நூல் அறிமுகம்: அ. இருதயராஜ் சே.ச. ’மெளனம் கலைக்கும் ஜெய் பீம்’ – மயிலை பாலு

நூல் அறிமுகம்: அ. இருதயராஜ் சே.ச. ’மெளனம் கலைக்கும் ஜெய் பீம்’ – மயிலை பாலு
ஆவண வரலாற்றில் நிச்சயம் இந்நூல் நிலைக்கும்

வெள்ளித்திரையில் நிழல் உருவங்கள் தான் பேசுகின்றன, அழுகின்றன, சிரிக்கின்றன, கொதிக்கின்றன, போராடுகின்றன ……..
இருப்பினும் இந்த நிழல்கள் நிஜமாகி நமது மனங்களுக்குள்- சிந்தனைக்குள் இறக்கிவைக்கின்ற ரசவாதத்தை ஒரு சில திரைக்கலைஞர்கள் குழுவே வெற்றிகரமாக செய்கிறது

இத்தகைய குழுவாக ஜெய் பீம் திரைப்படத்தை உருவாக்கிய குழு விளங்குகிறது. இருளர் பழங்குடி மக்களின் அன்றாடப்பாடுகளில் ஒரு துளியை எடுத்துக்கொண்டு அதுவும் மெய்யாகவே நடந்ததை எடுத்துக்கொண்டு கலைப்படைப்பாக்கப்பட்டிருப்பது எளிய செயல் அல்ல

சமூகத்தை உற்று நோக்கி ஊடுருவி ஒவ்வொன்றையும் அலசி பகுப்பாய்வு செய்து எண்ணத்தில் பதியமிட்ட உரம் கொண்டால் மட்டுமே இது போன்ற கலைப்படைப்பை உருவாக்க முடியும். அந்த வகையில் ஜெய் பீம் திரைப்படம் மக்களின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது . இந்தியாவில் மட்டுமல்ல சீனா போன்ற வெளிநாடுகளிலும் இந்தத் திரைப்படம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளைத்தவர்கள் என்றால் காவல் துறை எப்படி நடந்துகொள்கிறது? சிறையில் அடைத்து சித்ரவதை செய்கிறது. கொலையே செய்துவிட்டு மூடி மறைக்க முயற்சி செய்கிறது . மனிதாபிமானமும் மனசாட்சியும் காக்கி சட்டை போட்டவுடன் காணாமல் போகின்றன (ஒரு சிலர் விதிவிலக்காக உள்ளனர் ) என்பதையெல்லாம் சினிமாத்தனம் இல்லாமல் மிகைப்படுத்தாமல் காட்சிப் படுத்தியிருப்பதே படத்தின் வெற்றி .

இப்படிப்பட்ட வெற்றிப் படங்களை பார்த்தோமா பாராட்டினோமா அத்துடன் கடமை முடிந்தது என்பதுதான் பொதுவான செயல்பாடு. ஆனால் தனது தனித்துவ செயல்பாட்டை அ. இருதயராஜ் வெளிப்படுத்தி இருக்கிறார். ‘மௌனம் கலைக்கும் ஜெய்பீம் – உரையாடல்கள் / விவாதங்கள்/ கேள்விகள் ‘ என நூலாக்கி ஆவணப்படுத்தியிருக்கிறார் . ‘ இந்த முயற்சி ஒரு புது வரவு ‘ என்று அணிந்துரையில் கவிஞர் சுகிர்தராணி கூறியிருப்பது மிகச்சரியானது.

கலைப்படைப்பையும் அதன் நோக்கத்தையும் புறவயமாக (objective ) பார்க்காமல் அகவய (subjective ) நிலையில் பார்த்து எரிச்சலடையும் தொட்டால் சிணுங்கி போக்கு இப்போது ஆதிக்கரித்துவிட்டது. அது சாதியாக, கட்சியாக, மதமாக வெளிப்படுகிறது. அதுதான் ஜெய் பீம் படத்திற்கும் நேர்ந்துள்ளது .

இது சார்ந்த விமர்சனங்களை, கண்டனங்களை பா.ம..க முன்வைத்த போதும், அதற்கு வன்னியர் என்ற போர்வையையைப் போர்த்திய போதும் தொலைகட்சி நடிகர் அருண் குமார் ராஜன் அதனை நிராகரித்திருப்பது வர்வேற்கத்தக்கது. ‘நானும் வன்னியர்தான்’ என்று கூறி சுயசாதி மறுத்து நியாயத்தின் பக்கம் நின்றிருக்கிறார். இதனை ஆவணப்படுத்தியிருப்பது காலத்திற்கும் கல்வெட்டாய் நிலைத்து நிற்கும்.

” ஏன் இந்தப் புத்தகம் ?” என்று படிப்பு ஆர்வத்தைத் தூண்டும் தலைப்புடன் தொடங்கி, ‘ ஜெய் பீம் படத்தின் வெற்றியும் , கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும்’ என்று சமூகப் பார்வையை வெளிப்படுத்தும் தலைப்பு ஈறாக செறிவுடன் நூல் அமைந்துள்ளது.

அக்னிசட்டி காட்சியை நீக்கி அந்த இடத்தில் சரஸ்வதி படம் வைத்தால், அது இந்தக் கடவுள் என எச். ராஜா வரிந்துகட்டுகிறார். என்னடா இது அரசியல்!

இது போன்ற அற்பர்களின் பதிவைப் படித்துவிட்டு “திருமணம் செய்து கொண்டால் மனைவி மூலம் மிரட்டுவார்களோ என்பதற்காக ஒத்திவைத்து 39 வயதில் திருமணம் செய்து கொண்டேன் ” என்று கூறும் மார்க்சியவாதி கோவிந்தனின் பதிவுக்குத் தலைவணங்கத் தோன்றுகிறது.

இலக்கியத்துறையில் பெண் விடுதலைப் போராளி சூடாமணியைப் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்லும் கடமையை நீதியரசர் சந்துருவும் அவரது இணையா பேராசிரியர் பாரதியும் செய்துகொண்டிருக்கிறார்கள். இப்போது திரைத்துறையில் இருளர் சமூகத்திற்கு நீதி கேட்கும் போராட்டத்தை கதைக்களமாக்கி சந்துரு முத்திரை பதித்துள்ளார்.

‘ஜெய் பீம் ‘ வெறும் படமல்ல ; கடந்த காலத்துக்கு உயிர் தந்து நிகழ்காலத்திற்கும் எதிகாலத்திற்கும் பாடமாக விளங்கும் என்ற தொலை நோக்கோடு நூலின் ஒவ்வொரு பகுதியும் மணி மணியாகக் கோர்க்கப்பட்டுள்ளது .

திரைப்பட இயக்குனர் த. செ . ஞானவேல், நாயக பிம்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு வழக்கறிஞர் சந்துருவாகவே வாழ்ந்திருக்கும் சூர்யா உள்ளிட்ட குழுவினருக்கு திரையுலக வரலாற்றில் தனித்துவமான இடமிருக்கும். அதே அளவுக்கு இந்நூலாசிரியர் அ . இருதயராஜ் அவர்களுக்கும் ஜெய் பீம் குறித்த ஆய்வு ஆவணப் பதிவுத்துறையில் நிச்சயம் ஓர் இடமிருக்கும்.

“கத்தி எடுத்து ஒருவனைக் குத்தினால் தான் வன்முறை என்பதல்ல….. கண்ணெதிரே நடக்கின்ற கொடூரத்தைக் கண்டும் காணாமல் மெளனமாக இருப்பதும் ஒருவன் முறை தான் ” என செல்வானாம் பதிப்பகக் கருது ஒவ்வொருவர் இதயத்திலும் பட வேண்டிய காலத்தின் கட்டாயமாகும்.

– மயிலை பாலு

நூல் : மெளனம் கலைக்கும் ஜெய் பீம் உரையாடல்கள் | விவாதங்கள் | கேள்விகள்
ஆசிரியர் : அ. இருதயராஜ் சே.ச
வெளியீடு : செவ்வானம்
விலை : ரூ. 200/-
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924

[email protected]