நூல்: இந்தியாவின் கரும்புப் பெண்மணி ஜானகி அம்மாள்
ஆசிரியர்: தோழர் இ.பா.சிந்தன்
வெளியீடு: Books For Children. ஓங்கில் கூட்டம் 
விலை: ரூ.40
ஆண்டு : மார்ச்-2022
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

புத்தகத்தை எடுத்தால் 15லிருந்து 20 நிமிடத்தில் படித்துவிடலாம். அவ்வளவு விரைவாக நம்மை இழுத்துச் செல்கிறார் எழுத்தாளர் தோழர் இ.பா.சிந்தன் அவர்கள்.

அவர் எங்கே அழைத்துச் செல்கிறார் என்று ஆவலோடு பின்னாடியே போனேன். நேரா கேரளாவுக்கு 1897 ஆம் ஆண்டுக்கு அழைத்துச் சென்றார். அவருடன் சும்மா போகவில்லை கையில் ஒரு சுவையான கரும்பை கடித்துக்கொண்டேதான் போனேன். இந்தக் கரும்பு இவ்வளவு இனிப்பாக இருக்கிறதே அதற்குள் இவ்வளவு இனிப்பு எப்படி வந்திருக்கும்னு எதார்த்தமாத்தான் கேட்டேன். கையை விடாம புடிச்சிகிட்டே ஜானகி அம்மாளிடம் அழைச்சிகிட்டு போனதுமில்லாம அவங்க பட்ட பாடு, உழைப்பு, படிப்பு, இதோ நான் கடிக்கும் கரும்புல ஜானகி அம்மாள் அவமானப்பட்டாலும் மனம் தளராம இனிப்பை சேர்த்தது இப்படி ஒவ்வொன்னா சொல்ல வச்சாரே. அதுமட்டுமா குடும்பத்துல 19 புள்ளைகளாம். நாம ஆ…ன்னு வாய திறப்போம். ‘அதெல்லாம் அந்தக் காலத்துல இப்ப இல்ல வாயை மூடு’ அப்படீன்னு மேல இழுத்துகிட்டு போயிட்டாரே. அவங்க செடி கொடிக எல்லாவற்றின் மீதும் கண் வைத்தது, நம்ம சென்னை கல்லூரிக்கு படிக்க வந்தது அதுவும் முதல் பெண்மணியாமே.

சரி அவங்களுக்கு படிக்கிறதுக்கு எங்கிருந்து ஆர்வம் வந்ததுன்னா அவங்க அப்பா வீட்டுல சிறிய நூலகம் வைத்திருந்தாராம். நம்ம வீட்டுல நாமும் நூலகம் வைத்திருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் அப்படீன்னு மனசு ஓடிச்சின்னா பார்த்துக்குங்களேன். தன் மகளுக்கு திருமண விருப்பம் இல்லை என்பதை பெருந்தன்மையா ஏற்றுக்கொண்ட அவருடைய தந்தைக்குத்தான் நாம நன்றி சொல்லனும். அப்படி படிக்கவிடாம கண்ணாலம் கட்டிக்கொடுத்திருந்தா நாம இப்போது வரைக்கும் இனிப்பான கரும்பை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து ஒரு கரும்பு 500 ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்புறம் அந்த காலத்துல பெண்கள் படிக்கிற படிப்பு வீட்டு சமையலுக்கு என்னா தேவையோ அதைத்தான் படிக்கனுமாம். ஒருமுறை இவர் படித்த ராணி மேரி கல்லூரிக்கு சென்னை கல்லூரி ஆசிரியர் பிலிப் வந்து தான் எழுதிய ‘மெட்ராஸ் ஃபிளவர்’ நூல் பற்றி பேசிவிட்டு ‘ஏதாவது கேட்கனும்னா கேளுங்கள்’னு சொன்னாராம். உடனே நம்ம ஜானகி அம்மாள் எழுந்து ‘உங்க நூலில் பிழை இருக்கு’ன்னு பட்டுன்னு சொல்லிட்டாராம். நமக்குன்னா பொசுக்குன்னு கோவம் வந்திருக்கும். ஆனால் ஆசிரியர் ‘ஏம்மா நீ பேசாம சென்னை கல்லூரியில் தாவரவியல் பாடம் படியேம்மா’ என்று சொன்னாராம். நம்ம கரும்பு அம்மாவுக்கு சொல்லவா வேணும். அப்படியே உயர்ந்து உயர்ந்து அமெரிக்கா போய் அடுத்தடுத்து படிச்சி நம்ம கோயம்புத்தூர்ல தாங்க கரும்புல இனிப்பு சேர்த்தாங்க. அப்ப சாதிவெறி சொல்லவே வேண்டாம். அவ்வளவு மட்டம் தட்டலுக்கிடையிலும் சும்மா புகுந்து புகுந்து சாதிச்ச நம்ம கரும்பு ஜானகி அம்மாவ நீங்க கரும்பு கடிக்கும்போது மறக்காம நினைங்கப்பா.

இவ்வளவு நாள் நம்ம ஜானகி அம்மாவ கவனிக்காம இருந்ததுக்கு அம்மாவிடம் மன்னிப்பும், அம்மாவை கொண்டு வந்து சேர்த்த எழுத்தாளர் தோழர் இ.பா.சிந்தன் அவர்களுக்கும் மிக்க நன்றியையும் சொல்லிக்கிறேன்!

நில்லுங்க அதுக்குள்ள பக்கத்தை மூடாதீங்க நான் சொன்னது கொஞ்சம் தான் நீங்க விலாவாரியா நம்ம கரும்பு அம்மாவ தெரிஞ்சிக்கனும்னா பாரதி புத்தகாலயத்தை தொடர்பு கொள்ளுங்க வரட்டுமா.

தோழர் கைய விடுங்க நான் எப்பவோ ஜானகி அம்மாவ படிச்சிட்டேன் இன்னமும் என் கையை விடமாட்டேங்கிறீங்களே. ஓ இன்னும் நம்ம கரும்பு ஜானகி அம்மாவ மறக்காம இருக்கேனே அந்த பிரமையா…!

தோழமையுடன்
சண்முகசாமி ராமசாமி
புதுச்சேரி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *