பாலு சத்யாவின் “ஒரு பறவை சில உயிர்கள்” பலரது அனுபவ சிறுகதைத் தொகுப்பு – நா.வே.அருள்
காட்சி 1
ஆன்னா. இங்கிலாந்து நாட்டில் ஒரு கிராமத்துச் சிறுமி. தேய்ந்துபோன கால் சப்பாத்து. சீராக வாரி விடப்படாத தலை. நிறம் மங்கிய உடை. இந்தக் கோலத்துடன்தான் ஐந்தாம் கிரேடு படிப்பிற்காக சிறு நகரத்தின் பள்ளியொன்றில் நுழைகிறாள். மாணவ மாணவிகளின் கிண்டல்கள், கேலிகள். பள்ளியில் சேருமுன்னே நடத்தப்பட்ட பாடம் ஒன்றிலிருந்து ஒரு தேர்வு நடக்கிறது. ஆன்னாவும் தேர்வு எழுதட்டும் என்கிறார் ஆசிரியர். கேள்வி இதுதான்…. உலக அதிசயங்கள் ஏழு. வரிசைப்படுத்தி எழுதுங்கள். ஆன்னா எழுதினாளா?
எழுதியிருந்தால் என்ன எழுதியிருப்பாள்?
காட்சி 2
கடற்கரையோரம். அலைகள் நகரத்திற்குள் புகுந்துவிடக்கூடாது என்பதற்காக பாலம் போல நீண்டிருக்கும் ஒரு தாங்கு மேடை. சூரியன் கடலில் விழப்போகிற மாலை நேரம். எலும்புத் துருத்திய கைகளில் ஒரு வாளியை பிடித்தபடி ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஓர் உருவம் நடந்து செல்லும். அவர் நின்றாரோ இல்லையோ சீகல் பறவைகள் இறக்கைகளை அடித்தபடி அவரைச் சூழ்ந்து கொள்ளும். நன்றி…. நன்றி…. என்று சொன்னபடி வாளியில் கொண்டுவந்திருந்த இறால் மீன்களை வாரி வாரிப் போடுவார்.
இவரது இந்த செய்கைக்கு என்ன காரணம்?
காட்சி 3
மாண்டினோ. அமெரிக்காவின் விமானப்படையில் வேலை. குண்டு வீசித் தாக்கும் தொழில். விமானப் படையிலிருந்து விலகியபின் இன்சூரன்சு கம்பெனியில் பணி. இதுவரை அவர் போட்ட அத்தனை குண்டுகளும் தன் மீது விழுந்தமாதிரி சிதைந்திருந்தது மனம். முழுநேரமும் மொடாக் குடி. உள்ளத்தில் ஊசலாட்டம். மனதில் தள்ளாட்டம். அமெரிக்காவில் அநேகம் பேருக்கு அபயம் அளிக்கிற ஒரே ஆசீர்வாதம் தற்கொலை. துப்பாக்கியே துணை. நெற்றிப் பொட்டில் வைத்து குதிரையை அழுத்தும் நொடியில் ஒரு சின்ன தயக்கம். தற்கொலையைத் தள்ளிப் போட்டாலென்ன? அருகிலிருந்த ஒரு கட்டடத்திற்குள் நுழைந்தார். வெளியே வந்த மனிதர் வேறாகிவிட்டார்.
என்ன ஆனது?
இப்படி ஐம்பது சுவாரசியமான கதைகளின் அற்புதமான தொகுப்புதான் பாலு சத்யாவின் “ஒரு பறவை சில உயிர்கள்”. சுவாரசியமூட்டும் நடை. ஆணி அறைந்தமாதிரியான அனுபவங்கள். நாவலை விடவும் சுவாரசியமும் திருப்பமும் கொண்டதுதான் வாழ்க்கை என்று சொல்வார்கள். ஒவ்வொருவர் வாழ்விலும் நடந்த திகைக்க வைக்கும் திருப்பு முனைகள். விகடன்.காம் இணைய இதழில் வந்த தொடரில் தெரிந்தெடுத்த ஐம்பது சின்ன கதைகள்.
இப்போது மீண்டும் முதலிலிருந்து பரோட்டாவைச் சாப்பிட ஆரம்பிப்போம். மூன்று காட்சிகளின் விளக்கங்கள்.
காட்சி 1
ஆன்னா எழுதியிருந்தால் என்ன எழுதியிருப்பாள்?
பாடம் கேட்ட மாணவிகள் எல்லோரும் எழுதியிருந்தவை – தாஜ்மகால், எகிப்துப் பிரமிடு, சீனப் பெருஞ்சுவர் பாபிலோன் தொங்குதோட்டம், பைசா நகரத்து சாய்ந்த கோபுரம்…. பாடம் கேட்காத ஆன்னா உலக அதிசயம் என்று எழுதியவை…..
1 நம்மால் பார்க்க முடிவது
2 நம்மால் கேட்க முடிவது
3 நம்மால் உணர முடிவது
4 நம்மால் சிரிக்க முடிவது
5 நம்மால் சிந்திக்க முடிவது
6 நம்மால் இரக்கப்பட முடிவது
7 நம்மால் அன்பு செய்ய முடிவது.
ஆன்னாவின் ஏழு உலக அதிசயங்கள் ஆச்சரியமாய் இல்லையா?
காட்சி 2
ஒவ்வொரு வாரமும் வாளியில் இறால் மீன்களை சீகல் பறவைகளுக்கு இரையாகப் போட்டவரின் செய்கைக்கு என்ன காரணம்?
எட்டி ரிக்கன்பேக்கர். இரண்டாம் உலகப் போரின்போது இவர் சென்ற விமானம் பசிபிக் கடலில் மூழ்கிப் போனது. இவரும் உடன் சென்ற ஏழு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்காக்கும் படகில் ஏறித் தப்பித்தார்கள்.
எந்த நம்பிக்கையுமற்று ஏழெட்டு நாள்கள். தாகம், பசி. மேலும் சில நாள்கள். பசியா? உயிரா? பந்தயம். திடீரென அவரது தொப்பியின் மீது சீகல். எட்டிப் பிடித்து எல்லோரும் பசியாறினார்கள். கொஞ்சம் ஆசுவாசம். தப்பிப் பிழைக்க ஒரு தருணம். இயற்கையும் துணைபுரிய இருபத்திநாலு நாட்களுக்குப் பிறது மீட்கப்பட்டார்கள்.
இப்போது சொல்லுங்கள், அவரால் சீகல் பறவையை மறக்க முடியுமா?
காட்சி 3
தற்கொலை செய்துகொள்ளத் துப்பாக்கியைத் தொட்டவர் ஒரு கட்டடத்திற்குள் நுழைந்தார். தற்கொலை எண்ணத்தை எப்படிக் கைவிட்டார்?
அவர் நுழைந்து பார்த்த கட்டடம் நூலகம். ஏதோ ஒரு புத்தக அடுக்கு… ஏதோ ஒரு புத்தகம்…. கையில் எடுத்தார். புரட்டினார். புத்தகம் அவரைப் புரட்டிப் போட்டது. அடுத்தடுத்து புத்தகங்களில் சரணடைந்தார். ”கிரேட்டஸ்ட் சேல்ஸ்மேன் இன் தி வேர்ல்டு” அமெரிக்காவில் அந்த ஆண்டிலேயே அதிகமாக விற்பனையான ஒரு புத்தகத்தை அவரே எழுதிவிட்டார்.
துப்பாக்கியின் குதிரையிலிருந்து வாழ்க்கையின் குதிரைக்கு அவர் சவாரி மாறிப்போனது. மரணம் அவர்மீது சவாரி செய்ய இருந்தது. இப்போது வாழ்க்கையின் மீது அவர் சவாரி செய்கிறார்.
வாழ்க்கையின் மீது விருப்பமும் தீரா வேட்கையும் கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய கதைகள்.
நூலின் பெயர் – ஒரு பறவை சில உயிர்கள்
நூலாசிரியர் – பாலு சத்யா
நூலின் விலை – ரூ.170/-
பதிப்பகம் – வம்சி புக்ஸ், 19 டி.எம்.சாரோன், திருவண்ணாமலை 606601
9445870995