அம்மாவின் பாசம் கவிதை – பேசும் பிரபாகரன்

அம்மாவின் பாசம் கவிதை – பேசும் பிரபாகரன்




இருக்கும் போது புரியாதது
இல்லாத போது புரிய வருவது
அம்மாவின் பாசம்

உன்னை அடகு வைத்து என்னைப் பெற்றாய்
ஆனால் நான்
உன்னை அடகு வைத்து ஒரு பெண்ணை உற்றேன்
அடகு போனது உன் பாசம் மட்டுமல்ல
என் சுவாசமும் தான்

பேசிக்கொள்ளாத இந்தப் பெண்களால்
ஊசிபோயின உறவும்
என் வாழ்க்கையும்

Mother's Affection Poem - Pesum Prabakaran அம்மாவின் பாசம் கவிதை - பேசும் பிரபாகரன்

நீர் அடித்து நீர் விலகியிருக்கிறது
பெண்மை பெண்மையையே
விலகியிருக்கிறது
ஒத்த துருவங்கள்
ஒன்றை ஒன்று விலக்கும் என்பது
காந்தத்தில் மட்டுமல்ல
என் கதையிலும் தான்

போட்டதைத் தின்பதும்
போட்டுத் தின்பதும்
என் போதாத காலமா?
இல்லை இனிப் போராடும் நேரமா ?
கார்பன்டை ஆக்ஸைடு சுவாசித்து வாழவேண்டுமென்று
சில ஆண்களுக்கு விதியிருக்கிறது
இது எல்லா வீதியிலும் இருக்கிறது

ஒருவரின் வெற்றிடம் மற்றொருவருக்குக் கொள்ளிடம்
ஒருவரின் அழுகை மற்றொருவரின் சிரிப்பு
எதிரி வெளியே இருந்தால் போராடலாம்
உள்ளே இருப்பதால் நான் வாதாடுகின்றேன்

என்னைச் சாப்பிட வைத்து அழகு பார்த்தாய்
இப்போது நான் சாப்பிடும் போது அழுது பார்க்கிறாய்
என்னைக் கூப்பிட வைத்துப் அழகு கேட்பாய்
இப்போது கூப்பாடு போட்டு அழுது கேட்கிறாய்
தனித் தனி உணவு
தன்மை இல்லாத உணர்வு
நாசமானது என் மனம்
இப்போது நான் நடமாடும் பிணம்

மரங்கள் தழைப்பதற்கு
அதன் கிளைகள் வேண்டுமானால் வெட்டப்படலாம்
ஆனால் வேர்கள் வெட்டப்பட வேண்டும்
என்ற தீர்ப்பு வேதனைக் கூறியது
அன்பைப் புரிந்து கொள்ளாத பெண்ணால்
அழியுமொரு குடும்பம்
ஒழிக்க முடியாதது
உண்மையில்
அம்மா என்னும் அற்புத உறவு.

– பேசும் பிரபாகரன்