விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் – விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுரு
தனது அரசாங்கம் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று அறிவித்தார். கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் அவசரமாகக் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் பற்றியே அவர் தன்னுடைய அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
சட்டங்களைத் திரும்பப் பெறுவதை அறிவித்த தன்னுடைய உரையில் ‘அவர்கள் [தங்களுடைய] வீடுகள், வயல்வெளிகள் மற்றும் [தங்களுடைய] குடும்பத்தினரிடம் திரும்பிச் செல்ல வேண்டும். நாம் மீண்டும் புதிதாகத் தொடங்குவோம்’ என்று விவசாயிகளிடம் அவர் கூறியிருந்தார். விவசாயிகள் மீது திணிக்கப்பட்ட சட்டங்களை எதிர்த்து ஓராண்டாகப் போராடிய விவசாயிகளை எதிர்மறையாகப் பாதிக்கின்ற சட்டங்களை தன்னுடைய அரசாங்கம் இயற்றியதைப் பற்றி எந்தக் கட்டத்திலும் மோடி ஒப்புக் கொண்டிருக்கவில்லை.
விவசாயத்தை தனியார்மயமாக்குகின்ற கொள்கைகளை மோடி கைவிடவ் போவதில்லை; மாறாக அவர் வெவ்வேறு தொகுப்புகளின் மூலம் தனியார்மயத்திற்கே திரும்புவார் என்றே தோன்றுகிறது. தன்னுடைய உரையில் ‘எங்களுடைய அரசு விவசாயிகளின் நலனுக்காகச் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அதைச் செய்யும்’ என்றே அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெற்றியில் மகிழ்ச்சி
ஆனால் ‘விவசாயிகளின் நலனுக்காக’ பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான மோடியின் அரசாங்கம் வேலை செய்து வருகிறது என்ற எண்ணம் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. விவசாயிகள் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளின் உணர்வை அறிந்து கொள்வதற்காக, முக்கியமான விவசாயிகள் சங்கங்களில் ஒன்றான அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (ஏஐகேஎஸ்) தேசியத் தலைவரும், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (எஸ்கேஎம்) தலைவருமான அசோக் தவாலேவிடம் நேர்காணலை நடத்தினேன்.
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக மோடி அளித்திருக்கும் வாக்குறுதி ‘போதுமானதாக இல்லாமலும், மிகவும் தாமதத்துடனும்’ இருப்பதாக தவாலே கூறினார். வலுவான குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி) கட்டமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட பிற கோரிக்கைகள் அனைத்தையும் தவிர்த்து விட்டு விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்றை (வேளாண் சட்டங்களை ரத்து செய்தல்) மட்டுமே ஏற்றுக் கொண்டிருப்பதால் மோடி அளித்திருக்கும் வாக்குறுதி போதுமானதாக இருக்கவில்லை; ஓராண்டு நீடித்த போராட்டம் ஏற்படுத்திய தனிமைப்படுத்தல், அரசாங்க அடக்குமுறைகள் காரணமாக எழுநூறு விவசாயிகள் தங்கள் உயிர்களை இழக்க நேரிட்ட பிறகு அறிவிக்கப்பட்டிருக்கும் அவரது வாக்குறுதி மிகவும் தாமதமாகவே வந்து சேர்ந்திருக்கிறது.
‘கடந்த ஏழு ஆண்டுகால ஆட்சியில் மிகவும் அவமானகரமான முறையில் மோடி இவ்வாறு கீழிறங்கி வந்திருப்பது இது இரண்டாவது முறையாகும்’ என்று கூறிய தவாலே ‘முதலாவதாக 2015ஆம் ஆண்டில் நாடு தழுவிய விவசாயிகளின் போராட்டத்தின் விளைவாக ‘2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை’ திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது’ என்றார். இந்திய விவசாயத்தை மிகப்பெரிய பெருநிறுவனங்களிடம் வழங்குவதற்கான திட்டத்தை 2014ஆம் ஆண்டு தான் ஆட்சியதிகாரத்திற்கு வந்ததில் இருந்தே மோடி முன்வைத்து வந்திருக்கிறார். அப்போதிருந்தே அவருடன் போராடி வந்த விவசாயிகள் இன்றைக்கும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
நவம்பர் 19 அன்று வெளியான மோடியின் அறிவிப்பிற்குப் பிறகும் விவசாயிகள் தங்கள் போராட்ட முகாமை விட்டு வெளியேறவில்லை. ‘வேளாண் சட்டங்கள் உண்மையில் [பாராளுமன்றம் மூலம்] ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் போராட்டக் களத்திலேயே இருப்பார்கள்’ என்று தவாலே கூறினார். மேலும் ‘விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை அவர்கள் அங்கேயே இருப்பார்கள். போரில் பாதி வெற்றியை அடைந்திருப்பது குறித்து நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இருந்த போதிலும் போராட்டத்தின் மற்ற நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதைக் காண வேண்டும் என்ற உறுதியும் விவசாயிகளிடம் இருக்கிறது’ என்றார்.
மோடி ஏன் சரணடைந்தார்
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மோடி முடிவு செய்ததன் பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாக தவாலே கூறினார். இந்தியத் தலைநகரான தில்லி எல்லையில் அமைந்திருக்கும் மூன்று முக்கிய மாநிலங்களில் (பஞ்சாப், உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம்) வரப் போகின்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களுடன் தொடர்புடையதாக முதலாவது காரணம் இருக்கிறது. சமீபத்திய மாதங்களில் ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் போது தனக்கான ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருப்பதை பாஜக கண்டிருக்கிறது. அந்த இடைத் தேர்தல்களில் பாஜக அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டிருக்கவில்லை.
வட இந்தியாவில் தேர்தல் நடந்திருக்கும் அல்லது நடக்கவிருக்கும் ஆறு மாநிலங்கள் தில்லிக்கு அருகாமையில் உள்ள மாநிலங்களாகும். மேலும் தில்லியின் எல்லையில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்களில் கலந்து கொண்ட விவசாயிகள் பலரின் சொந்த மாநிலங்களாகவும் அவை இருக்கின்றன. போராட்டங்கள் தொடருமானால் விவசாயிகள், தொழிலாள வர்க்கம் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் தங்களுடைய கட்சி மிகப்பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும் என்று பாஜகவில் உள்ள தலைவர்கள் கருதினர்.
விவசாயிகளின் உண்மையான போராட்டம், உறுதியைக் காட்டிலும் கவனத்தில் கொள்வதற்கு முக்கியமானவை வேறு எதுவுமில்லை என்று கூறிய தவாலே, எடுத்துக்காட்டாக செப்டம்பர் 5 அன்று கிசான் மகாபஞ்சாயத்திற்கு விவசாயிகள் ஏற்பாடு செய்ததைக் குறிப்பிட்டார். ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அழைப்பின் பேரில் நடைபெற்ற அந்த மகாபஞ்சாயத்தில் விவசாயிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை மோதலில் ஒன்பது பேர் இறந்த சில நாட்களுக்குப் பிறகு, அமிர்தசரஸ் புறநகர்ப் பகுதியில் 2021 அக்டோபர் 6 அன்று கூடிய விவசாயிகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்து முழக்கங்களை எழுப்பினர்.
மிகவும் ஆக்ரோஷத்துடன் இருந்த அந்தக் கூட்டத்தின் தொனி மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரானதாக மட்டும் இருக்கவில்லை. அது பாஜக அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறைக்கு எதிராகவும் விவசாயிகள் போராடி வருகிறார்கள் என்பதையே தெளிவுடன் காட்டியது. விவசாயிகள் போராட்டத்தின் அடிப்படைப் பார்வை மோடியின் தீவிர வலதுசாரி பாரதிய ஜனதா கட்சியின் ஹிந்துத்துவா அரசியல் சித்தாந்தத்திற்கு முற்றிலும் எதிரானதாக மதச்சார்பற்ற, சோசலிச இந்தியாவிற்காகப் போராடுவதாகவே இருந்தது.
போராட்டத்தின் வேகம் செப்டம்பர் மாதத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. செப்டம்பர் 27 அன்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி இந்தியா முழுவதும் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுத்தது. அது விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் போது நடைபெற்ற மூன்றாவது வேலைநிறுத்தமாக இருந்தது. லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், நடைபெற்ற மூன்று வேலை நிறுத்தங்களில் மிகவும் வெற்றிகரமானதாக அந்த வேலைநிறுத்தம் அமைந்தது என்று தவாலே கூறினார்.
மத வேறுபாடுகளைப் பயன்படுத்தி விவசாயிகளைப் பிளவுபடுத்துவதில் தோல்வியுற்ற பாஜக அரசுக்கு எதிராக ஒரு மாதத்திற்குப் பிறகு, அக்டோபர் 18 அன்று விவசாயிகள் நாடு முழுவதும் ரயில் தடங்களை (ரயில் ரோகோ) மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக மோடி அறிவித்த போதிலும், விவசாயிகள் கிளர்ச்சியின் முதல் ஆண்டு தினமான நவம்பர் 26 வெள்ளிக்கிழமையன்று தில்லி எல்லைகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடுவதற்குத் திட்டமிட்டுள்ளனர். நாடு முழுவதும் தங்கள் ஆதரவைக் காட்டும் வகையில் மற்றவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
திங்களன்று விவசாயிகளிடம் மோடி சரணடைந்த பிறகு, உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவில் மிகப்பெரிய கிசான் மகாபஞ்சாயத்தில் ஒன்றுகூடிய விவசாயிகள் அமைப்புகளின் தலைவர்கள் போராட்டத்தைத் தொடர்வது என்று உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். ‘வெற்றி குறித்த மனநிலையும், போராட்டத்தைத் தொடர்வது என்ற உறுதிப்பாடும் அங்கிருந்த அனைவரையும் தொற்றிக் கொண்டது’ என்று தவாலே கூறினார்.
தீர்க்கப்படாதிருக்கின்ற பிரச்சனைகள்
1995 மற்றும் 2018க்கு இடையிலான காலத்தில் நான்கு லட்சம் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் 2014ஆம் ஆண்டு மோடி பதவியேற்றதில் இருந்து ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தவாலே தெரிவித்தார். அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் விவசாயிகள் சார்பாக தலையீடு போன்றவற்றை நீக்கியது, பருவநிலை பேரழிவு ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றால் இந்தியாவில் உருவாகியுள்ள வேளாண் நெருக்கடியுடன் நேரடியாகத் தொடர்புடையவையாகவே விவசாயிகளின் தற்கொலைகள் இருந்துள்ளன.
விவசாயிகள் தேசிய ஆணையத்திற்குத் தலைமை தாங்குமாறு புகழ்பெற்ற அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதனை இந்திய அரசாங்கம் 2004ஆம் ஆண்டு கேட்டுக் கொண்டது. 2006வாக்கில் முக்கியமான பரிந்துரைகளின் நீண்ட பட்டியலுடன் அந்த ஆணையம் தயாரித்துக் கொடுத்த ஐந்து முக்கிய அறிக்கைகளில் இருந்த பரிந்துரைகள் எதுவுமே அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரித்து, வலுப்படுத்த வேண்டும் என்பது அந்தப் பரிந்துரைகளில் ஒன்று. விவசாயிகளின் நிலைமையை அரசாங்கங்களின் வெற்று அலங்கார வார்த்தைகள் சற்றும் மேம்படுத்தவில்லை; விவசாயிகளின் வருமானம் குறைந்துள்ளதாகவே சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை விவசாயிகள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். விளைபொருளின் விலைக்கான உதவி, கடன் தள்ளுபடி, மின்சார விலையுயர்வைத் திரும்பப் பெறுதல், தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்தல், மானிய விலையில் எரிபொருள் வழங்குதல் மற்றும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை அவர்கள் மிகத் தெளிவாகச் சொல்லியுள்ளார்கள். ‘இந்தப் பிரச்சனைகளே விவசாய நெருக்கடி மற்றும் விவசாயிகளின் பெரும் கடன் சுமைக்கு அடிகோலுகின்றன. விவசாயிகளின் தற்கொலை, விவசாய நிலங்களின் விற்பனை போன்ற நெருக்கடிகளுக்கும் அவையே வழிவகுத்துக் கொடுக்கின்றன’ என்கிறார் தவாலே.
‘நமக்கான உணவை விவசாயிகள் பயிரிட்டுத் தர வேண்டுமென்றால், விவசாயிகளுக்குத் தேவையான உணவு அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென்றால், விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும்’ என்று தவாலே கூறினார். இது இந்திய விவசாயிகளுக்கான கோரிக்கை முழக்கமாக மட்டும் இருக்கவில்லை. உலகம் முழுவதிலும் உள்ள விவசாயிகளின் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள இந்திய விவசாயிகள் தொடர்ந்து போராடுவார்கள்.
https://asiatimes.com/2021/11/indian-farmers-defend-rights-of-farmers-everywhere/
நன்றி: ஆசியாடைம்ஸ்
தமிழில்: தா.சந்திரகுரு