ஒரு நாட்டின் வரலாறு மற்றும் மொழியின் வரலாற்றை தெரிந்து கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதுபோலவே இந்த பூமியைப் பற்றி தெரிந்து கொள்வதும் முக்கியமாகும். நாம் பூமியின் ஒரு அங்கம் என்பதை மறந்ததின் விளைவு தான் இயற்கை சுரண்டலும் ; உழைப்புச் சுரண்டலும். மனிதன் தன் ஆதிக்கத்தை சக உயிர்கள் மீது செலுத்தியது போக பூமியின் வளங்களிலும் தீவிரமாக செலுத்துகிறான். இதனால் நாம் சந்திக்க இருக்கும் பேரிடர்கள் பெரும்பாலும் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடியதாக இருக்கும். காலநிலை பற்றிய புரிதல் வேண்டுமெனில் பூமி பற்றிய அடிப்படை புரிதல் அவசியமாகிறது. புவியின் அடிப்படை இயக்கத்தை எளிய முறையில் விளக்குவதே இப்புத்தகத்தின் முயற்சி.

என முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல, ஒட்டுமொத்த புவியின் 450 கோடி ஆண்டு கால வரலாற்றின் சில முக்கிய நிகழ்வுகளை 8 கட்டுரைகளாகப் பிரித்து இரத்தின சுருக்கமாகவும், எளிமையான வாழ்வியல் உதாரணங்களோடும் விளக்கி இருப்பது சிறப்பு.

இந்தியாவின் காலநிலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகிற இமயமலை இல்லாவிட்டால் இந்தியா எப்படியானதாக இருந்திருக்கும் ?

உலகின் நுரையீரலாகக் கருதப்பட்ட அமேசான் காடுகள், இதுவரை உள்வாங்கிய கார்பன் அளவை விட தற்போது அதிக அளவில் உமிழத்தொடங்கியதற்கான காரணம் என்ன ?

பூமி தோன்றுகையில் இத்தனை கண்டங்களும் கடல்களும் மட்டும்தான் இருந்ததா ?
அல்ல இன்னும் அதிகமாக இருந்ததா ?
இந்த கேள்விக்கு ஆல்ஃபெர்ட் வெக்னர் முன்வைத்த
விளக்கம் என்ன ?

இன்று பரவலாகக் கிடைக்கும் நிலக்கரியை வைத்து புவியின் வரலாற்றை சொல்ல முடியுமா ?

பூமியின் மைய அச்சின் சாய்வு 23.5° என்பது சரியானதா ? இல்லை 24.5 ° யில் இருந்து 22.1° சாய்வை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதன் இடையளவா ?

இதுவரை பூமியில் ஐந்து முற்றொழிப்புகள் (Extinction) நிகழ்ந்திருந்தாலும், எந்த ஒரு உயிரினமும் இன்னொரு இனம் அழியக் காரணமாய் அமையவில்லை. ஆனால் தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ள “ஆறாம் பேரழிவு” முழுக்க முழுக்க மனித இனத்தையே சாரும் என்பதற்கான ஐவகை முற்றொழிப்பிற்கான சான்றுகள்

பாலக்காட்டு கணவாய்க்கும், மடகாஸ்கருக்கும், ஆப்பிரிக்காவிற்கும் இடையே உள்ள 52 கோடி ஆண்டுகால நிலவியல் தொடர்பின் இன்றும் தென்படுகிற பரவலான உதாரணங்கள் என பல சுவாரஸ்யமானத் தகவலை முன்வைப்பதுடன், தொழிற்புரட்சிக்கு பிந்தைய பருவநிலை மாற்ற முடுக்கம் குறித்தான எச்சரிக்கைகளையும் ஆங்காங்கே எடுத்துச் சொல்கிற அற்புதமான புத்தகமாக, மேன்மையான வடிவமைப்புடன் வந்துள்ள நூல்.

அவசியம் பள்ளிக்குழந்தைகளிடம் உரையாடலாம்.

– செ.கா

நூல் : பூமியின் நாட்குறிப்பு
ஆசிரியர் : லோகேஷ் பார்த்திபன்
வெளியீடு : பூவுலகின் நண்பர்கள்
விலை : ரூ.70/-
பக்கங்கள் : 55

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *