கையறுநதி | KaiyaruNadhiகையறுநதி | KaiyaruNadhi

1.  இந்த நூலில் வறீதையா அவர்கள் தன் வாழ்வில் நிகழ்ந்தவற்றை நபர்கள் பெயர் ,ஊர் -நிறுவனங்கள் பெயரை மட்டும் மாற்றி …அப்படியே எழுதி இருக்கிறார்.
“மனச்சிதைவு”(Schizophrenia) நோய்க்கு ஆளான தன் மகள் ஜூலியாவை நோயிலிருந்து விடுவிக்க, குணப்படுத்தி அவளுக்கு நல்வாழ்க்கை அமைத்து தர ,நடத்தும் பெரும் போராட்டத்தை மையமாக்கி நகரும் இந்த நூல் ,நூலாசிரியரின் பள்ளி கல்லூரி மாணவப் பருவத்தில் நடந்தவற்றையும் மற்றும் கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய போது ஏற்பட்ட அனுபவங்களையும்.. கல்வி நிறுவனங்களில் அவர் எதிர்கொண்ட கசப்பான-உவப்பான அனுபவங்களையும் அப்படி, அப்படியே பதிவு செய்து இருக்கிறார் .அதைவிட முக்கியமாக தன்னுடைய கிறிஸ்தவ மதத்தில் நிலவும் -எதிர்கொள்ளும் சம்பவங்களை விமர்சன ரீதியாக அம்பலப்படுத்துகிறார்.

2.பைபிள் வசனங்களை மனப்பாடம் செய்து கொண்டு ..அதை உச்சஸ்தாயியில் ..ஏற்ற இறக்கத்துடன் ..தாள வயத்துடன் பிரசங்கம் செய்தும்.. குடும்ப பிரார்த்தனைகள் மூலம் துயரங்களுக்கு வடிகால் தேடி வரும் அபலை மனிதர்களுக்கு பிரார்த்தனை கூடாரங்கள் மூலமும், ஆவிஎழுப்பும் கூட்டங்கள் மூலமும் ஆன்மீக வியாபாரத்தில் ஈடுபட்டு.. 500 ரூபாய் ..ஆயிரம் ரூபாய் என அபகரித்து …பல்கலைக்கழகங்களை எழுப்பும் காருண்யவாதிகளை அம்பலப்படுத்துகிறது நூல்!

துறவியும் வேசியும் கூட்டணி சேர்ந்து ஒரு கல்வி நிறுவனத்தை எப்படி பெரிய பேரிடராக மாற்றுகிறார்கள் என்பதற்கு தானே நேர் சாட்சி என குமுறுகிறார் வறீதையா..

ஜேம்ஸ் விபத்து ஒன்றில் முழங்காலுக்கு கீழே காலை இழந்து செயற்கைக் கால் பொருத்த மருத்துவமனை ஒன்றிலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு கொட்டேஷன் வாங்கி வருகிறான். அவனுக்கு உண்மையிலேயே உதவ முன் வரும் ஜூலியா அப்பா வறீதையா,உண்மையில் செலவு 32 ஆயிரம் ரூபாய்தான் ஆகும் ..நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன் .அத்தோடு உனக்கு நல்ல வேலையும் வாங்கித் தருகிறேன் என மிக மெனக்கட்டு அவனை வீட்டுக்கு தேடிச் சென்று உள்ளபடியே முயற்சி செய்கிறார் .ஆனால் அவன் அதற்கு ஒப்புக்கொண்டானா எனில் இல்லை. அதைவிட தனி நபர்களுக்கு… குடும்பங்களுக்கு.. பிரார்த்தனை..ஜெபம் செய்து அதில்வரும் சம்பாத்தியத்துடன் வாழ்வதையே லாபகரமாக கருதுவதை நூல் அம்பலப்படுத்துகிறது.

3. தனது சமயத்தில் இளங்குருக்களுக்கான பயிற்சி மடத்தில் ..இறையியல்இளைஞர் கழகத்தில் நிலவும் சாதிய வன்மங்களை.. அதிகார ஆணவப் போக்குகளை கொஞ்சமும் சமரசம் இன்றி அம்பலப்படுத்தும் வறீதையா அவர்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என் வெறி கொண்ட எழுத்து மூலம் அனைத்தையும் அம்பலப்படுத்துவேன் என உறுதியேற்றதை நூல் பதிவு செய்கிறது .ஆனால் வறீதையா நாத்திகரோ கடவுள் மறுப்பாளரோ இல்லை .எப்படி கவிஞர் சல்மா அவர்கள் தனது “இரண்டாம் ஜாமத்து கதைகள் “மூலம் தன்னுடைய இஸ்லாம் மதத்தில் நிலவும் ஆணாதிக்க மூட நம்பிக்கை கூறுகளை அம்பலப்படுத்தினாரோ அதைவிட கூடுதல் உறுதியுடன் வறீதையா அவர்கள் இந்த நூலில் பாதி அளவுக்கு மேல் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை பதிவு செய்கிறார்.

4. ஒரு சமய நிறுவனத்தில் அதிகாரமும் ,செல்வமும் குவியும் போது எப்படிப்பட்ட ஆதிக்க நடவடிக்கைகள் நிகழும் என்பதை வறீதையா பதிவு செய்திருக்கிறார் .பாமாவின் ‘கருக்கு’ நூலிலும் விடிவெள்ளியின் ‘கலக்கல் ‘நூலிலும் இப்படிப்பட்ட பதிவுகள் உள்ளன. ஏதோ சிறுபான்மை கிறிஸ்தவ மதத்தை கேவலப்படுத்தும் நூல் என்ற எண்ணம் ஏற்படாத வண்ணம் மிகவும் கவனமாக நிகழ்வுகளை பதிவு செய்திருக்கிறார் . உண்மையான கடவுள் பக்தி உள்ளவர்களையோ.. உண்மையான சமயத் தொண்டர்களையோ அவர் நிந்திக்கவில்லை.
பக்தியில் பலவகை உண்டு .உள்ளபடியே முழுமையான கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ஒரு புறம் .சமயத்தின் உள்ளே நடைபெறும் தவறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் கடவுள் நம்பிக்கையாளரும் உண்டு. தான் செய்யும் எல்லாவித பாவ நடவடிக்கைகளுக்கும் கடவுளுக்கும் பங்கு போட்டு காசு -பணம் -வெள்ளி- தங்கம் என காணிக்கை செலுத்தும் கடவுள் நம்பிக்கையாளாரும் உண்டு. தன் வீட்டில் உள்ளவர்களுக்காக.. குழந்தைகளுக்காக.. பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள சமய சடங்குகளுக்காக சம்பிரதாயங்களுக்காக ..ஊரோடு ஒத்துப்போதல் என்று கடவுள் நம்பிக்கை இன்றி மௌனமாக உள்ளோரும் உண்டு .விரல் விட்டு எண்ணிடும் அளவில்தான் நாத்திக உணர்வுடன்.. பகுத்தறிவுடன் இருப்போர் உள்ள நிலை இன்றும் உள்ளது. ஆலயம் ஒருவிதமான மனநல வைத்தியசாலை… பல விதமான துயரங்களுக்கு ஆறுதல் தரும் இடமாகஅது உள்ளது..சற்று மன நிம்மதி தருகிறது என்று சகித்துக் கொள்வதும் உண்டு .இந்த நூலை படிக்கும் போது இப்படிப்பட்ட அனுபவங்களைத்தரும் பற்றி ஏராளமான சம்பவங்களை வாசகர்கள் பெறுவார்கள்.

5. நூலின் இறுதியில் தன் தாயின் இறுதிக் காலத்தில் அவருக்கும் இவருக்கும் உள்ளபாசப் பிணைப்பு நெகிழ்வுறழ பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் மரணம் அடைந்து விட்ட தன் அப்பா மீதான தன்னுடைய வெறுப்பையும் பதிவு செய்து இருக்கிறார் .

கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய போது எதிர்கொண்ட அனுபவங்கள்.. இவரின் அக்கறையான ஆசிரியப் பணியை வெளிப்படுத்துகிறது. பணத்திமிர் பிடித்த அப்பன், அவனுடைய மகன் ஜெகன் பற்றிய கதையும் நமக்கு படிப்பினை தரும் கதை தான். இப்படி பல மாணவர்களைப்பற்றிய கதைகள் உள்ளன.மனநோயால் பாதிப்படைந்த மாணவி ஹெப்சிகாவை தேர்வில் வெற்றி பெற எப்படி உதவுகிறார் என்பதும் நல்லசெய்திதான். பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு வரும் மாணவர்கள் தாங்கள் பள்ளியில் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் பழி தீர்த்துக் கொள்வது போல. கல்லூரியில் வந்து சுற்றித்தருவதை குறிப்பிடும் ஆசிரியர் ..அவர்களை சரிப்படுத்தி சரியான பாதையில் கொண்டு வர நோக்க நிலை வகுப்புகளை பல மணி நேரம் நடத்தியது கவனிக்கத்தக்கது .அந்தப் பருவ வயதிற்கு ஏற்ற சேட்டைகளுடன் மாணவர்கள் ஈடுபட்டாலும் அவர்களை சகித்து ..புரிந்து கொண்டு.. நல்வழிப்படுத்த அக்கறையுடன் செயல்பட்டதை ஆசிரியர் வறீதையா மன நிறைவுடன் பதிவு செய்திருக்கிறார்.

6. இதுவரை வறீதையாவின் சுயசரிதையின் சில பகுதிகளை பார்த்தோம். இனி நூலின்முக்கிய பகுதியாக தன் மகள்.. மனச்சிதைவு நோய்க்கு
ஆளான ஜூலியா… உடனான உண்மை சம்பவங்களை ஒரு விழிப்புணர்வு கண்ணோட்டத்துடன் பார்க்கலாம். இதைத்தான் நூலின் கருவாக நாம் கருதலாம்.
மனநல நோய்க்கும் மனச்சிதைவு நோய்க்கும் உள்ள வேறுபாட்டை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மனநல நோயை சில வாரங்களில் ..சில மாதங்களில் குணமாக்கி விடலாம். ஆனால் மனச்சிதைவு நோய் வாழ்நாள் முழுவதும் நீடிக்கக் கூடியது .இதில் நோயாளிக்கு மட்டும் சிகிச்சை என்பதைவிட அவரைச் சுற்றியுள்ள அம்மா ,அப்பா, சகோதர உறவுகள் ..பிறருக்கு ..மிக முக்கியமாக நோயை எப்படி சரியாகப் புரிந்து.. பாசத்துடன் கையாள வேண்டும் என்பது நூல் முழுவதும் நெகழ்வுடன் எழுதப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நோயாளியை கையாண்ட ஒருவரால் மட்டுமே இப்படிப்பட்ட நூலை எழுத முடியும். இப்படி எழுதுவது கூட நோயாளியை பாதிக்கக் கூடியது என்பதை உணர்ந்து. பன்னிரெண்டு ஆண்டுகள் பொறுத்து தான் எழுதி வைத்திருந்த நாட்குறிப்புகளை தொகுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே அக்கறையுடன் இப்படிப்பட்ட நூலை சுய கௌரவம் பார்க்காமல் எழுதிய ஒரே எழுத்தாளர் வறீதையா மட்டுமே எனலாம். எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்பது வெறும் சம்பிரதாயமே .வேறு யாருக்கும் இது சாத்தியமில்லை .அதற்கென தனி ஆத்மார்த்த மனம் தேவை .

வீட்டில் அம்மா இருக்கும்போது எதற்கு மகள் ஜூலியா- அப்பா ஒன்றுதல் ஏற்பட்டது என்றுவாசகர்களுக்கு கேள்வி.ஏற்படலாம். ஓர் எழுத்தாளன் அவனது மகளை பாசத்துடனும்.. வாஞ்சைடனும் தாங்கி சுமப்பது ..என்பது பதிலாக இருக்கும்.

சரி மனச்சிதைவு உள்ளவர் எப்படி நடந்து கொள்வார் ?..தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் தன்னைப் பற்றியே கேலி பேசுகிறார்கள் ..புரணி பேசுகிறார்கள் என உள்ளபடியாக நம்புவார்கள் .பாத்ரூமில் தனியே குளிக்கும் போது கூட வக்கிரத்துடன் அப்பா தன்னை பார்ப்பதாக நம்புவார்கள். பாத்ரூமை விட்டு அவ்வளவு எளிதாக வெளியே வர மாட்டார்கள் .தன் அறையை பட்..பட்..என்று சாத்தி மூடுவார்கள் ..அடிக்கடி நீர் அருந்திவிட்டு அடிக்கடி கழிவறை சென்று தான் தங்கியிருக்கும் அறையில் உள்ள மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுமே என கவலைப்பட மாட்டார்கள். நண்பர்களுடனான அணுகுமுறையில் வித்தியாசம் இருக்கும். உள்ளபடியே தன் மீது அக்கறை உள்ளவர் தனக்கு கெடுதல் நினைப்பதாகநம்புவார்..மறுபுறம் தன்னை ஏமாற்றுபவரை புரிந்து கொள்ளாமல் அவருடன் கடைசி வரை சென்று ஏமாறுவார். படிப்பில் படி சுட்டியாக இருந்தாலும் படிப்பில் கவனம் செலுத்தாமலேயே முதல் ரேங்க் வாங்குவதுண்டு .நாம் பரிந்துரைக்கும் படிப்பை படிக்க முடியாது; நாம் சேர்த்துவிடும் வேலையில் சேர முடியாது என அடம்பிடித்து மாற்றி செயல்படுவார் .மருத்துவர் வழிகாட்டல் படி.. குடும்பத்தோர் வழிகாட்டுதல்படி எதையும் ஏற்க மறுப்பார் .ஆனால் காலப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு அவரே மாத்திரையை கேட்டு சாப்பிடுவார். எப்போதும் தூக்க கலக்கத்தில் விழித்துக் கொண்டே சலிப்புடன் சோம்பலாகப் பணியாற்றுவார். வீட்டிலுள்ளோர்..அக்கம்பக்கத்தில் உள்ளோர்.. வகுப்பில் …என எல்லா இடங்களிலும் முரண்டு பிடித்து சண்டை போட்டுவார் அல்லது தனித்து ஒதுங்கி இருப்பதும் உண்டு .எப்போது என்ன செய்வார்கள் என்று யோசிக்க முடியாது .24*7 மணி நேரமும் விடாமல் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிடில் நொடிப் பொழுதில் என்னென்னமோ விபரீதங்கள் நிகழ்ந்து விடும். புத்தகங்கள் படிக்க ஆர்வம் காட்ட மாட்டார். கடிதங்கள் கட்டுரைகள் எழுத ஆர்வம் காட்ட மாட்டார் ..பசி இருக்காது ..சிலர் அதிகமாக சாப்பிடுவார்கள். தீவிர ஒட்டுதல்(attachment)தீவிரமான ஒவ்வாமை(Obsession)என்ற நிலை இருக்கும்.

மனநலத்துக்கும் நரம்பியலுக்கும் இடையிலான நோய் இது. 16 ,17 வயதில் வெளிப்படும் இந்நோய் அதற்கு முன்பு வரை நம்மால் அடையாளம் காண முடியாமல் பகுதி பகுதியாக வெளிப்பட்டிருக்கும். நாம் அதை அறியாமல் கண்ணா பின்னாவென்று அடித்திருப்போம் .திருமணம் செய்து வைத்து நோயை சரி ஆக்கி விடுவோம் என பலர் செய்து விடுவது உண்டு .அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் தெரிந்து கொள்ளாமல் அமுக்கி வைத்திருப்பதும் உண்டு .சிலர் உள்ளூர் மனநல மருத்துவமனைகளை விட்டுவிட்டு வெளியூர் மனநல மருத்துவரை பார்க்க ரகசியமாக செல்வார்கள் .”பைத்தியம் “எனும் பட்டம் சூட்டி விட்டால் வாழ்க்கை என்னாகும் ..குடும்ப கவுரவம் என்னாகும் என்ற பயமே தொடரும் .டோக்கன் வாங்கிக் கொண்டு காத்திருப்போம் .வந்திருப்பது யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்று பயப்படுவது உண்டு. பலதரப்பட்ட நோயாளிகளை பார்க்கும் அனுபவமும் உண்டு .ஒவ்வொரு நோயாளியையும் பார்க்க டாக்டர் அரை மணி நேரம் செலவிடுவார்.

7. பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய கொடுமை யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது .டாக்டரிடம் உறவினர் மட்டும் தனியே பேச வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும் கூட அதில் பொறுத்துக் கொள்ளாமல் நோயாளியும் உடனே இருக்கவே விரும்புவார் .Narco analysis மூலம் ஆழ்மனதின் அடியில் ஒளிந்திருப்பவற்றை வெளியில் கொண்டு வந்து சரி செய்ய டாக்டர் முயற்சிப்பார் .ஆற்றுப்படுத்துதல் -ஆலோசனை வழங்கல்என்பதுநோயாளியை விட அவரைச் சுற்றி உள்ளவருக்குதான் அதிகம் தேவை என்பதை நூல் முழுதும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.

8. நாம் ரோட்டிலும் ..பஸ்டாண்டிலும் ..கிழிந்த அழுக்கு ஏறிய அரைகுறை ஆடையுடன் சடையாக வளர்ந்த முடியுடன் “பைத்தியங்களாக” திரிவதை தினமும்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவர்கள் ஒவ்வொருவரின் பின்னாலும் உள்ள கதையை நாம் கவனம் கொண்டு சிந்தித்தோமா? நல்லவேளை ..என் மகளை அப்படி நடுரோட்டில் விட்டு விடவில்லை என திருப்தி ஒருபுறம் இந்நூலில் அப்பாவிற்கு ஏற்படுகிறது. இப்படியே தன் மகளை விட்டுவிட்டு இறந்து விடுவோமா என்று ஒரு கணம் சிந்தனை வர தான் இல்லாவிட்டால் மகள் என்ன ஆவாள் என பதறி அப்படி நினைத்த மனத்தை ஓங்கி அறைகிறார். சக மனிதனின் வலியை ஒரு துளியாவது சிந்தித்துப் பார்ப்பது கூட ஒரு சிறந்த தியானம்தான் என்கிறார் ஆசிரியர். தன் மகள் மீது ஏற்பட்ட அக்கறை பிறர் மீதும் ஏற்படுவது என்பது அவருக்கு சகஜமாகி போகிறது. இப்படி மனச்சிதைவுக்கு ஆளானோருக்கு சரியாக அறிவியல் ரீதியான சிகிச்சை தராமல் சாயல்குடிகளுக்கும்… தர்காக்களுக்கும்.. பிரார்த்தனை கூடங்களுக்கும் கொண்டு சென்று அல்லல் படுவதை கண்டு வெகுண்டெழுகிறார். இவர்களை வைத்து வியாபாரம் செய்யும் சமய நிறுவனங்களை விமர்சித்து திட்டுகிறார் ஆசிரியர். அதில் என்ன தவறு?. இன்னும் இதை அவர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார் .பில்லி.. சூனியம் ..செய்வினை ..பேய் ..பிசாசு.. காத்து.. கருப்பு என்று இன்னும் அவலங்கள் தொடரத்தான் செய்கின்றன .

உலகில் பிராணிகளுக்கு ..மாற்றுத் திறனாளிகளுக்கு ..முதியோருக்கு.. பெண்களுக்கு என கவனிக்க தனி தனி அமைப்புகள் உள்ளன.. ஆனால் இப்படி மனச்சிதைவால் பாதிக்கப்பட்டோருக்கு என்ன அமைப்பு இருக்கிறது என்ற நியாயமான கேள்வியை எழுப்புகிறார் வறீதையா அவர்கள். 25 வயது மனிதனை ஆறு வயது மனம் வழிநடத்துவதுதான் மனச்சிதைவு
நோய் .

“எழுதியது போதும் ..பொதுச்சேவை ஆற்றியது போதும் ..வீட்டில் மகளை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று துணைவியார் திட்டுவதையும் வறீதையா பதிவு செய்திருக்கிறார். இனி வாழ்வில் எந்த ஒரு தீர்மானமும் முடிவு எடுத்தாலும் உன் பார்வையிலேயே எடுப்பேன் மகளே என உறுதி கூறும் அப்பாவை நூல் காட்டுகிறது. பிள்ளைகளிடம் தோற்றுப் போவது வரம் எனக்கூறுகிறார் .

உடலில் ஆரம்பித்து.. மனதில் குடியேறி.. நடத்தையில் வெளிப்படுவது இந்த நோய். ஒதுக்குதல்.. புறக்கணித்தல்.. புண்படுத்துதல் ஆகியவற்றைத் தவிர்த்து இவர்களை புரிந்து கொண்டு ஆதரவு தருவதே இவர்களுக்கு சமூகம் தரவேண்டிய சிகிச்சை ஆகும் .ஏர்வாடி தர்காவின் தீ விபத்தையும் நினைவு கூறுகிறது நூல்.

9. கன்னியாகுமரி..ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களுக்கு வருவோர் இப்படிப்பட்ட நோய் உள்ள உறவினர்களை கைவிட்டு விட்டு நழுவுவதை தன் கண்ணால் கண்டதை எடுத்துரைக்கிறார் ஆசிரியர். நல்ல வேளை.. ஜூலியாவுக்கு நான் அப்பனாக வாய்த்தேன் என பெருமைப்படுகிறார் .மனச்சிதைவு நோய் உள்ளவர்களை கவனித்துக் கொள்வோருக்கு மன அழற்சி ஏற்படுகிறது. சக மனிதன் மீது அக்கறை கொண்டு அவனது சிக்கல் என்ன என அறிய நமக்கு நேரம் கிடைப்பது இல்லை. ஏனென்றால் நமக்கு ஒன்றும் அப்படி எதுவும் நேர்ந்து விடாது என்ற சுய உத்தரவாதம் ..பிரபஞ்சத்தில் ஒரு தூசுவாக இருக்கும் நாம் மனித தூசியென முண்டா தட்டிக் கொள்கிறோம் .ஒரு நானோ நொடியில் நம் வாழ்வும் தலைகீழாக மாறும் சந்தர்ப்பம் ஏற்படும் என்பதை நாம் அறியாமல் இருக்கிறோம் .வலியை பகிர்ந்து கொள்ள துணை இல்லாத ஒவ்வொருவரும் வாழ்வில் தனிமையின் கைதிகளே என்கிறார் ஆசிரியர்.

இந்த நோய் எப்படி ?எதனால் ?

இரண்டரை கோடி ஆண்டுகளாக இயற்கை செதுக்கி செதுக்கி சீராக படைத்ததுதான் மனித இனம். 23 இணை குரோமோசோம்களின் தொகுதிகளில் குடி கொண்டிருக்கும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் மரபணுக்கள் சேர்ந்தும் பிரிந்தும் செய்யும் தலைமுறை வித்தை இது .இதில் ஒரு மரபணு பிறழ்ந்தால்கூட உடல் நலக் கோளாறு.. நரம்பு கோளாறு ..மனச்சிதைவு ஏற்படும்.

மனித உடலில் இப்படி இருநூறுக்கும்மேற்பட்ட பிறவிக் கோளாறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் கயிற்றின் மேல் நடக்கும் சாகசம் செய்து கொண்டிருக்கிறோம். கோடான கோடி முறை நகலாக்கம் நடக்கும் போது ஏதோ ஒன்றில் ஏற்படும் ஒரு பிறழ்வுதான் இந்த நோய்.

என் மகளுக்கு நான் அப்பாவாக இருப்பது கூட இந்த நோய்க்கு காரணம் என வேதனைப்படுகிறார் அப்பாவாகிய வறீதையா. மனநல படிப்பு ..பல பயிற்சிகள் பெறுவதால் மட்டும் இந்நோயை எதிர்கொண்டுவிட முடியாது.” தாயுள்ளம் “தேவை என்கிறார் தந்தையாக உள்ள வறீதையா. மூளையில் சுரக்கும் நாளமில்லா சுரப்புகளுள் “டோப்பமைன்” ஒன்று .இது சுரக்கும் அளவு குறைந்தால் பார்க்கின்சன் நோய் ஏற்படும். இதன் அளவு அதிகரித்தால் மனச்சிதைவு நோய் ஏற்படும்.

அப்பாவான வறீதையா தன் மகளுக்கு எங்ஙனம்.. எங்கெல்லாம் சென்று ஆரம்பத்திலும்.. ஆழியாறு வேதாத்திரி மகரிஷி அறிவுத்திருக்கோயிலிலும்…பின் கடைசியாக திண்டுக்கல் கருணாசாகர் மையம்..என பல இடங்களுக்கு சென்று சிகிச்சை தருகிறார் .வேறு மனநலக் காப்பகங்களிலும் சேர்க்கிறார் ..வேலையில் சேர்த்து விடுகிறார்.. ஹாஸ்டலில் தங்க வைக்கிறார் .. திடீர் திடீரென கனவில் எழுந்து அமர்கிறார் ..திடீரென நள்ளிரவுகளில் “உடனே வாருங்கள் .உங்கள் பெண்ணை அழைத்துச் செல்லுங்கள் “என்று போன் வருவது….நூலகத்திற்கு வேலைக்கு அனுப்புகிறார் .. திரும்பி வந்து விடுகிறாள் ஜூலியா ..இரண்டு ஆண்டு தொடர் வைத்தியம் பார்த்த பின்பு உடலுக்கு side effect வந்து விடுமோ என பயந்து second opinion கேட்கப் போகும் போது அப்பா எங்கோ தன்னை தனியே விட்டுவிட்டு சென்று விடப் போகிறார் என ஜூலியா விடாமல் ஒட்டிக்கொண்டு வருவது ..எவ்வளவு பொறுமையோடு… பாசத்தோடு ..அன்போடு… சகிப்பு தன்மையோடு ..பொறுப்போடு.. தன்னம்பிக்கையோடு ..அறிவியல் பூர்வமாக.. பகுத்தறிவோடு… நோயை தானும் புரிந்து கொண்டு …வாழ்நாள் முழுவதும் மகளை வைத்து காப்பாற்றினார் என்பதை மன நிறைவோடு வாசகர்களும் அறிய எழுதுகிறார்..

தயவு செய்து நூலை வாங்கி படியுங்கள் ..அதற்கு மாற்றாக எதுவும் இல்லை.. அவற்றையெல்லாம் விவரிக்க எழுத்தும் இல்லை.

10. ஒவ்வொரு இரண்டு வரிகளும் ஓராயிரம் அர்த்தத்தை வாசகனுக்கு தருகின்ற வகையில் ஏராளமான பொன்மொழிகளாய் ..நூல்முழுதும் வறீதய்யாவின் அனுபவங்கள் பொதிந்து கிடக்கிறது.

ஒரே ஒரு சம்பவத்தை கூறி அறிமுகத்தை நிறைவு செய்வோம் .

திண்டுக்கல் காப்பகத்தில் இருந்து வீட்டுக்கு மகள் ஜூலியாவை அழைத்துச் செல்ல வருகிறார்.திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு இருவரும் வருகிறார்கள்..மகளும் மகிழ்வுடன் வருகிறாள் .ரயில் புறப்பட இருக்கிற நேரம் ..மகளை பெட்டியில் அமர வைத்து விட்டு டாய்லெட்டுக்கு போகிறார். திரும்பி வந்து பார்க்கும்போது மகளை அமர வைத்திருந்த இடத்தில் காணவில்லை.. அக்கம் பக்கம் உள்ளோரிடம் பேய் அறைந்த முகத்துடன்.. கலக்கத்துடன் …பதட்டத்துடன் ..விசாரிக்கிறார். இங்கும் அங்கும் ஓடித் தேடுகிறார்.. உடல் வியர்த்து கொட்டுகிறது…ரயில் போய்க் கொண்டே இருக்கிறது.. சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தலாமா என்று நினைக்கிறார்.

டாய்லெட்டுக்கு சென்று விட்டு திரும்பி வரும் மகள் கேட்கிறாள்:” அப்பா என் மீது நம்பிக்கை இல்லையா?”
அவரது நெஞ்சில் யானை ஏறி மிதித்தது போல் இருந்தது ..

இப்படி ஏராளமான உண்மைச்சம்பவங்கள் நம் கண்களில் நீரையும் …நெஞ்சில் விம்மல்களையும் ஏற்படுத்துகின்றன .
(கட்டுரை நீண்டு கொண்டே இருப்பதால் இன்னும் ஏராளமான அரிய செய்திகளை விட்டுவிட வேண்டிய சூழல் ‘)
“யாம் பெற்ற துயரம் ..நீங்களும் அடைய” பரிந்துரைக்கிறேன்…

 

நூலின் தகவல்கள் 

நூல் : “கையறுநதி”…தன் வரலாறு/மனநல
விழிப்புணர்வு நூல்.

ஆசிரியர்:வறீதையா கான்ஸ்தந்தின் 

பதிப்பகம் : கடல்வெளி

200 பக்கங்கள் :ரூ.220/-

 

நூல் அறிமுகம் எழுதியவர் 

மன்னை இரா.இயேசுதாஸ்.




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *