தூக்கம் ..எப்படி ..வருகிறது..?

நாம் நேரிடையாக தூக்கத்தில் நுழைவோமா? உங்களுக்கு தூக்கம் கண்களைச் சுழற்றுகிறது. தூக்கம் கண்ணின் இமைமீது படுத்துக்கொண்டு அழுத்துகிறது. வா, வா, தூங்கலாம் என்று உங்களை அழைக்கிறது. உட்கார முடியவில்லை. படுக்கிறீர்கள்

அடுத்து நடப்பது என்ன? 

கண்களைத் தூக்கம்  தாலாட்ட, இமைகள் ஒத்திக் கொள்வதுபோல் மூடுகின்றன. கண்கள் லேசாக மெல்ல மெல்ல செருகுகின்றன.  மெல்ல, மெல்ல உறக்கம் உங்களின் மூளையின் கட்டுப்பாட்டில்,, கண்களையும், உடலையும் தழுவுகிறது. அப்புறம் என்ன நடக்கிறது உங்களுக்கு என்று கொஞ்சம் சொல்லுங்களேன்..! ம்.ம். ஹூகூம். உங்களால் முடியாது.  அப்புறம் என்ன,  நீங்கள் தூங்கியே போய்விட்டீர்கள். அவ்வளவுதான்..! அப்புறம் எங்கே சொல்ல..?  உடலுக்கும், உங்கள் மனதிற்கும் நடந்தது என்ன என்று யாருக்குமே தெரியாதே..! அதுதான் உண்மை..! மூளை மட்டுமே, அப்போது  படுவேகமாக  வேலை செய்கிறது .உடலின் அனைத்து செயல்களையும், மூச்சு  விடுதல் உட்பட மெதுவாக  கட்டுப் படுத்தபடுகிறது. மூளையின் அலைகளை பதிவு செய்த ஆராய்ச்சி மூலமே உடல், மனம் மற்று மூளையின் செயல்பாடுகளை ஆய்வாளர்கள் அறிந்துள்ளனர்.

உறக்க.. நிலைகள்..! 

உறக்கம் உங்களை ஆரத்தழுவியதும், தூக்கம் முக்கியமாக

1. துரித கண் சலன உறக்கம் ( Rapid Eye Movement-REM) மற்றும்

2. கண் சலனமற்றஉறக்கம் / கண் உருளாநிலைத்  தூக்கம் (Non-Rapid Eye Movement-NonREM) 

என இரண்டு நிலைகளில் நிகழ்வுகள் நடக்கின்றன.. பாலூட்டிகளிலும், பறவைகளிலும் கூட, இந்த இரண்டு நிலைத் தூக்கம்உண்டு. ஆனால் அவற்றின் காலக்கெடுதான் குறைவு.! தூக்கம் உங்களுக்குள் நுழைந்தவுடன், NonREM  நிலை 90 நிமிடங்களும், REM தூக்கம் 8-10 நிமிடங்களும் இருக்கும். ஆனால், இரவின் நேரம், நீள நீள, இரண்டும் உல்டா செய்துவிடும். ஆமாம். நடு இரவு மற்றும் அதிகாலை சமயங்களில், REM தூக்கம் 90 நிமிடங்களாகவும், NonREM தூக்கம் 10 நிமிடங்கள் என்றும் மாறிவிடும்.மேலும் REM தூக்கத்தின் பின்னேதான் NonREM தூக்கம் வரும்..! இது எப்படி? அதனால்தான், பின்னிரவில்/அதிகாலையில் யாராவது, உங்களை எழுப்பினால் சீக்கிரம் விழிப்பு ஏற்படாததன் காரணம். ஓர் இரவில், 5-6 முறை இந்த NonREM -REM சுழற்சி தூக்கம் மாறி மாறி வரும். நித்திரையின் மூலம், உங்களின் நினைவுகளை ஒருங்கிணைக்கவும், அறிவின் ஆற்றலை அதிகரிக்கவும், உடலின் சிதைந்த செல்கள்/திசுக்களை சரிசெய்யவும் பெரிதும் துணை புரிகிறது. மூளை தன்னை மீள் ஆற்றல் செய்தும் கொள்கிறது. 

ஒரு.. ராத்திரி.. நேரம்..!

ஒரு நாள் இரவில், நாம் ஒரே மாதிரி உறங்குவதில்லையாம். நமக்கு விதம் விதமான தூக்கம் வருகிறதாம். 5 வகை உறக்கம். இவை ஒரு ராத்திரியில், 4-5 முறை மாறி, மாறி ஷிப்ட் போட்டு வருகிறதா? உறங்கத் துவங்கியதும், உடலும், மனமும், உறக்கத்துக்கும், விழிப்புக்கும் இடைப்பட்ட இரண்டும்கெட்டான் கிறக்கமான நிலைக்கு ஆட்படுகிறது. இது தாண்டியதும், மூளையும், உடலும், நித்திரையின் 5 . நிலைகளுக்குச் செல்லுகிறது. ஒவ்வொரு நிலையும், அவரவர் வயதுக்குத் தகுந்தபடி, அதன் நேரம் வேறுபடும். ஒவ்வொரு நிலையும், மனம், மூளை மற்றும் உடலுக்கு அத்தியாவசிய தேவையானதும்கூட.! அதன்போது, மூளையின் அலைகளும் வேறுபடும். மூளை அலையைக் கொண்டு, உடலின் செயல்பாடுகளை அறிவியலார் கணக்கிடுகின்றனர். நமது உறக்க-விழிப்பு சுழற்சி/ சக்கரம்  சர்க்காடியன் (Circadian)

தாளலயம்தான், நாம் எவ்வளவு நேரம் உறங்கவேண்டும் என்பதை நிர்ணயிப்பவர்..!  

தூக்கத்தின்..முதல்..நிலை..!

நாம், வாழ்நாளின் மூன்றின் ஒரு பகுதி, உறக்கத்தில் உணர்விழந்த நிலை, வெளிச் சூழலை மறந்த நிலைதான்., இயக்குதசைகள் செயல்படாத நிலை என்ற நிலைகளுக்கு தள்ளப்படுகிறோம். முதல் நிலையின்போது, தூக்கத்தின் துவக்கநிலையில், ஒரு சில நிமிடங்களில், பாதி தூக்கம், பாதி விழிப்பு  என்கிற  கிறக்கமான மயக்க நிலைக்கு போகிறோம். அப்போது உடல் அசைவின்றி ஓய்வெடுக்க ஆரம்பிக்கிறது. புறச் சூழலில் என்ன நடக்கிறது என்று தெரியாது. வெளி உலகத்துடனான தொடர்பு அறுபடும். அந்த  முதல் நிலையின்போதுமூளை தன் ஆல்பா அலைகளிலிருந்து, தீட்டா அலைக்கு தாவுகிறது. உடல் தசைகளின் செயல்பாடு மிக மிக மெதுவாகிறது. ஆனால் லேசாக தொட்டாலும் விழித்து கொள்வோம்.. இந்நிலையில், உங்களை, ஏண்டா, செல்லம் லதா, செல்லை எங்கேடா வைத்தாய்? என்று மெதுவாக கேட்டாலும், டபக்கென எழுந்து உட்கார்ந்து விடுவீர்கள். மேலும், சிலருக்கு, உறக்கம் தழுவுவதால், அப்போது, நித்திரை தடைபடுவதை எண்ணி கோபம் கொப்புளிக்கும். இதுவே நித்திரை நிலை எனப்படுகிறது. சிலருக்கு, இந்நிலையில்தான்

அறிதுயில்நிலை மாயக்காட்சிகள் (Hypnogogic hallucinations) ஏற்படும்.

இரண்டாம்..நிலைத்..தூக்கம்..!

நித்திரை தொடங்கிய  10 நிமிடங்களில், நாம் முழுமையான உறக்கத்தின் தழுவலின் வயப்படுகிறோம். இது தூக்கத்தின் இரண்டாம் நிலையாகும். இதில் கண் அசைவு நின்று போகும். இதுதான் உண்மையான உறக்கத்தின் முதல் நிலை. இது 15 -20  நிமிடங்கள் நீடிக்கும்.   இப்போது, நமது கண் உருளாது. சுய நினைவை இழந்து விடுவோம்; அயர்ந்து உறங்குவோம். அச்சமயத்தில். உடல் வெப்பநிலை குறைகிறது. நமது சுவாசம் மற்றும் இதயத் துடிப்பு கொஞ்சம் குறைந்து, சீராகிறது. இரத்த அழுத்தம் 20 -30 % மும், இதயத்துடிப்பு 10 -20 % மும் குறைகிறது என ஆராய்ச்சி முடிவுகள்  தெரிவிக்கின்றன. உடலின் வளர்சிதைமாற்ற செயல்பாடும் 10 % குறைகிறது. இவையெல்லாம் நடப்பது ஆற்றல் சேமிப்புக்காகவே..!.  மூளை மெதுவான அலைகளையே அனுப்புகிறது. நமது தூக்கத்தின் பெரும்பகுதி (45 -55 %) இந்த நிலையில்தான் உள்ளது.

நித்திரையின்… மூன்றாம்.. நிலை..!

தூக்கத்தின் மூன்றாம் நிலையில், வெகுவாக ஆழ்ந்து உறங்கிவிடுவோம். மூளை டெல்ட்டா அலைகளை தொடர்ந்து அனுப்பும். இப்போது உங்களை எழுப்புவது கடினம். அப்படியே, விழித்தாலும், நீங்கள் நினைத்தபடி, உடனே சகஜ நிலைக்கு வந்துவிட முடியாது. உடல் மூளையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும், அது விடுபட நீண்ட நேரம் ஆகும். இதனைத்தான், நாம் தூங்கி முழிச்சதும், ஒண்ணுமே புரியல..குழப்பமா இருந்தது  என்கிறோம். உடல் வெளியுலக நிலையை உணர பல நிமிடங்கள் ஆகும்..

நான்காம்..நிலைத்.. தூக்கம்..!.      

நித்திரையின் நான்காம் நிலையிலும், மூளை மிக, மிக மெதுவாகடெல்ட்டா அலைகளையே அனுப்பும். இதிலும் ஆழ்ந்த உறக்கம்தான். மூன்றாம் நிலைக்கும், நான்காம் நிலைக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. ஆனால் இந்த நிலைத்தூக்கம் சுமார், 30 நிமிடங்கள்  நீடிக்கும். இந்த நிலையின் முடிவில்தான், படுக்கையில் சிறுநீர் கழிப்பது, தூக்கத்தில் நடப்பது, பேசுவது, பயந்து அலறுவது என்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இந்த நிலை குறைவாக இருந்தால்தான், மறுநாள் தூக்கம் போதாதது போன்ற உணர்வு ஏற்படும். காலையில் புத்துணர்ச்சியுடன் எழ நித்திரையின் நான்காம் நிலை மிகவும் அவசியம்.

கனவுத்..தூக்கம்..!

உறக்கத்தின் 5 ம் நிலையே, துரித கண் சலன உறக்கம். இந்த நிலை, உறக்கம் வந்து 90 நிமிடங்களுக்குப் பின்னரே வருகிறது. இந்ததூக்கத்தின் போதுதான், கனவு உண்டாகிறது. மூளையின் செயல்பாடு துரிதகதியில் இருக்கும் உங்களின் சுவாசம் அதிகரிக்கிறது, ஒழுங்காகவும் இல்லை. இதயத்துடிப்பும், இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. இயக்கு தசைகள் செயலற்றுப் போய் இருக்கின்றன. கனவு நிகழும்போது, உங்களின்கை, கால், தலை என எந்த உறுப்பும் அசையாது. பக்கவாதம் வந்ததுபோல, தாற்காலிகமாக, மரத்துப்போய் இருக்கும். இப்படிப்பட்ட அசையா நிலை உங்களின் பாதுகாப்பு வேண்டித்தான்..!. இல்லையெனில், கனவில் பார்ப்பவரோடு எழுந்து ஓடலாம்/சண்டைஇடலாம்/வெட்டலாம். கனவுக்கு ஏற்றபடி  நீங்கள் செயல்படுவதை தடுத்து, உங்களை சுயவதையிலிருந்து காக்கவே . அசையாநிலை..! இந்த நிலையில் விழிப்பு வந்தால்தான், உங்களால் அசைய முடியாது. இதனைத்தான், பேய் அமுக்கிவிட்டது, என்னால் எழுந்திருக்க முடியவில்லை என ரீல் விடும் நபர்கள் இருக்கின்றனர். ஆனால், கண் மட்டும் இமைக்குள் வேகமாய் உருளும். அதான்பா.. நீங்கள் தூக்கத்தில், கனவில் உங்களின் பிரிய நடிகை வேண்டியர்களுடன், ஆடிப் பாடுகிறீர்கள்/விரும்பும் மெல்பர்ன் நகரைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்..! கண் உருளல், கனவைமாயக்கட்சிகளை கண் ஸ்கேன் செய்து பார்ப்பதைக் குறிக்கிறது..! பெரியவர்களின் 20 % உறக்கம், REM தூக்கம்தான்.

விடிகாலையின்.. நீண்ட..கனவு..!


கனவு நிலை துவக்கத்தில் குறைவாகவே இருக்கும்.
பின்னர், மீண்டும் கண் சலனமற்ற உறக்கத்துக்கு தாவும். ஆனால், உறக்கம் வந்தபின், எப்போதும், முதல் நிலைக்குப் போகாது. கனவு நிலை முடிந்ததும், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை, மீண்டும் கனவு நிலை என உறக்க சக்கரம் ஓர் இரவில், 4 -6 முறை சுற்றி, சுற்றி வரும். தூங்கியவுடன் வரும் கனவு நிலையின் நேரம் குறைவாகவும், அடுத்தடுத்து வரும்கனவு நிலையின் நேரம், கொஞ்சம் கொஞ்சமாக நீண்டு கொண்டே வரும். அதிகாலை/விடிகாலையில் வரும் கனவுத்தூக்கத்தின் நேரம் அதிகமாகவும், ஆழ்ந்த நித்திரையின் கால அளவு குறைவாகவும் இருக்கும்.

கனவுத்தூக்கம், மூளையின் வளர்ச்சிக்கு பெரிது உதவுகிறது. தாயின் கருவறைக்குள் உள்ள கருவின் தூக்கத்தில் 75 % கனவுத்தூக்கமே..!பிறந்த குழந்தை 60 % வேகக் கண் சலன நித்திரை செய்கிறது.நமது ஒருநாளின் அனுபவங்களை நீண்டகால நினைவாக மாற்றவே, அது கனவாகிறது என விஞ்ஞானிகள் சொல்கின்றனர். .

கனவின்.. பலன்..!

கனவில்கற்பனை, கருத்து, உணர்வுகள், தீர்வுகள் உருவாகின்றன. கனவு என்பது சுவையானதாகவும், புதிராகவும் கூட இருக்கிறது. கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் கனவு, கடவுள் அனுப்பிய செய்தி என நம்பினர். அது மட்டுமல்ல..! கனவின் பலன் சொல்லவும்அரசவைகளில், ராஜகுரு இருந்தார். கனவைக் கொண்டே, போர்க்களத்துக்கும் சென்றனர். கனவு சில சமயம், கலைஞர்களின் கற்பனை ஊற்றாகவும், சிலருக்கு பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவதாகவும் இருக்கிறது.

கனவுகள்..பலவிதம்..!

நீங்கள் விழித்து 5 நிமிடத்திற்குள் 50 % கனவு மறந்து விடுகிறது.10  நிமிடத்திற்குள் 90 % கனவு நினைவுப் பதிப்பிலிருந்து ஓடிவிடுகிறது. பிறந்தபின், பார்வை இழந்தவர்கள் காணும் கனவு நம்மைப் போலவே இருக்கும். பிறக்கும்போதே, பார்வையைப் பறிகொடுத்தவர்களும் கனவு காண்கின்றனர். அவர்களின் கனவில், வாசனை, ஒலி, தொடு உணர்வு போன்றவையே இருக்கும். நாம் தினமும் கனவு காண்கிறோம். எனக்கு கனவே வராதுப்பா.. என்பதெல்லாம். இப்படிக் கூறுபவர்கள் நிறைய பேர் உண்டு. இதெல்லாம் ஒரு டுமீல்தான்..! தாங்கள் இரவில் கண்ட கனவை மறந்து விடுகிறீர்கள்.. அவ்வளவே..! நாம் கனவில் பார்க்கும் முகங்கள் எல்லாம், நம் வாழ்வில் சந்தித்தவர்களே..! நாம் பார்க்காத முகம்/பார்க்காத இடம்/பார்க்காத நிகழ்வு கனவில் எட்டிப் பார்க்காது. ஒரு நாளில், கண் விழித்ததிலிருந்து, படுக்கப் போகும்வரை, திறந்திருக்கும் கண் திரையில், லட்சக்கணக்கான/கோடிக்கணக்கான  பார்வைகள் பதிவுகள் நிகழ்கின்றன. மூளை அனைத்தையும் தன்னில் பதிய வைக்கிறது. இரவு தூக்கத்தின் போதுதான், அவற்றை மீள்பார்வை செய்து, வேண்டாததை நீக்கிவிட்டு, வேண்டியதை நீள் நினைவுப் பெட்டகத்தில் பூட்டி பாதுகாப்பாய் வைக்கிறது. மக்களில் 12 % பேர் மட்டுமே, வண்ணக் கனவு காண்கின்றனர். மற்றவர்கள் பார்ப்பது கருப்புவெள்ளைப் படமே..!

தாலாட்டும்..மெலடோனின்..!

தூக்கத்தை தூண்டுவது மெலடோனின்(Melatonin) என்ற ஹார்மோன்தான். இதனை, பிட்யூட்டரி சுரப்பியின் அடியில் பட்டாணி சைசில் உள்ள பீனியல் சுரப்பி (Pineal Gland) மெலடோனை இரவில்தான், இருட்டில்தான் சுரக்கிறது. இது கொஞ்சம் வெளிச்சம் இருந்தாலும் சுரப்பை குறைத்துவிடும். எனவே, தூங்கும்போது வெளிச்சம் வேண்டாம். மேலும் இதுவும் உடலின் வெப்பத்தை குறைத்து, தூக்கத்தை தூண்டுகிறது. இது உலகின் எல்லா உயிரிகளிடமும் உள்ளது. சர்க்காடியன்  சக்கரத்தை இயக்க உதவுவதும் இதுவே..! உறக்கத்தின் போதுதான் உடலின், வளர்ச்சி ஹார்மோனும், தைராய்டு ஹார்மோனும் சுரக்கிறது. அட்ரினோகார்டிகோ ட்ரோபின் (Adrenocoticotrophin) சுரந்தால் உடனே விழித்து விடுவோம். இன்சுலின் அதிகம் சுரந்தாலும், தூக்கம் குறையும். ஈஸ்ட்ரோஜனும் கனவுத் தூக்கத்துக்கு உதவுகிறது. மூளை நல்ல முடிவுகளை எடுக்கவும், மனச் சிதைவை தடுக்கவும், மன அழுத்தம் குறைக்கவும் கனவு உதவுகிறதாம். மனச் சிதைவு அதிகம் உள்ளவர்களுக்கு கனவு வராதாம்.

சூழலும்.. உறக்கமும்..!
நல்ல தூக்கம் தூங்க, நாம் விரும்பிய  சூழல் வேண்டுமென்று நினைக்கிறோம். உண்மையா? இது தொடர்பாய் ஒரு கதை. இரண்டு மீனவப் பெண்கள் கருவாடு விற்கப் போகிறார்கள். விற்றுவிட்டுத் திரும்பும்போது, மழை பிடித்துக் கொண்டது. வழியில் ஒரு பூக்கடையில், தஞ்சம் அடைகிறார்கள். மழை நிற்கவில்லை. இருவரும் அங்கேயே தங்கிவிடலாம் என முடிவு எடுக்கின்றனர். தூக்கம் வந்தாச்சு. ஆனாலும் இருவராலும் தூங்க முடியவில்லை. ஒரு பெண் “.என்னடி கண்ணம்மா, இந்த பூவு இப்படி நாத்தமடிக்குது. தூக்கம் வரமாட்டேங்குதே.” “அதான்கா நானும் பாத்தேன்..என்ன செய்ய?.” நீண்ட நேரம் உறக்கம் கொள்ளாமல் தவித்தனர். முடிவாக, “அக்கா நாம தூங்க ஒரு யோசனை சொல்றேன். பேசாம, நம்ம கருவாட்டுத் துணிய நனைச்சி மூஞ்சிக்கு அருகில் வச்சிக்கிட்டு தூங்குவோம்”என்ற கண்ணம்மா, அதனை செய்தவுடன், இருவரும் சடுதியில் தூங்கிப்போனார்கள். நித்திரை பழக்கத்தைப் பொறுத்ததும் கூட.

நிம்மதியான நித்திரைக்கு, சூழல், வாசனை, பழகிய இடம் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் இதைவிட, ஆச்சரியமான இன்னொரு பக்கமும் உள்ளதே..! வெளிச்சம் இருந்தால் எனக்கு தூக்கமே வராது, சத்தம் இருந்தால் உறக்கம் கொள்ளாது  என்று சொல்லும் ரகமா நீங்கள்? இதெல்லாம் ஒரு பேச்சுக்குத்தான் நண்பா..! தூக்கம் உங்களை முழுதுமாக  தன் வசப்படுத்தி தூக்கத்தின் முழுதழுவலில் அல்லது  இருந்தால்,இரண்டு நாள் உறக்கம் கெட்டிருந்தால், சூழலாவது, இடமாவது, நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் தன்னை மறந்து சாமியாடத் துவங்கி விடுவீர்கள். நாள் முழுதும் அலைந்து திரிந்து விட்டுபின் பேருந்தின் செம கூட்டத்தில், நடுஇரவில் ஏறிஇடமின்றி  நின்றுகொண்டே, நீங்கள் பயணித்தாலும்கூட, கம்பியில் தொங்கிக் கொண்டே, தூங்குவதில்லையா..! 

அட ..இதெல்லாம் சகஜமப்பா..!   

தங்கவும், உறங்கவும் இடமின்றி, பிளாட்பாரத்தில் குடித்தனம் நடத்துபவர்கள் உறங்குவதில்லையா? புகைவண்டி நிலையம், பேருந்து நிலையம், வாகனப் போக்குவரத்து உள்ள இடங்களில் வாழும் மனிதர்கள் தூங்குவதில்லையா? தூக்கம் நீங்க தரலைன்னாஅதுவே உங்களை கவ்விப் பிடிக்கிறது. நீங்கள் தராததை எடுத்துக் கொள்கிறது. தூக்கம், அது கெட்டிக்கார பிள்ளை மட்டுமல்ல, பிடிவாதக்கார பிள்ளையும் கூட.! அது சரி. தூக்கம் வர, மெத்து மெத்தென்ற பஞ்சு மெத்தை, அருமையான பாய், இனிமையான இசை, நல்ல நறுமணம், அமைதியான இடம், இதெல்லாம் நமது பழக்க வாசனைதான். ஆனால் இருவரது பழக்கப்பட்ட இடம் கட்டாந்தரை என்றால், அங்கே அவர் நிம்மதியாய் உறங்க முடியுமே..! கருங்கல் ஜல்லி ஏற்றிய  சடக், சடக் என  குதித்துச் செல்லும் லாரியில், கொளுத்தும் வெயிலில், ஜல்லியின் மேல் படுத்து தூங்கி பயணம் செய்யும் இளைஞாகளும், பெண்களும், சிறுவர்களும், சத்தம் நிறைந்த இடத்தில்தானே நித்திரை கொள்ள முடியும். கடற்கரை மீனவர்களுக்கு, கடலின் அலையோசைதான் தாலாட்டு..

1) குழந்தைகளுக்கு நிறைய தூக்கம் வேண்டும்.. மூளையும், உடலும் நன்கு வளர்ந்து, நன்கு செயல்பட..!. பிறந்த சிசுவுக்கு..வேண்டிய உறக்கம்: 18 மணி நேரம்.. அது ஒரு நாளில் 9  மணி நேரத்தை கனவுக் குளியலில் மூழ்கி முத்தெடுக்கிறது

2) 1 -12 மாதம் வரை,14 -18 மணி நேர நித்திரை.

3) 1 -3 வயது வரை–12 -15 மணி நேர துயில்.

4) 3-5 வயது பாலகர்களுக்குத் தேவை:11 -13 மணி தூக்கம்.

5) 5 – 12 வயதில், 9 -11 மணி உறக்கம் வேண்டும்.

6) பெரியவர்களானதும்,9 -10 மணி நேர தூக்கம்.

7) முதியோர்களுக்கு,.7 -8 மணி நித்திரை.

8) கருவுற்ற பெண்கள்,,8 மணி நேரத்துக்கு மேல் உறங்க வேண்டும். 

மற்ற விலங்கினங்கள் ஒரு நாளில் உறங்கும் நேரம்: 

  1. பழுப்பு வௌவால் …19 .9 மணி 
  2. ஆர்மடில்லோ…………18 மணி
  3. மலைப்பாம்பு…………..18 மணி 
  4. ஆந்தை மந்தி…………..17 மணி
  5. புலி…………………………..16 மணி 
  6. அணில்……………………..15 மணி
  7. சிங்கம்……………………….13 .5 மணி
  8. பூனை……………………..12 மணி 
  9. முயல்……………………..11 .4 மணி
  10. வாத்து……………………..10 .8 மணி 
  11. நாய்………………………….10 .4   மணி 
  12. டால்பின்…………………..10 .4 மணி
  13. சிம்பன்சி…………………..9 .7 மணி 
  14. மனிதன்……………………மணி
  15. பன்றி………………………..7 .8 மணி  
  16. கப்பி மீன்…………………மணி‘ . 
  17. சீல்……………………………6 .2 மணி 
  18. ஆடு…………………………..5 .3 மணி
  19. பசு………………………………3 .9 மணி 
  20. யானை……………………….3 .6 மணி 
  21. குதிரை………………………. 2 .9 மணி
  22. ஒட்டகச் சிவிங்கி  ………..1 .9 மணி

மோனோலிசா & லியானார்டோ 

ஒரு சுவையான தகவல்: மோனோலிசாவை  வரைந்த லியானார்டோ டாவின்சி..இடையிடையே குட்டித்  தூக்கம் போடுபவர். நான்கு மணி நேரத்துக்கு  ஒரு தடவை 15 நிமிடம் மட்டுமே தூங்குவாராம். 

பிரான்சின் அதிபர்  நெப்போலியன் குதிரையில் போகும்போதுகூட உறங்குவாராம். அவரது நித்திரை 4 மணி நேரம் மட்டுமே..!

எடிசன் தூக்கம் என்பது நேரத்தை வீணடிப்பது என்ற கருத்து கொண்டவர்..!

 ஆனால் தூக்கம் கேட்டால், பலவித நோய்கள் நம் மேல் பாயும்.படத்தைப் பாருங்கள்..!

உலகில் மார்ச் 19 ம் நாளை உலக  தூக்க நாளாக கொண்டாடுகின்றனர்.

 – பேரா. சோ.மோகனா

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *