மலரட்டும் வாசிப்பின் வசந்த காலம் புத்தகப்பூங்கா – முதல்வர் அறிவிப்பு தசிஎகச வரவேற்பு
புத்தக வாசகர்களுக்கும், புத்தக ஆர்வலர்களுக்கும், அனைத்துப் பதிப்பகங்களின் நூல்களும் ஒரே இடத்தில் கிடைப்பதற்கான வாய்ப்பாக புத்தகப்பூங்கா அமையும் என்பதில் மட்டற்ற மகிழ்வுடன் முதல்வரின் அறிவிப்பை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வரவேற்கிறது. அனைத்துப் பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும், புத்தகக்காதலர்களும் எழுத்தாளர்களும் சந்திக்கின்ற இடமாக அந்தப் புத்தகப்பூங்கா திகழவேண்டும். அதற்கு புத்தகப்பூங்கா அமைப்புக்குழுவில் எழுத்தாளர்களையும் இணைப்பது அவசியம் என்று தசிஎகச கருதுகிறது.
புத்தக கண்காட்சிக்கு வருவதே குழந்தைகளுக்கு பேரனுபவம், புத்தக பூங்காவிற்கு வருவதும் இந்த அனுபவத்தை கட்டாயம் கொடுக்கும். பல ஊர்களில் இருந்து பள்ளிகள் வழியாக புத்தக பூங்காவிற்கு வரவழைக்க ஏற்பாடு செய்யலாம். புத்தக பூங்கா அமைக்கும்போது கட்டாயம் சிறுவர்களுக்கான தனி அரங்கங்கள் அமைக்கப்படவேண்டும். சிறார் அரங்கங்களில் அறிவியல், கதை சொல்லல், நாடகம், திரையிடல் போன்ற கலைகள் சார்ந்த நிகழ்வுகளை அரசு முன்னெடுக்க வேண்டும். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எப்படி சிறார் பகுதி தனித்துவம் வாய்த்ததாக இருக்கின்றதோ அதே போன்று தனித்துவமாக அமைக்கபப்ட வேண்டும்.
புத்தகப் பூங்காவினை அமைக்கும் அதே தீவிரத்தன்மையுடன் ஊர்புற நூலகங்களையும், பள்ளி நூலகங்களை உயிர்ப்பித்தல் அவசியம். அதற்கென நிதி ஒதுக்கி, தரமான புத்தகங்களை பெற்று, அதனை ஒரு இயக்கமாக மாற்றவேண்டும். நூலகங்களின் செயல்பாடே ஒரு நாட்டின் உயரிய குணாம்சம்.
புத்தக வாசிப்பைக் குழந்தைப் பருவத்திலிருந்தே அறிமுகப்படுத்துவதற்கும் கவிமணி தொடங்கி இன்று வரையிலான சிறார் எழுத்தாளர்களின் படைப்புகளை, ஆய்வுகளை, முழுமையாக ஆவணப்படுத்தவும், விளையாட்டு, பாரம்பரிய கலைகள், நாடகம், திரைப்படங்கள், ஓலை கீற்று -ஓரிகாமி போன்ற நுண்கலைகள், அறிவியல் என சிறார் உலகத்துடன் தொடர்புடைய அனைத்து தலைப்புகளையும் உள்ளடக்கிய சிறார் இலக்கிய நூல்களுக்காக மட்டும் ஒரு தனி நூலகம் ஒன்று தலைநகரில் தொடங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
ஆண்டு தோறும் கோடை விடுமுறை காலத்தில் சென்னையில் சிறார்களுக்காக மட்டுமேயான ஒரு புத்தகக்கண்காட்சியை நடத்த நம்முடைய அரசு திட்டமிட வேண்டும். அதன் பின்னர் அதை மாவட்டங்களிலும் நடத்தத் திட்டமிடலாம். குழந்தைகளை புத்தகவாசிப்பின் திசையில் கொண்டு வருவதற்கு புத்தகக்கண்காட்சியை ஒரு கொண்டாட்டமாக நடத்தத் திட்டமிட வேண்டும் என்று தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
உதயசங்கர், விழியன்.