Laapataa Ladies - லப்பட்டா லேடீஸ் (தொலைந்து போன பெண்கள்)

லப்பட்டா லேடீஸ் – தொலைந்து போன பெண்கள்.

தலைப்பே இரண்டு பொருள் தருகிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் காணாமல் போனவர்களா அல்லது தங்களை தாங்களே தொலைத்துக் கொண்ட பெண்ணினமா என்ற கேள்வி எழுகிறது.

2023இல் டொரன்டோ திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு மார்ச் 2024இல் திரையரங்குகளில் வந்தது. இப்போது நெட்ஃபிளிக்சில் காணலாம். மூல திரைக்கதை பிப்லப் கோஸ்வாமி எழுதியதை கிரன் ராவ் இயக்கியுள்ளார். அவரும் அமீர்கான் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே இணைந்து தயாரித்துள்ளனர். பல்வேறு விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற இப்படம் வசூலிலும் வெற்றி கண்டுள்ளது.

பெண் பாத்திரங்களில் நடித்துள்ள நடிகர்களின் முக பாவனை அற்புதம். மூன்று நடிகர்கள் புதுமுகமாம். இயக்குனரை பாராட்ட வேண்டும்.

எளியவர்களின் பண்பை, வாழ்க்கை முறைகளை மிக சிறப்பாக காட்டியிருக்கிறார்கள். ஆனால் நீண்ட காலமாக நிலவும் சில நடைமுறைகளை ஒரு பெண் சில நாட்களுக்குள் மாற்றுவதாக காட்டியிருப்பது பிரச்சினையை எளிமைப்படுத்துவாக உள்ளது. இது படித்த ஜெயா எனும் பெண் கிராமத்து குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மாற்றங்களை செய்வதற்கும் அதே போல ஆண்களின் இயல்பால் வெறுப்பு அடைந்திருக்கும் ஒரு தன்னம்பிக்கை கொண்ட வயதான பெண் மாயி, முழுக்க முழுக்க பழம் நம்பிக்கைகள் கொண்ட இளம் பெண்ணை மாற்றுவதிலும் பார்க்க முடிகிறது.

Laapata Ladies' Director Kiran Rao Talks About Tough Edits

ஆனால் ஜெயா மற்றும் மாயி கூறும் தன்னம்பிக்கை உரைகள், பெண்கள் மனதில் சிறிது சிறிதாக மாற்றங்களை ஏற்படுத்தலாம். இப்படிப்பட்ட துன்பங்களை அனுபவித்த பெண்களுக்கு சட்டென்று ஒரு பொறி போல அவை செயல் படலாம்.

சில வசனங்கள் குறிப்பிடத்தக்கவை.
‘என் தாயார் என்னை நல்ல முறையில்தான் வளர்த்துள்ளார்கள் ‘ என்று கூறும் பூல் குமாரியிடம்
‘உன் தாயார் உன்னை சரியாக வளர்க்கவில்லை. அதனால்தான் உனக்கு உன் கணவர் ஊர் கூட தெரியவில்லை ‘
என்று மாயி கூறும்போது நல்ல வளர்ப்பு என்றால் என்ன என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

‘தங்களுக்கு பிடித்த உணவை பெண்கள் என்றைக்கு சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள் ?’
என்கிற கேள்வி ஆண்களை யோசிக்க வைக்கும்.

பூல் குமாரி அவர்கள் சாதி வழக்கப்படி ஒரு சுருக்குப் பையில் சில மங்கலப் பொருட்களை வைத்துக் கொண்டிருக்கிறார். திருமணமான பெண்களை அது காப்பாற்றும் என்பது அவர்களின் நம்பிக்கை. அதைக் கேட்ட மாயி ‘ உன்னை உன் கணவனுடன் சேர்ந்திருக்கவே அதனால் முடியவில்லை. அதுவா உன்னைக் காப்பாற்ற போகிறது?’ என்று கேட்கிறாள்.

பின்னால் தன் கணவன் இருக்கும் இடம் தெரிந்து பூல் குமாரி மாயியின் இடத்திலிருந்து செல்கிறாள். அவள் போன பிறகு மாயி மேசையை திறந்து பார்க்கிறாள். அங்கு அந்த சுருக்குப் பை இருக்கிறது. அவசரத்தில் விட்டுவிட்டு போயிருக்கலாம். அல்லது அதன் மீதான நம்பிக்கை இழந்து இருக்கலாம். அதேபோல் இறுதிக் காட்சியில் கதையின் கருவான வட மாநில பெண்கள் அணியும் முக்காடு பூல் குமாரியின் தலையிலிருந்து நழுவுகிறது. அதை சரி செய்ய முயற்சி செய்கிறாள். கணவனைப் பார்க்கிறாள். காமிரா அந்தப் பக்கமாக இருப்பதால் நம்மால் அவளின் பின்பக்கத்தை மட்டும் பார்க்க முடிகிறது. முக்காட்டை சரி செய்யாமல் அப்படியே விட்டு விடுகிறாள்.

Aamir Khan and His Wife Kiran Rao

இன்னொரு இடத்தில் முக்காடிட்ட புகைப்படத்தைக் காட்டி இவளைப் பார்த்தீர்களா என்று ஒரு கடைக்காரரிடம் கேட்கிறான். முகமே தெரியாத ஒருவரை எப்படி கண்டுபிடிக்க முடியும் என்று அவர் கேட்கிறார். அந்த நேரத்தில் உள்ளிருந்து அவர் மனைவி எட்டிப் பார்க்கிறார். அவர் முழுவதும் பர்தா அணிந்த பெண். நகைச்சுவையாகவும் அதே சமயம் ஊருக்கு உபதேசம் தனக்கு வேறு நியாயம் என்பதை பளிச்சென்று காட்டும் காட்சி.

சற்று நெருடலாக தெரிவது இரண்டு இடங்கள். ஒன்று பெண்கள் சுயமாக இயங்க வேண்டும் என்று சொல்லும் மாயி பீடி குடிப்பதாக காட்டுகிறார்கள்.
புகை பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு என்பதை தவிர பெண்கள் குடிக்கக் கூடாது என்பதில்லை. உழைக்கும் பெண்களில் சிலர் ஆண்களைப் போல புகை பிடிப்பதும் மது அருந்துவதும் உண்டுதான். மாயி பாத்திரம் வாழ்க்கையில் அடிபட்டு கடுமையாக உழைத்து சொந்தக் காலில் நிற்கும் ஒரு பெண்மணி.

ஆனாலும் பல படங்களில் சுயமாக இயங்கும் பெண்கள் புகை பிடிப்பது மது அருந்துவது போல் காட்டப்படுகிறது. அது அப்படிப்பட்ட பெண்கள் குறித்து ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கலாம்.

இரண்டாவது நெருடலான இடம், இலஞ்சத்திலேயே ஊறியிருக்கும் காவல் ஆய்வாளர் திடீரென்று நல்லவராக மாறுவது. அவருடைய பாத்திரமே சற்று நகைச்சுவையாகவும் அதே சமயம் காவல்துறையின் குரூரத்தை காட்டுவதாகவும் அமைந்துள்ளது. ஆகவே அவர் ஜெயாவின் கணவரிடமிருந்து இலஞ்சத்தையும் பெற்றுக் கொண்டு ஆனால் ஜெயாவை அவரிடமிருந்து விடுவிக்கவும் செய்வதை ஒரு ஜனரஞ்சகமாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். படம் ஒரு தீவிரமான பிரச்சினையை பல இடங்களில் அழுத்தமாகவும் சில இடங்களில் வெகு மக்கள் ரசனையுடனும் எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறலாம்.

ஆர்.ரமணன்.




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *