Poovarasi Book by Yasotha Pazhanisami Bookreview by VijiRavi. நூல் அறிமுகம்: யசோதா பழனிசாமியின் பூவரசி - விஜிரவி

நூல் அறிமுகம்: யசோதா பழனிசாமியின் பூவரசி – விஜிரவி




சிறுகதை வாசிப்பது ஒரு சுகமான அனுபவம். அதுவும் ஒரு சிறுகதைத் தொகுப்பே கையில் கிடைத்தால், பலவித வண்ணங்களில் கண்களுக்கு விருந்தளித்து , விதவித நறுமணத்துடன் மனதையும் கொள்ளை கொள்ளும் பூந்தோட்டத்தில் புகுந்த ஒரு உணர்வுதான் ஏற்பட்டது ‘’பூவரசி’’ என்ற சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும் போது.

கோழிக்கறி சாப்பிடாமலேயே இறந்துபோகும் அத்தையை நினைக்கும் போது ரகுவிற்கு மட்டுமல்ல…. நமது மனமும் கலங்கித்தான் போகிறது. ‘கலைந்து போகும் கனவுகளில்’ தன் பள்ளிப் படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த சாராயக்கடை மேல் விவேக்குடன் சேர்ந்து நமக்கும் கோபம் வருகிறது. ‘’அவரு ஒண்ணும் செய்ய வேண்டாம். பொண்ணுக்கு அப்பாவா வரவேற்பில வந்து நின்னா போதும்’’ என்று பூவரசியின் வார்த்தைகளில் முகம் தெரியாத பல்லாயிரக்கணக்கான உழைக்கும் பெண்களின் பிம்பங்களை தரிசிக்க முடிகிறது.

தினக்கூலியில் பிழைக்கும் ஏழை வர்க்கத்திற்கு சொந்த வீடு வெறும் காகித வீடாகவே போகும் அவலம் தான் என்ன…? காய்கறி சந்தையில் கனவுகளுடன் அல்லாடும் சகோதரிகள், அறுந்துபோகும் இழைகளுடன் தினமும் மல்லுக்கட்டும் நெசவுத் தோழர்கள், மருத்துவமனைகளில் கழிவறை சுத்தம் செய்யும் புண்ணிய ஆத்மாக்கள்… என எளிய மக்களின் வாழ்வியலை கையில் எடுத்து, உணர்வுபூர்வமாக கதை சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இனிக்கும் கொங்குத் தமிழில் விளையாடி இருக்கிறார் ஆசிரியர்.

தேர்ந்த எழுத்துநடை, கவித்துவமான தலைப்புகள், உணர்வுகளுக்கு உயிர் ஊட்டும் விதமாக அமைந்த கதாபாத்திரங்கள் என அமைந்திருப்பது சிறப்பு. ஒவ்வொரு கதையை படித்து முடித்த பின்பும் அதைப்பற்றி பத்து நிமிடம் யோசிக்க வைக்கிறது.இது ஆசிரியரின் முதல் நூல் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. சகமனிதனின் பரிதவிப்பை, அவனது ஆசையை, ஆசாபாசங்களை, தாய்மை உணர்வுடன் வடித்தெடுத்து, மனிதநேயத்தை நூலாகக் கொண்டு பதினாறு முத்துக்களைக் கோர்த்த அழகிய மாலை தான் பூவரசி என்ற சிறுகதைத்தொகுப்பு. அங்கங்கே காணும் சில சந்திப் பிழைகளைத் தவிர இதில் குறை ஏதும் காணமுடியாது.

புத்தக தலைப்பு – பூவரசி
ஆசிரியர் – யசோதா பழனிசாமி.
வெளியீடு – வாசல் படைப்பகம்.
விலை – 170.