“குமுதா”…குட்டீஸ் லீடர்.! சிறுகதை – மரு உடலியங்கியல் பாலா
நான் (அருண்)… எழும்பூர் “ராஜ குருகுலம்” தொடக்க பள்ளியில், 70களில்… ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது… எனக்கும் “குமுதா” என்ற .. என் வகுப்பு தோழிக்கும்… முதல் “ரேங்க்” வாங்குவதில் பெரும் போட்டி நடைபெறும்!.. நிறையமுறை, எங்கள் ராஜேஸ்வரி டீச்சருக்கு ‘ஐஸ்’ வைத்தே அவள் வெற்றி பெற்று முதல் “ரேங்க்” வாங்கி விடுவாள்…!
அதல பாருங்க.. முதல் ரேங்க் பெற்றால் சிலபல.. அல்ப சலுகைகள் கிட்டும்.. ! அக்து யாதெனில்? அவர்கள் “க்ளாஸ்” லீடர் ஆக பொறுப்பேற்று, ஆசிரியர் இல்லாத போது ,”பேசும்” மாணவர் பெயர்களை கரும்பலகையில் எழுதி.. ஆசிரியரிடம் போட்டு கொடுத்து, .. அவர் வந்ததும் … பேசிய பிள்ளைகளுக்குச் குட்டு கொடுக்கும் பெரும்பேறு அடையும் , நடைமுறை.. அமலில் இருந்த காலம் அது.
நான் அப்ராணியாக.. சிவனே! என்று அமர்ந்திருந்தாலும என் பெயரை..வேண்டுமென்றே “பேச்சாளர்” லிஸ்ட்டில் எழுதி.. என் மண்டையை பதம் பார்ப்பதில்.. அவளுக்கு ஒரு அலாதி பிரியம்.! நான் ஒரிரு சமயங்களில் லீடர் ஆனபோது… ஒருமுறை கூட அவளை குட்டியதில்லை… என்பதை உங்களுக்கு ஒரு கூடுதல் தகவலாய் ஈண்டு பதிவு செய்ய விழைகிறேன்!
எல்லோரையும்.. அதட்டுவதும், திட்டுவதும், குட்டுவதும்.. பிரச்சினை ஏதேனும் வந்தால் அப்பாவை (இரயில்வே அதிகாரி) கூட்டி வந்து புகார் அளிப்பதும்…என அல்லி ராஜ்ஜியம் நடத்துவாள் அந்த அழகிய சுட்டிப்பெண்.
முழுபரீட்சைக்கு முன்பு… பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சி விமர்சையாக நடப்பது வழக்கம். அந்த ஆண்டு, எங்கள் கடைசி ஆண்டுவிழா என்பதால் (அது 5ஆம் வகுப்புவரை மட்டுமே நடத்தப்படும் தனியார் ஆரம்ப பள்ளி) அனைவரும் குதூகலத்துடன் தினமும் ரிகர்சலில் ஈடுபட தொடங்கினோம்! அவள் பரத நாட்டிய போட்டியிலும்! நான், குரூப் டான்சிலும்.. பங்கு பெறும் பொருட்டு, ரிகர்சலில் மும்முரமாக ஈடுபட்டோம்!
ஒருநாள் … ரிகர்சல் முடிவுற்று கிளம்பும் போது.. அவளுக்கு உதவி செய்ய யாரும் இல்லாமல் போகவே, தூரத்தில் நின்றிருந்த என்னை கூப்பிட்டு “ஏய் அருண்! இங்க கொஞ்சம் வாடா.. இந்த ஹேர் பின்னை போட்டு விடுடா!” என அவள் எனக்கு கட்டளையிட… நானும் அதை சிரமேற்கொண்டு. போட்டு விடுகையில் … என் போறாத காலம்..எனக்கு ஒரு விபரீத ஆசை தோன்றியது.. !
“என்னை.. இவள் எவ்வளவு முறை குட்டியிறுக்கிறாள்?? இன்று.. நான் ஏன் இவள் கன்னத்தை கிள்ளிவிடக்கூடாது!? என எனக்குள் வினா எழுப்பி.. அதற்கு சாதகமாய் முடிவும் எடுத்து, சற்று அழுத்தமாகவே கன்னத்தை கிள்ளி, என் எண்ணத்தை தைரியமாய் செயல்படுத்தியே விட்டேன்..
கிள்ளும்போது அவள் சட்டென்று முகத்தை திருப்பியதால், லேசாக நகக்கீரல் வேறு விழுந்துவிட… அவ்வளவுதான் அவள் வலியால் துடித்து அழுதபடி” சீ போடா நாயே! ஏண்டா என்ன கிள்ளினே?! இரு இரு!நாளைக்கு எங்க அப்பாவ கூட்டியாந்து உன்ன என்ன பண்றன் பாரு” என்று சபதமிட்டு, தேம்பி அழ.. நான் “சாரி” கேட்டு கெஞ்சியபடியே.. பயத்தில் மெல்ல அங்கிருந்து ஒட்டமெடுத்தேன்!
நான் அரண்டுபோய்… 2 நாளைக்கு வயிற்று வலி என்று வீட்டில் பொய்சாக்கு சொல்லி, பள்ளி பக்கமே செல்லவில்லை… மூன்றாம் நாள், டீச்சர் என்னை தேடிக்கொண்டு வீட்டுக்கே வந்துவிட … நான் பயந்து நடுங்கி போனேன்.. ஆனால் டீச்சரோ “ஏண்டா அருண் 2நாளா ரிகர்சலுக்கே வரல.. உடம்பு கிடம்பு சரியில்லையா?” என அன்புடன் வினவ, மெல்ல சகஜமாகி பதில் சொல்லாமல் மௌனமாய் நின்றேன்!
“சரி சரி நாளக்கி வந்துடு!”என்று கூறி செல்ல… அப்பாடா! மைதிலி என்னை காட்டிகொடுக்காமல் காப்பாற்றியது, அறிந்து நிம்மதியுற்று.. அடுத்த நாள் பள்ளிக்கு சற்று தைரியமாகவே போனேன்..! அவள், என்னை பார்த்ததும்…. நெருங்கி வந்து கோபத்துடன் “ஒழுங்கு” காட்டிவிட்டு.. பேசாமல் செல்ல. நான் ஆளவிட்டா போதுமென்று அடக்கி வாசித்தேன்.
ஒருவழியாக முழுபரீட்சை முடிந்து, அனைவரும் பள்ளிவிட்டு செல்ல, “டீ சி” வாங்க குழுமினோம்… நான் குமுதாவை.. சற்றே பயத்துடன் ஓர கண்ணால் பார்க்க… அவள் திடீரென்று என்னிடம் நெருங்கி வந்து “அருண் சாரிடா! உன்ன நிறைய வாட்டி, வலிக்கிற மாரி குட்டி இருக்கேண்டா!” என வருத்தம் தெரிவிக்க.. நானும், “பரவாயில்ல குமுதா!, நானும் உன்ன அன்று நல்லா கிள்ளிட்டேன், வெரி வெரி சாரி !”என்றேன்… அவள் புன்னகை பூத்தபடி “டாட்டா” காட்டி செல்ல..
அன்று எங்களுக்குள் ஏற்பட்ட.. அந்த சோகமான பிரிவு! இன்றுவரை ஏதோ இனம் புரியாத வலியை எனக்குள் கொடுத்து கொண்டே உள்ளது.!
(முற்றும்)