Poem - Anand Prabhu |கவிதை

1
வாரம் தவறாமல்
வெள்ளிக்கிழமை
சாமிவந்து
தெருவுக்கே குறிசொல்லும் அவளிடம்
எந்தச்சாமியும் சொல்லவில்லை
குடித்துவிட்டு அடிக்கிற
கணவனை திருத்துகிற வழியை..

2

யாரென தெரியவில்லை.
இரத்தச் சகதியில் கிடக்கிறான்.
சட்டையின் வண்ணம்கண்டு
சட்டென அதிர்ந்துபோய்
கூட்டம் விலக்கி
முகம்பார்த்து நிம்மதியடைகிறேன்.
இருப்பினும்
யாரோ ஒருவருக்கு
அவன் சகோதரனாய் இருக்கலாம்.

3

சின்னதொரு காரணம்தான்.
கோபம் வெடித்து
வார்த்தைகள் தடித்து
பேச்சுவார்த்தை இல்லாமல் போனது.
எதிரெதிரே சந்தித்தாலும்
புன்னகை சிந்திவிடாமல் பார்த்துக்கொண்டோம்.
தயக்கப் போர்வை
போர்த்திக் கொண்டோம்.
பிறிதொருநாள்
தயங்கித் தயங்கி
கைகளில்
இனிப்புப்பெட்டியோடு அந்த
எதிர்வீட்டுக்குழந்தை வந்தான்.
வெட்கச்சிரிப்போடு பிறந்த நாள் என்றான்.
இனிப்பொன்றை எடுத்துக்கொண்டு
முத்தமிட்டேன்.
“ஏன்..மாமா.என்கிட்ட பேசமாட்டேங்கிற?”என்பவனிடம்
பெரியவனாகிவிட்டேனென்று
சொல்லவியலாமல்
கூனிநிற்கிறேன்.

4

மிகுந்த பதற்றத்திலிருந்தான்.
வெகு அவசரமென்றான்.
இரண்டே நாட்களில்
திருப்பித் தருகிறேன் என்றான்.
வாரம் கடந்துவிட்டது.
அழைப்பை துண்டித்துக் கொண்டே இருக்கிறான்.
இப்போது நான் பதற்றத்தில் இருக்கிறேன்..

5
சரளமாக பொய்வருகிறது.
சாக்கடை நாற்றம்
பழகிவிட்டது.
இயல்பாக வதந்திகளை
பரப்பிவிட முடிகிறது..
முகத்திற்கு முன்னால்
குனிந்துவிட்டு
முதுகு தெரிந்ததும்
குத்தமுடிகிறது..
பணி நிமித்தம் எங்கேயும்
பல்லைக்காட்ட முடிகிறது.
குடிப்பதற்கு எளிதாய்
காரணம் கிடைக்கிறது..
எதையும் கண்டுங்காணாமல்
போகமுடிகிறது.
சொந்தக் கருத்தென்று சொல்லி
இயல்பு நிலையைக்
கலைக்க இயல்கிறது.
ஏதுமற்றோரிடம்
எளியோரிடம்
திருப்பிப் பேசாதவனிடம்

திமிரைக் காட்ட முடிகிறது.
எல்லாம் எளிதாகிவிட்டது..
கொஞ்சம் நல்லவனாய்
இருப்பதைத்தவிர

 

எழுதியவர்

– கௌ.ஆனந்தபிரபு

 

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

2 thoughts on “கௌ.ஆனந்தபிரபு கவிதைகள்”
  1. கவிதைகள் அனைத்தும் அருமை நண்பா மேலும் அந்த குறி சொல்லும் கவிதை மிக சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *