இசை வாழ்க்கை 78: பாட்டு வெள்ளம் நிக்காது  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 78: பாட்டு வெள்ளம் நிக்காது – எஸ் வி வேணுகோபாலன்




திருமண வரவேற்பில் அருமையான இசைக் கச்சேரியில் ஒற்றைப் பாடல் கேட்டு விடைபெற நேர்வது உள்ளபடியே குற்ற உணர்ச்சியையும், ஏமாற்றத்தையும் பெருக்குவதாகும். அதுவும் பாடகர்கள் நாம் அறிந்தவர்களாக இருந்தால், அவர்களையும் மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு சந்திக்கும் சூழலாக இருந்தால்….

இ மு வெற்றிவளவன் எண்பதுகளில் அருகே சென்று பேச வாய்த்த அருமையான கவிஞர், பாடலாசிரியர். ‘ஈர நாற்றுக் கட்டு சுமந்தேன் உச்சி எரிய….நான் உள்ளதெல்லாம் சொல்லியறியேன் செல்லக் கிளியே’ என்ற பாடலை எழுதி இருக்கிறேன், எப்படி இருக்கிறது என்று அவரே பாடிக் கேட்ட நினைவு மங்கலாக இருக்கிறது. பின்னொரு சமயம் வேறொரு பாடல்….செருப்பு தைக்கும் தொழிலாளியின் குரலை வேறு யார் பாடல் ஆக்கி இருக்கிறார்….

மகத்தான தோழர் விபி சிந்தன் மே 1987ல் மறைந்தபோது, பெரம்பூர் குக்ஸ் சாலை ஏ பி நினைவகத்தில் அவருடல் தொழிலாளி வர்க்கத்தின் இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டிருக்கையில், ஒலிபெருக்கியில் மிக மிக உருக்கமாக ஒரு குரல் கேட்டுக் கொண்டிருந்தது, பாடகர் யாராக இருக்கும் என்பது முதல் சொல்லிலேயே பிடிபட்டது. அந்தப் பாடலை எழுதியதும் வெற்றி வளவன் தான்.

மலையாள தேசம் தந்த மாணிக்கமே – தமிழ்
மண்ணோடு கலந்தவரே மார்க்சியமே
போராடி வாழ்ந்தவரே சரித்திரமே – உங்கள்
போராட்டம் என்றும் எங்கள் படிப்பினையே

அன்று மாலை இரங்கல் கூட்டம் ஓட்டேரி இடுகாட்டில் நடக்கையில், தோழர் விபிசி மறைவின் அதிர்ச்சியில் பேச இயலாது உடைந்துபோய்க் கதறியவர் விடுதலை போராட்ட வீரர் தோழர் பி இராமமூர்த்தி. அவரையும் டிசம்பர் 15, 1987 அன்று பறிகொடுத்தோம். அன்று காலை சென்னை வடபழனியில் தொடங்க இருந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மூன்றாவது அகில இந்திய மாநாட்டுக்கு வரவேற்புக்குழு தலைவரே அவர் தான். அவரது உடலும் அதே குக்ஸ் சாலை அலுவலகத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கையில், சிந்தன் அவர்களுக்கு எழுதிய பாடலில் சில திருத்தங்களோடு வெற்றி வளவன் எழுதிய பாடலையும் அதே பாடகர் மிகவும் நெகிழ்ச்சியுற வைக்கும் குரலில் இசைத்தார்.

இதய வானிலே உதய தீபமாய்
இடது சாரிகள் வளரும் நேரத்தில்

அகில இந்திய வாலிபர் சங்க மாநாட்டுக்கு நீ
தலைமை ஏற்றும் வரவில்லையே, ஏன் தோழனே…

என்ற இடத்தில் அங்கே கதறி அழாதார் கிடையாது. அடுத்த வரிகளில், ‘தஞ்சைத் தரணி தந்த மாணிக்கமே, தமிழ் மண்ணோடு கலந்தவரே மார்க்சியமே’ என்று கொணர்ந்திருந்தார் வளவன். அந்தப் பாடலை இசைத்தவரைத் தான் திருமண வரவேற்பில் பார்த்தது.

