காந்தியடிகளை அறிந்து கொள்வோம்..! – கோ. நீலமேகம்
காந்தியடிகள் நூறாண்டுகளுக்கு முன்னரே உலகெங்கிலும் அறிமுகமானவர். காந்தி பிறந்த தேசம் இந்தியா என்கிற அளவுக்கு அவரது புகழொளி உலகில் பரவியுள்ளது. கடந்த 2000 மில்லினியம் ஆண்டு துவங்கிய போது லண்டன் பி.பி.சி நிறுவனம் உலக அளவில் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் கடந்த 1000 ஆண்டுகளில் உலகில் சிறந்த தலைவராக மகாத்மா காந்தியை தேர்வு செய்துள்ளனர். கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்னும் வரலாறு நெடுகிலும் (லீடர் ஆப் ஆல் டைம்ஸ்) உலகில் சிறந்த தலைவராகவும் காந்தி தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
காந்தி மறைந்த போது உலகப் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டின், ”காந்தி யாருடனும் ஒப்பிடத்தக்கவர் அல்ல. புத்தர், இயேசுவைத் தவிர” என்று கூறினார். அறிஞர் பெர்னாட்ஷா, ”துவக்கத்தில் இயேசு கிறிஸ்து என்று ஒருவர் இருந்திருப்பார் என்பதை நம்பாதிருந்தேன். காந்தியை பார்த்த பிறகு எனது நிலையை மாற்றிக் கொண்டேன்” என்றார். இவ்வாறு ஏராளமான சிறப்புகளைப் பெற்றுள்ள காந்தியை நாம் எந்த அளவுக்கு அறிந்து வைத்துள்ளோம்?
அரசியல் தளத்தில், சமுதாய தளத்தில், செயல்படும் பொறுப்பில் உள்ளவர்கள் கூட காந்தியைப் பற்றிய புரிதல் ஓரளவிற்கே உள்ளதைப் பார்க்க முடிகிறது. பொதுவாக காந்தியை பற்றி பொதுவான புரிதல்களே உள்ளன. காந்தியடிகள் உண்மை பேசினார், அகிம்சை வழியில் போராடி சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தார், எளிமையாக வாழ்ந்தார் என்பது போன்று. வேறு சிலர் காந்தியைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளாமலேயே விமர்சனங்களை, எதிர் கருத்துக்களைக் கடுமையாக முன்வைப்பவர்களும் உண்டு. போற்றுவோரும் உண்டு, மறுப்போறும் உண்டு. காந்தி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல.
காந்தி வாழ்ந்த காலத்தில் குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் 21 ஆண்டுகள் (இந்திய தொழிலாளர்கள் உரிமைகளுக்காகப் போராடியது) இந்தியாவில் 32 ஆண்டுகள் (இந்திய விடுதலைக்காக போராடிய காலம்) பொதுத்தளத்தில் செயல்பட்டவர். பல்வேறு விமர்சனங்களை எதிர் கொண்டவர். விமர்சனங்களைப் பற்றிய கவலை இல்லாமல் தனது மனச்சாட்சியின் படியே செயல்பட்டவர்.
தனது மனசாட்சியைத் தூய்மையாக வைத்திருக்க அவ்வப்போது பகவத்கீதையின் துணையை நாடினார். ஒரு செயலை செய்வதற்கு முன் மனம் தூய்மையாக இருப்பதைப் பராமரித்தார். மனம் தூய்மை என்பது விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டு சொந்த, பந்த, பாச உணர்வுகள் அல்லது விரோத, குரோத உணர்வுகள், கோபம், பயம் உள்ளிட்ட பதட்டங்களுக்கு இடமளிக்காமலும், வெற்றி பெறுவோமா, தோல்வியுறுவோமா என்கிற இருநிலைக்கு ஆட்படாமலும், பயனின் மீது பற்று வைக்காமலும், கடமையைச் செய்யும் மனநிலை. இவ்வாறு மனத் தூய்மையோடு செய்யும் செயலும் சரியாகவே அமையும் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டவராக செயல்பட்டு வந்துள்ளார்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடைபெற்ற விடுதலைப் போராட்டம், காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெற்ற கருத்துப் போராட்டம், சமூகப் பிரச்சனைகளில், ஆன்மீக தளத்தில் என பல்வேறு தளங்களில் தான் எதிர்கொண்ட இக்கட்டான பிரச்சினைகளில் தனது மனசாட்சிப்படியே (அந்தராத்மா) செயல்பட்டுள்ளார். இதில் எதிர்ப்புகள், எழுந்தபோதும் எதிர்த்துப் போராடும் தனது நிலையை மாற்றிக் கொண்டதில்லை. எடுத்துக்காட்டாக ”காங்கிரஸ் கட்சி எப்போதும் அகிம்சை முறையிலேயே போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை” என தீர்மானம் நிறைவேற்றியபோது தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி விடுவதாக அறிவித்தார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் அதிகார பூர்வமற்ற முறையிலேயே செயல்பட்டு வந்துள்ளார்.
இவருடைய போராட்டக் கால வாழ்வு அனைத்தும் தொகுக்கப்பட்ட 100 தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய பேச்சுக்கள், எழுத்துக்கள், பேட்டிகள், கடிதங்கள், வெளிநாட்டு, உள்நாட்டுத் தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட ஏராளமான விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இவருடைய வாழ்க்கை வரலாறு குறித்து எழுத வேண்டும் என்று நண்பர்கள் வற்புறுத்தியதன் பேரில் எழுதிய சத்திய சோதனை அனைவரும் படித்து அறிய வேண்டியது. எனது வரலாற்றை சொல்வது எனக்கு முக்கியமாகப் படவில்லை. எனது வாழ்க்கை நெறிகளான அன்பு, சத்தியம், அகிம்சை எனும் அறநெறி கோட்பாடுகளை, நான் எதிர்கொண்ட பிரச்சினைகளில் எவ்வாறு செயல்பட்டுள்ளேன் என்கிற அனுபவம் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே அதனை ”சத்திய சோதனை” ஆக எழுதியுள்ளேன் என்றார்.
காந்தி தன்னை ஒரு இந்து என்று அழைப்பதையே விரும்பினார். ஆனால் இந்து மதத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளை, சாதிய ஏற்றத்தாழ்வுகளை உதறித் தள்ளினார். மரியாதை நிமித்தமாக அன்றி எந்தக் கோயில்களுக்கும் செல்வதை தவிர்த்து வந்தார். அவருடைய சமய நம்பிக்கை என்பது வழிபாடு சம்பந்தப்பட்டது அல்ல. முழுக்க, முழுக்க ஒழுக்கப் பண்புகள், அறநெறி சம்பந்தப்பட்டது ஆகும்.
”எல்லா சமயங்களையும் போற்றுகிறேன், சமமாகவே மதிக்கிறேன். சமயங்கள் அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. எனவே மனிதர்களிடம் உள்ள தவறுகள் சமயங்களிலும் இருக்கும்”, ”வேதங்கள் மட்டும் புனிதமானவை என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். கிறிஸ்தவர்களின் பைபிளும், இஸ்லாமியர்களின் குரானும், பார்சிகளின் ஜென் அவஸ்தா உள்ளிட்ட நூல்களும் புனிதமானவையே.” என்னைப் பொறுத்தவரையில் சமய நூல்களில் எழுதப்பட்டவை ஒழுக்கப் பண்பு நெறிகளுக்கு உட்பட்டுள்ளதா என்றுதான் பார்க்கிறேன். மற்றபடி எவ்வளவு புனிதமானவையாகக் கருதப்பட்டாலும் எனக்கு கவலை இல்லை” என்றே கூறினார்.
காந்தி மாறுதல்களை ஏற்றுக்கொண்டவர். அதற்கு ஏற்ப தன்நிலையையும் மாற்றிக் கொண்டுள்ளார். குறிப்பிட்ட சில பிரச்சினைகளில் முந்தைய நிலைக்கு மாறுபட்ட நிலை எடுத்தபோது ஏன் இந்த முரண்பாடு என்று அவரிம் வினவப்பட்டது. நான் எழுதும்போது கூட முந்தைய கேள்விகளுக்கு என்ன பதில் எழுதினேன் என்று அடுத்த கேள்விக்குப் பார்ப்பதில்லை. அவ்வப்போது மனதில் தோன்றுவதை எழுதுகிறேன், பேசுகிறேன். ஒரு முடிவில் கெட்டியாக இருப்பது எனது நோக்கமும் அல்ல. மேலும், மேலும் சத்தியத்தை நோக்கி நகர்வதே எனது நோக்கம். குறிப்பிட்ட ஒரு பிரச்சனையில் வெவ்வேறு காலத்தில், வேறுபட்ட கருத்துக்களை வெளியிட்டிருந்தால். அதில் கடைசியாக சொன்னதயே எனது கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும். இம்மாறுபாடுகளுக்கு இடையே சங்கிலித்தொடர் போன்ற இணைப்பைக் காண முடியும். தேவையற்ற நினைவுச் சுமையை எனது மூளைக்கு கொடுப்பதில்லை என்று பதிலளித்துள்ளார்.
தீண்டாமைக் கொடுமைகளை துவக்கத்திலிருந்து எதிர்த்து வந்த போதிலும் கலப்புத் திருமணம் செய்வதை ஆரம்பத்தில் ஆதரிக்கவில்லை. குலத்தொழில் செய்ததையும், சமுதாய வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும் என்று நம்பினார். பின்னர் கேரளத்தில் நாராயண குருவுடனான சந்திப்புக்கு பிறகு தனது நிலையை மாற்றிக் கொண்டார். பிற்காலத்தில் கலப்புத் திருமணங்களை ஆதரித்து கலப்புத் திருமணங்களுக்கு மட்டுமே சென்றார். அதிலும் குறிப்பாக ஆண் அல்லது பெண் யாராவது ஒருவர் தாழ்த்தப்பட்டவராக இருக்கும் திருமணத்தில் மட்டும் கலந்து கொண்டார். காந்தியின் மனசாட்சியாக அறியப்பட்டவர், மகாதேவ் தேசாய். இவரது மகன் காந்தியின் மடியில் வளர்ந்தவர். அவர் தன் சொந்த சாதியில் திருமணம் செய்து கொண்டதால் திருமணத்திற்கு காந்தி போக மறுத்தார்.
விடுதலை அடைந்த இந்தியாவில் முதல் குடியரசுத் தலைவராக தாழ்த்தப்பட்ட சமூகங்களில் நலிந்த பிரிவினரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். .ஆட்சி பொறுப்பை ஏற்பவர்கள் அடிமட்ட உழைப்பாளர்களின் பிரச்சனைகளை, சங்கடங்களை அறிந்து கொண்டவராகவும், அவைகளுக்கு தீர்வு கானும் மனவுறுதி கொண்டவர்கள் தான் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். கிராமங்கள் தன்னிறைவு பெற்று விளங்க வேண்டும், அனைவருக்கும் உழைத்து வாழ்வதற்கான வாய்ப்புகளும், உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும், உழைக்காமல் உண்ணும் ஒவ்வொரு கவள உணவும் களவாடப்பட்டது எனும் உணர்வை அனைவரும் பெறவேண்டும். தனது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளுக்கு மிகுதியாக உள்ள எந்த சொத்துக்களும் அது கிடைக்காத மற்றவர்களுக்கு சேர வேண்டியதே. எனவே சொத்து உடையவர்கள் பெரும் செல்வந்தர்கள் தன்னிடம் உள்ள சொத்துக்களுக்கு உரிமையாளர் என்பதைவிட பராமரிப்பவராக மாற வேண்டும். ஏனெனில் அவை மற்றவர்களுக்கு சேர வேண்டியது ஆகும். தன்னிடமுள்ள சொத்துகளுக்கு அறங்காவலர்களாக மாற வேண்டுமே தவிர உரிமையாளர்களாக இருக்கக்கூடாது என்பதை போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
காந்தியடிகள் தனது குடும்பத்திற்கென்று எந்தவொரு சொத்தையும் வைத்திருக்க வில்லை. அவருடைய பிள்ளைகள் எந்தக் கல்வி நிலையத்திலும் சேர்க்கப்படவில்லை. தன்னுடன் ஆசிரமத்திலேயே தங்கவைத்து கற்றுக்கொடுத்தார். தனது பிள்ளைகள் உயர் கல்விக்கு செல்ல வேண்டும் அல்லது உயர்வு வேலை வாய்ப்புகள், வியாபாரம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவதை அவர் விரும்பவில்லை. மாறாக அடித்தட்டு மக்களுக்காக உழைப்பதையே விரும்பினார். அவருடைய மூத்த மகன் தேவதாஸ் காந்தி மட்டும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்து முன்னரே வெளியேறி சென்று விட்டார். ஒரு கட்டத்தில் அவர் தனது மகனே அல்ல என்று அறிவித்துவிட்டார்.
பொதுத்தளத்தில் மற்றவர்களுக்காக தான் என்ன பேசினாரோ அவைகள் அனைத்தையும் தானே செய்து உதாரணமாக வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நமது இந்தியா,
இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள் என பல்வேறு மதம், இனம், மொழி, கலாச்சார பண்பு, நாகரீகங்களை உள்ளடக்கியது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது பலம். நம்மிடம் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளது என்பது நமது அவமானம். நம்மை பிணித்துள்ள அவமானங்களை வெளியேற்றுவோம்!. ஒற்றுமையைக் காப்போம்! முன்னேறுவோம்!
(கட்டுரையாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர்.)