ஆ…..இது புதுசா இல்ல… இல்ல… பழசுதான்.. – அ.பாக்கியம்
ஆ…..இது புதுசா இல்ல…
இல்ல… பழசுதான்..
தமிழகத்தில், 25 மாவட்டங்களில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டிய, 138 ஏக்கர் பொது ஒதுக்கீட்டு இடம், 61 கோடி ரூபாய்க்கு அரசால் விற்கப்பட்டுள்ளது.
நகர ஊரமைப்புச் சட்டத்தின்படி, 2,500 சதுர மீட்டருக்கு அதிக பரப்பிலான அனைத்து லே-அவுட்களிலும், மொத்தப்பரப்பில் 10 சதவீத இடத்தை பொது ஒதுக்கீட்டு இடமாக ஒதுக்கவேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது.
இதற்கு விலக்கு அளிக்கும் வகையில், 2019ல், அ.தி.மு.க., ஆட்சியில், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் கொண்டு வரப்பட்டன.
இந்த விதிகளின்படி, 3000 சதுர மீட்டருக்கு உட்பட்ட லே-அவுட்களுக்கு, திறந்த வெளியிடம் ஒதுக்க வேண்டியதில்லை.
3,000 சதுர மீட்டரிலிருந்து 10 ஆயிரம் சதுர மீட்டர் வரையிலான பரப்பிலான திட்டங்களுக்கு, 10 சதவீத இடத்தை ஒதுக்கலாம்; அல்லது அந்த நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பை, அரசுக்குச் செலுத்தலாம்.
இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டபோதே, சூழல் ஆர்வலர்கள் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2019 பிப்ரவரியில், இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தபின், 2021 நவம்பர் வரை, தமிழகத்தில் எத்தனை லே-அவுட்களில், எவ்வளவு ஏக்கர் பரப்புள்ள திறந்த வெளியிடத்துக்கு தானப்பத்திரத்துக்குப் பதிலாக வழிகாட்டி மதிப்பு வாங்கப்பட்டது என்ற விபரம் வருமாரு.
25 மாவட்டங்களில் 34 மாதங்களில், ஒப்புதல் வழங்கப்பட்ட 1367 லே-அவுட்களில், 219 லே-அவுட்களிலும், 194 பெரிய கட்டடங்களில் 63 கட்டடங்களிலும் மட்டுமே 10 சதவீத திறந்த வெளியிடம் 110 ஏக்கர் தானமாக வாங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 1148 லே-அவுட்களிலும், 131 கட்டடங்களிலும் ‘திறந்த வெளியிடம்’ ஒதுக்குவதற்குப் பதிலாக, 138 ஏக்கர் 31 சென்ட் இடத்துக்கு, அரசு வழிகாட்டி மதிப்பாக ரூ.60 கோடியே 83 லட்ச ரூபாய், அரசுக்குச் செலுத்தப்பட்டுள்ளது.
அதாவது பூங்கா, விளையாட்டு மைதானம் போன்றவற்றை அமைப்பதற்கான அரசின் இடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக ரூ.31 கோடியே 37 லட்சத்து 77 ஆயிரத்து 925 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
இதேபோல எல்லா இடங்களையும் அரசே விற்று விட்டால், எதிர்காலத்தில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மரங்கள் வைக்க இடம் எதுவுமே இருக்காது. சுற்றுச் சூழல் எப்படி பாதுகாக்கப்படும்.
எனவே, இந்த விதிமுறையை மாற்றி, 10 சதவீத இடம் ஒதுக்குவதைக் கட்டாயமாக்க வேண்டியது அவசர அவசியம். இதனால் குறைந்த விலை கொள்ளையும் நடைபெறுகிறது.
தேனியில் ஓரிடத்தில் நான்கு சென்ட் இடத்துக்குப் பதிலாக வழிகாட்டி மதிப்பாக வெறும் 1,500 ரூபாய் மட்டும் செலுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சேலத்தில் மாநகரப் பகுதியில் ஆறு சென்ட் இடத்துக்குப் பதிலாக ஒரு கோடியே 94 லட்ச ரூபாயும், கோவையில் 16 சென்ட் இடத்துக்குப் பதிலாக ஒரு கோடியே 46 லட்சத்து 96 ஆயிரம் ரூபாயும் வழிகாட்டி மதிப்பாக அரசுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. உண்மையில் அந்த இடங்களின் மதிப்பு, இதை விட பல மடங்கு அதிகம்.
ஆக்கிரமிப்பில் இதுவொரு வகை. அதிமுக அரசால் பொது இடம் பயன்பாடு சட்டத்தில் (OSR) கொண்டுவரப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யவேண்டும். பொது இடம் சூறையாடலைத் தடுக்க வேண்டும்.
அ.பாக்கியம்
முகநூல் பக்கத்திலிருந்து