மக்கள் பிரச்சனைகள், சமூக பிரச்சனைகள் குறித்த பாடல்களை பொதுவுடைமை இயக்கம் பதிவு செய்து ஒலிப்பேழைகளில் கொண்டுவந்தபோது, ‘காலத்துக்கும் உழைச்சு உழைச்சுக் கண்டது என்ன மாமா, காளையாட்டம் நேத்து இருந்த உடம்பு போச்சுதே வீணா’ என்ற பல்லவியை அபாரமாக வாணி ஜெயராம் தொடங்க, அவரோடு இணைந்து பாடி இருந்த உதய பாண்டியன் தான் அவர்.

அண்மையில் ஒரு திருமண வரவேற்பில் மணமக்களை வாழ்த்த மேடை நோக்கிப் போய்க் கொண்டிருக்கையில், அத்தனை அசத்தலாக பாடிக் கொண்டிருந்தார் ஒருவர். முதல் பார்வையிலேயே, அந்தக் குரலைக் கேட்டதுமே பிடிபட்டுவிட்டது. மின்னலும் இடியும் ஒரு சேர நிகழ்வது போல் உணர்ந்த இன்ப அதிர்ச்சி நேரமது.

பாடல் முடியக் காத்திருந்து, ‘தோழர் உதயபாண்டியன் தானே…’ என்றதும், அவரும் சட்டென்று அன்போடு இறங்கி வந்து, ‘முப்பது வருஷம் ஆகி இருக்குமா, பார்த்து!” என்று கேட்டார். ‘அருமையாகப் பாடினீர்கள் தோழா….அவங்களுக்கும் சொல்லுங்க” என்றதும், ‘பர்வீன்’ என்று அழைத்து உடன் பாடிய பாடகிக்கும் பாராட்டைச் சேர்த்தார். பாடலின் நுட்பமான இடங்களை அத்தனை அம்சமாகக் கொண்டு வந்திருந்தார் உதயபாண்டியன்.

கோவில்பட்டியின் முற்போக்கு வாசகர் பள்ளியைச் சார்ந்த பாரத ஸ்டேட் வங்கி தோழர் பால்ராஜ் அவர்களுடைய மகள் திருமண வரவேற்பில், வங்கி ஊழியர் கலைக்குழு (பீட்) ஸ்ரீதர் அவர்களை சந்தித்ததும் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி, தோழர் உதய பாண்டியனைப் பார்த்ததும் பன்மடங்கு பெருகியது. இசைக் குழுவின் தபேலா கலைஞரின் வாசிப்பும் அபாரம். அவர் வாசிப்பின்போதே என் கொண்டாட்ட உணர்வைக் கண்களாலேயே கடத்த, அவரும் வாசித்தவாறு அதை ஏற்றுக் கொண்டு விடுத்த புன்னகை உருவிலான பதிலை எழுத்தில் வடிக்க முடியாது.
முதல் மரியாதை படம் மலேசியா வாசுதேவன், எஸ் ஜானகி இருவரின் மிகச் சிறந்த பாடல்களை இளையராஜா இசையில் வழங்க வைத்தது. அவற்றில் அம்சமான ஒன்று தான், அன்று உதயபாண்டியன் பாடியது.

காதல் இருவர் கருத்து ஒருமித்து வாழ்தல் மட்டுமல்ல, ஆதரவு பட்டதே இன்பம் என்று எழுதிச் சென்றாள் அவ்வை. அந்த ஆதரவு படும் பாடு தான் சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று. இந்தப் பாடலின் கதைக் களம், சாதீய பெருமிதத்தைக் கீழிறக்கி அந்தக் கம்பத்தில் காதலின் கொடியேற்றுவதைச் சொல்கிறது. பிரச்சனைகளின் அடிவேரில் சாதி இருக்கிறது, ஆனால், மானுட வரலாற்றின் வேரில் தூய அன்பு தான் இருக்கிறது. அந்த வெட்டி வேர் வாசம் தான் பாடலின் பல்லவி.

பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு, மண்ணின் கவிஞர் என்ற அடைமொழியை பாடல்களுக்கான ஒலிப்பேழை அறிமுகத்தில் சொல்லியிருப்பார் இயக்குநர் பாரதிராஜா. ராக ராஜாங்கமே நடத்தி இருக்கிறார் என்பது ராஜாவுக்கு அவர் கொடுத்த பாராட்டு. நடிகர் திலகத்தின் திரை வாழ்க்கையில் முக்கியமாகப் பேசப் படவேண்டிய ஒன்றாக அமைந்த படத்தில் ராதாவுக்கு வாய்த்த இடமும் சிறப்பானது. இந்தப் பாடலில் தோன்றும் பாத்திரங்கள் – பாடல் முடிவில் உருளும் பாத்திரங்கள் வரை அத்தனை செம்மையான நடிப்பை வழங்கி இருப்பார்கள்.

எந்த இசை முன் பொழிவும் இன்றி, திடீர் என்று பெய்யத் தொடங்கும் மழை போல், சட்டென்று பல்லவியை எடுக்கிறார் எஸ் ஜானகி, ‘வெட்டி வேரு வாசம், வெடலப் புள்ள நேசம்’ என்று! அதிலிருந்து, ‘பூவுக்கு வாசம் உண்டு, பூமிக்கும் வாசம் உண்டு….’ என்று அவர் கதாபாத்திரத்தின் பாச உணர்ச்சியை நீட்டிக்கும் இடத்தில், ‘வேருக்கு வாசம் வந்ததுண்டோ…’ என்று பற்றிக் கொள்ளும் மலேசியா வாசுதேவன், ‘மா….னே’ என்று அந்த உணர்வை அப்படியே திரும்பக் கையளித்து, பல்லவியைச் சென்றடைய, லயிக்க வைத்துவிடுகிறது தாளக்கட்டு.

முதல் சரணத்தை நோக்கிய உணர்ச்சி வெளிப்பாட்டில் வயலின்களின் ஆரத் தழுவலும், புல்லாங்குழலும் மட்டிலுமே அல்ல, ஷெனாய் உள்பட கொண்டு வந்திருப்பாரோ ராஜா என்ற தேடலில், கிடாரின் முத்தத் துளிகளும், அபாரமான ஷெனாய் வாசிப்பும், நிழலோட்டமாக கிளாரினெட் இசையும், துந்தனா கருவியும் இருப்பது நோட்ஸ் குறிப்பேட்டில் காணக் கிடைத்து குதூகலிக்க வைத்தது. கதைக் காட்சிக்கான பாடலை அல்லது அதற்கான இசையை மட்டுமல்ல, அதற்குமேல் சென்று அந்த நேரத்து உணர்வுகளையும் தேர்ச்சியாக ரசிகர்களைச் சென்றடைய வைக்கும் ராஜாவின் ஞானம் அபாரமானது. புல்லாங்குழல் சரணங்களுக்கு இடையே வரும் போதும், சரணங்களில் வரிகளுக்கு இடையே நுழைந்து வெளிப்படும்போதும் காதல் தாபத்தையும், மோகத்தையும் பிழிந்து கொடுக்கிறது எனில், சமூகத்தின் எதிர்வினைகளை மற்ற கருவிகளின் வழி கேட்க முடியும் பாடல் நெடுக.

எதிர்ப்புகளின் இடையே விளையும் காதல், காதும் காதும் வைத்ததுபோல் பரஸ்பரம் இரகசியமாகத் தானே பரவும், மலேசியா வாசுதேவன் குரலில் அந்த வேதியல் பொருள் இழைத்துக் குழைத்து வழங்கப்பட்டிருக்கும்.

முதல் சரணத்தின், ‘பச்சைக் கிளியோ….’ என்ற தொடக்கத்தில் சிறகு சிலிர்த்துக் கொண்டு காதல் உறவைப் பறந்து போய்த் தேடும் கிளி, ‘இச்சைக் கிளியோ….’ என்ற நீட்சியில் தக்க இடத்தை வந்தடைந்து கொஞ்சத் தொடங்கி விடுகிறது. பச்சை மனசில் காதல் நெருப்பு பத்திக்கிருச்சு என்பதை ஜானகி என்னமாகப் பற்ற வைக்கிறார் ! தங்கள் காதலின் கம்பீரத்தில் சமூகத்தைப் பார்த்து இருவரும், ‘கையைக் கட்டி நிக்கச் சொன்னா, காட்டு வெள்ளம் நிக்காது, காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது’ என்று இசைப்பது ஒரு கோட்பாட்டின் பிரகடனம் போல் ஒலிக்கிறது. அடுத்த வரிகள் அவற்றை மேலும் அழுத்தமாகப் பதிக்கின்றன. சரணத்தின் நிறைவில் ஒரு சொடுக்கு போட்டு முடித்து, பல்லவியில் மீண்டும் சுவாரசியமாக வந்து இணையும் தபேலா தாளத்தின் கொண்டாட்டம் இனிமையானது.

இரண்டாம் சரணத்தை நோக்கிய நடையில் ராஜா சூழலின் உணர்ச்சிகளை வழங்கும் கருவிகளாகத் தேர்வு செய்து (இசைக்குறிப்புகள் பார்த்தால் சந்தூர், கலிம்பா என்று விரிகிறது….இத்தனை நுட்பங்கள் எல்லாம் கற்காமல் போனோமே என்று மீண்டும் தோன்றியது) பயன்படுத்தி இருப்பது பாடலோடு மேலும் நெருக்கத்தைக் கூட்டுகிறது.

இரண்டாம் சரணத்தை ஜானகி முன் மொழிய, வாசுதேவன் வழி மொழிகிறார். ‘உன்னக் கண்டு நான் சொக்கி நிக்கிறேன்’ என்று ஜானகி இசைப்பதில், அந்த ‘நான்’ எத்தனை சுழற்சிக்குள்ளாகிச் சொக்க வைக்கிறது. ‘கண்ணுக்குள்ள நான் கண்ணி வைக்கிறேன்’ என்னுமிடத்தில் அந்த மயக்கம் குரலில் மேவிவிடுகிறது. ‘சொல்லாமத் தான் தத்தளிக்கிறேன்…தாளாமத் தான் தள்ளி நிக்கிறேன்’ என்ற வரிகளில் குரலில் தவிப்பின் மை தொட்டு எழுதுகிறார் வாசுதேவன். அடுத்த இரு வரிகள் திரைக்கதையின் உட்கருவைப் பேசுகின்றன. ‘குருவி கட்டும் கூண்டுக்குள்ள குண்டு வைக்கக் கூடாது’ என்பது மிக முக்கியமான வரி.

‘புத்தி கெட்ட தேசம் பொடி வச்சுப் பேசும்’ என்பதை ஜானகி எத்தனை அவஸ்தை பொங்கும் பதைபதைப்போடு வெளிப்படுத்துகிறார். ‘சாதி மத பேதமெல்லாம் ..’ என்று ஓங்கரிக்கும் மலேசியாவின் குரல், ‘முன்னவங்க செஞ்ச மோசம்’ என்று தணிவான குரலுக்கு இறங்கி அநீதியைச் சாடும் இடத்தில், ஆணவக் கொலைக் களங்களில் உண்மையை உரத்துப் பேச முடியாத நெருக்கடியை பிரதிபலிக்கிறது.

பாடல் வெளிவந்த காலத்தைவிடவும் இப்போது ஆகப் பொருத்தமானது என்று தோன்றும் இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும், இசை இந்த உலகத்தின் வெறுப்பு உணர்ச்சிகளைக் களை பிடுங்கிப் போட்டுவிடக் கூடாதா, சமூகத்தின் இதய சாளரத்தை மேலும் கூடுதலாகத் திறந்து கொடுத்துக் காற்று தவழ விடாதா என்ற உணர்வு மேலிடுகிறது.

உன்னதமான உணர்வுகளை இன்பியலாகவோ, துன்பியலாகவோ கிளர்த்தி விடுகிறது இசை. நேருக்கு நேர் நின்று பேசுகையில் சொல்ல முடியாத சொற்களை, ஒப்புக் கொள்ள முடியாத சங்கதிகளை இரவின் தனிமையில் கேட்கும் இசை உட்புகுந்து கண்ணீராக மொழிமாற்றம் செய்து வரவழைத்துவிடுகிறது. சமூகத்தின் மனசாட்சியை இசை நிச்சயம் அசைத்துக் கொண்டே தான் இருக்கிறது.

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

இசை வாழ்க்கை 77: பறந்தேனும் பாடுவேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 77: பறந்தேனும் பாடுவேன் – எஸ் வி வேணுகோபாலன்




டந்த வாரம் நவீன விருட்சம் மின்னிதழில் பேயோன் (புனைபெயர்) என்பவரது கவிதைகள் வந்திருந்தன. இரண்டிரண்டு வரிகளில் முடிந்திருக்கும் கவிதைகள்… அதில் ஒன்று இது:

துன்பம் நேர்கையில்
அழுகிறதென் யாழ்.

படித்தவுடன் தைத்தது நெஞ்சில்! பாவேந்தரின் பிரபலமான கவிதை வரியைப் பகடி செய்யும் குறும்பான கவிதை என்று கடந்து விட முடியாது. இன்னும் விஷயங்கள் இருக்கின்றன இதில்.

‘எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது’ (புதிய பறவை) என்று எழுதிச் சென்றார் கவிஞர் கண்ணதாசன். துன்பத்திலிருந்து தப்ப முடியாது என்பது அவரது தத்துவம், ‘துன்பம் வரும் வேளையிலே சிரிங்க / என்று / சொல்லி வைத்தார் வள்ளுவர் சரிங்க, பாம்பு வந்து கடிக்கையில் / பாழும் உடல் துடிக்கையில் / யார் முகத்தில் பொங்கிவரும் சிரிப்பு?’ (ராஜபார்ட் ரங்கதுரை) என்கிற அவரது திரைப்பாடல் வரியும் பிரபலமானது தான்.

பாவேந்தர், அதனால் தான், ‘யாழ் எடுத்து நீ எனக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா?’ என்று எழுதினார். யாழ் யாருடையது என்பதல்ல, யார் அதை வாசிப்பது என்பது தான் விஷயம். எனக்காக வாசியேன் என்று உற்ற தோழமை நெஞ்சத்தைக் கேட்டு, அவர்கள் வாசிக்க இன்பம் சூழும்! ‘துன்பம் நேர்கையில் அழுகிறதென் யாழ்’ என்ற கவிதை உள்ளபடியே அப்படியான தோழமை அருகே வாய்க்கவில்லை என்பதைத் தெரிவிக்கிறது.

இன்னொரு பார்வையும் சாத்தியம். துன்புற்ற நெஞ்சு, துன்பியல் இசை கேட்கும்போது அந்த நெகிழ்ச்சியில் தனது துயரிலிருந்து சற்று விடுவித்துக் கொள்ளவும் முடியும். அழுகிறது என் யாழ் என்பது, தன்னை வாசிப்பவர்பால் ஓர் இசைக்கருவி கொள்ளும் கரிசனத்தின் கண்ணீர் என்றாகிறது. இரவு நேரங்களில் அப்படியான பாடல்களைக் கேட்டுத் தங்களை மீட்டெடுத்துக் கொள்வோர் எண்ணற்றோர் உண்டு. தேடித் தேடி சோகப் பாடல்கள் தொகுப்பை வரிசையாகக் கேட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்கள் உண்டு. தாங்களே அந்தந்த பாத்திரங்களாக உருக்கொண்டு இவர்களும் கண்ணீர் பெருக்கியபடி கேட்டு உருகி உறங்கிப் போவோர் உண்டு.

ழுபதுகளில் அப்படி உருகியுருகிக் கேட்ட பாடல்களில் ஒன்று, ‘கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ’ ! மன்னாதி மன்னன் படத்தில் பதமினி தோன்றும் உருக்கமான கதைச் சூழலுக்கான அந்தப் பாடல், கவிஞர் கண்ணதாசனின் ஆக்கம். இசை மெல்லிசை மன்னர்கள். பி சுசீலாவின் அற்புதமான குரல். இரவு நேரத்தில் கேட்கையில் மனத்திற்கு மிக நெருக்கமாக ஒலிக்கும் இந்தப் பாடல், பகல் வேளையில் கேட்க நேர்ந்தாலும் இரவின் தனிமை நம்மைச் சூழவைத்துக் கேட்க வைக்க வல்லது. என் சித்தப்பா மகன் முரளி அண்ணன் தான் இந்தப் பாடல் கடத்தும் துயரப் பிழிவின் ரசனையில் மூழ்க வைத்தவர்.

வயலின்கள் கூட்டாக அதிவேகமாக இழைக்கும் இழைப்பிலும், வெகு வேகத் தாள கதியிலும் பாடல் எந்த மேற்பரப்பில் பயணப்பட உள்ளதென்று ரசிகர் தனது உணர்வுகளையும் திரட்டிக் கொண்டுவிடுவார். அந்த வேகத்தைச் சட்டென்று நிறுத்திப் பாடலுக்கு முன்னாக ஒரு தொகையறா வைக்கின்றனர் மெல்லிசை மன்னர்கள். ‘பதறிச் சிவந்ததே நெஞ்சம்’ என்ற அதன் முதல் வரியிலேயே சுசீலாவின் உச்ச கட்டக் குரல் பாடல் முழுவதும் உடைத்துத் தெறிக்கும் சோக வெடிப்பில் விளைய இருக்கிறது என்பதை உணர்த்தி விடுகிறது. தொகையறாவின் ஒவ்வொரு சொல்லிலும் சுசீலா வழங்கும் சங்கதிகளில் தெறிக்கும் துயரம் கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளைக் காட்சிப்படுத்தும் அளவு வலிமை கொண்டிருக்கிறது.

தொகையறா முடிந்ததும் பாடலுக்குப் போவதில்லை, பல்லவியை நோக்கி மீண்டும் வயலின்களின் அதிவேகப் புறப்பாடு நிகழ்கிறது. அதனோடு தாளக்கட்டு இணையுமிடம் மிக நுட்பமானது, பாடலின் உயிர் அதில் நிறைந்திருக்கிறது. உரிய இடத்தில் பி சுசீலா, ‘கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ’ என்று பல்லவியை எடுக்க இணையும்போது தாளக்கருவி அதிவேக இடைவெளி கொடுத்துப் பாடலைச் சட்டென்று உள்வாங்கிக் கொண்டு மீண்டும் வேக கதியில் தொடர்வது, வண்டியை நிறுத்தியும் நிறுத்தாமலும் பின்னால் ஓடோடி வரும் பயணியைச் சட்டென்று கைலாகு கொடுத்து ஏற்றிக்கொண்டு மீண்டும் விரைவது போலவே நிகழ்கிறது.

கண்கள் இரண்டும் என்பதில் அந்தக் கண்கள் என்ற சொல்லில் அந்த ‘ள்’ எனும் ஒற்றை எழுத்தில் எத்தனை அழுத்தம் கொடுக்கிறார் சுசீலா. பார்வையின் ஆழத்தையும் பரிதவிப்பின் சோகத்தையும் சொல்லிவிடுகிறது கண்கள் எனும் அந்த ஒற்றைச் சொல். அதனால் தான் பல்லவியின் முதல் வரியை ஒட்டி வயலின்கள் வாசித்து முடிக்கவும் தான் இரண்டாவது அடிக்குப் போகிறது பாடல். ‘காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ’ அடுத்த வரி. ‘இனிமேல்’ என்ற சொல்லில் எத்தனை சங்கதிகள்…. சேர்க்குமோ என்பதில் எத்தனை ஏக்கங்கள்…

பிரிவிற்குப் பின் பார்க்கும் கணத்தில் கண்களே முதலில் பேசும் என்பதில் எத்தனை இலக்கியத் தொடர்ச்சியான கவித்துவம். அதனால் தான் பல்லவியின் முதல் வரியே நெஞ்சத்தை நிரப்பி விடுகிறது. இரண்டாவது வரி, ததும்பி நிற்கும் உள்ளத்தை மேலும் தட்டி அடுத்த கேள்வியை வைக்கிற போது அது தாள மாட்டாது விம்முகிறது. சுசீலாவோ அதை இரண்டாவது அடியை இரண்டாவது முறையும் இசைத்து அந்தத் துயரத்தின் கனத்தை மேலும் கூட்டுகிறார்.

‘பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்’ என்கிற சரணத்தின் தொடக்க வரி, காதலன் எப்போதோ தன்னைக் கிளியாகக் கொஞ்சி இருந்திருக்கும் கணத்தின் இன்ப நினைவுகளை இந்தக் கணத்தின் துன்பியல் உணர்வுக்கு மொழி பெயர்த்து இசைப்பது போல் எழுதி இருக்கிறார் கவிஞர். கிளி, தென்றல், தேர் எல்லாமே அதன் தொடர்ச்சி தான். ‘பாடி வரும் தென்றல் தேர் ஏறி ஓடுவேன்’ என்பது மனத்தின் வேகத்திற்குப் பறந்து செல்ல முடியாது சிறைப்பட்டிருக்கும் சூழலைச் சுமந்து ஒலிக்கிறது சுசீலாவின் குரலில். ‘சென்ற இடம் காணேன்….சிந்தை வாடலானேன்’ எத்தனை அழகான சந்தச் சொற்கள்…. ‘சேதி சொல்லும் யாரும் தூது சொல்லக் காணேன்’ என்பது அதன் அடுத்த மேற்படி. சரணத்தின் மிக அருமையான இந்த வரிகளை சுசீலா திரும்ப இசைக்கையில் ரசிகரும் அதே உள்ளத் தவிப்புக்கு உள்ளாகிறார்.

மீண்டும் பல்லவிக்குத் திரும்புகையில் தாளக்கட்டு, அதே போல் விரைந்து செல்லும் வண்டி ஓடோடி வரும் பயணியை ஏற்றிக் கொண்டு தொடரும் பயணம் போல் செம்மையாக ஒலிக்கிறது.

இரண்டாம் சரணம், ‘நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே’ என்பது மிக மிக நுட்பமான உளவியல் பொழிவு. ‘அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே’ என்பது அதன் நீட்சி. பாதிப்பில் பதறும் நெஞ்சத்தை பிரதிபலிக்கும் பாடல் வரிகளும், அதைக் காட்சிப்படுத்தும் குரல் வளமுமாக மேலும் சிறக்கிறது பாடல் இந்த இடத்தில். ‘கணையாழி இங்கே மணவாளன் அங்கே’ என்பது காவியச் சொற்கள் என்று பலராலும் கொண்டாடப்படும் இடம். ‘காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே’ என்ற முடிப்பு, சரணத்தை வேறெந்த விதத்தில் முடிக்கவும் இசைய முடியாது என்று அடித்துச் சொல்லுமளவு புனையப்பட்டிருக்கிறது. பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து எழுதப்பட்டிருக்கிறது.

பாடலின் வழி நெடுக ஒற்றை வயலின் பற்றிக் கொண்டே படர்கிறது. வீணையின் தந்திகள் எங்கெங்கே ஒத்தடம் கொடுக்க வேண்டுமோ அங்கே மென்மொழியால் நீவிக் கொடுக்கிறது. தலைமுறைகளைக் கடந்து பேசுகிறது பாடல். கண் மூடிக் கேட்டிருந்தாலும் பாடலுக்கேற்ற அபாரமான பாவங்களை வெளிப்படுத்தும் பத்மினியின் முகத்தையும் மனத்திரையில் தோன்ற வைத்துவிடுகிறது பி சுசீலாவின் குரல்.

துயரத்திலேயே தோய்ந்து விட வேண்டுமென்பதில்லை. இன்பியல் உணர்வுகளின் பகிர்வுகளிலும் இசை நெஞ்சத்தைத் திளைக்கவே வைக்கிறது. சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து பாடலைக் கடந்த கட்டுரை பேசியிருந்தது. உதகை கோத்தகிரி தேயிலை தோட்டத்துத் தொழிலாளி ரெஜினா லூகாஸ் என்பவர் தனது தேயிலை பறிக்கும் பணியினூடே அன்றாடம் தனக்குப் பிடித்த பழைய பாடல்களைப் பாடுபவர், புதிய பறவை படத்தின் அந்தப் பாடலை எத்தனை குரலினிமை பொங்கப் பாடுகிறார் என்பதை வாட்ஸ் அப் பகிர்வு ஒன்றில் அறியவந்த போது வியக்க வைத்தது.

இசையின் ஜனநாயகத் தன்மை இது. நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்பதில்லை, பாடும் உள்ளங்களுக்குப் பாட்டுடைமை ஆகி விடுகிறது. ‘பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்…’ என்றானே மகாகவி, தங்கள் பாடுகளைப் பாடல்களால் தணித்துக் கொண்டே வாழ்க்கையோடு போராடும் எண்ணற்றோரின் குரல் இது. இசையின் பெருநதி எந்த பேதமும் இன்றிப் பொங்கிப் பெருகிப் பாய்ந்து நிரப்பி ஓடிக்கொண்டே இருக்கிறது வெளியெங்கும்.

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]