Mohanlal's Namadhu Movie Review in Tamil | மோகன்லால் நடித்த "நமது" திரைப்பட விமர்சனம்

“நமது” திரைப்படம் 2016இல் வெளிவந்த ஒரு தெலுங்கு படம். அதே ஆண்டில் மலையாளம் மற்றும் தமிழிலும் வெளிவந்துள்ளது. அதன் இறுதிக் காட்சி குறித்து மட்டும் ஒரு கருத்து தோன்றுகிறது.

இதன் நாயகி காயத்ரி பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேறியவர். மாப்பிள்ளை கிடைக்காது என்பதால் மேற்கொண்டு படிக்கவோ வேலைக்கு அனுப்பவோ செய்யாமல் முதல் வகுப்பில் தேறியதையும் மறைத்து திருமணம் செய்து விடுகிறார்கள். அவரது கணவர் பட்டப் படிப்பில் இரண்டாம் வகுப்பில் தேறியவர். தன் பேராசிரியரை சந்திக்கும் காயத்ரி தன் கணவருக்கு ஒரு நல்ல வேலை வாங்கி தர சொல்கிறார். அவர் காய்த்ரிக்கே சிங்கப்பூரில் நல்ல வேலை வாங்கி தருவதாக கூறுகிறார். தன் கணவர், குழந்தைகளை விட்டு எப்படி வெளிநாடு செல்ல முடியும் என்று தயங்குகிறார். கணவரும் குழந்தைகளும் தான் போவதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறார். ஆனால் அவர்கள் அவர் போகலாம் என்று கூறுகிறார்கள். இதனால் அவர் மனத்தாங்கல் அடைகிறார். படத்தின் முடிவு எப்படியோ இருக்கட்டும்.

ஆனால் இந்த உளவியல் குறித்து ஏற்கனவே சமூக ஊடகங்களில் வந்த ஒரு பதிவோடு இதை ஒப்பிடலாம். ஒரு குடும்பத் தலைவி குடும்ப பொறுப்புகளை, பணிகளை தன் தலை மேல் போட்டுக் கொண்டு செய்கிறார். தான் இல்லாவிட்டால் அந்த குடும்பமே நடக்காது என்று நினைக்கிறார். ஒரு நாள் திடீரென்று அவர் இறந்து விடுகிறார். அவரது நண்பரால் உடனடியாக செல்ல முடியவில்லை. ஓரிரு மாதங்கள் கழித்து செல்கிறார். அந்த குடும்பம் எப்படி சமாளிக்கிறது என்று பயந்து கொண்டே போகிறார். அங்கு எல்லாமே சாதரணமாக நடக்கிறது. ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு விதமான ஏற்பாடுகள் செய்து விட்டார்கள். அந்தப் பதிவின் முடிவில் எல்லாமே நாம்தான் செய்ய வேண்டும் என்று நினைத்து தனக்கான ஒரு வாழ்க்கையை வாழாமல் போக வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் படத்திலும் அந்தப் பெண்மணி தான் இல்லாமல் மற்றவர்கள் சமாளித்துக் கொள்வோம் என்று சொல்லும்போது அடையும் ஏமாற்றம் இந்த வகையிலானதுதான்.

இங்கிலீஷ் விங்கிலீஷ், ‘name sake’ போன்ற படங்களில் ஆங்கிலம் தெரியாத பெண்கள் அமெரிக்காவில் தைரியமாக ஆங்கிலம் கற்றுக் கொண்டு சொந்தக் காலில் நிற்பதாக காட்டுவார்கள். குடும்பம் என்கிற நிறுவனத்தின் நேர்மறை, எதிர்மறை அம்சங்களை உதாசீனம் செய்யாமல் அதே சமயம் பெண்களை மட்டும் குடும்பத்திற்காக தியாகம் செய்ய சொல்வது அல்லது அதுவே அவர்களாகவே ஏற்றுக்கொண்ட விருப்பம் என்று காட்டுவது பெண்களை பின்னுக்கு தள்ளும்.

இதே படத்தில் வரும் இன்னொரு காட்சியும் உணர்வு பூர்வமானதாகவும் சற்று சிந்திக்க வைப்பதாகவும் இருக்கிறது.

நடுத்தர வகுப்பை சேர்ந்த ஒரு பத்து வயது சிறுமி அடித்தள மக்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஒரு குழந்தை பருவ சிறுவனுடன் நட்பு பாராட்டி அவனை பள்ளியில் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்கிறாள். ஒரு நாள் அவனை யாரோ கடத்திக் கொண்டு போய்விடுகிறார்கள். அவனைக் கண்டுபிடித்து தருமாறு ஒரு துண்டறிக்கை தயார் செய்து சாலையில் போவோர் வருவோரிடம் கேட்கிறாள். மரத்தடியில் அமர்ந்திருக்கும் ஒரு ஜோசியர் அவளிடம் உள்ள பணத்தை வாங்கிக் கொண்டு நாகாத்தம்மன் கோயிலுக்கு போனால் அவன் கிடைப்பான் என்று ஜோசியம் சொல்கிறார். அவளுக்கு ஒரே மகிழ்ச்சி. முகம் மலர அவன் கிடைத்தது விடுவானா என்று கேட்கிறாள். தன் உண்டியலில் இருக்கும் பணம் அத்தனையும் அவருக்கு தருவதாக கூறுகிறாள். அந்த ஜோசியருக்கு சற்று சங்கடமாக போய்விடுகிறது. அவளை அழைத்து தான் சும்மா சொன்னதாக கூறி பணத்தையும் திருப்பிக் கொடுக்கிறார்.

ஜோசியர் ஆனாலும் அவரிடமும் மன சாட்சி இருந்திருக்கிறது. இப்படி ஜோசியத்தை பற்றி ஒரு காட்சியை வைத்த இயக்குனர் ஏனோ தெரியவில்லை இறுதியில் அந்தக் குழந்தை தற்செயலாக நாகத்தம்மன் கோயிலிலேயே கிடைப்பதாக காட்டுகிறார்.

சில பேருக்கு ஜோசியர்கள் சொல்வது தற்செயலாக நடக்கலாம். அதை பார்த்துவிட்டு மற்றவர்கள் ஜோசியத்தை நம்பிவிடுகிறார்கள் .

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *