூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. அம்மாவட்டத்தின் சார்பாக அப்பரிசை மாநில முதல்வரிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ரஸ்மிதா பெற்றுக்கொண்டார். அந்த மேடையில் நானும் அமர்ந்திருந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.இது என்ன வகையான தற்செயல் நிகழ்வு என்பது எனக்குப் புரியவில்லை. 28 ஆண்டு இடைவெளியில் இந்த ஊரில் சட்டம் ஒழுங்கு, வளர்ச்சிப்பணி என்ற இரண்டு வெவ்வேறு சூழல்களில் நான் ஈடுபட்டு, இன்னும் சரியாகச் சொல்வதெனில் ஈடுபடுத்தப்பட்டு, அந்த இரு நிகழ்வுகளுமே மசூரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் இளம் அதிகாரிகளால் படிப்பினையாக விவாதிக்கப்பட்டுள்ளன என்பது வியப்பாக இருக்கிறது.

எதேச்சையான நிகழ்வுகள் என்றாலும் எனக்குள் இனம் புரியாத மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும். நவரங்பூர் எனது நினவு வடுக்களுக்கு மருந்து போடுகிறதா அல்லது அதன் காயத்திற்கு நான் மருந்து போடுகிறேனா? தெளிவாகப் புரியவில்லை. அதனால் என்ன?
எதுவாயினும் இந்த ‘இரண்டாம் சுற்று’ ஏற்புடையதே!

Image

நிழற்குடைகளால்
நிரம்பியவை அல்ல
நெடுஞ்சாலைகள்

அடுத்த வளைவில்
காத்திருக்கலாம்
ஓர் அடையாளம் தெரியாத
அதிர்ச்சி

பளிங்குபோல் பாதை
கனவில் வரலாம்.
நிஜத்தில்
வேகத்தடைகள்
வீசி எறியலாம்.

வெளியில் என்று
வீட்டிற்குள் என்று
வித்தியாசம் பார்ப்பதில்லை
விபத்து

இருந்தாலும்
வெட்டவெளியில்தான்
கிடைக்கிறது
விதம்விதமாய்
பட்டறிவு.

காயங்களும்
வடுக்களும்
வன்மம் வளர்க்க அல்ல.
வந்தவழியை
நினைவுறுத்த.

இன்று புதிதாய்ப்
பிறந்தோம் எனினும்
தூங்கி விழித்தால்தான்
இருப்பை உணர்கிறோம்.

ஆதலால்
சூரிய வெளிச்சத்தில்
நனை.

கடைசியில்
அனுபவம்தான்
சொத்து என்று
நினை.

பூமியில்
கால்பதித்து
கம்பீரமாய் நிமிர்ந்து
வான்நோக்கி
அண்ணாந்து
உயிர்வளியை
உள்வாங்கி
உனக்குள் சொல்

“இன்றும் இருக்கிறேன்.
இது எனது நாள்.”

நாளை கூட
‘மற்றுமொரு நாளே’

நாளை குறித்த ஞாபகம்

நாடுகளும் நகரங்களும் கூடப் பிறக்கின்றன ; வளர்கின்றன; தேய்கின்றன; இறக்கின்றன. சில நேரங்களில் அவை மீண்டெழுந்து நடக்கின்றன, கடக்கின்றன. ‘முடிந்து போனது’ என்று நினைத்த முதல்சுற்றின் சாம்பலில் இருந்து, முட்டி மோதி, மூக்கைத் துருத்திச் சிலிர்க்கிறது இரண்டாம் சுற்றின் சிறகு.சிந்துவெளியின் “இருபால் பெயரிய உருகெழு மூதூர்”களின் சிதிலமடைந்த செங்கல் சுவர்கள் செவ்விதழ் விரித்துச் சிரித்தன, நான்காயிரமாண்டு மவுனம் கலைத்து.

இதோ, கீழடியில் அகழ்ந்தறிந்த ஆறாம் அடுக்கின் இடுக்கில் புதைந்து மவுனத்தில் உறைந்த ஒரு மண்பானை உயிர்த்தெழுந்து இணைய வீதிகளில் உலாப்போகிறது உலகம் முழுவதும். இது கீழடியின் ‘இரண்டாம் சுற்றா’ ? ‘முதல் சுற்றில்’ முத்தெடுத்த கொற்கை துறைமுகத்தின் கப்பல் துறை எங்கே ? அதன் ‘இரண்டாம் சுற்று’ வரலாம் ; வராமலும் போகலாம். வரலாறு என்பது, வரல்+ஆறு. ‘ஆறு’ என்பது ‘வழி’. அதனால் வரலாறு என்பது ‘வந்த வழி”.

நடந்து போகும் நாம், போன பாதைகளிலும் போகிறோம் ; புதிய பாதைகளையும் போடுகிறோம். இதற்கிடையே, புதைந்திருக்கும் பாதைகள் புலனாகும் அதிசயங்களும் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும், தென்கொரியாவிற்கும் சென்ற போதெல்லாம் தவறாமல் அந்நாடுகளின் இரண்டாம் சுற்றுகள் பற்றிய நினைப்பு எனக்குள் முளைக்கும். இது சிங்கப்பூரின் கதை.

1965 ஆம் ஆண்டு. மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் தனியாகப் பிரிந்தபோது, இல்லை, பிறந்த போது சிங்கப்பூரின் ‘ஜாதகத்தை’கையில் வாங்கிக் கணித்தவர்கள் இந்தச் “சவலைக்குழந்தை” பிழைப்பதே கஷ்டமென்றுதான் உதட்டைப் பிதுக்கினார்கள். ‘இரங்கல் செய்தி’யை முன்கூட்டியே எழுதி வைத்துக் கொண்டு எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள், முன்னேறிய உலகின் முன்னணிப் பண்டிதர்கள்.

ஆனால், சிங்கப்பூர் பத்தோடு பதினொன்றான இன்னொரு எண்ணிக்கை இல்லை. அதன் கையேட்டில், அதன் கடந்த காலம் ஒற்றைவரியில் குறித்து வைக்கப்படுகிறது. எதிர்காலம் பக்கம் பக்கமாய் ஞாபகத்தில் வைக்கப்படுகிறது. நிகழ்காலம் நிற்காமல் விரைகிறது. அது வெறும் நகரம் அல்ல. ‘நாளை’ குறித்த ஞாபகங்களுடன் நகரும் நகரம். ‘நேற்று குறித்த நினைவு’; ‘கடந்த காலம் பற்றிய ஞாபகம்’என்றெல்லாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். முன்பிறவி பற்றிய நினைவுகள் என்று கூட எப்போதாவது யாராவது எழுதுகிறார்கள். ஆனால், ‘நாளை குறித்த ஞாபகம்’ என்று ஒன்று இருக்கிறதா ? “இருக்கிறது” என்று தான் அடித்துச் சொல்லுகிறார் பேராசிரியர் வெண்டல் பெல் (Bell, Wendell (2011). Memories of the Future. Transaction Publishers. ISBN 978-1-4128-4262-4.)

இருவேறு சாலைகள் வெவ்வேறு திசைகளில் கிளைபிரியும் புள்ளியில், எந்தச் சாலையில் போவது என்பதை முடிவெடுக்கும் அந்த நொடிக்குள் நொடியாய் நுழைந்திருக்கும் நுண்பொழுதில் தான் எதிர்காலத்தின் திசை தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், எந்தப்பாதையில் போவது என்பதைத் தீர்மானம் செய்வதில் ஒருவரின் ‘நாளை குறித்த ஞாபகம்’ தன் கண்ணுக்குத் தெரியாத மாயவிரல்களால் அவரை வழிகாட்டி அழைத்துச் செல்கிறது. இது எல்லோருக்கும் புலப்படுவதில்லை. கடந்த கால நினைவுகள் எல்லோருக்கும் இருக்கின்றன. ஆனால், ‘நாளை குறித்த ஞாபகம்’ என்று ஒன்று இருப்பது சிலருக்குப் புலனாகிறது; பலருக்குப் புலனாவதேயில்லை. இது நகர்களுக்கும் நாடுகளுக்கும் கூடப் பொருந்தும். சிங்கப்பூர் அப்படி ஒரு நகரம். அதன் நாட்குறிப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் ‘நாளை குறித்த ஞாபகம்.’

2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் நாள் சிங்கப்பூரின் பொருளாதார நிலை பற்றி விவாதிக்கக் கூடியிருக்கிறது அந்த மாநாடு. சிங்கப்பூரின் பொருளாதார, நிதிக்கொள்கைகளை வடிவமைக்கும், “மானிட்டரி அதாரிட்டி ஆஃப் சிங்கப்பூர்” (MAS -மாஸ்) என்னும் முக்கியமான நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரான ரவிமேனன் அந்த மாநாட்டில் உரை நிகழ்த்துகிறார்; தலைப்பு :“சிங்கப்பூரின் பொருளாதார வரலாறு : 2015 முதல் 2065 வரை”.

இதில், 2065 என்பது, அச்சுப்பிழையல்ல. திட்டமிட்ட செயல். எதிர்காலத்திற்கான பொருளாதார திட்டம் என்று தலைப்பு வைக்காமல் அதை ‘வரலாறு’ என்று அழைத்தது பொருட்பிழை அல்ல, தன்னம்பிக்கை. அது சிங்கப்பூரின் ‘நாளை குறித்த ஞாபகம்.’ இந்த நிறுவனத்தின் தற்போதைய தலைவர் தர்மன் ஷண்முகரத்தினம் என்ற தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

1965-இல் தனிநாடான சிங்கப்பூர் 2065-இல் தனது நூற்றாண்டு விழாவைக்கொண்டாடும். அந்த ஆண்டு உலக ஆசிய பொருளாதார மதிப்பாய்வு நிகழ்வாய்வில் (Global Asian Economic Review- G.A.E.R) (இப்படி ஒர் அமைப்பே இப்போது இல்லை. ஆனால், அப்படி யொன்று இடையில் உருவாகிவிடும் என்பது ரவிமேனனின் ஞாபகம்.) அந்த மதிப்பாய்வில் ‘தான்’ உரை நிகழ்த்துவதாக ரவி மேனன் கற்பனை செய்து கொள்கிறார். அந்த உரையைத்தான் 2015-இல் நிகழ்த்துகிறார் ; அதாவது 50 ஆண்டுகள் முன்கூட்டி ! அதனால் என்ன? சிங்கப்பூர் வந்த வழியைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம் :

1965-இல், சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளவில்லை)நபர் ஒருவருக்கு 500 அமெரிக்க டாலர்; அப்போதைய நிலையில் அது மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளோடு ஒப்பிடத்தக்கது.

1990 -இல், இது 26 மடங்கு அதிகமாகி, நபர் ஒருவருக்கு 13,000 அமெரிக்க டாலராகிறது. அப்போது தென்கொரியா, இஸ்ரேல், போர்ச்சுகல் போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சிங்கப்பூர் முன்னேறியது.

2015-இல், இதுவே நபர் ஒருவருக்கு 56,000 டாலராகிறது. அதாவது, அமெரிக்காவின், ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சியை சிங்கப்பூர் தொட்டுவிட்டது. இனி வருவது, சிங்கப்பூரின் நாளை குறித்த ஞாபகம்: ரவிமேனன், சிங்கப்பூரின் சார்பில் தொடர்ந்து பேசுகிறார்:

2040-இல் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, நபர் ஒருவருக்கு 96,000 டாலராக உயர்கிறது. அப்போது உலகின் முதல் 10 நாடுகளின் தரவரிசையில் சிங்கப்பூர் இடம்பெறுகிறது. அப்போது சிங்கப்பூரின் பொருளாதார மேம்பாட்டுக்கான சுய அளவுகோல் ‘நாடு’ என்ற நிலையிலிருந்து ‘நகரம்’ என்ற நிலைக்கு மாறுகிறது. அதாவது சிங்கப்பூர் என்ற நாட்டின் போட்டி, உலகின் சிறந்த நகரங்களோடுதான்; நாடுகளோடு இல்லை.

Image

2065-ஆம் ஆண்டுக்கான தனது உரையை 2015-இல் வாசிக்கும் ரவிமேனன் தொடர்ந்து பேசுகிறார் :
“இன்று, 2065-இல் நமது மொத்த தேசிய உற்பத்தி, நபர் ஒருவருக்கு 1,20,000 அமெரிக்க டாலர். உலகின் மிகப் பலமான நகரங்களின் பட்டியலில் 5-ஆவது இடத்தில் நாம் இருக்கிறோம்.” நாளை குறித்த ஞாபகத்தை புள்ளிவிவரங்களோடும், தன்னம்பிக்கையோடும் ஏதோ கண்முன் நடக்கும் கிரிக்கெட் போட்டியை நேர்முக வர்ணனை செய்வது போல் அவர் பேசிக்கொண்டிருக்கிறார்.

மீண்டும் சிங்கப்பூரின் ‘பிரசவ வார்டுக்கு’ வருவோம். 1965-இல் மலேசியக் கூட்டரசிலிருந்து சிங்கப்பூர் வெளியேறியபோது அது எந்தவித இயற்கை வளமும் இல்லாத, எந்தத் தொழிற்சாலைகளும் இல்லாத 580 சதுர கிலோ மீட்டர் பரப்பளவே கொண்ட ஒரு சிறு தீவுதான்.

இதைச் சரியாகப் புரிந்து கொள்ள சில ஒப்பீடுகள் உதவியாக இருக்கும்: ஒடிசாவிலுள்ள சிலிக்கா ஏரி 1165 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. அதாவது, இந்த ஓர் ஏரியின் பாதியளவுதான் சிங்கப்பூர்! சென்னைக்கு அருகிலுள்ள பழவேற்காடு ஏரியின் பரப்பளவு 450 ச.கி.மீ. அதாவது பழவேற்காடு ஏரியைவிட சிங்கப்பூர் இன்னும் கால்மடங்கு பெரிதானது. தற்போது, சென்னைப்பெரு நகர வளர்ச்சிக்கழகத்தின் ( சி.எம்.டி.ஏ.) ஆளுகைக்கு உட்பட்ட பகுதி சிங்கப்பூரைவிட இரண்டு மடங்கு அதிகம்.

1965-இல் சிங்கப்பூரின் உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் கூட வெளியே இருந்துதான் வந்தது. வேலை இல்லாத் திண்டாட்ட அளவு 9 விழுக்காடு. 1968-இல் பிரிட்டிஷ் ராணுவம் திரும்பப் பெறப்பட்டது. ராணுவத்தோடு தொடர்புடைய வேலைகளைச் செய்து வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள். இதனால், சிங்கப்பூரின் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு மடங்கு முடங்கும் நிலைக்கு வந்தது.

1960-களில் சிங்கப்பூரில் முதன்முதலில் தொழிற்சாலைகள் தொடங்கப் பட்ட போது, தீப்பெட்டி, மீன்பிடி வலைகள், கொசுவர்த்தி போன்றவை மட்டும் தான் அங்கே தயாரிக்கப்பட்டன. 1980-இல் உலகின் மிகப்பெரிய கணிப்பொறி உற்பத்தித் தளங்களில் ஒன்றாக வளர்ந்தது சிங்கப்பூர். இடையில் 1985-ஆம் ஆண்டிலும் 2008-ஆம் ஆண்டிலும் உலகப் பொருளாதாரச் சூழல்களால் பெரும் தேக்க நிலையைச் சந்தித்தது சிங்கப்பூர். ஆனால், இந்தச் சவால்களையெல்லாம் மீறி சிங்கப்பூர் இன்றும் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

இதன் பின்னணியில்தான் இந்தியாவின் ரிசர்வ் வங்கியைப் போன்ற சிங்கப்பூர் அமைப்பின் மேலாண்மை இயக்குநராக தற்போது பணிபுரியும் ரவிமேனன், சிங்கப்பூரின் அடுத்த 50 ஆண்டுகளுக்கான நினைவுகளை, அதாவது அந்த நாட்டின் ‘நாளை குறித்த ஞாபகங்களை’ ஏதோ ஒரு பழைய நாட்குறிப்பைப் பார்த்து வாசிப்பதைப்போல வாசித்துக் கொண்டிருக்கிறார். தன் முடிவுரையில், மேனன் இவ்வாறு கூறினார்.

“முடிவுரையாக, ஒன்றைச் சொல்லவிரும்புகிறேன். நமது பொருளாதாரத்தின் கடந்த 100-ஆண்டுகால வரலாற்றை (1965-2065), தொழில் வளர்ச்சி, தொழில்நுட்பப்போக்குகள் மற்றும் உலக நிகழ்வுகளின் நோக்கிலேயே விவரித்திருக்கிறேன். இது இடைவிடாத சீர்திருத்தங்களால் கட்டமைக்கப்பட்ட வரலாறு. வணிகச்சந்தையின் கண்ணுக்குத் தெரியாத கரங்களின் மற்றும் திறனுடைய நல்ல ஆட்சிமுறையின் வெளிப்படையான கரங்களின் கூட்டசைவால் இது சாத்தியமாகி இருக்கிறது. ஆனாலும் இதற்கப்பால் இந்தப் பொருளாதாரப்பயணத்தைச் சாத்தியமாக்கியது நமது மக்களின்பெருமைக்குரிய பண்பாடேயாகும். இது புதுமையைப்போற்றி வளர்க்கும் பண்பாடு. நமது தொழிலாளர்கள்ஆற்றல் மிக்கவர்கள். அவர்கள் தொழிலைக் கற்றுக்கொள்கிறார்கள். புதிய தொழில் நுட்பங்களைஅரவணைத்துக் கொள்கிறார்கள்.

கற்றுக்கொள்ளுதல், இங்கு வாழ்நாள் முழுவதும் நீளும் ஓர் அனுபவம். இது ஒட்டுறவை, ஒத்திசைவை வளர்க்கும்பண்பாடு. நாம் சேர்ந்து உழைக்கிறோம்; சேர்ந்து வாழ்கிறோம்.ஓய்வு பெற்றவர்களுக்கு உதவும் வகையில்அவர்களுக்காக கூடுதல் வரிகட்ட நாம் தயாராய் இருக்கிறோம். நமக்குள் ஒரு தொண்டு மனப்பான்மை ஆழமாக வேரூன்றி இருக்கிறது. ஆழமான கூடிவாழும் பண்பினால்தான் இந்த தேசம் ஒரு நாடாய் ஒருங்கிணைந்து இருக்கிறது.” இந்த உரையை நிகழ்த்திவிட்டு தனது சொற்பொழிவின் நோக்கத்தையும், அதைப்பற்றிய தனது விமர்சனத்தையும் ரவி மேனன் தானே முத்தாய்ப்பாய் முன்வைக்கிறார்.:

“முன்னோக்கிப் பார்ப்பதென்பது எப்போதும் புத்திசாலித் தனமானது. ஆனால், நாம் பார்க்கக் கூடிய தூரத்திற்கப்பாலும் பார்ப்பதென்பது கடினமானது என்கிறார் வின்சென்ட் சர்ச்சில். எதிர்காலம் பற்றி நான் இங்கே சொன்னவையெல்லாம் முழுக்க முழுக்க கற்பனையே. இது எந்தவகையிலும் சிங்கப்பூர் நிதியமைப்பின் அல்லது என்னுடைய கணிப்பும் கூட அல்ல. சாத்தியமாகக்கூடிய ஒரு காட்சிப் படிமத்தை வார்த்தைச் சித்திரமாக முன்வைப்பதே எனது நோக்கம். 2065-இல் இக்கட்டுரையைப் படிக்கிற யாரோ ஒருவர், இதில் கற்பனையோ அல்லது நடைமுறை எதார்த்தமோ அல்லது இரண்டுமே போதுமான அளவுக்கு இல்லை என்ற விமர்சனத்தைச் செய்வார் என்பது மட்டும் எனக்கு உறுதியாகத் தெரியும்.”

“கம்பெனியார் ஜவாப்தாரியல்ல” என்று சின்ன எழுத்தில் ஒரு முன்னெச்சரிக்கையை ரவிமேனன் சொல்லிவிட்டாலும் கூட, அவருக்கும் தெரியும்,சிங்கப்பூர் மக்களுக்கும் தெரியும், ஏன், உலகத்துக்கே கூடத் தெரியும். அவர் தனது நாட்டின் ‘நாளை குறித்த ஞாபகத்தை’ மிகத் தன்னடக்கத்தோடு எழுதியிருக்கிறார் என்பது.

நாளை பற்றிய ஞாபகம், உண்மையில் விழித்திருக்கும் போதே காணும் கனவு; அடுத்த பயணத்திற்காக ஆழ்நிலையில் கட்டும் பெட்டி படுக்கை. இடத்தை அடையும் முன்பே எடுக்கிற உள்ளுணர்வுப் ‘புகைப்படம்.’ ‘நாளை’ யின் ஞாபகம், உண்மையில் ‘நாளை’யில் இல்லை ; நமக்குள்தான் இருக்கிறது.

சீனர்கள், மலாய் மக்கள், தமிழர்கள் மற்றும் ஏனைய இந்தியர்கள் என்ற பன்மியக் கட்டமைப்பில், ஒற்றுமையாய் இயங்குகிறது சிங்கப்பூர். திறமைதான் இங்கே முகவரிச் சீட்டு. அதனால்தான் இன்றைய தேதியில் சிங்கப்பூர் பணநிதி ஆணையத்தின் தலைவர் தமிழர்; மேலாண்மை இயக்குநர் மலையாளி.

அளவிலும் மக்கள் தொகையிலும் சிறியதான, முழுக்க முழுக்க நகர் மயமான சிங்கப்பூர் போன்ற ஒரு நாடு, இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டிற்கு, தமிழகம் போன்ற ஒரு பெரிய மாநிலத்திற்கு அப்படியே பொருந்தக்கூடிய முன்மாதிரியாக இருக்கமுடியாது என்பதில் ஐயமில்லை. ஆனால், அதை காரணம் சொல்லி சிங்கப்பூரின் நாளை குறித்த ஞாபகத்தில் உள்ள வெளிப்படையான இலக்குகளையும் அதற்கான முனைப்புகளையும் குறிப்பெடுத்துக்கொள்ளாமல் நாம் புறக்கணித்துவிடவும் கூடாது.

பல் ஆயமொடு பதி பழகி,
வேறு வேறு உயர்ந்த, முதுவாய் ஒக்கல்
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு,
மொழிபல பெருகிய, பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்து, இனிது உறையும்,
முட்டாச் சிறப்பின், பட்டினம்… (பட்டினப்பாலை 213-218) என்ற கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் வரிகள் (எளிய உரை கட்டுரை முடிவில்) கடந்த காலத்து நினைவா, அன்றைய நிகழ்காலம் குறித்த படப்பிடிப்பா அல்லது சங்க காலப் படைப்பாளி குறித்துவைத்த ‘நாளை குறித்த ஞாபகமா?’ இதில் எது உண்மை என்றாலும் அது நம்மை உற்சாகப்படுத்துவதே.

சேரர் சோழர் பாண்டியர்; வில், புலி, கயல் என்ற அடையாள எல்லைகளுக்கு அப்பால் நின்று, சிற்றரசர், பேரரசர் என்ற அளவுகோல்களை எல்லாம் கடந்து, சமயம், குடி, மன்னர் என்ற வட்டங்களுக்குள் தன்னைச் சிறைப்படுத்திக் கொள்ளாமல் தமிழைத் தமிழாய், ஒரு இணைப்புப் பாலமாய் பார்த்து, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பன்மியம் பாராட்டும் சங்க இலக்கியம் ஓருவகையில் நமக்கான நாட்குறிப்பே.

சிந்துவெளிச் சிதைவுகளிலிருந்து இந்தியாவின் பண்பாட்டு தொன்மங்களின் புரிதலின் ‘இரண்டாம் சுற்று’ எப்படி தொடங்கியதோ; வறண்டாலும் வைகை ஆற்றின் கரைகளில் வரலாறு எப்படி தனது இரண்டாம் சுற்றில் ‘கரை புரளத்’ தொடங்கியுள்ளதோ அப்படியே சிங்கப்பூரின் இரண்டாம் சுற்றிலும் எல்லாருக்கும் இருக்கிறது ஒரு பாடம்.

ரவி்மேனனின் சொற்பொழிவை படிக்கும்போது பட்டினப்பாலை வரிகள் எனக்குள் நிழலாடுவது ஏன் என்பது துல்லியமாக புரியவில்லை என்றாலும் அந்த ஒப்பீட்டு மனச்சித்திரத்தை என்னால் முற்றிலும் தவிர்த்து கடந்து செல்லவும் முடியவில்லை. தொன்மையை விடவும் முக்கியமானது தொடர்ச்சி. அதனால் “நாளை குறித்த ஞாபகம்” என்பது ‘நாளை’ பற்றிய கவலை அல்ல. உண்மையில் அது ‘நாளை’ குறித்த கவித்துவமான, கட்டுக்கோப்பான கவனம்.

Image

கடந்த கால ஞாபகம்
நிகழ்கால பிரக்ஞை
எதிர்காலக் கனவு
என்று
காலத்தையும் நினைவையும்
வகைபிரித்தது ‌யார்?

எந்தப் பாதை
என்பது எதேச்சையா?

குலுக்கிப் போட்டு
எடுத்த
குருட்டு அதிர்ஷ்டமா?
அல்லது
குருட்டு துரதிர்ஷ்டமா?

உள்ளுணர்வு என்பது
இன்னும்
வார்த்தையாகக் கூட
வடிவம் பெறாத
வாழ்க்கையின்
வீரிய விதையா?
இல்லை
ஓசையற்ற கவிதையா?

திரும்பிப் பார்த்து
வந்த வழியில்
பின்னோக்கி நடக்கிறேன்.
முச்சந்தியில் நிற்கிறேன்.

அன்றொரு நாள்
நான்
நின்ற புள்ளியில்
நிற்கிறேன்.

இந்த மீள் நினைவு
எனது
கடந்த காலத்தின்
நினைவலை என்றால்
அந்த நொடியில்
என்னை வழி நடத்தியது
நாளை‌ குறித்த ஞாபகமா?

அந்தரத்தில் ஊஞ்சல்

நிச்சயமின்மையை விட நிச்சயமானது வேறொன்றுமில்லை. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரிவதில்லை. அதனால் என்ன? தெரியாமல் இருந்தால் இருந்துவிட்டுப் போகிறது. நிச்சயமின்மை என்பது கூட நீடிப்பதில்லை தானே. ஒரு நாள் அதுவும் தெளிவாகும். எல்லாம் முன்கூட்டியே தெரிந்து தான் என்ன செய்யப்போகிறோம்? நிம்மதியை இழப்பதைத் தவிர! “நிச்சயமின்மையை ஆரத் தழுவு; நம் வாழ்வின் மிக அழகான பல அத்தியாயங்கள் நெடுங்காலம் வரை ‘தலைப்பு’ இல்லாமல் தான் இருக்கின்றன” என்று எங்கோ படித்தது நினைவிற்கு வருகிறது. உண்மையில் புரிந்தும் புரியாத ஒரு தெளிவின்மையால் தான் வாழ்க்கை அலுத்துப்போகாமல் இருக்கிறது.

யாருக்குத் தெரிகிறது அடுத்து வரும் திருப்பம்? விநாயகர் என்ன செய்யப்போகிறார் என்பது தெரிந்தால் முருகன் ஏன்
ஏறப்போகிறார் மயிலின் முதுகில்! இன்னொரு கோணத்தில் எதுவும் நிச்சயமில்லை என்ற நிதர்சனத்தின் வெளிச்சத்தில் தான் எல்லாம் சாத்தியமாகின்றன.

2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் பிற்பகல் நேரம். உத்திரப் பிரதேசத்தின் தலைநகரமான லக்னோவிலிருந்து பாராபங்கி என்ற இடத்தை நோக்கி எனது ஹெலிகாப்டர் பறந்து சென்றுகொண்டிருக்கிறது. அப்போது அந்த மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நேரம். என்னுடன் உத்திரப்பிரதேச மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியான அனுஜ் பிஷ்ணோய் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பயணம் செய்கிறார். இரட்டை எஞ்சின்கள் கொண்ட அந்த ஹெலிகாப்டர் விமானத்திற்கு இரண்டு பைலட்டுகள்.

அமேதி, ரேபரேலி, கோண்டா, ஃபைஜாபாத், சிராவஸ்தி, மற்றும் லக்னோ போன்ற பல மாவட்டங்களால் சூழப்பட்டது பாராபங்கி. டில்லியிலிருந்து விமானத்தில் லக்னோ வந்தடைந்ததும் ஹெலிகாப்டருக்கு மாறிவிட்டேன். இரண்டு மாவட்டங்களில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்களிடம் கலந்தாய்வு செய்துவிட்டு லக்னோ திருப்பி உடனே டில்லி செல்லும் விமானத்தைப் பிடிக்க வேண்டுமென்பதால் மதிய உணவு பாக்கெட் கூட ஹெலிகாப்டரில் வைக்கப்பட்டிருந்தது. லக்னோவிலிருந்து கிளம்பும் போது கோடை வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது.

ஹெலிகாப்டர் கிட்டத்தட்ட பாராபங்கியை நெருங்கிக் கொண்டிருந்த போது திடீரென்று சூறாவளிக்காற்று வீசத் தொடங்கியது. மேகம் திரண்டது. காற்றுடன் கூடிய மழை. சுழற்காற்று அடித்தவிதம் மிகவும் அச்சமூட்டுவதாக இருந்தது. குளிர்காலத்தில் ‘ஜீரோ’ டிகிரியையும் கோடையில் சில நேரம் 50 டிகிரியையும் தொடுகிற வட இந்திய வானிலை வினோதமானது; விபரீதமானதும் கூட. கோடை காலத்தில் வீசும் ‘நார்த் வெஸ்டர்’என்கிற சூறாவளிக் காற்றும், தூசிக்காற்றும் அபாயகரமானவை. 1888 ஆம் ஆண்டு மொராதாபாத் பகுதியில் வீசிய ஆலங்கட்டி மழையில் 246 பேர் மரணமடைந்தது இது வரையில் ஆலங்கட்டி மழைச் சேதத்தில் உலக அளவில் பெரிய சேதம் ஆகும்.

எங்களது ஹெலிகாப்டர் திட்டமிட்ட திசையை நோக்கிச் செல்லமுடியாமல், பக்கவாட்டில் இங்கும் அங்கும் அழைக்கழிக்கப்பட்டு அந்தரத்தில் ஊசலாடுவது போல இருந்தது. நானும் அனுஜ் பிஸ்ணோயும் ஒருவரை ஒருவர் அச்சத்துடன் பார்த்துக் கொண்டோம். விமானியுடன் தகவல் பரிமாறிக் கொள்ளும் சாதனத்தின் மூலமாக கேட்டது போதாதென்று விமானி ஒருவரின் தோளைத் தொட்டுக் கூட கவலையைத் தெரிவித்தார் அனுஜ்.

எங்களது பீதியைக் கவனித்த விமானி “கவலை வேண்டாம்” என்று ஆறுதல் சொன்னார். அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால் ஏதாவது ஒரு தார் ரோட்டில் அல்லது காலி நிலத்தில் ஹெலிகாப்டரை இறக்கிவிடுவதாகவும் அவர் சொன்னார். நானும் அனுஜூம் கண்ணாடி வழியே கீழே பார்த்தோம், தார் ரோடு எதுவும் கண்ணில்படுகிறதா என்று.மாடுகளும் ஆடுகளும் அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டிருந்தன. மேய்ப்பவர்கள் அவற்றின் பின்னே ஓடிக் கொண்டிருந்தனர். கோதுமை வயல்கள், சிறு சிறு நீர்நிலைகள், நீர்ப்பாசன மோட்டார் பம்பு அறைகள் யாவும் சிறு
உருவங்களாகத் தெரிந்தன.

அந்த ‘இயந்திரப் பறவை’யின் முதுகில் விமானிகளின் வார்த்தைகளை மட்டுமே நம்பி இயற்கையின் செயற்கையான பிணைக்கைதிகள் போல் நாங்கள் பதற்றத்துடன் உட்கார்ந்திருந்தோம். கீழே தரையில் ஓடிக்கொண்டிருந்த மனிதர்களையும் ஆடு மாடுகளையும் பார்க்கும்போது மிகவும் பொறாமையாக இருந்தது. தரையில் கால் வைத்தால் போதும் என்று இருந்தது. அச்சுறுத்தும் அந்த 30 நிமிடங்களில் எனக்குள் பல எண்ணங்கள் தோன்றி மறைந்தன. டில்லியிலுள்ள எனது மனைவி, இளைய மகள், கல்கத்தாவிலிரு ந்த மூத்த மகள் மனதில் தோன்றினார்கள். அவர்களின் எதிர்காலம் பற்றி கவலைப்பட்டேன். ஊரிலுள்ள பெற்றோர்கள், கூடப்பிறந்தவர்கள் என்று அனைவரையும் ஒரு ‘ரவுண்டு’ நினைத்துக்கொண்டேன். திடீரென்று என் மனதில் ஏதோ பொறி தட்டியது போல இருந்தது. எனது அருகே இருந்த எனது ‘லேப் டாப்’ பையை அவசர அவசரமாக ஆவேசமாகத் திறந்து பார்த்தேன். எனது மடிக்கணினி, பென்டிரைவ், எக்ஸ்டர்னல் டிரைவ் ஆகிய அனைத்தும் எனது பையில் கிடந்தன.

நான் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொண்டிருக்கும் சிந்துவெளி, இந்தியவியல் ஆய்வுகள் தொடர்பான எல்லாப் பதிவுகளும் அதில் தான் சேமிக்கப் பட்டிருந்தன.2002-ஆம் ஆண்டிலேயே நான் கண்டறிந்து, ஆனால், இன்னும் ஆய்வுலகத்துக்கு அறிவிக்காத “கொற்கை-வஞ்சி-தொண்டி வளாகம்” முதலான எல்லா விவரங்களும் இதில்தானே இருக்கின்றன; இதில் எதையெல்லாம் வீட்டிலுள்ள மேஜைக் கணிணியில் நகலாகப் பதிவு செய்திருக்கிறேன்; எது அங்கே இருக்கிறது எது இல்லை; அதுமட்டுமின்றி எது எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாதே; ஒருவேளை ஏதேனும் நேர்ந்தால் அவ்வளவும் அழிந்து போகுமே; எவ்வளவு அரும்பாடுபட்டு இந்த ஆய்வுகளை செய்து வந்திருக்கிறோம் ? எல்லாமே ஒரு நொடியில் இல்லாமல் போகுமே, என்ற கழிவிரக்கம் என்னைத் தீவிரமாய் அலைக்கழிக்கத் தொடங்கியது.

உயிரைவிட எதுவும் பெரிதில்லைதான்; ஆனாலும் அந்த நிமிடங்களில் உயிர் பயத்தோடு சேர்ந்து இந்த எண்ணங்களும் என்னை அலைக்கழித்தன என்பதே உண்மை. நான் இந்த யோசனையில் இருக்கும் போது அனுஜ் பிஷ்ணோய் தெளிவான ஒரு முடிவுக்கு வந்து விட்டார். விமானியைப் பார்த்து, கண்டிப்பான தொனியில், “இதற்கு மேல் ரிஸ்க் எடுக்க வேண்டாம். அதோ தூரத்தில் தென்படும் சாலையில் ஹெலிகாப்டரைத் தரை இறக்குங்கள் “ என்று உத்தரவிட்டார். அதன்படியே அந்த விமானி கோதுமை வயல்களினூடே சென்ற ஒரு தார்ச்சாலையில் வாகனம் எதுவும் வருகிறதா என்று ‘ரவுண்டு’ அடித்து பார்த்து விட்டு பத்திரமாக ஹெலிகாப்டரைத் தரையிறக்கினார். “அப்பாடா” என்று தரையிறங்கினோம். அது எந்த இடம், எந்த ஊர் என்பதை அறிய விமானிகள் உதவினார்கள்.

பிஷ்ணோய் தனது அலைபேசியின் மூலம் அதிகாரிகள் சிலருடன் தொடர்பு கொண்டு பேசினார். சிறிது நேரத்தில் உள்ளூர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பலரும் கார்களிலும் ஜீப்புகளிலுமாக அங்கு வந்து சேர்ந்து விட்டனர். பிறகு நாங்கள் காரில் பயணம் செய்து லக்னோ சென்றோம். லக்னோவுக்கு போகும் வழியில் இருவரும் இறுக்கம் குறைந்து கொஞ்சம் சிரிக்க ஆரம்பித்தோம். உண்மையில் மிகவும் பயந்துவிட்டதாக இருவரும் ஒப்புக்கொண்டோம். திடீரென்று ஏதோ நினைத்தவர் போல,. “அது சரி, பாலா, ஹெலிகாப்டர் அந்தரத்தில் ஊசலாடும் அந்த வேளையில் லேப்-டாப் பையில் அப்படி எதைப் பரபரப்பாகத் தேடினாய்?” என்று என்னிடம் கேட்டார்.

எனது சிந்துவெளி ஆராய்ச்சி பற்றியும், தமிழ்த் தொன்மங்கள் குறித்த எனது தேடல்கள் பற்றியும், எனது ‘கொற்கை வஞ்சி தொண்டி வளாகம்’ பற்றிய புள்ளிவிவரங்களை இன்னும் அறிவிக்காமல் ஐந்து வருடமாக அடைகாக்கிறேன் என்று அவருக்கு சுருக்கமாகச் சொல்லி விளக்க முயன்றேன். எனது ஆய்வு முயற்சிகள் பற்றி அவருக்குத் தெரியும் என்றாலும் அவர் அந்தச் சூழ்நிலையில் அதை ரசித்தது போலத் தெரியவில்லை. நானும் வேறு பேச்சுக்கு தாவினேன்.

இரவு கடைசி விமானத்தில் டில்லி திரும்பிய நான் எனது மனைவியிடம் நடந்த விவரங்களைச் சொன்னேன். ஹெலிகாப்டர் ஊசலாடிய போது மனதில் தோன்றிய அனைத்தையும் கூறினேன். மறுநாள் முதல் வேலையாக எனது லேப்-டாப், பென்டிரைவ், எக்ஸ்டர்னல் டிரைவிலுள்ள ஆவணங்கள், தரவுகளை எல்லாம் தலைப்பு வாரியாக தனித்தனி ‘ஃபோல்டர்’களில் சேமித்தேன். தமிழ்ச் சிந்து (Tamil Indus) என்ற தலைப்பில் “கொற்கை வஞ்சி தொண்டி வளாகம்” (KVT Complex) உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் சேமித்தேன்.

சில நாட்கள் கழித்து மீண்டும் உத்தரப்பிரதேசத்திற்கு போகவேண்டிய தேவை ஏற்பட்டது. வீட்டைவிட்டு கிளம்பும் போது, என் மனைவியிடம் அனைத்து ஆவணங்களையும் திறந்து காட்டி விளக்கினேன். அன்றைக்கும் நான் ஹெலிகாப்டரில் பயணம் செய்யப்போகிறேன் என்பது எனது மனைவிக்குத் தெரியும். ‘பென்டிரைவ்’ உள்ளிட்டவற்றைக் கொடுத்து விட்டு விடைபெற்ற போது, அவர் என்னை முறைத்துப் பார்த்து விட்டு , “ உங்கள் ஆராய்ச்சி விவரங்கள் எனக்குத் தெரிந்திருக்க வேண்டும்; அதுதானே உங்கள் நோக்கம்?” என்று கேட்டார்.

அதே ஆண்டு இன்னொருமுறை. உத்தரப்பிரதேச அரசின் ஹெலி காப்டர் பராமரிப்புப் பணிக்கு அனுப்பப்பட்டிருந்ததால் நான் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்றில் ஆக்ரா, அலிகார் ஆகிய இடங்களுக்குச் சென்று தேர்தல் பணிகளை ஆய்வு செய்து விட்டு டெல்லிக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். இந்த முறையும் என்னுடன் அனுஜ் பிஷ்ணோய் பயணம் செய்தார். அவ்வாறு திரும்புகையில் ஹெலிகாப்டர் டெல்லியை நெருங்கிய போது பைலட்டின் இருக்கை அருகே திடீரென்று ஓர் எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கியது.

‘பெட்ரோல் அளவு குறைந்து விட்டது’ என்பதற்கான எச்சரிக்கை அது. சிவப்பு விளக்கோடு அது தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்ததால், எங்கள் இருவருக்கும் மீண்டும் பயம் தொற்றிக்கொண்டது டெல்லி விமான நிலைய தொழில் நுட்பப் பகுதியில் அவசரமாக ஹெலிகாப்டரைத் தரையிறக்க அனுமதி கோரினார் விமானி. அனுமதி கிடைக்க தாமதமானதால் அவரது கண்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தன. கீழே தென்பட்ட ஒரு திறந்தவெளி மைதானத்தை வட்டமிட்டுக் கொண்டே இருந்தார். அது அனேகமாக ஏதேனும் பள்ளி அல்லது கல்லூரி மைதானமாக இருக்கலாமென்று தோன்றியது. இதற்குள் விமான நிலைய அனுமதி கிடைத்துவிட்டதால், சட்டென்று ஹெலிகாப்டரைத் திசை திருப்பி ‘தொழில்நுட்ப’ப் பகுதியில் பத்திரமாகத் தரையிறக்கினார் விமானி.

நாங்கள் விமானியுடன் கைகுலுக்கி அவருக்கு நன்றி தெரிவித்தோம். பிறகு, ஒரு குறுகுறுப்புடன் “எச்சரிக்கை மணி ஒலித்ததே, எவ்வளவு நேரம் பறக்கக் கூடிய அளவு பெட்ரோல் இருந்தது?” என்று கேட்டோம். அவரோ சிரித்தபடி, “நோ ப்ராப்ளம். இன்னும் சில நிமிடங்கள் கையில் இருந்தன. அப்படியே அனுமதி கிடைத்திராவிட்டாலும்,நான் அந்த மைதானத்தில் பத்திரமாகத் தரை இறக்கியிருப்பேன்” என்றார்.

காரில் அனுஜ் என்னிடம் கேட்டார். “என்ன பாலா.. இந்த முறை லேப்-டாப் பையில் கையையே வைக்கவில்லை” என்று சிரித்தபடியே கேட்டார். “வீட்டில் கொடுத்து வைத்திருக்கிறேன்” என்றேன். அப்போதும் அவர் என்னை பார்த்த பார்வை அவ்வளவாக சரி இல்லை.அன்றிரவு மனைவியிடம் இந்த விவரங்களைச் சொன்ன போது அவர், “இன்று உங்கள் ஆராய்ச்சி பற்றிய நினைவு வந்திருக்காதே” என்றார்.வாழ்க்கை உண்மையில் வினோதமானதுதான். சிலநேரங்களில் எது வியப்புக்குறி, எது வினாக்குறி,எது அரைப்புள்ளி, எது முற்றுப்புள்ளி என்று புரியாத வகையில் ஏதோ ஒரு கை எழுதி எழுதிச் செல்கிறது, ஏதோ ஒன்றை! 2017 டிசம்பர் 20 ஆம் நாள். இந்த ஹெலிகாப்டர் அதிர்ச்சிகளுக்கும் கொற்கை வஞ்சி தொண்டி வளாகத்திற்குமான வினோத முடிச்சு முடிந்துவிட்டது என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது அவ்வாறாக இல்லை.

விகடனில் பணிபுரியும் எழுத்தாளர் தமிழ்மகன் ‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ என்ற நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். அவர் எனது முகநூல் நண்பர். “உயிர்மை” பதிப்பக வெளியீடான இந்த நாவலை சென்னையில் 2017 டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசவேண்டும் என்று அவர் என்னை கேட்டிருந்தார். இந்த வேண்டுகோளுக்கான பின்புலத்தை அவர் விளக்கிய போது தான் காரணம் புரிந்தது. கடற்கோள்கள், சிந்துவெளிப் பண்பாடு, சங்ககாலம், இடைக்காலச் சோழர் காலம், நிகழ்காலச் சுனாமி, சிந்துவெளிப் பண்பாடு பற்றிய கொற்கை வஞ்சி தொண்டி வளாகம், கீழடி ஆராய்ச்சி தொடர்பான விவாதங்கள் என்று பல்வேறு நினைவுத் தளங்களில் பயணிக்கும் விஞ்ஞானப் புதினம் இது. வரலாறு, தொன்ம மீள் நினைவுகள், தொல்பொருள் ஆராய்ச்சிகள், மொழியியல், இடப்பெயர் ஆய்வு, மரபு அணுத் தடயங்கள் என்று “றெக்கை” கட்டிப் பறக்கிறது இந்த நாவல்.

இந்த நாவலுக்கான அடிப்படை உந்துதலே திராவிட அடித்தளம் பற்றி சிந்துவெளியில் நீங்கள் செய்துள்ள ஆய்வுகளே என்று தொலைபேசியில் தூபம் போட்டுவிட்டு ‘கூரியரில்’ அச்சுப் பிரதியொன்றை ஒடிசா முகவரிக்கு அனுப்பிவிட்டார் தமிழ்மகன். சாதாரணமாகவே, முறைப்படி குறிப்பெடுத்து எழுதுவதை, பேசுவதை வழக்கமாகக் கொண்டவன். ஜீன் குறிப்புகளை குறிப்பு எடுக்காமல் பேசமுடியுமா. உடனே படிக்க ஆரம்பித்து கால்வாசி படித்து முடித்தேன். தொடர்ந்து படிக்க முடியாதபடி வேலை. உலக ஹாக்கி லீக் விளையாட்டுப் போட்டிகள் புவனேஸ்வரத்தில் நடந்துவந்தன. சென்னைக்கு டிசம்பர் 21 ஆம் தேதி பயணம் செய்ய டிக்கெட் போட்டிருந்தேன். 23 ஆம் தேதி காலை நிகழ்வு என்பதால் அதற்குள் நாவல் முழுவதையும் படித்து விடவேண்டும்.

Image

20 ஆம் தேதி டிசம்பர், 2017. புவனேஸ்வரத்திலிருந்து ரூர்கேலாவிற்கு ஒரு கலந்தாய்விற்காக ஹெலிகாப்டரில் பயணம். காலை 8.30 க்கே கிளம்பிவிட்டோம். துகின் காந்த பாண்டே (நிதித்துறை செயலர்) மதிவதணன் (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறச் செயலர்) ஆகிய இரு ஐ. ஏ. எஸ் அதிகாரிகள் என்னுடன் பயணம் செய்கிறார்கள். மேற்கு வங்கத்திலுள்ள கலய்குண்டா விமான கட்டுப்பாட்டு அறையின் உத்தரவின்படி வேறு பாதையில் கொஞ்சம் சுற்றி செல்வதாகவும் எதிர்பார்த்ததைவிட கொஞ்சம் தாமதம் ஆகும் என்றும் பின்காற்றும் (Tailwind) சாதகமாக இல்லை என்றும் பைலட் கேட்புச் சாதனத்தில் தெரிவித்தார்.

அருகே எனது ‘லேப் டாப்’ பை இருந்தது. திறந்து பார்த்தேன். “வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்” ஓ. வசதியாகப் போனது. எடுத்துப்படிக்கத் தொடங்கினேன். அந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் “பாலகிருஷ்ணன் என்ற கலெக்டர்” (!) செய்த ஆய்வுகள் பற்றி 2037- 2038 ஆம் ஆண்டுகளில் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். கண்ணாடி வழியே வெளியே பார்த்தேன். டிசம்பர் காலத்து இதமான வானிலை. கீழே மடிப்பு கலையாத மலைகள். பசுங்காடுகள், ஏதோ ஒரு நதி.

என்னவோ தோன்றியது. அருகில் அமர்ந்திருந்த பாண்டேயிடம் எனது “நோட் 8” ஐ கொடுத்து ஒரு புகைப்படம் எடுக்கச்சொன்னேன். ஜீன் குறிப்புகளை காமிரா லென்சுக்கு காட்டியபடி சிரித்தேன்.
தொலைபேசியைப் பார்த்தேன். சிக்னல் இருப்பது போலவும் இருந்தது. இல்லாதது போலவும் இருந்தது. லேப்-டாப் பையிலிருந்து ‘ஹாட் –ஸ்பாட்டை’ எடுத்து ’ஆன்” செய்தேன். சிக்னல் கிடைப்பது போல தெரிந்தது. வாட்ஸ் அப்பில் அந்தப் புகைப்படத்தை தமிழ்மகனுக்கு அனுப்பிவைத்தேன்.

பால்வீதி முழுவதும்
நட்சத்திரங்களின்
போக்குவரத்து நெரிசல்.

குறுக்கே நெடுக்கே
ஒன்றை ஒன்று
கடந்து மிதந்தாலும்
ஒன்றின் இருப்பை
வேறொன்று
உணர்ந்ததாகவே தெரியவில்லை.

ஒவ்வொரு நடசத்திரமும்
தன்னை‌
பிரபஞ்சங்கள்
வழிபடுவதாக
தானே நினைத்துக் கொண்டன.

தூரத்திலிருந்து பார்க்கும்
போது
அந்த துருவ நட்சத்திரம்
கிறுக்கு பிடித்து
அலைவதாகவே தோன்றியது.

இல்லையென்றால்
எதிரே இருக்கும்
இன்னொரு துருவ நட்சத்திரம்
தன்னிடம்
“ஆட்டோகிராப் “வாங்க
வந்திருப்பதாக
எப்படி நினைக்கும்
அது?

இதோ
இந்த வால் நட்சத்தித்தின்
வாலில் தொங்குகிறது
அது
தனக்கு தானே
அமைத்த
வரவேற்பு வளைவு!

அந்த
எரி நட்சத்திரம்
நினைத்தது
தன்னை ஒரு
“சுயம் பிரகாசம்” என்று.
எரிவது தீ அல்ல!
ஒளித்துவைக்க முடியாத
ஞானத்தின்
ஒளிக்கசிவு!

உண்மையில்
எரிவது
வேறெதுவும் இல்லை
எரி நட்சத்திரத்தின்
இருப்பு தான்.

இதோ..
பிரபஞ்சத்தின்
நட்சத்திரக்குப்பையில்
கருகி விழுந்து
காணாமல் போனது
அது.

இது நிற்க.

காலை விடியும்
என்ற
நம்பிக்கையில் தான்
தூங்கப்போகிறோம்.

‘நமக்கு’ விடிந்தால் தான்
‘நாம்’ எழுகிறோம்!

அனைத்தும்
தொங்குகிறது
ஆகாயத்தில்
அந்தரமாய்…

சுதந்திரம் என்பது
வேறொன்றும் இல்லை
எதுவும்
நிரந்தரம் இல்லை என்ற
புரிதல் தான்
சுதந்திரம்..

இதோ..
காற்று மிதக்கிறது
காற்றோடு காற்றாக

பஸ்தர் என்னும் தாய்மடி

காஷ்மீரைத் ‘ தலை ‘ என்றும் , கன்னியாகுமரியைப் ‘பாதங்கள்’ என்றும் உருவகப்படுத்தினால் சத்தீஷ்கரில் உள்ள பஸ்தர் பகுதியை ‘ இடை‘ என்றுதான் சொல்ல வேண்டும். அது இன்னொருவகையிலும் பொருத்தமானதாகும். ’இடை’ யில்தானே தொப்புள்கொடி இருக்கும் ? இந்தியப் பன்முகப் பண்பாட்டின் அடித்தளமான, கீழடுக்கான பழங்குடி மரபுகள் இன்றும் அடைகாக்கப்படும் தாய்மடி போன்றது; தொன்மங்கள் இன்னும் தூங்கும் தொட்டில் போன்றது பஸ்தர். இந்தியாவின் வேறெந்தப் புள்ளியில் நிற்கும் போதும் நேரிடாத ஓர் உணர்வுக்கலவை எனக்குள் விரைந்து பரவும். ஆதிமூலத்தின் அடிவேரைத் தொட்டு அதன் ஆழத்தில் உறைவது போல் அகம் சிலிர்க்கும்.

சங்கத் தமிழ் இலக்கியங்கள் சித்தரிக்கும் அகத்திணை மரபுகளும், குறிப்பாக மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நில வாழ்க்கை முறையும் ‘நவீனயுகத் தமிழர்களாகிய’ நமக்கெல்லாம் அருங்காட்சியகத்தில் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டிருக்கிற ‘ஆவணங்கள்’ போன்ற அரைகுறைப்புரிதல்தான். ஒருவகையில் அவை உரையாசிரியர்களின் பதவுரைகள், பொழிப்புரைகள் ஆகியவற்றின் வெளிச்சத்தில் நாம் விளங்கிக்கொண்ட ‘குத்துமதிப்பான’ வாழ்வியல்தான்.

ஆனால், சங்க இலக்கியங்களில் நாம் படித்த குறிஞ்சி, முல்லை வாழ்வியலை, கோண்டு இனப்பழங்குடிகளின் தாயகமான பஸ்தரின் வெயில் புகாத அடர்ந்த மலைக்காடுகளின் இடுக்குகளில் அமைந்துள்ள சிறுசிறு குடியிருப்புகளில், பள்ளத்தாக்குகளில்,மேய்ச்சல் காடுகளில் இன்னும் உயிரோட்டத்துடன் நம்மால் காணமுடிகிறது.

திராவிடக் குறிஞ்சி நில வாழ்வின் ‘நிகழ்கால ஆய்வுக்கூடம்’என்று ஓரிடத்தை அடையாளம் காட்ட வேண்டுமென்றால், கண்களை மூடிக்கொண்டு என் கைகளை நீட்டுவேன் – பஸ்தரை நோக்கி. பஸ்தர் எனக்குப்புதிய இடமில்லை. ஓர் ஆராய்ச்சியாளனாகவும், மாவோயிஸ்ட் தீவிரவாதத்தின் மையப்பகுதியென்று கருதப்படும் இப்பகுதிகளில் தேர்தல் நடத்திய துணைத் தேர்தல் ஆணையராகவும் பலமுறை நான் இங்கு வந்திருக்கிறேன்.

2001 ஆம் ஆண்டு. ‘ நாடு ‘ என்ற இடப்பெயர் பொதுச்சொல்லின் ஆக்கமுறை வரலாற்றைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் இறங்கி இருந்தேன். இதற்காக தமிழ் இலக்கியம், தமிழ்க்கல்வெட்டுகள் மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள அனைத்து திராவிடப் பழங்குடிகளின் பண்பாடு மற்றும் மொழிகளின் ஊடாக எனது தேடல் பரப்பை விரிவு செய்தேன். (அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை 2005-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மைசூரில் நடைபெற்ற இந்திய இடப்பெயர் ஆய்வுச்சங்கத்தின் வெள்ளிவிழா நிகழ்வில் நான் நிகழ்த்திய பேரா. ஜவாரே கவுடா அறக்கட்டளைச் சொற்பொழிவில் வெளியிட்டேன். அந்த ஆய்வின் முடிவுகள் கட்டுரையாகவும் வரைபடங்களுடன் இந்திய இடப்பெயர்வு ஆய்வுச் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது. )

அப்போது ஒருங்கிணைந்த பஸ்தர் மாவட்டத்தின் இடப்பெயர்களில் 235 இடப்பெயர்கள் ‘ நாட் ‘ ( நாடு ) என்ற பொதுப்பெயரோடு முடிவதைக் கண்டறிந்தேன்.அவற்றில் சோல்நாட், குல நாட், வைநாட், மல்நாட், முள்நாட், தேக்க நாட், பரல்நாட், தோல் நாட், கொடநாட், எடநாட், வயநாட், இப்பா நாட், நெல் நாட், தல நாட்,பல் நாட், முக்கி நாட், எரம்நாட், கொய்நாட், உள்நாட் –போன்ற ஊர்ப்பெயர்களைக் கண்டு வியப்படைந்தேன்.

Image

‘நாடு ‘ ( நாடு—நாட் ) என்ற சொல் தற்போது தமிழில் உள்ளதைப்போல ஒரு பெரிய நிலப்பரப்பைக் குறிக்காமல், பழங்குடிமக்களின் ஓர் ஊர், கிராமம் போன்ற குறுகிய நிலப்பரப்பு என்ற பொருளையே குறிக்கிறது. இதை ’நாட்’ என்ற இடப்பெயர் விகுதியின் நடைமுறைப் பயன்பாடு மட்டுமின்றி

அப்பகுதிகளில் வழங்கும் நாட்டுப்புறப் பாடல்களும் உறுதிசெய்கின்றன. வட ஆந்திரத்தில் உள்ள அடிலாபாத் பகுதியில் வாழும் ராஜ் கோண்ட் என்ற பழங்குடியினரின் வாழ்க்கை முறை பற்றி ஆய்வு செய்த மானிடவியல் அறிஞர் சி.எம். ஹைமோண்டெர்ப் பதிவு செய்த நாட்டுப்புறப் பாடல்களின் மூலமும் இது தெளிவாகிறது.

பஸ்தர் பகுதியில் வாழும் “முரியா கோண்ட்” எனப்படும் முரியா தொல்திராவிடப்பழங்குடிகளின் ’கோட்டுல்” எனப்படும் ‘இளைஞர் குழாம்’ வாழ்க்கைமுறை தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ‘பாங்கர் கூட்டம்’, மற்றும் ‘பாங்கியர் கூட்டம் ‘, ‘ செவிலித்தாய் மரபு ‘ களவுக்காதல் வாழ்க்கை, ’உடன்போக்கு’ போன்ற வாழ்வியல் மரபுகளை நடைமுறை நிகழ்வுகளாக நம் கண்முன்னே படம் பிடித்துக்காட்டுவதைக் கண்டு வியப்படைந்தேன். இந்த வியப்பு, சங்க இலக்கியத்தை முழுவதும் உள்வாங்கிப் படித்த ஒருவன் பஸ்தர் வாழ்க்கைமுறையைக் கூர்ந்து கவனிக்கும் போது மட்டும் தான் நேரிட முடியும்.

இத்தகைய காரணங்களால் பஸ்தர் பகுதியின் மீது எனக்குள் ஓர் இனம்புரியாத ஈர்ப்பு எப்போதும் உண்டு. 2009 ஆம் ஆண்டு. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதற்குமான தேர்தலுக்கான கால அட்டவணையைத் திட்டமிடுதலில் தொடங்கி, பாதுகாப்பு ஏற்பாடுகள், தேர்தல் பார்வையாளர்கள் நியமனம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்று பல முக்கியமான பொறுப்புகள் என்னிடம்.

அப்போது மாவோயிஸ்ட்டு வன்முறைகள் நிறைந்த பஸ்தர் பகுதியிலுள்ள மாவட்டங்களுக்குச் சென்று கலந்தாய்வு செய்தேன். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக இப்பகுதியில் பயணம் செய்தபோது எனக்குள் நான் சொல்லிக்கொண்டேன்: “ பஸ்தருக்கு இனி நான் எப்போது வரப்போகிறேன் ? “பஸ்தரே, வணக்கம்!” என்று மனதுக்குள் அஞ்சலி செலுத்தினேன். மனசு கனமாக இருந்தது. எதையோ மிக நெருக்கமான ஒன்றை விட்டுச் செல்கிறோம் என்பதுபோல எனக்குள் ஓர் இழப்புணர்வு. என்னுடன் பயணித்த உயரதிகாரிகள் இருவருடனும் எதுவும் பேசாமல் பஸ்தர் காடுகளை மேலிருந்து வெறித்தபடி ஹெலிகாப்டரில் பறந்து வெளியேறிய அந்த நாள் இன்னும் நினைவிலிருக்கிறது.

2013 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி பஸ்தர் பகுதியில், சுக்மா மாவட்டத்திலுள்ள தர்பா பள்ளத்தாக்கில் மாவோயிஸ்டுகள் நடத்திய திடீர்த் தாக்குதலில் ஒரு முக்கிய தேசியக்கட்சியின் மிக மூத்த தலைவர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். மாநில சட்டமன்றப்பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களே இருந்த சூழ்நிலையில் நடந்த இந்தத் தாக்குதல் நாடுமுழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பஸ்தரிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்தவது பற்றி கேள்விக்குறிகள் எழுந்தன. மிகக்குறிப்பாக வேட்பாளர்களின் பாதுகாப்பு, வன்முறையற்ற தேர்தல் பிரச்சாரம் பற்றி விவாதங்கள் நடந்தன.

காஷ்மீர், மாவோயிஸ்டுகள் இயங்கும் பகுதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் நடத்துவது என்பது மற்ற மாநிலங்களில் தேர்தல் நடத்துவதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பாதுகாப்பு நோக்கில் கூடுதல் சவால்கள் நிறைந்தது. தர்பா பள்ளத்தாக்கு தாக்குதல் நடைபெற்றபோது நான் ஒடிசா அரசிடமிருந்து இரண்டாண்டு கல்வி விடுப்பு பெற்று சென்னையில் தங்கி சிந்துவெளி பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தேன். அதனால் சத்தீஷ்கரில் நடந்த இத்தாக்குதலை தொலைக்காட்சி செய்திகளின் மூலமாக தெரிந்துகொண்டேனே தவிர, மற்றபடி அதைப்பற்றி பெரிதாக யோசிக்கும் மனநிலையில் நான் இல்லை. 2009-ஆம் ஆண்டு நான் கடும் உடல்நலக்குறைவுக்கு உள்ளாகி மீண்டபிறகு, மிகவும் கடின உழைப்பைக் கோரும், மன அழுத்தம் தரும் சவாலான பொறுப்புகளிலிருந்து சற்று விலகி நிற்கும் மனநிலையில்தான் நான் இருந்தேன்.

பெருங்குடியிலுள்ள எனது வீட்டிலிருந்து தினமும் காலையில் கிளம்பி தரமணியிலுள்ள ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்திற்குச் சென்றுவிடுவேன். மடிக்கணினியோடு மதிய உணவையும் எடுத்துச்செல்வேன். நூலகத்தில்,சிந்துவெளி ஆய்வு மையத்திற்கென்று உள்ள ஓர் அறையில் எனக்கொரு நாற்காலி. மற்றொரு ஆய்வாளரான சுப்ரமணியமும் அந்த அறையில் அமர்ந்து தினமும் ஆராய்ச்சி செய்து வந்தார். மதிய உணவை நூலகத்தின் இயக்குநர் சுந்தர் மற்றும் நூலக ஊழியர்கள் அனைவருடனும் சேர்ந்து சாப்பிடுவோம். இப்படி அலுவலகத்திற்குப் போவது போல தினமும் நூலகத்திற்குப் போய் படித்து குறிப்பு எடுத்து எழுதி வந்ததால் எனது ஆய்வுப்பணியில் சீரான முன்னேற்றம் இருந்தது.

எனது இரண்டாண்டு கல்வி விடுமுறை 2014, ஜூலையில் முடிவதற்குள் சிந்துவெளியின் திராவிடக்கருதுகோளை வலுப்படுத்தும் எனது ஆய்வை முடித்து நூல்வடிவம் தந்துவிட வேண்டும் என்பது எனது திட்டம். அப்போதுதான் நான் சற்றும் எதிர்பாராத ஒரு திருப்பம் நிகழ்ந்தது.  நாடாளுமன்றத்தேர்தல் 2014—ஆம் ஆண்டு நடைபெறவிருப்பதை மனதிற்கொண்டு தேர்தல் ஆணையத்தில் நான் மீண்டும் துணைத்தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்க வேண்டுமென்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக தொலைபேசியிலும், என்னை டெல்லிக்கு நேரில் அழைத்தும் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு.சம்பத் பேசினார். ஒடிசா அரசிடமிருந்து முழு ஊதியத்துடன் கூடிய கல்வி விடுமுறையை 2014-ஜூலைவரை பெற்றிருந்த நான் எனது ஆராய்ச்சியில் முழுக்கவனம் செலுத்துவதாக கூறினேன். மேலும் நான் 2009-ஆம் ஆண்டில் பெரும் உடல்நலக்குறைவுக்கு ஆளானது தேர்தல் ஆணையத்துக்குத் தெரிந்ததே என்பதையும் சுட்டிக்காட்டினேன்.

இருப்பினும் பொது நன்மையைக் கருத்திற்கொண்டு கல்வி விடுமுறையைக் கைவிட்டு விட்டு தேர்தல் ஆணையத்தில் மீண்டும் பணியில் சேருமாறு ஆணையம் என்னைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தது. இது தொடர்பாக அடுத்து என்ன செய்வது என்று என்மீது எல்லா வகைகளிலும் அன்பும் அக்கறையும் கொண்ட முன்னாள் தலைமைத்தேர்தல் ஆணையர் திரு என். கோபாலஸ்வாமி அவர்களிடம் ஆலோசனை கேட்டேன். அவர் பணி ஓய்வுக்குப் பின்னர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். ரோஜா முத்தையா நூலகத்திற்கும் கோபாலஸ்வாமி சில தடவை வந்திருக்கிறார்.

எனது ஆய்வுப்பணி பற்றிய எல்லா விவரங்களும் அவருக்குத் தெரியும். “உடல்நலம் மிகவும் முக்கியம்; அதற்கடுத்து, ஆய்வுப்பணிகளும் முக்கியம். இருந்தாலும் தேர்தல் ஆணையம் உனது முன் அனுபவத்தைக் கருத்திற்கொண்டு உன்னை மீண்டும் அழைக்கும்போது பொது நன்மையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார் அவர். மேலும், ‘ தேர்தல் ஆணையத்தில் இதுவரை பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியாற்றியிருக்கிறார்கள். இருந்தாலும் ஏற்கெனவே பணியாற்றிய ஓர் அதிகாரியை தேர்தல் ஆணையம் குறிப்பாக மீண்டும் பணியாற்ற அழைப்பதென்பது இதுவே முதல் தடவை. இது உனது ஆளுமைக்கான அங்கீகாரம் ‘ என்றும் அவர் சொன்னார்.

அதுமட்டுமன்றி, கடைசியாக அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. “ பாலா, உன்னை எனக்கு மிக நன்றாகத் தெரியும். ஆட்சிப்பணி, இலக்கியப்பணி இரண்டுக்குமே முக்கியத்துவம் கொடுப்பவன் நீ. இந்த இரண்டையுமே இதுவரை தொய்வில்லாமல் செய்து வந்திருக்கிறாய். தேர்தல் ஆணையம் பலமுறை வற்புறுத்திய பிறகும் கல்வி விடுமுறையைக் கைவிட்டு தேர்தல் பணிக்கு நீ செல்லாமல் இருந்துவிடும் பட்சத்தில், ஒரு கட்டத்தில் ஓர் அர்ப்பணிப்பு உணர்வுள்ள அதிகாரி என்ற முறையில் அதுபற்றி நீயே வருத்தப்படுவாயோ என்று நான் நினைக்கிறேன்…” என்றார் அவர். இதைப்பற்றி நானும் திரும்பத்திரும்ப யோசித்தேன். எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

கடைசியில், தேர்தல் ஆணையத்தின் விருப்பத்தை ஏற்க சம்மதம் தெரிவித்தேன். பொதுவாக மைய அரசுப்பணியில் பணிபுரிந்து மாநில அரசுப்பணிக்குத் திரும்பியவர்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகுதான் மீண்டும் மைய அரசுப்பணிக்குத் திரும்ப அனுமதிக்கப் படுவார்கள். என்னைப்பொறுத்தவரை, 2012–ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒடிசா மாநில அரசுப்பணிக்குத் திரும்பி, உடனே கல்வி விடுமுறை பெற்றிருந்ததால் நடைமுறையிலுள்ள விதிமுறைகளின்படி 2015, ஜூலை மாதத்திற்குப் பின்புதான் மைய அரசுப்பணிக்குத் திரும்ப எனது பெயர் பரிசீலிக்கப்பட வேண்டும்.

ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்திற்கு சில முன்னுரிமைகள் உண்டு. அதன் அடிப்படையில், அப்போதிருந்த தலைமைத் தேர்தல் ஆணையரான வி.எஸ்.சம்பத், அன்றைய பிரதம மந்திரிக்கு இதுபற்றி கடிதம் எழுதினார். பொதுத்தேர்தல்கள், மற்றும் கடினமான இடங்களில் தேர்தல் நடத்துவதில் எனக்குள்ள முன்னனுபவத்தைக் கருத்திற் கொண்டு தேர்தல் ஆணையத்தில் என்னைத் துணைத் தேர்தல் ஆணையராக நியமிக்க அனுமதிக்க வேண்டுமென்று கடிதத்தில் கோரியிருந்தார். நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழுவின் ஒப்புதல் பெற்றபின் ஒடிசா மாநில அரசி அனுமதியுடன் நான் துணைத்தேர்தல் ஆணையராக, மீண்டும் நியமிக்கப்பட்டேன்.

அப்போது சென்னையில் வசித்த நான், எனது குடும்பத்தை டெல்லிக்கு அழைத்துச் செல்ல இயலாத நிலையிலிருந்ததால் தனியே டெல்லிக்குச் சென்று மைய அரசின் சென்னை எண்ணெய் நிறுவன விருந்தினர் விடுதியில் தங்கி மீண்டும் தேர்தல் ஆணையத்தில் பணியாற்ற ஆரம்பித்தேன். 2010—ஆம் ஆண்டில் மிகச்சிறப்பான வழியனுப்புதலுடன் தேர்தல் ஆணையத்திலிருந்து விடையளிக்கப் பெற்ற நான், மீண்டும் அந்தச் சிவப்புச் செங்கல் கட்டிடத்தில் பணிபுரிய வருவேன் என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. தேர்தல் ஆணையத்தில் மீண்டும் பொறுப்பேற்ற உடனே சத்திஸ்கர்உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தலுக்கான பணிகள் தொடங்கின. சத்திஸ்கர் மாநிலத் தேர்தலை மேற்பார்வையிட்டு நடத்தும் பொறுப்பு என்னிடம் அளிக்கப்பட்டது. இதோ, 2013,அக்டோபர்-நவம்பரில் மீண்டும் பஸ்தர் பகுதியில் நான்.

எந்தப் பகுதிக்கு மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று 2009 இல் ‘வணக்கம்’ சொல்லி வந்தேனோ அதே பஸ்தருக்கு மீண்டும் வந்திருக்கிறேன். உண்மையில் ஒருவகையில் ‘மீண்டு’ வந்திருக்கிறேன்.தர்பா பள்ளத்தாக்குத் தாக்குதலின் பின்னணியில், பஸ்தரில் தேர்தல் நடத்துவது கூடுதலான அழுத்தம் தருவதாக இருந்தது. தேர்தல், அமைதியாக நடக்க வேண்டும்; நம்பகத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்; இவையனைத்தையும் விட, பெரும் உயிர்ச்சேதத்தைத் தவிர்க்கும் வகையில் சாத்தியமான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பது தேர்தல் ஆணையம் தனக்குத்தானே வகுத்துக்கொண்ட இலக்குகள்.

இந்த இலக்குகளைக் கருத்திற் கொண்டு, பஸ்தர் வனப்பகுதிகளில் தேர்தல் நடத்த மிக விரிவாகத் திட்டமிட்டோம். தகவல் தொடர்பு வசதிகள் குறைந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் தேர்தல் அலுவலர்கள் சிலரையும், ஆயுதப்படையினரையும் வாக்குச்சாவடிக்கு அனுப்பி விட்டு அவர்கள் திரும்பி வந்து ‘உள்ளேன் அய்யா’ சொல்லும்வரை சும்மா உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது. அவர்கள் போவது, வருவது, தங்கியிருப்பது, பணி செய்வது எல்லாவற்றையும் கண்காணிக்க வேண்டும்.

ஒவ்வொருமுறை பொதுத் தேர்தல் நடத்தும்போதும், தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென மாவோயிஸ்டுகள் அறிவித்து, அப்புறக்கணிப்பை நடைமுறைப்படுத்தவும் முயற்சி செய்வார்கள். அப்படிப்பட்ட இடங்களில் வாக்கெடுப்பு நடத்தச் செல்பவர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் செல்வார்கள். சத்தீஷ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் தேர்தல் நடத்தப்போகும் போதும், திரும்பி வரும்போதும் சில இடங்களில் கண்ணிவெடிகளுக்குப் பலியாகிறவர்கள் அப்பாவித் தேர்தல் ஊழியர்கள்தாம். அப்படிப்பட்ட இடங்களில் தேர்தல் ஊழியர்களையும், ஆயுதப்படையினரையும் நேரில் சந்தித்து உரை நிகழ்த்தி உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தாலும் மனதுக்குள் ஏதோ அச்ச உணர்வு இருந்துகொண்டே இருக்கும்.

அவர்களில் யாருக்கு, எப்போது, என்ன நேரப்போகிறதோ என்ற அச்சம் உறுத்திக் கொண்டே இருக்கும். எனவே, 2013–ஆம் ஆண்டுத் தேர்தலின்போது, உயிர்ச்சேதங்களைத் தடுப்பதற்கு எல்லா வகைகளிலும் முயற்சி செய்வது என்று முடிவு செய்தோம். பாதுகாப்பு பற்றிய மிகுந்த அச்சம் நிலவும் இடங்களில், சில வாக்குச்சாவடிகளை அரசியல் கட்சிகள் / வேட்பாளர்கள் சம்மதத்துடன் மையமான வேறு இடங்களுக்குத் தற்காலிகமாக இடம் மாற்றினோம்.

என்னதான் இருந்தாலும் உயிர் பயம் என்பது எல்லாருக்கும் இருக்கும்தானே ? இதை மனதில் வைத்து தேர்தல் அலுவலர்களுக்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தினோம். “எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி ஒரு குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் அமைதியாகத் தேர்தல் நடத்த முடியாமற்போனால், அதற்காகக் கவலைப்பட வேண்டாம். உண்மையான அறிக்கை அளித்தால் போதும்; அதற்கு யாரும் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. மீண்டும் பலத்த பாதுகாப்புடன் அங்கு தேர்தல் நடத்திக் கொள்ளலாம் “ என்று உறுதியளித்தோம். இந்த வெளிப்படையான உறுதிமொழி தேர்தல் ஊழியர்களின் மனதில் நிலவிய அச்சத்தை பெருமளவிற்கு போக்கியது என்றே கூறலாம். அதுமட்டுமன்றி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விதிகளைப் புறக்கணித்து, நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அபாயகரமாக பயணம் செய்யும் போக்கையும் இது குறைத்தது.

மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர், உயர்போலீஸ் அதிகாரிகள், மத்திய ஆயுதப்படைகளின் ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல்துறை அதிகாரிகள், என்று மேலிருந்து கீழ் வரை சம்பந்தப்பட்ட அனைவரும் தேர்தல் ஆணையத்திலிருந்து நிலைமையைக் கண்காணித்த எங்களுடன் ‘நிகழ்நொடி’ அடிப்படையில் தொடர்பில் இருந்தார்கள். இதனால், சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்க உதவியாக அமைந்தது. நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் இதற்கு மிக உதவியாக இருந்தன. ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய தொலைபேசிகளை, ‘மிஸ்டு கால்’ அல்லது எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதியுடன் பயன்படுத்தி தேர்தல் ஊழியர்கள் பயணம் போகுமிடம், தங்குமிடம் என அனைத்தையும் கண்காணிப்பதற்கு உதவும் ஒரு செயலியை உருவாக்கினோம்.

கான்கேர் மாவட்டத்தில் ஓர் இடத்தில் தேர்தல் ஊழியர்களும், ஆயுதப்படையினரும் முன்கூட்டியே திட்டமிட்டபடி அதிகாலையில் ஒரு நதியைக் கடந்து மறுகரையிலுள்ள வாக்குச்சாவடிக்குச் செல்ல முயன்றபோது, நதியின் எதிர்க்கரையிலிருந்து துப்பாக்கித் தாக்குதலுக்கு உள்ளானார்கள். உடனே பின்வாங்கிய அவர்கள், கரைக்கு வந்ததும் அங்கிருந்த ஆயுதப்படையினர் மூலம் மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர், கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் ஆகியோருடன் தொடர்பு கொண்டு, அடுத்து என்ன செய்வது என்று கேட்டனர். அவர்களை இணைப்பில் வைத்துக் கொண்டே மாவட்ட ஆட்சியர் என்னை அழைத்தார்; இல்லை, எழுப்பினார். அப்போது நேரம் அதிகாலை ஐந்து மணி.

டெல்லியில் என் விடுதி அறையில் நான் தூங்கிக் கொண்டிருந்தேன். “அன்று அந்த வாக்குச்சாவடியில் தேர்தல் நடத்த வேண்டியதில்லை. பின்னர் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடத்திக்கொள்ளலாம்” என்று அந்த நொடியே முடிவு எடுத்தோம். பொதுவாக இம்மாதிரி நெருக்கடியான நேரங்களில் களத்திலிருப்பவர்கள் குழப்பமான முடிவுகளை எடுக்குமாறு நேர்ந்துவிடும். நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் உதவியால், அம்மாதிரியான அவசரமான தருணங்களில் உடனடித் தலையீடு செய்ய முடிந்தது. இந்தியா முழுவதிலுமிருந்து வரவழைக்கப்பட்ட மத்திய காவல் படையினர், மற்றும் மாநில காவல்படை உதவியுடன் சத்திஸ்கர் தேர்தல் கூடுமானவரை அமைதியாகவும், நம்பகத்தன்மையுடனும் நடைபெற்றது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் ‘நோட்டா’ (None Of The Above) முறை முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது 2013 சத்திஸ்கர் தேர்தலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.அதிலும் குறிப்பாக, பஸ்தர் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்குப்பதிவு நடைபெற்றது மனநிறைவை அளிக்கும் அனுபவமாகும். ஒரு பணி செம்மையாக நடைபெற்றதா என்பதை மதிப்பிடுபவர்கள் உயரதிகாரிகள் மட்டுமல்லர், நமக்குக்கீழே பணிபுரியும் மற்ற அதிகாரிகளும்தான் என்ற உணர்வு எனக்குள் எப்போதுமுண்டு. அதைவிட மேலாக ஒரு பணியின் நோக்கமும், செயலும், நிறைவும் பொதுமக்களிடையே பரவலாகத் தோன்றும் பொதுக்கருத்தின் அடிப்படையிலேயே மதிப்பிடப்பட வேண்டும். இதற்கு தனியோர் அளவு கோல் இல்லையென்றாலும் பொதுக்கருத்து என்பது ஒரு நிதர்சனமான உண்மையும், கண்கூடான அளவீடுமாகும். இதற்கு 2013 சத்திஸ்கர் தேர்தல் ஓர் எடுத்துக்காட்டாகும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அலர்மேல்மங்கை. இவர் 2013—இல் கான்கேர் என்ற மாவட்டத்தில் ஆட்சித்தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இம்மாவட்டத்தில் 11.11.2013 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மிகக்கடுமையான இந்தத் தேர்தலை, மிகத் துணிச்சலோடும் திறமையுடனும் அவர் நடத்தினார். எல்லாத் தேர்தல் ஊழியர்களும் திரும்பி வந்துசேர்ந்தபின், எல்லா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் பாதுகாப்பு அறையில் வைத்துப்பூட்டி ‘சீல்’ வைத்த கையுடன் அவர் எனக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பினார்.

“இப்போதுதான் மூன்று பாதுகாப்பு அறைகளையும் பூட்டி சீல் வைத்தேன். அனைவரும் பாதுகாப்புடன் திரும்பி வந்துவிட்டனர்…” என்று தொடங்கும் அந்த மின்னஞ்சலின் ஒவ்வொரு வார்த்தையிலும் அவரின் நிறைவும் பெருமிதமும் தொனித்தது. பஸ்தர் தேர்தல் உண்மையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலாக நடந்திருக்கிறது. இதற்குக் காரணம் வன்முறைச் சம்பவங்கள் குறைவு என்பது மட்டுமன்றி, தேர்தலின் நம்பகத்தன்மையும் ஆகும் என்று அவர் எழுதியிருந்தார். மாவோயிஸ்ட் தீவிரவாதம் தலைதூக்கிய பின்னர் நடந்த தேர்தல்களில் இதுதான் நம்பகத்தன்மை வாய்ந்த தேர்தல்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடி பற்றிய தனது நேரடி அனுபவத்தையும் அவர் என்னுடன் பகிர்ந்திருந்தார். ‘ஆன்ட்டகார்’ என்ற சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடி, நாகல்கண்ட் ‘( வாக்குச்சாவடி எண்; 97 ). தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன் தேர்தல் புறக்கணிப்பு ஊர்வலமொன்றை நக்சலைட் தீவிரவாதிகள் இந்தக் கிராமத்தில் நடத்தியிருந்தனர். புறக்கணிப்பை மீறி வாக்களித்தால் என்ன நடக்கும் என்று அச்சுறுத்தும் வகையில் மனித உருவ பொம்மைகளை மரத்தில் கட்டித் தொங்க விட்டிருந்தார்கள்.

ஆனால் அந்த வாக்குச் சாவடியில் வரலாறு காணாத அளவிற்கு 90 விழுக்காடு வாக்குகள் பதிவாயின. வாக்குச் சீட்டிற்கும் துப்பாக்கி குண்டுகளுக்குமான (Ballot Vs Bullet) இந்தப் போட்டியில் மக்களாட்சி என்ற மகத்துவத் தத்துவம் வென்றது. இதற்கு முக்கியக் காரணம் மிக வெளிப்படையாக ஒளிவுமறைவின்றி தகுந்த பாதுகாப்புடன் தேர்தல் நடத்தப்பட்டதே ஆகும்.

Image
வாக்குச்சாவடிக்குச் செல்லும் தேர்தல் ஊழியர்கள் வாக்குச்சாவடிக்குமுன் நின்று தேதியிட்ட மற்றும் நேரம் குறிப்பிட்ட புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்; வாக்குப்பதிவின் ஒவ்வொரு நிலையிலும் தேதியிட்ட புகைப்படப் பதிவுகள் இருக்க வேண்டுமென கட்டளையிட்டிருந்தோம். இதை அந்த ஊழியர்கள் செய்திருந்தார்கள். அந்த வாக்குச் சாவடியின் முன்னர் நூற்றுக்கணக்கில் ஆண்களும் பெண்களும் வரிசையில் நின்று வாக்களிக்கும் புகைப்படங்களை அலர்மேல்மங்கை எனக்கு அனுப்பிவைத்திருந்தார். பஸ்தர் பகுதியில் அமைதியாக தேர்தல் நடத்த முடியுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் ஆவணப்பதிவுகளாய் அமைந்தன இந்தப் புகைப்படங்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

பாதுகாப்பான தேர்தல்களை நடத்த வாக்குச்சாவடி வாரியாக சிறப்புத் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தியிருந்த அவரின் திறமையைப் பாராட்டி, 2014—ஆம் ஆண்டு,ஜனவரி, 22 அன்று டெல்லி விக்யான்பவனில் நடந்த தேசிய வாக்காளர் தின நிகழ்வின்போது, இந்திய தேர்தல் ஆணையம் அலர்மேல்மங்கைக்கு விருது வழங்கி பாராட்டியது. அவர் விருதுபெற்ற போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. உலக நாடுகளில் அனைவருக்குமான வாக்குரிமை தவணைமுறையில் வந்தது. அதை சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனம் ஒரே நாளில் தந்தது. பொதுத்தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட மக்களாட்சி முறையில் எத்தனையோ குறைபாடுகள் இருக்கலாம். எனினும், இதற்கு நிகரான இன்னோர் ஆட்சிமுறை இல்லையென்பதே உண்மை.

மக்களாட்சி முறைக்கு எதிரான வன்முறைகள் தலைவிரித்தாடும் ஓர் இடத்தில் நடக்கும் தேர்தல் என்பது, ஒரு வேட்பாளருக்கும் மற்றொரு வேட்பாளருக்கும், ஒரு கட்சிக்கும் மற்றொரு கட்சிக்கும் இடையே நடைபெறுகிற தேர்தல் அல்ல. உண்மையில் அது மக்களாட்சியின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கும், அதன்மீது நம்பிக்கை அற்றவர்களுக்குமிடையிலான தேர்தலே. அவ்வாறு மக்களாட்சி மீது நம்பிக்கை வறட்சி தலைதூக்கும் இடங்களில் அதைச்சரி செய்யும் ஒரே மருத்துவம், நம்பகத்தன்மை கொண்ட தேர்தல் மட்டுமே. இந்த நிறுவன அறம் மேலும் நிலைபெறுவதை பொறுத்ததே இந்திய மக்களாட்சி முறையின் எதிர்காலம்.

பஸ்தரின் பசுமைக்காடுகள் என் மனத்தில் இனம்புரியா ஒர் உணர்வை ஏற்படுத்திய வண்ணமே இருக்கின்றன. இம்முறை மிக இக்கட்டான ஒரு சூழலில் பஸ்தரில் யாரும் குறைசொல்லமுடியாத ஒரு தேர்தலை நடத்திக்காட்டும் முயற்சியில் மீண்டும் பங்களிக்க வருவேன் என்று நினைத்தே பார்க்கவில்லை. இதயத்தை தொட்ட இரண்டாம் சுற்று இது.

இதோ,எனது ஹெலிகாப்டர் பஸ்தர் பகுதிகளை விட்டு தலைநகர் ராய்பூரை நோக்கி விரைகிறது. நான் மவுனமாக அந்தக் காடுகளின் பசுமைப் புதிர்முடிச்சுகளை வானிலிருந்து பார்த்தபடி மனதிற்குள் சொல்கிறேன் மீண்டும் ஒரு வணக்கம்.

 

ஒவ்வொரு சேய்க்கும்
ஒவ்வொரு தாய்..
அவள் மடி
தாய் மடி..

பண்பாடு பால்குடித்த
ஆதி மலைகள்
தொன்மையின் தொட்டில்கள்..

இதோ..

கால மணல்வெளியில்
காணாமல் போயின…
எங்கள்
பண்டையப் பயணங்களின்
பாதச்சுவடுகள்.

காடுகளில் தொலைந்தன
எங்களின்
பாட்டிகள் குளித்த
பழைய ஓடைகள்.

கைவிடப்பட்ட மரங்களின்
நிழல்களில்
கதறி அழுதன,
படையல் இழந்த
எங்களது சாமிகளும்,
குட்டிச் சாமிகளும்..

இனி, ஒரு போதும்
மீளாதென
ஒரேயடியாய் மறைந்தது
எங்களின் உடனடி உலகம்.

இதோ வெகுதூரத்தில், 
ஒரு புதிய வானத்தின் கீழ்
எங்களின்
பழைய நினைவுகளால்
பதியம் போட்ட
புதிய ஊர்களும்..
அவற்றின்
பழைய பெயர்களும்.

எங்கள்
பச்சை ரத்தத்தில்
பச்சை குத்திய
பழந்தாலாட்டுகள்…

எங்களின்
புதிய தெம்மாங்குகளில்
புதைந்து கிடக்கும்
பழைய குரோமோசோம்கள்..

கருத்தரிக்கிறோம் நாங்கள்
மீண்டும் மீண்டும்…
எங்களின்,
புராதனச் கருப்பையை
மீண்டும் பிரசவிக்க…

 

மிக்க நன்றி

2017—ஆம் ஆண்டு. மே 30-ஆம் தேதி. ஒடிசா முதல்வரின் கலந்தாய்வு அறை. முதல்வர், சுகாதார அமைச்சர், தலைமைச்செயலர், சுகாதாரத் துறைச்செயலர் மற்றும் உயரதிகாரிகள் அறையிலுள்ளனர். நானும் அமர்ந்திருக்கிறேன். எங்களது சிறப்பு அழைப்பின் பேரில் இந்தியாவின் முன்னணி புற்றுநோய் மருத்துவர்களில் ஒருவரான, மும்பையைச் சேர்ந்த டாக்டர் பெந்தார்கரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

காணொளிக் கலந்தாய்வின் மறுமுனைகளில் 30 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் மாவட்ட மருத்துவ அதிகாரிகளும் மற்றும் பலரும் அமர்ந்திருக்கின்றனர். சோதனை அடிப்படையில் ஏற்கெனவே பதினைந்து மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மாவட்ட புற்றுநோய் சிகிச்சைத் திட்டம், (டிஸ்ட்ரிக்ட்கேன்சர் கேர் ப்ரொக்ராம் —டி.சி.சி.பி.) எப்படி நடைபெற்று வருகிறது என்பதை முதல்வர் அளவில் ஆய்வு செய்வதற்காகவும், இந்தத் திட்டத்தின் செயல்பாட்டு முறை பற்றிய கையேட்டை வெளியிடுவதற்காகவும் அந்தக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தத் திட்டம் ஏற்கெனவே செயல்பட்டுவந்த 15 மாவட்டங்களில் இத்திட்டத்தால் பயன்பெற்ற சில புற்று நோயாளிகளும், அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் காணொளியில் முதல்வருடன் பேசுவதற்காக அமர்ந்திருந்தார்கள். சுகாதாரச் செயலர் இத்திட்டம் எப்படி செயல்படுகிறது என்று விளக்கினார். திட்டம் சிறப்பாகச் செயல்படுவது பற்றி மகிழ்ச்சி தெரிவித்த முதல்வர் இத்திட்டம், மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் (30 மாவட்டங்கள்) விரிவுபடுத்தப்படுவதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து காணொளி மூலம் இத்திட்டம் பற்றி பின்னூட்டம் பெறப்பட்டது. நவரங்பூரிலிருந்து புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் நோயாளி ஒருவர் காணொளியில் தோன்றி கண்ணீர்மல்க உணர்ச்சி பொங்கப் பேசினார். ஒவ்வொரு முறையும் நூற்றுக் கணக்கான மைல்கள் பயணம் செய்து சிகிச்சை பெறச்சென்று துன்பப்படுவதை விட செத்துப்போவதையே நான் விரும்பினேன். இப்போது எனது மாவட்டத்திலேயே சிகிச்சை பெறுகிறேன். இது எனக்கு வரம் போன்றது; மிக்க நன்றி” என்றார். அவர் பெரிதும் உணர்ச்சிவசப்பட்ட போது, அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அவரின் தோள் மீது கைவைத்து ஆறுதல் அளித்ததைக் காணொளியில் கண்டோம். அப்போது எனது கண்கள் ஈரமாகிவிட்டன.

“மாவட்ட அளவில் புற்றுநோய் சிகிச்சையளிப்பதால் நோயாளிகள் பெரிதும் பயனடைகிறார்கள். வீணாக அலையவேண்டியதில்லை; ஏழை மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இந்த முயற்சியில் பங்களிப்பதன் மூலம் நான் படித்த மருத்துவப்படிப்புக்கே ஒரு புதிய அர்த்தம், புதிய நியாயம் கிடைத்திருக்கிறது”, என்று இளம் மருத்துவர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார். ரூர்கேலா என்ற இடத்தைச் சேர்ந்த நோயாளி ஒருவர், தான் ஒவ்வொருமுறையும் மும்பை வரை சென்று மிகப்பெரும் தொகைகள் செலவு செய்து சிகிச்சை பெற்று வந்ததாகவும், இப்போது மாவட்டத்திலேயே சிகிச்சை பெறுவதால் மிகுந்த பயனடைந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
டாக்டர் பெந்தார்கர், இந்தத் திட்டம் சோதனைமுறையில் நடைபெறும் 15 மாவட்டங்களுக்கும் பலமுறை நேரில் சென்றிருக்கிறார்.

இத்திட்டத்தின் முதுகெலும்பான டாக்டர் பெந்தார்கர் எனக்குப் புற்று நோய் சிகிச்சையளித்த (கீமோதெரபி ) டாக்டர் என்பதும் முதல்வருக்குத் தெரியும். இந்தக் காணொளி நிகழ்வின் போதும் இதுப்பற்றிக் குறிப்பிட்டேன். டாக்டர் பெந்தார்கரை 2009 இல் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த நவீன் சாவ்லா,எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவரிடம் மும்பையிலும்,டெல்லியிலும் நான் சிகிச்சை பெற்றேன். அப்படிப்பட்ட ஒரு மருத்துவ நிபுணர் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களுக்கும், ஏழைகளுக்கும் சிகிச்சை அளிக்கிறார். இப்படியொரு திட்டத்தை நாங்கள் ஒடிசாவில் வடிவமைத்து செயல்படுத்தி வருகிறோம் என்பது எனது ‘இரண்டாம் சுற்றை’ நியாயப்படுத்தும்; பொருள் உள்ளதாக ஆக்கும்; நெகிழ்ச்சியை உண்டாக்கும் காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது.

இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மிகவிரைவாக அதிகரித்துவருகிறது. 2021ஆம் ஆண்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிகை 7 கோடியைத் தொட்டுவிடும் என்ற கணிப்பு அச்சுறுத்துகிறது. மிகக் குறைந்த காலத்திலேயே வெகு விரைவாக மாறிவிட்ட நமது வாழ்க்கை முறை, உணவுப்பழக்கங்களால் புற்றுநோய் மிகப்பெரிய அபாயமாக அதிகரித்துவருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 1250 புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் தான் இருக்கிறார்கள். அதாவது 2000 புற்றுநோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதாச்சாரம் உள்ளது. இதை 1000 புற்றுநோயாளிகளுக்கு ஒருவர் என்ற நிலைமைக்காவது கொண்டுவந்தால் நிலைமையில் கொஞ்சம் மாற்றம் நேரிடும்.

உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையங்கள் பெரும்பாலும் மிகப்பெரிய நகரங்களில் மட்டுமே உள்ளன. சிறுநகரங்களில் வசிப்பவர்களுக்கே போதுமான சிகிச்சை வசதி இல்லை. இதில் கிராம மக்களின் அவல நிலையை சொல்லிமாளாது. மேலும், புற்றுநோய் சிகிச்சை பெரும் செலவு வைக்கும். நான்கைந்து லட்சம் ரூபாய் செலவழிப்பது என்பது குறைந்த வருவாயுள்ள குடும்பங்களைக் கடனுக்குள்ளாக்கி நடுத்தெருவில் நிற்கவைத்துவிடும். புற்றுநோய் ஒரு சிறப்பு மருத்துவப் பிரிவு என்பதால், மற்ற நோய்களுக்கு போல மாவட்ட அளவில் ஆங்கில மருத்துவ சிகிச்சை கிடைப்பதில்லை.

‘கீமோதெரபி’ என்ற மருத்துவம் கூட எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. இந்தியாவின் தென்மாநிலங்களில் ஓரளவு பரவாயில்லை. ஆனால், வடமாநிலங்களிலும் மற்றும் கிழக்கிந்திய மாநிலங்களிலும் நிலைமை அப்படியில்லை. இங்கு பெரும்பாலும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், புற்றுநோய் சிகிச்சை சிறப்புமையங்களிலும் மட்டுமே சிகிச்சை கிடைக்கும் என்பதால், நோயாளிகள் ஒவ்வொருமுறையும் ‘கீமோதெரபி’, மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை (‘ரேடியோ தெரபி’) பெற நூற்றுக்கணக்கான மைல்கள் பயணம் செய்து அல்லல்படுகிறார்கள்.

இதனால் புற்றுநோயைவிடவும் கொடுமையானது புற்றுநோய் சிகிச்சை என்ற அச்ச உணர்வு பெரும்பான்மையாக நிலவுகிறது. அதுமட்டுமன்றி, புற்றுநோய் சிகிச்சையை முறைப்படி குறிப்பிட்ட இடைவெளியில் பெறாதவர்களும், தொடர்ந்து சிகிச்சை பெறாமல் பாதியில் மனம் தளர்ந்து, உடல் தளர்ந்து கையிலிருக்கும் காசையும் இழந்து சிகிச்சையை கை விடுகிறவர்களும் ஏராளம்.

2009 – 2010 ஆம் ஆண்டில் மும்பையிலும், டெல்லியிலும் பல்வேறு மருத்துவமனைகளில் பல்வேறு நிபுணர்களின் உதவியோடு நான் சிகிச்சை பெற்றுவந்த போது அடிக்கடி எனக்குள் ஓர் எண்ணம் எழும்: என்னைச்சுற்றி, என்னைக் கவனித்துக் கொள்ள, என் மீது அக்கறைகொண்ட எத்தனை பேர் இருக்கிறார்கள். ஆனால், சாதாரண ஏழை மக்களின் நிலைமை என்ன?

நான் உடல் நலம் குன்றிய போது இந்தியத் தேர்தல் ஆணையம் என்னை தாங்கிப்பிடித்தது. தேவைப்பட்டால் வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கவும் தயார் என்று தலைமைத் தேர்தல் ஆணையரே எனக்கு தைரியம் கொடுத்தார். ஒவ்வொருமுறை ‘கீமோதெரபி’ சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனைக்குச் செல்லும் போதும் என்னை கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டார்கள்.

ஆனால் இந்த கவனிப்பு, வசதி வாய்ப்புகள் குறித்த ஏதோ ஒரு யோசனை எனக்குள் உறுத்திக்கொண்டே இருந்தது. ஒருமுறை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு மூத்த மருத்துவர் ஒருவரைப்பார்க்கச் சென்றிருந்தபோது அங்கு அலைமோதிய கூட்டம் அதிர்ச்சி ஊட்டியது. 2013 -14 களில் இதே நோயால் பாதிக்கப்பட்ட எனது தம்பி ஜெயச்சந்திரனை கோவையிலும் சென்னையிலும் பல்வேறு மருத்துவமனைகளிலும் வைத்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பல்வேறு சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் போனது. இறுதியில் அவரை 2016 இல் இழந்தோம்.

2014-டிசம்பரில் உதவித் தலைமைச் செயலராகப் பதவி உயர்வு பெற்று நிதித்துறைப்பொறுப்பேற்று ஒடிசாவுக்குத் திரும்பிய பின்னர், பொது சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய விவாதங்களின்போது புற்று நோய் சிகிச்சை பற்றியும் பேச்சு வந்தது. கீமோதெரபியை எளிதாக்குவது எப்படி என்று தீவிரமாக விவாதித்தோம். இதற்கிடையில் ஒருமுறை எனது டாக்டர் பெந்தார்கரை எதேச்சையாக டெல்லியில் சந்தித்தேன். அப்போது அவர் எனக்கு மருத்துவர் என்ற கோட்டைத் தாண்டி நெருக்கமான நண்பராகவும் ஆகியிருந்தார். டில்லியில் ‘நீத்தி ஆயோக்’ வாசலில் நின்றபடி பேசிக்கொண்டிருந்தோம். எனது தம்பியின் சிகிச்சை பற்றி பேசிக்கொண்டிருந்த நாங்கள் பொதுவாக நமது நாட்டில் புற்றுநோய் சிகிச்சையில் உள்ள பிரச்சனைகள் பற்றியும் விவாதித்தோம்.

புற்றுநோயைக் கண்டுபிடிப்பது. அறுவை சிகிச்சை செய்வது; நோயாளிக்கு என்ன மாதிரியான கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை அளிப்பது போன்ற பணிகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் தேவை. மற்றபடி, கீமோதெரபி கொடுப்பது, பக்கவிளைவுகளை சமாளிப்பது இன்னும் சொல்லப்போனால் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்து நோயாளிகளை சிறப்பு மருத்துவர்களிடம் அனுப்பிவைப்ப்பது போன்ற பணிகளைச் செய்ய பொதுவான ஆங்கில மருத்துவர்களே போதும் என்றார்.

அதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓரிரு ஆங்கில மருத்துவர் மற்றும் செவிலியருக்கு டில்லியிலும் மும்பையிலும் சிறப்பு சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சி தந்து தயார் செய்துவிடலாம் என்றார். மத்தியப்பிரதேச மாநில அரசும் அவரும் இணைந்து ஒரு புதிய முயற்சியை பரிசோதனை அளவில் மேற்கொண்டிருப்பதாகச் சொன்னார். இந்த முறையை ஒடிசாவில் மிகச்சிறப்பாக செயல்படுத்தலாம், அதற்கான எல்லா உதவிகளையும் செய்யத்தயார் என்றும் கூறினார். நான் இதுபற்றி எங்களது சுகாதாரத்துறைச் செயலர் ஆர்த்தி ஆகுஜாவிடம் தெரிவித்தேன். அடுத்த வாரமே டாக்டர் தினேஷ் பெந்தார்கரை மும்பையிலிருந்து வரவழைத்தோம். அவர் மத்தியப் பிரதேச மாநில புற்றுநோய்ச் சிகிச்சைத் திட்டத்தின் ஒருங்கிணைப்பா ளரான டாக்டர் சி.எம். திரிபாதி என்பவரையும் உடன் அழைத்துக்கொண்டு வந்தார்.

அவர்களிருவரும் தமது அனுபவத்தை விளக்கினர். தலைமைச் செயலர் அளவில் ஆலோசனை நடந்தது. அதன்பிறகு ஒடிசாவைச் சேர்ந்த மருத்துவக் குழுவினரை மத்தியப்பிரதேசத்துக்கு அனுப்பி வைத்தோம். அவர்களின் அனுபவங்கள் பற்றி அறிக்கை சமர்ப்பிக்கச் சொன்னோம்.

Image
அவர்கள் அளித்த அறிக்கையுடன் டாக்டர் பெந்தார்கருடன் மாநில முதல்வரைச் சந்தித்து திட்டத்தை விளக்கினோம். ஏழை மக்களுக்கு புற்று நோய் சிகிச்சை கிடைக்க எல்லாவகையான முயற்சிகளையும் செய்யுமாறு கட்டளையிட்டதுடன் இதற்காக வரவு செலவு திட்டத்தில் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவும் முதல்வர் ஆணையிட்டார். அதன் அடிப்படையில் டாக்டர் பெந்தார்கரின் வழிகாட்டுதலில் இலவச புற்றுநோய் சிகிச்சை மையத் திட்டத்தை முதல் கட்டமாக ஏழு மாவட்டங்களில் சோதனை முயற்சியாகச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓர் ஆங்கில மருத்துவர், இரண்டு செவிலியர்களுக்கு டெல்லிக்கு அருகிலுள்ள பரீதாபாத்தில் 4 வாரமும், மத்தியப்பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி மாவட்ட மருத்துவமனையில் 2 வாரமும் சிறப்புப் பயிற்சி அளித்தோம். முதல் அணி பயிற்சிபெற்று திரும்பியதும் டாக்டர் பெந்தார்கரின் நெறியாளுகையில் ஒடிசா மருத்துவ நிபுணர்கள் புற்றுநோய் மருத்துவ சிறப்பு முகாம்களை நடத்தினார்கள். கீமோதெரபி சிகிச்சை தேவைப்படும் நூற்றுக்கணக்கான நோயாளிகளைக் கண்டறிந்தனர்.

Image

2016—ஆம் ஆண்டு ஏப்ரலில் நவ்ரங்பூர் என்ற இடத்தில் மாவட்ட மருத்துவமனையில் 6 படுக்கைகள் கொண்ட ‘கீமோ’ சிகிச்சையளிக்கும் மையம் தொடங்கப்பட்டது. பின்னர் 15 மாவட்டங்களுக்கு விரிவாக்கப்பட்ட இந்தத் திட்டம் இப்போது மாநிலம் முழுமைக்குமான திட்டமாகச் செயல்படுத்தப்படுகிறது, இது மட்டுமின்றி ஒடிசாவில் புதிதாக அனைத்து வசதிகளுடன் கூடிய நான்கு கதிர் இயக்கச் சிகிச்சை மையங்களைத் திறக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அக்கருவிகளை வாங்குதல், கதிர் இயக்க மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்ற பணிகளும் துரிதமாக நடந்து வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை 30 ஆங்கில மருத்துவர்களும் 60 செவிலியர்களும் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் பல முகாம்கள் நடைபெற்றுள்ளன. 12,000 பேருக்கும் அதிகமான புற்று நோயாளிகள் பயனடைந்துள்ளனர். 8000 -க்கும் மேல் ‘கீமோதெரபி’ சிகிச்சைகள் அளிக்கப் பட்டுள்ளன. இது இன்றுவரையான நிலவரம்.

Image

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச சிகிச்சையும், மருந்துகளும் வழங்கப்படுகின்றன. மாவட்ட அளவில் சிறப்புப் பயிற்சி பெற்று இதற்கு சிகிச்சையளிக்க முன்வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் அல்லர்; தன்னார்வ அளவில் முன்வந்தவர்கள்.

மாவட்ட அளவிலான இந்த கீமோதெரபி மையங்களை கட்டக்கிலுள்ள ஆச்சார்ய அரிகர் மண்டல புற்றுநோய் ஆய்வுமையத்தோடு தொழில்நுட்ப அடிப்படையில் காணொளி மற்றும் கணினிகள் மூலம் இணைத்துள்ளதால் சிறப்பு மருத்துவ மையங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க முடிகிறது. டாக்டர் பெந்தார்கர் அடிக்கடி ஒடிசாவிலுள்ள மாவட்டங்களுக்கு வந்து போகிறார். தேவைப்படும் போதெல்லாம் நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகள் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் அவருக்கு அனுப்பப்பட்டு ஆலோசனை பெறப்படுகிறது.

இப்போதெல்லாம் நான் மாவட்ட சுற்றுப்பயணங்கள் செல்லும் போது இலவச புற்றுநோய் மையத்திற்கு தவறாமல் செல்கிறேன். சிறப்பு பயிற்சி பெற்று சேவையாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் சிகிச்சை பெறும் நோயாளிகளைச் சந்தித்துப் பேசுகிறேன். நோயாளிகளின், அவர்களது குடும்பத்தினர்கள் நெகிழ்ச்சியுடன் உரையாடும் போது அந்த மருத்துவர்களின் முகங்களில், செவிலியர்களின் முகங்களில் தெரியும் பெருமிதத்தையும் நிறைவையும் கவனிக்கத்தவறுவதில்லை.

இதன் அடுத்த கட்டமாக ஒடிசா முழுவதும் புற்றுநோய் சிகிச்சையை ஒருங்கிணைக்கவும் மும்பையில் உள்ளது போல மிக நவீன புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையை புவனேஸ்வரத்தில் அமைக்கவும் ஒடிசா மாநில அரசு டாடா அறக்கட்டளையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. எவ்வளவோ அவநம்பிக்கைகளுக்கிடையே, வாழ்க்கை நம்பிக்கை தருவதாகத்தான் இருக்கிறது.

இருட்டு வணிகர்கள்
ஏதேனும் சொல்லட்டும்,
வெளியே உலகம்
வெளிச்சமாகத்தான் இருக்கிறது.
எது நெகிழ்ச்சி அளிக்கிறதோ
அதுவே மகிழ்ச்சி அளிக்கிறது என்று எனது “சிறகுக்குள் வானம்” நூலில் நான் எழுதியிருந்த வரிகளை மேலும் மேலும் பொருளுள்ளதாக ஆக்குகிறார்கள் டாக்டர் பெந்தார்கரும் இந்த மருத்துவர்களும் செவிலியர்களும்.

Image

’நன்றி’ என்பது
சொல் அல்ல
செயல்.

செய்தவனுக்குச் செய்வது
மொய்.
ஆனால்
செய்யாமல்
செய்த உதவி
மெய்.
அது கணக்கில்
அடங்காத
ஒரு கணக்கு.
உண்மையில்
அது ஓர் அறம்.

“வையகமும் வானகமும்
ஆற்றல்” அரிதென்றால்
இந்தக்
கைமாறு வேண்டா
கடப்பாட்டை
எந்த
“மொய்”க் கணக்கு
முழுதாய் நேர்செய்யும்?

சில நேரம்
செய்யாமல் செய்த
உதவிக்கு
செலுத்த முயலும்
சில்லரை விலை
அந்த
அறத்தின் பெருமையை
காயப்படுத்தும்.

’நன்றி’ என்பது
வெறும்
கொடுக்கல் வாங்கல் என்றால்
அதைப்
பொருட்பாலில்
வைத்திருப்பார் வள்ளுவர்.
“நன்றி” என்னும் “நன்மை”
அகத்தில் ஊறும்
அறத்துப்பால்.

பயன் தெரிதல்
என்பது
ஒரு பக்குவ நிலை.
தனிமனித ஒழுக்கம்.
சமூக நெறி.

பனைத்துணை
தினைத்துணை
என்பதெல்லாம்
பார்வையைப் பொறுத்தது.
கடல் நடுவில்
தவித்த வாய்க்கு
தண்ணீர்
தினையா? பனையா?

இடுக்கண் களைந்த
நண்பனின் கை
வலக்கையா
இடக்கையா
என்பதா முக்கியம்?
அது
வரக்கை
என்பதே முக்கியம்.

நன்றியும் நன்மையும்
வேறு வேறா?
அல்லது
இரண்டிலும் ‘நல்’ / ‘நன்’
ஒரே வேரா?

“நன்மை செய்யப்படுகிறது
நன்றி நினைக்கப்படுகிறது”
என்பது
எவ்வளவு தூரம் உண்மை?

நன்மையை நினைக்காமல்
நன்மை செயலாகுமா?
நன்றி ‘இல்லாமல்’
நன்றி” இருக்குமா?

‘நன்றி’யை
எந்தத் துலாக்கோல்
துல்லியமாய்
எடை போடும்?
எந்தப் “பங்குச்சந்தை”
அதன்
நிகர மதிப்பை
நிர்ணயிக்கும்?

‘பயன்’ தூக்கியவன்
பல்லக்கு தூக்கினான்.
நயன்தூக்கினான்
அந்த நல்லறத்தின்
வீரியத்தை தன்
நரம்பில் ஏற்று
நலம் பாராட்டினான்.

உறவுகளின்
ஐந்தொகை கணக்கில்
எண்கள் அல்ல
முக்கியம்.
பல தீமைகளை
நேர் செய்யும்
ஒரு நன்மை.

நமது
வரவு -செலவை
நாம் தானே
பார்க்கிறோம்?

“உதவி செயப்பட்டார்
சால்பின் வைத்தது
உதவி” என்பதால்
தீமைகளை மறந்து
நன்மையை
நினைப்பது
நமது கையில்.

ஏனெனில் இது
வெளித் தணிக்கை
அல்ல.
உள் தணிக்கை.

கொடுத்த கை
சிவக்கிறதோ இல்லையோ
வாங்கிய கை
மறக்கக் கூடாது.

‘நன்றி’ என்ற
‘நன்மை’ தான்
கடவுள் என்ற
‘பட்டப்பெயர்’
தாங்கிய
அறம்.

அறம் ஒரு
வலைப்பின்னல்.
ஓர் அறத்தைத்
தாங்கும்
இன்னொரு அறம்.

இந்த
‘மெல்லிய’
அறவலை தான்
சுமக்கிறது
பூமியின் எடையை…
மிக்க நன்றி.

உலகத்தை முத்தமிட்டவர்

அந்த மனிதரை நேரில் பார்க்க வேண்டும் என்று அவ்வப்போது தோன்றும். பார்க்க வேண்டுமென்று முயற்சி செய்திருந்தால் எளிதில் பார்த்து விடக்கூடிய தூரத்தில்தான் அவர் இருந்தார். அவர் பெங்களூரில் வசித்து வந்தாலும் அவரது நிறுவனத்தின் மிகப்பெரிய கிளை ஒடிசாவில், புவனேஸ்வரத்தில்தான் இருக்கிறது. அதுமட்டுமன்றி ஒடிசா மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் தேபி பிரசாத் பாக் ஷியின் உடன் பிறந்த தம்பி அவர். எனவே நான் அவரை எளிதில் சந்தித்திருக்கலாம். ஆனாலும் அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை.நானும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை, 2016 பிப்ரவரி மாதம் வரை.

அவர் பெயர் சுப்ரத் பாக் ஷி. “மைண்ட் ட்ரீ” என்ற உலகப்புகழ் பெற்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தை நிறுவியவர். அந்த நிறுவனம், 2014-2017 நிதியாண்டில் சுமார் 5200 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. இந்த நிறுவனத்தில் 16,500-க்கு மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள்.
2016 பிப்ரவரி. ஒடிசா மாநில அரசின் தொழில் துறை செயலரான சஞ்சீவ் சோப்ரா என்னை அவரது வீட்டுக்கு இரவு விருந்துக்கு அழைத்திருந்தார். அப்போது பட்ஜெட் (2016-17 ) தயாரிக்கும் பணியில் நான் மூழ்கி இருந்தேன். ‘கொஞ்சம் தாமதமாக வருவேன்’ என்று சொன்ன நான், “வேறு யார் யாரை எல்லாம் விருந்துக்கு அழைத்திருக்கிறீர்கள் ? ” என்று கேட்டேன். அவர் சில பெயர்களைச் சொல்லும் போது சுப்ரத் பாக் ஷியின் பெயரையும் சொன்னார்.

“அப்படியென்றால், கட்டாயம் வருகிறேன்” என்று சொன்ன நான், குறித்த நேரத்துக்கு முன்னதாகவே விருந்துக்குச் சென்றேன். நான் அங்கு சென்றடைந்த போது, சுப்ரத் பாக் ஷி ஏற்கெனவே அங்கு வந்திருந்தார். நாங்களிருவரும் கைகுலுக்கிக் கொண்ட போது, “ உங்களைப் பார்க்க வேண்டுமென்று பல வருடங்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று நான் சொன்னேன். “சொல்லியிருந்தால் நானே வந்திருப்பேனே…” என்றார் சிரித்துக் கொண்டே. அது தான் சுப்ரத் பாக் ஷி. பேச்சில் இனிமையும் கவிதையும் வழியும். ஒவ்வோர் அசைவிலும் எளிமை இயல்பாகவே இருக்கும்.

அப்போதுதான் ‘ஒடிசா அறிவுப் புலம்‘ (Odisha Knowledge Hub) சுருக்கமாக, OKH என்ற பெயரில் எனது துறையில் ஓர் அமைப்பை முதல்வரின் அனுமதியுடன் தொடங்கியிருந்தோம். வெவ்வேறு துறைகளில் பட்டறிவுடைய நிபுணர்களை அழைத்து, வந்து பேச வைத்து அமைச்சர்கள் உட்பட உயரதி காரிகள் அனைவரும் அமர்ந்து கேட்கும் அனுபவப்பகிர்வுத் தளம் அது. இது ஒரு சொற்பொழிவுத்தொடர். அவ்வப்போது, உலகப்புகழ் பெற்ற, தேசிய அளவில் சாதனைகள் செய்த வல்லுநர்களை அழைத்து வந்து இங்கு உரையாற்ற வைத்துக் கேட்பது எங்களுடைய வழக்கம்.
நிகழ்வின் போது, சொற்பொழிவாளர் மட்டுமே மேடையில் அமர வைக்கப்படுவார்.

Image

அமைச்சர்கள், தலைமைச் செயலர், செயலர்களுட்பட ஏனைய அனைவரும் மேடைக்குக் கீழே அரங்கில் போடப்பட்டிருக்கும் நற்காலிகளில் அமர்ந்திருப்போம். இந்தக்கூட்டம், ஒடிசாவின் 30 மாவட்ட ஆட்சியர்களுடனும் அவரவர் அலுவலக காணொளி அரங்கின் இருவழித்தொடர்பு மூலம் இணைக்கப்படும். சொற்பொழிவுத் தலைப்பிற்கு பொருத்தமான வகையில் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள், கல்வியாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியரும் அமர்ந்து பேச்சைக் கேட்பார்கள். அங்கிருந்தபடியே காணொளி மூலம் கேள்விகளையும் எழுப்புவார்கள்.

திட்டமிட்ட நேரத்தில், ஒரு நிமிடம் கூடத் தாமதமின்றி கூட்டம் தொடங்கும். இந்த அறிவுப்புலத்தின் அமைப்பாளர் என்ற முறையில், நான் அன்றைய சொற்பொழிவாளரை அறிமுகம் செய்து இரண்டு நிமிடம் பேசுவேன். ஐம்பது முதல் அறுபது நிமிட உரை, அதைத் தொடர்ந்து 15 முதல் 20 நிமிட கேள்வி பதில் அமர்வு என்று நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வை சில சமயங்களில் மாநில முதல்வர் தனது அறையிலிருந்தவாறே காணொளி மூலம் பார்ப்பதுண்டு. நான் சுப்ரத் பாக் ஷி யை சந்திப்பதற்கு முன், ஒடிசா அறிவுப்புலத்தில் இரண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டிருந்தன. ஒன்று வேளாண்மை, வேளாண் விற்பனை தொடர்பான ஒரு வல்லுநரின் உரை; மற்றொன்று நிதி-வங்கித்துறை தொடர்பான உரை.

1936 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி ஒடிசா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. 2016 ஏப்ரல் முதல் தேதி அந்த வரலாற்று நிகழ்வின் எண்பதாம் ஆண்டு தொடங்கும் என்பதை மனதில் வைத்து ஏப்ரல் முதல் வாரத்தில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தப்பட வேண்டுமெனத் திட்டமிட்டோம். அதை ஒடிசாவில் பிறந்த ‘மண்ணின் மைந்தர்’ ஒருவரே நிகழ்த்த வேண்டுமென்று நினைத்தோம். இப்படி நினைத்ததுமே மனதில் தோன்றிய பெயர் சுப்ரத் பாக் ஷியினுடையதுதான். இரவு விருந்திற்கிடையே அவரிடம் என் விருப்பத்தைச் சொன்னேன். ஏப்ரல் முதல் நாள், அரசு விடுமுறை என்பதால்,2-ஆம் தேதி சொற்பொழிவை வைத்துகொள்ளலாமா என்று கேட்டேன். அடுத்த நொடியே மகிழ்ச்சியோடு அவர் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

Image

ஏப்ரல் இரண்டு. நேரம் காலை 10.15 மணி. எனது அலுவலக அறையில் என் மேசைக்கணினியில் நான் தட்டச்சு செய்து கொண்டிருந்தேன். சுப்ரத் பற்றிய எனது அறிமுக உரையை அவர் வந்துசேருமுன் தட்டச்சு செய்து சுமார் 10.40 மணியளவில் பிரதி எடுத்துவிட வேண்டுமென்று நினைத்தேன். ஆனால், 10.20 மணிக்கே எனது அறைக்குள் அவர் தன் மனைவியுடன் நுழைந்தார். ‘வணக்கம்’ கூறி அவர்களை சோபாவில் அமரச் செய்துவிட்டு தட்டச்சு செய்யும் பணியைத் தொடர்ந்தேன். “மன்னிக்கவும். இது உங்களைப் பற்றிய அறிமுக உரைதான் ” என்று கூறிய போது எனக்கேகூடக் கூச்சமாகவே இருந்தது – கடைசிநொடி வரை அந்த வேலையை பாக்கி வைத்திருந்தேன் என்பதை நினைத்து.

சுப்ரத் பாக் ஷியின் வாழ்க்கை பற்றி இங்கே கொஞ்சம் பார்ப்போம். ஒடிசாவிலுள்ள பட்னாகட் என்ற இடத்தில், 1957-இல் ஓர் அரசு ஊழியரின் மகனாகப் பிறந்தவர். அப்போது அவர்கள் வசித்த வீட்டில் மின்சார இணைப்போ, குடிநீர்க் குழாயோ கூட இருக்கவில்லையாம். (இந்த வீட்டின் தற்போதய படம் கீழே)அவருடைய தந்தையின் பணியிட மாற்றங்களின் காரணமாக பல பின்தங்கிய மாவட்டங்களின் அரசுப்பள்ளிகளில் பயின்றவர். புவனேஸ்வரில் அரசியல் அறிவியல் பட்டப்படிப்புப் படிக்கிறார். அப்போது பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினார்.

Image

பேச்சுப்போட்டிகளில் எப்போதும் முதலிடம். தேசிய மாணவர் படையின் பாராசூட் பிரிவில் பதக்கம் பெற்றவர். டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் 1975-ஆம் ஆண்டு, சிறந்த (என்.சி.சி.) தேசிய மாணவர்ப்படை வீரராகத் தேர்வு செய்யப்பட்டு பிரதமர் இந்திரா காந்தியிடம் விருது பெற்றவர். அதே ஆண்டு உத்கல் பல்கலைக்கழகத்தின் சிறந்த பேச்சாளராகவும் கோப்பை வென்றவர்.

1976-இல் தனது முதுகலைப்படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு ஒடிசா மாநில அரசின் தலைமைச் செயலகத்தின் தொழிற்துறையில் கீழ்நிலை எழுத்தராகப் பணியாற்றினார். பின்னர் அரசுப்பணியில் இருந்து விலகி 1977-இல் தனியார் துறையில் சேர்ந்தார். “ஒடிசா தனிமாநிலமான 80-ஆம் ஆண்டு விழாவை உங்கள் உரையோடு கொண்டாட விரும்பினோம்” என்று நான் சொன்னதும், தனது கையோடு கொண்டுவந்திருந்த கோப்பு ஒன்றிலிருந்து பழைய அரசு ஆணையொன்றை வெளியே எடுத்துக் காண்பித்தார் அவர். 40 ஆண்டுகளுக்கு முன்னால் சுப்ரத் பாக் ஷி தலைமைச் செயலக எழுத்தர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆணையின் புகைப்படப் பிரதி அது. “எனக்கும் இது ஒரு மைல்கல் தான்” என்றார் அவர். எனக்குள் மெல்லியதாய் ஒரு மின் அதிர்வு.

எந்தச்செயலகத்திலிருந்து கீழ்நிலை எழுத்தர் பணியை விட்டு விலகி அவர் சென்றாரோ அதே செயலகத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலர், செயலர்கள், அனைவரும் அவரின் பேச்சைக்கேட்க வந்திருக்கும் விஷயம் சுவையானதாக இருந்தது. அவர் ஒருவேளை செயலகத்திலிருந்து விலகாமல் இருந்திருந்தால் அவர் இப்போது என்னவாக ஆகியிருப்பார் என்று யோசித்தேன். ஒரு புன்னகை மட்டுமே எழுந்தது.

எந்த உத்கல் பல்கலைக்கழகத்தின் படிப்பை பாதியில் விட்டு விட்டு வெளியேறினாரோ, அதே பல்கலைக்கழகம் சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு ‘மதிப்புறு முனைவர்’ பட்டத்தை வழங்கியிருந்தது. இதைக் கேள்விப்பட்ட நான், உத்கல் பல்கலைக்கழக துணைவேந்தரையும் இந்த உரை நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தேன்.

மேடையில் சுப்ரத் பாக் ஷி அமர்ந்திருந்தார். அவரை நான் அறிமுகம் செய்தேன். ‘தளமும் நோக்கமும்’ ( Platform and Purpose) என்ற தலைப்பில் அவர் பேசினார். அவரது பேச்சைக்கேட்டு அரங்கம் வியந்து போனது. அப்படிப்பட்ட ஓர் உரை அது. அந்தச் சொற்பொழிவு, அதை நிகழ்த்திய சுப்ரத்தின் மனத்திலும் பல உணர்வலைகளை எழுப்பியிருந்தது என்பதை என்னால் உணர முடிந்தது. பாக் ஷியின் சொற்பொழிவை ஒடிசா மாநில முதல்வர் தனது அறையிலிருந்து காணொளி மூலம் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது தலைமைச் செயலகத்தை விட்டு வெளியேறிய 40 ஆம் ஆண்டில் சிறப்புச் சொற்பொழிவாளராக மலரும் நினைவுகளை மனதில் ஏந்தியபடி பேசிய சுப்ரத் பாக் ஷிக்கு வாழ்க்கை இன்னும் இரண்டே நாட்களில் தரவிருந்த எதிர்பாராத திருப்பத்தை அங்கிருந்த யாரும் அறிந்திருக்கவில்லை.

அந்தச் சொற்பொழிவு முடிந்து இரண்டு நாள் கழித்து, சுப்ரத் பாக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அது ஒடிசா மாநில முதல்வரின் அழைப்பு. ஒடிசா அரசில் “கேபினட் அமைச்சர்” அந்தஸ்தில் மாநில திறன் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பு ஏற்குமாறு சுப்ரத்திற்கு முதல்வர் அழைப்பு விடுத்தார். சுப்ரத் அந்த அழைப்பு பற்றி தீவிரமாக யோசித்துவிட்டு ஓரிரு நாட்களில் சம்மதம் தெரிவித்தார், ஒரே ஒரு நிபந்தனையுடன். தனக்கு ஓர் ஆண்டுக்கு சம்பளம் ஒரே ஒரு ரூபாய் தர வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை.

இன்றைய நிலையில், சுப்ரத் பாக் ஷிக்கு செல்வம் ஒரு பொருட்டல்ல. இன்னும் சொல்லப் போனால், பல்வேறு தனியார் துறைகளில் பொறுப்பு வகித்து, தொழில்நுட்பத்துறையில் ‘மைண்ட் ட்ரீ‘ நிறுவனத்தை வேறு சிலருடன் சேர்ந்து தொடங்கி பல்வேறு சவால்களுக்கிடையில் அதை மிகப் பெரிய மரியாதைக்குரிய நிறுவனமாக வளர்த்தெடுத்து அதன் தலைவராகப் பணியாற்றி விட்டு 2016-ஆம் ஆண்டுதான் அந்நிறுவனத்தின் அன்றாடப்பணிப் பொறுப்புகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார் அவர்.

ஒடிசாவில் ஒரு மலைசூழ் கிராமம் ஒன்றில், தனது சொந்தப் பணத்திலிருந்து 100 கோடி ரூபாய் முதலீட்டில் ‘எதிர்காலத்திற்கான இடம்’ (Space for Tomorrow) என்ற திறன் மேம்பாட்டு நிறுவனத்தை தனது மனைவி சுஷ்மிதாவுடன் சேர்ந்து தன்னார்வ நிறுவனமாக தொடங்கலாம் என்று திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டி ருந்தார். அப்போதுதான் இந்த சொற்பொழிவும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த திடீர் திருப்பமும்.முதல்வரிடமிருந்து அழைப்பு வந்ததும் அவர் பல ஆண்டுகாலமாக மனதில் வைத்திருந்த மேற்கண்ட திட்டத்தைக் கைவிட்டு விட்டு 60 வயதில் அரசுத் துறையில் மீண்டும் காலடி எடுத்து வைத்தார் இந்த ஓய்வு பெற்ற / பெறாத மனிதர்.

“வெளிக்காற்று உள்ளே வரட்டும்” என்ற சொல்லாடலைப் பல சமயங்களில் படித்திருப்பவன் நான். ‘வெளிக்காற்று’ என்றால் என்ன என்று எங்கள் அரசினுள் சுப்ரத் பா வந்தபின்தான் தெரிந்தது. புதிய காற்று, புதிய சிந்தனை, புதிய ஆற்றல், இப்படி,பல திறன்களின் ஊற்றுக்கண் அவர். மிகச்சிறந்த எழுத்தாளருமாவார். உலகப் புகழ் பெற்ற மேலாண்மை நூல்களை எழுதியிருக்கிறார். எத்தனை மொழிகளில் அவை மொழிபெயர்க்கப்பட்டி ருக்கின்றன? எத்தனை தளங்களில், எத்தனை துறைகளில் சாதித்திருக்கிறார் இவர்? இத்தகைய பின்னணியுடன் அரசுத் துறைக்குள் வருபவர்கள் ‘இது சரியில்லை, அது சரியில்லை’ என்று கட்டிய வீட்டுக்குக் குற்றம் சொல்வார்கள். ஆனால், இவர் வித்தியாசமானவர். ‘தான் சொல்வதுதான் சரி’ என்று அடம் பிடிப்பவர் அல்ல. என்னையும், தலைமைச் செயலரையும், சில மூத்த அதிகாரிகளையும் அவர் செல்லமாக ‘குடியரசு’ என்று தான் அழைப்பார்.

ஒடிசா அரசுப்பொறுப்புக்கு வந்த வேகத்தில் 30 மாவட்டங்களுக்கும் சென்று நூற்றுக்கணக்கானவர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு அவர் சொன்னார்: ஒடிசாவிலுள்ள 40 தொழிற்பயிற்சி பள்ளிகளையும் (ஐ.டி.ஐ.) உலகத்தரத்திற்கு உயர்த்த வேண்டும், அது சாத்தியமே என்றார். இந்த முயற்சியின் மையப்புள்ளிகள் மாவட்ட ஆட்சியர்கள் என்றும் சொன்னார்.
எல்லாவற்றையும் தரைமட்டமாக்கி விட்டு புதிய அமைப்பை நிறுவச் சொல்லாமல் , இருக்கும் அமைப்பைத் திருத்தியமைப்பது என்ற அவரின் திறந்த வெளிக் கொள்கை எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

1950-களில் காக்கிச் சட்டை, காக்கி டவுசர் போட்டு விடப்பட்ட ஐ.டி.ஐ. மாணவர்கள் ஒரு தாழ்வு மனப்பான்மையுடன் இருந்ததில் ஆச்சரியமில்லை. ‘முதலில் சீருடையை மாற்றுவோம்’ என்று முடிவெடுத்து, தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தைப் பயன்படுத்தி வகுப்பறைச் சீருடை, விளையாட்டுச் சீருடை, ஓய்வுச்சீருடை என்று மூன்று வகையான சீருடைகளை மாணவர்களைக் கொண்டே தேர்ந்தெடுத்தார். அந்த வண்ணமிகு சீருடைகளை அணிந்து கொண்டு ஐ.டி.ஐ. மாணவ மாணவியர் அழகாக ஒரு மேடையின் மீது நடந்து காட்டியபோது அவர்களின் முகங்களில் மகிழ்வையும் பெருமிதத்தையும் காண முடிந்தது. மூன்றாண்டுகளில் எட்டு லட்சம் பேருக்குப் பயிற்சி. இப்போது திறன் மேம்பாட்டுப் பயிற்சியே ஒடிசாவின் எதிர்காலத் தாரக மந்திரம்.

சுப்ரத்தின் அலுவலகத்தில் ‘ஒடிசாவின் முன்மாதிரிகள்’ (Role Models of Odisha) என்று திறன்மிக்க இளைஞர்களின் புகைப்படங்களை மாட்டி வைத்திருக்கும் விதம்; அவரது அலுவலகத்தை ஒரு தொழிற்கூடம்போல் அவர் வடிவமைத்திருக்கும் முறை என்று சுப்ரத் செயல்படுகிற ஒவ்வோர் அங்குலத்திலும் புதுமை பூத்திருக்கும். இந்த நாற்பது ஆண்டுகாலத்தில் அவர் ஆற்றிய சாதனைகளின் நிறைவை ஒரு தட்டிலும் இந்த இரண்டாண்டு காலச் சாதனைகளின் மனநிறைவை இன்னொரு தட்டிலும் வைத்து நிறுத்தால், இந்த இரண்டாண்டு காலப் பணிகள்தான் கூடுதலான நிறைவைத் தருகின்றன என்கிறார் இந்த ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் அமைச்சர் அந்தஸ்து – அரசு ஊழியர்.

அவரின் நிபந்தனைப்படி ஓர் ஆண்டு முடிந்ததும் அவருக்கான சம்பளமாக ஒரு ரூபாய்க்கான காசோலை அனுப்பப்பட்டது. அதைப் பெற்றுக்கொண்டதும், அந்த காசோலையின் நகலை முதல்வர், தலைமைச்செயலர், மற்றும் எனக்கு அனுப்பியிருந்தார். “இன்று பிற்பகல் எனது வீட்டிற்கு வந்ததும் இந்த ஒரு ரூபாய் காசோலை கிடைக்கப் பெற்றேன். எனது வாழ்க்கையில் நான் சம்பாதித்திருக்கிற, மேலும் சம்பாதித்திருக்கக் கூடிய சம்பளம், வேறு எதையும் விடக் கூடுதலான மகிழ்ச்சியை இது எனக்கு அளித்திருக்கிறது” என்று அந்த மின்னஞ்சலில் அவர் எழுதியிருந்தார்.

சுப்ரத் பாக் ஷி சொற்பொழிவாற்றுவதற்காக வந்து அரங்கிற்குச் செல்வதற்கு முன்னால் எனது அறைக்கு வந்து அமர்ந்தபின்னர் அவரது தலைமைச் செயலக முதல் சுற்று பற்றி அறிந்து அதை எனது அறிமுக உரையில் கவிதை சொட்டச்சொட்ட எனது மடிக்கணினியில் வார்த்தைகளாக்கி அவசர அவசரமாக காகிதத்தில் அச்சடித்து எடுத்துக்கொண்டு அவரோடு அரங்கிற்கு விரைந்த அந்த நொடிகளை நினைத்துப்பார்க்கிறேன். வாழ்வை உணர்வுபூர்வமாக உள்வாங்கி அது வழங்கும் வியப்புகளைக் கொண்டாடும் மனம் உள்ளவர்களுக்குப் புரியும் அந்த நொடிகளின் ஆரவாரமற்ற அடர்த்தி.

ஒரு வகையில் இது சுப்ரத்தின் இரண்டாம் சுற்று. இதற்கு முந்தைய எல்லாச்சுற்றுகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முந்திச் செல்லும் முழுநிறைவான சுற்று. இவரை எது இயக்குகிறது என்று யோசித்துப் பார்ப்போம். “காரணமில்லாமல் எதுவும் நடைபெறுவதில்லை” என்று அவர் அடிக்கடி சொல்லுவார். 37 ஆண்டு காலம் ஐ.ஏ.எஸ். பணிசெய்து உச்சபட்ச பதவி உயர்வையும் அடைந்து விட்ட நான், ஒருநாள் அவரிடம் சொன்னேன்: “உங்களிடம் உதவியாளனாகப் பணியாற்றக் கூட எனக்குச் சம்மதம்”. அவர் என் இரு கரங்களையும் இறுகப் பற்றிக்கொண்டு “குடியரசே” என்றார்.

சுப்ரத் பாக் ஷியை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் எனக்குள் ஒரு கேள்வி தோன்றும். இவரது ஆக்கபூர்வமான அழகியல் செறிந்த வாழ்க்கையை, இவரது, எப்போதும் பொங்கி வழியும் குறைவற்ற நிறைவை வழிநடத்துவது எது? உண்மையில் இவரது முதல் சுற்று எது? இரண்டாவது சுற்று எது? இது பற்றி அவரிடமே பேசியிருக்கிறேன். அவர் எழுதிய நூல்களின் மூலம் அவரை மேலும் புரிந்துகொள்ள முயன்றேன்.‘உலகத்தை முத்தமிட்டவர்’ என்ற இந்தக் கட்டுரையின் தலைப்பே அவரது “செல். உலகத்தை முத்தமிடு” என்ற ஆங்கில நூலின் தாக்கமே. இந்த நூலின் தலைப்புக்கே ஒரு நெகிழ்வான பின்னணி உண்டு. அதை சுப்ரத் பாக் ஷியே விளக்குகிறார்.

அப்போது சுப்ரத் அமெரிக்காவில் பணியாற்றுகிறார். ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பே தனது கண்பார்வையை முற்றிலும் இழந்திருந்த அவரது தாயார் மாரடைப்பு ஏற்பட்டு அரசாங்க மருத்துவமனையில் படுத்தபடுக்கையாய் கிடக்கிறார். அமெரிக்காவிலிருந்து வந்து இரண்டு வாரம் தனது தாயை அருகில் இருந்து பார்த்துக்கொண்ட பாக் ஷி பணிக்கு திரும்பவேண்டிய அவசர சூழ்நிலை. விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் மருத்துவமனைக்குச் சென்று தனது தாயை மீண்டும் பார்க்கிறார். விடைபெறும் வகையில் தனது தாயின் நெற்றியில் முத்தமிடுகிறார்.
சுப்ரத்தின் ஆளுமையின் அடித்தளமான அவரது தாய் மெதுவாக முணுமுணுக்கிறார். “எனக்கு ஏன் முத்தம் கொடுக்கிறாய்?” சுப்ரத் திரும்பக் கேட்கிறார். “ஏன் முத்தம் தரக்கூடாது?” அவரது தாய் சொல்கிறார். “செல். உலகத்தை முத்தமிடு”.

சுப்ரத் எழுதுகிறார். “பார்வையற்ற எனது தாய் என்னிடம் பேசிய கடைசி வார்த்தைகள் அவைதான். அந்த வார்த்தைகள் தான் எனது வாழ்க்கையை வழிநடத்தும் கோட்பாடாகிவிட்டன”. உண்மை தான். சுப்ரத் உலகை உச்சி முகர்ந்து முத்தமிட்டவர். இன்னும் முத்தமிட்டுக்கொண்டே இருப்பவர்.

2004 ஆம் ஆண்டு பெங்களூரிலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (IIM, Bangalore) “செல். உலகத்தை முத்தமிடு” (‘Go, Kiss the World’) என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். சிறு நகர இந்தியாவில் பிறந்து வளர்ந்த அவர் தனது தாய் தந்தையரின் வாழ்விலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் தனது வாழ்க்கையை வழிநடத்தியதை, தனது வாழ்வின் கதையை மாணவர்களுக்கு விளக்குகிறார். அவரது அந்த உரை வலைத்தளங்களில் மகத்தான வரவேற்பை பெறுகிறது. அதனால் ஊக்கமடைந்த சுப்ரத் தனது வாழ்வின் கதையை, தான் பட்டறிந்த பாடங்களை அதே தலைப்பில் ஆங்கில நூலாக 2008 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

அந்த நூலைக் கையில் வைத்துக்கொண்டு தான் இந்தக் கட்டுரையை அவரது அனுமதியுடன் நான் கணிப்பொறியில் தட்டச்சு செய்கிறேன். அவரது வாழ்க்கை மிக அழகானது. மிகவும் ரசனையானது. அவரது இந்த நூலை நீங்கள் படிக்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். சுப்ரத் சொல்கிறார்.

“எனது பெற்றோரைப் பற்றியும் எனது குழந்தைப்பருவத்தையும் படித்துவிட்டு நான் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்த்தாக நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. எனது குழந்தைப் பருவம் ஒரு போராட்டமல்ல; ஆனால் எளிமையானது. எனது கதை வறுமையை, விரக்தியை வென்றெடுப்பது பற்றியது அல்ல; ஆனால், அது நிறைவு பற்றியது; சாதாரணமானவர்களால், எளியவர்களால் அசாதாரணமான செயல்களைச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையை விதைக்க முயலவது. எனது வாழ்க்கை பெரிய அளவுக்கு வளர்வது பற்றியது அல்ல; நல்ல வகையில் வளர்வது பற்றியது”.

“நதி தொடங்கும் இடத்தில், அது கடலில் சங்கமிக்கும் முன்னால் தொடப்போகிற பாதைகள் பற்றி எதுவும் தெரியாது.” என்ற சுப்ரத்தின் வரிகளை அடிக்கடி யோசித்து பார்க்கிறேன். வசதி வட்டத்திற்கு வெளியே நின்று வினையாற்றுவே நான் விருப்பம் கொண்டிருக்கிறேன்; அதற்காகவே நான் ஏங்குகிறேன். இயக்கமற்று இருக்கும், ஒரு நொடியைக்கூட என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.” என்ற அவரது வரிகளை படிக்கும் போது எனது ‘சிறகுக்குள் வானத்தின்’ சில கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன.

நிச்சயமற்ற திருப்பங்களை எதிர்நோக்கும் விதத்தை சுப்ரத் கற்றுக்கொடுக்கிறார். பரிச்சயமற்ற புதிய இடங்களில் தான் நாம் எளிதாக நண்பர்களை கண்டெடுக்கிறோம்; பழக்கமற்ற இடங்களில் நமது எதிர்பார்ப்பே குறைவாகத்தான் இருக்கிறது. அதனால் வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் நிகழும் போது நாம் விரக்தியடைவதை விட வியப்படைவது தான் அதிகமாக இருக்கிறது; அத்தகைய சூழல்களில் நாம் ‘யாராக’ இருக்கிறோம் என்ற பலத்தை மட்டும் நம்பி, இந்த நாளுக்காக, அதாவது ‘இன்றைக்கு’ என்று வாழப்பழகுகிறோம். அத்தகைய சூழல்களில் நாம் மேலும் புத்திசாலியாகி விடுகிறோம்.

முன்பின் தெரியாத அந்நியர்களையும் நாம் நம்பத்தொடங்குகிறோம்; முன்பின் அறிமுகமில்லாதவர்கள் நம்மை நம்புவதை நாம் உணர்கிறோம். சொல்வதற்கென்று பல கதைகள், நிகழ்வுகள், அனுபவங்கள் இருப்பதால் நாம் சுவையான, ரசனைக்குரிய மனிதர்களாகிவிடுகிறோம். கடைசியில் நாம் தேங்கிப்போகாமல் நகரப் பழகிக்கொள்கிறோம்” என்கிறார் அவர்.எவ்வளவு எளிமையான ஆனால் வலுவான வாழ்வியல் உண்மை இது. என்னிடமும் சொல்வதற்கு சுவையான கதைகள் சில உள்ளன என்று நான் நம்புவதால் தான் இந்த இரண்டாம் சுற்றை நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

Image

 

வசிப்பதற்கும்
வாழ்வதற்கும்
வித்தியாசம் இருக்கிறது.

சும்மா
விழுந்து கிடப்பதும் கூட
வசிப்பதில் அடங்கும்.
ஆனால்
வாழ்வதென்பது
எழுந்து நிற்பது
தொடர்ந்து நடப்பது

வாழுதல் என்பது
சாகாமல்
பிழைத்திருப்பது அல்ல
வாழ்வது.

உள்ளத்தனையது
உயர்வு மட்டுமல்ல
உள்ளத்தனையதே
உலகமும்

உலகம்
சுருங்கி விரிகிறது
உள்ளத்தைப் பொறுத்து

சிலருக்கு
மூக்கின் நுனியே
அண்டமும் ஆகாயமும்.

கூட்டுக்குள்
அவர்களின்
தரையும் கூரையும்

உள்ளூரின்
ஒரு முனையில்
தென் துருவம்
இன்னொரு முனையில்
வட துருவம்.

குண்டாச் சட்டியில்
குதிரையின்
குளம்பொலி

கோப்பைக்குள்
புயல்

இதோ
இவன் வாழ்பவன்
இவன்
நடக்க நடக்க
வளர்கிறது சாலை

புதிய ஊர்கள்
புதிய மனிதர்கள்
புதிய மொழிகள்
புதிய புரிதல்கள்

எந்தப்புள்ளியில்
எந்தத்துளியில்
தன்பெயர் மாறியது
என்ற
உணர்வின்றி
ஓடுகிறது உலக நதி

இதோ
உலகம் அழைக்கிறது
ஓடிவந்து தழுவு
ஓசையின்றி
முத்தமிடு
மூச்சு முட்டும்வரை

உலகின் அழைப்பு
உன்
காதில் விழுந்தால்
நீ ஒடும் நதி

இல்லையெனில் நீ
சிறைப்பட்ட
உறை கிணறு

உன் வேட்கையில்
இருக்கிறது.
உன்
திசையும் விசையும்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்ற புரிதலின்
உள்ளீடாய் இருக்கிறது
உலகத்தை முத்தமிட
ஓர் அழைப்பு

செல்..
சென்று
உலகத்தைத் தழுவி
உச்சியில் முத்தமிடு”

மதிப்புறு முனைவர்

2017 ஆகஸ்டு 28 காலை. முதல் நாளிரவு சென்னையிலிருந்து காரில் திருச்சி வந்து தங்கிவிட்டு இன்று காலை தஞ்சாவூர் அருகிலுள்ள வல்லம் நோக்கி காரில் சென்று கொண்டிருக்கிறேன். எனது நண்பர் ஒருவர் என்னுடன் பயணம் செய்கிறார்.வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 25 ஆவது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்ள என்னை அழைத்திருந்தார்கள். அதுமட்டுமின்றி அப்பல்கலைக்கழகம் எனக்கு “மதிப்புறு முனைவர்” ( Doctor of Letters- Honoris Causa) பட்டம் வழங்க முடிவு செய்து இருந்தது. நானும் ஒப்புதல் அளித்திருந்தேன்.

சிந்துவெளி நாகரிகம் பற்றிய எனது ஆய்வுப்பணிகளுக்காக, குறிப்பாக 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த எனது ஆய்வு நூலான “சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்” என்ற நூலிற்காக இந்த மதிப்புறு முனைவர் பட்டம். திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் கார் விரைகிறது. ஆனாலும் எனது மனம் மீள்நினைவாய் மதுரையை நோக்கிப் பயணம் செய்கிறது. நேற்று போல இருக்கிறது. நெடுங்காலம் ஆகிவிட்டது. 38 ஆண்டுகள்.

1979ஆம் ஆண்டு. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கிறேன். தமிழ்த்துறையில் ‘வியாழவட்டம்’, ‘வெள்ளி வட்டம்’ என்ற பெயரில் ஆய்வுக் கட்டுரைகளை வாசிக்கும், விவாதிக்கும் நிகழ்வுகள் மாதம் தோறும் நிகழும். அப்படி ஒரு நிகழ்வில் தொல்காப்பியம் பற்றி பேராசிரியர் ஒருவர் வாசித்த ஆய்வுக்கட்டுரை பற்றி விவாதம் நடந்தது. விவாதத்தில் நானும் கலந்து கொண்டு எனது கருத்தைச் சொன்னேன். அப்போது விவாதம் கொஞ்சம் காரசாமாகி விட்டது.

“நீ ஆராய்ச்சி செய்ய வரும்போது என்ன செய்கிறாய் என்று பார்க்கலாம்” என்று அவர் சொல்ல, “நான் டாக்டர் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்ய வரமாட்டேன்” என்று அனைவரது முன்னிலையிலும் அறிவித்தேன். “வேறு என்ன செய்வாய்?” என்று எதிர்க்கேள்வி வர நானும் கொஞ்சம் கூட யோசிக்காமல் “கறவை மாடு வாங்கி பால் கறந்து விற்பேன்” என்று அறிவித்தேன். அந்த ஆய்வரங்கிற்குத் தலைமை தாங்கிய காலஞ்சென்ற பேராசிரியர் தமிழண்ணல் தலையிட்டு சமாதானப்படுத்தினார்.

உணர்ச்சி மேலீட்டால் தான் திடீரென்று இப்படிப்பட்ட பகிரங்க முன்னறிவிப்பை நான் செய்துவிட்டேன். ஆனால் காரணம் எதுவென்பதை விட அன்றைய நிகழ்வும் விவாதமும் எனக்குள் ஆணியடித்து ஆழமாக இறங்கி விட்டது என்பது தான் முக்கியம். இது நடந்து சில மாதங்களில் பல்கலைக்கழக இறுதித் தேர்வு முடிந்தது. இதற்கிடையில் பால் வியாபாரம் செய்வது பற்றி தீவிரமாக யோசிக்கத் தொடங்கி இருந்தேன். மதுரை- சிவகங்கை நெடுஞ்சாலையில் உள்ள மதுரை ஆவின் பால் அலுவலகத்திற்கு சென்று மேலதிகாரி ஒருவரைச் சந்தித்து ஆலோசனை கேட்டேன்.

வங்கிக் கடன் உதவி பற்றியும் அவரிடம் பேசினேன்.

நான் ஆராய்ச்சி செய்வதற்காக பதிவு செய்யப்போவதில்லை என்று விளையாட்டாகச் சொல்லவில்லை என்பதை அறிந்த எங்கள் துறைத்தலைவர் காலஞ்சென்ற பேராசிரியர் முத்துச்சண்முகம் எனது சொந்த ஊர் முகவரிக்கு (நத்தம் முகவரி) ஒரு அஞ்சல் அட்டையை அனுப்பி வைத்தார். உடனடியாக வந்து அவரை சந்திக்கும்படி அதில் எழுதி இருந்தார். நானும் சிலநாட்களில் அவரைச் சந்தித்தேன். நான் கட்டாயம் எம்.பில் படித்து தொடர்ந்து முனைவர் பட்ட ஆய்விற்கு கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அவர் சொன்னார். ஆனால் நான் பணிவுடன் மறுத்து விட்டேன்.

“பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றுவிட்டு ஆராய்ச்சி செய்யாமல் போவது என்ன நியாயம்” என்று கூட அவர் கேட்டார். நான் வேறு வேலைக்குப் போனாலும் வேறு தொழில் எதுவும் தொடங்கினாலும் தமிழ் இலக்கிய ஆராய்ச்சியைத் தொடர்வேன்; துறைசாராத, சுயேச்சையான ஆய்வாக அது இருக்கும் என்று நான் சொன்னேன். இது நடந்து சில வாரங்களில் தினமணி பத்திரிகையின் ஆசிரியர் காலஞ்சென்ற ஏ.என்.சிவராமனிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. மதுரை தினமணி அலுவலகத்தில் வந்து சந்திக்கும்படி எழுதி இருந்தது. அதன்பின்னர் நான் தினமணியில் உதவி ஆசிரியராக நான்கு ஆண்டுகள் பணியாற்றி ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி வெற்றி
பெற்று ஒடிசா வந்தது தனிக்கதை.

காலம் என்னை வைகைக் கரையிலிருந்து மகாநதிக் கரைக்கு கொண்டு சென்றது. திராவிடப் பழங்குடிகள் வசிக்கும் கோராபுட் மாவட்டத்தில் பணியாற்றும் போது இடப்பெயர் ஆராய்ச்சியிலும் மானிடவியலிலும் ஆர்வம் ஏற்பட்டது. மிகவிரைவில் நான் ஒரு தீவிரமான பகுதி நேர ஆராய்ச்சியாளனாக மாறத் தொடங்கினேன்.விடுமுறை நாட்களில் எல்லாம் களப்பணி. எனது ஆய்வுகளுக்காக ஒடிசாவிலும் வேறு மாநிலங்களிலும் அடிக்கடி பயணித்தேன். கள ஆய்வின் போது கண்டறிந்த செய்திகளைக் கட்டுரையாக எழுதுவது; பதிப்பிப்பது என்ற யோசனை அந்தக்காலகட்டத்தில் எனக்குள் தோன்றவே இல்லை. எனது புரிதலைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் நோக்கமே உந்துவிசையாய் இயக்கியது.

ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வெளியிடத் தொடங்கியது 90 களின் தொடக்கத்தில் தான். 1994 முதல் 1998 வரை நான் மைய அரசுப் பணியில் சென்னைக்கு மாற்றலாகி வந்தேன். அப்போது சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் ஆசியவியல் நிறுவனம் (Institute of Asian Studies) இயங்கி வந்தது. முனைவர் ஜான் சாமுவேல் முயற்சியில் உருவான இந்த நிறுவனத்தில் எனது முன்னாள் பேராசிரியர் முத்துச்சண்முகம் பணி ஓய்விற்கு பின்னர் ஆலோசகராக ஆய்விதழ் ஆசிரியர் குழுவில் இருந்தார். பெரும்பாலும் சனிக்கிழமை தோறும் ஆசியவியல் ஆய்வு நிறுவன நூலகத்திற்கு செல்வது எனது வழக்கம்.

அப்போதுதான் நான் தமிழ் என்ற பெயர்ச்சொல்லை இடப்பெயர் ஆய்வு நோக்கில் அலசி ஆராய்ந்து எழுதிய ” Term Tamil: A Toponymic Probe” என்ற ஆங்கிலக் கட்டுரை ஆசியவியல் நிறுவனத்தின் ஆய்வு இதழில் வெளியானது. அதற்கு கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எவ்வளவோ சொல்லியும் நான் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்ய மறுத்ததை பேராசிரியர் முத்துச்சண்முகம் நினைவு கூர்ந்தார். “இந்த ஒரு கட்டுரைக்கே உனக்கு டாக்டர் பட்டம் தரலாம்” என்று அவர் மனமுவந்து பாராட்டிய போது நான் மிகவும் மகிழ்ந்து நெகிழ்ந்து போனேன்.

எனது அடுத்த கட்ட ஆய்வுகளில் நான் சந்தித்த மிகப்பெரிய ஆளுமை தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தரான இருந்து ஓய்வு பெற்ற மதிப்பிற்குரிய காலஞ்சென்ற அறிஞர் வ.அய்.சுப்ரமணியன். அப்போது திருவனந்தபுரத்தில் திராவிட மொழி ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வந்தார். அந்நிறுவனத்தின் IJDL (International Journal of Dravidian Linguistics) ஆய்விதழில் எனது இரண்டு ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டார். அவற்றில் ஒடிசாவில் வசிக்கும் திராவிடப் பழங்குடிகளின் ஆப்பிரிக்க தொடர்பிற்கான இடப்பெயர்ச் சான்றுகளையும் நிலவரை படங்களையும் உள்ளடக்கிய கட்டுரை உலக அளவில் கவனிக்கப்பட்டது.

ஒருமுறை ஒடிசாவிற்கு வந்த வ.அய்.சு எங்கள் வீட்டிற்கும் வருகை புரிந்தார். நான் ஏன் முனைவர் பட்ட ஆய்வு செய்யவில்லை என்பதைக் கேட்டறிந்தார். “நீ டாக்டர் பட்டம் வாங்குகிறாயா இல்லையா என்பது எனக்கு முக்கியம் இல்லை. ஆனால் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கட்டுரைகள் எழுத வேண்டும்” என்றார். அதுமட்டுமன்றி “பாலகிருஷ்ணனை ஆராய்ச்சி பணி செய்ய தொடர்ந்து ஊக்கப்படுத்துவது உன் கையில் தான் அம்மா இருக்கிறது. அவ்வாறு செய்வேன் என்று எனக்கு நீ உறுதிமொழி தரவேண்டும்” என்று என் மனைவியிடம் கேட்டது எனது கண்முன் நிற்கிறது. எவ்வளவு பெரிய பேரறிஞர். பகுதி நேர ஆராய்ச்சியாளனாகிய எனது ஆராய்ச்சிக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

1990களின் தொடக்கத்தில் ஒருமுறை சிந்துவெளி ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவனை சென்னையில் அவரது வீட்டில் சந்தித்தேன். எனது இடப்பெயர் ஆய்வுகளை பற்றி அவரிடம் விளக்கினேன். உன்னிப்பாக கேட்ட அவர், “எதிர்காலத்தில் உனது இடப்பெயர் ஆய்வுகளின் கவனம் சிந்துவெளியின் மீது திரும்ப வேண்டும். சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட கருதுகோளுக்கு இடப்பெயராய்வு பெரிய துணையாய் இருக்கும்” என்றார். இப்போதும் இந்த வார்த்தைகளின் தாக்கம் என்னை வழிநடத்துகிறது. என்னவோ தெரியவில்லை எனது ஆராய்ச்சி பற்றி மிகுந்த அக்கறை கொண்ட அறிஞர்கள் கடைசியில் என்னை கவனமாக பார்த்துக்கொள்ளும் பொறுப்பை எனது மனைவியிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். எங்களை தனது குடும்ப உறுப்பினர்கள் போல நினைத்து அன்பு காட்டும் ஐராவதம் சார் ஒரு முறை எனது மனைவியிடம் சொன்னார், “இவனை கவனமாக பார்த்துக்கொள் அம்மா”.

மீண்டும் முனைவர் பட்டத்திற்கு வருவோம். திராவிடப் பழங்குடிகள் பற்றியும் ஒடிசா இடப்பெயர்கள், சிந்துவெளி நாகரிகம் பற்றிய எனது கட்டுரைகள் 90களில் வெளிவரத் தொடங்கின. பல்வேறு பல்கலைக்கழகங்கள்; மற்றும் கருத்தரங்குகளில் ஆய்வுச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினேன். அப்போது பலரும் என்னை “டாக்டர் பாலகிருஷ்ணன்” என்று அழைப்பார்கள். நான் உடனே “நான் டாக்டர் பாலகிருஷ்ணன் இல்லை” என்று திருத்துவேன். கிளைட் அகமது விண்டர்ஸ் போன்ற ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளிலும் ‘டாக்டர் பாலகிருஷ்ணன்’ என்று குறிப்பிடப்பட்டேன். ஓரிரு முறை சுட்டிக் காட்டி விட்டு சோர்வாகி விட்டு விட்டேன்.

மணிபால் பல்கலைக்கழக துணைவேந்தர் இப்படி ஒருமுறை குறிப்பிட்ட போது நான் குறுக்கிட்டு “நான் டாக்டர் இல்லை” என்றேன். “அப்படியா ரொம்ப சந்தோஷம். நாங்கள் வழங்குகின்றோம். இன்றைய ஆய்வுரைக்காக” என்று சிரித்துக் கொண்டே கூறினார். நானும் சிரித்தேன். இப்படி ஒவ்வொரு முறை எனது “இல்லாத டாக்டர் பட்டம்” குறிப்பிடப்படும் போதெல்லாம் அந்த 1979 ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த விவாதம் தான் நினைவுக்கு வரும். கூடவே முதுகலைப் பட்டம் பெற்று வெளியே வந்த பிறகு நான் காமராஜர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் கால்வைக்கவே இல்லை என்பதும் மனதில் தோன்றி மறையும்.

நான் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்ற காலகட்டத்திலும் அதற்குப் பின்னரும் நான் படித்த பள்ளி, படிக்காத பள்ளி; படித்த கல்லூரி, படிக்காத கல்லூரி என்று தமிழ்நாட்டில் பலமுறை பல நிகழ்வுகளுக்கு அழைக்கப்பட்டு கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட நான் படித்த பல்கலைக்கழக தமிழ்த்துறைக்குச் செல்லும் வாய்ப்பு நேர்ந்ததில்லை. நானும் அதைப்பற்றி பெரிதாக யோசிக்கவில்லை.

2012 ஆம் ஆண்டு. இத்தனை ஆண்டுகள் கழித்து செம்மொழி சங்க இலக்கிய பயிலரங்கிற்காக காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த்துறை சார்பாக எனக்கு அழைப்பு வந்தது; பயிலரங்கை தொடங்கி வைத்து ஆய்வுரை நிகழ்த்துவதற்காக. நானும் ஒப்புக்கொண்டேன். அந்த நிகழ்விற்குச் சென்று மேடையில் அமர்ந்தபோதுதான் அந்த நிகழ்வு உளவியல் ரீதியாக எனக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்தேன். வியப்பும் வினாக்களும் கலந்த ஒரு வினோத மனநிலை என்னை முழுமையாக ஆட்கொண்டது. 1979 ஆம் ஆண்டு ஒரு மின்னல் கீற்றுபோல எனக்குள் ஊடுருவிச் சென்றது.

அதே இடம். அதே அரங்கம். அதைவிட வியப்பு மேடையில் தலைமை ஏற்று அதே பேராசிரியர் தமிழண்ணல். பார்வையாளர்களாக முன்வரிசையில் ஓய்வு பெற்ற மற்றும் பணியாற்றும் பேராசிரியர்கள் பலர். அவர்களில் சிலர் 1979 ஆய்வரங்க விவாதத்தில் கலந்து கொண்டவர்கள். சாட்சியம் ஆனவர்கள்.எந்த அரங்கில் யார் முன்னிலையில் முனைவர் பட்டம் பெற ஆய்வு செய்ய மாட்டேன் என்று அறிவித்தேனோ அதே அரங்கில் அவர் முன்னிலையில் ஆய்வுரை ஆற்ற வந்திருக்கிறேன். இதை நான் ஓர் ” இரண்டாம் சுற்று” நிகழ்வு போல உணர்ந்தேன். ஊரெல்லாம் சுற்றி விட்டு புறப்பட்ட இடத்திற்கு திரும்பிவந்து, வந்த வழியின் வரவு செலவை ஒரு நொடியில் உற்றுப்பார்ப்பது போல் ஓர் உணர்வு.

காலம், இடம் என்ற இருபரிமாணங்களில் பயணிக்கும் வாழ்வென்னும் அனுபவம். இருந்தாலும் சில தருணங்கள் இறந்த காலத்தை நிகழ்காலத்தில் கண்முன் நிறுத்தி வேடிக்கை பார்க்கும். தினமும் காலையில் எழுந்து பல் துலக்கி காபி குடித்து பேப்பர் படிப்பது போன்ற வாடிக்கை நிகழ்வுகள் அல்ல அவை. வாழ்க்கையை வாழ்ந்த விதத்தை தணிக்கை செய்து அறிக்கை அளிக்கும் அதிசய நொடிகள் அவை. மீண்டும் தேர்தல் ஆணையம்; மீண்டும் ஒடிசா நிதித்துறைப் பொறுப்பு என்று பயணித்தாலும் எனது ஆய்வுகள் சில நேரங்களில் தீவிரமாகவும் சில நேரங்களில் சுணக்கமாகவும் ஆனால் இடைவெளியின்றி தொடர்ந்தது.

சென்ற ஆண்டு கூட (2017 ஜுலை) பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த தேசிய மொழியியல் கருத்தரங்கில் என்னை “டாக்டர் பாலகிருஷ்ணன்” என்று அறிமுகப்படுத்தினார்கள். நானும் சொல்லிச் சொல்லி அலுத்துப் போய்விட்டதால் எனக்குள் லேசாக சிரித்தபடி சும்மா இருந்து விட்டேன். அப்போது கூட அடுத்த ஒரு மாதத்தில் ஒரு வியப்பு காத்திருப்பது எனக்கு தெரியாது. இதோ எனது கார் வல்லத்தில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பசுமை வளாகத்தை அடைந்துவிட்டது. இந்தக் கல்விநிறுவனம் 1988 ஆம் ஆண்டு மகளிருக்கு மட்டுமான பொறியியல் கல்லூரியாக தொடங்கப்பட்ட போது அது உலகிற்கொரு புதுமையானது. ஆமாம்.

உலகின் முதல் மகளிர் பொறியியல் கல்லூரியாக இந்நிறுவனம் மலர்ந்தது. பின்னர் பல்கலைக்கழகமாக வளர்ந்தது. பெண்கள் கல்வியும் பெண்ணுரிமையும் சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேரான அடிப்படை முன்னுரிமை. அதைப்போலவே “கிராமம்” என்ற அடையாளம் ஏற்றத்தாழ்வு என்ற வேற்றுமையை வளர்க்கும் குறியீடாக இருக்கக்கூடாது என்பதும் தந்தை பெரியாரின் கருத்தாகும். கிராமியச் சூழலில் நவீன தொழில் நுட்பத்துடன் கட்டமைக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் பெரியாரின் கோட்பாடுகளின் உருவக எழுச்சியாய் எனக்குத் தோன்றியது.

பட்டமளிப்பு விழாவில் இப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் கி.வீரமணி அவர்கள் எனக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் காரணத்தை விளக்கிப் பேசினார். இன்று முதல் பாலகிருஷ்ணன் “டாக்டர் பாலகிருஷ்ணன்” என்று மகிழ்ச்சியுடன் அவர் அறிவித்தார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தகுதியுரையை (citation) வாசித்தளித்தார்.

திராவிட இயக்கத்தை, சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை பெரியார் பெயரில் அமைந்த பல்கலைக்கழகத்தில் “சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்” நூலிற்காக மதிப்புறு முனைவர் பட்டம் பெறுகிறேன் என்பது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இதற்காகத்தான் தமிழ் படித்தேனா? இதற்காகத்தான் முனைவர் பட்டம் பெற பதிவு செய்ய மாட்டேன் என்று வீம்பு செய்தேனா? இதற்காகத்தான் தமிழ்நாட்டை விட்டு வெகு தூரம் சென்று நின்று தமிழின் தொன்மவேர்களைத் துருவினேனா?

Image

பட்டமளிப்பு விழா முடிந்ததும் பிற்பகலில் “சிந்து நாள் முதல் இந்த நாள் வரை” என்ற தலைப்பில் அந்தப் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தினேன். காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கும் இடையிலானஇந்த 38 ஆண்டு காலப்பயணத்தை நான் உண்மையில் நேசிக்கிறேன். முதுகலை படித்த கையோடு ஏதோ ஒரு தலைப்பில் ஆராய்ச்சி செய்து ஒரு முனைவர் பட்டம் வாங்கியிருந்தால் இவ்வளவு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் எனக்குள் தோன்றியிருக்காது என்பதில் எனக்கு ஐயமில்லை.

முதல் சுற்று போலவே இந்த இரண்டாம் சுற்றும் இனிக்கிறது.

Image

உண்மையில்
என்னைத் தவிர
வேறு எவரும்
உற்றுப்பார்க்கவில்லை
என்னை.

எனக்கான
ஒரே சாட்சி
உண்மையில்
நான் மட்டுமே.

எனது பைக்குள்
எனது கைகள்.
இருந்தாலும் எனது
கவிதை அரங்கின்
கடைசி கைதட்டல்
என்னுடையதே.

எனது கன்னத்தில்
என்னையும் அறியாமல்
விழும்
முதல் அறையும்
என்னுடையதே.

என்னை நான்
கைவிடும் நொடியில்
ஓடி ஒளிகிறது
நான் கற்பனை
செய்துவைத்த உலகம்.

இதோ
கரையின் விளிம்பில்
நிற்கிறேன் நான்.

கண்முன் விரிகிறது
எனக்கான கடல்

ஓடம் கடலோடுகிறது.
கடல் காணவேண்டுமாம்
கரையின் கைத்துடுப்பு.

அலைகள் கரையேறுகின்றன
கரை காணவேண்டுமாம்
கடலின் நுரைத்துடிப்பு.

ஆழக்கடல்
அமைதியாகத்தான்
இருக்கிறது.
ஓரக்கடல் தான்
ஓய மறுக்கிறது.

மணலில் மேய
அலையாய்ப்பாய்கிறது அலை.
அதற்கு கால்கட்டு போட்டு
கட்டுக்குள் நிறுத்துகிறது
கடிவாளக் கடல்.

சில நேரம் கடல் சீறுகிறது
கரைஏறி அலை மேய்கிறது
மீண்டும் ஓய்கிறது.

ஓடம்.
கரை தேடி ஓடி வருகிறது
கசக்கும் கடல்
மீண்டும் அழைக்கிறது.
துடுப்பைத் தொட
கை அரிக்கிறது.

கரைக்கும் கடலுக்குமான
இந்த முடிவில்லாத
பேச்சுவார்த்தை
யுகம் யுகமாய் நடக்கிறது.

எனக்கும் எனக்குமான
பேச்சும் கூட.

வைகை முதல் வைகை வரை

2016—ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம். மதுரையிலுள்ள பாத்திமா மகளிர் கல்லூரியில் ‘சங்கம் நான்கு ‘ நிகழ்வில் தொடக்க நாளன்று ‘கீழடி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்துவதற்காக வந்திருக்கிறேன்.

எழுபதுகளின் இறுதியில் நான் மதுரையில் படிக்கும்போது பேச்சுப்போட்டிக்காகவும், எண்பதுகளின் தொடக்கத்தில் நான் தினமணியில் பணியாற்றும்போது ஓர் இலக்கிய நிகழ்விற்காகவும் இந்த கல்லூரிக்கு வந்திருக்கிறேன்.கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு அதே அரங்கில் நான். ‘சங்கம் 4’ சொற்பொழிவிற்கு “கீழடி” என்ற இடப்பெயரையே தலைப்பாகத் தெரிவு செய்ததற்கு இரண்டு காரணங்கள். கீழடி அகழ்வாராய்ச்சி பற்றிய கவன ஈர்ப்பும், விவாதங்களும் அப்போதுதான் (2016) தொடங்கியிருந்தன. ஹரப்பா , மொகஞ்சதோரோ போன்ற சிந்துவெளி நகரச் சிதைவுகளில் கிடைத்த அகழ்வாய்வுத் தடயங்களுக்கும் கீழடி அகழாய்வுத் தடயங்களுக்கும் இடையே மேலோட்டமான பார்வையிலேயே தட்டுப்படக்கூடிய ஒற்றுமைப் பண்புகள் பற்றிய செய்திகள் வெளியாகி இருந்தன.

அதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் (ஏப்ரல் 13, 2016) சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் நடைபெற்ற ஓர் எளிய விழாவில் எனது “சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்” என்ற நூல் வெளியிடப்பட்டது. சிந்துவெளி ஆய்வில் அதிலும் குறிப்பாக திராவிடக் கருதுகோளின் முன்னணி ஆய்வறிஞரான எனது ஆசான் ஐராவதம் மகாதேவன் இந்த நூலிற்கு அணிந்துரை வழங்கியும் நூலை வெளியிட்டும் வாழ்த்தினார்.

இந்த நூலின் மையக் கருத்தே ‘மேல்-மேற்கு கீழ்-கிழக்காக’ இரு பிரிவுகளாக கட்டமைக்கப்பட்ட சிந்துவெளி நகரமைப்பின் உள்ளீடான சிந்தனை ஆக்கத்தை ‘கீழ்- கிழக்கு, மேல்-மேற்கு’ என்ற திராவிடத் திசைப்பெயராக்க வரலாற்றின் ஊடாக மீட்டுருவாக்கம் செய்ய முடியும் என்பதே. இந்த நெடுவீச்சுச் சிந்தனையின் தாக்கம் ‘கீழ்-மேல்; கிழக்கு-மேற்கு’ என்ற அடிப்படையில் அமைந்த தமிழக இடப்பெயர் இணைகளிலும் எதிரொலிக்கிறது என்பதை பற்றியும் அந்நூலில் பட்டியலிட்டுள்ளேன். இந்த நூல் வெளியாகி இரண்டு மாதங்கள் ஆவதற்கு முன்பே எனக்கு ஒர் ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. 2016 மே மாதம் 30 ஆம் தேதியும் 31ஆம் தேதியும் வெளியான ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழின் மதுரை பதிப்பில் கீழடி அகழ்வாராய்ச்சி பற்றியும் அங்கு கிடைத்துள்ள அகழாய்வுத் தடயங்கள் ஹரப்பா நகர்மயப் பண்பாட்டை நினைவுபடுத்துவது பற்றியும் விரிவான செய்திகள் வெளியாகி இருந்தன.

இச்செய்தியை இணையத்தில் படித்ததுமே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சிந்துவெளியின் ‘கொற்கை வஞ்சி தொண்டி வளாகம்’ வெறும் ஊகம் அல்ல என்ற எனது உறுதியான கருத்து மேலும் வலுவடைந்தது போலத் தோன்றியது. ஒடிசாவில் இருந்த எனக்கு இருப்புக்கொள்ளவில்லை. கீழடி அகழ்வாராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை தொடர்புகொண்டு பேசினேன். கீழடி அகழ்வாய்வுத் தடயங்களை நேரில் காண்பதற்காக ஒடிசாவிலிருந்து 2016 ஜூன் 5 ஆம் தேதி (அதாவது மேற்சுட்டிய ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி வெளிவந்த ஒருவாரத்திற்குள்) மதுரைக்கு வந்தேன்.

தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் சுவடிப்புலத்தலைவர் கு.ராஜவேலுடன் கீழடிக்குச் சென்றேன். கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது அகழ்வாய்வில் கிடைத்துள்ள தடயங்கள் அனைத்தையும் தனது அகழாய்வு குழுவினருடன் ஆர்வத்துடன் அருமையாக விளக்கினார். இந்த அகழ்வாராய்ச்சியாளர்களோடு பேசிக்கொண்டிருந்த போது, மொகஞ்சதாரோவையும் ஹரப்பாவையும் அகழ்ந்தெடுத்து, அறிவித்து அதன்மூலம் இந்திய வரலாறு பற்றிய கோணல் மாணலான புரிதல்களை நிமிர்த்தி நேர்செய்த சர் ஜான் மார்ஷலும், ஆர்.டி. பானர்ஜியும் என் நினைவுக்குள் வந்து போனார்கள்.

நமது தொன்மங்களின் தொப்புள் கொடியைத் தொட்டுப்பார்த்தது போன்ற ஓர் உணர்வு எனக்குள் தோன்றியது. இந்தப்பின்னணியில் தான் மதுரையில் நிகழ்ந்த “சங்கம் 4” நிகழ்வில் சொற்பொழிவாற்ற ‘கீழடி’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். கீழடி என்ற இடப்பெயரே சிந்துவெளிக் குடியிருப்புகள் ‘கீழ்-கிழக்கு, மேல்-மேற்கு’ என்ற பாகுபாட்டை நினைவு படுத்துகிறது. இதுவரை தோண்டப்பட்ட”கீழடி” க்கு கீழ் அடியிலும் அதற்கும் மேல்- மேற்காக இன்னும் தோண்டப்படாத ஏதோ ஒரு புள்ளியிலும் இன்னும் அறியப்படாத உண்மைகள் பல ஒளிந்திருப்பது போலத் தோன்றுகிறது இதைப் பற்றிய முதல் சொற்பொழிவை நிகழ்த்த மதுரையை விடச் சிறந்த ஊர் உலகத்தில் வேறு எங்கு இருக்கிறது?

மதுரை, சிவகங்கை மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள சின்னஞ்சிறு கிராமமான கீழடியைப்பற்றி நான் மதுரையில் வாழ்ந்த நாட்களில் கேள்விப்பட்டதில்லை. ஆனாலும், சிலைமான் வழியாக எத்தனையோமுறை போய் வந்திருக்கிறேன்.தமிழகத்தின் வரலாற்றைப் புரட்டிப்போட்டுப் புது வெளிச்சம் பாய்ச்சப்போகும் ஆதாரங்களை அந்த பூமி தன் அடிமடியில் வைத்து அடைகாக்கிறது என்பது யாருக்குத் தெரிந்திருந்தது அப்போது? தன்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுடனும் ஒவ்வொரு மனிதனும் தன்னை ஒவ்வொரு விதமாக, பொருத்திப் பார்க்கிறான்.

சில நேரம் அந்த நிகழ்வோடு நெருக்கம் கொள்ளாமல் விலகி நின்று வேடிக்கை பார்க்கிறான். எதுவாயினும் தனது சூழல் பற்றிய சுய உணர்வு கொண்ட ஒவ்வொருவன் மீதும் அவனது சமகால நிகழ்வுகள் மட்டுமின்றி அவனது தொன்மங்கள் மரபுகள் பற்றிய சிந்தனைகளும் கூட தாக்கம் புரியவே செய்கின்றன. வைகைக்கரையிலிருந்து கிளம்பி எங்கெங்கோ தேடித் திரிந்து வைகைக் கரைக்கே வந்து சேர்ந்தது போன்ற ஓர் உணர்வு  எனக்குள் இருக்கிறது. சங்க இலக்கியங்களில் வைகை (வையை) நதிபற்றி பல இடங்களில் பேசப்படுகிறது; பரிபாடலில் வையை நதிக்குச் சிறப்பிடம் என்பதெல்லாம் படித்தறிந்திருந்த விஷயம் தான் என்றாலும் வைகை நதியின் இருகரைகளிலும் ஒரு விரிவான பண்பாட்டிற்கான தொல்பொருள் தடயங்கள் புதைந்து கிடக்கின்றன என்பது பற்றிய கருத்து எதுவும் பரவலாக இல்லை.

இன்றைய மதுரை சங்க இலக்கிய மதுரையின் தொடர்ச்சி தானா என்ற ஐயம் கூட பலருக்கும் தோன்றியது உண்டு. பொதுவாக நீரின்றி வறண்டிருக்கும் வைகைக்கும் சங்க இலக்கியம் பாடும் வைகைக்கும் உள்ள இருதுருவ இடைவெளி இந்த ஐயத்தை அதிகமாக்கும். ஆனாலும் எப்போதோ ஒருமுறை வைகை கரைபுரண்டு ஓடும் போது கல்பாலத்தின் வடகரையில் நின்று அல்லது மேம்பாலத்தில் நின்று வெள்ளத்தை வேடிக்கை பார்ப்போம். அப்போது பரிபாடல் சொல்லும் வையை, சங்க இலக்கியம் சித்திரம் போலத் தீட்டும் மதுரை நகர வாழ்க்கை பற்றிய யோசனை எழும். மொத்தத்தில் மதுரை நகரின் பழமை பற்றிய கேள்விகள் மனதில் வந்து போகும். ஆனாலும், மொகஞ்சதாரோ -ஹரப்பா பண்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கத்தக்க தடயங்கள் மதுரைக்கு மிக அருகே கீழடியில் புதைந்து கிடப்பது யாருக்கும் தெரியாது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்றாய்வாளர்களுக்கு இதுகுறித்த உள்ளுணர்வு இருந்திருக்கக்கூடும். ஆனால், என்னைப் போன்ற “பகுதிநேர ஆய்வாளனுக்கு” அது சாத்தியமாக இருக்கவில்லை.

ஒருவகையில் எனது ஆய்வுப்பயணத்தில் எல்லாம் சொல்லிவைத்து நடப்பதுபோல இருக்கிறது. மத்தியப்பிரதேசத்தில் சிந்துவாரா பகுதியில் திராவிடப்பழங்குடிகள் வாழும் பகுதிகளில் இடுக்கி, தேனி, தேக்கடி, பழனி போன்ற இடங்களை இருபது ஆண்டுகளுக்கு முன்னால் கண்டறிந்த போதே அதை எதேச்சையான நிகழ்வாகக் கருதி என்னால் கடந்து போக முடியவில்லை. அதற்கு “சிந்துவாரா இணைப்போக்கு” (Chhindwara Syndrome) என்று பெயரிட்ட போது இந்த ” இணைப்போக்கு” வேறு ஏதோ ஒரு பெரிய உண்மையின் தடயச் சுவடு என்றே எனக்குத் தோன்றியது. இப்படிப்பட்ட பெயர் ஒற்றுமை எதேச்சையாக நிகழ்ந்திருக்க வாய்ப்பு இல்லை; இதற்குப் பின்னால் வரலாற்றுக்கு முற்பட்ட திராவிட வாழ்வியல் அதாவது பழந்தமிழ்த் தொன்மை பற்றிய ஏதோ ஓர் உண்மை ஒளிந்திருக்க வாய்ப்பிருக்கக் கூடும் என்று தோன்றியது.

இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இன்றுவரை மிகவும் பயன்படுத்தப்படுகிற முக்கியமான சில இடப்பெயர்கள் இந்தியாவின் நடுப்பகுதியான மத்தியப் பிரதேசத்தில் திராவிட மொழிபேசும் மக்கள் வாழும் பகுதியில் இடப்பெயர்களாக உள்ளன. மக்களின் புலப்பெயர்வின் ஊடாக இடப்பெயர்களும் பயணிக்கின்றன என்பது உண்மையானால் ”சிந்துவாரா இணைப்போக்கு” மத்தியப்பிரதேசத்திற்கு வடக்கிலும் தெற்கிலும் உள்ள இரு புள்ளிகளுக்கு இடையிலான ஒரு தொடர்பின் இணைப்புச் சங்கிலியின் ஒரு பகுதியே என்று தோன்றியது.
சிந்துவாரா இணைப்போக்கை உற்றுக்கவனித்து அதன் தொடர்புகளை ஆராய்ந்தால் “தலையையும்-வாலையும்” தொட்டுவிடலாம் என்று தோன்றியது. எது தலை எது வால் என்பதைவிட எனக்கு முக்கியமாகப் பட்டது இந்த புள்ளிகளுக்கு இடையிலான உறவுதான். அதாவது பயணத்தின் திசைகளை விட முக்கியமானது பயணமும் பயணம் செய்தவர்களும் தான் என்று தோன்றியது.

அதனால், இதைப் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வந்தேன். சிந்துவெளிப் பண்பாட்டு நிலப்பரப்பில், கொற்கை, வஞ்சி, தொண்டி உள்ளிட்ட ஏராளமான தொல்தமிழ் இடப்பெயர்கள் இன்றுவரை நிலைத்திருப்பதை 2002-ஆம் ஆண்டு ஒரு நள்ளிரவில் என் கணிப்பொறி ஆய்வில் கண்டறிந்த ‘யுரேகா’ நொடிகள், எனது பிறவிப்பயன். இருந்தாலும் அதற்குப்பின்னால் மேலும் எட்டு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து உறுதிப் படுத்திக்கொண்ட பின்னரே கோவை செம்மொழி மாநாட்டில் (2010) இதுபற்றி முதன்முதலாக அறிவித்தேன்

2012-ஆம் ஆண்டு, இது பற்றிய எனது ஆங்கில ஆய்வுக்கட்டுரை (‘The ‘High-West: Low-East’ Dichotomy of Indus Cities: A Dravidian Paradigm’) வெளியான பின்னாலும் அது சிந்துவெளி பற்றிய ஆய்வுலகத்தில் அங்குமிங்கும் கவனிக்கப்பட்டதே தவிர, தமிழ் மக்களிடம் பரவலாகச் சென்று சேரவில்லை. சிந்துவெளிப் பண்பாடு பற்றிய முன்னணி இணையதளமான ஹரப்பா.காம் (www.harappa.com) இக்கட்டுரையை மீள்பதிவு செய்தபின்னால், ஏராளமானோர் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு இந்த ஆய்வறிக்கை தமிழில் வெளிவந்திருக்கிறதா என்றும், தமிழில் எழுதி வெளியிட முடியுமா என்றும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதன் விளைவாகவே ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்ற எனது தமிழ் நூல் பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக 2016 இல் வெளிவந்தது.

சிந்துவெளி மக்கள் பேசிய மொழி ஒரு திராவிட மொழி என்று நிறுவப்படுமானால், அந்தப்பெருமைக்கு உரிமைகொண்டாடும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ள மொழி தமிழ் மொழியாகும். ஏனெனில், சிந்துவெளிப்பண்பாட்டில் மிக முக்கியமான கூறுகளான நகர வாழ்க்கை, வெளிநாட்டு வணிகம், சமய வாழ்க்கைக்கு மிதமிஞ்சிய முக்கியத்துவம் தராத வாழ்வியல்முறை, தாய்த்தெய்வ வழிபாடு போன்ற கூறுபாடுகளுக்கு இந்திய இலக்கியப் பரப்பில்,குறிப்பாக திராவிட இலக்கியப் பரப்பில், கிடைக்கூடிய ஆகப்பழமையான இலக்கியப் பதிவுகள் சங்க இலக்கியங்களே ஆகும்.

உன்னதமான ஒரு நகர்மயப் பண்பாட்டின் ஆழமான புரிதல்களை சங்க இலக்கியம் உள்ளடக்கியிருந்தாலும், அதை நிறுவுவதற்கான அகழ்வாராய்ச்சித் தடயங்கள் தமிழ்நாட்டில் அகழ்ந்து எடுக்கப்படவில்லை என்ற ஒரு பெரிய குறை இருந்து வந்தது. இக்குறையை நீக்கும் வகையில் கீழடி அகழ்வாராய்ச்சியின் தடயங்கள் அமைந்துள்ளன. கீழடியில் மட்டுமன்றி,வைகை நதியின் இரு கரைகளிலும் அகழ்வாராய்ச்சிக்கு உகந்த இடங்கள் என்று கண்டறியப்பட்டுள்ள ஏனைய இடங்களிலும் அகழ்வாராய்ச்சிகள் நடந்தால் தமிழ்த்தொன்மங்கள் புதிய வெளிச்சம் பெறும் என்பதில் ஐயமில்லை.

வரலாறு என்பது வானத்தில் இருந்து குதிப்பதில்லை. அடித்தள மக்க ளின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், வாழ்வியல்முறை, அரசியல் மாற்றங்கள் என்ற பல்வேறு தளங்களிலும் காலம், இடம் என்ற இரு பரிமாணங்களில் கட்டமைக்கப்படுவதே வரலாறாகும். அரசர்கள், பிறந்ததையும், இறந்ததையும், முடிசூடியதையும், முடியிழந்ததையும், அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதையும் குறிப்பெடுத்துக் கொள்வது மட்டும் அல்ல வரலாற்றின் வேலை.
தாய்மொழி மற்றும் தாய்நாட்டு வரலாறு பற்றிய புரிதல்கள் எல்லாத்தரப்பு மக்களிடையேயும் பரவலாக வேண்டும். அத்தகைய ஒரு விழிப்புணர்வை கீழடி அகழ்வாராய்ச்சி தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அகழ்வாராய்ச்சி இன்னும் முடிவு பெறாத நிலையில், சிந்துவெளிப் பண்பாட்டிற்கும், வைகை நதிப்பண்பாட்டிற்கும் இடையிலான ஒற்றுமை-வேற்றுமைகள் பற்றி இப்போது இறுதி முடிவாக எதுவும் கூறமுடியாது என்பது உண்மைதான். ஆயினும், சிந்துவெளிப்பண்பாட்டின் மிக முக்கியமான அடையாளமான சுட்ட செங்கற்கள், கருப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்களின் பெருக்கம், சுட்ட செங்கல்லால் ஆன தரை, செங்கல் மற்றும் சுட்டமண் ஓடுகளாலான சாக்கடைகள், விளையாட்டுப் பொருள்கள் என்று கீழடியில் கிடைத்திருக்கும் பல்வேறு சான்றுகளும் சிந்துவெளியின் முக்கியமான கூறுபாடுகளாகும். இந்த அடிப்படையான ஒற்றுமையைப் புறக்கணித்துவிடவும் முடியாது.

கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம் என்ற இடப்பெயர்ச் சான்றுகளை நான் கண்டறிந்தபோதே அப்பகுதியில் இன்றுவரை வழக்கிலுள்ள ‘ மதிரை ‘ என்ற ஊரின் பெயரும் எனது கவனத்தைக் கவர்ந்தது. கீழடிக்குச் சென்று அமர்நாத் ராமகிருஷ்ணனுடன் உரையாடி இதுவரை கிடைத்துள்ள சான்றாதாரங்களை நான் கண்கூடாகப் பார்த்த பின்னால், எனது சிந்துவெளி இடப்பெயர்வுத் தரவுகளை மீண்டும் துருவினேன்.

Image

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி உள்ளடங்கிய தென் தமிழ்நாட்டு மாவட்டங்களில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஊர்ப்பெயர்கள் அனைத்தையும் சிந்துவெளிப் பண்பாட்டு நிலப்பரப்பில் இப்போது புழக்கத்திலுள்ள ஊர்ப்பெயர்களோடு ஒப்பிட்டேன். அவற்றில் 97 இடப்பெயர்கள் அச்சு மாறாமல் அப்படியே பயன்படுத்தப்படுகின்றன. கற்பனையைவிட அழகாக இருக்கிறது உண்மை!

இதைப்போலவே இந்த 97 இடப்பெயர்களும் மேற்கு இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரம் போன்ற பகுதிகளிலும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்க ஒன்று .இந்த ஒற்றுமை பொத்தாம் பொதுவானதா அல்லது அதற்கும் அப்பால், ஆழமான பொருள்கொண்டதா என்பதை அறிவதற்காக வைகை நதியின் இரு கரைகளிலும் இந்திய அகழ்வாய்வு நிறுவனத்தின் (A.S.I) அகழ்வாய்வு வல்லுநர்கள் பலரும் சேர்ந்து அடையாளப்படுத்தியுள்ள 200 இடப்பெயர்களை சிந்துவெளியிலுள்ள ஊர்களின் பெயர்களோடு ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தேன். இவற்றில் 100க்கும் மேற்பட்ட பெயர்கள் சிந்துவெளி இடப்பெயர்களோடு மிக நெருக்கமாக ஒத்துப்போவதை விபத்து என்று என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.

Image

வரல்+ஆறு —> வரலாறு = வந்த வழி. கடந்து வந்த வழியைப்பற்றிய புரிதல்கள் வந்தவண்ணமே உள்ளன. அவை வந்த வண்ணம்தான் இருக்கும். சிந்துவெளி நாகரிகம் என்று ஒன்று இருந்ததை 1924—இல் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உலகத்திற்குச் சொல்லியிருக்கா விட்டால், ஐராவதம் மகாதேவன்,அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்களின் அரை நூற்றாண்டுகால உழைப்பு சிந்துவெளி ஆராய்ச்சிக்கு கிடைக்காமல் போயிருந்தால், இந்திய வரலாறு பற்றிய புரிதல்கள் வேறு விதமாகத்தான் இருந்திருக்கும்.

குறித்து வைத்துக்கொள்வோம். கிழக்கு வெளுக்கிறது, கீழடியில்! இது தொடக்கம்தான்; இது தொடரும், தொடர வேண்டும். சிந்துவெளிக்கும் வைகைக்கரைக்கும் பொதுவான இடப்பெயர்களைக் கொண்ட, அகழ்வாராய்ச்சிக்கு வாய்ப்புள்ள இடங்கள் என்று கண்டறியப்பட்ட (Archaeologically Potential Sites) இடங்களில் காலதாமதமின்றி ’கடப்பாரை’ போடவேண்டும். வரலாற்றில், அக்கறையுள்ளவர்கள் வாய் திறந்து பேசவேண்டும்.அகழ்வாய்வுத் தடயங்களை கவனமாக ஆவணப்படுத்த வேண்டும்.

கீழடி நமது தாய்மடி. சிந்துவெளி நிலப்பரப்பில் இன்றுவரை பிழைத்திருக்கும் கொற்கை–வஞ்சி-தொண்டி வளாகம் நமது தொன்மங்களின் தொப்புள்கொடிகளின் புராதன மிச்சம். வைகைக் கரையில் வளர்ந்தவன் நான். முதல் வகுப்பிலிருந்து முதுகலை வரை மதுரையிலேயே படித்தவன் நான்.

எங்களது குடும்பம் மதுரையிலிருந்து நான் பிறந்த ஊரான நத்தத்துக்குப் சென்றபோதும் கூட, மதுரையில் வைகையின் வடகரையில் ஒரு விடுதியில் தங்கிப்படித்தேன்; மதுரையில் தினமணியில் பணியாற்றியபோது ஒவ்வொரு நாளும் பேருந்து நிலையத்திலிருந்து வடகரையிலிருந்து வைகையைக் கடந்து தென்கரைக்குத்தான் செல்ல வேண்டும். வைகை நதியில் எப்போதோ ஒருமுறை வெள்ளம் கரைபுரண்டு வந்தபோது கூட்டமாய்க் கூடி நின்று வேடிக்கை பார்த்த குதூகலம் இன்னும் மனசில் இருக்கிறது. வைகை கீழ்ப்பாலத்தையொட்டி, வைகை மணற்படுகையில் கட்டணக்குளியல் தொட்டிகளில் குளித்த நாட்கள் நினைவிலிருக்கின்றன.

அதே வைகை நதியில் ஒரு புதுப்பாலத்தைக் கடந்து பாத்திமா மகளிர் கல்லூரியில் கீழடி பற்றி உரையாற்ற வந்திருக்கிறேன். மேடையின் முன் பார்வையாளர் வரிசையில் எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்த பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலரும், என் மதுரை நண்பர்களும், வகுப்புத் தோழர்களும் கூட. வைகைக்கரையிலிருந்து வைகைக்கரைக்கான எனது இந்தப்பயணம் மகாநதி வழியாக சிந்துவெளியைத் தொட்டு, புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்திருக்கிறது.

ஊரெல்லாம் சுற்றினாலும் தேர் நிலைக்கு வந்தால்தான் நிம்மதி. உலகம் ஒரு சின்ன உருண்டை என்பதை, எத்தனை முறை, எத்தனை விதங்களில் கற்றுக்கொடுக்கிறது வாழ்க்கை !

 

எனக்குள்ளே நீ
இங்கிருப்பதறியாமல்
எங்கெல்லாம் சுற்றி
எப்படித் தேடினேன்.

எத்தனை மலைகள்
ஏறி இறங்கி
என் தொட்டிலைத்
தொட்டேன்?

விதைத்த இடத்தில்
மரங்களும்
புதைத்த இடத்தில்
மனிதர்களும்
ஒருபோதும்‌
உறைந்ததில்லை…

மரபு தொடர்கிறது
வாழையடி வாழையாய்!

வாசலுக்கும்
வாசலுக்கும்
எத்தனை தூரம்..
இருந்தாலும்
காயவில்லை
உன்
“பனிக்குடத்தின்” ஈரம்!

ஆறுகள் வேறு வேறு
ஆனால்
நீர் ஒன்று…

சிந்துவெளியிலும்
வைகைக்கரையிலும்
எங்கள்
வேர் ஒன்று…

“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா”
என்ற‌
புரிதல் எங்களின்
பண்பாட்டுப் புதையல்..

இதோ
சிந்துவெளிக் காளையின்
திமிலில் தமிழ்…

கீழடிப்
பானையில்
சிந்துவெளி எழில்..

எல்லையற்ற பிரபஞ்சம்

விரிந்து பரந்த வானம் பற்றிய வியப்புகளோடும் வினாக்களோடும் மொட்டை மாடியில் படுத்துத் தூங்கி எவ்வளவு காலம் ஆகிவிட்டது? பூமிக்கு மேலும் வானம்; கீழும் வானம்; எந்தப்பக்கம் திரும்பிப் பார்த்தாலும் திரும்பத் திரும்ப அதே வானம். அப்பாலும், அதற்கு அப்பாலும். “கட்டுமரத்தில் வாழ்வது அழகாக இருக்கிறது. அண்ணாந்து பார்த்தால் நட்சத்திரப் புள்ளிகளைப் பொட்டாக அழகு அழகாய் வைத்துக்கொண்டு ஆகாயம்; நாங்கள் கட்டுமரத்தில் மல்லாந்து கிடந்தபடி வானத்தையும் அந்த நட்சத்திரங்களையும் பார்ப்போம். அவை எல்லாம் செய்யப்பட்டவையா அல்லது தாமாகவே தோன்றியவையா என்று நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொள்வோம்” என்று மார்க் ட்வெய்ன் எழுதினார்.

கட்டுமரத்திற்கு எங்கே போவது? எனக்கு என்னவோ அப்போதெல்லாம் வெட்ட வெளியும், பொட்டல் காடும், அதிகபட்சம் மொட்டை மாடியுமே போதுமானதாக இருந்தது. இப்போது தான் ‘பொய்க் கூரை’ என்னை பொத்தி வைக்கப் பார்க்கிறது.

கட்டுமரத்தில் மல்லாந்து படுத்தால் மட்டும் என்ன கண்டுபிடித்துவிடவா போகிறோம்? இதே வியப்பு தான் அப்போதும் இருக்கும். முழுவதுமாக எதுவும் புரிந்துவிடப் போவதில்லை. நீல் டீகிராசே டைசன் (Neil deGrasse Tyson)சொல்வதைப் போல யாருக்கும் தன்னைப் புரிய வைக்கும் கடமையோ கட்டாயப் பொறுப்போ பிரபஞ்சத்திற்கு இல்லை. அதனதன் கதியில் அது அது இயங்குகிறது. இன்னொரு கோணத்தில் தாமஸ் பிஞ்ச்சொன் (Thomas Pynchon)கேட்பது போல “எதுவும் அவ்வளவு எளிதாகப் புரிந்துகொள்ளும்படி ஏன் இருக்கவேண்டும்?”

வானம் இவ்வளவு புதிரானதாக இல்லையென்றால் பூமியில் கூட வாழ்க்கை வாடிக்கையானதாக சுவை குன்றிப் போய்விடும் என்றே தோன்றுகிறது. பூமியே துகள். இதில் பெருநகரம் என்ன? சிறுநகரம் என்ன? தலைநகரமென்ன? வால்நகரம் என்ன?

வெட்டவெளியில் நின்று மீண்டும் அண்ணாந்து பார்க்கிறேன். அண்டமும் அகண்டமுமான எல்லையற்ற வானம், நமது கண்களின் மூலம் தானே தன்னைத் தனக்குத் தானே புலப்படுத்திக்கொள்கிறது; ”நமது செவிகளின் மூலம்தானே பிரபஞ்சம் தனது ஒத்திசைவின் ஒழுங்கு நிரலை தானே கேட்கிறது; விரிந்து படர்ந்த வானத்தின் அகன்ற அழகிற்கும் புகழுக்கும் அதன் பிரமாண்டத்திற்கும் நாம் தானே சாட்சியமாய் இருக்கிறோம்” என்று படித்தது
நினைவிற்கு வந்தது.

விண்வெளியைப் பற்றி எனது இந்த இரண்டாம் சுற்றில் பேசுவதற்கு தத்துவமான பெரிய காரணம் எதுவும் இல்லை. உண்மையில் தற்செயலான அண்மை நிகழ்வு ஒன்றே இதற்கான தூண்டுதல்.

2017 ஆம் ஆண்டு, டிசம்பர் 6 ஆம் நாள். காலை நேரம். அப்போது தான் எனது அலுவலக அறைக்குள் நுழைந்து எனது இருக்கையில் அமர்ந்திருந்தேன். எனது தனிச் செயலர் உள்ளே நுழைந்தார். சாய் பன்னாட்டுப் பள்ளியின் தலைவரான பிஜய் சாஹு என்னைப் பார்க்கவிரும்புவதாகவும் அது தொடர்பாக என்னுடன் பேச விரும்புவதாகவும் கூறினார். அந்தப் பள்ளிக்கூடத்தில் சென்ற ஆண்டு நடந்த “மாதிரி ஐக்கிய நாடுகள்” கூட்டம் தொடர்பான விழாவொன்றிற்கு நான் முக்கிய விருந்தினராகச் சென்றுவந்திருந்தேன். அந்தவகையில் அந்தப் பள்ளிக்கூடம் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவருடன் தொலைபேசியில் பேசினேன்.

சாஹுவின் குரலிலேயே உற்சாகம் தொனித்தது. “அமெரிக்க விண்வெளி வீரர் ஜேக் டேவிட் ஃபிஷருடன் (Jack David Fischer)உடனே வந்து உங்களைச் சந்திக்கவிரும்புகிறேன்” என்றார். “அமெரிக்க விண்வெளி வீரரா? அவர் இங்கே எதற்கு வந்திருக்கிறார்?” என்று கேட்பதற்கு முன்பே பிஜய் சாஹு மேலும் விளக்கினார். அமெரிக்கவிண்வெளி நிறுவனமான நாசாவுடன் அவரது பள்ளி செய்திருக்கும் ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விண்வெளி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக ஜேக் டேவிட் வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். நான் வரச் சொன்ன அடுத்த 20 நிமிடங்களில் அவர்கள் இருவரும் எனது அறையில்.

இதற்கிடையில், ஜேக் டேவிட் பற்றிய எல்லா விவரங்களையும் ‘கூகுள்’ மூலம் தெரிந்துகொண்டேன். பன்னாட்டு விண்வெளி ஆய்வுக்கூடத்தில் 135 நாட்கள் 18 மணி நேரம் 8 நிமிடங்கள் தங்கி ஆராய்ச்சி செய்துவிட்டு 2017, செப்டம்பர் 17 ஆம் தேதி தான் அவர் பூமிக்கு திரும்பியுள்ளார். பூமியின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவே ஒரு மாதம் ஆகுமாம். பூமிக்கு வந்து சரியாக 80 வது நாள் அவர் என்னைச் சந்திக்கிறார்.

விண்வெளி ஆய்வுக்கலத்தில் பயணிக்கும்போது அணியும் நீலவண்ணச் சீருடையில் மிக எளிமையான கம்பீரத்துடனும் வசீகரமான ஒரு புன்னகையோடும் ஜேக் டேவிட். “ஹலோ, நலமா? நான் ஜேக் டேவிட்” என்று கைகுலுக்கியதும், “பூமிக்கு நல்வரவு; ஒடிசா உங்களை வரவேற்கிறது” என்றேன்.

தேநீர் அருந்தியபடி ஆர்வமாக அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென்று மனதிற்குள் ஒரு யோசனை தோன்றியது. ”இன்னும் எத்தனை நாள் இங்கே இருக்கப்போகிறீர்கள்?” என்றேன். ”இன்னும் இரண்டு நாட்கள்” என்றார். அப்படியானால், நாளை மறுநாள் ஒடிசா அறிவுப்புலத்தில் (Odisha Knowledge Hub – OKH) இவரைச் சொற்பொழிவாற்ற நாம் அழைக்கலாமா? அது சாத்தியமா? என்று அவர்கள் இருவரையும் பொதுவாகப் பார்த்துக்கொண்டே கேட்டேன். திடீரென்று அப்படிக் கேட்கக் கூடாதுதான். ஆனாலும் கேட்டுவிட்டேன். “அது என்னையும் மகிழ்வூட்டும்” என்று ஜேக் டேவிட் அடுத்த நொடியில் பதில் சொன்னபோது நான் அசந்து போய்விட்டேன்.

ஒரு நாள் தான் இடைவெளி இருந்தது. பொதுவாக OKH சொற்பொழிவுகளை முன்கூட்டியே திட்டமிடுவோம். அது மட்டுமின்றி அதற்கு ஒரு வாரம் முன்பு தான் சுற்றுச்சூழலுக்கு பாதகம் விளைவிக்காத “பொறுப்புணர்வுள்ள சுற்றுலா” பற்றி அமெரிக்காவைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற பேராசிரியர் டாக்டர் ஹரால்டு குட்வின் எங்களிடையே உரையாற்றிச் சென்றிருந்தார். அதனால் என்ன? அட்டவணை பார்த்தா ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிகழ்கின்றன? பூமிக்கு திரும்பிய கையோடு ஒருவர் ஒடிசா மாநில அதிகாரிகளுக்கும் மாநில இளைஞர்களுக்கும் எதேச்சையாக வந்து சொற்பொழிவாற்ற முடியுமென்றால் அந்த வாய்ப்பைத் தவற விடமுடியுமா?
“என்ன தலைப்பில் பேச நினைக்கிறீர்கள்” என்று ஜேக்கை கேட்டேன்.

“அரசின் உயரதிகாரிகள் அனைவரும் அரங்கில் அமர்ந்தும், 30 மாவட்ட ஆட்சித்தலைவர்கள் சிறந்த மாணவ மாணவியருடன் காணொளியின் மூலமும் உரையைக் கேட்பார்கள். புவனேஸ்வரத்திலுள்ள அறிவியல் சார்ந்த கல்வியாளர்களும் உங்கள் உரையைக் கேட்பார்கள்” என்றும் அவரிடம் தெரிவித்தேன். “பல்வேறு நாடுகள் விண்வெளியில் ஓரணியாய்ச் சேர்ந்து பணியாற்றிய கூட்டு முயற்சி (Team Spirit) பற்றி பேசவா” என்று கேட்டார். சற்று யோசித்துவிட்டு, “நான் ஒரு தலைப்பு சொல்லலாமா” என்று கேட்டேன். “சரி” என்றதும் “Borderless Universe” (எல்லையற்ற பிரபஞ்சம்) என்றேன். அவரும் உடனே ஒப்புக்கொண்டார்.

ஒரே நாளில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்தோம். அமைச்சர்கள், துறைச்செயலர்கள், சில துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், 30 மாவட்ட ஆட்சித்தலைவர்கள் என்று ‘டிஜிட்டல்’ அழைப்பிதழ் அனுப்பினோம். கால அவகாசம் குறைவென்றாலும் எப்போதும் போல அழைப்பிதழும், சொற்பொழிவாளரின் புகைப்படத்துடன் கூடிய ஆளுமைக் குறிப்பும் அச்சிடப்பட்டன.

அப்போது தான் திடீரென்று நினைவுக்கு வந்தது. அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் கல்லூரி மாணவ- மாணவியருக்கான ஆசிய ராக்கெட் ஏவும் போட்டியில் வெற்றி பெற்ற சில மாணவர்களும் அவர்களது ஆசிரியரும் முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றுச் சென்றார்கள் என்பது. அந்த மாணவர்கள் மேற்கு ஒடிசாவில் புர்லா என்ற நகரிலுள்ள தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்கள் என்பதை நான் அறிந்திருந்ததால், துணைவேந்தரை தொலைபேசியில் அழைத்தேன். தலைமைச் செயலகத்தில் அமெரிக்க விண்வெளி வீரர் ஜேக் டேவிட் உரைநிகழ்த்தப்போவதை அவரிடம் தெரிவித்தேன். முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற மாணவர்களையும் சம்பந்தப்பட்ட ஆசிரியரையும் மறுநாளே ஒரு காரில் புவனேஸ்வரத்திற்கு அனுப்பிவைக்கும்படி அவரிடம் கூறினேன்.

அந்த மாணவர்கள் முதல்வரைச் சந்தித்தபோது கையில் எடுத்துவந்த ராக்கெட் மாடலையும் காரில் அனுப்பிவைக்கும்படி அவரிடம் கூறினேன். அந்த மாணவர்களில் பலருக்கு பல்கலைக்கழகத் தேர்வு நடப்பதாகவும் அன்றைக்கு தேர்வு இல்லாத மாணவர் சிலரை எப்படியாவது அனுப்பி வைப்பதாகவும் அவர் சொன்னார். மாவட்ட கலெக்டரிடமும் அதை உறுதிசெய்யச் சொன்னேன். ஒடிசாவில் ஹீராகுட் அணைக்கட்டையும் அதன் சுற்றுச் சூழலையும் ஆராய வானில் சின்னஞ் சிறிய துணைக்கோளை ஏவி விட சொந்தமாக ராக்கெட் செய்யும் மாணவர்களில் ஒரு சிலராவது ஜேக் டேவிட்டின் பேச்சை அரங்கில் அமர்ந்து கேட்டு அவருடன் பேசி புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று நான் விரும்பினேன்.

ஒடிசா அறிவுப் புலச்சொற்பொழிவுத் தொடரை 2016 ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் நாங்கள் தொடங்கினோம். ஜேக் டேவிட் 14 வது பேச்சாளர். இதுவரை உரை நிகழ்த்தியுள்ள அனைவரும் அவரவர் துறையில் உலக அளவில் அறியப்பட்டவர்கள். இந்தத் தொடரில் 6வது சொற்பொழிவை இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் சர்மா ஏற்கனவே 2016 அக்டோபர் மாதம் நிகழ்த்தி இருந்தார் என்பது எதேச்சை நிகழ்வுதான் என்றாலும் வியப்பானதே. அளவிட முடியாத அதிசயம் அல்லவா ஆகாயம்! எத்தனை பேர் வந்து சொன்னால் தான் என்ன?

வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்!
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்! என்று எட்டயபுரத்தின் எந்தப் புள்ளியில் நின்று யோசித்தான் அந்த மகா கவிஞன்? 2017 டிசம்பர் 8 ஆம் நாள். அரங்கம் நிறைந்திருந்தது. உட்கார இடம் இல்லை. முன்கூட்டியே அரங்கிற்கு வந்துவிட்ட டேவிட் தனது காணொளிப் படம் மின்திரையில் தெளிவாக இருக்கிறதா; ஒலி நன்றாக ஒத்திசைகிறதா என்றெல்லாம் நேரடியாகவே சோதித்துப் பார்த்துவிட்டு எனது அறைக்கு வந்தார். தேநீர் அருந்திவிட்டு அவரைச் சரியான நேரத்தில் மீண்டும் அரங்கிற்கு அழைத்துச் சென்றேன்.

மிகத்துல்லியமாக அழைப்பிதழில் குறிப்பிட்ட நேரத்தில் உரைநிகழ்வைத் தொடங்குவது; மேடையில் சொற்பொழிவாளர் மட்டுமே அமருதல்; அறிவிப்பு என்று எதுவும் இல்லாமல் தரப்படும் பூங்கொத்து; சொற்பொழிவாளர் பற்றிய எனது அதிக பட்சமாக இரண்டு நிமிட அறிமுகமும் வரவேற்பும்; சுமார் 45 அல்லது 50 நிமிடம் உரை; பதினைந்து நிமிடங்கள் நேரடியாகவும் காணொளி மூலமாகவும் வினா விடை நிகழ்வு; அமைச்சர் ஒருவர் மேடையேறி வழங்கும் நினைவுப் பரிசு; ஓரிரு வரியில் நன்றி என்பது ஒடிசா அறிவுப் புலச் சொற்பொழிவுத் தொடர் இதுவரை கடைப்பிடித்து வரும் அவைஒழுங்கு.

அப்படியொரு நிகழ்வை அந்த அரங்கம் பார்த்ததில்லை. அதுவரை நாங்கள் எவருமே கண்டிராத விண்வெளிக்காட்சிகள் வண்ணமயமாய் கண்முன் விரிகின்றன. ரஷியாவிலுள்ள ஏவுதளத்திலிருந்து விண்கலம் எரிதழல் கக்கிச் சீறிப்பாயும் நொடிகள்; அடுத்த நொடியில் ஆகாயம்; ஆகாயம்; அதற்கு அப்பாலும் ஆகாயம்.

ஏற்கனவே, 1998 ஆம் ஆண்டிலிருந்து விண்ணில் பறந்துகொண்டிருக்கும் பன்னாட்டு விண்வெளி ஆய்வுக்கூடத்துடன் இந்த விண்கலத்திலிருந்து கழன்று பிரியும் இணைப்பகம் துல்லியமாகச் சென்று இணைந்துகொள்ளும் லாவகம்; ஜேக் டேவிட்டின் காணொளி அக்குவேறு ஆணிவேறாகப் படம்பிடித்துக் காட்டிய ஆய்வுக்கூடத்தின் உள் அமைப்பு; விண்வெளி வீரர்கள் அங்கு மிதந்து கொண்டே இயங்கும் முறை; உணவு உண்பது; உடற்பயிற்சி செய்வது; ஆராய்ச்சி செய்வது; குறுகிய இடத்திற்குள் நிகழும் வெவ்வேறு வகையான சோதனைகள்: அதற்கான கருவிகள்; அங்கேயே கொண்டாடப்படும் நிகழ்வுகள் என்று காட்சிப்படங்கள் திரையில் விரிகின்றன. ஜேக் டேவிட் மிக நேர்த்தியாக பேசிக்கொண்டே செல்கிறார். ஒரு தொழில் நுட்ப விஞ்ஞானியின் தெளிவையும்; விண்வெளி வீரருக்கான கம்பீரத்தையும் கடந்து அனைவரையும் கவர்ந்தது அவர் பேசிய விதம்; அவரது உடல் மொழி.

Image

விண்வெளி ஆய்வுக்கூடத்தில் செய்யப்பட்ட பல்வேறு ஆய்வுகள் பற்றி பேசிய அவர் புற்று நோய்க்கான கீமோதெரபியை நோயால் பாதிக்கப்பட்ட திசுக்களில் மட்டும் துல்லியமாகச் செலுத்தும் செயல்முறை பற்றிய ஒரு சோதனையும் விண்வெளியில் செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

அப்போது அவரது குரல் திடீரென்று கம்மியது. சில வார்த்தைகள் தட்டுத்தடுமாறின. “எனது மகள் ஒரு புற்று நோயாளி. தற்போது அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெறுகிறார். அந்த மருத்துவமனையின் சின்னம் பொறித்த அவளது விளையாட்டு பொம்மை ஒன்றையும் என்னுடன் விண்வெளிக்கு நான் எடுத்துச் சென்றிருந்தேன்” என்று அவர் சொன்னபோது நான் உணர்ச்சி மேலீட்டால் உறைந்து உடனே கரைந்தேன். என் கண்களில் நீர். அந்த அரங்கில் பலரது கண்களிலும் அது தான் என்பதை பின்னர் அறிந்தேன். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
எவ்வளவு அற்புதமான பேச்சு; எவ்வளவு அருமையான ஆகாய தரிசனம். எவ்வளவு அழகான பணிவுடமை; அறிந்தவனின் அடக்கம் போல நேர்மையானதும் கம்பீரமானதும் வேறெதுவும் இருக்கிறதா? ”வானத்திலிருந்து பூமியைப் பார்த்ததும் எனக்குள் அடக்கமும் பணிவும் நிரந்தரமாகக் குடியேறிவிட்டன” என்றார் அவர்.

ஒரு மனிதன் தனது “ஜன்னலுக்கு” வெளியே ஒரு நாளைக்கு 16 முறை சூரியன் உதிப்பதையும் 16 முறை சூரியன் மறைவதையும் –அதாவது 90 நிமிடங்களில் மாறும் இரவு பகலை- பார்க்கும் போது வேறென்ன தோன்றும்?
யாரின் பகல் இது? யாரின் இரவு இது? யார் கையில் திணித்த யாருடைய கடிகாரம்?
நனவோடையில்,
விண்ணினுள் விண்ணாய் விண் ஒரு விண்ணாய்
விண்ணறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய்
என்ற வள்ளலாரின் வரிகள் மின்னலிட்டு மறைந்தன.

ஜேக் பேசிய அரங்கின் மேடை அருகே ஒடிசா மாணவர்களின் ‘ராக்கெட் மாடல்’ அடக்கமாக அமர்ந்திருந்தது. முன்வரிசையில் அமர்ந்திருந்த நான் திரும்பிப்பார்த்தேன். சில மாதங்களுக்கு முன்னர் முதல்வரிடம் ராக்கெட் போட்டியில் வென்றது பற்றி மகிழ்ச்சியுடன் பேசிய மாணவர் ஒருவரை அடையாளம் கண்டு சைகையில் அழைத்தேன். ஜஜ்வதி ஜஜ்வத் சாஹு என்ற அவரது பெயரைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அவர்களது ராக்கெட் திட்டம் பற்றி ஜேக் டேவிட்டின் முன்னிலையில் ஓரிரு நிமிடம் மட்டும் பேசச் சொன்னேன்.

தனது ’பென் டிரைவிலிருந்து’ காணொளியை திரையில் செலுத்திய அந்த மாணவர் மிக நம்பிக்கையுடன் மேடையில் பேசினார். ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ராக்கெட்டை ஏவிச் சுற்றவைத்து மீண்டும் தரையிறக்கி மீட்டெடுத்ததை விளக்கினார். ஜேக் டேவிட் அந்த மாணவனை தன்னருகில் அழைத்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அந்தப் புகைப்படம் அந்த மாணவனை எதிர்காலத்தில் ஒருநாள் விண்ணின் வியத்தகு உயரங்களுக்கும் உந்திவிடக் கூடும். யார் கண்டது? மதுரையில் சோமநாதன் என்ற தமிழாசிரியர் எப்போதோ ஒருநாள் என்னை மேடையில் ஏற்றிவிட்டதால் தான் இப்போது நான் இங்கே இருக்கிறேன். ஒருவகையில் இந்த ‘இரண்டாம் சுற்றும்’கூட இதனால் தான் சாத்தியம்.

என்னவோ தெரியவில்லை. கடந்த ஓராண்டில் இரண்டு விண்வெளி வீரர்களை நேருக்கு நேர் சந்தித்து விட்டேன். 1984 ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற பெருமைக்குரிய ராகேஷ் சர்மா சோவியத் விண்கலத்தில் பறந்து அங்கிருந்தபடியே பாரதப் பிரதமர் இந்திரா காந்தியுடன் பேசியதை தினமணியில் செய்தியாக எழுதினேன்.

அப்போது அடுத்த ஓரிரு வாரங்களில் ஐ.ஏ.எஸ் நேர்காணலுக்கு டில்லி செல்லவிருந்தேன். விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா பற்றியும் இந்திய விண்வெளி திட்டம் பற்றியும் கேள்வி கேட்க வாய்ப்பிருப்பதாக அனுமானித்து அவரைப் பற்றி எல்லா விவரங்களையும் திரட்டி குறிப்பெடுத்து படித்தேன். அதே ராகேஷ் சர்மா 2016 இல் ஒடிசா அறிவுப்புலத்தில் உரையாற்ற வந்த போது இதை அவரிடம் நினைவுகூர்ந்தேன். விண்வெளி ஆய்வுகூடத்தை பற்றி பேசும்போது எனக்கு பழைய நிகழ்வொன்று மலரும் நினைவாக மனதில் தோன்றுகிறது.

1979 ஆம் ஆண்டு ஜுன் – ஜூலை மாதங்களை எப்படி மறக்கமுடியும்? எங்கும் ‘ஸ்கை லேப்’ என்பதே பேச்சு. உசிலம்பட்டி உள்பட உலகின் பல பகுதிகளிலும் மக்களுக்கு தூக்கம் போச்சு. ‘ஸ்கை லேப்’என்பது ஓர் அமெரிக்க விண்வெளி ஆய்வுக்கூடம். அதில் விஞ்ஞானிகள் யாரும் பயணம் செய்யவில்லை. அது ஆளற்ற ஓர் ஆய்வுக்கூடம். 1973 ஆம் ஆண்டு மே மாதம் விண்வெளியில் செலுத்தப்பட்ட இந்த ஆய்வுக்கூடம் ஒன்பது ஆண்டுகள் விண்ணில் சுற்றி வரும்வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் ஐந்து ஆண்டுகளே முடிந்திருந்த நிலையில் 1978 ஆம் ஆண்டு இறுதியில் ‘ஸ்கை –லேப்’பின் வேகம் வெகுவிரைவாக குறைந்துவருவதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள்.

இதில் ஒரு வேடிக்கையான உண்மை என்னவென்றால் மேலே செலுத்துவதற்கான தொழில்நுட்ப வசதி கொண்ட அந்த ‘ஸ்கை -லேப்’பில் அதை மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டுவரும் வசதியோ அதற்கான திட்டமோ இல்லை என்பது தான். அந்த வகையில் அது ஓர் ஒருவழிப்பயணம். சிக்கன நடவடிக்கையாக அப்படி திட்டமிடப்பட்டது. அதுவே கடைசியில் சிக்கலாகி விட்டது. “வலவன் ஏவிய அந்த வான ஊர்தி” பற்றிய கவலை விஞ்ஞானிகள் வட்டாரத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

‘ஸ்கை-லேப்’ விவகாரம் அப்போது அமெரிக்காவில் ஓர் அரசியல் நையாண்டியாகவும் மற்ற கண்டங்களில் ‘எம கண்டமாகவும்’ மாறியது. அதிலும் குறிப்பாக, அந்த ‘ஸ்கை-லேப்’ இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 7400 கிலோ மீட்டர் பரப்பளவில் எங்கே வேண்டுமென்றாலும் விழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்ததும் பீதி கவ்விக்கொண்டது; குறிப்பாக இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இதுதான் தலைப்புச்செய்தி. தமிழ்நாட்டு நிலைமையைச் சொல்லவே வேண்டியதில்லை. ஒரே அலப்பறை தான். பயத்தால் மக்கள் செய்த செயல்களும் அதை தமிழ்ப்பத்திரிகைகள் கையாண்ட விதமும் இப்போது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது.

அப்போது நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் இலக்கியம் படித்துக் கொண்டிருந்தேன். இதழியல் எனது சிறப்புப்பாடம். முனைவர் அ.சாந்தா எனது பேராசிரியை. ‘ஸ்கை -லேப்’ செய்திகள் பற்றிய விவாதம் இதழியல் துறையிலும் நடந்தது. அந்த ஆண்டு இதழியல் மாணவ மாணவியருக்கான ‘ப்ராஜெக்ட்’டாக ‘ஸ்கை-லேப்’ செய்திகளையே வைத்துக்கொள்ளலாம் என்று சாந்தா மேடம் சொன்னார். ‘ஸ்கை-லேப்’ சம்பவத்தை வெவ்வேறு தமிழ்ப் பத்திரிகைகள் குறிப்பாக சில பத்திரிகைகள் உணர்ச்சிவசத்தோடு கையாண்ட விதம் பற்றி நாங்கள் விரிவான ஆய்வுக்கட்டுரை எழுதிச் சமர்ப்பித்தது நினைவில் இருக்கிறது.

‘ஸ்கை -லேப்’ அநேகமாக தனது வீட்டுக்கூரையில் நேரம் சரியில்லை என்றால் சரியாக உச்சந்தலையில் சிதறி விழக்கூடும் என்று பலரும் பயந்ததாகத் தோன்றியது. 36 அடி உயரம்; 82 அடி உயரம்; 77 டன் எடை என்ற புள்ளிவிவரங்கள் அனைவரின் வயிற்றிலும் புளியைக் கரைத்தன. “ 77 டன் என்பது எத்தனை லாரி எடை ”என்று தெருமுனைகளில் பேசிக்கொண்டார்கள். ‘ஸ்கை-லேப்’ பற்றிய பயத்தின் பக்க விளைவுகள் ஏராளம். 1979 ஆம் ஆண்டு ஜீலை 11 ஆம் தேதி ‘ஸ்கை-லேப்’ பூமியில் சிதறிவிழும் என்ற விஞ்ஞானிகளின் கணிப்பை மனதில் வைத்து கை ரேகை பார்த்தார்கள், குறி கேட்டார்கள்.

எது வேண்டுமானாலும் நடக்கும் என்ற அச்சம் ஆடு, கோழிகளுக்கு ஆபத்தாக மாறியது. கறி விருந்துகள் ஏராளமாய் நடந்தன. பிரியாணி வியாபாரம் சூடேறியது. தீவிரமாக காதலித்தவர்கள் சிலர் அவசர அவசரமாக கல்யாணம் செய்து கொண்டதாகக் கூட பேச்சு அடிபட்டது. நாள் நெருங்க

நெருங்க ‘கிலி’ அதிகமானது. சென்னை போன்ற வெளியூர்களில் வேலைபார்த்தவர்கள் பலர் குடும்பத்தோடு இருக்கலாம் (அல்லது இறக்கலாம்) என்ற எண்ணத்தில் சொந்த ஊர்களுக்கு பயணமானார்கள். மற்ற இடங்களைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால், தென் மாவட்டங்களில் பல இடங்கள் ‘முண்டாசுபட்டி’ யான பதற்றம் கலந்த முழு நீள நகைச்சுவை அது. இதுதான் எனது பிரச்சனை. எங்கோ எல்லைகளற்ற பிரபஞ்சத்தில் ஆரம்பித்து விண்வெளி ஆய்வுகூடத்தை பற்றி பேச்சுவந்ததும் ‘ஸ்கை-லேப்’ நினைவுக்கு வந்து பழையகதைக்குள் புகுந்து முண்டாசுபட்டி வரை வந்துவிட்டேன். எவ்வளவோ முயன்றும் இந்த முழுநீள நகைச்்சுவையான ‘ப்ளாஷ்-பேக்’கை என்னால் தவிர்க்க இயலவில்லை.

மீண்டும் புவனேஸ்வரம் செல்வோம். ஜேக்கின் மிக அருமையான அந்தச் சொற்பொழிவு முடிந்ததும் அனைவரும் அவரை எழுந்து நின்று கரவொலி எழுப்பி பாராட்டினார்கள். உயரதிகாரிகள் பலர் அவருடன் ஆர்வமாக ‘செல்ஃபி’ எடுத்துக்கொண்டது ஒரு புது வழக்கமாகவும் புத்துணர்ச்சி ஊட்டுவதாகவும் இருந்தது.

எல்லையற்ற பிரபஞ்சத்தின் கடலில் மூழ்கிக்கிடந்த நான் அந்த அரங்கை விட்டு வெளியேறும் போது ஓர் ‘எறும்பைப் போல’ ஊர்ந்து செல்வதாக எனக்குத் தோன்றியது. அதன் பின்னர், ஜேக் டேவிட்டும் நானும் எனது காரில் மதிய உணவிற்காகச் சென்றோம். “இளைய தலைமுறைக்கு அவர்கள் செல்லக்கூடிய உயரங்களையும் அந்த அரங்கில் அமர்ந்திருந்த என்னைப் போன்றவர்களுக்கு நாங்கள் இருக்கும் தரையையும் அடையாளம் காட்டியது உங்கள் உரை” என்றேன். அவர் புன்னகைத்தார்.

திடீரென்று ஏதோ தோன்றியது. “நானும் புற்று நோயோடு போராடி மீண்டவன் தான்” என்று அவரிடம் சொன்னேன். எப்போது என்ன என்ற விவரம் கேட்டார். சொன்னேன். அவரது மகளின் உடல் நலம் பற்றி விசாரித்தேன். தற்போது குணமடைந்து வருவதாகக் கூறினார். ஆனால், அப்போதும் கூட ஜேக் டேவிட்டின் விண்வெளிப் பயணத்தின் ஊடாகப் பயணித்த அவரது

உணர்வுகளின் முழுவிவரமும் எனக்கு தெரியாது, அதன் பின்னர் இணையத்தில் படித்துத் தெரிந்துகொண்டேன்.

ஜேக் டேவிட் விண்வெளிப் பயணத்தின் போது அணிந்திருந்த விண்வெளி உடையின் (Space Suit) பெயர் ‘யூனிட்டி’ அதாவது ‘ஒற்றுமை’. அந்த ஆடையின் மீது அமெரிக்காவைச் சேர்ந்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வரைந்த துகிலோவியங்கள் ஒட்டிவைத்து தைக்கப்பட்டிருந்தன. பன்னாட்டு விண்வெளி ஆய்வுக் கூடத்தின் கூட்டாளி நாடுகளான ரஷியா, ஜெர்மனி, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த குழந்தை புற்று நோயாளிகளும் இந்த படம் வரையும் திட்டத்தில் பங்கேற்று இருந்தார்கள்.

ஜேக் விண்வெளியில் வசிக்கும் போது ஒரு நாள் புற்று நோய் சிகிச்சை பெறும் குழந்தைகள் பலர் ஹுஸ்டனிலுள்ள ஜான்சன் விண்வெளி மையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து விண்வெளி வீரர்களுடன் காணொளியில் பேசி மகிழ்ந்தார்கள். அப்படி வந்திருந்த குழந்தைகளில் ஜேக் டேவிட்டின் மகளும் ஒருவர்.

விண்வெளியில் பறந்துகொண்டிருக்கும் தனது தந்தையிடம் “ஹலோ டாட், விண்வெளியில் கேன்சர் சிகிச்சை பற்றி ஆராய்வதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லவிரும்புகிறேன். நீங்கள் பெரிய செயலொன்றைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதற்காக மீண்டும் நன்றி” என்று அவரது மகள் குரல் தழதழக்க, முட்டி வரும் கண்ணீரை விழிகளில் தாங்கியபடி சொன்னதாக நான் இணையத்தில் படித்தபோது நெகிழ்ந்து போனேன்.

1979 ஆம் ஆண்டு ‘ஸ்கை-லேப்’ கட்டுரைக்கு செய்தி சேகரித்ததில் தொடங்கி, 1984 இல் ராகேஷ் சர்மா விண்ணில் பறந்த செய்தியை தமிழில் மொழிபெயர்த்து பத்திரிகையில் எழுதி, 2016 இல் அதே ராகேஷ் சர்மாவை உரையாற்ற அழைத்து அவருடன் நெருங்கி உரையாடி, கேள்விகள் பல கேட்டு, அடுத்த ஆண்டே விண்ணில் இருந்து மண்ணுக்கு திரும்பி ஒரு புற்று நோயாளியின் தந்தையாக அனைவரின் முன்னும் கலங்கி நின்ற கம்பீரமான ஜேக் டேவிட்டை சந்தித்து….
புரியவில்லை…

ஏன் புரிய வேண்டும்?
இதோ. ஜேக் டேவிட் உணவுவிடுதியின் வாசல்வரை வந்து என்னை வழியனுப்புகிறார். ஊர்ந்து செல்லும் எனது காரில் நான் மேலும் சிறுத்து ஒரு ‘சிற்றெறும்பாய்’ உட்கார்ந்திருப்பதாய் உணர்கிறேன்.

 

எல்லையற்ற பிரபஞ்சம்
என்ன சொல்கிறது?

இதோ
பால்வீதியின்
பரந்து விரியும்
புறவெளியில்
பூப்பந்தாய்ப் புரள்கிறது
பூமிப்பந்து.

மீமிசைப் பார்வையில்
மின்னல் பூச்சிகளாய்
கோள்கள்
பார்வையில் படாத
பாற்கடல்கள்

இதோ
யுகம்யுகமாய் ஓடும்
காலநதிக் கணக்கில்
காலண்டர் காட்டும்
நாள், வாரம்
மாதம் ஆண்டெல்லாம்
துளிக்குள் துளியான
துணுக்கு.

வந்து போனவர்கள்
வந்து இருப்பவர்கள்
வரப் போகிறவர்கள்
வரிசையில்,
இருப்பவரிடம் மட்டும்
இருக்கிறது
ஏதோ ஒரு கணக்கு

நிலையாய் நிற்கும்
மலைகள்
நிற்காமல் ஓடும்
ஆறுகள்
பஞ்சாங்கம் பார்க்காத
பருவமழை

மறைந்தொழிந்த
மாமிச மலைகள்
மறையாத சிறுபூச்சி
பாதை மறக்காத
பறவைகள்

எங்கே அலெக்சாண்டர்?
எங்கே செங்கிஷ்கான்?
எங்கே நெப்போலியன்?

வஞ்சினம் உரைத்தோர்
வாழ்ந்த தடம் எங்கே?

ஏன் குரைக்கிறார்கள்
மேடைகளில்?
ஏன் நிறைக்கிறார்கள்
பானைகளில்?

கல்வெட்டுகளையே
கரையான் தின்றுவிட்டது
ஏன் இவர்கள்
இன்னும்
‘கட்-அவுட்’ வைக்கிறார்கள்?

இதோ
அடக்கமானவன்
மட்டும்தான்
அமரனாகிறான்

நீத்தார் பெருமை தானே
கடவுளின்
பிறப்பு ரகசியம்

நிலையின் திரியாது
அடங்கியவன்
தோற்றம் தானே
மலையிலும் பெரிய மாண்பு

ஒன்றுமில்லை என்பதை
உணர்ந்துகொள்வதற்கு
எவ்வளவு உயரம்
தேவைப்படுகிறது.

நாட்டு எல்லைகளின்
சதுர மைல்களும்
வீட்டுக் கொல்லைகளின்
சதுர அடிகளும்
சமமாய்த் தொலைந்தன
சப்தமில்லாமல்

தொலைக்காட்சியின்
விவாத அரங்குகளின்
‘கூக்குரல்’ எதுவும்
கேட்காத
இந்த அதிசய உயரம்
எவ்வளவு
ஆறுதலாக இருக்கிறது?

இந்தக்
குண்டாச் சட்டிக்குள்
ஏன் கட்டினோம்
இத்தனை கோட்டைகள்?

இதோ
அம்மணமாய்
இருப்பதால்தான்
அழகாக இருக்கிறது வானம்.
அது தான்
வானத்தின் வசியம்
அது ஒரு
திறந்தவெளி ரகசியம்.’

“அப்படியெல்லாம்
பெரிய கொம்பன்
இல்லை நாம்”
என்ற புரிதல் துலங்கும்
நொடிகளில் தான்
அமைதியாகிறது
மனசு.

சீனப்பெருஞ்சுவர்
ஒரு
சிறுகோடாகக் கூடத்
தெரியாத உயரத்தில்
இவர்களின்
சிம்மாசனங்கள்
எம்மாத்திரம்?

நாடே தெரியவில்லை
ஏன் இன்னும்
சொம்பை கட்டி அழுகிறான்
இந்த நாட்டாமை?

மலைகளையே காணவில்லை
தலைகளை எங்கே தேடுவது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *